புதன், அக்டோபர் 26, 2011

கூடங்குளம் போராட்டத்தைத் தூண்டுவது வெளிநாட்டுப் பணமா?

கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து இரண்டாவது கட்டப் பட்டினிப் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், உள்ளாட்சித் தேர்தலுக்காக கடந்த 17-ம் தேதி மட்டும் இடைவெளி விட்டு, போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், வதந்தி ஒன்று பரவியது.


'போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் சுப.உதயகுமாரன் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்பு​ரோஸ் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்குகிறார்கள். வெளிநாட்டுத் தூண்டுதல் காரணமாகத்தான் இந்தப் போராட்டத்தையே நடத்துகிறார்கள்’ என்று செய்திகள் பரபரத்தன!

உதயகுமாரனிடமே இதுபற்றிக் கேட்டோம். ''இப்படி வதந்திகளைப் பரப்புகிறவர்கள் மீது வழக்குத் தொடரப்போகிறோம். நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அணுமின் நிலைய நிர்வாகத்தினர்தான் எங்களை மிரட்டுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு என் வீட்டில் போலீஸார் ரெய்டு வர இருப்பதாக தகவல்கள் வர, சில பத்திரிகையாளர்களும் வந்தனர். ஆனால், கடைசி வரை ரெய்டு நடக்கவில்லை. ஏன் இப்படி வதந்தி பரப்புகின்றனர்? எங்கள் போராட்டங்களுக்கான நிதியைத் திரட்ட... இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் சுற்றி இருக்கும் சில கிராமங்களில் 'ஊர் கமிட்டி’ ஒன்றை நிறுவி, ஒவ்வொரு வீட்டிலும் நிதி திரட்டுகிறார்கள். இதற்கான கணக்குகளை

'நிதிக் குழு’ பதிவு செய்கிறது. ஆகவே, 'பணம் வாங்கிவிட்டார்கள்’ என்று சொல்வது, இந்த மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகும். முதலில், அணுமின் நிலையத்தார் இத்தனை வருடமாகச் செலவழித்த தொகை பற்றிய வரவு - செலவு கணக்குகளை வெளியிடட்டும். நாங்களும் எங்கள் கணக்குகளை வெளியிடுகிறோம்.

இது தவிர, தனிப்பட்ட முறையிலும் மிரட்டுகிறார்கள். தூத்துக்குடி அரசு அலுவலகம் ஒன்றில் பணி செய்யும் எனது சகோதரியை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான நரேந்திர நாயர், 'உன் அண்ணன் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறார். அவரை சிறையில் தள்ள வேண்டி இருக்கும்’ என்றரீதியில் மிரட்டி இருக்கிறார்...'' என்கிறார் ஆவேசத்துடன்.

இதுகுறித்து அருட்தந்தை செல்வராஜ், ''முன்பு இந்தப் போராட்டத்தை நாடார்களுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சாதிச் சாயம் பூச முயன்றார்கள். இப்போது மதச் சாயம் பூச நினைக்கிறார்கள். சில விஷமிகள், 'ரஷ்யா ஒரு நாத்திக நாடு. அதனால், இங்குள்ள பாதிரியார்கள் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்க்கிறார்கள்’ என்கிறார்கள். இதை தா.பாண்டியன் போன்றோரும் ஆதரித்ததுதான் ஆச்சர்யம். 'மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிப்பவர்கள்’ இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடந்த 14-ம் தேதி அகில இந்திய பேராயர் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் க்ரேசியஸை தொலைபேசியில் அழைத்து, 'இப்படியான போராட்டங்களுக்கு பாதிரியார்கள் முன்வரக் கூடாது என்று சொல்லுங்கள்’ என்று பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். முதல் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, 'ஏ... நாடார்களே! பிரச்னை பரதவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்..’ என்று அறைகூவல் விடுத்த 'அய்யா வழி’ பாலபிரஜாபதி, என்ன காரணத்தினாலோ திடீரென்று, 'இந்தப் போராட்டத்தை யாரோ சிலர் தூண்டிவிடுகிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.

