நுண்ணறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளவர்களை முடக்குவதற்கு... மேற்பதவிகளில் இருந்தவர்கள் அயராது பாடுபடுவார்கள்; பலவித வித்தைகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். இதிகாச காலம்தொட்டு, இன்றையக் காலம் வரை மேற்பதவிக்காரர்களின் குணம் மாறாது இருப்பது ஆச்சரியம்தான்!
மேற்பதவிக்காரர்களின் கட்டுப்பாடுகள் பிடிக்காதவர்கள், ஒருகட்டத்தில் சலிப்படைந்து வெளியேறுவார்கள். இப்படி வெளியேறியவர்களில் க.சு.சுப்பையாவும் ஒருவர். பின்னாளில் 'ஸ்பிக்' ரசாயன உரக் கம்பெனியின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சுப்பையாவை, தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றின்போது சமீபத்தில் பார்த்தேன். உடல் நலிவுற்ற நிலையில் இருந்தார்.
இன்னொரு நண்பர்... 'ஸ்டோர் காப்பாளர்' சங்கரன். மிக எளிமையானவர். அதுவே அவரது வலிமையும்கூட! அவர் சினந்து நான் பார்த்ததே இல்லை. விதைகள் விளைபொருட்கள், இடுபொருட்கள், கருவிகள் அனைத்தும் இவர் பொறுப்பில் இருந்தன. ஆதலால் எல்லாரையும் சந்திக்கும் அவசியம் இவருக்கு இருந்தது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர். வெளி செல்வாக்கும் உண்டு. யாராக இருந்தாலும், இவரிடம் ஏதாவது உதவி பெற்றிருப்பார்கள். எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழா நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றவர்.

'நேர் படப் பேசு, நையப் புடை’ என்கிற பாரதி சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர்களில் பருத்திப் பிரிவு விஞ்ஞானி ராஜகோபாலின் தந்தையும் ஒருவர். மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கோயில்களுக்குப் போவதில்லை. வீட்டிலேயே கடவுள் படங்களை வைத்து வழிபடுபவர். அவர் ஒரு முறை கூறிய சொல், வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கிறது.
‘YIELDING TO INJUSTICE AND MISUSE OF POWER ARE NOTHING BUT MORAL PROSTITUTION.’
'அநீதிக்கு விட்டுக் கொடுப்பதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மனதளவில் விபசாரம் செய்வதைத் தவிர வேறில்லை' வாழ்க்கையின் இலக்கணத்தைச் சொன்ன வார்த்தைகள் இவை. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அநாகரிகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அந்த வார்த்தைகளின் சத்தியமான உண்மை நெஞ்சை அறைகிறது.

உடனடியாக எனக்கு இருந்த கடமைகள் இரண்டு. ஒன்று, வேலியாக வளர்ந்திருந்த சீமைக் கருவேல் மரங்களை வேரோடு பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். இரண்டு, 158 ஏக்கர் நிலத்துக்கும் முள்கம்பி வேலி போட வேண்டும்!
சீமைக் கருவேல் வேலியை அப்புறப்படுத்த வேண்டிய முடிவு எப்படி வந்தது?
'வேலியே பயிரை மேய்ந்த கதை' என்பதற்கு ஆதார சம்பவம் அது.
வேலியில் இருந்து 12 மீட்டர் தூரத்துக்குப் பருத்திச் செடி வளர்ச்சி குன்றி இருந்தது. வேலியில் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி 60 சென்டி மீட்டர் அகலம் மற்றும் ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார்கள். குறுக்கிட்ட சீமைக்கருவேல் வேர்களை எல்லாம் வெட்டி வீசினார்கள். அடுத்தப் பருவத்தில் இருந்து பருத்திச் செடி நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்தது. இந்த வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு, மீண்டும் பருத்திச் செடி வளர்ச்சி குன்றியது. நிலத்தை அகழ்ந்து பார்த்த போது ஓர் உண்மை புரிந்தது. சீமைக் கருவேல் மரம்... தனது வேரை, வெட்டப்பட்ட பள்ளத்துக்குக் கீழே அனுப்பியது. பிறகு, வேரானது மேல் எழுந்து நீண்டு பயிரை மேய்ந்தது. சீமைக் கருவேல் வேரில் சுரக்கும் நச்சு, பயிர்ச் செடிகளின் சாரத்தைச் சப்பி எடுத்துவிடுகிறது. இந்த உண்மை தெரிந்த பிறகே வேலிக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
வேலிக்காக சீமைக்கருவேல் வளர்த்தது போலவே... சிந்தனை மட்டத்தில் ஒரு நச்சுமரம் வளர்க்கப்பட்டது. 'அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஆராய்ச்சியும் நடைமுறையும் இந்தியாவில் புகுத்தப்பட்டால், இங்கு விளைச்சல் பெருகும், பஞ்சம் அகலும்' என்ற பிழையான கருத்து அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் முழக்கமாக இருந்தது.
இதற்கேற்ப ஆராய்ச்சிகளும் பயிர் வகைகளும் மாற்றப்பட்டன.
கோவில்பட்டி வட்டார உழவர்கள் எதைப் பயிரிட வேண்டும் என்பதை டெல்லியில் முடிவு செய்தார்கள். அமெரிக்க எண்ணெய் கம்பெனி ராக்பெல்லர் நிறுவனமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் கைகோத்தபடி புதிய ஒட்டுரகச் சோளம் (C.S.H), ஒட்டுரகக் கம்பு (HB) விதைகளை உண்டு பண்ணி, கோவில்பட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், பூஞ்சணக் கொல்லி நஞ்சுகளைப் பரிந்துரை செய்தார்கள்.
நடப்பில் இருந்த விதைக்கும், டெல்லி இறக்குமதி செய்த விதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நடப்பில் இருந்தவை... பொறுக்கு விதை முறையில் தனித்தேர்வு (Pure Line Selection) செய்யப்பட்டவை.
நம் மூதாதையர் சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்த முறைதான் இந்த பொறுக்கு விதை முறை. விளைந்துள்ள ஒரு நிலத்தில் இறங்கி, நன்கு விளைந்துள்ள சில கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளை உதிர்த்து சேமித்து வைத்து, தனி நிலத்தில் விதைப்பார்கள். அதில் விளையும் சிறந்த கதிர்களை மீண்டும் கொய்வார்கள்; சேமிப்பார்கள். இப்படி மீண்டும் செய்வதன் மூலம் பெறுவதே பொறுக்கு விதைகள். கோவில்பட்டி 2 வெள்ளைச் சோளம், கே.1 (கோவில்பட்டி) மிளகாய், கே.1 கம்பு, கே.2 ராகி எல்லாம் இப்படித் தேர்வு செய்யப்பட்டவையே. டெல்லி அனுப்பிய சோளமும், கம்பும் அப்படிப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட இரண்டு செடிகளின் மகரந்தத்தையும் சூலையும் ஒட்டுக் கட்டித் தயாரிக்கப்பட்டவை.

பாரம்பரிய விதைகளை விதைப்பதற்கு என்று ஒரு பருவம் உண்டு. ஒட்டு விதைகளுக்கு அத்தகையக் கட்டுப்பாடு கிடையாது. பாரம்பரிய விதைக்கு ஆட்டு எரு, மாட்டு எரு, பிண்ணாக்கு போதுமானது. ஒட்டு விதைகளுக்கு ரசாயன உரம் தேவை.
பாரம்பரிய விதைகள் உயர்ந்த தரம் உள்ளவை. ஒட்டு விதைகள் கூடுதல் விளைச்சலுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டவை. அவை, 'அமோக விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties) என்று பெயர் சூட்டப்பட்டவை. ஆனால், வானம் பார்த்த பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும் அமோகமாக விளையாதது மட்டும் அல்ல; அதனால் வந்த பக்க விளைவுகளும் பாதகமாகவே இருந்தன!
-இன்னும் பேசுவேன்...
நன்றி: பசுமைவிகடன், 25 மார்ச் 2012
2 கருத்துகள்:
பயனுள்ள பதிவு...
உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.
சீமைக் கருவேல மரம் ஆபத்தானது என்பது புரிந்து விட்டது... ஆனால் எந்த மரமாக இருந்தாலும் இதே விளைவைத்தான் ஏற்ப்படுத்தும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை???
கருத்துரையிடுக