இடிந்தகரை
ஆகத்து 5, 2013
சாதி
மத மறுப்பு வணக்கம்! நாம் வாழும் சமூகத்தின் அடி ஆழத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு
சில முக்கியமான நீரோட்டங்களை, அவற்றின் போக்குகளை, தன்மைகளை, ஒற்றுமைகளை, தமக்குள்
கொண்டிருக்கும் தாக்கங்களை சுட்டிக்காட்டுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். பார்ப்பன
சமூகத்தையோ, அந்த சமூகத்தைச் சார்ந்த தனி நபர்களையோ
கோபத்துடன், வெறுப்புடன் அணுகுவதல்ல எனது குறிக்கோள். பார்ப்பனத்துவம்
என்பது ஓர் அரசியல்-பொருளாதார-சமூக-கலாச்சார ஆதிக்க சித்தாந்தம். பார்ப்பன சமூகத்தில் பிறந்த பலர் இதனை
முழுமூச்சாக எதிர்ப்பதையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் சிலர் முட்டாள்தனமாக இதனை
ஆதரிப்பதையும் நாம் அறிவோம். இந்த ஆதிக்க சித்தாந்தத்துக்கு,
இம்மாதிரியான ஆதிக்கச் சிந்தனை கொண்டோருக்கு எதிரானக் கட்டுரை இது.
பார்ப்பனத்துவம், பிராமணத்துவம், இந்துத்துவம்,
அணுத்துவம்: ஒரு விவரணம்
அண்மையில்
சில தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது, என்னோடு பங்கேற்ற சில அணு விஞ்ஞானிகள் ஒருசில கருத்துக்களை முன்
வைத்தார்கள். விஞ்ஞானிகள் நல்லவர்கள், சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள்; நல்லதைத்தான் செய்வார்கள்; விஞ்ஞானிகளை நம்ப வேண்டும், மதிக்க வேண்டும்; அவர்கள் சொல்படி கேட்க வேண்டும்; அவர்களை கேள்வி
கேட்கக் கூடாது என்ற தொனியில் பேசினர். விவாதத்தில் பங்கேற்று அப்படிப் பேசிய விஞ்ஞானிகள்
பெரும்பாலானோர் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், பார்ப்பனரல்லாத “உலகப் புகழ்” விஞ்ஞானிகளும்,
அவர்களின் “அறிவியல் ஆலோசகர்களும்”கூட இதே ரீதியில் பேசுவதையும் நீங்கள்
கவனித்திருப்பீர்கள்.
“விஞ்ஞானிகள்
மட்டும்தான் அனைத்தும் அறிவர், நாங்கள் எல்லாம்
முட்டாள்கள் என்று ஏற்றுக்கொண்டு, விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு இது ஒன்றும் பதினாறாம் நூற்றாண்டு
அல்ல. இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு; இப்போது
எல்லோருக்கும் கல்வியும், அறிவும்,
சிந்திக்கும் திறனும், உரிமையும் இருக்கிறது” என்று ஒரு
விவாதத்தில் நான் பதில் சொன்னேன். இம்மாதிரியான விழிப்புணர்வு கொண்ட, விவேகம் பெற்ற, சமத்துவ,
சமதர்ம சமுதாயம் வீறுகொண்டெழ வேண்டும் என்பதுதான் முற்போக்குச் சிந்தனை கொண்டோர்
அனைவரின் தாகம், கனவு, ஆசை! இந்த சமூக நீதிக்கான இயக்கத்தை முறியடிக்க, மக்களைத்
தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்க, அறிவியல், எரிசக்தி, வளர்ச்சி,
முன்னேற்றம் என்ற பெயர்களில் “பழைய பார்ப்பனத்துவ கள் புதிய அணுத்துவ மொந்தையில்”
பரிமாறப்படுகிறது என்று உறுதியாய் நினைக்கிறேன். நேரடியாக,
சுருக்கமாகச் சொல்வதென்றால், பார்ப்பனத்துவம் (Brahmanism) அணுத்துவம் (Nuclearism) இரண்டும் ஒன்று சேர்ந்து பார்ப்பணுத்துவம்
(Brahmanuclearism) என்ற புதிய பெயரில், புத்துருவில் வருகிறது என்பது எனது வாதம். பார்ப்பனத்துவம், அணுத்துவம் எனும் இரண்டு சித்தாந்தங்களுக்குமே மிக நெருக்கமான தத்துவார்த்தத்
தொடர்பும், வரலாற்றுப் பின்னணியும், யதார்த்த
சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார இணக்கமும்
இருப்பதைக் காண முடியும்.
“ஹிந்துத்வா” (Hindutva) எனும் மதவாத தத்துவத்தை 1938-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த அகில பாரத
ஹிந்து மஹாசபா மாநாட்டில் விநாயக் தாமோதர் சவர்க்கர் அறிவித்து, அதை விளக்கிப் பேசினார்: “ஹிந்துத்வா என்பது இந்து மதம் என்று
புரிந்துகொள்ளப்படக் கூடாது. மாறாக, ஹிந்துத்வா நமது இந்து
இனத்தின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தையும்
உள்ளடக்கியது. இந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு, இந்து எனும் வார்த்தையின் அர்த்தத்தையும், அது எப்படி
பல லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது; வீரம் செறிந்த, சிறந்த மக்களின் அன்பான
விசுவாசத்தைப் பெற்றது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.” அந்தப் பேச்சு
முழுவதும் ஹிந்துத்வா கொள்கையை விளக்க முற்படுகிறார் சவர்க்கர். அவரும், அவரைப் போன்ற அனைத்து இந்துத்துவா தலைவர்களும் ‘இந்து’ என்று பார்ப்பனர்களைத் தான்
குறிப்பிடுகிறார்கள். இன்றைய இந்தியாவில் வலதுசாரி, பிற்போக்கு இந்து இயக்கங்களின் பார்ப்பனத்துவம்,
இந்துத்துவம் என்று அறியப்படுகிறது..
இந்துத்துவ
இயக்கங்கள் மட்டுமல்ல, காங்கிரசு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பார்ப்பனீயத்தின் பிடிக்குள் இருப்பது எல்லோருக்கும்
தெரிந்த இரகசியம். பார்ப்பனீய ஆக்டோபஸ் தனது அனைத்துக் கைகளாலும், பல்வேறு
தளங்களையும் பிடித்து வைத்துக் கொண்டு இயக்குவதால், பரந்துபட்ட
பார்ப்பனத்துவம்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக இருந்து வருகிறது.
அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார்: “கன்னியாகுமரியில் உள்ள
பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் காஷ்மீரிலுள்ள பார்ப்பானுக்கு நெறிகட்டிக்
கொள்ளும்” என்று. “ஹோமி
பாபா பார்ப்பனரா? அப்துல் கலாம் அய்யரா? அணுசக்திக்குப் பின்னால் ஓடும் பாகிஸ்தானிலும்,
ஈரானிலும் பார்ப்பன ஆதிக்கமா நிலவுகிறது?” என்றெல்லாம்
வாதிடுகிற நண்பர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனத்துவம்
என்கிற ஆதிக்க சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு, நாம் அலசி
ஆராய்ந்துகொண்டிருப்பது இந்திய அரசியல்-பொருளாதார-சமூக-கலாச்சார ஏற்பாட்டையும்,
அதற்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தையும்தானே தவிர, ஒட்டு மொத்த உலகத்தையும் அல்ல. இன்னொன்று, நான்
ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோல, பார்ப்பன பிற்போக்கு
ஆதிக்க சித்தாந்தத்தை உள்வாங்கி உருப்படாது போயிருக்கும் அனைவரையும்தான் நாம்
விமர்சிக்கிறோமே தவிர, வெறும் பார்ப்பனராய்ப் பிறந்தவர்களை அல்ல.
இந்து
இயக்கங்களின் பார்ப்பனத்துவம் இந்துத்துவம் என்றறியப்பட்டால், பார்ப்பனத்துவத்துக்கும், பிராமணத்துவத்துக்கும்
இடையே என்ன வேறுபாடு? பார்ப்பனீய ஆச்சாரத்தின் (Brahmanical Orthodoxy) கோட்பாடுகள்,
போதனைகள், பழக்க வழக்கங்கள், சாதி
அமைப்பு போன்றவற்றை சேர்த்துத்தான் பார்ப்பனத்துவம் என்று அழைக்கிறோம்.
ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட, வேத
விற்பன்னர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தூக்கிப்பிடித்த இந்து மதத்தின்
முன்னோடி ஏற்பாடுதான் பார்ப்பனீயம் அல்லது பார்ப்பனத்துவம் (Brahmanism). இதை பிராமணத்துவம் என்றும் அழைக்கலாம். ஆனால் தந்தை பெரியார் அக்டோபர் 21, 1957 தேதியிட்ட ‘விடுதலை’
இதழில் பின்வருமாறு எழுதினார்:
பார்ப்பனரைப்பற்றிக் குறிப்பிட
வேண்டிய அவசியம் வரும்போது அவர்களைப் பிராமணர்கள் என்கிற சொல்லால்
குறிப்பிடுவதானது.
இது நம்மை நாமே சூத்திரன் என்று
ஒப்புக்கொண்டதாகிறது அல்லவா? அவன் பிராமணன் என்றால்
நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் ‘சூத்திரன்’ என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? ‘பிராமணன்’ என்ற சொல்லால்
ஒருவரைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு சொல் இல்லாவிட்டால்,
வேறு சொல்லால் சொன்னால் ஒருவரின் வகுப்பு, குறிப்பு, அடையாளம் தெரியாது என்ற நிர்பந்தம் (கட்டாய நிலை) இருந்தால் மாத்திரம்
அப்படிக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமலேயே வேறு சொல்லால்
குறிப்பிடலாம் என்பதற்குத் தக்க சொல்லாகப் ‘பார்ப்பனர்’ என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும்போது, ஒருவரைப் ‘பிராமணன்’ என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு
மானம் இல்லை; அறிவு இல்லை; மனித
உணர்ச்சி இல்லை.
நாட்டில் மற்றத் தமிழர்கள்
நடத்துகிற கிளர்ச்சிகளுக்கு விரோதமாய் நடந்து, பார்ப்பனருக்கு அடிமையாகி, எப்படி எப்படி ஈனப் பிழைப்பையாவது நடத்தி வாழவேண்டுமென்கிற இழிநிலையில்
இருப்பவர் நாம் என்பதல்லாமல், இதற்கு வேறு என்ன பெயர்க்
கருத்து கொள்ள முடியும்.
மேற்கண்ட
தந்தை பெரியாரின் வாதத்தை ஏற்று, பிராமணத்துவம் என்பதற்குப்
பதிலாக பார்ப்பனத்துவம் (Brahmanism). என்ற வார்த்தையை இங்கே
பயன்படுத்துகிறேன். இந்திய அளவில் பேசும்போது,
தமிழறியாதவரோடு விவாதிக்கும்போது, பிராமணத்துவம் (Brahmanism) என்ற சொல்லாடல் உதவலாம்.
அணுத்துவம்
(Nuclearism) என்பது அணு ஆயுதங்களால் மட்டுமே
சமூக அமைதியை நிலநாட்ட முடியும், அணுசக்தியால் மட்டுமே
வளர்ச்சியைப் பெற முடியும், அணு விஞ்ஞானிகள் போன்ற
“சரியானவர்களால்” மட்டுமே நாட்டுக்கு நல்வாழ்வு அமையும் என வாதிடும் ஓர் அரசியல்-அறிவியல்-அழிவியல்
கொள்கை. அமெரிக்கா, பிரிட்டன்,
பிரான்சு, ரஷ்யா போன்ற மேற்கத்திய வெள்ளையின மக்களின்
கொள்கையான அணுத்துவம் முதலில் ஓர் இராணுவக் கொள்கையாகவே முகிழ்த்தது. பின்னர்
“அமைதிக்கான அணு” (Atoms for Peace) என்ற பெயரில் அணு உலைகளாக ஒரு வியாபாரப் பொருளாகவும் மாறியது. நாடு
பாதுகாப்பாக இருக்க வேண்டும், வல்லரசாக மாற வேண்டும் என்று
விரும்புவோர் அணுத்துவம்தான் அதற்கு ஒரே வழி என்று வாதிடுகின்றனர்.
கொஞ்சம்
அணுகுண்டு, கொஞ்சம் வரலாறு
இந்திய
அரசியல் அரங்கில் பார்ப்பனத்துவமும், அணுத்துவமும் ஒன்றையொன்று
அதீதமாக நேசித்தே வளர்ந்து வந்திருக்கின்றன. “அகில இந்திய ஹிந்து சபா” எனும்
அமைப்பு 1915-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அதே ஆண்டு அதன் முதல்
மாநாடு ஹரிதுவாரில் நடத்தப்பட்டது. பின்னர் 1921-ஆம் ஆண்டு அந்த இயக்கம் “அகில
இந்திய ஹிந்து மஹாசபா” என்று பெயர் மாற்றப்பட்டது. காங்கிரசு கட்சியோடு இணைந்து
அந்தக் கட்சிக்குள்ளேயே செயல்பட்ட இந்த அமைப்பு இந்துக்களின் நலன்களுக்காக குரல்
கொடுத்தாலும், அக்காலத்தில் முஸ்லீம்களுக்கு எதிரானதாக
இருக்கவில்லை. மதன் மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய் போன்றோர்
இரண்டு இயக்கங்களிலும் மும்முரமாக செயல்பட்டனர்; இரண்டு
இயக்கங்களுக்குமே தலைவர்களாகவும் இருந்தனர். 1927 ஏப்ரல் மாதம் பாட்னாவில் நடந்த
மாநாட்டுக்குப் பிறகு, மஹாசபா காங்கிரசிடமிருந்து விலக
ஆரம்பித்தது. 1934 யூன் மாதம் காங்கிரசு கட்சி தனது உறுப்பினர்களை மஹாசபா, ஆர்.எஸ்.எஸ்., முஸ்லீம் லீக் போன்ற அமைப்புக்களில்
சேர வேண்டாம் என்று தடை விதித்தது. 1939-ஆம் வருடம் விநாயக் தாமோதர் சவர்க்கர்
எனும் பார்ப்பனத்துவ தலைவர் ஹிந்து மஹாசபா அமைப்புத்தான் இந்துக்களின் அரசியல்
இயக்கமாக இருக்கிறது என்று அறிவித்து, அதன் வளர்ச்சிக்கு
பெரிதும் உழைத்தார். மகாத்மா காந்தி கொலை வழக்கில் சிக்கிய சவர்க்கர்
நலிவடைந்தபோது, மஹாசபாவும் பலமிழந்தது.
மஹாசபாவின்
துணைத் தலைவராக இருந்த ஷ்யாம பிரசாத் முகர்ஜி அந்த இயக்கத்திலிருந்து 1949-ம்
ஆண்டு வெளியேறி, நேருவின் அமைச்சரவையிலிருந்து ஏப்ரல் 19, 1950 அன்று இராஜினாமா செய்துவிட்டு, அக்டோபர் 21, 1951 அன்று பாரதீய ஜன சங்க் எனும் கட்சியைத் துவக்கினார். விடுதலைக்குப்
பிறகு மஹாசபா மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டாலும்,
ஜன சங்க் அதைப் புறந்தள்ளியது. இந்து தேசியம், பார்ப்பனீயம், இந்தித் திணிப்பு, இந்து அகதிகள் மறுவாழ்வு, பாகிஸ்தானை எதிர்த்தல் போன்றவையே இரண்டு இயக்கங்களின் கொள்கைகளாக
அமைந்தாலும், மஹாசபா, ஜன சங்க்
இயக்கத்தை மேற்கத்திய முதலாளித்துவத்தை, மதச்சார்பின்மையை, எதிரி நாடான பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியது.
இராணுவத்துவக்
கொள்கையை (Militarism) ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து
வருவதாக மஹாசபா பெருமைப்பட்டுக் கொண்டது. இராணுவச் செலவை உயர்த்த வேண்டும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று வாதிட்ட மஹாசபா, இந்தியா அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும் என்று 1966-ம் ஆண்டு இறுதியில்
வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியது.
1967-ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட தனது தேர்தல் அறிக்கையில், ஜன சங்க் கட்சியும் இந்தியா இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும், அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் தயாரிக்க வேண்டும், அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் கட்டாய இராணுவப் பயிற்சி
அளிக்க வேண்டும் என்றெல்லாம் வாதிட்டது. இந்தியா அணு ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும்
என்று மஹாசபாவும், ஜன சங்கும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தன.
1918
ஏப்ரல் 15-ம் நாள் வெளியிடப்பட்ட நீதிபதி ரவுலட் குழுவின் அறிக்கை (Justice S. A. T. Rowlatt's Sedition Committee Report) பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவில் நடந்த தேசத்துரோக
நடவடிக்கைகளின் காரணங்களை ஆய்ந்து, ஒரு முக்கியமான
காரணத்தைக் கோடிட்டுக் காட்டியது. அரசுக்கு எதிரானத்
தலைவர்கள் பால கங்காதர் திலக், சப்பேக்கர் சகோதரர்கள் (Chaphekar Brothers), ரானடே (Ranade), கண்கரே (Kanhere), ஷிவ்ராம் மகாதேவ் பாராஞ்ச்பே (Shivram
Mahadev Paranjape), சவர்க்கர் சகோதரர்கள் (Savarkar Brothers)
அனைவரும் மராட்டிய சித்பவான் பார்ப்பனர்கள் (Chitpawan Brahmins) என்பதை சுட்டிக்
காட்டியது அந்த அறிக்கை. தேச விடுதலைக்காக மட்டுமன்றி, தமது
பார்ப்பனீய சமூக தன்னலன்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் போராடினர் இந்தத்
தலைவர்களில் பெரும்பாலோர். பிற்காலத்தில் உருவான இந்து மஹாசபாவின் தலைவர்கள் பி.
எஸ். மூஞ்சே (B. S. Moonje), என். சி. கேல்கர் (N. C. Kelkar), எம்.ஆர். ஜயகர் (M. R. Jayakar) போன்றோரும் சித்பவான் பார்ப்பனர்கள்தான். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே (Nathuram Godse), கொல்லத் திட்டம் தீட்டிய, நாராயண் அப்தே (Narayan Apte), விஷ்ணு கர்கரே (Vishnu Karkare), கோபால் கோட்சே (Gopal Godse) அனைவரும் சித்பவான் பார்ப்பனர்கள்.
1925-ம்
ஆண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் எனும் இயக்கத்தைத் துவங்கி “இந்துக்களை” (அதாவது
பார்ப்பனர்களை) ஒருங்கிணைப்பதிலும், முன்னேற்றுவதிலும், வலிமைப்படுத்துவதிலும் கவனம் செலுத்திய கேசவ் பாலிராம் ஹெட்கேவார் சித்பவான் பார்ப்பனர்தான். இந்துக்களின் (அதாவது
பார்ப்பனர்களின்) சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார
அம்சங்களை உள்ளடக்கிய “இந்து ராஜ்யம்” (Hindudom) தோற்றுவிப்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. ஹெட்கேவாரும், சவர்க்கரும், ஏனையோரும் “இந்துக்கள்” என்றுப்
பேசினாலும், அவர்கள் குறிப்பிட்டது பார்ப்பனர்களை
மட்டும்தானே தவிர, பிற சாதி இந்துக்களையோ அல்லது
தாழ்த்தப்பட்ட மக்களையோ அல்ல. எனவே இந்துத்துவம் (“ஹிந்துத்வா”) என்பது உண்மையில் பார்ப்பனத்துவம்தான்.
இந்துத்துவம் போற்றிய ஜன சங்க் கட்சியின் தலைவர்களான ஷ்யாம
பிரசாத் முகர்ஜி, பண்டிட் மவுலி சந்திர
சர்மா, ஆச்சார்யா தேபபிரசாத் கோஷ், பிதம்பர்
தாஸ், பல்ராஜ் மதோக், தீனதயாள்
உபாத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாய், லால்
கிருஷ்ணா அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி போன்றோரில்
பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாதோரான அத்வானி,
பண்டாரி போன்றவர்கள் இந்துத்துவம் பேசும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்
பிரச்சாரகர்களாக இருந்தனர், இருக்கின்றனர். இன்றைய பாரதீய
ஜனதா கட்சியும் பார்ப்பனர்களின் பிடியில், ஆர்.எஸ்.எஸ்.
கட்டுக்குள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் பதினைந்து
சதவீதமாக இருக்கும் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர் தேசிய அளவில் ஒரே சமூக, அரசியல் குழுமமாக இல்லை. “தர்மத்தின்
கருவூலத்தை பாதுகாப்பதே பிராமணர்களின் முக்கிய கடமை” என்று மனுதர்மம் சொல்கிறது.
கடவுள் அளித்திருக்கும் அந்தக் கடமையை நிறைவேற்ற அவர்கள் சுத்தமானவர்களாக இருக்க
வேண்டும். சுத்தமாக இருப்பது என்பது தாழ்ந்த சாதி மக்களை,
பெண்களை, முஸ்லீம்களை, கிறித்தவர்களை, நவீனத்துவத்தை, இவர்களின் தாக்கங்களை எல்லாம் தவிர்ப்பதும், தள்ளி வைப்பதும்தான் என்று கருதுகிறது பார்ப்பனத்துவம். இந்த பார்ப்பன
ஆச்சாரம் (Brahmanical Orthodoxy) இந்தியாவின் பல மூலைகளில் தட்டிக் கேட்கப்பட்டு, கடுமையாக எதிர்க்கப்பட்டது. மகாத்மா
ஜோதிபா பூலே, தந்தை பெரியார், அண்ணல்
அம்பேத்கர் என பல புரட்சியாளர்களும், ஆதி தர்மா இயக்கம்
(பஞ்சாப்), நாம-சூத்ரா இயக்கம் (வங்காளம்), ஆதி-கர்நாடக இயக்கம், ஆதி-இந்துக்கள் இயக்கம் (உத்தரப்
பிரதேசம்) என பல்வேறு மக்கள் இயக்கங்களும் இந்த அரும்பணியைச் செய்தன. பார்ப்பன
ஆச்சாரம் தனது ஆதிக்கத்தை, அதிகாரத்தை,
முக்கியத்துவத்தை இழந்து விடுவோமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டது. தாழ்ந்த
சாதியினர் உயர்ந்த சாதியராகிய பார்ப்பனர்களுக்கு சேவை செய்தே வாழ வேண்டும் என்ற ஏற்பாடு
தகர்ந்துவிடுமோ என்று பயந்தனர்.
அரசியல்-பொருளாதார-சமூக-கலாச்சார
மாற்றத்துக்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், 1980-களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மக்கள்
தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் போன்றோர் தோற்றுவித்த ஜனதா கட்சியில் இணைந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடான கள்ளத்
தொடர்பைப் பேணி, உள்குத்து வேலைகளில் ஈடுபட்டு, கட்சியையும், ஆட்சியையும் சீர்குலைத்த ஜன சங்கம்
1980-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் இயங்கத் துவங்கியது. அமிர்தசரஸ் பொற்கோவில்
இராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி கொலை, இராஜீவ் காந்தி பிரதமராதல், உச்ச நீதிமன்ற ஷா பானோ
வழக்குத் தீர்ப்பு, அயோத்தி பாபர் மசூதியை இந்துக்களின்
வழிபாட்டுக்குத் திறந்து விடல், மண்டல் கமிஷன் அறிக்கை என
காலச் சக்கரம் கடுமையாகச் சுழல, மஹாசபா காலம் முதலே ஆதரித்து
வந்த இராமஜன்மபூமி கோவில் பிரச்சினையைக் கையிலெடுத்து அகில இந்திய அளவில்
பணியாற்றியது பா.ஜ.க. தனது 1998 தேர்தல் அறிக்கையில்,
பலமிக்க இந்தியாவை (“Strong India”)
உருவாக்கப் போவதாகவும், அதற்காக நாட்டின் அணுசக்திக்
கொள்கையை மறுபரிசீலனை செய்து, அணுவாயுதங்கள் உற்பத்தி
செய்யும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும் அந்தக் கட்சி கூறியது.
1984-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும்
இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்ற பா.ஜ.க., 1989 தேர்தலில் 89 இடங்களைப் பெற்றது. ரத யாத்திரைகள் நடத்தி, மதவாதத்தை வளர்த்து 1992 டிசம்பர் 6-ம் நாள் பாபர் மசூதியை இடித்தனர்
இந்துத்துவா அமைப்பினர். இப்படியாகக் கட்சியை வளர்த்து,
1998-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்ததும், முதல் வேலையாக
போக்ரான்-2 எனப்படும் அணுவாயுதப் பரிசோதனையை நடத்தினார்கள் (இந்திரா காந்தி
பிரதமராக இருந்தபோது மே 18, 1974 அன்று காங்கிரசு அரசு
போக்ரான்-1 எனும் அணுகுண்டு பரிசோதனையை நடத்தியிருந்தது). இந்திய
அணுசக்தித் துறை “சக்தி நடவடிக்கை” (Operation Shakti) என்று பெயரிட்டு போக்ரான்-2 அணுவாயுதப் பரிசோதனை நடத்தியபோது, இந்துத்துவா இயக்கங்கள் அந்த கதிர்வீச்சு கலந்த மண்ணை எடுத்து பிரசாதமாக
நெற்றியில் பூசிக்கொண்டனர். அப்போது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர்
கிரிராஜ் கிஷோர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் அணுசக்தி
மறுமலர்ச்சியைக் கொண்டாடுவதற்காக போக்ரான் பகுதியில் “சக்தி பீடம்” எனும் சக்தி
தேவதைக்கான கோவிலை “சாது சமாஜ்” (Sadhu Samaj) எனும் தங்களின் சாமியார்கள் அமைப்பினால் கட்டப் போகிறோம் என்றார்.
பா.ஜ.க. அரசின் உள உறுதியைப் புகழ்ந்த கிஷோர், “போக்ரான்
இந்தியாவுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை அளிக்கிறது” எனக் கொண்டாடினார்.
குனிந்திருந்த
பார்ப்பனீயம் குதிக்கிறது அறிவியலாய்
பா.ஜ.க.
ஆட்சிக்கு வரும் வரை அடக்கி வாசித்துக் கொண்டிருந்த இந்திய அணுசக்தித் துறை, வாஜ்பாய் அரசின் 1998 மே 11-13 நாட்களின் போக்ரான்-2 அணுவாயுதப்
பரிசோதனைக்குப் பிறகு, ஆளும் வர்க்கத்தின் செல்லப்
பிள்ளையாகி துள்ளி விளையாடத் துவங்கியது. பார்ப்பனத்துவமும்,
அணுத்துவமும் ஒன்றாய் இயங்கின. 1987-ம்
ஆண்டுக்குள் அணு உலைகளில் இருந்து 20,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்போம், பிறகு 2000-ம் ஆண்டுக்குள் 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்போம்
என்றெல்லாம் புளுகி, தர்மசங்கடத்தில் நெளிந்து
கொண்டிருந்த அணுசக்தித் துறை, அணுகுண்டு தயாரித்ததுதான்
எங்கள் சாதனை என்று புளகாங்கிதமடைந்தது. அணுசக்தித் துறையில் பெரும்பாலான உயர்
அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அணுசக்தித் துறையின் தலைவர்களாக பணியாற்றியிருக்கும்
ஹோமி பாபா (Homi Bhabha, 1948-1966), விக்ரம் சாராபாய் (Vikram Sarabhai, 1966-1971), ஹெச். என். சேத்னா (H.N. Sethna, 1972-1983), ராஜா ராமண்ணா (Raja Ramanna, 1983-1987), எம். ஆர். ஸ்ரீனிவாசன் (M.R. Srinivasan, 1987-1990), பி. கே. அய்யங்கார் (P.K. Iyengar, 1990-1993), ஆர். சிதம்பரம் (R. Chidambaram, 1993-2000), அனில் ககோட்கர் (Anil Kakodkar, 2000- 2009), ஸ்ரீகுமார் பானர்ஜி (Srikumar Banerjee, 2009-2012), ரத்தன் குமார் சின்ஹா (Ratan Kumar Sinha, 2012--) ஆகியோரில்
பெரும்பாலானோர் பார்ப்பனர்கள்.
தலைவர்களன்னியில் ஏராளமான அணுசக்தித் துறை உயர் அதிகாரிகள்கூட பார்ப்பனர்களாகவே இருக்கின்றனர். எனவே
இத்துறையின் சித்தாந்தம், சிந்தனையோட்டம்,
செயலாக்கம் எல்லாமே நேரடியாகவே பார்ப்பனீயத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானிகளாகிய
நாங்கள் உயர்ந்தவர்கள், எங்களை மதிக்க வேண்டும், நாங்கள் சொல்வதுபோல கேட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எல்லாம்
இங்கேயிருந்துதான் புறப்படுகின்றன.
சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சாரத்
தளங்களில் சற்றேக் குனிந்திருந்த பார்ப்பனீயம் உலகமயமாக்கலின் வழி, விஞ்ஞானத்தின்
வழி, வளர்ச்சியின் வழி மீண்டும் தலை தூக்குகிறது. உலக
அரங்கில் கோலோச்சும் வெள்ளையரினமும், இந்திய சமூகத்தில்
அரசோச்சும் பார்ப்பனர்களும் ஒரே தளத்தில் நிற்பவர்கள். தாங்கள் அதிகாரத்தை கையில்
வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தும்போது, பிறர் வெறுமனே அடிமைகளாக
மட்டும் வேலை செய்தால் போதும் என்றே நினைக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில்
விவசாயிகளும், மீனவர்களும்,
சிறுபான்மையினரும், தலித் மக்களும் சேவைத் துறைக்குப் (service sector) போகும்படியாக நிர்ப்பந்திக்கப்
படுகின்றனர். பொது வாழ்விலும் கீழ் சாதிகளைச் சார்ந்த தலைவர்கள்
அரசியல்-பொருளாதாரத்தின் அழுக்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்க, பார்ப்பனர்கள் உயர் விஞ்ஞானிகளாக மேலேயிருந்து கொண்டு, “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் அரசியலை,
அரசியல்வாதிகளை, பொருளாதாரத்தை,
இராணுவத்தைக் கட்டுப்படுத்தி மேலாண்மை செய்து கொண்டிருப்பார்கள்.
மேற்கண்ட அதே உலகமயமாக்கல், விஞ்ஞானம், வளர்ச்சி போன்றவற்றை பயன்படுத்தி சத்திரியர், வைசியர், சூத்திரர், சிறுபான்மையினர்,
பெண்கள் போன்றோர் நவீன சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சாரத் தளங்களில் தம்மை மீட்டெடுக்க
முயற்சிப்பதால், தனது ஏகபோக அதிகாரத்தை, அபார பலத்தை, ஆதிக்கத்தை முழுவதுமாக நிலைநிறுத்திக்
கொள்ள முயலும் பார்ப்பனீயம் ஓர் இரண்டாம் வருகைக்கான முயற்சியில் ஈடுபடுகிறது. தேசிய
தொழிற்நுட்ப தினமான (National Technology Day) மே 11, 2012 அன்று விடுத்த செய்தியில் தற்போதைய
அணுசக்தித் துறை தலைவர் ரத்தன் குமார் சின்ஹா சொல்லியிருக்கிறார்:
“அணுசக்தித் துறை அணுசக்தியின் மூலமும், அது சார்ந்த உபயோகங்களின் மூலமும், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, தண்ணீர் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, மற்றும் நாட்டிற்கான நல்வாழ்வு ஆகியவற்றை பெற்றுத் தருவதற்கு
கடமைப்பட்டிருக்கிறது.” இப்படியாக நாட்டின் அரசியல், அறிவியல், பொருளாதார, இராணுவ, சமூக மேலாண்மை
போன்றவை ஓட்டு மொத்தமாக அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
நாட்டின்
மிக முக்கியமான அறிவியல் துறையாக தம்மைக் காட்டிக் கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் தாங்களே முழுப் பொறுப்பு என்ற தோற்றத்தை
உருவாக்கி, இந்தியாவின் அதிகாரத் தளங்கள் அனைத்தையும் தன்வயப்படுத்த
முற்படுகிறது அணுசக்தித் துறை தனது அணுத்துவக் கொள்கையோடு. அணுவாயுதப் பரிசோதனை
நடத்தி, அணு குண்டுகள் தயாரித்த பிறகு,
இன்னும் அதிகமாக தயாரிக்க புளூட்டோனியம் தேவைப்படுவதால்,
நாடெங்கும் அணு உலைகள் துவங்கி, மின்சாரம் தயாரிப்பதாகச்
சொல்லி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த முயல்கிறது
அணுசக்தித் துறை.
எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் அணு உலைகளில் இருந்து 4,00,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போகிறோம் என்று
கதை விடுகிறது. நொடிந்து கிடக்கும் தங்கள் நாட்டு பொருளாதாரங்களைத் தூக்கி நிறுத்த, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற
நாடுகளும் அணுஉலைகளை விற்க முன்வருகின்றன. அந்த நாடுகள் இந்தியாவுக்கு ஏதோ பெரிய
உதவி செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஆட்சியாளர்கள்
விரும்பும் கமிஷனையும், முதலாளிகள் விரும்பும் லாபத்தையும்
வாங்கிக் கொடுத்து, தன்னை வளர்த்தெடுத்துக் கொள்ள முயல்கிறது
அணுசக்தித் துறை.
சுருக்கமாகச்
சொல்வதென்றால், பார்ப்பனத்துவமும்
அணுத்துவமும் ஒன்றிணைந்து, பார்ப்பணுத்துவமாக
(Brahmanuclearism) அடுத்த ரவுண்ட்
ஆட்டத்துக்கு வந்திருக்கிறது. தத்துவார்த்த ரீதியில்
மட்டுமல்ல, யதார்த்த நடைமுறையிலும்
பார்ப்பனத்துவமும்,
அணுத்துவமும் ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றன. மனு
ஸ்மிருதி மக்களை வகைப்படுத்தும் கட்டுக்கதைகளைச் சாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப்
பாடினார்:
முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பாருண்டோ எருமையே
காலிற் பிறப்பது முண்டோ கழுதையே!
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எலாம்போக்கிலியே!!
இம்மாதிரிக்
கதைகள் சொல்லி மனுதர்மம் மக்களை பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்து வைத்தது.
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களையும் சண்டாள ஜாதிகள், சங்கர
ஜாதிகள் என்ற பெயர்களில் இந்து மதத்திலிருந்து விலக்கி வைத்து, அவர்கள் வாழ்விடங்களையும் தனிமைப்படுத்தியது மனுதர்மம். தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் கிராமங்கள் ‘ஊர்’ என்றும், ‘சேரி’ என்றும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இம்மாதிரி
முட்டாள்தனங்களெல்லாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாது
என்பது பார்ப்பனீயத்துக்கு நன்றாகத் தெரியும்.
எனவேதான்
பார்ப்பணுத்துவத்தின் “புதிய மனுதர்மம்” செயலாற்றத் தொடங்குகிறது. இந்த இரண்டாம்
வருகையின் நான்முகன் (4M) நவீனமயமாக்கல் (Modernization), இயந்திரமயமாக்கல் (Mechanization), சந்தைமயமாக்கல்
(Marketization), பணமயமாக்கல் (Monetization) எனும் நான்கு முகங்களைக் கொண்டவன். இந்த நவீன நான்முகன் தன் பங்குக்கு
மக்கள் மத்தியில் அச்சங்களையும், அயற்சிகளையும், குழப்பங்களையும் விதைக்கிறான் என்பது தெளிவு. இவற்றை பயன்படுத்தி மூட
நம்பிக்கைகளையும் வளர்த்து, அத்தோடு விஞ்ஞான பசுத்தோலையும்
போர்த்திக்கொண்டால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்பது பார்ப்பணுத்துவத்தின் கணிப்பு.
நவீன நான்முகன் தலையில் பிறப்பவர்கள் அறிவார்ந்த விஞ்ஞானிகள், தோளில் பிறப்பவர்கள் அதிகார வர்க்கத்தினர்/இராணுவத்தினர், வயிற்றில் பிறப்பவர்கள் வியாபாரிகள், காலில் பிறப்பவர்கள்
சமூக செயற்பாட்டாளர்கள். உயிர்களைப் போற்றி, வாழ்க்கை, இயற்கை, மனிதம் எனச் செயலாற்றும் சமூக
செயற்பாட்டாளர்கள் நவீன சூத்திரர்கள், தீண்டத் தகாதவர்கள், தேசத் துரோகிகள்.
பார்ப்பணுத்துவ
விஞ்ஞானிகள் உயிரற்ற இயந்திரங்கள் பற்றி சிந்தித்து, உயிரற்றப் பொருட்களின் இயக்கம் பற்றி ஆய்வு செய்து,
உயிரற்ற சந்தை, பணம், பாதுகாப்பு போன்றவற்றைப்
பெருக்க உழைக்கிறார்கள். அப்துல் கலாம் மற்றும் ஒய்.
எஸ். ராஜன் எழுதிய “இந்தியா 2020” எனும் புத்தகம் பார்ப்பணுத்துவத்தின் புனித
நூலாகக் கருதப்படுகிறது. “வளர்ந்த நாடாக விரும்பும் எந்தவொரு நாடும் பல்வேறு
இராணுவ தொழிற்நுட்பங்களில் பலம் பெற்றிருக்க வேண்டும்; அதன் சொந்த படைப்புத்திறன் உதவியுடன் அந்த தொழிற்நுட்பங்களைத்
தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும்” என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஏவுகணை மற்றும்
அணுசக்தி தொழிற்நுட்பங்கள்தான் முக்கியமான இராணுவ தொழிற்நுட்பங்கள் என்று குறிப்பிடும்
அவர்கள், பிரிதிவி ஏவுகணை போன்றத் திட்டங்களில் பணியாற்றிய
“புதிய வகை பொறியாளர்களும், தலைவர்களும்” (“new breed
of technologists and leaders”) இந்தியாவை பலமானதாக, தற்சார்புமிக்கதாக மாற்றுவர் என்கின்றனர். அரசியல் தலைமையின் உதவியோடு இந்திய
அணுசக்தித் துறையும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி
நிறுவனமும் (Defence Research and Development Organisation) மகிழ்ச்சியோடு கைகோர்த்து, அணுவாயுத நாடுகளின்
ஆபத்தான சுயநலமிக்க ஏகபோக உரிமையை உடைத்தோம் என்று இறும்பூதெய்துகிறார்கள்
அவர்கள்.
அணுசக்தி உருவாக்குவது, அணுகுண்டு செய்வது, ஏவுகணை விடுவது, வல்லரசு ஆவது போன்றவைதான் பார்ப்பணுத்துவத்தின்
அணுத்துவக் கொள்கை. கலாம் மற்றும் ராஜன் குறிப்பிடும் “புதிய வகை பொறியாளர்களும், தலைவர்களும்”தான் (“new breed of technologists and leaders”) பார்ப்பணுத்துவத்தின் பார்ப்பனர்கள். பார்ப்பணுத்துவம் செயல்படும்
விதத்தைப் புரிந்துகொள்ள, கீழ்க்காணும் பா.ஜ.க. அரசின்
நடவடிக்கை தக்கதொரு எடுத்துக்காட்டாக அமைகிறது. வாஜ்பாய் அரசு இந்திய விஞ்ஞானிகளை
இரண்டு வகையினராகப் பிரித்தது. விவசாய விஞ்ஞானிகள் போன்றோர் அரசுத் துறையில்
துணைச் செயலாளர் (Joint Secretary) அந்தஸ்து
கொண்ட ஜி-கிரேடு (G-grade) விஞ்ஞானி
ஆவதற்கு இருபத்தொரு ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்று வரையறுத்தது. அதே சமயம் இராணுவம், அணுசக்தி, அணுவாயுதம்,
விண்வெளி போன்றத் துறைகளில் வேலை செய்யும் விஞ்ஞானிகள் பதவி உயர்வு பெற
குறிப்பிட்ட ஆண்டுகள் அனுபவமும் வேண்டாம், காலியிடம்
உருவாகும் வரைக் காத்திருக்கவும் வேண்டாம் எனும் (“Flexible Complementing
Scheme”-FCS) திட்டத்தை அறிவித்தது. அதாவது பார்ப்பணுத்துவ விஞ்ஞானிகள்
உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள்; அவர்களை
விசேடமானவர்களாக நடத்துவது நாட்டின், நம்மனைவரின் கடமை
என்றாகியது.
தமிழகத்தில் பார்ப்பணுத்துவம்
பார்ப்பனத்துவ ஆதிக்கம்
மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழகத்திலும், சமூக-அரசியல்-கலாச்சார நிலைமை
தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெளிவான, உறுதியானக் கொள்கையை அந்தக் கட்சியின் துவக்க விழாவில் செப்டம்பர் 18, 1949 அன்று அறிஞர் அண்ணா அழகாக படம்பிடித்துக் காட்டினார்: “திராவிடர்
கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை
ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று
எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வட நாட்டு
ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு
திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து,
வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல்
வேண்டும்.” ஆனால் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அதே வைதீகபுரியோடும், வடநாட்டு ஏகாதிபத்தியத்தோடும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்தது, பின்னர் காங்கிரசு
அரசிலும் பங்கேற்றது. திரு. கருணாநிதியின் குடும்பத்தினரே பார்ப்பன கோவில்களில்
பயபக்தியோடு வழிபடுவதும், கோவிலுக்குப் போய்விட்டு தேர்தலில்
வேட்புமனு தாக்கல் செய்வதும் வேதனையான “திராவிட முன்னேற்ற” உண்மை.
தமிழகத்தின் இன்னொரு
முக்கியக் கட்சியான அ.தி.மு.க. பார்ப்பன மூட நம்பிக்கைகளில் முழு நம்பிக்கையுள்ள
ஒரு பார்ப்பனப் பெண்ணான செல்வி. ஜெயலலிதாவால் வழிநடத்தப்படுகிறது. அவர் வெற்றி
பெற்ற சிறீரங்கம் தொகுதியில் ஒரு பார்ப்பனர் “பிராமணாள் கபே” எனும் உணவகத்தை 2012
அக்டோபர் மாதம் துவங்கினார். தந்தை பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட
“பிராமணாள் கபே” தற்போது திரும்பவும் முளைப்பது கவனிக்கப்பட வேண்டிய நிகழ்வு. பெரும்பாலான
தமிழக அரசியல் தலைவர்கள் ஜோதிடர்களை சந்திப்பது, ஜாதகம்
பார்ப்பது, தோஷ நிவர்த்திக்காகப் பரிகாரங்கள் செய்வது என்றே
செயல்படுகின்றனர். பொதுக் கலாச்சாரத்திலும் பிரதோஷம்,
சந்திராஷ்டமம், அக்ஷயத் திருதியை என்பன போன்ற வார்த்தைகள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் புகுந்து அழிவைத்
தருகின்றன. பார்ப்பன மந்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்கள் வீட்டு
விழாக்களிலும் வந்தேறி விட்டன.
இன்னொரு பக்கம்
கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள்,
நியூட்ரினோ ஆய்வு மையம், இராணுவத் தளவாட தயாரிப்பு
நிலையங்கள் போன்றவை வரவேற்கப்படுகின்றன. தி.மு.க. - அ.தி.மு.க. எனும் தமிழகத்தின் இரண்டு
முக்கியக் கட்சிகளுமே பார்ப்பணுத்துவத்தை எந்தக் கேள்வியும் கேட்காது
ஏற்றுக்கொள்கின்றன. தி.மு.க.வின் நாடாளுமன்ற
உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை கன்னிப்பேச்சில் (2007) இந்திய-அமெரிக்க
அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசினார். “நான் நிகழ்த்தவிருக்கும் இந்த முதல் பேச்சானது
முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின்
கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்” என்று சொன்ன அவர் “இவ்விஷயத்தில் எங்கள் கட்சியோ அல்லது கட்சித்
தலைவரோ தங்கள் நிலைபாட்டிலிருந்து என்றுமே மாறியதில்லை என்பதை நான் இங்குத்
தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்திற்கு
ஆதரவளிப்பவர்கள்தாம்” என்றார். தொடர்ந்து பேசிய கனிமொழி பார்ப்பணுத்துவத்தை விவரித்தார்:
இந்த 123 ஒப்பந்தமானது
தானாக ஒன்றும் வந்துவிடவில்லை. இதை ஆரம்பித்து அப்போதைய அமெரிக்க அரசுடன் பேச்சு
நடத்திய பாரதீய ஜனதா கட்சி முதல் இப்பொழுதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்
புதுதில்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள இன்றைய அரசுகள்வரை, இந்த ஒப்பந்தத்தை
நம் நாட்டின் வளர்ச்சிக்கான - அதாவது, 300 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து
விடுவித்தல், பாலின மற்றும்
ஜாதிப் பாகுபாடு, கிராமப்புறத்தை
அலட்சியப்படுத்துதல் மற்றும் கல்லாமையை ஒழித்தல் ஆகியவற்றுக்கான - ஒரு கருவியாகவே
கருதிவந்துள்ளனர்.
சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அண்ணா நிகழ்த்திய சொற்பொழிவில் இடம்பெற்ற வார்த்தைகளோடு கனிமொழி தனது உரையை முடித்துக்கொண்டார்: "நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்பொழுது உருவாக்கப்பட்டுவரும்
பெருமைமிகு வருகைப் பதிவேட்டில் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.)
பெயரைப் பதிவுசெய்கிறேன்!". இப்படியாக அண்ணா தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல, கனிமொழி தி.மு.க.வின் தமிழர்நலக்
குரலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப்
போராட்டம் தொடங்கிய பிறகு, போராடும் மக்களைத்
திருப்திப்படுத்துவதற்காக தி.மு.க. தலைவர் ஓரிரு குழப்பமான அறிக்கைகள்
விடுத்தாலும், அவர்களின் பார்ப்பணுத்துவ நிலைப்பாடு
அப்படியேத் தொடர்கிறது.
அ.தி.மு.க.வின் கதையும் கிட்டத்தட்ட இதே
போன்றதுதான். கூடங்குளம் அணுமின் நிலயத்துக்கு எதிரானப் போராட்டம் 2011 செப்டம்பர்
மாதம் துவங்கியபோது,
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான செல்வி
ஜெயலலிதா அந்தத் திட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். பிறகு அக்டோபர் மாதம்
உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, போராடும் மக்களிடம்
“உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று உத்தரவாதம் அளித்தார். கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி
போராளிகளோடுப் பேசுவதற்கு தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழுவில், அணுசக்தித் துறையைச் சார்ந்த எம். ஆர். ஸ்ரீநிவாசனையே உறுப்பினராக
நியமித்தார். பின்னர் 2012 மார்ச்
மாதம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், மீண்டும் கூடங்குளம் திட்டத்தை ஆதரித்தார். 2012 செப்டம்பர் மாதம்
காவல்துறை வன்முறையை ஏவிவிட்டு, “கூடங்குளம்
அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது.
அணுஉலை திறக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அணுஉலைக்கு எதிர்ப்பு என்ற கொள்கையுடைய
எதிர்ப்பாளர்களின் மாயவலையில் மீனவர்கள் யாரும் விழ வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார்.
தமிழகக்
காங்கிரசு கட்சி, பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி போன்ற பார்ப்பணுத்துவ இயக்கங்கள் எல்லாம் போராடும் மக்களை
தேசத்துரோகிகள் என்று வர்ணித்தனர். தமிழகத்தில் அணுசக்திக்கு ஆதரவாக, கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராக எழுதிய, பேசிய, செயல்பட்ட பார்ப்பணுத்துவவாதிகளுள் பெரும்பாலானோர்
பார்ப்பனர்கள்: ‘தினமலர்’ உரிமையாளர்கள் லெட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி, கோபால்ஜி, ‘துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசுவாமி, ‘இந்து’ உரிமையாளர் என். ராம், ‘புதிய
தலைமுறை’ இதழாசிரியர் மாலன் நாராயணன் உள்ளிட்டோர். தேசிய அளவிலும் இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தம் நிறைவேற உதவிய (2008) உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்
சிங் யாதவ், அவரைப் போன்ற பல பார்ப்பனரல்லாத இந்திய அரசியல்
தலைவர்கள் தங்கள் கொள்கைகளை மறந்து, துறந்து
பார்ப்பணுத்துவத்துக்குப் பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கின்றனர். பார்ப்பணுத்துவம்
தான் மீட்டெடுத்த முக்கியத்துவத்திலும், அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் மூழ்கித் திளைத்து நிற்க, பார்ப்பனத்துவ
இயக்குனர்கள் புதிய வல்லரசு தேசபக்தி நாடகத்தைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பார்ப்பனத்துவம்--அணுத்துவம்:
ஒரு தொடக்கநிலை ஒப்பீடு
பார்ப்பணுத்துவம் பெற்றிருக்கும் பல பார்ப்பனத்துவ, அணுத்துவ அம்சங்களை நாம் எளிதில் கண்டுணர முடியும். தாங்கள் வேதத்தின் பாதுகாவலர்கள், தாங்கள் சொல்வதே வேதம், தாங்கள் யாரிடமும் எதற்கும் எந்த நிலையிலும் பதில் சொல்ல வேண்டியதில்லை, தாங்கள் சமூகத்துக்குள் ஒரு சமூகமாக (அரசுக்குள் ஓர் அரசாக), தங்கள் சுயநலனை மட்டுமே முன்னிறுத்தி மக்கள் பொதுநலனைப் பற்றி
கவலைப்படாமல் இயங்குவோம் எனும் போக்கைக் காண முடியும். வெள்ளையரினத்தின்
விஞ்ஞானத்தை வெள்ளந்தியாய் பின்பற்றுவதும், தம்மைப்பற்றி ஒரு
தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பதும், தனக்கானத் தனித்தன்மையோ படைப்புத்திறனோ
இல்லாதிருப்பதும், வலிமைக்காக ஏங்கும் இராணுவத்துவ ஆசை
கொண்டிருப்பதும் பார்ப்பணுத்துவத்தின் முக்கிய அம்சங்கள்.
“புனிதமான” கோவில் கருவறைக்குள் தாழ்ந்த சாதியினர்
போவது கூடாது. அந்த ஆன்மீக வெளிகள் (spaces) கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, புனிதமான, சக்தி வாய்ந்த பார்ப்பனர்களுக்கு மட்டுமானவை. அதே போல நவீன அறிவியல்-தொழிற்நுட்ப-இராணுவக் கோவில்களான
அணுமின் நிலையங்கள், அணுவாயுத உற்பத்தித் தளங்கள் போன்றவை அறிவுக்கடவுளால்
தேர்ந்தெடுக்கப்பட்ட, அப்பழுக்கற்ற,
உயர் அணு விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரிய வெளிகள். இவர்கள் சொல்லும் “துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன” (தீயவர்களை அழித்து, நல்லவர்களை
காக்கும்) மந்திரங்களுக்கு மட்டுமே இவர்களின் இஷ்ட தெய்வங்கள் கஷ்டம் பார்க்காமல்
செவி மடுக்கின்றன. புராதன பார்ப்பனக் குடியிருப்புக்களான அக்ரஹாரங்கள் போலவே நவீன
அணுசக்திக் குடியிருப்புக்கள் (டவுன்ஷிப்கள்), விஞ்ஞானிகளின் நகரியங்கள் தூரமான, பாதுகாப்பான இடங்களில் தகவமைக்கப்படுகின்றன. அறிவாளர்/ஆய்வாளர் அக்ரஹாரத்தில்
குடியிருப்போர் தவிர, பிற சூத்திரர்கள்
அங்கே சென்று வரும் உரிமை மறுக்கப்படுகிறது. மக்களைப் பிளவுபடுத்தி, அக்ரஹாரங்கள் தம் புனிதத்தை, முக்கியத்துவத்தைக்
காத்துக்கொண்டது போல, அறிவாளர்/ஆய்வாளர் குடியிருப்புகளிலும்
வேலையாட்கள் பிரித்து
வைக்கப்படுகின்றனர். உயர் அதிகாரிகள் வீடுகள் சொகுசானவையாகவும், தாழ்ந்தவர்கள் வீடுகள்
தரமற்றவையாகவும், தள்ளிவைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன.
[1] உயர்ந்த
அறிவுத்தளத்தின் உயர் பூசாரிகள் (High Priests of High Science):
உயர்ந்ததாக சொல்லப்படும்
ஒரு போலி, மக்கள் விரோத, சனநாயக விரோத அறிவுத்தளத்தை உருவாக்கி
வைத்துக்கொண்டு, தமது வேதமும்,
விஞ்ஞானமும் உயர்ந்தவை என்று பிரசாரம் செய்து, வாழ்வின் பிற
அம்சங்களிலிருந்து தம்மை உயரத்தில் நிலை நிறுத்தி, பிறரைத் தாழ்வாக
நடத்தி, அவர்களையும் அங்ஙனமே கருதச் செய்து, தமது சுயநலன்களை கவனமாக பாதுகாத்துக் கொள்கின்றன பார்ப்பனத்துவமும், அணுத்துவமும். பார்ப்பனர்கள் துறவறக் கோட்பாடுகளை கருத்தூன்றி வளர்த்தெடுத்து அதன்
காரணமாக வாழ்வின் உயர்ந்த, சிறந்த அம்சங்களைக் கண்டறிந்து
அனுபவிப்பதாக பார்ப்பனீய ஆச்சாரம்
பேசுகிறது. இந்து சமூகத்தின் ஆன்மீக, லெளகீக வாழ்வை வழிநடத்த
பார்ப்பனீயம் உதவுவதாக வாதிடுகின்றனர்.
ஒருவருக்கொருவர் உதவி செய்து, சேவை செய்து, ஒருவரையொருவர் சார்ந்த நிலையில் சமத்துவம் பேணவும்,
போட்டி போடாது, ஒற்றுமையாக வாழவும் சாதிப் பிரிவினை உதவுவதாக
கொடூரமாகப் பொய் சொல்லி சாதிக் கொடுமையை நியாயப்படுத்துகிறது பார்ப்பனீயம்.
தன்னை நிலைநிறுத்திக்
கொள்ள அணுசக்தித் துறையும் இதே மாதிரியான சாக்குப்போக்கைத்தான்,
பொய்களைத்தான் சொல்கிறது. அப்துல் கலாம் சொல்கிறார்: “அணுசக்தி என்பது இறைவன் மனித
குலத்திற்கு கொடுத்த வரம். அதை வரமாக்குவதும்,
சாபமாக்குவதும் மனிதகுலத்தின் கையில் தான் உள்ளது.” இந்தியாவின் முதல் அணுசக்தித்
துறை தலைவர், ஹோமி பாபா சொல்கிறார்: “அடுத்த ஓரிரு
பத்தாண்டுகளில், அணுசக்தி உலக நாடுகளின் பொருளாதாரத்திலும், தொழில் முன்னேற்றத்திலும் பெரும்பங்கு வகிக்கும். இந்தியா தொழிற்
வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட இன்னும் பின்தங்காமல் இருக்க வேண்டுமானால், இந்த அணுசக்தியை விருத்தி செய்ய உறுதி மிக்க நடவடிக்கைகள் எடுத்தாக
வேண்டும்.” சுருக்கமாகச் சொல்வதென்றால், நாங்கள் உயர்ந்த
அறிவுத் தளத்தின் உயர் பூசாரிகள்; எங்களை கேள்வி கேட்காது
ஏற்றுக் கொள்ளுங்கள்; எங்கள் சொல்படி நடந்து பெருமை
கொள்ளுங்கள் என்பதுதான் பார்ப்பனர்களின், அணு விஞ்ஞானிகளின் வாதமாக அமைகிறது.
[2]
சேர்த்துக்கொள்ளாத் தன்மை (Exclusiveness):
தங்களின்
இந்த உயர்ந்த வேதத்தை, அறிவியலை தங்களோடு மட்டுமே வைத்துக்
கொள்வதும், பிறரோடு பகிர்ந்து கொள்ளாமலிருப்பதும், பிறரை சேர்த்துக்கொள்ளாமலிருப்பதும் (exclusiveness) அடுத்த முக்கிய அம்சம். சாதாரணமானவர்களுக்கு எங்கள் வேதம்/அறிவியல் புரியாது, தெரியாது. நாங்கள் பிறப்பால்/படிப்பால் உயர்ந்தவர்கள்; எனவே விசேட அறிவை/அறிவியலை நாங்கள் மட்டும்தான் தெரிந்து கொள்ள முடியும்
என்று வாதிடுவர். பார்ப்பன குடும்பத்தில், பார்ப்பனப் பெற்றோருக்குப்
பிறந்து தூய்மையான வம்சாவளியைப் (pure descent) பெற்றிருப்பதுதான்
ஒருவர் பார்ப்பனராவதற்கான அடிப்படைத்
தகுதி. ஆத்மதியாகம், வேத அறிவு, பார்ப்பனக் குடிப்பிறப்பு எனும் மூன்று நிபந்தனைகளை
பூர்த்தி செய்தாலே ஒருவர் பார்ப்பனர் ஆக
முடியும். தனது சிறப்பான குணநலன்களால் ஒருவர் தாழ்ந்த குடிப்பிறப்பைக் கடந்து பார்ப்பனராக முடியுமென்றாலும், பார்ப்பனப் பெற்றோருக்குப்
பிறந்தவருக்குத்தான் வேதம் கற்பிக்கப்பட முடியும். இந்தியாவின் இரண்டாவது
அணுசக்தித் துறை தலைவர் விக்ரம் சாராபாய் சொல்கிறார்: “நாடுகள்
தங்கள் மக்களுக்கு உயர்தர ஆய்வுகள் செய்யும் வசதிகளை உருவாக்கித் தர வேண்டும்.
இப்படி ஆய்வுகள் செய்யும் தகுதி படைத்த ஆண்களை உருவாக்கிய பிறகு, நாட்டின் நடைமுறை இடர்ப்பாடுகளுக்கான குறிப்பிட்ட செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பதும்
மிக அவசியம்.” ஆன்மீக உண்மைகளை தாங்கள் மட்டுமே அறிந்த பார்ப்பனர்கள் போலவே, இந்த அறிவியல் ஆய்வுகள்
செய்யத் தெரிந்த அணுவிஞ்ஞானிகளும் சிந்திக்கின்றனர்,
செயல்படுகின்றனர்.
[3] சிறப்புரிமை அணுக்கம்
(Privileged Access):
தாம் மட்டுமே அறிந்த, புரிந்த, தெரிந்த உண்மைக்கு தங்களைத் தாங்களே பூசாரிகளாக நியமித்துக் கொண்டு, அதை தங்களுடையக் கட்டுப்பாட்டுக்குள் கெட்டியாகப் பிடித்து வைத்துக்
கொள்வது மூன்றாவது அம்சம். தாழ்ந்தக் குடிப்பிறப்பு உடையவர்கள், ஆய்வு செய்யும் தகுதியற்றவர்கள் போன்றோர் இந்த விசேட உண்மையின் உலகத்துக்குள்
நுழைய முடியாது. அவர்களுக்கு இது புரியாது, தெரியாது.
உயர்ந்த அறிவும், தேர்ந்த ஆண்களும் சேரும்போது, அது சிறந்த, புனிதமானத் துறையாகிவிடுகிறது.
புனிதமானதை புனிதமானதாக நடத்துவது ஒரு புனிதக் கடமை. அதுதான்
முறை. புனிதமானவற்றைக் கேள்வி கேட்பது, புனிதமானவர்களைத் தட்டிக்
கேட்பது அபச்சாரம், பாவம். அவர்கள் அனைத்தும் அறிவர்; அவர்களை நம்ப வேண்டும், சந்தேகிக்கக் கூடாது, அவர்களோடு தர்க்கிக்கக் கூடாது. வேதம் படித்தவர்கள் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது நியதி. எனவேதான் பார்ப்பன ஆச்சாரம் சொல்கிறது: “சூத்திரன்
வேதத்தை காதால் கேட்கக் கூடாது; அப்படியேக் கேட்டுவிட்டால், அவன் காதில்
ஈயத்தையும், மெழுகையும்
காய்ச்சி ஊற்ற வேண்டும். அவன் இயங்குமிடம் சுடுகாடு
என்பதால், அவனுக்கு வேதம் ஓதக் கூடாது. சூத்திரன்
வேதம் தெரிந்து வைத்திருந்தால், அவனது நாக்கை அறுக்க
வேண்டும், நெஞ்சைப் பிளக்க வேண்டும்.” அணுசக்தித் துறையில்
உயர்நிலை அதிகாரிகள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவும், கடைநிலை
ஊழியர்கள் பார்ப்பனரல்லாதவராகவும் இருப்பது
வெறும் விபத்தல்ல.
[4] ஆணவம் (Arrogance):
பிறரை அடக்கி
ஆள நினைப்பவைதான் பார்ப்பனத்துவமும், அணுத்துவமும். மேற்கண்ட வேதத்தின், விஞ்ஞானத்தின் உயர் பூசாரிகள் முக்கியமானவர்கள், புனிதமானவர்கள். இப்படிச் சொல்லி தங்களை
மேலே உயர்த்திவைத்துக் கொள்வதும், மற்றவர்களை மட்டம்
தட்டுவதும் இறைவனின் செயலாக, இயற்கையானதாகப் பகரப்படுகிறது, பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பை அனைவரும் சர்ச்சையின்றி
ஏற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் ஆதிக்கவாதிகள். தம்மைப் புனிதராகவும், பிறரை இழிவானவராகவும் பார்க்கும் இந்த
ஆணவம் பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு மிக உதவியாக இருக்கிறது. பிறரை
உபயோகிப்பதும், அதற்கு வேத/விஞ்ஞான விளக்கம் சொல்வதும்
எளிதாகிறது. “நான் பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தேன், நீ
காலிலிருந்து பிறந்தாய்”; “நமது கர்ம வினைகளின்படியே நமது
வாழ்க்கை அமைகிறது” என்றெல்லாம் பொய் சொல்லி, மக்களை
அடிமைப்படுத்துவது இந்த ஆணவத்தின் உச்சக் கட்டம். அணுமின் நிலையங்களிலும் ஆபத்தான
வேலைகளைச் செய்யும் “ஒளிரும் அடிமைகள்” (Glow Slaves) ஏழைகளாக, தாழ்த்தப்பட்ட சாதியினராகவே
இருக்கின்றனர். விபத்துக்களில் இறப்போரெல்லாம் கடைநிலை ஊழியராகவும், ஊர் பேர் தெரியாதவர்களாகவும், தங்கள் உயிர்களுக்கு
எந்த விலையும் இல்லாதவர்களாகவும் இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
[5] ஆணாதிக்கம் (Male Chauvinism):
பார்ப்பனத்துவம் ஆட்சி அதிகாரம் பெறும்போது,
கோலோச்சும்போது, சந்தர்ப்பவாதம் தலைவிரித்தாடும். பெண்கள், சிறுபான்மையினர், தலித் மக்கள் அடக்கி
ஒடுக்கப்படுவர். சாதி, மத, பாலியல்
வெறி தூண்டிவிடப்படும். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்துத்துவா இனப்
படுகொலையில் அரச இயந்திரமும், காவல் துறையும், சகோதர இயக்கங்களும் (வி.ஹெச்.பி., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்க் தள், பா.ஜ.க.,
சிவசேனா போன்றவை) இணைந்து செயல்பட்டதைப் பார்த்தோம். பெண்களின்மீது பாலியல்
கொடுமைகளை, வன்முறைகளை சுமத்தி கோர தாண்டவம் ஆடியதையும் நாடு
கண்ணுற்று அதிர்ந்தது. பார்ப்பனீய சுத்தத்தை அசுத்தமாக்கும் அழுக்கு பெண்; பார்ப்பனீய தவத்தின் வலிமையை அழிக்கும் எதிரி பெண்; பார்ப்பனீய பலத்தை பலவீனப்படுத்தும் பாவம் பெண். பார்ப்பனர்களாகிய தாங்கள் பலவீனமானவர்களாக இருந்ததால்தான் முகலாயர்களாலும், ஆங்கிலேயர்களாலும் அடிமைப்படுத்தப் பட்டோம். எனவே
பலமிக்கவர்களாக மாறுவது அவசியம் என்ற எண்ணத்தோடு உடற்பயிற்சி செய்கிறோம், ஆர்.எஸ்.எஸ். ஷாகா (Shakha) நடத்துகிறோம், இந்திரியத்தை அடக்குகிறோம் என்று வேடிக்கையான நடவடிக்கைகளில்
ஈடுபடுகின்றனர் பார்ப்பனத்துவவாதிகள். விந்து, விந்து என்று
நொந்து பெண்களை வெறுக்கின்றனர். அணுசக்தித் துறையிலும் இதுவரை
எந்தப் பெண்ணும் தலைவரானதும் இல்லை, வேறு உயர் பதவிகளுக்கு வந்ததும்
இல்லை.
[6] மூடு மந்திரம் (Secrecy):
எந்த விதமான
திறந்தவெளித்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் பார்ப்பனத்துவத்திலும்,
அணுத்துவத்திலும் கிடையாது. வேத மந்திரங்கள் பார்ப்பனரல்லாதாரோடு
பகிர்ந்துகொள்ளப்பட முடியாதவை. காயத்திரி மந்திரம் போன்ற மந்திரங்களை குழந்தைகளுக்கு
போதிக்கும்போதுகூட காதுக்குள்தான் சொல்வார்களே தவிர, உரக்கச்
சொல்ல மாட்டார்கள். அது போலவே, அணுசக்தி சாஸ்திரங்களும்
இரகசியத்தன்மை மிக்கவை. எந்த நடவடிக்கையிலும் கணக்கு வழக்கு கிடையாது; சனநாயகப் பண்புகளும் போற்றப்படுவதில்லை. யாருக்கும் எந்தத் தகவலும்
கொடுப்பதில்லை. உழைப்பவனை உதாசீனப்படுத்துவதும், அவனது உழைப்பைச் சுரண்டுவதும், உரிய
ஊதியத்தைக் கொடுக்க மறுப்பதும் பார்ப்பனத்துவத்தின், அணுத்துவத்தின் கேவலமான அம்சங்கள். இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு
எந்தவிதமான பங்களிப்பும் செய்யாத பாரதீய ஜனதா அரசு,
ஆட்சிக்கு வந்ததும், அவசரம் அவசரமாக அணுவாயுதப் பரிசோதனை
நடத்தி அடுத்தவர் உழைப்பினை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு அணுவாயுதங்கள்
தயாரிக்கும் தகுதி 1974-ம் ஆண்டு முதலே இருந்தது உலகுக்கு நன்றாகத் தெரியும். 1998-ம்
ஆண்டு அணுவாயுதப் பரிசோதனையால், அகிம்சை, அறவழி, அணிசேராமை, பஞ்சசீலம்
என்று உலகுக்கே வழி சொன்ன நாடு பொருளாதாரத் தடை, குற்றச்சாட்டுக்கள், உதவிகள் மறுப்பு என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. அணுவாயுதங்கள், ஏவுகணைகள், இராணுவ ஏற்பாடுகள் பற்றிய தகவல்களை
தேசியப் பாதுகாப்பு (National Security) என்று காரணம் சொல்லி தரமறுப்பார்கள். “அமைதிக்கான அணு” நடவடிக்கைகள் என்று
சொல்லப்படும் யுரேனியச் சுரங்கங்கள், அணுசக்தித் திட்டங்கள்
பற்றியும், அவற்றுக்கான ஒப்பந்தங்கள்,
வரவு-செலவு, வட்டிக் கணக்கு, அணுக்கழிவு
மேலாண்மை, இழப்பீடு ஏற்பாடுகள், அணுஉலை
செயலிழக்கச் செய்யும் வழிமுறைகள் என எந்தத் தகவல்களையும் தர மறுக்கிறது அணுசக்திக்
கூட்டம். மடியிலே நிறைய கனம் இருப்பதால், வழியிலே பயந்து
கொண்டே, வாய்மூடிச் செல்வது அவர்கள் இயல்பு.
பார்ப்பணுத்துவ
இந்தியா எப்படி இருக்கும்?
பார்ப்பனத்துவமும், அணுத்துவமும் உறவாடிப்
பிறக்கும் பார்ப்பணுத்துவம் (Brahmanuclearism) கோலோச்சும்போது இந்தியா எப்படி இருக்கும்?
இடிந்தகரையைப் பாருங்கள்! அப்படியிருக்கும்!! உங்கள் ஊருக்குள் அனுமதியின்றி நுழைந்து, தான்தோன்றித்தனமாக, எதேச்சாதிகாரமாக, பலவந்தமாக பார்ப்பணுத்துவம் கடை விரிக்கும். தட்டிக்கேட்டால், ஸ்ரீநிவாச பார்ப்பணுத்துவர் சொன்னதுபோல, “நாங்கள்
வரும்போது, உங்கள் ஊரே இருக்கவில்லையே” என்று நா கூசாமல்
பொய் சொல்லும். நீங்கள் தகவல் கேட்டால், தர மறுக்கும். “மீனவன், உனக்கு என்னடா புரியும்?” என்று ஏளனம் செய்யும். அவர்களை
தடுத்து நிறுத்தினால், தேசவிரோத வழக்கு பாயும். தேசத்தின்
மீது போர் தொடுத்தக் குற்றச்சாட்டு குரல்வளையை நெரிக்கும்,
கொலைக் குற்றம் சுமத்தப்படும், கொடிய சட்டங்களெல்லாம்
பிடித்தாட்டும். உங்களை அந்நிய சக்தியின் கைக்கூலி என்று அசிங்கப்படுத்தும்; அந்நாட்டுப்
பணத்துக்காய் அலைவதாக அவதூறு சொல்லும். ஊருக்குள்
வருவதற்கு காவல்துறை தடை விதிக்கும். வந்து செல்வோரை வகைதொகையின்றி வலுவாக
விசாரிக்கும். வழக்குகள் பரிசளிக்கும், வாழ்வை
கெடுத்தழிக்கும். காவல்துறையும், உளவுத் துறையும், உயர்பீடமும்
உங்களைப் பிடித்தாட்டும்.
மாற்றி
மாற்றிப் பேசும் பார்ப்பணுத்துவ அதிகார வர்க்கம். பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், உங்கள் எதிரியே நீதிபதியாக நியமிக்கப்படுவார். அவர்கள் பேச்சை வேத
விளக்கமாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்குள், காவல்துறை
அதிகாரிகள் முன்னிலையிலேயே அடியாட்களை ஏவிவிட்டு அடிப்பார்கள். கோடிகோடியாய்
மக்கள் பணத்தை திருடுகிறவர்கள் எல்லோரும் மாமனிதர்களாக,
மமதைமிக்க ஆட்சியாளர்களாக வலம் வரும்போது, உங்கள் வீடுகளில்
சோதனைகள் நடத்துவார்கள். ஏழைக் குழந்தைகளுக்காக நன்கொடை வாங்காமல், கட்டிட நிதி வாங்காமல் உண்மையான சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் உங்கள்
பள்ளிக்கூடம் பார்ப்பணுத்துவ சூத்திரதாரிகளின் சூத்திர அடிமைகளால், அடியாட்களால் சூறையாடப்படும். பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் நெஞ்சில்
வைத்துப் படிக்கும் சின்ன சின்னப் புத்தகங்கள் சின்னாபின்னமாக்கப்படும். அவர்களின்
அன்பான நூலகம், யாழ்ப்பாண நூலகம் போல சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்படும். குற்றவாளிகளை பெயர் குறிப்பிட்டு நீங்கள் புகார்
கொடுத்தாலும், காவல்துறையும், அரசும் கைகட்டி
வேடிக்கைப் பார்த்திருக்கும்.
நீங்கள்
ஆயுதம் ஏந்தினால், “மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்” என்று கூவி, கூக்குரலிட்டு, அன்றே அடித்து நொறுக்கும் அதிகார வர்க்கம். நீங்கள் அண்ணல் காந்தியின்
பெயர் சொல்லி, அறவழியில் போராடினால்,
அடித்து விரட்டும், விரட்டி அடிக்கும். “பார்க்காதே, கேட்காதே, பேசாதே, எழாதே, இயங்காதே” என்று கட்டளைகள் பாய்ந்து வரும். உங்கள் பகுதி இராணுவ
மயமாக்கப்படும், உங்கள் வாழ்வு இயந்திரமயமாக்கப்படும். அடிமையாய்
வாழ்வது அமைதி தரும்; குடிமை உரிமைகளைக் கோரி
நின்றால், அழிவு வரும். “’இம்’ என்றால் சிறைவாசம், ‘ஏன்’ என்றால் வனவாசம்” என்பது விதியாக வீற்றிருக்கும். “பேயரசு செய்தால் பிணம்
தின்னும் சாத்திரங்கள்” என்று பாரதியார் சொன்னது போல, பார்ப்பணுத்துவம்
ஆட்சி செய்தால் திமிர் தின்னும் சாதாரணரை. பார்ப்பனத்துவம் மதத்தை அறிவியலாய் காட்டி பிழைப்பு
நடத்துவதுபோல, பார்ப்பணுத்துவம் அழிவியல்-அறிவியலை மதமாகக்
காட்டி வாழ்க்கை நடத்த எத்தனிக்கும்.
இடிந்தகரை
அராஜகம் இந்தியாவெங்கும் நடந்தேறும். இந்திய கிராமப்புற மக்களுக்கு நகர வாழ்க்கை
மாதிரியாகக் காட்டப்படும். நகர்ப்புற மக்களுக்கு, அமெரிக்க
வாழ்க்கை உதாரணமாகச் சொல்லப்படும். மீதேன் கிடைக்கிறது,
தோரியம் கிடைக்கிறது என்று நமது நிலங்களை, கடற்கரையை, காடுகளை, மலைகளை வெளிநாடுகளுக்கு விற்பார்கள் ஆட்சியாளர்கள்.
இயற்கையை இழந்து, மண்ணை, மக்களை, மாண்பைத் துறந்து பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாறியிருப்போம்.
விவசாயம், மீன்பிடித் தொழில் முற்றிலுமாக முடக்கப்பட்டு, உணவுக்காக பிற நாடுகளிடம் கையேந்தி நிற்போம். இந்தியா
கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு முற்றிலுமாகக் கைமாறும். இப்போதே ரஷ்ய தூதர், தூதரக பியூன் போன்றோர் நம்நாட்டுக் கொள்கை முடிவுகளை அறிவிக்கிறார்கள்.
இந்நிலை இன்னும் மோசமாகும். பாகிஸ்தான், சீனாவைக் காட்டி
அமெரிக்கா உள்ளே வரும்; பலம் வாய்ந்த ஒண்ட வந்தப் பிடாரியோடு
பலமற்ற, தனித்துவமற்ற,
தன்னம்பிக்கையற்ற பார்ப்பணுத்துவ ஊர்ப்பிடாரி சேர்ந்து கொள்ளும். இரகசியத்தன்மை
மிக்க அரச இயந்திரமும், லாப நோக்கோடு செயல்படும் பன்னாட்டு
நிறுவனங்களும், தன்னலமிக்க பார்ப்பணுத்துவமும் கைகோர்த்துக்
களிநடனம் புரிவர். அரசத்துவமும் (Statism), முதலாளித்துவமும்
(Capitalism), பார்ப்பணுத்துவமும் (Brahmanuclearism) கூட்டணி அமைக்கும்போது, இந்தியாவில் நிலவும் ஓரளவு சனநாயகத்துக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கு, மனித உரிமைகளுக்கு, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு நிரந்தர சாவுமணி அடிக்கப்படும். அதிகாரமுள்ளோருக்கு, ஆதிக்க சக்திகளுக்கு, பணக்காரர்களுக்கு இந்தியா
ஒளிரும்; விவசாயிகளுக்கு,
மீனவர்களுக்கு, வணிகர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு, தலித் மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு, ஏழைகளுக்கு இந்தியா ஒளியும்.
பார்ப்பணுத்துவ
ஆபத்தை எப்படி எதிர்கொள்வது?
இந்தியா ஒரு திருப்புமுனையில் நின்று
கொண்டிருக்கிறது. காங்கிரசு அரசு பார்ப்பணுத்துவ
சித்தாந்தத்தை சிரமேற்கொண்டு, அதனை அதிரடியாக
அமுல்படுத்த ஆயத்தமாய் நிற்கிறது. கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம் (தமிழகம்), கொவ்வாடா (ஆந்திரம்), பதி சோனாப்பூர் (ஒடிஷா), ஹரிப்பூர் (மேற்கு வங்கம்), ஜைதாபூர் (மராட்டியம்), மித்தி விர்தி (குஜராத்), ஃபத்தேஹாபாத் (ஹரியானா), பன்ஸ்வாடா (இராஜஸ்தான்), சுட்கா (மத்தியப் பிதேசம்) என நாடு முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும்
அணுமின் நிலையப் பூங்காக்கள் நிர்மாணிக்க எத்தனிக்கிறது பார்ப்பனீய காங்கிரசுக் கட்சி. இன்னும் அதிகமாக அணுவாயுதங்கள்
தயாரித்து இந்தியாவை வல்லரசாக்கத் துடிக்கிறது. பா.ஜ.க.வோ அவர்களுக்கும் ஒருபடி
மேலே போய், பாகிஸ்தானை அழித்து, பங்களாதேஷைப் பிடித்து, சீனாவை இடித்து, “அகண்ட பாரதம்” அமைத்து, பார்ப்பணுத்துவத்தை பிரம்மாண்டமாக செயல்படுத்த விழைந்து நிற்கிறது. இந்தக்
கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கும் “இனப்படுகொலை புகழ்” நரேந்திர
மோடி இப்போதே தன்னை ஓர் “இந்து தேசியவாதி” என்று அறிமுகப்படுத்துகிறார். இரண்டு
கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும், பார்ப்பணுத்துவம் சமூக-பொருளாதார-அரசியல்-இராணுவ-கலாச்சாரத் தலைமை ஏற்கும்.
நாட்டின் நிலைமை மிக மோசமாகும். தாழ்த்தப்பட்டோர்,
சிறுபான்மையினர், பெண்கள் என மக்கள் நலம், பாதுகாப்பு கேள்விக் குறியாகும். நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும்.
இதைக் கேள்வி கேட்போர் தேசத்துரோகிகள் என்று நிந்திக்கப்படுவர்.
இந்த ஆபத்தானப் போக்கை எப்படி
எதிர்கொள்வது, நிறுத்துவது? சமூக செயற்பாட்டாளர்கள், களப் பணியாளர்கள், போராளிகள்,
ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்,
பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவு
சீவிகள், தொழிற்சங்கவாதிகள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பிற இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் பரவலான பொதுக்கல்வி (Public Education) நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டாக வேண்டும்.
[1] இவ்வுலக வாழ்வில் அதி
முக்கியமானது பணமோ, பதவியோ, பகட்டோ அல்ல, உயிர் வாழ்க்கைதான் என்பதை அனைவரும் உணர்வதும்,
பிறருக்கு உணர்த்துவதும் முதற்படி. உயிர் வாழ்க்கையை வளம் பெறச் செய்யும், நலம் பெறச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தாள்வது, மேம்படுத்துவது
ஒவ்வொருவரின் கடமை. “உயிர்களிடத்தில் அன்பு வேணும்” என்று தமிழராகிய நாம் சொல்வதை, செய்வதை, மருத்துவர்
ஆல்பர்ட் ஸ்வைட்சர் (Albert Schweitzer) “உயிர் வணங்கும்” கல்வி (“Reverence for Life” Education) என்று
குறிப்பிடுகிறார். கல்வியின், அரசியலின், அறிவியலின், அனைத்து மனித செயல்பாடுகளின் அடிப்படை
உயிர் வணங்கும், உயிர் வளர்க்கும்,
உயிர் காக்கும் தன்மையதாக இருக்க ஆவன செய்ய வேண்டும்.
[2] உயிர் வாழத் தேவையான
இயற்கை வாழ்வாதாரங்களை, பல்வேறு மக்கள் குழுமங்களின் வாழ்வுரிமைத்
தேவைகளை, வருங்காலத் தெரிவுகளைப் போற்றி வளர்க்கும்
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
[3] பிறப்பால், செய்யும்
தொழிலால், தோலின் நிறத்தால், சாதி
மதங்களால் ஒரு மனிதனின் உயர்வு, தாழ்வு நிர்ணயிக்கப்படக்
கூடாது எனும் நிலைப்பாட்டை நாம் எடுத்தாக வேண்டும். தந்தை பெரியார் 1.6.1930 அன்று
‘குடிஅரசு’ இதழில் எழுதியதை நாம்
மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லியாக வேண்டும்: “நாம் எல்லோரும் சமமே என்கின்றதான
சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக்
கொள்ளுகிறேன்.”
[4] சாதிவெறி, இனவெறி, மதவாதம், தேசியவாதம் போன்றவை கேள்வி கேட்கப்படவேண்டும், எதிர்க்கப்பட வேண்டும். மனிதம் போற்றப்பட வேண்டும்.
[5] உலக முற்போக்குச்
சிந்தனையாளர்கள், அவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள், வரலாறுகளை பரவலாக்கம் செய்ய வேண்டும்.
[6] ஆதிக்கச் சித்தாந்தங்கள்,
சிந்தனையாளர்கள், செயல்பாடுகள் பற்றி படித்து, பேசி, விமர்சித்து, எதிர்த்து
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபட வேண்டும்.
[7] அரச அறிவியலை (State Science) எதிர்த்து, மக்கள் அறிவியலை (People Science) வளர்த்தெடுக்க வேண்டும்.
[8] நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, இராணுவக் கொள்கை, அறிவியல் கொள்கை, ஆற்றல் கொள்கை என அனைத்தும் சனநாயக ரீதியில் மக்களால்
விவாதிக்கப்பட்டுத்தான் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர, நேர்மையற்ற
மக்கள் பிரதிநிதிகளாலும், தரகர்களாய் இயங்கும் ஆட்சியாளர்களாலும், சுயநலம் பேணும் அந்நிய நாட்டவர்களாலும் நிர்ணயிக்கப்படக் கூடாது. முழுத்
தகவல்களை மக்களுக்கு வழங்குவது, கருத்துக் கேட்பு
நடவடிக்கைகளை உண்மையாகச் செய்வது, மக்கள் முடிவுகளை
ஏற்றுக்கொள்வது போன்ற ஏற்பாடுகளை நாம் உடனடியாக நிறுவியாக வேண்டும்.
[9] பார்ப்பணுத்துவத்தைப்
பொறுத்தவரை, தமிழக மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
எந்த ஒரு சாதிய, மதக் குழுவோ தமிழ்ச் சமூகத்தின் மீது
ஆதிக்கம் செலுத்தக் கூடாது, முடியாது என்பதிலும் மக்கள்
உறுதியாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய தகவல்களை,
உண்மைகளை, வரலாறுகளை, கனவுகளை எடுத்துச் சொல்லி, அவர்கள்
கருத்துக்களைக் கேட்டு, ஒரு பரந்துபட்ட கருத்துப் பரிமாற்றம்
நாடெங்கும் நடத்துவதுதான் நமது உடனடித் தேவை.[]
[தோழர்கள் கீற்று நந்தன், ஆர். ஆர். ஸ்ரீனிவாசன், புனித பாண்டியன், ‘தமிழ் ஆழி’ செந்தில்நாதன் ஆகியோருக்கு அன்பார்ந்த நன்றி.]
பயன்படுத்திய நூல்கள்
(பயன்படுத்தப்பட்ட வரிசைப்படி)
Indra Prakash, Hindu
Mahasabha: Its Contribution to India's Politics. New Delhi: Akhil Bharat Hindu Mahasabha, 1966.
Pandit Deendayal
Upadhyaya, Bharatiya Jana Sangh: Ninth Annual Session Lucknow December 30
& 31, 1960 and January 1, 1961, Annual Report.
B. D. Graham, Hindu
Nationalism and Indian Politics: The Origins and Development of the Bharatiya
Jana Sangh. Cambridge: Cambridge University Press, 1990.
Election Manifesto of Akhil Bharat Hindu
Mahasabha. New Delhi: Akhil Bharat Hindu Mahasabha,
1966.
Upadhyaya, Bharatiya
Jana Sangh: Ninth Annual Session Lucknow December 30 & 31, 1960 and January
1, 1961, Annual Report.
Election Manifesto of
Akhil Bharat Hindu Mahasabha,
1966.
Bharatiya Jana Sangh, Election
Manifesto 1967.
V. D. Savarkar, Historic
Statements. Bombay: Popular
Prakashan, 1967.
Manohar Malgonkar, The
Men Who Killed Gandhi. Delhi: Macmillan, 1978.
H. V. Seshadri, RSS: A
Vision in Action. Bangalore:
Jagarana Prakashana, 1988.
K. R. Malkani, The RSS
Story. New Delhi: Inpex India, 1980.
Govind Sahai, R.S.S.:
Ideology, Technique and Propaganda.
New Delhi: n.p., 1956.
V. D. Savarkar, Hindu
Rashtra Darshan. Bombay: Veer
Savarkar Prakashan, 1984.
K. S. Ramaswami Sastri, The
Future of the Brahmin. Madras:
Central Co-operative Printing Works, Ltd., 1935.
Radhika
Desai, “The Image if
India’s Future?” The Hindu, March 6, 2002.
A.P.J. Abdul Kalam and Y.
S. Rajan, India 2020: A Vision for the New Millennium. New Delhi:
Viking, 1998.
டி.
எம். பார்த்தசாரதி, தி. மு. க.
வரலாறு. சென்னை: பாரதி நிலையம், 1986.
காலச்சுவடு, 97, சனவரி 2008.
இந்திய அணுமின் கழகம், “நாட்டின் வளர்ச்சிக்கு தேவை கூடங்குளம்
அணுமின் நிலையம்,” (தினமலர் கட்டுரை,
நவம்பர் 7, 2011).
அணுசக்தித் துறை இணைய தளம்.
3 கருத்துகள்:
Sir,
I appreciate your efforts in protecting the environment.What is your action plan for the beach sand issue which is high lighted by Mr. Ashish kumar. Why Mr.Udayakumar is silent in the minalaral sand matter in Nellai, tutucorin and kanyakumari districts?
நீங்கள் அமெரிக்காவின் கைக் கூலி என்று எல்லோரும் கூறுவது உண்மை தானோ என்று தோன்றுகிறது.
கருத்துரையிடுக