நம் நாடு சுதந்திரமடைந்த பின், பல தளங்களில் ஒரு மறுமலர்ச்சியைக் கவனிக்க முடிந்தது. இதை நேருவின் கனாக்காலம் (Nehruvin dream) என்று சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டிலும் இதன் எதிரொலி இருந்தது. அதிலொன்றுதான் தமிழ் கலைக் களஞ்சியம் வெளியானது. இந்தப் பத்து வால்யூம்களைப் புரட்டும்போது அவை எவ்வளவு சிரத்தையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறதென்பதைக் கண்டு வியக்கிறோம். யாருக்கு எந்தத் தலைப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஆய்ந்து, சமநிலையுடன், அரசியல் வாடையே இல்லாமல் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதில் காட்டுயிர் பற்றி இருவர் எழுதியுள்ளனர். மா. கிருஷ்ணன். அடுத்தது பி.பி.பானல் (P.B.Bonnel). இந்த திருநெல்வேலித் தமிழர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் உயிரியல் பேராசிரியராக இருந்தார். நான் அங்கு படித்தபோது ஓய்வு பெற்றிருந்தார். ஆனால் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். எப்போதும் கோட்டு, டையுடன் காணப்படுவார். அவருக்குப் பறவைகள் மீது ஈடுபாடு அதிகம். ஆகவே அவரைக் கல்லூரியில் Paradise Bird Bonnel என்று குறிப்பிடுவார்கள்.
பெருமாள் முருகன் பதிப்பு வரலாற்றில் ஈடுபாடு கொண்டவராதலால் இந்த மூன்று பகுதிகளிருக்கும் விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் முன்வைக்கிறார். ஒவ்வொரு குறிப்பைப் பற்றிய வெளியீட்டு விவரத்தை ஒரு பட்டியலாகத் தந்திருக்கிறார். ஆங்காங்கே அடிக் குறிப்புகள் மூலம் சில சொற்களை விளக்குகிறார். 88 பறவைகளின் தமிழ்ப் பெயர்களும் அவை ஒவ் வொன்றின் ஆங்கிலப் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. முழுமையான பொருளடைவு ஒன்றும் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. நூலின் இந்த அங்கம் அதன் பயனைக் கூட்டுகின்றது. அதிலும் உயிரியல் சார்ந்த நூல்களில் இது மிகவும் இன்றியமையாதது. பெருமாள் முருகனின் நேர்த்தியான பதிப்புரை தமிழில் இயற்கை வரலாறு பற்றிய பிரச்சினைகளைப் பற்றிக் கூறுகிறது. பெருமாள் முருகன், சோ.தர்மன் போன்ற எழுத்தாளர்கள் இயற்கை வரலாற்று சொல்லாடல்களைத் தங்களது நாவல்களில் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தமிழில் ஒரு உயிரினத்திற்குப் பல பெயர்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. திருநெல்வேலியில் ஒரு பெயரால் அறியப்படும் பறவை ஒன்றிற்கு வேலூரில் வேறு பெயர் இருக்கும். காட்டுக்கோழிக்கு அடவி கோழி, கானகோழி என்ற பெயர்களும் உண்டு என்கிறார். அது போலவே கூழைக்கடா (Pelican) என்றறியப்படும் பறவையை வேடந்தாங்கல் மக்கள் ‘மத்தாளி கொக்கு’ என்கின்றனர். கிருஷ்ணன் அவர் அறிந்திருந்த எல்லா பெயர்களையும் பதிவு செய்திருக்கிறார். இம்மாதிரியான அரிய தகவல்களை அடக்கியது இந் நூல்.
வேடந்தாங்கலைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை கிருஷ்ணன் சொல்கிறார். இங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் 14 வகைப் பறவைகளும் நம்மூரைச் சேர்ந்தவையே. வெளி நாட்டுப் பறவைகள் அல்ல. குளிர் காலத்தில் நம் நாட்டிற்கு வலசை வரும் புள்ளினங்கள் இங்கு இரை தேட மட்டுமே வருகின்றன. ஏனென்றால் மேலை நாடுகளின் தரையில் பனி படர்ந்து இரை தேடுவது சிரமமாக இருக்கும். வலசை வரும் பறவைகள் தாங்கள் இரை தேடிப் போகும் நாடுகளில் கூடு கட்டாது. ஆனால் இன்றும் வேடந்தாங்கல் என்றவுடன் வெளிநாட்டுப் பறவைகள் வந்து கூடுகட்டுகின்றன என்று தமிழ் நாளிதழ்கள் எழுதுகின்றன. வலசை வரும் பறவைகளையும் இந்த சரணாலயத்தில் காணமுடியும். கிளுவை , சிறவி போன்ற நீர்வாத்துகள், உள்ளான் போன்ற புள்ளினம் இவை ஐரோப்பாவிலிருந்து வருகின்றன.
வேடந்தாங்கல் இருநூறு ஆண்டுகளாகப் பறவைப் புகலிடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டிலேயே அதிக ஆண்டுகள் அரசால் பாதுகாக்கப்பட்டது இந்தப் புகலிடம்தான். 1789இல் செங்கல்பட்டு கலெக்டர் இந்தக் கிராமத்து மக்களுக்கு ஒரு நில உடன்படிக்கையைக் கொடுத்தார். அது தொலைந்து போய்விட்டதால் 1858 ஆண்டு ஜி.பி.டாட் என்ற கலெக்டர் அதைப் புதுப்பித்துக் கொடுத்தார். ‘கவுல்’ எனப்படும் அந்த ஆவணத்திலிருந்து ஒரு பகுதி. . .
“உங்கள் கிராமமாகிய மேற் குறித்த வேடந்தாங்கல் ஏரியிலிருக்கிற கடப்ப மரங்களில் நானாவித பக்ஷி சாதிகள் அனாதியாய் வாசஞ் செய்வதாயும், அவைகளை ஒருவரும் சுடாமலும் பிடியாமலும் இருக்கும் பொருட்டு முன்னாலேயே மேஸ்தா ப்ளேஸ் துரையவர்கள் கவுல் கொடுத்ததாயும் அது கை சோர்ந்து போனதாயும் அதற்குப் பதில் வேறு கவுல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டபடியால் அந்தப்படி இதை உங்களுக்குக் கொடுக்கலாயிற்று.”
வேடந்தாங்கல் பற்றிய கையேட்டிற்கு அன்றைய (1961) வனத்துறை தலைமை அதிகாரி சி.ஏ.ஆர்.பத்ரன் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். காட்டுயிர் பற்றித் தமிழில் நூல்கள் வர வேண்டும் என்று விரும்பிய இவர், பறவைகளின் தமிழ்ப்பெயர்களைத் திரட்டி ஒரு சிறுநூலாக வனத்துறை சார்பில் வெளியிட்டார். கிருஷ்ணனைக் கையேடு எழுதத் தூண்டியவரும் இவர்தான்.
இந்தியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயங்கள் பற்றி கிருஷ்ணன் 1951இல் எழுதிய குறிப்பு அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைக் காட்டுகின்றது. மத்தியப் பிரதேசத்திலுள்ள கான்ஹா சரணாலயத்தில் பாரசிங்கா மான் (நம்மூர் கடம்பை மான் போன்றது.) மிகுந்துள்ளது என்கிறார். இன்றோ அவை அங்கு அரிதாகிவிட்டது. நான் சென்ற ஆண்டு அங்கு சென்றிருந்தபோது ஒரு பாரசிங்காவைக் கூட காண முடியவில்லை (இந்த மானின் கிளைவிட்டு நீண்டு வளைந்த கொம்பில் 12 நுனிகள் இருப்பதால் இந்தப் பெயர்).
நம் நாட்டில் காட்டுயிர் பேணலில் எழப்போகின்ற பிரச்சினைகளைப் பற்றி ஒரு தீர்க்கதரிசி போல எழுதினார்: “வனவிலங்கு பாதுகாப்பில் ஏற்படும் சிக்கல்கள் அப்பாதுகாப்பை அளிக்கும் மனிதனின் ஆதிக்கத்தைப் பொறுத்தது. இயற்கையாகவே நாட்டிற்கு நாடு வேறுபடும். எனவே எங்கோ இன்னொரு நாட்டில் கையாளப்பட்ட வழிமுறைகளை வேறு ஒரு நாட்டில் கையாள்வதில் பலனில்லாமல் போகலாம். இந்தியாவில் வனவிலங்கு புகலிடங்களை ஏற்படுத்த திட்டங்கள் இடுவதில் இந்த முக்கியமான உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.”
இன்று வேங்கைப் பாதுகாப்பில் காட்டுயிரியலாளர்கள் இருதரப்பாகப் பிரிந்து நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்தை கிருஷ்ணன் முன்பே எதிர்பார்த்திருந்தார் என்று தெரிகின்றது.
நன்றி: உயிர்மை , பிப்ரவரி 2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக