ஞாயிறு, மே 05, 2013

குடிக்கத் தண்ணி இருக்கா?

ருமுறை மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிடுங்கள். இப்போது ஒரு சொம்பு நிறையச் சுத்தமான குடிநீரை ஆசைத் தீரக் குடியுங்கள். அநேகமாக வரும் நாட்களில் இப்படி எல்லாம் நீங்கள் குடிக்க இயலாமல் போகலாம். குடிநீருக்காகப் பக்கத்து வீட்டுக்காரருடன் சட்டை கிழியச் சண்டையிட நேரலாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக கடைக்காரருடன் மல்லுக்கட்ட வேண்டி இருக்கலாம். ஆம், மிகமிகமிக நெருங்கி வந்துகொண்டிருக்கிறது கடுமையான குடிநீர்ப் பஞ்சம்.

தேவை எவ்வளவு? இருப்பு எவ்வளவு?
தமிழகத்துக்கு ஓர் ஆண்டுக்குக் குடிநீர், விவசாயம், கால்நடை, தொழிற்சாலைகள் எனத் தேவைப்படும் மொத்தத் தண்ணீரின் தேவை 1,867.85 மில்லியன் கன மீட்டர். ஆனால், இந்த ஆண்டு இருப்பதோ சுமார் 1,600 மில்லியன் கன மீட்டருக்கும் குறைவே. பற்றாக்குறை சுமார் 300 மில்லியன் கன மீட்டர். இந்த மொத்தத் தண்ணீர் இருப்பில் மக்கள் குடிக்க உகந்த நீரின் அளவு நான்கில் அரை சதவிகிதம் மட்டுமே. இன்றைக்கு அந்த அரை சதவிகிதமும் கிட்டத்தட்ட காலி! வழக்கமாக தமிழகத்தில் பெய்ய வேண்டிய பருவ மழையில் இந்த ஆண்டு சுமார் 14 சத விகிதம் குறைந்துவிட்டது. வழக்கமான அளவில் மழை பெய்தாலும்கூட தமிழகத்தைப்பொறுத்த வரையில் குடிநீருக்கு 'அடிச்சுக்கோ பிடிச்சுக்கோ’ நிலைமைதான். ஆனால், இந்த முறை குறைந்த அளவே மழை பெய்ததால், நிலைமை அதி அபாயத்தில் இருக்கிறது.

சென்னை ஒரு பகீர் சாம்பிள்!
உதாரணத்துக்கு சென்னை நிலவரத்தைப் பார்ப்போம். சென்னைக்கான குடிநீர் ஆதாரங் கள் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம் பாக்கம் ஏரிகள் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து. இந்தக் கட்டுரையைப் பதிவுசெய்துகொண்டி ருக்கும் நாளில் சென்னையில் இருக்கும் மொத்த ஏரிகளின் நீர் இருப்பு, கடந்த ஆண்டின் இதே மாதம், இதே நாளில் இருந்த நீர் இருப்பில் பாதிக்கும் குறைவே. (பார்க்க பெட்டிச் செய்தி) தவிர, தண்ணீர் வரத்து இல்லாதநிலையில் நாளுக்கு நாள் நீர் வற்றிவருகிறது.ஆந்திராவின் கிருஷ்ணா நதிப் படுகையில் உப்பல மடுகுப் பகுதியில் புதிய மதகுகளை அமைக்கும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியதால், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர் வருவதும் நின்றுவிட்டது. எனவே, மே மாதம் வரைக்கும் சென்னை தாக்குப்பிடித் தாலே பெரிய விஷயம்!

இது தமிழக நிலவரம்!
தென் மாவட்டங்களில் 'காலிக் குடம்’ போராட்டங்கள் தொடங்கிவிட்டன. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஜனகராஜன், ''சென்னையின் குடிநீர் பெரு மளவு பாலாற்றுப் படுகையிலிருந்து கிடைத்தது. இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏனெனில், இன்று அந்தப் பாலாற்றுப் படுகை யின் அடிமடி வரை வற்றிவிட்டது. சுமார் 800 தோல் தொழிற்சாலைகள் பாலாற்றைப் பாழாக்கியதில் ஆழ்குழாய் மூலம் 1,000 அடி வரை துளையிட்டால்தான் தண்ணீர் கிடைக்கிறது - ரசாயன வீச்சத்துடன். வேலூர், வாணியம்பாடி எனப் பாலாற்றுப் படுகையை நம்பி இருக்கும் சுமார் 46 ஊர்களில் 27,800 கிணறுகள் வற்றி, ரசாயன உப்புப் படிமங்கள் பூத்துள்ளன. இதனால், இந்தக் கோடையில் குடிநீர்ப் பஞ்சம் என்பது தவிர்க்கவே முடியாதது'' என்கிறார்.

பாலாறு மட்டும் அல்ல; ஓரளவு ரசாயன மாசுக் கலப்பு இல்லாதது என்று கருதப்பட்ட மதுரையின் வைகையும் சமீப ஆண்டுகளில் விஷமாகிவிட்டதுதான் வேதனை. வைகைக் கரை ஓரங்களில் 41 இடங்களில் ராட்சஸக் குழாய்களைப் பதித்து, நகரின் செப்டிக் டேங்க் கழிவுகளை ஆற்றின் படுகைக்குள் செலுத்துகிறார்கள். மாநகராட்சியின் அனுமதியோடு மலம் தின்கிறது வைகை.  

தவிர, மதுரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட குடிநீர்க் குழாய்கள் மாற்றப் படாததால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. சிம்மக்கல், மேலப் பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரோடு சாக்கடைக் கழிவுநீர் கலந்துவருவது எல்லாம் சாதாரணமான விஷயம். மதுரையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று சொல்லி சில்வர் டேங்குகளை லாரியில் ஏற்றிவந்து ஒரு குடம் 12 ரூபாய்க்கு விநியோகிக் கின்றன தனியார் நிறுவனங்கள். மாநகராட்சி லாரிகளிலோ குடத்துக்கு இரண்டு ரூபாய் அழ வேண்டும்.
காவிரிப் பிரச்னையைப் பற்றிப் புதிதாகச் சொல்லத் தேவை இல்லை. மேட்டூர் அணை நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு இறங்கிவிட்டது. தண்ணீர் வறண்டதால் பல ஆண்டுகளுக்குப் பின்பு அணைக்குள் இருந்து எட்டிப் பார்க்கின்றன கிறிஸ்துவத் தேவாலயமும் ஜலகண்டேஸ்வரர் கோயிலும். மக்கள் தினமும் அங்கு சென்று மழை வேண்டி ஏசுவிடமும் சிவனிடமும் சிறப்புப் பூஜை செய்கிறார் கள். மேட்டூரின் 24 அடி தண்ணீர் அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டுமே போதுமானது. காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அடுத்த மாதத்துக்குள் இரண்டு மழைகளாவது பெய்யாவிட் டால், அணையில் சேறும் சகதியும் மட்டுமே மிஞ்சும். தற்போது, மேட்டூர் அணையில் இருந்து சேலம், ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பாலாறு காய்ந்துபோனதால் வேலூரின் குடிநீர்ப் பஞ்சத் தைச் சமாளிக்க, மேட்டூர் - வேலூர் குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லப் புதிய திட்டம் போடப்பட்டுள்ளது. எல்லாம் சரி, சட்டியில் இருந்தால்தானே அகப்பைக்கு வரும்!

ஓரளவு திருப்திகரமான நிலையில் இருக்கும் மாவட்டங்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மட்டுமே. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் 11 நாட்கள் மட்டுமே மழை பெய்துள்ளது. இது மிகச் சொற்ப மழை தான். ஆனால், அதையும் பொக்கிஷமாகத்தேக்கி வைத்த மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகள் இன்றளவும் பவானி, சிறுவாணி, மாயாறு ஆகிய ஆறுகளை வற்றாமல் பாதுகாத்து வருகின்றன. இப்போதாவது சோலைக் காடு களைப் பாதுகாக்க வேண்டிய கடமையைமக்களும் அரசும் உணர்வார்கள் என்று நம்புவோம்!

என்ன செய்கிறது தமிழக அரசு?
'குடிநீர்ப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது’ என்று கருணாநிதி கடந்த 20 நாட்களில் இரு முறை கண்டன அறிக்கை விடுத்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவோ நெம்மேலியின் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தைப் பெரிதும் நம்புகிறார். விரைவில் கடலில் இருந்து நன்னீர் கிடைக்கும். தவிர, நெம்மேலியிலேயே 1,000 கோடி ரூபாய் மதிப் பில் இன்னொரு நிலையமும் தொடங்கப்பட இருக்கிறது. அது செயல்பட்டால், நாள்ஒன்றுக் குக் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் சென்னை பட்டிபுலம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் கடல் நீரைக் குடிநீராக்கும்
திட்டங்களைச் செயல்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. ஒகேனக்கல், தாமிரபரணி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேறும்தறுவாயில் இருக் கின்றன. ஆனால், நெருங்கிவரும் அடுத்தடுத்த மாதங்களைச் சமாளிக்க இப்போதைக்கு அரசிடம் வழி எதுவும் இல்லை.

தண்ணீர்ப் பஞ்சம் வந்தால் என்ன ஆகும்?
கடந்த 2003-4ம் ஆண்டு நினைவு இருக்கிறதா? வழக்கமாக சாதியை மையமாகக் கொண்டுதான் தென் மாவட்டங்களில் கலவரங்கள் நடக்கும். ஆனால், அந்த ஆண்டுகளில் கீழ் வெண்மணி கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குழாயடியில் தண்ணீர் பிடிப்பது தொடங்கி கண்மாயில் தண்ணீர் எடுப்பது வரை தகராறு ஏற்பட்டுக் கலவரங்களாகவெடித் தன. சென்னையின் அண்ணா சாலையைக் காலிக் குடங்களுடன் மறித்தார்கள் மக்கள். ''அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக என் னுடைய சேப்பாக்கம் தொகுதியில் கடும் குடி நீர்ப் பஞ்சத்தை ஆளும் அரசு ஏற்படுத்தியிருக் கிறது'' என்று வெடித்தார் கருணாநிதி. அப் போதே ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்குவிற்கப் பட்டது. இந்திய ஆறுகள் வரலாற்றில் முதல் முறையாக மேட்டூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தாள் காவிரி.
சென்னை எங்கும் 3,000 தண்ணீர் லாரிகள் தாறுமாறாக ஓடியதில் பள்ளிக் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் லாரிகளில் அடிபட்டு இறந்தார்கள். 

அன்றைய முதல்வரும் ஜெயலலிதாதான். அப்போது அவர், ''சென்னை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் கடுமையான குடி நீர்ப் பஞ்சம் நிலவுகிறது. சென்னையைக் காப்பாற்ற எங்களிடம் பணம் இல்லை. உடனடியாக 700 கோடி ரூபாய் அளியுங்கள்'' என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு அவசரக் கடிதம் எழுதினார். சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீரின் விலையும் இரு மடங்காக உயர்ந்தது. இப்போது தண்ணீர்ப் பஞ்சம் வந்தால், இவை அனைத்தும் மீண்டும் நடக்கும். இதைவிட அதிகமாகவும் நடக்கலாம்!

தீர்வுகள் என்ன?
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன், ''ஒவ்வொரு முறையும் தண்ணீர்ப் பஞ்சம் வரும்போதும்'இன்ஸ்டன்ட்’ தீர்வுகளை மட்டுமே அரசாங்கம் யோசிக்கிறது. நமக்குத் தேவை, நீண்ட கால நிரந்தரத் தீர்வுகள். மாற்றங்கள் என்பது அடிப்படையில் இருந்து தேவை. உலகில் மனித சக்திக்கு அப்பாற்பட்டது தண்ணீர். அதை மனிதன் தயாரிக்கவே முடியாது. தடுப்பு அணைகளைத் தவிர்த்து, நம்முடைய பெரும் அணைகள் கட்டும் திட்டமே தவறானது. பெரும் அணைகள் இருப்பதால்தானே விவசாயம் தொடங்கி குடிப்பதற்கு வரை தண்ணீர் கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், உண்மை வேறு. நதியின் உரிமை, கடலில் கலப்பது. நன்னீர் கடலில் கலந்தால்தான் கடல் கனிமங்களின் தன்மை சீராக இருக்கும். அப்போதுதான் கடலின் பிராண வாயு பாதுகாக்கப்படும்.அப்போதுதான் கடலில் இருந்து ஆவியாகும் தண்ணீர் விகிதமும் சீராக இருக் கும். மழையும் சீராகப் பொழியும். முன்பு அப்படித்தான் நடந்தது. மாதம் மும்மாரிப் பொழிந்தது. ஆனால், இப்போது? ஆறுகளைச் சிறையிட்டு, கழிவுகளைக் கடலுக்கு அனுப்புகிறோம். உலகின் மாபெரும் குப்பைத் தொட்டியாகிவிட்டது கடல். எப்படிப் பெய்யும் மழை? பருவ நிலை மாற்றம் அடையத்தான் செய்யும். மழை பொய்க்கத்தான் செய்யும்.
சரி, அணைகளைக் கட்டிவிட்டோம். இனி அவற்றை இடிக்க முடியாது. வேறு என்னசெய்யலாம்? அரசும் மக்களும் முதலில் எளிமையாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் இவை... கடல் நீரைக் குடிநீர் ஆக்கலாம். மழை நீர் ஆராய்ச்சியாளர் வரதராஜனின் திட்டப்படி எல்லாக் கட்டடங்களிலும் மழை நீரைச்சேகரிக் கலாம். அடுத்து அடிப்படை மாற்றங்கள். இனியாவது நகர்மயமாதலைத் தடுப்போம். நான், நீங்கள் என எல்லோரும் ஒட்டுமொத்தமாக நகரங்களுக்கு வந்துவிட்டோம். இருப்பிட சமநிலைத் தன்மைபாதிக்கப்பட்டுவிட்டது. கிராமத்தில் ஆட்கள் இல்லை என்றால், கண்மாயைப் பராமரிப்பது யார்? எதற்காக வீராணம் திட்டம் மூலம் மேட்டூர் தண்ணீர் சென்னைக்கு வர வேண்டும்? அந்தந்த இடங்களில் இருக்கும் வளங்களைப் பயன் படுத்தி, அந்தந்த இடங்களை மேம்படுத்துவதே சிறந்த வழி.

தமிழகத்தின் ஒவ்வோர் அணையிலும்குறைந் தது 15 அடி வரை வண்டல் குவிந்துகிடக்கிறது. அதனைத் தூர்வாருங்கள். மண்ணின் பயன் பாடு கட்டுமானத்துக்குக் கைகொடுக்கும்.அணையின் கொள்ளளவும் கூடும். உலகில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரைவிட ஆற்றுப் படுகைகளின் மணலில் உள்ள தண்ணீ ரின் அளவு அதிகம். ஒவ்வொரு துகளிலும் துயில்கிறது தண்ணீர். அதனை 'மைக்ரோ டிராப்ஸ்’ என்பார்கள். ஆற்று மணலைத் திடப்பொருளாகப் பார்க்கக் கூடாது. மணல் ஒரு தண்ணீர்த் தாங்கி. ஆற்றில் இருந்து மணலை எடுக்காமல் இருந்தாலே போதும். மழை குறைந்தாலும்கூட ஆற்றில் தண்ணீர் இருக்கும்.

அடுத்தது, உணவு முறையில் மாற்றம். செயற்கை உரத்தில் வளரும் புது ரகப் பயிர்கள் அனைத்துமே சொற்ப உற்பத்திக்கே அதிகத் தண்ணீரைக் காவு வாங்குகின்றன. ஆனால், நமது பாரம்பரிய சிறு தானியங்களின் ஒரு கிலோ உற்பத்திக்கு சொற்ப தண்ணீர் போதுமானது. அதனால் சிறு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

தனியார் குடிநீர் வியாபார நிறுவனங்களை தடைசெய்ய வேண்டும். சுகாதாரமான குடிநீரைக் கொடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. தனியார் கொள்ளை தடுக்கப்படும். பெரும் தொழிற்சாலைகள் தண்ணீரைக் கட்டாய மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

அடுத்தது, செய்யக் கூடாதது இவை... கங்கை - காவிரி இணைப்பு முட்டாள்தனம். இயற்கையைப் பிரித்து மேய்ந்து பொறியியல் வேலை பார்க்க நமக்குத் தகுதியும் உரிமையும் கிடையாது. காசி - கங்கையின் டால்பினும், நீர்நாய்களும் திருச்சியின் காவிரியில் வசிக்க முடியாது. தண்ணீரைத் தனியார்மயமாக்கி வியாபாரப் பொருள் ஆக்கும் உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும். இவை நடந்தால் தண்ணீருக்காக யாரிடமும் கையேந்தத் தேவை இல்லை'' என்கிறார்!



நாம் இளிச்சவாயர்கள்!
'மறை நீர்’ (Virtual water) என்று ஒன்று உண்டு. அதனைக் கண்டுபிடித்தவர் லண்டனைச் சேர்ந்த புவியியலாளர் டோனி ஆலன். மறை நீர் என்பதற்கு அவர் தரும் விளக்கம் இது - ''கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இருப்பது இல்லை. அதேசமயம் அந்த நீர் கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. அதுதான் மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,300 கன மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,000 டன் நீருக்குச் சமம்'' என்கிறார் ஆலன். அதாவது, நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வேண்டும். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட புத்திசாலி நாடுகள் அப்படித்தான் செய்கின்றன.

ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கான மறை நீர் அளவு 4,810 லிட்டர். பன்றி இறைச்சி, சீனர்களின் பிரதான உணவு. ஆனால், பன்றி உற்பத்திக்கு சீனாவில் கெடுபிடி அதிகம். ஏற்றுமதிக்கும் தடை. மாறாக, இறக்குமதி செய்துகொள்ளலாம். ஓர் ஆரஞ்சுப் பழத்துக்கான மறை நீர் அளவு 50 லிட்டர். சொட்டு நீர்ப் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு ஏற்றுமதிக்குத் தடை!

சரி, இப்போது நம் கதைக்கு வருவோம். முட்டை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது நாமக்கல். உலகெங்கும் ஏற்றுமதி ஆகிறது நாமக்கல் முட்டை. ஒரு முட்டைக்கான மறை நீர் அளவு 200 லிட்டர். மூன்று ரூபாய் முட்டை எங்கே? 200 லிட்டர் தண்ணீர் எங்கே?

சென்னையின் கதையைப் பார்ப்போம். பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. இது நமக்குப் பெருமையாம். 1.1 டன் எடைகொண்ட ஒரு காரின் மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.  

ஒரு கிலோ தோலைப் பதனிட்டு ஒரு கைப்பையோ ஒரு ஜோடி ஷூவோ, செருப்போ செய்ய 29,000 லிட்டர் மறை நீர் தேவை. நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கும் 90 லிட்டர் மறை நீர் தேவை. நீங்கள் அணிந்திருக்கும் ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிப்புக்கு 10 ஆயிரம் லிட்டர் மறை நீர் தேவை. ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செலவுக்கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். ஏனெனில், நாம் இளிச்சவாயர்கள்!

-டி.எல்.சஞ்சீவிகுமார்

நன்றி: ஆனந்தவிகடன், 08 மே 2013

3 கருத்துகள்:

valan சொன்னது…

It is the responsibility of everyone to save water.

Bloh சொன்னது…

great eye opener... especially virtual water...

marimuthu சொன்னது…

தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லும் கட்டுரை!
யோசிக்க வைக்கிறது "மறை நீர்!" குறித்த செய்தி.
பூவுலகின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

கருத்துரையிடுக