உலகப் பொருளாதார மாமேதை, பாரத தேசத்தின் நிகரற்ற பிரதம மந்திரி மன்மோகன் ஜி அவர்களின் புதிய நிதி ஆலோசகர், மக்களின்... குறிப்பாக விவசாயிகளின் சதிஆலோசகர் உயர்திரு. ரகுராம்ராஜன் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கறான் தென்னாட்டு கோவணாண்டி...
'நான் பிரதமருக்கே யோசனை சொல்றவன்... எனக்கே ஆலோசனையா’னு ஆவேசப்பட்டு, அவசரப்பட்டு கடுதாசியைக் கிழிச்சுப் புடாம... கொஞ்சம் பொறுமையா படிங்கய்யா.
நீங்க ஒலக பொருளாதார மேதைக்கே யோசன சொல்றவரு... பெரிய பெரிய ஆலோசனைகள அள்ளி வீசறவரு... ஒங்களுக்கெல்லாம் போய் நான் யோசனை சொல்ல முடியுங்களா..?
'ஏற்கெனவே நடுக்கடல்ல திக்குத் தெரியாம போயிட்டிருக்கு இந்திய விவசாயம்ங்கிற கப்பல். இதுக்கு நடுவுல ஆளாளுக்குப் புகுந்து பொறப்பட்டு... ஆலோசனைங்கிற பேர்ல சுக்கானை பிடிச்சு அலைக்கழிக்காதீங்க'னு கேட்டுக்கறதுக்காகத்தான் இந்தக் கடுதாசி!
என்ன புரியலையா...?
'நாட்டுல 60 சதவிகிதம் பேர் ஏன் விவசாயத்தைப் பாக்கணும். வெறும் 5 சதவிகிதம் பேர் மட்டும் பாத்தா போதும்’னு அரசுக்கு நீங்க சொன்ன 'அடடே...' ஆலோசனையைப் பத்திதான்யா சொல்றேன். ஒங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் மூளையில இருந்து அறிவு பொங்கி ஒழுகறத நினைச்சா... புல்லரிக்குதுங்கய்யா!
'அடே குசும்புக்காரக் கோவணாண்டி, தொழில் செய்றதுக்கு இஷ்டம் போல நிலத்தை வளைக்க முடியல; சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க முடியல; விளைநிலத்தை விழுங்கி விமான நிலையத்தைக் கட்ட முடியல, தங்க நாற்கரம், வைர முக்கோணம்னு நினைச்ச இடத்துலயெல்லாம் நிலத்துல ரோடு போடமுடியல!
இதுக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கறதே இந்த விவசாய இம்சைங்கதான். இவங்க இருந்தாத்தானே பிரச்னை, பேசாம விவசாயத்தையே அழிச்சுடலாம்னு நாங்களும் எவ்வளவோ நாளா திட்டம் போடுறோம். ஆனா, எவ்வளவு அடிச்சாலும், தாங்கிக்கற 'ரொம்ப நல்லவன்' கணக்கா... விடாம விவசாயத்தைப் பாக்கறாணுங்க. அதனாலதான் ஒட்டுமொத்தமா வெளியேத்தலாம்னு முடிவு பண்ணிட்டோம். நான் சொன்னதுல ஏதாச்சும் தப்பு இருக்குதா?'னுதானே கேக்க வர்றீங்க!
சபாஷ்... நீங்க சொல்றதுதான் சரியான யோசனை. ஆனா, இதுக்காக நீங்க ரொம்பவும் மெனக்கெட வேணாம். சத்தமில்லாம ஏற்கெனவே சாகடிச்சுக்கிட்டிருக்கீங்களே... அதையே தொடர்ந்துட்டீங்கனா... கூடிய சீக்கிரம் ஒட்டுமொத்தமா 'கோயிந்தா... கோயிந்தா...'னு சொல்லிட்டு போயிடலாம்.
அதாவது, புதிய பொருளாதாரக் கொள்கைங்கற பேருல... ஏற்கெனவே பல லட்சம் விவசாயிகள் மண்டையைப் போட வெச்சாச்சு; 'சிறப்புப் பொருளாதார மண்டலம்'ங்கற பேருல பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை பல நாட்டு கம்பெனிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்தாச்சு; அவங்க தயாரிக்கற பொருளுங்கள கப்பல், பிளேன்லயெல்லாம் ஏத்திவிடறதுக்காக 4 வழி, 6 வழினு சாலை போடுறதுக்காக பல லட்சம் ஏக்கரை அழிச்சாச்சு; ரியல் எஸ்டேட்காரங்களும் அவங்க பங்குக்கு விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி வீட்டடி மனையாக்கியாச்சு... இதே நிலை நீடிச்சா, இன்னும் சில வருஷத்துல 5 சதவிகிதமில்லை... 0 சதவிகிதமாயிடும் விவசாயிங்களோட எண்ணிக்கை.
'அவ்வளவு நாளைக்கெல்லாம் பொறுக்க முடியாது. உடனடியா குறைக்கணும்'னு நினைச்சா... மாஜி நிதி மந்திரி ப.சி, செஞ்ச மாதிரி, விவசாயிகளுக்குக் கடன கொடுத்து, விளைஞ்ச பிறகு, விலையை தடாலடியா குறைங்க. கடன் கட்ட முடியாம தற்கொலை செஞ்சே செத்துப் போயிடுவானுங்க விவசாயப் பதறுங்க.
அய்யா ஆலோசகரே... விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு விரட்டியடிச்சுப்புட்டு, அவனுங்களுக்கு எப்படி சோறு போடப் போறீங்க. என்னமோ தொழில்வளத்துல நாடே கொழிக்கற மாதிரி... 'நாடு வளருது... நாடு மிளிருது'னு கொஞ்ச வருஷமா ஃபிலிம் காட்டினீங்க. இப்ப அதுவும் கவுத்துடுச்சு.
உங்க பாஷையில சொல்லப் போனா... 8 சதவிகிதம், 9 சதவிகிதமா இருந்த தொழில் வளர்ச்சி, இப்ப 6 சதவிகிதம், 5 சதவிகிதம்னு பின்னோக்கி வளர்ந்துகிட்டு இருக்குது. இதை நம்பி விவசாயத்தை விட்டு நகரத்துக்குப் போனவனெல்லாம், பொரணியில அடி வாங்கினது கணக்கா ஊரைப் பார்க்க வந்து சேர்ந்துக்கிட்டிருக்கானுங்க. இதத்தானே செஞ்சுருக்கு உங்க பொருளாதாரப் பொரட்சி. இந்தப் பிரச்னை தீர்றதுக்கு ஒரு வழி சொல்ல யோக்கியதை இல்ல... விவசாயத்துக்கு வேட்டு வைக்க கிளம்பிட்டீங்க.
நீங்க என்ன பண்ணுவீங்க? 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ங்கிறது கணக்கா... 'சகலத்துக்கும் இளைச்சவன் சம்சாரி’னு ஆகிப்போச்சு. போறவன், வர்றவனெல்லாம் ஆட்டி வைக்கறான். விளைச்சலைக் கூட்டணும்னா, 'கடனை கூட்டணும்’னு ஒருத்தர் சொல்றாரு; 'ரசாயன உரங்கள கூட்டணும்’ங்றாரு இன்னொருத்தர்: 'இயந்திரமயமாக்கணும்’னு ஒரே போடா போடறாரு மற்றொருத்தர்.
ம்... வல்லுநர்கள், ஆலோசகர்கள்னு சொல்லிக்கிட்டு திரியற யாருக்கும் விவசாயத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாதுங்கறதுதானே உண்மை. 'பசுமைப் புரட்சி'யை உருவாக்கி, இன்னிக்கி 'பசுமை வறட்சி'க்கு காரணமா இருக்கறதும், வல்லுநர்னு சொல்லிக்கிட்டு சில பல வருஷத்துக்கு முன்ன கூடி கும்மியடிச்ச கூட்டம்தானே!
சரி, என்ன பேசி... என்ன ஆகப்போகுது. நீங்க சொன்னபடியே 5 சதவிகிதமாக்கறதுக்கு உண்டான வேலைகளை சட்டுபுட்டுனு பாருங்க. நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்பட்டுகிட்டே இருக்குறது. நிலத்தை வுட்டுட்டு, ஊரெல்லாம் எதை திங்குதோ... அதையே நாங்களும் தின்னுட்டு, விதி வந்தா செத்துப் போறோம். காலமெல்லாம் உங்கள மாதிரியான ஆளுககிட்ட போராடி, போராடியே உசுர விட்டுக்கிட்டிருக்கறதவிட, நிம்மதியா போயாவது சேர்ந்துடறோம்!
இப்படிக்கு,
கோவணாண்டி
நன்றி: பசுமைவிகடன், 25-12-11
1 கருத்து:
கோவணாண்டிக்கு. கோவணமாவது மிச்சமிருக்கு அதையும் உறுவுவதற்கு ஆலோசனை சொல்லுங்கப்பா ஆலோசகா.....
கருத்துரையிடுக