கலாம் இது வரை நாட்டின் முன்னேற்றதை நேசிப்பவராகவும் இளைய சமுதாயத்தின் இலட்சிய நாயகராகவும் நடமாடியுள்ளார். ஏறத்தாழ நடுத்தர மற்றும் மேட்டுக்குடி இளைய தலைமுறையினரின் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். தனி நபர் சமூக யதார்த்தம் நாட்டின் அரசியல் கொள்கைகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்தால் முன்னேறி விடலாம் என்ற மிகப்பழைய உடமை வர்க்கத்தின் கருத்தியல் பரப்பலுக்கு கலாமையே பெரிதும் அவர்கள் நம்பியிருந்தனர். அவரின் கருத்தியலில் ஒளிந்து கிடப்பது என்ன? அப்பட்டமான சுயநலம் தனிநபர்வாதம்தான். இவற்றில் ஏற்கனவே மூழ்கி கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் அற்பவாத கனவுகளுக்கு நாடு வல்லரசு ஆக ஒவ்வொரும் கனவு காணுங்கள் என்று உருவேற்றி வளர்த்தவர்தான் கலாம். கலாம் ஒரு அணு சக்தி அறிவியலாளர் என்ற வகையில் அவரிடம் எந்த சமூகப் பார்வையும் இருந்ததில்லை.. அணு குண்டு தயாரித்து வெடிக்கச் செய்து அதில் நாட்டின் முன்னேற்றத்தை கண்டவரல்ல அவர். அவரிடம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?.
இந்த அணு சக்தி குறித்தும் அதன் பின்னணி குறித்து மிக விரிவாக இந்த குறு நுhல் அலசுகிறது .அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து தொடங்கும் இந்த குறு ஆய்வு அணு சக்தியின் பின்னே மறைந்திருப்பது இந்திய வல்லரசு கனவுதான். இந்திய ஆளும்வர்க்கங்களின் விரிவாதிக்க கனவுகளுக்கு அடித்தளம் அமைப்பதே அணு சக்தி திட்டங்கள் என்பதை நிறுவ முயற்சிக்கிறது. நடைபெறும் அணுஉலை எதிர்ப்பு போராட்டமானது நியாயமானது என்பதை புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இனி நூலுக்குள் பயணிப்போம்.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வருகை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டது. இதுவரை இருந்து அனைத்து அரசியல் கட்சிகளின் பம்மாத்து எதிர்ப்பு நாடகம் முடிந்து அமலுக்கு வந்து விட்டது.இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த அதற்கு துணையான அணுசக்தி இழப்பீடு சட்டமும் நடைமுறைக்கு வந்து விட்டது. இழப்பீடு சட்டத்தின் படி எந்த நாட்டினரும் 1500 கோடி ரூபாயை துhக்கி எறிந்து விட்டு அணுசக்தி தயாரிக்கிறோம் என்ற பெயரில் அணுகதிர்களை கசிய விட்டு இந்திய மக்களை பூண்டோடு பல தலைமுறைகளுக்கு அழித்து விடலாம். இதை எதிர்த்து பேசினாலே நாட்டின் முன்னேற்றத்தை தடையானவர்களாக ஒதுக்கி தள்ளி விடலாம்.
அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியும். அமெரிக்கா தனக்கு சாதகமான ஒப்பந்ததை எப்படி அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து அமல்படுத்துகிறது, எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் எதிர்ப்பு நாடகம் ஆடினர் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல அழுகிறேன் என்ற நாடகங்கள் நடந்து முடிந்து விட்டன. அமெரிக்காவை எதிர்த்து அதிகார பூர்வமான இடதுசாரிகள் உட்பட எந்த கட்சிகளும் செயல்பட முடியாது தெளிவுபட நிரூபிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி தயாரிக்காவிட்டால் உலகளவில் தனிமைப்பட்டு விடுவோம். அணுசக்திதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றெல்லாம் மன்மோகன்சிங் துவங்கி காங்கிரஸ் பரிவாராங்கள் சொல்வதெல்லாம் கலப்படமில்லாத பொய்களாகும். இவற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை.ஆதாரங்களும் இல்லை. இந்தியா தனது வல்லரசுக் கனவை நிறைவேற்றுவதற்காக எந்த அளவுக்கும் செல்லும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு எடுத்துக்காட்டு. இனி அமெரிக்காவின் கூட்டாளியாக தெற்காசிய முழுவதையும் ஆட்டி படைக்கவும் ஆதிக்கம் செய்யவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முழுமையான கட்டுகடங்காத விரிவாதிக்க வெறியுடன் செயல்பட தொடங்கி விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவும் தெற்காசிய நாடுகளில் தனது ஆதிக்கத்திற்கெதிரான சக்திகளை நேரடியாக ஒடுக்கத் தொடங்கி உள்ளது.
இலங்கை பாசிச அரசுடன் இணைந்து விடுதலைப்புலிகளை அழித்ததிலிருந்து இந்த வேகமும் துணிச்சலான மனோபாவமும் கூடியுள்ளதை உணர முடியும். இன்னொரு பக்கம் இந்தியாவின் அரசியல் சுதந்திரம் பறிபோகும், அமெரிக்காவின் அடிமை நாடாக மாறிவிடும் . எந்த கோணத்திலும் மிகவும் அபாயகரமானதே இந்த ஒப்பந்தம். அணுசக்தியை ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சிலர் ரசியாவின் அணு உலை முற்போக்கானது மற்ற நாட்டின் பிற்போக்கானது என்றெல்லாம் பேசித் திரிகின்றன.. அணுகுண்டு வேறு அணுசக்தி வேறு என்று ஒரு மனச்சிதைவு நோயாளி மட்டுமே கூற முடியும். இந்த இரண்டும் வெவ்வேறானவை என்பது அடிப்படையில் ஒரு மாயை ஆகும். இந்த மாயை இக்குறுநூலில் தகர்க்கப்பட்டுள்ளது.
- சேது ராமலிங்கம்
நூலினைப் படிக்க இங்கே அழுத்தவும்.
நன்றி: கீற்று இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக