செவ்வாய், மார்ச் 20, 2012

சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்? (மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் நாள்)


சிட்டுக்குருவிகள்
எங்கள் வீட்டுக்கு வருவதை
நிறுத்திவிட்டன
- ஆதி வள்ளியப்பன்
(மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் நாள்)
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பறவை நோக்கும் பந்தயத்தில் (Bird Race) பங்கேற்றபோது, சென்னையில் வாழும் பறவை வகைகளை கணக்கெடுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். ஒரே நாளில் காலையில் இருந்து மாலை ஆறு மணிக்குள் எத்தனை வகை பறவைகளை குறிப்பிட்ட எல்லை பரப்புக்குள் பதிவு செய்கிறோம் என்பதே அந்தப் போட்டி. கிட்டத்தட்ட 49 பறவைகளைப் பார்த்துவிட்டோம். “கவலைப்படாதீர்கள் இன்னும் ஒரு பறவைதானே, போட்டியின் இறுதி நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் சிட்டுக்குருவியை பார்த்துவிட்டால் 50 ஆகிவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறினார், எங்களை வழிநடத்திச் சென்ற ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் பறவை ஆர்வலர் ஜெயசங்கர். காக்கை போன்ற சாதாரண பறவைகளை காலையில் புறப்பட்ட உடனே பார்த்துவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் இடமெல்லாம் படபடவென்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை அன்றைக்கு தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
sparrow_370அதிர்ஷ்டவசமாக நான் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த மந்தைவெளி ராஜா தெருவுக்கு அருகேயிருந்த ராஜா கிராமணி தோட்டம் என்ற சிறிய சந்தில் அப்போது 10 - 12 சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அந்த சிறிய சந்துப் பகுதி சாதாரண, எளிய மக்கள் வாழும் பகுதி. இப்படியாக சென்னையில் சில பகுதிகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் எஞ்சி இருக்கின்றன.
சிட்டுக்குருவிகள் குறித்த எனது ஞாபகங்கள் மனதின் ஓரத்தில் எப்போதும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க நகரத்திலேயே வாழ்ந்த எனக்கு, சிட்டுக்குருவி மனதுக்கு மிகவும் நெருக்கமான பறவை என்று சொல்லலாம். சிட்டுக்குருவிகள் குறித்த எனது நினைவுகள் மிகவும் சிறிய வயதிலேயே தொடங்கிவிட்டன. திருச்சி தில்லைநகர் ராம் நகர் காலனியில் நான் வளர்ந்த 80களின் தொடக்கத்தில், எங்கள் வீட்டு கம்பி ஜன்னல் வழியாக தினசரி உள்ளே பறந்து வந்து, எங்களது வீட்டுப் பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், இதர பொருள்களுக்கு இடையே வைக்கோலால் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்தது ஒரு சிட்டுக்குருவி குடும்பம். அதே வீட்டின் மற்றொரு பிரிவில் இருந்த மின்பெட்டி இடைவெளியில் பல சிட்டுக்குருவிகள் கூடமைத்து, குஞ்சு பொரித்து சந்தோஷமாக வாழ்ந்துள்ளன. அந்த நேரத்தில் என் தம்பி பிறந்திருந்தான் என்பதால், அந்த சிட்டுக்குருவிகள் என் ஞாபக அடுக்குகளில் ஆழமாக பதிந்துவிட்டன.
1980களின் இறுதியில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் நாங்கள் குடியேறியிருந்தோம். அந்த வீட்டில் காற்று வருவதற்காக அறையின் மேற்பகுதியில் விடப்பட்டிருந்த வென்டிலேட்டர் செவ்வக ஓட்டை வழியாக உள்ளே வந்த ஒரு சிட்டுக்குருவி ஜோடி, உள்அறையின் மேற்பகுதியில் அதேபோல இருந்த மற்றொரு செவ்வக வடிவ ஓட்டை பகுதியில் வைக்கோல் வைத்து கூடு கட்டியது. உள் வெண்டிலேட்டரில் அவை கூடு கட்டியதற்குக் காரணம், எதிரிகளிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அந்தக் குருவிகளுக்கு தைரியம் சற்று அதிகமாத்தான் இருந்திருக்க வேண்டும். அவையும் பிறக்கப் போகும் அவற்றின் குஞ்சுகளும் ஒரு சில செ.மீ. நகர்ந்தாலும் கீழே விழுந்துவிடக் கூடிய நிலைமையிலும், தைரியமாக கூடு கட்டி வாழ்ந்தன. ஏனென்றால் அவ்வளவு குறைவான இடம்தான் அங்கே இருந்தது. வென்டிலேட்டர் துளை வழியாக தினசரி அவை உள்ளே வந்து, கூட்டுக்குப் போவதற்கு இடையில் எங்கள் வீட்டு மின்விசிறி இருந்தது. எங்கள் குடும்பத்தில் குருவிகள் வரும் நேரத்தில் மின்விசிறியை போடாமலிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். எதிர்பாராத ஒரு நாளில் மாலை, இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மின்விசிறி வேகமாகச் சுழன்று கொண்டிருந்தபோது உள்ளே பறந்து வந்த தாய்க் குருவி, மின்விசிறியின் வேகத்தை கணிக்காமல் அடிபட்டு சிதறிவிட்டது. எங்களுக்கு அது மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை. எங்கள் வீட்டுக்குள் கூடமைத்த கடைசி சிட்டுக்குருவி அதுதான். அதற்குப் பிறகு சிட்டுக் குருவிகள் எங்கள் வீட்டுக்குள் வரவில்லை.
