செவ்வாய், ஏப்ரல் 19, 2011

மீன்கொத்திப் பறவைகள்

பெரும்பாலான என் ரயில், பேருந்து பயணங்களில் ஜன்னல் ஓர இருக்கையே என் விருப்ப இடமாகும். வேடிக்கை பார்க்க வசதி.அதில் ஓர் அலாதியான இன்பம். காட்சிகள் மாறுவது போல, பிரதேசம், மக்களின் வெளித்தோற்றம், பேச்சுவழக்கு, கோவில் வழிபாடு இப்படி எத்தனையோ விஷயங்கள் நம் அருகில் கொட்டிக் கிடக்கும். ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மினசாரக் கம்பியில் சற்றும் பயமேதும் இல்லாமல், உட்கார்ந்து இருக்கும் மீன்கொத்திப் பறவைகள் என்னை அதிகம் கவர்ந்த ஒன்று. நான் செங்கல்பட்டு சேரும் வரை குறைந்தது 10 இடத்திலாவது இப்பறவை அமர்ந்து இருப்பதை அல்லது சட்டென பறந்து போவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது தேனியில், என் வீட்டிற்கு அருகில் இருக்கும் மீறு சமுத்திரக் கண்மாய் கரையோரம், மாலை வேளை நடைப் பயணத்தை நானும், என் மகளும் மேற்கொள்ளும் போது, அவள் மீன் கொத்திப் பறவைகளை சுட்டிக்காட்டியவாறே வருவாள். "மீன் கொத்தி" என்ற அழகான தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில எடிமாலஜியில் "புரியாத தன்மை" என்ற அர்த்தம் தொனிக்க பெயர் கொண்டிருப்பது ஏனோ? இதுவரை தெரியவில்லை.

என் நண்பரும், பசுமைத்தாயகத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைகளை எழுதுபவரான பிரதீப் செல்வராஜ் எல்லோரும் ஏனோ, புலி, சிங்கம், யானை என திரும்பத் திரும்ப அவைகளைப்பற்றியே எழுதுகின்றனர். சுற்றுச்சூழல், வனத்தை பாதுகாப்பதில் பறவைகள், கீரி, நீர் நாய், அபூர்வ மரங்கள் போன்றவற்றின் பங்கும் அதிகம். அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே கிடையாது. நீங்களாவது ஏன் எழுதக்கூடாது என ஒரு முறை அலைபேசியில் கேட்டுக் கொண்டார். அவரின் கூற்றில் நூறு சதவீதம் உண்மை உள்ளது. ஏற்கனவே எழுதி உள்ளேனே என்றேன். போதாது, இன்னும் அதிகம் எழுதுங்கள் என்று பணித்தார். சரி என்று ஒப்புக் கொண்டேன். இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால், பேருயிர் தவிர்த்து சிற்றுயிர்களும், பறவைகளும், பல கோடி மரங்களும், மட்டுமே சுற்றுச்சூழலையும், வனச் செழுமையையும் பாதுகாக்கின்றன. அவைகளின் பங்கீடுதான் அதிகம். ஆனால், நமது அறியாமையின் விளைவாக அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ளன. மீன் கொத்திப் பறவையும் அழிவின் விளிம்பில் உள்ள ஒன்றுதான். ஏறத்தாழ, 4--6 வண்ணங்களை உடலெங்கும் பூசி "குவிக்" என்ற ஒலி எழுப்பியவாறு நீண்ட வால் முன் பின் அசைய கண்சிமிட்டும் நேரத்தில், வேகமாக, தலைகீழாக பாய்ந்து, இரையைக் கொத்தி கவ்வும் அழகு என துடிப்புள்ள ஒரு பறவையாக இனம் காணப்படுகிறது. மின்சாரக் கம்பிகள், காய்ந்த மரக்கிளைகள், பாறை முகடு, ஆற்றோரம், நதியோரம் விளைந்திருக்கும் குற்றுச் செடிகளில் அசையும் நுனி போன்றவை இவை அமரும் இடங்கள். வெகு நிச்சயமாக, இப்போதெல்லாம் நகருக்குள் காண்பது அரிதினும் அரிதே. பல கவிஞர்களும், காதலர்களும், காதலிகளும், இதன் அழகில் மயங்கி, கவிதையாக்கி தூது அனுப்பி வருகிறார்கள்!