இன்னும் சிலர், 'இத்தனை வருடங்களாக இல்லாத போராட்டம் இப்போது ஏன்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து 1989-ல் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதை எல்லாம் தமிழக மக்கள் மறந்துவிட்டார்களா?'' என்று கேள்வி எழுப்புகிறார் செல்வராஜ்.

சுப.உதயகுமாரனின் தங்கையை மிரட்டி​யதாகக் கூறப்படுகிறதே என்று தூத்துக்குடி எஸ்.பி நரேந்திர நாயரிடம் கேட்டபோது, 'அவரது தங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை, மிரட்டவும் இல்லை'' என்றார்.

போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருப்​பதாக சொல்லப்படும் பால பிரஜாபதியிடம் பேசினோம். ''போராட்​டத்தில் இருந்து நான் ஒதுங்கி இருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் ஒளியவில்லை. தொடக்கத்தில், மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்காக என்னை பேச்சாளராகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நாளடைவில் போராட்டம் குறித்த தகவல்கள் எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. திடீர் திடீரென, கலந்து ஆலோசிக்காமல் போராட்டத்தில் இறங்கினர். முதல்வர் மற்றும் பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. ஆனால் முதல்வரை சந்தித்துவிட்டு வந்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டார்கள். கடற்கரை மக்களை முன்நிறுத்துவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முறையாக ஆலோசித்து களத்தில் இறங்காமல் உணர்ச்சி வேகத்தில் திடீர் மறியல் போராட்டத்தில் இறங்கினால், அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஆபத்து நேர அதிக வாய்ப்பு உண்டு. இதை அவர்கள் உணராத காரணத்தால் நான் ஒதுங்கிக் கொண்டேன்'' என்றார்.

மக்களின் வாழ்வோடு அரசுகள் விளையாடுகின்றன. இது எங்கே போய் முடியுமோ?

  • நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை எல்லாம் மூடக் கோரி, பிரஷாந்த் பூஷண் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்று கடந்த 14&ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மரபணு மாற்று பயிர்த் திட்டத்தை எதிர்த்து வரும் பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால் உட்பட பலரும் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.
-ந.வினோத் குமார், என்.சுவாமிநாதன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி: ஜூனியர் விகடன், 30-அக்டோபர் -2011

10 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாலபிரஜாதிபதி எனக்கு அண்ணன்தான், இருந்தாலும் அவர் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது நல்லதல்ல, நண்பர்களுக்கு போன்பண்ணி கேட்க்கணும் என்ன நடந்துச்சுன்னு..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உங்க தளத்தில் பாலோவர் விட்ஜெட் வையுங்க, அப்போதான் பதிவர்களின் ரீடரில் உங்கள் வலைத்தளம் தெரியும், இப்போ நான் எதேச்சையாக பேஸ்புக் பார்த்துதான் உள்ளே வந்துருக்கேன்.

வவ்வால் சொன்னது…

பூநண்பர்கள்,

அணு உலை ஆபத்தானது தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. கல்பாக்கத்தில் நல்ல எதிர்ப்புக்காட்டி இருந்தால், கூடன் குளம் திட்டமே வந்திஇருக்காது,எதிர்ப்பே இல்லாத மாநிலம் என்பதால் தான் இரண்டாவது அணு உலை இங்கே வந்தது.கூடன் குளம் திட்டம் முதலில் கேரளாவுக்கு செல்வதாக இருந்தது, அங்கே எதிர்ப்பு கிளம்பவே இங்கெ தள்ளிவிடப்பட்டது.
வெளிநாட்டுப்பணமெல்லாம் தேவை இல்லை உள்நாட்டிலயே தரத்தான் ஒரு பெரிய ஆள் இருக்கே ,என்னோட கூடன் குளம் அணு உலை அரசியலும் சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை படிச்சுபாருங்க.