சிட்டுக்குருவி (House sparrow, Passer domesticus)
சிட்டுக்குருவி 15 செ.மீ நீளம் கொண்டது. ஊர்க்குருவி என்றும் இதை அழைப்பது உண்டு. முன்பு நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்பட்டது. ஆணின் தலை, பிடரி, முதுகு, வால்மேல் போர்வை இறகுககள் பழுப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறம். மேல் முதுகும் இறக்கைகளும் கரும்பழுப்புக் கோடுகள் கொண்ட செம்பழுப்பு நிறம். பெண், சாம்பல் தோய்ந்த உடலின் மேற்பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்புக் கோடுகளைக் கொண்டது.
இனப்பெருக்கக் பருவத்தில் ஜோடியாகத் திரியும். இது பின்னர் குழுவாக ட்சிஇ, இட்சி, ட்சிஇ எனக் குரல்கொடுத்தபடி பெருங்கூட்டமாக பறக்கும். தானியங்கள், புழு பூச்சிகள், முளைகள், மலர் அரும்புகள், தேன், இளந்துளிர், வீட்டு புறக்கடை கழிவுகள் உள்ளிட்டவற்றை உண்ணும். நீலகிரியில் இப்போது பரவலாகக் காணப்படும் இது, அண்மைக் காலம் வரை 1000 மீ. உயரத்துக்கு மேல் மலைப்பகுதிகளில் காணப்பட்டதில்லை. அதற்குக் கீழ் பகுதிகளில்தான் வசித்து வந்தது.
உணவுப் பழக்கத்தை போலவே கூடுகட்டுவதிலும் வரையறை ஏதுமின்றி வீட்டுக் கூரை, சுவரில் உள்ள பொந்து, கிணற்றின் இடுக்குகள் (பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்) என வசதியுள்ள இடங்களில் புல், வைக்கோல், குப்பைக் கூளம், பஞ்சு கொண்டு 3, 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவி அடுத்தடுத்து இனப்பெருக்கம் செய்யும், இடைவெளி ஏதுமில்லை.
நம்மால் வீட்டு விலங்காக ஊருக்குள் அழைத்து வரப்படாத உயிரினங்களில் ஒன்று சிட்டுக்குருவி. வாழ உகந்த சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் பல உயிரினங்கள் காட்டிலிருந்து ஊருக்குள் இடம்பெயரும். “குருவிக் கூட்டை கலைப்பது பாவம்” என்று கருதி அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்த பண்பு நம் சமூகத்தில் இருந்தது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே அறிமுகமாகும் சிட்டுக்குருவிகள் நம்முடைய சினிமா பாடல்கள், குழந்தை பாடல்கள், கவிதைகள், கதைகள் என பல்வேறு வகைகளில் பதிவு பெற்றுள்ளன. இப்படி நம்மோடு ஒன்றறக் கலந்து வாழ்ந்து வந்த சிட்டுக்குருவி இனம், மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் - தொழில்நுட்பம் காரணமாக அழிவை நோக்கி சென்று வருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவு என்பது, உண்மையிலேயே பயங்கரமான நிலைக்குச் செல்லாதபோதும், அந்த அழிவு சிறியதாக இருக்கும்பட்சத்திலும்கூட, அது சுற்றுச்சூழல் சீரழிவின் மிக முக்கியமான சுட்டிக்காட்டி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இப்படிப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளை புறக்கணிப்பது நமது சூழல் மேலும் சீரழியவும், நமது ஆரோக்கியம் மேலும் மோசமடையவுமே வழிவகுக்கும்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாகக் கருதப்படும் பல்வேறு காரணங்களை நோக்கும்போது இது நமக்குத் தெளிவாகப் புரியும். சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான மிக முக்கிய காரணமாக செல்ஃபோன் அலைகள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம், ஆய்வு இல்லை. பிரிட்டனில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்ஃபோன் அலைகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் ஏதுமற்ற நிலையில், அதே காரணம் அப்படியே இங்கே பொருந்தும் என்று கூற முடியாது. ஆனால், குருவிகளின் அழிவுக்குக் கூறப்படும் மற்ற காரணங்கள் முக்கியமானவை. தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற வெளிக்காற்று உள்ளே புக முடியாத ஏ.சி. பொருத்தப்பட்ட வீடுகள், கட்டடங்கள் கண்ணாடி, அலுமினியம் பதிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்படுகின்றன. இதனால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போகிறது.
மேலும் செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்துவிடுகின்றன. சிறு புழுக்கள்தான், முதல் 15 நாளைக்கு குஞ்சுகளின் முக்கிய உணவு. அது இல்லாவிட்டால், குஞ்சுகள் வளர்வது தடைபடும். மேலும் பயிர்களின் மீது பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதால் தானியங்கள் நஞ்சாகிவிடுகின்றன. இதுவும் சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள "மீதைல் நைட்ரேட்" என்ற மாசுப் புகை சிட்டுக்குருவிகளின் உணவான பூச்சிகளைக் கொல்கிறது என்றொரு தகவலும் உண்டு.
முன்னைப் போல இல்லாமல் தானியங்கள் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இதனால் தானியங்கள் எங்குமே சிதற வாய்ப்பில்லை. முன்பெல்லாம் லாரியில் நெல், தானியங்கள் ஏற்றப்பட்டு அவை செல்லும் வழியெல்லாம் சிறிதளவு தானியம் சிதறிக் கொண்டே போகும். இவற்றை பறவைகள் கொத்திக் கொண்டிருக்கும். திருச்சி காந்தி மார்கெட் போன்ற பகுதிகளில் தானியங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை அதிகமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதால், சிட்டுக்குருவிகளுக்கு உணவு கிடைப்பது தடைபட்டு விட்டது. இப்படியாக நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை உணர முடிகிறது. ஆனால் இதை நிரூபிப்பதற்குத் தேவையான அறிவியல் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் தற்போது இல்லை. இதை விரிவாக நடத்த வேண்டி உள்ளது. அதேநேரம் கிராமப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் குறையவில்லை என்பதை மூத்த பறவை ஆர்வலர் க.ரத்னமும், வாழ உகந்த இடங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறையவில்லை என்பதை பறவை ஆராய்ச்சியாளர் எஸ்.கோபி சுந்தர் போன்றோரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முந்தைய தலைமுறையினர் சிட்டுக்குருவிகளையோ, அவை கூடுகட்டுவதையோ தொந்தரவாக நினைக்காமல் இருந்தனர். அவர்களது வாழ்க்கை நடைமுறைகளும் அவற்றுக்கு உதவும் வகையிலேயே இருந்தன. வீட்டில் உலை வைக்க இருந்த கொஞ்சம் அரிசியையும் சிட்டுக்குருவிகளுக்கு போட்டதற்காக செல்லம்மாவிடம் பாரதியார் திட்டு வாங்கியிருக்கிறார். தனக்குப் பிரியமான சிட்டுக்குருவிகளை, தனது பாடல்களிலும் பாரதியார் பல முறை குறிப்பிட்டுள்ளார். மஞ்சள்தொண்டை சிட்டுக்குருவியை ஆசையாக விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின், அந்தக் குருவியின் நிறம் வித்தியாசமாக இருந்தது சாலிம் அலியின் மனதில் கேள்வியை எழுப்பியது. அந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து சென்ற சாலிம் அலி, உலகின் மிக முக்கியமான பறவையியலாளர் ஆனார். இப்படி மேதைகளின் வாழ்க்கையிலும் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
sparrows_575
இன்றைய தலைமுறையோ சிட்டுக்குருவிகள் என்றொரு உயிரினம் தங்களிடையே வாழ்ந்தது என்பது பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் இருக்கின்றனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகின் நண்பர்கள் அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், கைவிடப்பட்ட தூக்கணாங்குருவிக் கூடுகளை எடுத்து வந்து மாட்டியிருந்தோம். அதைப் பார்த்த பெரும்பாலான குழந்தைகள், அது என்னவென்று விசாரித்தனர். குழந்தைகளுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களை, உயிரினங்களை, அவற்றின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தை வளர்க்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறிவிடுகிறார்கள்.
யானை, புலி போன்ற பெரிய உயிரினங்களின் அழிவு மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, சமூகத்தின் மத்தியில் சிறிய அதிர்வுகளையாவது ஏற்படுத்துகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் போன்ற நமது சுற்றுச்சூழலின் நலனை சுட்டிக்காட்டுகிற சிறுபறவைகளின் அழிவு நமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.
எப்படியோ, சிட்டுக்குருவிகளின் அழிவு அதல பாதாளத்துக்குச் செல்லவில்லை என்பது நிஜம். ஆனால் தமிழகத்தில், இந்தியாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, அந்த இனத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; நமது சூழல் வாழத் தகுதியற்றதாக மாறி வருவதன் முக்கியமான அறிகுறி. இதை கவனிக்கத் தவறுவதும், புறக்கணிப்பதும், நாளை நமது ஆரோக்கியத்தை, உடல்நலத்தை, வாழ் சூழலை, பூவுலகை முற்றிலும் சீரழிப்பதாக மாறிவிடக் கூடும். இன்றைக்கு சிட்டுக்குருவி, நாளை மனிதன்; இதுவே சிட்டுக்குருவி இனத்தின் அழிவு நமக்கு மறைமுகமாக உணர்த்தும் செய்தி. சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்காக உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
உள்ளூர் தாவரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். அதுதான் இயற்கையான சூழல் சமநிலையை பாதுகாக்கிறது. பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். இவை நுண்ணுயிரிகள், நன்மை செய்யும் பூச்சிகள், புழுக்களை அழிக்கின்றன. சிட்டுக்குருவிகளை இது பாதிக்கிறது.
எளிதில் வளரக் கூடிய வெளிநாட்டுத் தாவரங்கள் பசுமை பாலைவனங்களையே உருவாக்குகின்றன. இவை உள்நாட்டு உயிரினங்களுக்கு உணவையோ, மற்ற சூழல் கைமாறுகளையோ செய்வதில்லை. எனவே, பராமரிக்க எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை வளர்ப்பது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு அளிக்கலாம். தானியங்களை மட்டுமே அளிக்க வேண்டும். உப்பும் எண்ணெயும் மிகுந்த, மக்கிய, மீதமான உணவுப் பொருள்களை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். கம்பு, அரிசி, கோதுமை போன்றவற்றை தரலாம். வெயில் காலங்களில் தண்ணீர் வைக்கலாம்.
கட்டடங்களில் பறவைகள் கூடு கட்ட வசதியாக இடம் விட்டு கட்டலாம். ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் சிட்டுக்குருவி நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டு, எதிரிகள் அணுகாத உயரத்தில் வைத்துவிட்டால், அதுவே அவற்றின் வீடாகிவிடும்.
சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு - நீங்களும் பங்கேற்கலாம்
சிட்டுக்குருவிகளை முறைப்படி பாதுகாக்கும் நோக்கத்தோடு, இந்த சிட்டுக்குருவிகள் தினத்தில் நாடு முழுவதும் அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதில் நீங்களும் பங்கேற்கலாம். தொடர்புக்கு: www.citizensparrow.in இந்த முன்முயற்சியை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன. எளிமையான சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பாற்ற நீங்களும் பங்களிக்க முடியும்.
 தமிழக சிட்டுக்குருவிகள் பற்றி ஆவணப் பட இயக்குநர் கோவை சதாசிவம் அருமையானதொரு ஆவணப் படத்தை “சிட்டு” என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார். தொடர்புக்கு: 99650 75221. இந்த சிட்டுக்குருவிகள் தினத்துக்கு சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தொடர்புக்கு: 94440 49492,mnssparrow@yahoo.in
(நன்றி: அறிவியல்பூர்வமான தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தி, உடனடியாக அவற்றை தந்த எழுத்தாளரும் காட்டுயிர் ஆராய்ச்சியாளருமான ப.செகநாதனுக்கு)
 - ஆதி வள்ளியப்பன் ( amithatamil@gmail.com)

1 கருத்து:

pandikumar சொன்னது…

superb sir keep posting

கருத்துரையிடுக