1980களில் அணு ஆய்வுத் திட்டங்களில் நடக்கும் ஊதாரித்தனங்களைப் பற்றி இந்திரா காந்திக்குப் பல கடிதங்கள் சென்றன. அப்பொழுது இந்திரா காந்தி விஞ்ஞானிகளுக்கு ஓர் இலக்கை நிர்ணயித்தார். இந்தியாவின் கனவான ஓர் அணு நீர்மூழ்கியை உருவாக்க அவர் கட்டளையிட்டார். உடனே வழக்கம்போல் விஞ்ஞானிகள் தலையசைத்துப் பெரும் ஒதுக்கீடுகளைப் பெற்றனர். 5 ஆண்டுகள் ஆன பின்பு இந்திரா காந்தி உளவுத்துறை மூலம் இந்தத் திட்டத்தின் நிலை என்ன என்று கேட்டு ஓர் அறிக்கையைப் பெற்றார். அதில் அங்கு எந்த முன்னேற்றமும் நிகழவில்லை, ஒதுக்கப்பட்ட பணமும் வீண், இவர்களால் அப்படி ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க இயலாது என்று தெளிவாகத் தெரிவித்தார்கள்.
உடனே ஆத்திரம் அடைந்த இந்திரா காந்தி ரஷ்யாவின் உதவியை நாடினார். ரஷ்ய அரசு அணு நீர்மூழ்கிக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க சம்மதித்தது. ஆனால் அத்துடன் ஒரு நிபந்தனையையும் வைத்தது. இந்தியா ரஷ்யாவிடம் 8 அணுஉலைகளை வாங்க வேண்டும் என்பதுதான் அது. சம்மதித்த இந்திரா காந்தி அதனைத் தொடர்ந்த 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ராஜீவ் காந்தி அணு உலைக்கான ஒப்பந்தங்களில் நவம்பர் 20,1988 அன்று கையெழுத்திட்டார். 26 ஏப்ரல் 1986 அன்று செர்நோபிலில் வெடித்த அதே வகை அணு உலைகளைப் பெயர் மட்டும் மாற்றி ரஷ்யா விற்றபோதும் எந்த தயக்கமும் காட்டாமல் இந்தியா இந்த ஒப்பந்தத்தை முன் நகர்த்தியது.
முதலில் கேரளாவில் அமைப்பது என்று முடிவு செய்தது அரசு. ஆனால் அங்கு எல்லா கட்சிகளும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாக அந்த மாநிலத்தில் இருந்து அதனைத் தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள கூடங்குளத்திற்கு இடம் மாற்றினார்கள். இந்த அணு உலையைக் கட்டுவதற்கான இடம் தேர்வு முதலே அங்கு பிரசினைகள் தொடங்கின.
ரஷ்ய பொறியியல் நிபுணர்கள் குறித்து வைத்திருந்த இடத்தை இந்தியர்கள் மாற்றி அமைத்தார்கள். இந்தப் பத்தாண்டுகளில் தொடர்ந்து இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் மத்தியில் உடன்பாடுகள் ஏற்படாது தொடர்ந்து கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்தன. ஜூன் 2011ல் அதன் தலைமை வடிவமைப்பாளரான செர்கி ஃரைசோவும், அவருடன் முக்கிய பொறியாளர்கள் மூவரும் ரஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் இருந்த காலத்திலேயே இங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்படாமல் பல ஆண்டுகள் உலையை திறக்கப் போகிறோம் என்று தொடர்ந்து சுப முகூர்த்த தேதி குறிப்பதே வேலையாக அலைந்தார்கள் அதிகாரிகள்.
கூடங்குளத்தில் அமையவிருக்கும் வி.வி.இ.ஆர். ரஷ்ய உலைகளில் ஏராளமான பிரசினைகள் உள்ளன. அதன் கண்ட்ரோல் ராடு, அவசரகால மின்சார சேமிப்பு, பாதுகாப்பு அமைப்புகள் என அவை நீண்டு செல்கிறது. பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் “கண்ட்ரோல் ராடு” இயங்குமுறையில் பிரசினைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அணுஉலையில் நிகழும் அணுப்பிளவை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த இந்த “கண்ட்ரோல் ராடு”களின் உதவியோடுதான் யுரேனிய கம்பிகளைப் பிரித்து வைக்க வேண்டும். 2006, மார்ச் 1ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சுழற்சி பம்புகள் வேலை செய்யவில்லை. இதனால் “கண்ட்ரோல் ராடு” இயங்காததால் பெரும் விபத்து ஏற்பட்டது.
சமீபத்தில் ஃபுகிஷிமா விபத்து நடந்தவுடன் ரஷ்யாவில் உள்ள அணுஉலைகளின் நிலையை ஆராய ஒரு குழு அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அந்தக் குழு ஃபுகுஷிமா அளவு விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் தன்மை எந்த ரஷ்ய அணு உலைக்கும் இல்லை என்றது. இது தவிர்த்து ரஷ்ய அணுஉலைகளில் உள்ள மிக ஆபத்தான 31 பிரச்சினைகளைப் பற்றியும் அது பட்டியலிட்டுள்ளது.
இது தவிர்த்து கூடங்குளம் அணுஉலைக்கு ஈஐஏ அங்கீகாரம் கிடையாது. அணுசக்தித்துறையின் விதிமுறைகளின்படி முறையாக மக்கள் கருத்து கேட்பு நடத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படவில்லை. இவை சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நிர்வாகம் முன்னுக்குப்பின் முரணான பதில்களையே கூறுகிறது. பின்விளைவுகள் பற்றிய தொலைநோக்கு ஆய்வுகளின்படி
தொழில்நுட்ப முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டாக்டர் ரமேஷ் அவர்கள் 2002ல் வெளியிட்ட ஆய்வு பல கேள்விகளை எழுப்பியது. கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடம் எரிமலைக்குழம்புகளால் உருவானவை. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நிலவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி மற்றும் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ராம் சர்மா ஆகியோர் மேற்கூறிய எரிமலைக் குழம்புகள் பற்றி ஏராளமான தகவல்களைத் தங்களின் ஆய்வுகளில் உறுதிப் படுத்தியுள்ளனர். 2004 நவம்பரில் வெளிவந்த கரண்ட் சயின்ஸ் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. பொதுவாக, நிலப்பகுதிகளின் நீண்ட ஆய்வுக்குப் பின்தான் அணுஉலையின் கட்டுமானங்கள் சார்ந்த வடிவங்கள் தயாரிக்கப்படும். இந்த உருகிய பாறைப் பிதுங்கல்கள் நேரடியாக அணுஉலையின் ஸ்திரத்தன்மையை குலைத்திடலாம். ஒரு பெரும் இயற்கைச் சீற்றத்தில் அவை மேலெழுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வி.வி.இ.ஆர். 1000 அணுஉலைகள் இதுவரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை. ரஷ்யப் பொறியாளர்களுக்கு இதில் அனுபவமும் இல்லை. அதைவிட வி.வி.இ.ஆர். 1000 அணு உலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல் முறையாகக் கடல்நீரைப் பரிசோதிக்கவிருக்கிறது. கூடங்குளம் அணு உலையா? இல்லை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பட்டணந்திட்டா, கொல்லம் மாவட்டத்தின் மக்கள் பரிசோதனைக்கூட எலிகளா?
இன்றளவும் உலையிலிருந்து 1.6 கி.மீ. பகுதிக்குள் 35,000 மக்கள் வசிக்கிறார்கள். 5 கி.மீ. பகுதிக்குள் ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். எந்த வித பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படாமலேயே உலையில் டம்மி எரிபொருள் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி சோதனை ஓட்டம் நடந்த அன்று அங்கிருந்து பெரும் ஓசை வெளிப்பட்டுள்ளது. மக்களால் உறங்க முடியவில்லை.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கும்கூட அந்த ஓசை சில மைல் தொலைவில் கேட்டுள்ளது. எந்தவித பாதுகாப்பு ஒத்திகைகளும் பார்க்கப்படாத நிலையில் ஏன் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டது?
-அ. முத்துகிருஷ்ணன்
நன்றி: உயிர்மை, டிசம்பர் 2011
2 கருத்துகள்:
நல்ல கட்டுரை. ஆனால், என்னமோ எழுத்துரு பிரச்சனை இருக்கிறது.
நல்ல கட்டுரை.
கருத்துரையிடுக