கூடல் பாலா சொன்னது…

@ வவ்வால் நண்பருக்கு வணக்கங்கள் ,உங்கள் பதிவினை படித்தேன் உங்கள் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லை .கூடங்குளம் பகுதியை சார்ந்த ஏழை மீனவர்களும் விவசாயிகளும் நம் சந்ததியைக் காக்க எப்பாடு பட்டேனும் இந்த அணு உலையை மூட வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் அன்றாடம் கஷ்டப் பட்டு உழைத்த பணத்தில் போராட்டத்துக்கு நன்கொடை வழங்கி போராட்டத்திலும் கலந்துகொண்டு வருகிறார்கள் .ஆனால் கற்பனையாக எண்ணி ஒரு பதிவிட்டு அனைவரது தியாகத்தையும் அசிங்கப் படுத்துகிறீர்கள் .கூடங்குளத்தில் வசிக்கும் நானும் இப்போராட்டத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளேன் .போராட்டத்திற்கு வெளி நாடுகளிருந்தோ தாங்கள் குறிபிட்டுள்ளது போல முதலாளிகளிடமிருந்தோ உதவி பெறப்படுகிறது என்பதை தாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தால் நான் பதிவெழுதுவதையே நிறுத்திவிடுகிறேன் ....

வவ்வால் சொன்னது…

வணக்கம் கூடல் பாலா,

உங்கள் கேள்விக்கு என்பதிவிலே பதில் சொல்லியுள்ளேன், மேலும் சில கேள்விகள் கேட்டுள்ளேன் பார்க்கவும்.

யாரையும் அசிங்கப்படுத்த பதிவிடவில்லை. சொல்லாததும் உண்மையே, எனவே எல்லா பிரச்சினைகளிலும் தெரியாமல் எதோ ஒன்று இருக்கும். அப்படி எனில் ஜூ.வி.ரிப்போர்டர் போன்றவை எழுதும் புலணாய்வு கட்டுரை எல்லாம் கற்பனை என்று சொல்வீர்களா? கிடைத்த தகவல், சுட்டிகள் எல்லாம் கொடுத்து தானே இருக்கேன்.

கூடல் பாலா சொன்னது…

@ வவ்வால்

என் பதிலில் தாங்கள் திருப்தியடையாமைக்கு காரணம் என்னை நீங்கள் நம்பாமல் இருப்பதுதான்....உங்கள் சந்தேகம் தெளிய கூடங்குளம் பகுதிக்கு நேரடியாக வந்து சாதாரண மக்களிடம் விசாரியுங்கள் ...உண்மையை அறியுங்கள் ...நன்றி !

பெயரில்லா சொன்னது…

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் முடிவுகள் இருக்கும்.இப்போதைய மக்களின் போராட்டம் ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே அதிகரித்துள்ளது.ஓரிரு மாத ஆலோசனைகளுக்கு பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டது.இத்தனை வருடங்கள் இல்லாத அளவு போராட்டம் நடைபெற வளர்ந்துவிட்ட மீடியாவும் காரணம்.வெளிநாட்டுப்பணம் எல்லாம் கற்பனை.போராட்டத்தை திசைதிருப்ப,அப்பாவிகளை அசிங்கப்படுத்த செய்யும்செயல்.இப்பதிவு ஜூவி யில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.தமிழ்மணம் காபி பேஸ்ட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளதை நினைவூட்டுகிறேன்.பூவுலகின் நண்பர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