நதிக்கரையோரம் வாழ்பவை, மரக்கிளைகளில் வாழ்பவை, நீர் நிலையோரம் வாழ்பவை என இதை வகைப்படுத்துகிறார்கள் பறவையியலாளர்கள். 96க்கும் மேற்பட்ட உள் இனம் கொண்ட இப்பறவையில் ஆண், பெண் பால் வேற்றுமை காண்பது சற்று சிரமம். கிட்டத்தட்ட பெரும்பாலானவை காட்டிலேயே வாழ விரும்புகின்றன. மனிதனாலும் வசப்படுத்த முடியாது. அதாவது, மனித நடமாட்டத்தை அவை விரும்புவதே இல்லை. முகத்துவாரத்தில் அமைந்த பள்ளங்களை, காய்ந்த மரங்களில் காணும் பொந்துகளை, கரையான் புற்றுக்களை, அடர்ந்த புதர்களைக் கூடுகளாக மாற்றிக் கொள்கின்றன. பூர்வீகம் ஆஸ்திரேலியா என்றாலும், 30---40 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய பறவைகளின் படிமங்களில் இவை உள்ளன. அவை மீன்கொத்தியின் மண்டையோட்டை ஒத்திருப்பதால், பல நூற்றாண்டுகளாக பூமிக் கோளத்தில் வாழ்ந்து வருகிறது என்று ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர், வேறு பறவையாகவும் இருக்கலாம் என்று வாதாடுகின்றனர். பனி படர்ந்த துருவப் பிரதேசங்களையும், கடுமையான வெப்பம் தோய்ந்த பாலைவனங்களையும், இவை வாழ்வாதார இடமாக அங்கீகரிக்கவில்லை. தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இவற்றின் எண்ணிக்கை, பிற பறவைகளோடு ஒப்பிடும்போது மிக குறைவு. இந்தியாவிலோ இன்னும் மோசம்.

பொதுவாக தீவுகளையே தன் விருப்ப ஸ்தலமாகச் கொள்கின்றன. சாலமன் தீவுகளில் இவை அதிகம் உண்டு. அடர்ந்த வனமும், வனம்சார் சிறு புனலும், இவை மனம் ஒப்பி வாழ வழி செய்கின்றன. அதிக நிலப்பரப்பை ,ஒவ்வொரு பறவையும் தனதாக்கிக் கொள்கின்றன. பிற பறவைகளின் உணவு எல்லைப் பரப்பும். இதனுடன் கலப்பதால், தாக்குதலுக்கு உள்ளாகி மலை, காடு, மனித நடமாட்டமற்ற மரப்பட்டறை, தோப்பு, தோட்டம் என ஜீவித எல்லையை மாற்றிக் கொள்ளவும் பழகிக் கொள்கின்றன. நீண்ட வாலும், கெட்டியான அலகும், தினசரி வாழ்வில் பேருதவி புரிகின்றன. அதி வேகமாகப் பறக்கும்போது காற்றின் அழுத்தத்தை தீர்மானிப்பதற்கு, நீண்ட வால் துணை புரிகிறது. மேலும் கீழும் அசைந்து துடுப்பு போல் செயல்படுகிறது. இரைகளை ஒரே கொத்தில் பிடிக்கவும், சில சமயம், மண் மரம், பாறை இடுக்குகளைக் குடைந்து, கிளறி உள்ளே வாழும் சிறு பூச்சி இனங்களைப் பிடிக்கவும் அலகு பயன்படுகிறது.

தூர நோக்கி போல இதன் கண்களின் அமைப்பு உள்ளது. தலையை ஆந்தை போல் திருப்பாமல், கண்களை முன் பின் அசைத்து, துல்லியமாக இரையின் இருப்பிடத்தைக் கண்டறிந்து கண்சிமிட்டும் நேரத்தில் அலகால் கொத்திச் செல்லும் பாங்கு அலாதியானது. தண்ணீருக்குக் கீழே உள்ள இரையையும், இதன் கூர்மையான கண் பார்வையால் கண்டறிய முடிகிறது, சூரிய ஒளியின் பிரதிப்பால் கூட இதன் பார்வையில் கூச்சம் ஏற்படுவதில்லை. கண்களின் மேல் படிந்துள்ள தோல் படலம், மூக்குக் கண்ணாடி போல் செயல்பட்டு நீருக்குள் மூழ்கும்போது கண்களைப் பாதுகாக்கின்றன. குட்டையான கால்கள் வலிமையானவை. 4 விரல் அமைப்பு கொண்டவை.மூன்று இரையைப் பிடிக்கவும், பின்புறம் உள்ள நகம் கிளைகளில் அமர கொண்டிபோல் செயல்படுகிறது. மீன்களைத்தான் அதிகம் உண்ணும் என்றாலும், தவளை ,ஓணான், மண்புழு, சிலந்திகள், சில சந்தர்ப்பங்களில் நடுத்தர வயது பாம்புகளையும் உண்ணும். விருப்ப உணவு என்னவோ மீனும், வெட்டுக்கிளியும் தான். பொதுவாக, சிக்கலற்ற, எந்த இடர்ப்பாடும் இல்லாத பிரதேசங்களில் இரையை வேட்டையாட விரும்புகிறது. அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப விருப்ப உணவையும் மாற்றிக் கொள்ளும். உதாரணமாக, பாலைவனங்களில் பயணிக்கும்போது ஓணான், மண்பாம்புகளையும், காடுகளில், பூச்சிகளையும், முகத்துவாரங்களில் நண்டு, இறால் மீன்களையும் அதிகம் உண்ணும். சிறு பூச்சிகளை 5 அடி தொலைவிலிருந்து பாய்ந்து பிடிக்கும். புதர்களை அழித்துவிடும் போது வெறும் தரையில், இரையைப் பிடிக்கும் சந்தர்ப்பங்களில் மோதி காயமுறுகின்றன. காய்ந்த மரங்களில் ஒருசிலவற்றையாவது, தோப்பு ,தோட்டங்களில் வெட்டாமல் விட்டுவிடலாம். அனைத்தும் வெட்டப்படுவதால் கூடின்றி தவித்து இடம் பெயர்கின்றன. இடப் பெயர்ச்சி மகிழ்ச்சியாய் அமையும் என்ற உத்தரவாதத்திற்கு இடமில்லை.

பூனை, எலி, பாம்பு, பிற ஊண் உண்ணும் பறவைகளாலும் ஆபத்துக்கள் அதிகம். மரமேறும் உயிகளிடமிருந்து இவைகளைக் காப்பாற்ற சலசலப்பான சத்தம் எழுப்பும், மெல்லிய தகரம், பேப்பர் போன்றவற்றால், கூடு அமைந்துள்ள மரங்களில் 7 அடி உயரத்திற்கு சுற்றி வைக்கலாம்.ஒலி இப்பறவைகளை விழிப்படையச் செய்யும். எனினும், என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மனிதனின் விழிப்புணர்வும் ,உதவியும் மட்டுமே இவைகளைக் காப்பாற்ற முடியும். ஏனெனில் மிகமிக விரைவாக அழிந்து வரும் பறவையாக உள்ளது கவலையளிக்கிறது என்கிறார் டாக்டர் டைலன் கெஸ்லர். இவர் 30 வருடங்களாக மீன்கொத்தி பறவைகளை ஆராயும் அமெரிக்க ஆய்வாளர் .மீன்கொத்திதான் பறவைகளில் அதிக போராட்டமான வாழ்வை மேற்கொள்கின்றன என்கிறார் சலீம் அலி. காரணம், அவைகளுக்கு வாழும் பரப்பளவு அதிகம் தேவைப்படுவதால் பிற உயிர்களோடும், இயற்கையோடும், மனிதனோடும் போராட வேண்டியுள்ளது. இவைகளின் உறவு கவித்துவமானது. ஆணும் பெண்ணும் மனமொப்பி இணைகின்றன. அந்த சந்தர்பத்தில் ,பிற பறவைகள் தலையிடுவது இல்லை. மாறாக ,இளம் பருவத்தினர், அவைகளின் உறவுக்கு உதவுகின்றனர். இவைகள் உறவுகொள்ளும்போது தன்னிலை மறக்கின்றன. அந்த சமயம், பிற ஊண் உண்ணும் பறவைகள் தாக்குதலை நடத்துகின்றன. இவ்வாறான தாக்குதலை ,முன்கூட்டியே அறிந்து, குரல் எழுப்புதல், போரிடுதல் மூலமாக இளம் பருவத்தினர், தங்கள் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஆபத்துகளைக் கருத்தில் கொண்டே உறவுக்காக மரப் பொந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றன. பிரம்மாண்டமான கரையான் புற்றுகளும் புகலிடம் அளிக்கின்றன. பெண் கீழேயும், ஆண் மேலமர்ந்தும், சேவல்--கோழி போல் உறவு நிகழும். சில நிமிட உறவு எனினும், பல முறை உறவு கொண்டு இன்பத்தை நீட்டிப்பதில் ஆர்வம் கொள்கின்றன. 6---10 முட்டைகள் வரை இடும். பளப்பளப்பான வெண்ணிறம் கொண்டவை இவை. அதிக பய உணர்வும், வெட்க உணர்வும் ஆட்டிப்படைக்க, ஆற்றங்கரை, வயல்வெளி, காடுகளின் நடுப்பகுதியைத் தனது முட்டையிடும் காலங்களில் தேர்ந்தெடுக்கின்றன. அப்போது பூச்சிகளை அதிகம் உணவாகக் கொள்வதால், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இது இயற்கையான பயிர் காப்பாளனாக விளங்கி, விவசாயிக்கு உதவுகின்றன என்கிறார் சலீம் அலி. இதையே வேறு வார்த்தையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுக் வோக்கா பறவைகளை வாழவும், வரவழைக்கவும் வழிவகுத்திடுங்கள் அவை பூச்சிகளைப் பார்த்துக் கொள்ளும் ,பூச்சி மருந்தெல்லாம் தேவையில்லை என்கிறார்.

மிசெளரி பல்கலைக்கழக ஆய்வு ஒன்று சமீபத்திய தனது அறிக்கையில் 50,000 வருடம் கட்டிக் காத்த பாரம்பரியம், தனித்துவத்தின் அழிவு, இப்பறவைகளின் அழிவின் மூலம் துவங்கி உள்ளது. தனிமையையும், தனித்துவத்தையும், அமைதியையும், மட்டுமே தனது வாழ்க்கை முழுதும் மேற்கொள்ளும் ஒரு பறவையின் முக்கிய குறிப்பு இது.

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

(kannan233@gmail.com)


நன்றி: உயிரோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக