புதன், அக்டோபர் 12, 2011

ஜப்பான் அணு உலை விபத்து - பாடம் கற்க மறுக்கும் இந்தியா

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும் அதனைத் தொடர்ந்த அணுஉலை விபத்தும் உலகம் முழுவதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. புகுசீமா அணு உலை விபத்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடுமையான கதிர்வீச்சுக்கு உட்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புகுசீமா அணு உலை விபத்து பல நாடுகளின் அணு உலைகளை மூடவோ அல்லது அத்திட்டங்களை கைவிடவோ அல்லது பரீசிலிக்கவோ ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.


 அணு உலை விபத்து ஏற்பட்ட ஜப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூட வைத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி கொள்கையானது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 சுவிட்சர்லாந்து புது உலைகளை கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.

 ஜெர்மனியானது 17 உலைகளை கலைப்பதை தாமதிப்பது என்ற முடிவை தள்ளிப்போட்டுள்ளது

 சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

 அமெரிக்காவில் டெக்சாஸில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு பெரிய உலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 95 விழுக்காடு மக்கள் அணு உலைகள் அமைப்பதை எதிர்த்துள்ளனர்.

 பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 62 விழுக்காடு மக்கள் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 15 விழுக்காடு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

 ஐரோப்பிய நாடுகளில் இன்னும் செர்னோபிள் அணு உலை விபத்தின் அதிர்ச்சியிலிருந்தே மீளாத நிலை உள்ளது.

 அணு உலைக் கம்பெனியான அரெவா திவாலாகும் நிலையில் உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இக்கம்பெனியின் உலைகள் தோல்வியடைந்து விட்டன. இது தொடர்பாக கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 9 மாதகாலமாக அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவில் கடந்த 1973லிருந்தே எந்த புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.

இதெல்லாம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் ஜப்பான் அணு உலை விபத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். ஆனால் இந்தியாவில் எந்தவித சிறு சலனத்தையும் கூட ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த விபத்து ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக, இருக்கின்ற அணு உலைத்திட்டங்கள் விரிவாக்கப்பட உள்ளன. புதிய திட்டங்களும் வரவிருக்கின்றன. தற்போது கூடங்குளத்தில் இரண்டு மென்ரக நீர் ஈவு உலைகளிலும் (ஒவ்வொன்றிலும் 1000 மெகாவாட் மின்சக்தி தயாரிக்க கூடியவை), ராஜஸ்தானில் ரவாபாட்டா என்ற பகுதியிலும் குஜராத்தில் காக்ரபூரிலும் ஆக இரு கனரக நீர் ஈவு உலைகளும் (ஒவ்வொன்றும் 700 மெகாவாட் தயாரிக்கக் கூடியவை)நிறுவப்படுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 5 உலைகள் ஐந்து இடங்களில் வர உள்ளன.

அணுசக்தி குறித்த அனைத்து விசயங்களுக்கும் நிறுவனங்களுக்கும் பெருங்குடை போன்ற அமைப்பாகத் திகழ்கின்ற அணுசக்தி கழகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லாமல் இரகசியமாகவே உள்ளன. அணுசக்தி ஒழுங்குபடுத்தும் வாரியத்தின் பணி, அனைத்து அணுஉலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுதான். கதிரியக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பொது மக்களுக்கு தகவல் அளிப்பதும் இந்த அமைப்பின் முக்கிய பணியாக உள்ளது. ஆனால் அந்தப் பணியினை மேற்கொள்ளாமல் அலுவலக ரகசிய சட்டத்தைப் பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் தேசப்பாதுகாப்பு என்று கூறி தர மறுக்கிறது. அணு உலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்பட அனைத்தையும் ரகசியமாகவே பாவிக்கிறது.

அணுசக்தி உலைகள் யாருக்கும் கட்டுபடாதவை. நாட்டின் உயரிய ஆட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் கூட அணுஉலையின் செயல்பாடுகள், அதன் முதலீடு, செலவுகள் மற்றும் அங்கு நடக்கும் விபத்துகள் குறித்து பேச முடியாது. எந்த மக்கள் பிரதிநிதியும் அவ்வளவு ஏன் அமைச்சர் கூட கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் ஜனநாயகத்துடன் செயல்படுவதற்கு அங்கு இடமில்லை. எல்லாவற்றையும் நாட்டின் பாதுகாப்பு என்பதற்குள் அடக்கி சர்வ அதிகாரத்துடன் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புகளை திறந்த வெளிப்படையான அமைப்பாக செயல்பட வைக்க 1993ல் அணு சக்தி ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிருந்தே போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக அமைப்பை ஒரளவுக்கு வெளிப்படையாக செயல்பட வைத்தார். சில காலம் வெளிப்படையாக செயல்பட்டதால் அணு உலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் வெளியே தெரிய வந்தன. 1995ல் இவ்வமைப்பு பாதுகாப்பு குறித்த ஒரு கணக்கு தணிக்கையை நடத்தியது. அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த தணிக்கையில் அணு உலைகளில் உள்ள 134 பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டன. இதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய 95 பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டன. இந்த அறிக்கையை வெளியிட மக்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். அறிக்கையை வெளியிட்டால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அணு உலை அமைப்பு மறுத்துவிட்டது. இதனைத் தெடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அணு உலை கழகத்தின் தேசிய பாதுகாப்பு வாதமானது உறுதி செய்யப்பட்டது.

அணு உலைக்கழகமானது 134 பாதுகாப்பு பிரச்சினைகளில் 119 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும் இதில் முதன்மையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. முக்கியமாக கோபாலகிருஷ்ணன் அறிக்கை அணு சக்தி உற்பத்திக்குப் பின்னர் மூல எந்திரங்களை குளிர்விக்கும் அமைப்புகளில் கடுமையான குறைபாடுகளும் பலவீனங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்சினையால்தான் புகுசீமாவில் பேரழிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா அணு உலைகளிலும் பேரழிவை விளைவிக்கும் கதிரியக்க அபாயத்தை தவிர்க்க முடியாது. அதன் கழிவுகளை பூமிக்கு அடியில் எத்தனை அடி ஆழத்தில் புதைத்து வைத்தாலும் அந்த கழிவுகளில் உள்ள கதிரியக்கமானது பல ஆயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அணு உலை கழிவுகளை என்ன செய்வது என்ற பிரச்சினை உலகம் முழுவதும் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக இன்னும் நீடிக்கிறது. அணு உலைக் கழிவுகளை பராமரிக்கும் செலவு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதால் மட்டுமே பல நாடுகளில் அணு உலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அணு உலைகளில் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் கதிரியக்க கசிவுகளும் தவிர்க்க முடியாதது. அணு உலைகளில் ஏற்படும் கதிரியக்கமும் உலைகளில் ஏற்படும் விபத்துகளினால் ஏற்படும் பாதிப்பையும் விரிவாக இங்கு காண்போம்.

அணு சக்தி உற்பத்தி

முதலில் அணுப்பிளவின்போது வெளிப்பட்ட வெப்பத்தை தேவையற்றதாக கருதப்பட்டது. அதை பயன்பாடு அற்றது என்று அறிவியலாளர்கள் கருதினர். 1940வரை அணு உலைகளை புளுட்டோனியம் மட்டுமே தயாரிக்கப் பயன்படுத்தினர். அப்புளுட்டோனியம் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என சொல்லத்தேவையில்லை. இந்த சூழ்நிலையில் 1940களின் கடைசியில் மலிவான புதைபடிவ எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. அப்போது அணு உலைகளில் வெளியாகும் வெப்பத்தின் மூலம் நீரை நீராவியாக்கி அதன்மூலம் சுழலிகளைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அணுப்பிளவு தொடர்ச்சியாக நடைபெறும்போது தோன்றும் வெப்பத்தால் நீர் சூடாக்கப்பட்டு, நீராவியாக மாற்றப்படுகிறது. அந்த நீராவியைக் கொண்டு மாபெரும் சுழலிகள் சுழலச்செய்யப்படுகின்றன. அச்சுழலிகளின் சுழற்சியால் மின்இயற்றி மூலம் மின்ஆற்றல் உருவாகிறது. சுழலியைச் சுழலச்செய்த பிறகு அந்நீராவி கடல் மற்றும் நதி நீரால் இயங்கும் குளிர்விப்பானால் மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. அந்நீர் மீண்டும் உலைக்களத்திற்குள் செலுத்தப்படுகிறது. அணு உலையின் மையப்பகுதி மிகுந்த வெப்பத்தால் உருகி விடும் அபாயத்திற்கு அணு உலை உருகுதல் என்று அழைக்கப்படுகிறது. முக்கியமான குளிர்விக்கும் குழாய் அடைபடும்போது அல்லது உடைந்து விடும்போது மையப்பகுதியின் வெப்பம் கணிசமாக‌ உயர்ந்து விடும். அச்சமயங்களில் ஆபத்துகால குளிர்விப்பான் உடனே வேலை செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக இவை வேலை செய்வதில்லை. அக்குளிர்விப்பான்கள் தகராறு செய்யும்போது எரிபொருள் குழாய்கள் முதலில் உருகுகின்றன. பின் எரிபொருளே உருகுகின்றது. மையப்பகுதிகள் முழுவதும் சூடான கதிரியக்க வாயுக்களால் சூழப்படுகிறது. உருகிய எரிபொருள் அழுத்தத்தால் எரிகிறது. நீராவி வெடித்துக் கிளம்பி கூரையை உடைத்து உள்ளிருப்பவைகளை வெளியே தூக்கி எறிகிறது. உருகிய யுரேனியம் கீழ்ப்பகுதியை பொசுக்கி பூமிக்குள் இறங்குகிறது. இதில் உள்ள மாபெரும் கதிரியக்க அபாயம் வாயு வடிவத்தில் இருக்கும் அணு பிளவுப் பொருட்கள்தான்.

அணு உலைக்கசிவுகள் ஒருபுறமிருக்க, இது தான் அடிக்கடி ஒரு அணு உலையில் விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு அணு உலையின் கசிவைப் பொருத்தவரை அதிலுள்ள கதிரியக்கம் பல ஆயிரம் மக்களை கொல்ல முடியும்.

கதிரியக்கம் என்றால் என்ன?

கதிரியக்கத்தை கண்ணால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. நுகர முடியாது. அதை திரும்பிப்போ என்று கட்டளையிடவும் முடியாது. பரவி விட்டால் அதை உணர முடியாது. அவை மனித உடலில் நுழைந்து திசுக்களை அழித்து மரபுக் கூறுகளை ஏப்பம் விட்டபின்னர்தான் தெரிய வரும். அதற்குள் காலம் கடந்து விடும். அணு உலை உருகுவதன் மூலம் கதிரியக்கம் பயங்கரமாக பரவி பேரழிவை உருவாக்கும்.

இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. அதன் வீரியம் 2,40,000 ஆண்டுகள் வரை கூட மங்காமல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அது உயிர் உள்ள இனங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் எல்லாவற்றிலும் பரவுகிறது. பல நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க இருக்கும் குழந்தைகளைக் கூட இது பாதிக்கும்.

அணு உலை என்றாலே கதிரியக்கம்தான். கதிரியக்கம் அணு உலைகளில் அணுவைப் பிளக்கும் போதிலிருந்து தொடங்குகிறது. அதை குளிர வைக்கும் நீரில் கலந்து அந்நீர் வெளியேற்றப்படும்போது, தானும் வெளியேறி பரவுகிறது. எரிபொருள் கழிவான புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் மிகுந்த கதிரியக்கம் கொண்டவை. தேவையற்றவை என புதைக்கப்படும் கழிவுகளின் கதிரியக்கத்தின் தன்மை பல ஆயிரம் ஆண்டுகள் வரை அப்படியே நீடிக்கக் கூடியது. அணு சக்தி உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் இந்த அணு கதிரியக்கம் தவிர்க்க முடியாதது.

அணு உற்பத்தியின் முதல் நிலையான யுரேனியத்தை சுரங்கம் தோண்டி எடுக்கும்போது (இந்தியாவில் மேகாலயாவிலுள்ள மேற்கு காசி மலைகள்) ஏற்படும் உதிரிக்கழிவுகளிலுள்ள கதிரியக்கம் எத்தனை ஆண்டுகாலம் நீடிக்கும்? இக்கழிவுகளிலுள்ள கூறுகள் முறையே ரேடியம்-226, மற்றும் தோரியம்-236 (இது போன்ற எண்கள் அணுக்கூறுகளின் தனித்தன்மையை குறிப்பிடுபவை) தோரியம் உள்ள கழிவுள்ள கதிரியக்கம் அதன் பாதி வீரியம் மறைவதற்கு 76000 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் எந்த சுரங்க முதலாளி இதைப்பற்றி கவலைப்படபோகிறான்?

இரண்டாவது நிலையில், அணு உலையிலுள்ள கம்பிகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகும் தேய்மானத்திற்காக இரசாயனங்களில் சுத்திகரிக்கப்படுகின்றன. கம்பிகளுள்ள கதிரியக்கக் கூறுகள் ஸ்ட்ரான்டியம்-0, சீசியம்-137மற்றும் புளுட்டோனியம் ஆகும். இதில் இரண்டு வகை உள்ள புளுட்டோனியக் கூறுகள் முறையே புளுட்டோனியம்-239 மற்றும் புளுட்டோனியம்-242 ஆகியவை உள்ளன. முதல்வகை புளுட்டோனியத்தின் பாதி வீரியம் மறைவதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளும் இரண்டாம் வகை புளுட்டோனியத்தின் வீரியம் மறைவதற்கு 3,80,000 ஆண்டுகள் ஆகும். இவ்வகை புளுட்டேனியத்தின் 10 ஆயிரத்தில் ஒரு பங்கை மனிதன் சுவாசித்தால் மரணத்தை விளைவிக்கக்கூடிய புற்றுநோய்கள் உருவாகும்.

ஐப்பானில் புகுசீமாவில் ஏற்பட்ட அணு உலைவிபத்திற்கு பின்னர் உடனடியாக அரசு அதிகாரிகள் 2 இலட்சம் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனித்தனியாக கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டனரா என்று பரிசோதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் இப்படிப்பட்ட விபத்துகள் அணு உலைகளில் நிகழ்ந்தால் இங்கு அவற்றை எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது?

இங்கு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்தும் தமிகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவைத் தொடர்ந்தும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும் பேரிடர் மேலாண்மை அமைப்பும் அதற்கான வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டன. தேசிய அளவிலும மாநில மற்றும் மாவட்ட அளவிலும் பேரிடர்களை எதிர்கொள்ள அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பயிற்சிகளும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. சுனாமிக்குப் பின்னர் சிலகாலம் வரை நடைபெற்ற இவை இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க இத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களோ மருத்துவமனைகளோ இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய விசயம். உலக நாடுகளே அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்த பின்னரும் இந்தியா விடாப்பிடியாக அணு உலைகள் என்ற பெயரில் மக்களுக்கு சமாதி கட்ட தயாராகி விட்டது.

பொருளாதார இழப்பு தொடர்கதையாகும்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தந்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவிற்கு இலாபம் என்ற வாதங்கள் முற்றிலும் கலப்படமற்ற பொய்களே. ஒப்பந்தம் 2005லிருந்தே 5 ஆண்டுகளாக முன் வைக்கப்படும் குழப்பமான பேச்சுவார்த்தைகள் பயமுறுத்துகின்ற தொழில்நுட்ப பதங்கள் அடிப்படையான விசயங்களை மறைக்கின்றன. இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பெரும் இழப்பு, இறையாண்மையே பறிபோகும் அரசியல் பின்னணி, பல கோடி மக்களை வறுமையில் ஆழ்த்தி விட்டு இந்திய ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதி இதற்கெல்லாம் மேலாக நமக்கும் எதிர்காலச்சந்ததியினருக்கும் அணுசக்தி உற்பத்தி ஏற்படுத்தப்போகும் பாதிப்பு-இவற்றை மறைக்கின்றனர்.

"நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதற்கான மூலப்பொருள் யுரேனியம் நம் நாட்டில் இல்லை. யுரேனியத்தை அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால் இந்த ஒப்பந்தத்தை செய்தே ஆகவேண்டும். அணு சக்தியை தயாரிக்க விட்டால் நம் நாடு பின்தங்கி விடும். உலக நாடுகளிலிருந்து தனிமைப்பட்டு விடுவோம்" என்றெல்லாம் இந்த ஒப்பந்தத்திற்கான ஆதரவாளர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் துளி அளவு கூட உண்மைகள் இல்லை. காலங்காலமாக அணுசக்தி கழகத்தினால் இந்த பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகா வாட். இதில் நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 விழுக்காடு, அணைகளில் மற்றும் நீர் வீழ்ச்சிகளினால் உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சாரம் 26 விழுக்காடு, சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற வழிகளில் கிடைக்கும் மின்சாரம் 5 விழுக்காடு. அணு உலைகளில் மூலம் பெறப்படும் மின்சாரம் வெறும் 2.5 விழுக்காடுதான்.

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்சக்தியின் அளவை 6 விழுக்காடாக அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இப்போது சூரிய சக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கீடு தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 விழுக்காடு மின்சாரத்தை தந்து விடுகின்றன. இப்போது அணு சக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி ரூபாய். ஆனால் அவை தருவது 2.5 விழுக்காடு மின்சாரம் தான்.

இங்கே யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பது அரசு திட்டமிட்டு அளிக்கும் தவறான தகவல். அடுத்த 40 ஆண்டுகளில் மின்சாரம் மற்றும் அணு ஆயுத உற்பத்திற்கும் தேவைப்படும் யுரேனியத்தைப் போன்ற மூலப்பொருளான தோரியம் 25 ஆயிரம் மெட்ரிக் டன்களுக்கும் மேலாக உள்ளது. உலகிலேயே ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக நம்மிடம்தான் சுமார் 3 லட்சம் அளவு டன்கள் அளவு தோரியம் உள்ளது. இதை வைத்து 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழிற்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவியலாளர்கள் உருவாக்கியாற்று. இதை அடுத்த 40 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்துவதுதான் அணுசக்தி துறை வைத்திருந்த திட்டம். அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

இப்போதுள்ள அணுசக்தித் துறையின் திட்டப்படி இன்னும் 25 ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டாலும் நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின் தேவையில் 9 விழுக்காட்டை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால் ஒரு அணு உலையை நிர்மாணிக்கும் செலவு அதிகரிக்கும். அணு உலை நிறுவிட 9 கோடி செலவாகும். மன்மோகன் சிங் உத்திரவாதமளிக்கும் 20 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரத்திற்கு செலவிடப்போகும் தொகை 20 லட்சம் கோடி. அதாவது ஒரு ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு இந்த ஒப்பந்தத்தின்படி 10 கோடி ரூபாய் ஆகும். நீர் ஆற்றலை பயன்படுத்தினாலும் காற்றாலையை பயன்படுத்தினாலும் நாம் ஏராளமான மின்சாரம் தயாரிக்க முடியும். இமாலயப் பகுதியிலிருந்து மட்டும் இவ்வாறு ஆண்டு தோறும் 1.5 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும். ஆந்திராவில் நீர் ஆற்றலைப் பயன்படுத்தி 50 முதல் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாராம் தயாரிப்பது அணு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை விட செலவு குறைவானது; மிகவும் பாதுகாப்பானது. நாம் எந்த நாட்டிற்கும் அடிபணிய வேண்டியதில்லை.

- சேது ராமலிங்கம்

( msethuram61@gmail.com)

Courtesy: Keetru.Com

1 கருத்து:

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

புகுஷிமா பகுதிவாழ் மக்களின் சிறுநீரிலும் கதிரியக்க பாதிப்பு..!
Fukushima residents' urine now radioactive (DO WE NEED MORE?)

http://search.japantimes.co.jp/cgi-bin/nn20110627a2.html

கருத்துரையிடுக