செவ்வாய், பிப்ரவரி 15, 2011

பண்ணையிலே பல்லுயிரியம்! -தியடோர் பாஸ்கரன்

ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்தப் பண்ணையில் மாமர நிழலில் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தபோது, வைக்கோல்போருக்குப் பின்புறமிருந்து ஒரு கம்பீரமான சேவல் என் முன்னே வந்து நின்றது. காலின் பின்புறம் வளைந்து நீண்டிருந்த முள் அது ஒரு சண்டைக்கோழி என்பதைக் காட்டியது. கிராமத்து ஆட்கள் அதை அசலிக்கோழி என்று குறிப்பிடுகின்றார்கள். அப்போது தான் நாட்டுக்கோழி ஒன்றைப் பார்த்து எவ்வளவு காலமாயிற்று என்று எனக்குப் புலப்பட்டது. நாம் இப்போது காணக்கூடியதெல்லாம் ஒரே தோற்றமுடைய, கூண்டுகளில் வளர்க்கப்படும் ‘கறிக்கோழி’ வகைதான். இன்று நம் நாட்டு எல்லா வளர்ப்புப் பிராணிகளின் கதியும் இதுதான். எவ்வாறு காட்டுயிர்களில் பல்லுயிரியம் குறைந்து உயிரினங்கள் அற்றுப்போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதுபோலவே வெவ்வேறு வளர்ப்பு விலங்குகளும் மறைந்து வருகின்றன. ஆனால் காரணங்கள்தான் வேறு. வளர்ப்பு பிராணிகள் மறைவதற்கு வாழிடம் அழிக்கப்படுவது காரணம் அல்ல.

காட்டுயிர்களின் பல்லுயிரியத்திற்குப் பேர்போன நம் நாட்டில் வளர்ப்பு விலங்குகள், கால்நடை இடங்களும் மிகுந்திருந்தன. இந்திய உபகண்டத்தில்தான் பல உயிரினங்கள் மனிதர்களால் முதன் முதலில் பழக்கப்படுத்தப்பட்டன என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். இங்கிருப்பதுபோல் இத்தனை வகை கால்நடைகள் வேறெங்கும் இல்லை. பரந்த புல்வெளிகள், மேய்ச்சல் காடுகள், பழமையான இடையர் பாரம்பரியம் இவற்றால் பல மாட்டினங்கள் இங்கு உருவாகின. இமயத்தில் குஜ்ஜர்கள், குஜராத்தில் ராபாரி போன்ற மாட்டிடையர்கள் தங்கள் மாடுகளுடன் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர். தமிழ் நாட்டிலும் இத்தகைய ஆடோடிகள் உள்ளனர். (இவர்களைப்பற்றி தமிழில் செந்தமிழன் தயாரித்துள்ள முக்கியமான ஆவணப்படம் இந்த அரிய பாரம்பரியத்தைப் பதிவு செய்கின்றது. கி.ராஜநாரயணன் எழுதிய 'கிடை' என்ற சிறு நாவலும் அதை அடிப்படையாகக் கொண்டு அம்ஷன் குமார் இயக்கிய ஒருத்தி படமும் இந்தப் பொருளைக் கையாள்கின்றன.). இந்தியாவை ஆள ஆரம்பித்த பிரிட்டிஷார் இந்த உயிர்ச் செல்வத்தை அடையாளம் கண்டு, மாடுகளை வேலை செய்பவை, (Drought), பால் கறப்பவை (Dairy) என இருவகையாகப் பிரித்து ஒவ்வொரு இனத்தையும் பதிவு செய்தனர். மொத்தம் 26 இனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் பன்னாட்டளவில் அறியப்பட்டகிர், சாகிவால், ஓங்கோல், ஹொலிக்கர், காங்கயம் காளைகள் அடங்கும். குஜராத்தின் நீண்ட, வளைந்த கொம்புகளுடைய காங்ரேஜ் இனம்தான் சிந்துசமவெளி சித்திர முத்திரையிலுள்ள காளை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்படியானால் எவ்வளவு தொன்மையான மரபினங்களைக் கொண்டவை இந்திய இனங்கள்? இந்திய மாட்டினம் எல்லாவற்றிற்கும் சில பொதுவான கூறுகள் உண்டு. இவை வலுவானவை, நோய் நொடி எளிதில் அண்டாது. ஆகவே மருத்துவச் செலவும் குறைவு. கடுமையான கால நிலையைத் தாங்கி, எளிய இரை உண்டு நன்றாக வாழும் சக்தி உடையவை. வறண்ட பிரதேசத்தில்தான் சிறந்த கால்நடைகள் தோன்றுகின்றன, சௌராஷ்ட்ராவில்கிர் இனம், பல்லடம்-காங் கேயம் அருகே காங்கயம் காளை இவை எடுத்துக் காட்டுகள்.

கடந்த சில பத்தாண்டுகளில் வெண்புரட்சி (White Revolution) என்றறியப்பட்ட முயற்சியில் பல உள்நாட்டுக் கால்நடை இனங்கள் கவனிப்பாரற்றுப் போயின. வெளி நாட்டு மாட்டினங்களை வாங்கி நம்மூர் இனத்தோடு கலந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கினர். இந்தியாவின் சொந்த இனங்கள் நலிய ஆரம்பித்தன. தமிழ்நாட்டின் பர்கூர் இனம் ஒரு எடுத்துக்காட்டு. நம் நாட்டில் இவைகளின் மீது அக்கறை குறைய ஆரம்பித்த அதே சமயத்தில், பிரேசில், அர்ஜெண்டினா, பொலிவியா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் இந்த மாடுகளுக்குக் கிராக்கி ஏற்பட்ட்து. அங்கு நிலவும் பருவநிலையும் இந்த இனங்களுக்கு ஒத்து வருகின்றது. பெருமளவில் இவை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன ( தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் இப்போது மாட்டின் உறைய வைக்கப்பட்ட விந்து மட்டும் அனுப்பப்படுகின்றது). அங்கு அவை இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற மக்டொனால்டு ஹேம்பர்கர்களில் இடம் பெறுவது இந்த இறைச்சிதான். இந்திய மாடுகளை வளர்ப்பது பற்றி பிரேசிலிலிருந்து வெளியாகும் ஒரு ஸ்பானிஷ் மொழி மாதப் பத்திரிகையை நான் பார்த்தேன். இந்திய அரசு இந்த உள்ளூர் மாட்டினங்களில் கரிசனம் காட்டாவிடினும் சில தனி ஆர்வலர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். காங்கயம் இனத்தைப் பேண சேனாபதி காங்கயம் மாட்டின ஆய்வு நிறுவனம் குட்டப் பாளையத்தில் இயங்கி வருகின்றது. கிர் இனத்தைக் காக்க முந்தைய ஜஸ்தான் சமஸ்தானத்தில் சத்யஜித் கச்சார் ஒரு இனப்பெருக்க நிலையத்தை நடத்தி வருகின்றார். நம் நாட்டின் மாட்டினங்களிலேயே எழிலானதும் கம்பீரமானதும் கிர் காளைகள் என்று நான் நினைக்கின்றேன்.

குதிரை மத்திய கிழக்கிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தாலும் இங்கு மூன்று உப இனங்கள் உருவாகின - கட்ச், மார்வாரி, மணிப்புரி. இந்தக் கட்ச் குதிரைகள்தாம் திப்பு சுல்தானின் படையில் இயங்கி கம்பெனி படைகளைக் கதிகலங்க அடித்தவை. கட்ச் பகுதியிலிருந்து கடல் வழி, மங்களுர் துறைமுகத்தின் மூலம் திப்பு இக்குதிரைகளை வரவழைத்தது வரலாறு. நமது திரைப்படங்களில் தோன்றும் குதிரைகள் கட்ச் குதிரைகள்தாம். காதின் நுனிகள் ஒன்றை ஒன்று தொடுவது போலிருப்பது ஒரு அடையாளம். அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் வீரப்பாவும் அவரது குழுவும் புழுதி கிளம்ப சவாரி செய்வது கட்ச் குதிரைகளே. குஜராத்தின் பூஜ்நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் குதிரைகளை அனுப்பியதற்காக அந்த ஊர் அரசருக்கு திப்பு சுல்தான் அன்பளிப்பாகக் கொடுத்த பீரங்கி ஒன்று இருக்கின்றது. குதிரைப்படையில் அதிக நம்பிக்கை வைத்திருந்த திப்பு, ஓசூரில் ஒரு குதிரைப் பண்ணையை நிறுவினார். அது இன்று அரசு கால்நடை பண்ணையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ராஜ்கோட்டிற்கருகிலுள்ள கோண்ட் வால் ராஜா இன்று மார்வாரி குதிரைகளில் அக்கறை காட்டி வருகின்றார். இவர் நடத்திய குதிரைக் காட்சி ஒன்றில் நடனமாடும் மார்வாரி குதிரை ஒன்றைப் பார்த்தேன். உயரம் குறைவான மணிப்புரி குதிரைகள்தாம் முதன் முதலில் போலோ விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டன. வடகிழக்கு இந்தியாவிலுள்ள இந்த சிறிய சமஸ்தானமான மணிப்பூரில் புலூ என்றறியப்பட்ட பாரம்பரிய விளையாட்டு தான் போலோவாக மேலை நாடுகளுக்குப் பரவியது.

