புதன், ஜனவரி 04, 2012

இலவச மின்சாரம் 600 மெகா வாட்டும், மின் கட்டணக் குறைப்பும்!

தமிழகம் கடுமையான மின்சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏதாவது மின் நிலையத்தை இயக்கி எப்படியாவது மின்சாரம் வேண்டும் என்கிறோம். மின்மூலங்கள் குறைவாக உள்ள ஒரு இந்திய மாநிலம் எப்படி மின்சிக்கலை குறைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்!

அம்மாநிலத்தில் மாலையில் மின் தேவை அதிகமாக இருக்கும். அங்கு தயாரிக்கப்படும் மின் உற்பத்தி அத்தேவையை ஈடு செய்ய முடியவில்லை. அதனால் மின் வெட்டு இருந்து வந்தது.

ஒரே வெளிச்சத்திற்கு சிறு குழல் விளக்குகள் (‘சி. எப். எல்.’ பல்பு/ Compact Fluorescent Lamp) குண்டு பல்புகளைக் காட்டிலும் குறைந்த மின்திறனே எடுக்கின்றன. அதனால் மின் ஆற்றல் ('யூனிட்') செலவு குறையும். ஆனால், ஒரு சி. கு. வி. - ன் விலை 120 ரூபாய்க்கு மேல்; குண்டு பல்பின் விலையோ ரூ.15 - க்குள்

அம்மாநிலத்தில் குண்டு மின்பல்புகள் அதிக அளவில் பயன்பட்டு வந்தது. சி. கு. வி. களின் கூடுதல் விலையே இதற்கு முக்கியக் காரணம். இதனால் அம்மாநில அரசு ஒவ்வொரு வீட்டுக்கும், சி. கு. வி. ஒன்று ரூ.15 என்ற விலையில் தரமான 2 சி. கு. வி. களைக் கொடுத்தது. அப்படி சி. கு. வி. களைக் கொடுத்த போது ஏற்கனவே பயன்பட்டு வந்த நன்கு எரியும் நிலையில் உள்ள 2 குண்டு பல்புகளை வீட்டாரிடம் இருந்து வாங்கிக்கொண்டது. சி. கு. வி. க்கு ஆகும் கூடுதல் தொகையை அம்மாநில அரசு தன் நிதியில் இருந்து முன்பணமாகப் போட்டது. இப்படிச் செய்ததற்குக் காரணம் இந்தக் கூடுதல் தொகையை வளர்ந்த நாடுகளில் இருந்து ‘க்யோட்டோ’ ஒப்பந்தத்தின் கீழ் தூய்மையான வளர்ச்சிக்கான செயல்முறையின்படி பெற்று விட முடியும் என்பதால்!

2010-ல், மார்ச் 15 முதல் சிறு குழல் விளக்குகளை விநியோகிக்கத் துவங்கி ஆகஸ்டிற்குள் மாநிலத்தின் 75 லட்ச வீடுகளுக்கு சுமார் 1.3 கோடி சி. கு. வி. களை விநியோகித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சி. கு. வி. களில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு மாற்றை அரசே கொடுத்துவிடும். கோளாறான அல்லது வாழ் நாள் முடிந்து செயல் இழந்து போன சி. கு. வி. களை அரசே திரும்பப் பெற்று பாதுகாப்பான முறையில் அவற்றைக் கழித்துவிடும்.

இப்படி மாலை நேரங்களில் அதிகமாக இருந்த மின் தேவையை 350 மெகா வாட் (மெ. வா.) குறைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் மாதத்திற்கு 5 யூனிட்களுக்கு மேல் குறைகிறது. அரசின் மின்சார மானியம் குறைந்துள்ளது!

இப்படி மின் தேவையை குறைத்ததற்கு ஏற்ப, மின்சார உற்பத்தியால் திட்டகாலத்தில் மட்டும் வந்திருக்கக் கூடிய 20 லட்சம் டன் கரியமில வாயு உருவாக்கத்தைத் தவிர்க்கிறது. இதன் மூலம் 20 லட்சம் 'கார்பன் கிரெடிட்'டுகளை ஈட்டும்.

‘க்யோட்டோ’ ஒப்பந்தப்படி வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட அளவு 'கார்பன் கிரெடிட்' வைத்திருக்க வேண்டும். அதனால் அந்நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து 'கார்பன் கிரெடிட்'டை வாங்கத் துடிக்கின்றன. ஒரு 'கார்பன் கிரெடிட்டின்' தற்போதைய விலை ரூ. 484; ரூ. 900 மேல் செல்லும் என்கிறார்கள். அதை விற்றால், அந்த அரசுக்கு ரூ. 89 கோடி முதல் ரூ. 166 கோடி கிடைக்கும். ஆக அந்த அரசு போட்ட முன் பணம் ரூ.95 கோடி, அதற்கு இந்த வகையில் மட்டும் ரூ.71 கோடி லாபம் கிடைக்கும் வாய்ப்பு!

தூய்மையானதாகச் சொல்லப்படும் மின் நிலையத்தை புதிதாக அமைத்தாலும் 350 மெ. வா. க்கு கூடங்குளத்துக்குச் சொல்கிற கணக்கிலேயே குறைந்தது கட்டுமானத்திற்கு மட்டும் ரூ.2300 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும். இது தவிர, மின் நிலையத்தை இயக்குவதற்கான மூலப்பொருள் உள்ளிட்ட செலவுகள், பாதுகாப்புச் செலவுகள் போன்றவை.

மேற்சொன்ன சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தின் மூலம் மின் தேவையை குறைக்காமல் இருந்து, வெளி மாநில மின் நிலைய்ங்களில் இருந்து 'மின்சார எக்சேன்சி'ன் (இது பங்குச் சந்தையைப் போல, மின்சாரத்தை விற்கலாம், வாங்கலாம்) மூலம் மின்சாரம் வாங்கியிருந்தால், வருடம் ஒன்றிற்கு 350 மெ. வா. மின்சாரத்திற்கு குறைந்தது ரூ. 518 கோடி செலவு செய்துகொண்டே இருக்க வேண்டும்!

இதெல்லாம் வேண்டாம் என்று எளிமையாக 350 மெ. வா. மின் தேவையை குறைத்திருக்கிறது அந்த அரசு! 'கார்பன் கிரெடிட்' இல்லாமலே கூட போட்ட முன்பணம் 6 மாதத்திற்குள் திரும்பக் கிடைத்துவிடும்!

தமிழகத்தில் தற்போது 150 லட்சம் வீட்டு மின் இணைப்புகள். இங்கும் பெரும்பாலான வீடுகளில் குண்டு பல்புகள் உள்ளன. கலாச்சார ரீதியாக இங்கு மின்பளு மாலை மட்டுமல்லாமல் காலையிலும் உச்சத்திலே இருக்கிறது.

தமிழக மின் துறை, தமிழகத்தில் குண்டு பல்புகளை சி. கு. வி. களால் மாற்றினால் 500 முதல் 600 மெ. வா. மின் திறனை இவ்வேளைகளில் தேவையற்றதாக்கலாம் என்கிறது. இது குறைந்த கணக்கீடே!

தமிழகத்தில் நாள் தவறாமல் காலை, மாலையில், 600 முதல் 700 மெ. வா. வரை 'மின்சார எக்சேன்சி'ல் இருந்து விலைக்கு வாங்கி வருகிறோம். சராசரியாக இந்த 'மின்சக்தி எக்சேன்சி'ல் இருந்து வாங்கும் மின் யூனிட்டின் விலை ரூ. 11.60.

தமிழகத்தில் சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தை செயல் படுத்தாமல் இருப்பதால் தேவைப்படுகிற 500 முதல் 600 மெ. வா. மின்திறனுக்காக கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டி வருகிறது. 'மின்சார எக்சேன்சி'ல் இருந்து வாங்கும் சராசரி ‘யூனிட்’டின் விலையை வைத்து மாலை நேரத்திற்கு மட்டும் கணக்கிட்டால் கூட, இதற்காக வருடத்திற்கு தமிழக அரசு கொடுக்கும் தொகை ரூ. 741 கோடி முதல் ரூ. 889 கோடி. இதனாலும் ஏற்படுகிற அரசு நிர்ணயிக்கிற மின் கட்டண உயர்வு என்ற பொருளாதாரப் பளு வீடு, குறுந்தொழில், சிறு தொழில், பெரிய தொழிற்சாலைகள் என அனைவரின் மீதும் தான் விழுகிறது!

தமிழகத்தில் சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தை தமிழக அரசே எடுத்து மேற்சொன்ன மாநிலத்தின் பாணியில் கூட நடத்தலாம்! தமிழக அரசு முன்பணமாகப் போட வேண்டிய தொகை, அதிகம் போனால் ரூ. 360 கோடி. திட்டத்தை மேற்கொள்வதால், 'மின்சக்தி எக்சேன்சி'ல் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவது குறைவதால் இந்தத் தொகையை 6 மாதத்திற்குள் அரசு திரும்பப் பெற்றிட முடியும். அது போக, மாலை நேரத்திற்கு மட்டும் குறைந்தது 40 லட்சம் 'கார்பன் க்ரெடிட்'கள் அரசுக்குக் கிடைக்கும். இதற்கு ரூ. 194 கோடி முதல் ரூ. 360 கோடி வரை கிடைக்கும்!

இந்திய மின் பயன்பாட்டில் விளக்குகள் 22% -ஐயும், மின் மோட்டர்கள் 70% க்கு மேலும் பயன்படுத்துகின்றன. வீட்டு மனை சேமிப்பு மின் விளக்குத் திட்டம், தெரு விளக்குகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் பயன்படும் விளக்குகளில் செய்யக்கூடிய திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுள் ஒன்று. இதேபோல் சேமிப்பு மின்மோட்டர் திட்டம், சேமிப்பு மின்பம்புத் திட்டம் என திட்டங்களை விரிவாக வகுக்கமுடியும். தமிழகத்தில் மட்டும் எந்நேரத்திலும் 2000 மெ. வா. ட்டை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் அனைவருக்கும், புவிக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் சேமிக்கும் உறுதியான வழிகள் உள்ளன!

மேற்சொன்ன திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறையிலான மின்திறன் சேமிப்பை அரூப மின்சார உருவாக்கமாகக் கருதமுடியும். இவ்வித மின்உற்பத்தி நம்பகத்தன்மை வாய்ந்தது. இது மின் தயாரிப்பில் ஏற்படும் பெருமளவிலான மாசைக் குறைக்கிறது. இதில், கொதி நிலையில், கதிர்வீச்சோடு இருக்கும் அணுக்கழிவை எவர் புழங்கும் பகுதிக் கடியில் ரகசியமாகப் புதைக்கலாம் என்று திட்டமிட்டுப் புதைக்க வேண்டிய கவலை இல்லை!

தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம், நிதி நெருக்கடியால் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. அதில், ரூ.40,000 கோடிக்கும் மேலான ஒருசேர்ந்த இழப்புக்கள்; ரூ.50,000 கோடிக்கும் மேலான கட்டுக்கடங்காத கடன்கள். இத்திட்டம் நிறைவேறினால் இந்த இழப்புகள், கடன்கள் குறைய வழிவகுக்கும்!

மின்சாரம் மட்டுமல்லாது மண்ணென்னெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் என பல்வேறு ஆற்றல் சிக்கல்களுக்கான தீர்வைச் சிந்தித்துச் செயல்படும்போது வளர்ந்த நாடுகள் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை முதன்மையான ஆற்றல் மூலங்களாக அங்கீகரிக்கின்றன. இவற்றையும் செயல்படுத்தினால், இந்த ஆற்றல்களுக்காக நாம் செலவிடும் தொகைகள் குறையும்.

இம்முறைகளைச் செயல்படுத்தினால் அரசு / பிற அமைப்புகளால் நிர்ணயிக்கப்படுகிற, அதிகரித்து வரும் மின் உள்ளிட்ட கட்டணங்களைக் குறைக்கவும் வழி உண்டு!

எவ்வகையில் இந்த ஆற்றல்களை உருவாக்கினாலும், இவ்விரு வகைகளில் நாம் செலுத்தும் கட்டணத்தைக் குறைக்க வழிவகுக்காது என்பது உறுதி!

இம்முறைகளைச் செயல்படுத்துவதற்கான உற்பத்தி, வர்த்தக, தொழில்நுட்ப நடவடிக்கைகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி எற்படுகிறது.

இது மக்கள் அறிவியல், மக்கள் பொருளாதாரம்!

எவ்விதத்தில் ஆற்றலை உருவாக்கினாலும் முதன்மையாகச் செய்ய வேண்டியது திறம்பட ஆற்றலைப் பயன்படுத்துவதைத் தான்.

திட்டக் குழு கவனத்திற்கு!

தொலை நோக்குப் பார்வை இப்படி இருக்க வேண்டும்!

வெறுமனே ஆற்றல் சேமிப்பு முக்கியம் என்ற வாய்ப்பேச்சு பத்தாது!

ஆற்றல் பிரச்சனைகளை இப்படி அணுகவில்லை எனறால் வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு ஒழுகுகிற மேல் நிலைத் தொட்டியில் நீர் ஏற்றிக் கொண்டே இருப்பதற்குச் சமம்!

வண்டியில் உள்ள ஓட்டை ட்யூபில் நாம் காற்றடித்துக் கொண்டே இருப்பதற்குச் சமம்!

*****

பி.கு.: மேலே குறிப்பிட்ட அந்த மாநிலம்... நம் அண்டை மாநிலம்... கேரளம்...!

கேரளம் அமல்படுத்தினாலும் இது மத்திய அரசு வகுத்த திட்டம். அதன் பெயர் 'பசத் லாம்ப் யோஜனா'. இதில் மத்திய அரசு செலவு எதையும் செய்யத் தேவையில்லை!

-முனைவர். வே. பிரகாஷ்



3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ராஜஸ்தானிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது . மேலும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது

நிகழ்காலத்தில்... சொன்னது…

படிக்க படிக்க இவ்வளவு எளிமையாக செயல்படுத்தக்கூடிய இந்த திட்டம் நமது தமிழக அரசின் கவனத்திற்கு ஏற்கனவே சென்றிருக்கிறதா?

அல்லது முடிவெடுக்கும் இடத்திற்கு இந்த கருத்துகள் போய்ச் சேராமல் இருக்கிறதா?

நடைமுறைக்கு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

புள்ளிவிவரங்களுடன் கூடிய இந்த இடுகைக்கு என் பாராட்டுகள்..!

G.T.Arasu சொன்னது…

நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டேபோவதால் குறிப்பீட்ட அளவு நீர் இறைக்க அதிகமான மின்சாரம் தெவைப்படுகின்றது.
நதி நீர் உரிமைகளை நிலைநாட்டுவது,மழைநீர் சேகரிப்பை உரிய முறையில் செய்ய ஏரி குளங்கள் ,கால்வாய்கள் ஆகியவைகளை சரி செய்வது அவசியம்.

நீர் அதிகமாக தேவைப்படும் கரும்பு,நெல் சாகுபடிகளை மட்டுப்படுத்துவது சிறப்பு.

ஒரு பனைமரம் ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் பனைவெல்லத்தை கொடுக்கமுடியும்.எனவே பனைமரத்தை பயன்படுத்துவது விவேகம்.நாலரை கோடி பனைமரங்கள் 45 லட்சம் டன் பனைவெல்லத்தை தரும்.தனியாக தண்ணீர் பாய்ச்சவேண்டிய தேவை இல்லை1

கருத்துரையிடுக