முதுமலை சரணாலயத்தை அடுத்து பாதுகாக்கப்பட்ட காடுகள் கர்நாடகத்திலுள்ள கொள்ளேகால் வரை விரிகின்றது. நடுவே மோயாறு பள்ளத்தாக்கு, அதன் முடிவில் தெங்குமராடா கிராமம். இந்தப் பள்ளத்தாக்கிற்கு அப்புறம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் ஆரம்பம். பின்னர் தளமலை, பிலிகிரி ரங்கன் மலை என பரந்துள்ள வளமான காடுகள். சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட சத்தியமங்கலம் சரணாலயம் அதை ஒட்டியுள்ளது. பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் பயணிக்கும்போது, அந்த நாற்பது நிமிடமும் வலப்புறத்தில் காடு பரந்து விரிந்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த கானகப் பரப்புதான் பதினைந்து ஆண்டுகளாக வீரப்பன் கோலோச்சிய ராஜ்யமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சாதாரணமாக காடுகளில் நிகழக்கூடிய கால்நடை மேய்ச்சல், திருட்டுவேட்டை, மரம் வெட்டல் போன்ற ஊடுருவல்கள் மிகவும் குறைந்து இருந்தது. 2004இல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, மெல்ல மெல்ல காட்டுயிரியலாளர்கள் இந்த வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். காட்டுயிர் - தாவரங்களும் விலங்குகளும் - இங்கு செழித்திருப்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கின்றார்கள்.
பொழுது புலருமுன் விடுதியை விட்டு நாங்கள் புறப்பட்டோம். கல்லட்டி மலைச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் வலப்புறம் திரும்பி ஆனைக்கட்டி சாலையில் சென்றோம். வனத்துறை செக் போஸ்ட்டில் கையெழுத்திட்டு, காட்டுச் சாலையை மறித்திருந்த இரும்புச் சங்கிலி பூட்டைத் திறந்து சிகூர் வனப்பகுதியில் நாங்கள் புகும் வேளையில் பொழுது புலர ஆரம்பித்தது. நுழைந்ததுமே இது மனிதர் நடமாட்டமற்ற கானகம் என்பதற்கு அறிகுறிகள் தெரிந்தன.
காட்டுக்கோழிகள் வனப்பாதையருகே கிடந்த யானை லத்திகளைக் கிளறி அதில் கிடைக்கும் தானியங்களைத் தேடிக்கொண்டிருந்தன. மரங்களில் மயில்கள் அமர்ந்து நிதானமாக இறகுகளைக் கோதிக்கொண்டிருந்தன. பகல் முழுதும் தரையிலே திரியும் இப்பறவைகள் இரைக்கொல்லிகளிலிருந்து தப்ப இரவை மரக்கிளைகளில் கழிக்கின்றன. கௌதாரிகள் இப்படித்தான் செய்யும். சாலையருகே ஒரு காடை, சிறிய பஞ்சுருண்டைகள் போன்ற தனது மூன்று குஞ்சுகளுடன் இரை தேடிக்கொண்டிருந்தது. மிக அருகில் பார்க்க முடிந்ததால் அது ஒரு புதர்க்காடை (Jungle Bush Quail) என்று அடையாளம் காணமுடிந்தது. நாங்கள் யாவருமே இந்தப் பறவையை இதற்கு முன் பார்த்ததில்லை. பறவை ஆர்வலர்கள் தான் முதல்முதலாக, இதற்கு முன் பார்த்திராத பறவை ஒன்றைப் பார்த்தால் அதை lifer என்று குறிப்பிடுவர்.
இயற்கைக்கான உலக நிதியகத்தின் (WWF) கள ஆய்வாளர் ரவிகுமார் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். காட்டின் விலங்குகளைக் கண்டறிவதில் கில்லாடி. ஜீப்பை ஓட்டியபடியே, வலப்புறம் வெகு தூரத்தில் கடம்பை மான் ஒன்று நிற்பதைப் பார்க்கச் சொல்வார். நீலகிரி நிலவிரிவு செயல்திட்டம் (Nilgiri Landscape Project) என்ற திட்டத்தை WWF கடந்த பத்தாண்டுகளாக இந்தப் பகுதியில் இயக்கி வருகிறது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கள ஆய்வு செய்கின்றனர். பணிசெய்வோர் யாவரும் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர் ஆட்களே. திருட்டு வேட்டையைத் தடுக்க இரு முகாம்கள் அமைத்து ஒவ்வொரு முகாமிலும் மூன்று பேர் இருக்கிறார்கள். தாங்கள் காணும் காட்டுயிர்களைப் பதிவு செய்கிறார்கள்.
இந்தப் பகுதியில் நாற்பது தானியங்கி காமிராக்களை வெவ்வேறு இடங்களில் பொருத்தியிருக்கிறார்கள். வேங்கை, காட்டுப்பாதையில் நடக்கும் பழக்கமுடையதாகையால் அதன் நடமாட்டத்தை அதன் கால் தடங்கள் மூலம் கண்டு, அந்தப் பகுதியில் தானியங்கி காமிராக்களைப் பொருத்துவார்கள். இந்த காமிரா இரு பகுதிகளாக இயங்கும். சிறுமரங்களில் எதிர் எதிராக, தரையிலிருந்து ஓரடி உயரத்தில், நேர்கோட்டில், இக்காமிராக்களை கம்பியால் இறுகக் கட்டி விடுகிறார்கள். ரேடியோ கதிரால் இணைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பகுதிகளுக்கும் குறுக்கே எந்த விலங்காவது நடந்து இந்த இணைப்பு துண்டிக்கப்படும்போது, காமிரா இயங்கிப் படமெடுத்து விடுகின்றது. படமெடுக்கப்பட்ட தேதியும், நேரமும் பதிவாகிறது. ஒரு காமிராவால் இருநூறு படங்களை எடுக்க முடியும். வாரத்திற்கொரு முறை ஆய்வாளர் வந்து இந்த காமிராவிலிருந்த கார்டை மட்டும் எடுத்து, இன்னொரு புதிய கார்டைப் பொருத்தி விடுகின்றார். இந்த முறையில் சலனப்படம் கூட எடுக்க முடியும். எங்களைக் காட்டுக்குள் கூட்டிச்சென்ற ரவிகுமார் அவ்வப்போது ஜீப்பை நிறுத்தி காமிரா கார்டுகளை மாற்றினார். உடனே அந்த கார்டை தனது டிஜிட்டல் காமிராவில் பொருத்தி எந்த எந்த விலங்குகள் படமெடுக்கப்பட்டிருக்கின்றன என்று எங்களுக்குக் காட்டினார். நாங்கள் சென்ற அன்று அந்தப் பாதையை ஒரு மணி நேரத்திற்கு முன்தான் கடந்திருந்த ஒரு புதிய வேங்கை காமிராவில் பதிவாகியிருந்தது. அதன் கால்தடயங்களையும் நாங்கள் அங்கு பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வேங்கைக்கும் ரோமப்போர்வையிலுள்ள வரிகள் வேறுபட்டிருக்கும், மனிதரின் கைரேகை மாதிரி. ஆகவே காட்டுயிரியலாளர்கள் புகைப்படத்தை வைத்து வேங்கையை அடையாளம் கண்டு அதற்கு T 20, K4 என பெயர்களும் வைத்து விடுவார்கள். இந்த முறையுடன், புலியின் எச்சத்தை பரிசோதனைச்சாலையில் ஆராய்ந்து, DNA மூலமும் அடையாளம் காண முடியும். இப்படி ஆராய்ந்ததில் இந்தப் பகுதியில் ஏறக்குறைய 20 வேங்கைகள் வாழ்கின்றன என்ற முடிவிற்குக் கள ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
எங்களது முதல் நிறுத்தம் ஒரு திருட்டுவேட்டை தடுப்பு முகாம். யானைகளிடமிருந்து பாதுகாப்பிற்காக அந்த ஒரு அறை முகாம், நாற்புறமும் பதுங்குக் குழியால் சூழப்பட்டு, ஒரு சிறிய மரப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் துப்பாக்கி ஏதும் இல்லையென்றாலும், அவர்கள் அங்கு இருப்பதே திருட்டு வேட்டையாடிகள் அந்தப் பக்கம் வராமல் தடுக்கிறது. மலை உச்சிகளில் ஏறி பைனாகுலர் மூலம் கண்காணிக்கிறார்கள். சந்தேகப்படும் நடமாட்டம் தென்பட்டால் வனத்துறை கண்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொள்கிறார்கள். நாங்கள் கையுடன் எடுத்துச்சென்ற ரொட்டியையும் வேகவைத்த முட்டையையும் சாப்பிட்டு விட்டு, அவர்கள் போட்டுக்கொடுத்த கருப்புத் தேனீரைக் குடித்துவிட்டுப் பயணத்தை தொடர்ந்தோம். காட்டுப்பாதையாதலால் மெதுவாகத்தான் போக முடிந்தது..
