பல சமயங்களில் அவர்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறேன். சில சமயம் அது நிகழ்ந்தும் உள்ளது. இவர்கள் பெரும்பான்மையாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், குஜராத், சத்திஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம் என மத்திய இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மழை பொய்த்தது, விவசாயக் கூலி வேலை இன்மை, தொழில்- வேலை வாய்ப்பு இல்லை, விவசாயக் கடன், வறுமை என இதை ஒத்த காரணங்களாகவே அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும், Òஎங்கள் வீட்டு குதிர்களில் எந்தத் தானியமும் இல்லை. ஆகையால் அதனை- தானியத்தை- தேடி வந்தோம்” என்றார் கச்சிதமான வார்த்தைகளில். இதன் பின்னர் நான் விவசாயத் தற்கொலை, வறுமை, பசி, இடப்பெயர்வு என எத்தனையோ பிரதிகளை வாசித்தபோதும், அவை அனைத்தும் எனக்கு சுருக்கமாக இந்த வார்த்தைகளில் கூறிய பெரியவரின் பார்வைக்கு மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. இவர்களில் பெரும்பகுதியானவர்கள் விவசாயக் கூலிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயிர் பிழைத்து எப்படியேனும் வாழ்ந்திட முற்படும் இவர்களை வாழ்க்கை தொலை தூரங்கள் வரை அலைக்கழிக்கிறது. ஒருவேளை இவர்கள் தங்களின் ஊர்களிலேயே இருந்திட நேர்ந்தால், அது இன்னும் ஒரு தற்கொலையாக அரசு ஆவணங்களில் பதிவு பெற்று இருக்கக்கூடும். பசி மனிதனை எத்தனை கொடூரமாக வதைக்கிறது என்பதற்கு இந்த நூற்றாண்டின் ரத்த சாட்சியாக விளங்குபவர்கள் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள். ஆனால் அவர்கள் அனைவரின் பிரதிநிதியாக நம் மனதில் பெரும்வலியுடன் ஒரு குறியீடாக முதலில் தங்கியவர்கள் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதி மக்கள்.
1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின.
2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி - வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.
வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை.
இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது, சமூகத்தில் மக்கள் பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன் பலன் எவ்வாறு உள்ளது.
பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் Ôவேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும். இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த - வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.
உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். .
இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மன்மோகனின் வருகைக்குக் பின் தற்கொலைகள் கூடியதாகப் பல புள்ளிவிபரங்களை எடுத்துரைத்தார் பி.சாயிநாத். இப்படித்தான் உள்ளதுநிலை. அதன் பின் தற்கொலை செய்துகொன்ட பலர் தாங்கள் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பிர தமருக்குத்தான் எழுதியிருந்தார்கள்.
கடந்த மே மாதம் மத்தியப் பிரதேசத்தின் கணே நகரத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் டன் கோதுமை திறந்தவெளியில் அழுகிப் போக, அதை அனைத்து தொலைக்காட்சிகளும் நமக்கு ஒளிபரப்பின. அடுத்த அறுவடை நெருங்குவதால் புதிய தானியங்களை வைக்க இடம் வேண்டும். அதனால் கையிருப்புள்ள தானியங்களைக் கடலில் கொட்டிவிடலாம் என்று ஆலோசிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசின் கையிருப்பில் இருக்க வேண்டியது 27 மில்லியன் டன் தானியங்கள். ஆனால் அரசின் கையில் இருந்ததோ 55 மில்லியன் டன். இப்படிப்பட்ட சூழலில்தான் பி.யு.சி.எல். சார்பாக வழக்குபதிவு செய்தார் கொலின் கொன்சால்வேஸ். ஆகஸ்டு 12ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அரசிற்கு ஆலோசனை அல்ல, மாறாக உத்தரவைப் பிறப்பித்தார்கள். ஒன்று குறைந்த விலையில் பசியால் வாடுபவர்களுக்குத் தானியங்களை வழங்குங்கள் அல்லது இலவசமாக உடனடியாக வழங்குங்கள் என்றது தீர்ப்பு. இருப்பினும் மெல்ல செப்டம்பர் 3ஆம் தேதி, 2.5 மில்லியன் டன் அடுத்த 6 மாதங்களில் விநியோகிக்கப்படும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறியது மைய அரசு. இது எல்லாம் அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார் மன்மோகன்.
அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது.
அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ - மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் .
இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.
மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத் தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.
கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை... மன் மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள்.
-அ. முத்துகிருஷ்ணன்
நன்றி: உயிர்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக