2011 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கூடங்குளம் அணுசக்தித் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் திட்டம் 1988இல் முன்மொழியப்பட்ட காலத்தில் இருந்து, இத்திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜப்பானிலுள்ள ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட கட்டுப்படுத்தப்பட முடியாத அணுஉலை விபத்து, அதன் பயங்கரமான பாதிப்புகளை அடுத்து, கூடங்குளத்தில் அணுஉலைத் திட்டத்தை தொடங்குவதற்கு எதிரான கவலைகள் இந்தியாவிலுள்ள சிந்திக்கும் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தியாவில் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டங்கள் கூடங்குளத்தில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்தாபூரைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், ஹரியானாவில் உள்ள கோரக்பூர் விவசாயிகள், உள்ளூர்வாசிகள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் அணுஉலை அமைப்பதற்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஹரிபூரில் ரஷ்ய அணுஉலைகள் வரவிருந்த நிலையில், அந்தப் பகுதி அணுஉலைகள் வரைபடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அந்த மாநில அரசு மேற்குவங்கத்தை அணுசக்தி இல்லாத மாநிலமாக அறிவித்துள்ளது.
புத்திசாலி மக்கள் எப்போதும் அடுத்தவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள். ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அணுசக்தியை குறைத்துக் கொண்டு, தூய்மையான, நீடிக்கும் மின் ஆதாரங்களை நாடிச் சென்று வருகின்றன. ஆனால் இந்தியா மட்டும் அணுசக்தி பித்துப்பிடித்துப் போய், சாதாரண விவசாயிகள், மீனவர்களை பகடைக் காய்களாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆட்டத்தை ஆடி வருகிறது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள் ஆகியோரின் கூட்டான, தீவிரமான போராட்டம் அணுசக்தி நிர்வாகத்துக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வலியுறுத்துவதற்கான உண்மையான காரணங்கள் முன்வைக்கப்படும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது வழக்கமான தந்திரங்களை கையாள ஆரம்பித்துவிட்டது. பிரித்தாளும் சூழ்ச்சி, பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுதல், அந்நிய சதி ஆகிய குற்றச்சாட்டுகளை அது சுமத்துகிறது. இந்த விவகாரத்தில் அணுசக்தித் துறையும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விஷயங்களை கவனப்படுத்துகின்றனர் - இந்தத் திட்டம் இல்லையென்றால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும், அணுசக்தி இல்லாமல் இந்தியா செயல்பட முடியாது, நமது அணுஉலைகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை, இந்த நிலையில் அணுஉலை திட்டத்தை கைவிடுவது என்பது மிகப் பெரிய ஆபத்து என்றெல்லாம் கூறப்படுகின்றன.
மிகப் பெரிய பேரழிவு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி பலரும் கவனப்படுத்தி வரும்போது, அப்துல் கலாம் உள்ளிட்ட இந்திய விஞ்ஞானிகள் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு மாறாக, ஜோசியக்காரர்கள் போல பேசுகின்றனர். கூடங்குளம் இருக்கும் பகுதியை நிலநடுக்கம் தாக்காது என்பதை எப்படி ஒருவர் முன்கூட்டியே கணிக்க முடியும் அல்லது மனிதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் தவறாது, பொய்த்துப் போகாது என்று எப்படி உறுதி தர முடியும்?
ஃபுகுஷிமா விபத்து ஏற்படுத்திய பயங்கள், தொடர்ச்சியாக மின் பற்றாக்குறை நிலவுவது போன்றவை மக்கள் மனதில் பயத்தையும், கேள்விகளையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளன. அணுசக்தியின் பாதுகாப்பு தொடர்பான தவறான புரிதல்களை போக்கும் வகையிலும், தொடர்ச்சியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் இந்த சிறு கேள்வி-பதில் தொகுக்கப்பட்டுள்ளது.
1. இந்தியா ஒரு வளரும் நாடு. நாம் வளர்ச்சியடைய மின்சாரம் தேவை. அணுசக்தி வேண்டாம் என்றால், நமது வளர்ச்சி பாதிக்கப்படும்.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அணுசக்தி மட்டும்தான் ஒரே வழியல்ல. பல மரபு சார்ந்த, மரபு சாராத ஆற்றல் ஆதாரங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். விடுதலை பெற்று 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற தொழில்மயமாக்கம், நவீனமயமாக்கத்துக்குப் பயன்பட்ட மொத்த மின்உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு வெறும் 3 சதவீதத்துக்கும் குறைவு. இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(காற்றாலை, சூரிய மின்சக்தி) ஆதாரங்களுக்கு ஏற்கெனவே 10 சதவீதம் பங்கு இருக்கின்றது. மேலும் மிகப் பெரிய அணை நீர்மின் திட்டங்கள் 22 சதவீதம் பங்கை அளித்து வருகின்றன. ஆனால், பெரிய நீர் அணைகள் சுற்றுச்சூழல் மற்றும் ஆதிவாசிகளின் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா உண்மையிலேயே ஒரு புதிய தலைமையாக உருவாக வேண்டுமென்றால், நமது இயற்கை மூலதனத்தை - நமது நிலம், நீர், காற்று, மக்களை - அழித்துவிடக் கூடாது. அணுஉலைகள் போன்ற ஆபத்தான, விபத்து நடக்க வாய்ப்புள்ள, செலவு அதிகம் கொண்ட தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக, மின்சார உற்பத்திக்கு தூய்மையான, நியாயமான, குறைந்த ஆபத்துள்ள மின்உற்பத்தி முறைகளுக்கு வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
மின்சார சேமிப்பு, தேவை அடிப்படையிலான மேலாண்மை வியூகங்கள் போன்றவற்றின் மூலமும் மின்சார அளவை அதிகரிக்க முடியும். இப்போது உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 100 மெகாவாட் மின்சாரத்திலும், 40 மெகாவாட் மின்சாரம் மோசமான விநியோகம், கடத்துதல் காரணமாக இழக்கப்படுகிறது. ஸ்வீடன் போன்ற முன்னேறிய நாடுகளில் விநியோகம், கடத்துதல் இழப்பு 7 சதவீதம் ஆகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தற்போது உற்பத்தி செய்யப்படும் 1,80,000 மெகாவாட் மின்சாரத்தில், 72,000 மெகாவாட் (40 சதவீதம்) இழக்கப்படுகிறது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து மின்உற்பத்தி நிலையங்களையும் மூடி விடுவதற்குச் சமம்.
மின் விநியோகம், கடத்துதல் திறனை 90 சதவீதம் அதிகரிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அது 60,000 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட ஒரு மின் நிலையத்தை உருவாக்குதற்குச் சமம். வேறு வார்த்தைகளில் சொன்னால், தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கூடங்குளத்தைப் போன்ற 60 மின்நிலையங்களை உருவாக்குதவற்குச் சமம் இது. ஆனால் இந்த அளவு செலவோ, ஆபத்தோ அதில் துளியும் கிடையாது.
தமிழகத்தில் உள்ள குண்டு பல்புகள் அனைத்தையும் எல்.இ.டி. பல்புகளாக மாற்றுகிறோம் என்று வைத்துக் கொண்டால், 2,000 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கலாம். இதை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு சேமிக்கலாம் என்றும், விவசாயத்துக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய பம்புகளை ஆற்றல் திறன் மிகுந்த பம்புகளாக மாற்றினால் எவ்வளவு சேமிக்கலாம் என்றும் சிந்தியுங்கள்.
இதற்கெல்லாம் மேலாக தேவையற்ற மின்செலவை குறைப்பதும் நிறைய பலன்களைத் தரும்.
ஷாப்பிங் மால்கள், ஐ.டி. நிறுவனங்கள் நாள் முழுவதும் மின்சாரத்தை செலவு செய்கின்றன. இரவோ, பகலோ லைட், ஏ.சி. போன்றவை இயங்குகின்றன. ஆனால் மற்றொரு புறம் வீடுகளும், வணிக நிறுவனங்களும் மின் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. மின்சாரத்தை பயன்படுத்துவதில் ஒரு நியாயமான பங்கீடு தேவை. "சமமற்ற மின் விநியோக"த்துக்கு நல்ல எடுத்துக்காட்டு, கல்பாக்கம் அணுஉலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி 2 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
2. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் செலவு குறைந்தவையா*?* நமது மின்ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவையா*?*
இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மட்டும் போதாது. ஏனென்றால் ஆற்றலில் மின்சாரம் என்பது ஒரு வகை மட்டுமே. இந்தியாவின் ஆற்றல் தேவைகளில் மின்சாரம் 12 சதமே ஆகும். மக்கள் மின் விளக்குகள் குளிர்சாதனங்கள் இல்லாமல் இருக்க பழகிகொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் எரி பொருட்கள் தேவை. இன்று பல வீடுகளில் தாவர ஆற்றல் எரிசக்தியாக உபயோகப்படுத்தப் படுகின்றன.
இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு என்பது, ஆற்றல் தயாரிப்பிலும்,கட்டுப்படுத்துவதிலும் நாம் முன்வைக்கும் நல்ல முன்மாதிரியில்தான் அடங்கி இருக்கிறது. தற்போது நாம் முன்வைக்கும் முன்மாதிரி என்பது திறனற்ற மின்சார உற்பத்தி, தவறான கடத்துதல் முறைகள், ஏற்றத்தாழ்வான விநியோகம், முறையற்ற பயன்பாடு ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கிறது. இதில் கிராமப் பகுதிகள், சிறிய வணிக நிறுவனங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க மேல்தட்டு மக்களோ மின்சாரம், இதர ஆற்றல் ஆதாரங்களை எந்த இடையூறும் இன்றி தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்கள். அதிக விரயத்தை ஏற்படுத்தும், இந்த நியாயமற்ற உற்பத்தி - நுகர்வு இலக்கை எட்ட தற்போதுள்ள மரபு சார்ந்த அல்லது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆதாரங்கள் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் ஆற்றல் தலைநகர் என்று அழைக்கப்பட்ட அனல்மின் நிலையங்களால் நிரம்பிய சிங்ராலி என்ற ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஏன் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இன்றைக்கு மின்சாரமோ, தண்ணீரோ கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன? நிலக்கரி, அணுஉலைகளை கேள்விக்கு உட்படுத்தும் அதேநேரம், பழங்குடிகள், தலித்துகள், விவசாயிகள், மீனவர்கள் உளளிட்டோர் தொடர்ச்சியாக தியாகம் செய்ய வலியுறுத்தி, அதன் மூலம் மற்றவர்கள் அனைவரும் வளமானவர்களாக மாறும் வளர்ச்சி முறையையும் நாம் கேள்விக்கு உட்படுத்தியாக வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்கள் என்று வரும்போது, அதன் முழுமையான திறனையும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து வருகிறோம் என்பதுதான் உண்மை. இந்திய அரசு அளிக்கும் தகவலின்படி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன்: காற்றாலை – 48,500 மெகாவாட் (65,000 மெகாவாட் இந்திய காற்றாலை அமைப்பின் கூற்றுப்படி http://www.inwea.org/*); சிறிய நீர்மின் நிலையங்கள் - 15,000 மெகாவாட், தாவர ஆற்றல் - 21,000 மெகாவாட், சூரிய மின்சக்தி - குறைந்தபட்சம் 4,00,000 மெகாவாட். அணுஉலை தொழில்நுட்பத்துக்கு வாரியிறைக்கப்படும் பணத்தை,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சி, ஆற்றல் திறன் மேலாண்மைக்கு திட்டங்களுக்குத் திருப்பிவிடலாம். ஏற்கெனவே, சூரிய மின்சக்தி, காற்றாலைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக மின்உற்பத்திச் செலவு குறைந்து வருகிறது. இன்றைய காற்றாலைகளில் உள்ள பழைய குறைந்த சக்தியுள்ள டர்பைன்களை மாற்றுவதன் மூலம் காற்றாலைகளின் உற்பத்தியை ஆறு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்கள் மூலம் இந்தியா 17,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்துள்ளது. அதேநேரம் சீனாவோ, கடந்த ஒரே ஆண்டில் 17,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
ஆனால் நாமோ, நமது ஆர்வம் அனைத்தையும் "அணுசக்தி கூடை"க்குள்ளேயே எப்போது பார்த்தாலும் கொட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த உதாரணம் இது.
இரண்டாவதாக, நல்ல கட்டட வடிவமைப்பு மூலமும் மின் தேவையை குறைக்கலாம். சென்னை போன்ற ஊர்களில் மங்கிய கண்ணாடிகளை கட்டடங்களில் பொருத்துவதனால், நாள் முழுவதும் மின்விளக்குகளை எரியவிடவேண்டியுள்ளது.. வெளியே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும்போதும், அவர்கள் உள்ளே லைட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள மால்களும், தகவல்தொழில்நுட்ப வளாகத்திலுள்ள ஐ.டி. நிறுவனங்களும் இந்த முட்டாள்தனமான வடிவமைப்புக்கு நல்ல உதாரணம்.
ஜெர்மனியிலுள்ள பிளாக் ஃபாரஸ்ட் பகுதியைச் சேர்ந்த உர்சுலா ஸ்லாடெக் என்ற பெண், செர்னோபில் விபத்துக்குப் பிறகு, தங்கள் பகுதியில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடையே பிரசாரம் செய்தார்.
இன்றைக்கு மக்களால் நடத்தப்பட்டு வரும் அந்த நிறுவனம், சிறிய, பரவலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மூலம் 1,00,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஃபுகுஷிமா அணுஉலை விபத்துக்குப் பின்னர், தங்களுக்கு தூய்மையான ஆற்றல் வேண்டுமென கேட்டு அந்த நிறுவனத்துக்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 400 புதிய வாடிக்கையாளர்கள் வருகிறார்களாம். இதிலிருந்தே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரம் என்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது மட்டுமில்லாமல், வணிக ரீதியில் லாபகரமானது என்றும் தெரிகிறது.
3. முனைவர் அப்துல் கலாம் கூறுவதைப் போல பொருளாதாரரீதியில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் எனற நமது கனவை, ஃபுகுஷிமாவில் நடந்த ஒரே ஒரு பேரழிவுக்காக கைவிட்டு விட வேண்டுமா*?*
மிகப் பரவலாக அறியப்பட்ட, சோவியத் யூனியனின் கிஷ்டீம் (1957) மற்றும்அமெரிக்காவில் நடைபெற்ற மூன்று மைல் தீவு (1979) மற்றும் செர்னோபில் (1986) அணுஉலை விபத்துகளைத் தாண்டி, 1947 - 2008 ஆண்டுகளுக்கு இடையே குறைந்தது 76 அணுஉலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் 56 விபத்துகள் செர்னோபில் விபத்துக்குப் பின்னால் நேர்ந்தவை. இதன்படி சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் தலா ஒரு மோசமான அணுஉலை விபத்து ஏற்பட்டு வருகிறது, இதனால் ஆண்டுக்கு ரூ. 165 கோடி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. 2005 முதல் 2055ஆம் ஆண்டுக்குள் குறைந்தது நான்கு பயங்கரமான அணுஉலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 2003ஆம் ஆண்டு நடத்திய "அணுசக்தியின் எதிர்காலம்" என்ற ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஐ.டி. நிறுவனத்தின் கணிப்புகளில் 2011ஆம் ஆண்டு நேர்ந்த ஃபுகுஷிமா அணுஉலை பேரழிவு முதலாவது.
மேலும் பேரழிவுகளைக் கண்டு மட்டும் நாங்கள் கவலைப்படவில்லை. மிகவும் கச்சிதமாக செயல்படும் அணுஉலைகள் மூலமாகவும்கூட புற்றுநோய், விளக்க முடியாத இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அமெரிக்காவில் 65 இடங்களில் 104 அணுஉலைகள் செயல்படும் பகுதிகளைச் சுற்றி வாழும் மக்களிடையே ரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
கல்பாக்கத்தில் மருத்துவம் செய்து வரும் டாக்டர் புகழேந்தியின் ஆய்வில் அப்பகுதியில் வாழும் மக்களிடையே புற்றுநோய், தைராய்டு, மற்றும் சிலந்திவலை விரல் நோய், பிறவி குறைபாடுகள் போன்றவை அதிகரித்துள்ளது தெரியவருகிறது.
4. அனல் மின்நிலையங்கள் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன, காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கார்பனை அவை பெருமளவி்ல் வெளியிடுவதால் அவை மோசமானவை என்று முனைவர் அப்துல் கலாம் கூறியிருக்கிறாரே. நிலக்கரி சுரங்கங்கள் காரணமாக மாசுபாடு, அப்பகுதிக்கு அருகே வாழும் மக்கள் சந்தித்து வரும் பயங்கரமான பாதிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாரே.
அனல் மின்நிலையங்கள் பற்றி அப்துல் கலாம் கூறியுள்ளது சரியானதுதான். அனல் மின்நிலையங்கள் மாசுபடுத்தக்கூடியவை, மோசமானவை. நிலக்கரி சுரங்கங்களை பூமியில் உள்ள நரகங்கள் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு பேய்களிடையே நல்ல பேயை தேர்ந்தெடுக்குமாறு எங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்கள் அடித்தே கொல்லப்பட விரும்புகிறீர்களா அல்லது நேரடியாக கொல்லப்பட விரும்புகிறீர்களா என்று கேட்பதைப் போலிருக்கிறது. என்னைக் கேட்டால் இரண்டையும் வேண்டாம் என்றே கூறுவேன்.
அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைத் தரும் யுரேனிய சுரங்கங்கள் சுற்றுச்சூழலுக்கும், சுற்றி வாழும் மக்களின் உடல்நலத்துக்கும் ஏற்படுத்தும் பயங்கரமான பாதிப்புகள் பற்றி முனைவர் அப்துல் கலாம் பேசவில்லை. ஜார்கண்டில் உள்ள ஜாதுகோடாவில் இந்திய யுரேனியக் கழகம் யுரேனியம் தோண்டுகிறது. இதன் காரணமாக சுற்றுப்புற பழங்குடி மக்கள் மீதான கதிரியக்க பாதிப்புகள் பயங்கரமாக இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற அணுஆயுத போர் தடுப்புக்கான சர்வதேச மருத்துவர்கள் அமைப்பின் இந்திய பிரிவான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள் அமைப்பு, ஜாதுகோடாவில் நடத்திய மருத்துவ ஆய்வை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது:
·யுரேனியம் தோண்டும் பகுதிக்கு அருகே வாழும் மக்களிடையே அடிப்படை மலட்டுத்தன்மை மிக அதிகமாக இருக்கிறது.
·யுரேனியம் தோண்டும் பகுதிக்கு அருகே வாழும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகமாக பிறவி ஊனத்துடன் இருக்கின்றன.
·யுரேனிய சுரங்கங்கள் அருகே வாழும் பெண்களின் குழந்தைகள் பிறவி குறைபாடுகள் காரணமாக இறக்கும் விகிதம் அதிகமாக உள்ளது.
·யுரேனிய சுரங்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் புற்றுநோயால் இறப்போர் விகிதம் அதிகமாக இருக்கிறது.
·ஜார்கண்ட் மாநில மக்களின் சராசரி ஆயுள்காலத்தை எடுத்துக் கொண்டால், யுரேனிய சுரங்கங்களில் இருந்து தள்ளி இருக்கும் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் சராசரி ஆயுள்காலம் ஆகியவற்றைக் காட்டிலும் யுரேனிய சுரங்கங்கள் அருகே வாழும் மக்களின் ஆயுள் காலம் குறைவாக இருக்கிறது.
·மற்ற கிராமங்களுடன் ஒப்பிடும்போது, பாதிக்கப்பட்ட கிராமங்களில் பொருளாதார, எழுத்தறிவு விகிதம் அதிகமாக இருந்தாலும்கூட, மோசமான உடல்நலம், எளிதில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதையே மேற்கண்ட அம்சங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சுற்றுச்சூழலை அழிக்கும் தொழில்நுட்பங்களான நிலக்கரி, அணுஉலை ஆகியவற்றை கைவிட்டால்தான், எதிர்காலத்தில் வளம்குன்றாத, சமூகநீதி கொண்ட புதிய பாதையை வகுக்க முடியும். மேலும் அணு மின்சாரம் பசுமை ஆற்றல் என்று கூறுவதும், அது காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் என்று கூறுவதும் அப்பட்டமான பொய். புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரம் மூலம் ஒரு மெகாவாட் மின்உற்பத்தி செய்வதில் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடைவிட, அணுஉலைகள் 4 - 5 மடங்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. (ஆதாரம்: டெக்னாலஜி ஃபிரம் ஹெல் - நீரஜ் ஜெயின்). ஒட்டுமொத்த அணு எரிபொருள் சுழற்சியையும் கணக்கிட்டோம் என்றால், அணுஉலை தொழி்லநுட்பமே மிகப் பெரிய மாசுபடுத்தி.
5. போராட்டக்காரர்கள் ஏன் இவ்வளவு தாமதமாகப் போராடுகிறார்கள்*?* முதலில் அரசு முன்மொழிந்த போதே இந்தத் திட்டம் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கூறியிருக்கலாமே*?*
1988ஆம் ஆண்டு இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. ஒரு சில மாதங்களிலேயே அணுஉலைக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அப்போதைய ரஷ்ய அதிபர் மிகயீல் கோர்பசேவ் 1989இல் இந்தியாவுக்கு வந்தபோது அவரிடம் தருவதற்காக மக்களும், மாணவர்களும் இணைந்து அணுஉலைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றனர். கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், இளைஞர்களைத் திரட்டுதல், சென்னை, இதர நகரங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆகியவை நடைபெற்றன. 1989ஆம் ஆண்டு மே 1ல், கன்னியாகுமரி நகரத்தில் பாதிக்கப்பட்ட் மீனவர்களும் மற்ற குடியிருப்பாளர்களும் போராட்டம் செய்தனர். இந்த அறப்போராட்டத்தை தடுக்க காவல்துறை முயன்றபோது, இக்னேஷியஸ் எனும் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1991-2001 மத்தியில் அன்றைய சோவியத் யூனியன் பல தேசங்களாக நொறுங்கி உடைந்ததன் விளைவாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாள் முதலே கூடங்குளம் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
அன்றைய ராஜிவ் காந்தி அரசும், இன்றைய சோனியா காந்தி அரசும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ளவோ அல்லது உள்ளூர் மக்களின் விருப்பங்களை காது கொடுத்து கேட்கவோ தயாராக இல்லை.
இதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூற முடியாது, ஏனென்றால் இன்றைக்கும் அந்த நிலைமை மாறவில்லை. உள்ளூர் விவசாயிகள், மீனவர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி ஜெய்தாபூர் அணு உலையை திணிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடு்க்கும் மத்திய அரசைப் பார்த்தாலே இது தெளிவாகப் புரியும். ஹரியாணாவில் உள்ள கோரக்பூர், ஜெய்தாபூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசால் புறக்கணிக்கப்பட்ட்தோடு வன்முறையை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட்து.
கூடங்குளம் அணுஉலையின் உடனடிச் செயல்பாடு, மேலும் இந்த அணுஉலை வளாகத்தை 6000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யக்கூடிய ஆபத்து போன்றவை உளளூர் மக்களின் அச்ச உணர்வை மீண்டும் அதிகரித்துள்ளன என்பது உண்மைதான். இயற்கையின் பேரழிவு எப்படி இருக்கும் என்பதை 2004 ஆழிப் பேரலை (tsunami) மீனவ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது. ஃபுகுஷிமாவில் நடைபெற்ற மூன்று முனை விபத்துக் காட்சிகளும், அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான ஜப்பானிய மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விடப்படாமல் தடுக்கப்பட்டது, அன்றாட வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படாத அவலம் ஆகியவற்றை தொலைகாட்சியில் பார்த்தது மக்கள் மனதில் அப்படியே தங்கியுள்ளது. எனவே, மக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது.
6. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அணு உலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு இப்போது இத்திட்டத்தை கைவிடுவது சரியானதாக இருக்குமா?
சரியான காரியத்தை செய்வதற்கு சரியான நேரம் என்று ஒன்று கிடையாது அணுவின் அபாயத்தை அறிந்த பிறகு அதில் தொடர்ந்து முதலீடு செய்வதை விட, ஏற்கனவே செய்யப்பட்ட முதலீட்டோடு அத்திட்டத்தை கைவிடுவது மேலானது.
ஒரு பேரழவின் விலையை எண்ணிப்பாருங்கள். முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த மாநிலமான பெலாரஸ் தான் 1986 செர்னோபில் பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட்து. சர்வதேச அணு திறன் ஆணையத்தின் அறிக்கைப்படி 1991 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை பெலாரஸ் மாநிலம் 13 பில்லியன் டாலர்களை பேரழிவு தொடர்பான பணிகளுக்கு செலவிட்டுள்ளது. 30 ஆண்டுகளில் 235 பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. செர்னோபில் தொழிற்சாலை இருந்த உக்ரேன் நாட்டின் மொத்த அரசாங்க செலவில் 6-7% இன்றும் பேரழிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக செலவிடப்படுகிறது. பேரழிவினால் வெளியான கதிர்வீச்சு, பெரும்பாலும் ரஷ்யாவிலும், அது தவிர பெலாரஸ் மற்றும் உக்ரேன் ஆகிய பகுதிகளிலும் 200,000 க்கும் அதிகமான சதுர கிலோமீட்டர்களை மாசுபடுத்தியுள்ளது. இந்த பரப்பளவு தமிழ்நாட்டின் பரப்பளவை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.
ஃபுகூசிமாவில், டாய்-இச்சி அணு உலையை மூடி, பாதுகாப்பாக பிரித்தெடுத்து அப்புறப்படுத்த 30 வருடங்கள் ஆகும். இதற்கான செலவு 12 பில்லியன் டாலர்களிலிருந்து 19 பில்லியன் டாலர்கள் வரையிலும் இருக்கும். உடல்நல கண்காணிப்பு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, சமூக பாதுகாப்பு, மாசடைந்த சுற்றுப்புறத்தை சீர் செய்வது, விவசாயமும் மீன்பிடிப்பும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பு, கதிர் வீச்சு அபாயத்தின் மீதான பயத்தால் இழக்கப்படவிருக்கும் அந்நிய வணிகம் ஆகிய செலவுகள் மேற்கூறிய தொகையில் சேர்க்கப்படவில்லை.
அதேநேரம் அணு உலையை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டால், கூடங்குளம் அணு மின் நிலையத்தை, ஆபத்து குறைந்த, மாசு குறைந்த வாயு அனல் மின் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படலாம். த்ரீ மைல் தீவு விபத்துக்குப் பிறகு, நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் இருக்கும் ஷோர்ஹம் அணு மின் நிலையம் இயற்கை வாயுவில் இயங்குவதாக மாற்றப்பட்ட்து. ஒஹயோவில் இருக்கும் வில்லியம் எச் சிம்மர் அணு மின் நிலையமும், மிஷிகனில் இருக்கும் மிட்லேண்ட் கோஜெனரேஷன் வசதியும் படிம எரிபொருள் (fossil fuel) கொண்டு இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டன.
7. இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவை. இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள் எவ்வித அழிவும் ஏற்படுத்தாமல் பல பத்தாண்டுகளாக இயங்கி வருகின்றன. பிறகு என்ன பிரச்சனை?
இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவை என்பது உண்மைக்கு புறம்பான கூற்று. இந்தியாவின் அணு நிறுவனத்தில் ஏற்படும் பாதுகாப்பு மீறல்கள் வெளி உலகத்துக்கு தெரியாமல் ”இரகசிய காப்பு” என்ற போர்வைக்குள் மறைக்கப்படுகின்றன. ஆயினும் நமக்கு தெரிந்த தகவல்களே கவலையளிக்கும் விதமாக தான் இருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக் கொண்டால், கீழே கூறப்பட்டுள்ள அத்துமீறல்கள் வெளியுலகத்துக்கு தெரிய வந்துள்ளன. இவற்றில் சில அத்துமீறல்கள் நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்டன.
· 1987: எரிபொருள் ஏற்ற விபத்தில் அணு உலையின் மையத்தில் முறிவு ஏற்பட்டது.
· 1991: கதிரியக்கம் கொண்ட கன நீருக்கு தொழிலாளர்கள் வெளிப்படுத்தப்பட்டார்கள்.
· 1999: 42 தொழிலாளர்கள் கதிரியக்க பாதிப்புக்கு ஆளானார்கள்.
· 2002: கதிரியக்கம் கொண்ட 100 கிலோ சோடியம் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்பட்ட்து
· 2003: உயர்ந்த கதிரியக்கத்துக்கு 6 தொழிலாளர்கள் ஆளானார்கள்.
· இன்னும் ஆபத்தான சம்பவங்கள் நடந்துள்ளன. 1991 ஆம் ஆண்டு RAPS( ராப்ஸ்) அணு உலை வளாகத்தில் பணிபுரிந்த காண்ட்ராக்டர் ஒருவர் கதிர் வீச்சு நிறைந்த தண்ணீரை, பெயிண்ட் கலக்கவும், பெயிண்ட் பிரஷ்கள், முகம் மற்றும் கைகளை கழுவ்வும் பயன்படுத்தினார்.
· 2009 ஆம் ஆண்டு கர்நாடகாவின் ”கைகா” அணு உலையில் கதிர் வீச்சு நிறைந்த ட்ரைடியம் கொண்ட நீரை குடித்த்தால் 55 தொழிலாலர்கள் மிகையான கதிரியக்கத்திற்க்கு ஆளானர்கள்.
பாதுகாப்பு முறைகளை பலப்படுத்துவது என்பது காலம் கடந்த யோசனையாகவே இருந்து வந்திருக்கிறது. 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அணு சக்தி துறையின் அணு உலை பாதுகாப்பு ஆய்வு குழு வெளியிட்ட “ இந்தியாவின் கன நீர் அழுத்த அணு உலைகளின் பாதுகாப்பு” என்ற் தலைப்பிடப்பட்ட அறிக்கை “இந்தியாவில் சுனாமியோ நீர் மட்டம் மாறலோ (seiche) ஏற்படுவதில்லை. அதனால் சூறாவளி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கல்பாக்கத்தில் அமைந்துள்ளது போன்றதான கன நீர் அழுத்த அணு உலைகளைப் பற்றியது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கல்பாக்கம் குடியிருப்பு , அணு உலை வளாகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. 2004 ஆம் ஆண்டின் சுனாமியிலிருந்து கல்பாக்கம் அணு மின் நிலையம் தப்பியது அதன் திட்டமிட்ட வடிவமைப்பினால் அல்ல, சந்தர்பவசத்தால் தான்.
இன்றைக்கும் கல்பாக்கம் அணு உலை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையோ, சுனாமியையோ தாக்குபிடிக்கும் நிலையில் இல்லை. சர்வதேச அணு சக்தி குழும்ம் ஒன்று கல்பாக்கத்திலிருந்து 60 கிமீட்டர் தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரி கடற்கரையிலிருந்து கொஞ்சம் தள்ளி நீருக்குள் எரிமலை ஒன்று செயல் திறனுடன் இருக்கிறது என்று அறிவித்தும் கல்பாக்கத்தில் பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
8. கூடங்குளத்தில் அனைத்து பாதுகாப்பு முறைகளும் சரியாக இருக்கின்றன. அணு உலை நில அதிர்ச்சி புவி மையத்திலிருந்து (seismic centre point) 1300 கிமீட்டர் தொலைவில் இருப்பதால் சுனாமியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார். மேலும், அரசையும், அரசு விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் நம்புமாறு கூறியுள்ளார். இதை செய்வதை விட்டு மக்கள் இவர்களை கேள்வி கேட்கலாமா?
முதலில், எந்த ஒரு நல்ல விஞ்ஞானியோ, பொறியாளரோ 100% பாதுகாப்பு என்று ஒன்று இல்லை என்று கண்டிப்பாக கூறுவார்கள். இது போன்ற உறுதி மொழிகள் 100% பொய்யானவை. பேரழிவின் போது ஏற்படும் உண்மையான பாதிப்புகளுக்கும், விளைவுகளுக்கும் மக்களை தயார்படுத்தாமல் அவர்களை மன நிறைவடையச் செய்கிறார் டாக்டர் அப்துல் கலாம். பேரழிவுக்கு மக்களை தயார் செய்ய வேண்டிய தருணத்தில் அவர்களின் பயங்களை பொய்யாய் போக்க நினைப்பது மிகவும் தவறான போக்காகும். ஆபத்தான தொழில்நுட்பத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பான விஷயங்களை மக்களிடம் கூறுவது பொறுப்பற்றது.
இரண்டாவதாக, அணு சக்தி துறையின் உறுதி மொழியை பொய்யாக்கிய 2004 சுனாமிக்குப் பிறகும், டாக்டர் கலாம் அதே தவறை மீண்டும் செய்கிறார். சுனாமி வர வாய்ப்புகள் இல்லை என்று டாக்டர் கலாம் கூறுவது அறிவியல் இல்லை, ஆருடம்.
பாதுகாப்பு மற்றும் சரியான அவசர கால நடவடிக்கைகளை கையாள தொழில்நுட்பங்கள் மட்டுமே போதும் என்று டாக்டர் கலாம் நம்மை நம்ப வைக்க் முயற்சிக்கிறார். அது உண்மையல்ல. முழு பாதுகாப்பு மற்றும் சரியான அவசர கால நடவடிக்கைக்கு தேவை, சரியான இட்த் தேர்ச்சி, திட்டமிடல், தப்பித்தல் வழிகள் அமைத்து பராமரிப்பது, தகவல்களை நன்கு அறிந்து அவசர காலத்தில் சரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய மக்கள், வெளிப்படையான உண்மையைக் கூறக்கூடிய, தவறுகளை தெரிந்து திருத்திக் கொள்ளக்கூடிய நிர்வாகம், இயற்கையின் வலிமையை புரிந்து கொள்ளக் கூடிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் நேர்மையான கட்டட கலைஞர்கள் மற்றும் காண்ட்ராக்டர்கள்.
நேர்மையான அறிவியலுக்கு தேவை உண்மையை நிலைநாட்டும் எண்ணம், இந்த நாட்டில் அதற்கான இடம் கிடையாது. மக்களுடைய அன்றாட வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு ஊழலும், பித்தலாட்டமும் மலிந்து கிடக்கும் இந்த நாட்டில் டாக்டர் அப்துல் கலாமின் வார்த்தைகளை மட்டும் எப்படி நம்ப முடியும்.
2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட பாலம் ஒன்று போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் இடிந்து விழுந்த்து. தரமற்ற பொருட்களை கொண்டு சரியாக திட்டமிடப்படாத கட்டுமான்ங்கள் வெறும் நடை மேடைகளுக்கு மட்டும் பொருந்துவதில்லை.
1994 ஆம் ஆண்டு மே மாதம், கர்நாடகாவின் கேய்காவில் கட்டப்பட்டு வந்து அணு உலையின் உட்புற கொள்கலம் இடிந்து 120 டன் கான்கிரீட்டுடன் கீழே விழுந்த்து. இந்த கொள்கலன், ஆபத்து காலத்தில் கதிரியக்கத்தை கட்டுபடுத்துவதற்காக கட்டப்பட்ட்து. அணு சக்தி முறைப்படுத்தல் வாரியத்தின் முன்னாள் தலைவர் அ. கோபால கிருஷ்ணன், “இந்திய அணுசக்தி கார்ப்பரேஷனின் (NPC) மூத்த கட்ட்ட பொறியாளர்களுக்கும், அணு சக்தி துறைக்கு கட்ட்ட பொறியியல் வடிவமைப்புகளை தரும் தனியார் நிறுவன்ங்களுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. இந்த தோழமையின் அடிப்படையில் இந்நிறுவன்ங்கள் அனுப்பும் கட்டட வடிவமைப்பு திட்டங்களை NPC பொறியாளர்கள் சரியான தர சோதனைக்கு உள்ளாக்குவதில்லை” என்று எழுதுகிறார். கர்நாடகாவில் இந்த விபத்தின் போது அணு உலை புழக்கத்தில் இருந்திருந்தால் இந்த விபத்தினால் 7 ஆம் நிலை உருகுதலுக்கு நாம் ஆளாகியிருப்போம்.
2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஃபூக்குஷிமாவில் பேரழிவு நடந்து கொண்டிருக்கும் போதே, ரஷ்யாவில் கட்டப்பட்டு வந்து லெனின்க்ராட்-2 அணு உலை மோசமான விபத்துக்கு ஆளானது. ஒரு அணு உலையின் வெளிப்புற பாதுகாப்பு கூடு அமைப்பதற்காக கான்கிரீட் ஊற்றப்பட்ட போது, அந்த முழு கட்டுமானமும் உருமாற ஆரம்பித்த்து. வலிமையூட்டும் கம்பிகள் வளைந்து நிலத்திலிருந்து 26 அடி உயரத்துக்கு தொங்க ஆரம்பித்தன. கட்டப்பட்டு வந்த அணு உலையின் பொறியியல் VVER 1200 என்ற வகையைச் சேர்ந்த்து ஆகும். இது கூடங்குளத்தில் இருக்கும் VVER 1000 என்ற வகையைவிட முன்னேறிய தொழில்நுட்பம் ஆகும். ரஷ்யாவில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு ஊழலும், தரக்குறைவான பொருட்களை பயன்படுத்தியதும் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் பித்தலாட்டங்களில் முதலிட்த்துக்கு போட்டி போட்டுக் கொண்டு வரும் ரஷ்ய மற்றும் இந்திய நாடுகளின் கூட்டு முயற்சியில் கூடங்குளம் அணு உலை அமைக்கப்படுகிறது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
9. அணு உலைக்கு எதிரான போராட்டம் உணர்ச்சிவயப்பட்ட்தாகவும், அறிவியலுக்கு எதிரானதாகவும் இருக்கிறதே?
கூடங்குளத்துக்கு எதிரான வாதம் என்பது அறிவியலுக்கும், சோதனைகளுக்கும் எதிரான வாதம் இல்லை. ஜைதாபுரிலும், கூடங்குளத்திலும் 10,000 மெகா வாட்டில் நடப்பது சோதனையுமல்ல. ஆய்வுக்கூட்த்தில் நட்த்தப்படும் 100 கிலோ வாட் எதிர்விசைக்கான சோதனையில்லை இது. மின்சார உற்பத்தி தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகளை கொண்டு சோதனையாளர்களைத் தவிர இன்னும் பல்லாயிரக்கணக்கோரின் உயிரை பணயம் வைக்கும் முயற்சி இது. கலாமின் அறிவியலுக்காக, உடன்பாடில்லாத மக்கள் தங்கள் உயிரை பணயம் வைக்க முடியாது. அறிவியலின் பீடத்தில் எண்ணற்ற சோதனையாளர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு நம்முடைய மரியாதைகளை செலுத்துவோம். நச்சுத்தன்மைக் கொண்ட இரசாயனங்களை அப்பாவி யூதர்கள் மீது சோதித்து பார்த்த நாசிகளும், இப்போது ஏழை, பழங்குடி மக்கள் மீது தங்களின் மருந்துகளை சோதித்துப்பார்க்கும் மருந்து கம்பெனிகளும் அறிவியல் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தும் முறை கிரிமினலானது. கூடங்குளம் திட்ட்த்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் “செய்ய முடியாதவர்கள்” இல்லை, “செய்ய மறுப்பவர்கள்”. அறிவியல் முன்னேற்றத்திற்காக தன் உயிரை பணயம் வைப்பதைப் பற்றி கலாம் பேசவில்லை, கூடங்குளம் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைக்க மறுக்கின்றனர் என்பது பற்றி குறை கூறுகிறார்.
பணிவு, நேர்மை, தவறுகளை ஒப்புக் கொண்டு புதுப் படிப்பினைகளை ஏற்றுக் கொண்டு முன்னேறும் மனப்பான்மை ஆகியவையே நல்ல பொறியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்குமான அடையாளம். இந்தியாவின் அணு ஆட்சியில் இந்த பண்புகள் அறவே இல்லை.
அணுசக்தி விஷயத்தில் வற்புறுத்தப்பட வேண்டியது சம்பந்தப்பட்ட மக்களில்லை. அணு உலைகள் ஆபத்தற்றவை என்று காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது எனக் கூறும் டாக்டர் அப்துல் கலாம், அணு உலைகளுக்கான முழு காப்பீட்டை இந்த காப்பீட்டு நிறுவனங்களை தருமாறு ஒப்புக் கொள்ள வைக்க முடியுமா? அதே போல, அணு விபத்து ஏற்படும் பட்சத்தில், அந்த விபத்து தெரிந்தே நடந்திருந்தால் கூட, அணு உலைக்கான இயந்திரங்கள் சப்ளை செய்யப் போகும் நிறுவனங்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைக்கும் ”அணு கடப்பாடு உடன்படிக்கையை” விடாப்படியாக நிறைவேற்ற வற்புறுத்தி வரும் நிறுவன்ங்களை அந்த கோரிக்கையை கைவிட செய்ய முடியுமா?
சுனாமியோ, பெரிய நில நடுக்கமோ வராது என்று கடவுள் மீது வைக்கும் நம்பிக்கைப் போல கண் மூடித்தனமான நம்பிக்கை வைத்திருப்பதுதான் அறிவியலுக்கு எதிரானதாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக நடந்து வரும் பேரழிவுகள், பேரழிவுகளால் ஏற்படும் சமூக- பொருளாதார மற்றும் சுற்றுப்புற பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அணு துறைக்கு எதிரான பயங்களை கொண்டுள்ள மக்களின் எதிர்ப்பு அறிவியல் அடிப்படையில் தான் இருக்கிறது. இந்த பயத்தை பலப்படுத்தும் வண்ணம், இந்தியா மற்றும் சர்வதேச அணு மையங்களின் கள்ள மௌனமும், இரகசியக் காப்பும் அமைந்திருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளாலும், 2G நிகழ்வுகளுக்குப் பிறகு, ஊழலினாலும் பேரழிவு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக எண்ணுவது தவறோ, அறிவியல் அடிப்படையற்றதோ இல்லை.
விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தங்கள் அறிவையும், திறமையையும் அழிவற்ற ஆபத்து குறைந்த முறைகளின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறைகளுக்காக செலவிட வேண்டும் என்பது முக்கியம்.
10. ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் ஆபத்துகள் இருக்கின்றன. கார்கள், தொடர் வண்டிகள், கப்பல்கள் என ஒவ்வொன்றும் விபத்தில் சிக்கித் தான் வருகின்றன. அதனால் கார்களையும், கப்பல்களையும் விட்டுத் தள்ளுகிறோமா? அப்படி இருக்கும் போது அணு சக்தியை மட்டும் ஏன் விட்டுத் தள்ள வேண்டும்?
கார் விபத்துகளோ அல்லது விமான விபத்துகளோ, 20 கிமீட்டர் அளவுக்கு, மனித நாகரித்தையே நிரந்தரமாக அழிக்கக்கூடிய தாக்கத்தை உண்டு பண்ணுவதில்லை. காரிலும், விமானத்திலும் பயணம் செய்யும் ஒருவர் ஒரு சில ஆபத்துகளுக்கு வலிந்து ஒப்புக் கொண்டு தான் அதைச் செய்கிறார். கார் விபத்தோ, விமான விபத்தோ இன்னும் பிறக்காத அடுத்த தலைமுறையினரை பாதிப்பதில்லை. நாம் எடுக்கும் ஆபத்தான முயற்களில் அடுத்த தலைமுறையினருக்கு உடன்பாடு இருக்கிறதா என்று கேட்க முடியுமா? ஏதும் அறியாத ஒரு தலைமுறையையே ஆபத்துக்கு உட்படுத்துவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத்து. கார் விபத்திற்காக எந்த காலத்திலும் 75 கிமீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களை வெளியேற்ற வேண்டியிருந்ததில்லை.
ஒரு தொழில்நுட்பத்தின் பாதிப்புகள் கையாளப்படக் கூடியவை என்று நிரூபிக்கப்படும் வரை, அந்த தொழில்நுட்பத்தை ஒதுக்கி வைத்தல் தான் சரி என்பதை அனுபவம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. தொடர்ந்த அணு பேரழிவுகள் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது என்பதையும் நமக்கு உணர்த்தியுள்ளது. அதனால், விவரம் அறியாத மக்களின் மேல் அணு சக்தியை கட்டவிழ்த்துவிட முடியாது.
11. டாக்டர் அப்துல் கலாம் ரூபாய் 200 கோடி செலவில் கூடங்குளத்தை சுற்றி இருக்கும் மக்களுக்கு சுத்தமான நீர், வேலை வாய்ப்பு, பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள், மோட்டார் படகுகள் மற்றும் குளிரூட்டி சேமித்து வைக்கும் வசதிகள் ஆகியவற்றை செய்வதாக வாக்களித்துள்ளார். இந்த முயற்சிகளால், அப்பகுதியில் ஏற்படக்கூடிய வளர்ச்சியை அனைவருக்கும் பொதுவாக்க முடியாதா?
இந்த 200 கோடிக்கான வசதிகள் கேவலமானவை. “மக்களை ஒப்புக் கொள்ள வைக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இலஞ்சம் கொடுங்கள்” என்பதைத் தான் டாக்டர் கலாமின் முயற்சிகள் காட்டியுள்ளன. தேர்தலுக்கு முன்னால் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பள்ளிகள், மருத்துவமனை, சுத்தமான நீர், இன்ன பிற வசதிகள் அனைத்தும் மக்களுக்கு மறுக்கப்படும் என்பது தான் இதன் பொருளா? அணு உலை எதுவும் கட்டப்படும் திட்டம் இல்லாத சமூகங்களின் நிலை என்ன? அவர்கள் பகுதியில் ஒரு அணு உலை கட்டப்படும் வரை இந்த வசதிகளுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டுமா?
மக்கள் தங்களின் முக்கியமான கேள்விகளுக்கு விடை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கேள்விகளை மரியாதையுடன் அணுக முடியாவிட்டால் டாக்டர் கலாம் அமைதியாக இருக்க வேண்டும்.
-நித்யானந்த் ஜெயராமன் & கோ.சுந்தர்ராஜன்
மொழிபெயர்ப்பு: ஜெனி
உதவி: சந்திரிகா
3 கருத்துகள்:
கட்டுகதைகளுக்கு இந்திய நாட்டில் என்ன கோடிக்கணக்கில் கொட்டிகிடக்கிறது.அனுஉலைக்காக
புதுப்பிக்கப்படுகிறத.
அய்யா அப்துல் கலாம் அவர்களே, கேரளாதான் அணை உடைந்து விடும் என்று அஞ்சுகிறானே ...1800 ஆண்டு பழமை மிக்க கல்லணை உறுதியுடன் இருக்கும் போது.....150 ஆண்டு பெரியார் அணை உடைந்து விடும் என்று மலையாளி உதார் விடுகிறானே....
இப்போ மலயாளிகிட்ட சொல்ல வேண்டியது தானே " அஞ்சினால் வரலாறு படைக்க முடியாது என்று "
சொல்ல மாடீங்களே......அணை பிரச்சனயில் comission கிடைக்காதே......கூடங்குளம் அணுமின் நிலையம் 100 % safe நு சொன்ன உங்க நார வாயால அணையும் 100 % safe நு சொல்ல வேண்டியது தானே ??????????
பவாருக்கு வைத்த பளார் ....உங்களுக்கு வைக்க தமிழ்நாட்டில் ஒருவன் இல்லாது போனது வருத்தம் தான்
http://www.youtube.com/watch?v=vm5236fuLek&feature=share
கருத்துரையிடுக