James சொன்னது…

பாலபிரஜாபதிஅடிகள் அணுஉலை எதிர்ப்பாளர்.நல்ல பேச்சாளர்.அவர் சொல்வதுபோல் பெரும் கூட்டத்தை கூட்ட அவரை யாரும் பயன்படுத்தவில்லை.இங்கு கூடுகிற கூட்டம் எந்த பேச்சாளருக்காகவும் கூடுகிற கூட்டம் இல்லை.உயிரைக் காக்க நடக்கும் போராட்டம். கூடியிருந்த பெரும் கூட்டங்களில் ஒருவேளை பேச்சாளர்கள் பேசியிருப்பர்.அக்டோபர் இரண்டில் சாமிதோப்பில் லட்சகணக்கான மக்களை கூட்டி அணு எதிர்ப்பு மாநாடு நடத்தப்போகிறேன் என்று அவரே மேடையில் அறிவித்தார்.மக்கள் அவரை சாமி என்று இருக்கை கூப்பி மரியாதை செய்தனர்.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை மாநாடு நடத்தப்படவில்லை. ஆனால் குழப்பமான பேட்டிகள் வெளிவந்தது ஆனாலும் அனு எதிர்ப்பாளரான அவருக்கு மக்கள் இன்றும் அனு எதிர்ப்பாளராக மரியாதை கொடுக்கின்றனர். கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்தால் அதை அவரே பேசி தீர்த்திருக்கலாம்.பேட்டிகளை கொடுத்திருக்க வேண்டாம்.ஒன்று மட்டும் நிச்சயம் செப்டம்பர் 17 அன்று கூடங்குளத்தில் மேடையில் அவர் பேசிய பேச்சிற்கு அப்புறம் பெரும்பான்மையான மக்களின் அணு உலையை நிறுத்தமுடியும் என்ற நம்பிக்கைக்கு வலு சேர்த்தது என்பதை மறுக்க இயலாது. மக்களை உற்சாகப்படுத்தியது . அனு எதிர்ப்பாளரான அவர் இன்றும் அணுவிற்கு ஆதரவாக பேசவில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.அவர் சொல்வதுபோல் கடற்கரை மக்களை முன்னிருத்துகிறார்கள் என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். யாரும் யாரையும் முன்னிறுத்தவில்லை. நான் கடலோரம் சார்ந்தவனல்ல. போராட்டக்களத்தில் போராட துணிந்து நிற்கிறவன் கடலோரத்தானதானே. அவன் உணர்ந்து போராட வருகிறான் . யாரும் யாரையும் போராட அழைக்கவில்லை.உணர்வுள்ளவர்கள் கூட்டமாக வருகிறார்கள். இதில் சாதி,சமய பாகுபாடு இல்லை. ஒரு காலமும் இருக்கவும் செய்யாது. போராட்டத்தை முன்னின்று நடத்துகிற உதயகுமார் கடலோரத்தானா? அவரும் இந்து நாடார் இனத்தை சார்ந்தவர்தானே. தயவு செய்து சதி,சமய பிரிவினை வாதங்களை ஏற்படுத்தாதீர்கள். இன்னொன்று திடீர் திடீர் என போராட்டம் அறிவிக்கிறார்கள் என்று. இது சிறுபிள்ளைத்தனமானது. போராட்டங்கள் ஐந்து ஆண்டு திட்டம் போல் திட்டம் போட்டு செய்வதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப போராட்டக்களம் போராட்ட யுக்திகள் மாறும். மாறவேண்டும். கூடன்குளம் மறியல் போராட்டம் போராட்டகுழுவின் ஒப்புதல் பெற்று நடைபெற்றதல்ல. கூடன்குளம் பெண்களே யாரும் அனுமின்வளாகதிற்குள் வேலைக்கு செல்லகூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அவர்களாகவே ஆரம்பித்தது. அந்த போராட்டம் சுமுகமாக வெற்றியை நோக்கி நகந்தது. அதனால் தொடர்ந்தது. வெற்றியைத் தந்தது. ஜனநாயக கடமையை ஆற்றும் பொருட்டு தேர்தல் அன்று ஒருநாள் இடைவெளி விடப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களால் மத்திய அரசின் நடவடிக்கையே மக்களை போராட வைத்தது என்று சொல்ல வைத்தது. போராட்ட களத்தில் நானும் உங்களில் ஒருத்தி என்றும் சொல்ல வைத்தது. இந்த போராட்டம் வெல்லும். அதில் எல்லாரும் பங்கு பெறவேண்டும்.பாலபிரஜாபதிஅடிகளும்.

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

நன்றி MANO நாஞ்சில் மனோ,

பாலோயர் விட்ஜெட் இணைக்க முயற்சி செய்தால் கீழ்கண்ட குறிப்பு வருகிறது. என்ன செய்யலாம்?


This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!

அருள் சொன்னது…

//This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!//

இப்படி ஒரு சிக்கல் சில வலைப்பூக்களில் ஏற்படுவது உண்மைதான்.

http://www.google.com/friendconnect

- ஐ இணையுங்கள்

கருத்துரையிடுக