கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.
1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 1989 இல் ஜூனியர் விகடனில் இந்த உலையின் ஆபத்துகளை முன்வைத்து “கொல்ல வரும் கூடங்குளம்” என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினார் எழுத்தாளர் நாகார்ஜுனன். 1988 இல் நவம்பர் 21 அன்று கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் பட்டது. இதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவுக்கு மும்பையிலும், தில்லியிலும் கருப்புக் கொடி காட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1989 மே முதல் தேதியில் “தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று” என்ற கோஷத்துடன் தேசிய மீனவர்கூட்டமைப்பு தாமஸ் கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் 10,000-த்திற்கும் மேற் பட்டவர்கள் பங்கு பெற்றனர். அவர்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பலர் காயமடைந்தனர். இந்த 1989 போராட்டம் பற்றிய ஆவணப் படம் இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமான ஒன்று. 1989 ஜூன் 13 வரை மருத்துவர் குமாரதாஸ் அவர்கள் தலைமையில் நெல்லையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அணுஉலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜூன் 13 அன்று கூடங்குளத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. 1989 இல் பேச்சிப் பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப் போவதாகத் தகவல் பரவியதை ஒட்டி 101 தொடர் பொதுக் கூட்டங்கள் நாகர்கோவில், அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்தப்பட்டன. 1989 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூடங்குளம் அணு உலையைக் கைவிடும் கோரிக்கையை வைத்தன. பேச்சிப்பாறை அணை யில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க எல்லைக் கற்கள் நடப்பட்டிருந்தன. அந்தக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடைபெற்றது. இப்படி 25 ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதுமே முதன்மையானதாக இருந்து வந்துள்ளது.
தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை அடிக்கல் நாட்டு விழா கைவிடப்பட்டது. முறையே ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடைபெறவிருந்த விழாக்கள் அவை. பேச்சிப்பாறை தண்ணீர் மற்றும் மீனவர்கள் கோரிக்கையை ஒன்றிணைத்துப் போராட்டம் இன்னும் வலுப்பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பெரும் தொகை கொடுத்து தென் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது நிர்வாகம்.
விடுதலை, தினமணியில் தொடர்ந்து அணுஉலை யின் பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் வெளி வந்தன. பிரதமர் இந்திரா காந்தி அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். அந்த சமயம் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். தமிழக கவர்னர் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் பொது நிகழ்வில் இசை அமைப்பாளர் இளையராஜா அணுஉலையை எதிர்த்துப் பேசினார். உடனே அவரது வீட்டிற்கு அன்றே வருமான வரித் துறையினர் ரெய்டு செய்தனர். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கூடங்குளம், செர்நோபில் அணு உலையின் பாதிப்புகள் என பல தலைப்புகளில் வெளிவந்தன. மருத்துவர் ரமேஷ், பிரேமா நந்தகுமார், அ.ஜ.கான், புகழேந்தி, நெடுஞ்செழியன், வி.டி. பத்மனாபன், ஞாநி, நாகார்ஜுனன், ஏ.எஸ்.பன்னீர் செல்வன், சீ. டேவிட், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கார்முகில், செல்ல பாண்டியன், துறைமடங்கன், அண்டன் கோமஸ், பிரகாஷ், பாமரன், செந்தில் குமார், நீலகண்டன், குமாரசாமி, பிரபாகர், அசுரன், ஐராவதம் மகாதேவன், புருஷோத்தம், சந்தோஷ், மருத்துவர் தெய்வநாயகம், சுப. உதயகுமார் என இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தொடர் செயல்பாடு கூடங்குளம் திட்டத்திற்கு எதிராகப் பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. (பட்டியல் முழுமையானதல்ல). இயக்குநர் பாலசந்தர், நடிகர் நாசர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் கூடங்குளத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டனர்.
ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் சூழலியலாளர், உலகமய எதிர்ப்பாளர் பிரபுல் பித்வாய் கடந்த 25 ஆண்டுகளாக கூடங்குளத்தைஎதிர்த்தும், அணுஉலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரேந்திர சர்மா, நீரஜ் ஜெயின், அகர்வால், க்ளாட் அல்வாரிஸ், அசின் விநாயக், அனில் சௌத்ரி, அருந்ததி ராய், எம்.வி.என்.நாயர், சுவரத ராஜு, எம்.வி.ராமண்ணா, மூத்த மார்க்சிஸ்ட் எம்.பி.பரமேஸ்வரன் என நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் அணுஉலைகளின் ஆபத்துகளைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக அறிவு தளத்தில் செயல்படும்பொழுது எல்லாம் இதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு, மக்கள் இதில் பெரும் திரளாகப் பங்கேற்றவுடன் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தத் தொடங்கியது. 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி, கிறித்துவ தலைமை என தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அரசும், புதிதாய் முளைக்கும் லெட்டர் பேடு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது இந்த நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாக உள்ளது. உதயகுமாரை அமெரிக்கா தான் இந்த திட்டத்தை முடக்க இங்கு அனுப்பியது என்பது தான் நகைச்சுவையின் உச்சம். இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க ஏஜெண்டுகளே மன்மோகனும் மாண்டேக் சிங் அலுவாலியாவும் தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் நிறுவனத்தால் இந்த திட்டத்தை ஒரு கையெழுத்தில் முடக்கிவிடலாம். ஏன் அமெரிக்கா தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். இவர்களை வைத்துக் கொண்டு உதயகுமாரைப் பற்றி பேசுவது மன்மோகனைக் கொச்சைப் படுத்துவதற்கு சமம், அவரே இதை விரும்பமாட்டார். இதே ரஷ்ய அணு உலையை வங்கத்தை விட்டு விரட்டினார் மம்தா பேனர்ஜி, அவரைப் பார்த்து 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி என குற்றம்சாட்ட ஏன் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் இல்லாமல் போனது? அதிகாரத்திற்கும் நிலத்தில் கால்பதித்து நிற்கும் எளிய விளிம்புநிலை மனிதனுக்கும் அணுகுமுறையில் எத்தனை பெரிய வித்தியாசம்.
உதயகுமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு எல்லாம் செல்லும் பொழுது இந்தக் கிராமத்தினர் எல்லாம் அவரை ஒரு எதிரிபோலவே பார்த்தனர். இந்தப் பகுதியின் வளர்ச்சியை முடக்க வந்தவன் என்றே நினைத்தனர். இந்த மக்கள் எங்களைப் பார்த்த பார்வையில் நானே உதயகுமாரிடம் நோட்டீஸ் விநியோகித்து விட்டுப் பத்திரமாக ஊர் திரும்பிவிடுவோமா என்று கேட்டதுண்டு. ஃபுகுஷிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பும் அதனை ஒட்டி இங்கு பத்திரிகைகள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து வழங்கிய செய்திகள், நிகழ்ச்சிகள் தான் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. இந்த ஊடகங்கள் பரபரப்பாக விற்கும் சரக்கு சக்கை போடுபோடும் தானே. அதனை ஒட்டி கூடங்குளம் அணுஉலையில் நடந்த சோதனை ஓட்டம் அதில் இருந்து இரவு பகலாக வந்த ஓசையில் மக்கள் தூக்கத்தை இழந்தனர். அணுஉலை நிர்வாகம் வந்து கூடங்குளம் கிராம மக்களைத் திரட்டி தரையில் படுங்கள், இது தான் ‘ஐயோடின்’ என்று வகுப்பு எடுக்க தொடங்கியது. மக்கள் வீதியில் திரண்டனர். அன்றுதான் அவர்கள், “அந்த ஆள கூட்டிட்டு வாங்கடா” என்று உதயகுமாரை தேடி ஆட்களை அனுப்பியது. “நீங்கள் கூறியது எல்லாம் நடக்கும் போல் உள்ளது. நாங்கள் வீதிக்கு வந்துவிட்டோம், எங்களை வழி நடத்துங்கள்” என்று உதயகுமாரைக் கேட்டுக் கொண்டனர்.
பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டம், கனிமங்கள் வெட்டி எடுத்தல், சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் வாழ்வாதாரங்களுக்காக நடத்தும் போராட்டம், நிலங்களை இழந்து நகர பிளாட்பாரங்களில் நிர்க்கதியாக நிற்பவர்கள், நாடு மீண்டும் பன்னாட்டு நிறுவனங் களின், ஏகாதிபத்தியங்களின் குடியேற்ற நாடாக மாறி வருவதை எதிர்த்து இரண்டாம் சுதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் போராட்டம் நடத்தினாலும் உடன் அதனை வெளிநாட்டு சதி என்றும், இதற்குப் பின்னால் வெளிநாட்டுப் பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை உலகமயத்திற்குப் பின் கூச்சம் இல்லாமல் சொல்ல பழகி விட்டன நம் நாட்டின் பெரு ஊடகங்கள்.
உலகமயம் இவர்களுக்கு வழங்கும் அனுகூலங்களைப் பற்றி நாம் தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். எது எப்படியோ, பத்திரிகை தர்மம் வாழ்க!
‘கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்’ - நூலிலிருந்து
1 கருத்து:
நன்றி. இந்த புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்தேன். பாதி கூட படிக்கவில்லை. மனம் கனத்து விட்டது. முத்துகிருஷ்ணனை பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிக அற்புதம். என் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து விடுங்க.
கருத்துரையிடுக