முதன்முதலாக நாய்கள் மனிதரை அண்டியது ஆசியாவில்தான் என்கிறார் நோபல் பரிசு பெற்ற விலங்கியலாளர் கான்ராட் லாரன்ஸ். பழைய கற்காலத்தில் இது நடந்திருக்கலாம் என்கிறார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் உருவில் சிறியதிலிருந்து பெரிய வகை வரை பல இன (breed) நாய்கள் இங்கு தோன்றின. ஆனால் அது ஒரு செல்லப்பிராணியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கால்நடைகளைப்போல ஒரு வேலை செய்யும் விலங்காகவே இருந்தது. வேட்டைக்கு, காவல் காக்க, இமயம் போன்ற சில பிரதேசங்களில் ஆடுகளைக் கூட்டிச்சேர்க்க இடையர்களால் பயன்படுத்தப்பட்டன. வெகு அரிதாகப் போரில் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. மெட்ராஸ் ராஜதானியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் நடந்த பாளையக்காரர் போரில் கம்பெனி துருப்புகளின் குதிரைகளைத் தாக்க ராஜபாளையம் நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. மருது சகோதரர்களின் காளையார்கோவில் கோட்டையைக் கோம்பை நாய்கள் காத்தன என்றறிகின்றோம். Madurai Manuel என்ற புத்தகத்தை எழுதிய பிரிட்டிஷ் கலெக்டர் நெல்சன், அந்தப் பகுதியில் ஒரு, குதிரையைக் கொடுத்து நல்ல கோம்பை நாய் ஒன்றை வாங்கிச் செல்ல ஆட்கள் இருந்தனர் என்கிறார். நாய்கள் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு, வீட்டிற்குள் சேர்க்கப்பட்டது கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்தது. பிரிட்டிஷார் நம்மை ஆண்ட காலத்தில், ஸ்பானியல், லாப்ரடார் போன்ற வெளி நாட்டு நாயினங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டு இனங்கள் மறைய ஆரம்பித்தன. நாய்கள் கண்காட்சியில் (Dog Show) நாட்டு நாய்கள் அனுமதிக்கப்படவில்லை.

கிராமப்புறத்தில் வேட்டைக்காக இவை வளர்க்கப்பட்டன. ஆனால் 1972 இல் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் வந்த பின் இந்த நாய்களின் பராமரிப்பு வெகுவாகக் குறைந்தது. அண்மைக்காலத்தில் சில இந்திய நாயினங்களை உயிர்ப்பிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சென்ற வாரம் ஆந்திராவிலுள்ள வனப் பருத்தி சமஸ்தானத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு பஷ்மி என்ற இனத்தைச் சேர்ந்த ஐந்து அழகான நாய்களைப் பார்க்கமுடிந்தது. மொகலாயர்களுடன் வந்த ஆப்கானியநாய் (A fghan hound) உள்ளூர் நாயுடன் கலந்து உருவான இனம் இது. இந்த இனத்தை நிலைபெறச்செய்ய சில ஆர்வலர்கள் ஒரு நிறுவனம் அமைத்து முயன்று வருகின்றனர். சென்னையில் ராஜபாளையம் இனத்தைப் பெருக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வளர்ப்பு உயிரினங்களில் அண்மைக் காலத்தில் வெகுவாக அற்றுப்போனது நாட்டுக்கோழிகள்தான். இந்தியாவில்தான் முதன் முதலில் கோழி மனிதரால் பழக்கப்படுத்தப்பட்டது என்றும், இங்குள்ள Red Jungle Fowl என்ற காட்டுக் கோழியிலிருந்துதான் உலகிலுள்ள எல்லா கோழியினங்களும் தோன்றின என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் பன்னாட்டளவில் கோழி ஆய்வு மாநாடு நடந்தபோது இந்திய அரசு எல்லா கோழியினங்களுக்கும் மூதாதையரான இந்த காட்டுக்கோழி படத்தைத் தாங்கிய ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது. நம் நாட்டிலிருந்த 17 வகை கோழிகளில் பல இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. தமிழ்நாட்டில் பரவலாக வளர்க்கப்பட்ட குறவன் கோழி (the Naked neck) என்ற கோழியினத்தை இன்று பார்ப்பதே அரிதாக உள்ளது. நவீன கோழிப்பண்ணைகளில் ஒரு வெளிநாட்டு இனம் மட்டும் வளர்க்கப்படுகின்றது. இவைகளுக்கு மருந்துகள் அதிகமாக செலுத்தப்படுவதால், அதன் இறைச்சியை உண்பவர்கள் பாதிக்கப்படுவதாக அச்சுச்றுத்தும் செய்தி ஒன்று வருகின்றது. அண்மையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மெனு அட்டையில் நாட்டுக்கோழிக் கறி (Farm Chicken) இடம்பெற்றிருந்ததைக் கவனித்தேன். செங்கோட்டையருகே, குற்றாலம் போகும் சாலையில் 'நாட்டுக்கோழி மட்டுமே' என்ற போர்டுடன் ஒரு உணவகம் உள்ளது. அங்கு சாப்பிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

-சு.தியடோர் பாஸ்கரன்

நன்றி: உயிர்மை

1 கருத்து:

கருத்துரையிடுக