சிறிது தூரம் கடந்து காங்கிரஸ் பட்டி என்ற, மரங்களற்ற சமதளப் புல்வெளிக்கு வந்தோம். காங்கிரஸ் புல் என்றறியப்படும் தாவரம் மிகுந்துள்ளதனால் இந்தப் பெயர். சில ஆண்டுகளுக்கு முன், காட்டில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கால் நடைகளை இங்கே பட்டி போட்டுத் தங்க விட்டிருந்தனர் மேய்ப்பர்கள். ஏறக்குறைய 30,000 கால்நடைகள் இவ்வனப்பகுதியில் நடமாடின. கால்நடைகளை இரைக்காக அடித்த பெரும்பூனைகளைப் பூச்சி மருந்து வைத்து எளிதாகக் கொன்றனர். அங்கே ஒரு மண் சுவர்களாலான ஒரு கோவிலின் சிதைவைக் காண முடிந்தது. பல மாதங்களாக இடையர்களுடன் பேசி, அவர்களுக்கு வேறு வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி செய்து, கால்நடைகளைக் காட்டிற்குள் ஓட்டி வருவதை நிறுத்தியது WWF குழு.
18 கி.மீ. கடந்து, ஒரு மலை உச்சியில், ஒரு பள்ளத்தாக்கிற்கு மேலே காட்டுப்பாதை முடிந்தது. கீழே, ஒரு வெள்ளிக் கீற்றுபோல மோயாறு மதிய வெயிலில் பளபளத்தது. இடதுபுறத்தில், பச்சை வயல்களுக்கு நடுவே தெங்குமராடா கிராமத்தை தெளிவாகக் காணமுடிந்தது. தளமலையும் அதற்குப்பின் உள்ள சத்தியமங்கலம் சரணாலயத்தின் மலைத்தொடர்களும் அடுக்கடுக்காகத் தெரிந்தன. இது அடர்ந்த காடலல்ல எனினும் புள்ளிமான், கடம்பைமான், காட்டெருது போன்ற தாவர வுண்ணிகள் நிறைந்த காடு. வேங்கைகளுக்குத் தேவையான இரை விலங்குகள் நிறைந்துள்ளதால், மனிதர்கள் தங்கள் கைவேலைகளைக் காட்டாமல் இருந்தால் இந்த அருமையான கானகம் வேங்கை வாழிடமாகச் செழித்திருக்கும்.
வட இந்திய சரணாலயங்களில் புலிகள் வெகு விரைவாக மறைந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் சத்தியமங்கலக் காடுகளில் வேங்கைகள் நடமாட்டம் சிறப்புச் செய்தியாக பவனி வர ஆரம்பித்தது. இந்தியாவின் 39 வேங்கை பாதுகாப்பு இடங்களில், (Project Tiger Reserve) இரண்டு - களக்காடு முண்டந்துறை, முதுமலை - தமிழ்நாட்டிலுள்ளன. இப்போது சத்தியமங்கலக் காட்டையும் புலி பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்போவதாக மத்திய அரசு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கின்றார்.
இதில் பிரச்சினை என்னவென்றால் வேங்கை பாதுகாப்பு பல புதிய பரிமாணங்களைப் பெற்று வருகின்றது. ஒரு சரணாலயம், வேங்கை பாதுகாப்பு இடம் என்று அறிவிக்கப்பட்டு விட்டால் மைய அரசிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிலிருந்தும் நிதி ஒதுக்கீடு கணிசமாக வரும். டூரிஸம் நடத்துபவர்கள் அங்கே வந்து சரணாலயத்திற்கு ஓரமாக விடுதிகளைக் கட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவை சாதாரண தங்குமிடங்கள் அல்ல. ரன்தம்போரிலுள்ள ஒரு விடுதியில் ஒரு அறைக்கு ஒரு நாள் கட்டணம் 25,000 ருபாய். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும்போது, வேங்கைகள் மனிதரின் அருகாமைக்குப் பழக்கப்பட்டு விடுகின்றன. பிறகு, திருட்டுவேட்டைக்காரனையும் அருகில் வர விட்டு உயிரை இழக்கின்றன. டூரிஸம் அதிகமான சரணாலயங்களில் புலியைச் சுடுவது எளிதாகின்றது. ரன்தம்போரில் பல புலிகள் திருட்டு வேட்டையாடிகளால் கொல்லப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் சரிஸ்கா, பண்ணா போன்ற புகழ்பெற்ற சில சரணாலயங்களில் வேங்கைகள் பூண்டோடு அற்றுப்போய்விட்டன.
அதே சமயம், நமது நாட்டில் காலங்காலமாக லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொன்று, சில காடுபடுபொருட்களைப் பயன்படுத்தி, காட்டில் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலையில் மலயாளிகள், அகத்தியமலையில் காணிகள், பழனித்தொடரில் காடர்கள், புலயர்கள், நீலகிரியில் கோத்தர்கள் என இன்றும் வாழ்கிறார்கள். காலனிய ஆதிக்கத்திற்கு முன்பு காட்டுவாழ் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். எனினும் இவர்கள் அல்ல காடுகளை அழித்தவர்கள்.
காலனிய ஆதிக்கம் வந்த பின்னர் பிரித்தானியர்கள், காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்ததுபோல, இந்தியாவின் காடுகளை வேக வேகமாக அழிக்க ஆரம்பித்தனர். மரத்தொழிலுக்காக மரங்களையும், தோட்டப்பயிர்களுக்காக காடுகளையும் வெட்டித்தள்ளினர். விருதுகளுக்காகவும் வீரசாகசத்திற்காகவும் sport என்ற பெயரில் காட்டுயிர்களைச் சுட்டுத் தீர்த்தனர். காடுவாழ் மக்களுக்கும் காட்டின் பயன் கிடைக்காதவாறு செய்து, காட்டிற்கும் அந்த மக்களுக்கும் இருந்த உந்திச்சுழி அறுக்கப்பட்டது. ஊழிகாலமாக வாழ்ந்திருந்த நிலத்திற்குப் பத்திரம் ஏதும் இல்லாததால் தங்கள் வீட்டிலேயே பழங்குடியினர் அனாதை ஆனார்கள். சுதந்திரம் வந்த பிறகும் இந்த நிலை தொடர்ந்தது. வனத்துறை அதிகாரிகளும் பழங்குடியினரை அச்சுறுத்தி அடிமைகள்போல் நடத்தினர். இப்பழங்குடியினரைக் காட்டை விட்டு வெளியேற்றினால்தால் புலியைப் பாதுகாக்க முடியும் என்று வாதிடுபவர்கள் டூரிஸத்திற்கு எதிராக எதுவும் சொல்வதில்லை. அது ஒரு மகா சக்திவாய்ந்த லாபி.
பழங்குடியினரை வெளியேற்றக் கூடாது. காடுதான் அவர்கள் வாழிடம். அது மட்டுமன்றி அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் காட்டுயிர்களைப் பேணமுடியாது என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர். காட்டுயிரியலாளர்களும் ஆர்வலர்களும் பங்கெடுக்கும் எல்லா கருத்தரங்குகளிலும் கூடுகைகளிலும் இந்த விவாதம் எதிரொலிக்கிறது. வனத்துறை அதிகாரிகள், காட்டுயிரியலாளர்கள் ஒருபுறமும், தன்னார்வக் குழுக்களும் மனித உரிமைக் குழுக்களும் மறுபுறமும், இரு பிரிவாக இயங்குகின்றனர். உள்ளூர் மக்கள் ஆதரவில்லாமல் காட்டுயிரைப் பாதுகாக்க முடியாது என்பது அவர்கள் வாதம். மக்களை ஒதுக்கியதால்தான் நம் நாட்டின் காட்டுயிர் வளத்தை இழந்துவிட்டோம் என்கின்றனர்.
காடுவாழ் மக்கள் இழந்த உரிமையை மீட்டுத்தரும் நோக்கத்துடன் 2006இல் காட்டுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. காலனி ஆதிக்கத்தில் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களையும் சட்டம் என்று இது வரவேற்கப்பட்டது. வனத்துறை மாநிலத்தின் கையில் இருப்பதால் இந்த சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. பெருவாரியான மாநிலங்கள் இந்த சட்டத்தை இன்னும் கண்டுகொள்ளவேயில்லை. இதைச் செயல்படுத்த தேவையான, நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இன்னும் மாநில அரசுகள் வெளியிடவில்லை. காட்டுரிமைச் சட்டம் இன்றளவில் ஒரு ஏட்டுச்சுரைக்காயாக உறைந்து விட்டது. இந்த மாதம் 13ம் தேதி ஹரூரில் 2006 காட்டுரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பழங்குடியினர் நல சங்கத்தினரால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் சென்னையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சத்தியமங்கலக் காடுகளைப் புலி காப்பகமாக அறிவித்தால் அது புலி பாதுகாப்பிற்கு உதவுமா அல்லது எதிர்வினையாகுமா என்ற அடிப்படை கேள்வி எழுப்பப்படுகிறது. நோக்கம் நல்லதாயிருப்பினும் நாளடைவில் இது வேங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நன்னோக்கம் எனும் கற்களால் பாவப்பட்டது என்றொரு பழமொழி உண்டு. (The road to hell is paved with good intentions)
நன்றி: உயிர்மை.காம்
2 கருத்துகள்:
வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்
நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நன்னோக்கம் எனும் கற்களால் பாவப்பட்டது என்றொரு பழமொழி உண்டு. (The road to hell is paved with good intentions)//
அருமையான கருத்து. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
கருத்துரையிடுக