திங்கள், மே 23, 2011

புகுஷிமா அணுஉலை வெடிப்பு: வழிபயக்கும் ஊதியம்

1

அண்மையில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்திலுள்ள மான்மத் பல் கலைக்கழகத்தில் உள்ளுறை வல்லுநராகத் (Scholar-in-Residence) தங்கியிருந்தேன். அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் என்னைச் சந்தித்து அத்துறையின் பேராசிரியர் ஒருவருக்கு ஒரு பெரும் சிக்கல் எழுந்திருப்பதாகச் சொல்லி, அவரது வகுப்புகளை நான் முன்னெடுத்து நடத்த முடியுமா எனக் கேட்டார். அவரது இரண்டு வயது பச்சிளங்குழந்தைக்கு ஒரு கண்ணின் பின்பகுதியில் கட்டி ஒன்று வளர்ந்துகொண்டிருப்பதாகவும் அது புற்று எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதால், அக்குழந்தைக்கு வேதியியல் சிகிச்சையும் அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விளக்கினார். இரண்டே வயதான ஓர் இளம் பிஞ்சுக்கு இப்படி ஓர் இன்னலா என உறைந்து நின்றேன் நான். அந்தப் பேராசிரியரைச் சந்தித்து என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டுமெனத் திட்டமிட்டு விட்டு, குழந்தையைப் பற்றி விசாரித்தேன். கண்கள் பனிக்க, நா தழுதழுக்க சன்னமான குரலில் நிறுத்தி நிறுத்தி நிதானமாகப் பேசினார். ஒரு தந்தையின் அன்பும் கரிசனமும் கவலையும் பயமும் அவர் பேச்சில் விரவிக் கிடந்தன. அவர் வசிக்கும் நகரத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் குழந்தைகள் பலர் மூளைப் புற்றால் (brain tumor) பாதிக்கப்படுவதைச் சொன்னார்.

வடக்கே நியூயார்க் நகரமும் தெற்கே பிலடெல்ஃபியா நகரமும் தாங்கள் வெளியிடும் மாசுக்களோடு நியூஜெர்ஸியை நெரித்துக்கொண்டிருக்க, ஏராளமான மருந்து, மாத் திரை தயாரிக்கும் நிறுவனங்களின், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளின், ஆயிஸ்டர் க்ரீக் (Oyster Creek) அணுமின் நிலையத்தின் நச்சுக்களோடு இம்மாநிலம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நியூஜெர்ஸி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இதுபோன்ற ஒரு நெருக்கடிக்குள் பயணிப்பதாகவே உணர்கிறேன். பொருளாதார வளர்ச்சி, தனி மனித வருமான உயர்வின் காரணமாக உற்பத்தித்திறன் அதிகரிக்கும்போது, கனிம வளங்களின், ஆற்றலின் தேவைகளும் அதற்குள்ளவாறு உயர்கின்றன. சுற்றுச்சூழலும் உலக வளங்களும் இன்னும் அதிகமான பாதிப்புக்குள்ளாகின்றன. வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பட்ட வாழ்க்கை முறை, உலகமயமாக்கல், முகிழ்க்கும் நாடுகள் (emerging countries) என்றெல்லாம் வலிமைமிக்க தரப்பு, இறுமாப்புகொள்ளும்போது, என்ன நடக்கிறதென்றே தெரியாத, ஏன் துன்புறுகிறோம் என்றே புரியாத மனித உயிர்கள் மறுபக்கம் பரிதவிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எடுத்துக்காட்டாக, தங்களின் வீணான வாழ்க்கை முறையால் தொழில்வளமுற்ற நாட்டுமக்களும் எஞ்சிய நாடுகளின் மேட்டுக்குடியினரும் பருவநிலைச் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றனர். கரியமில வாயுக்கள் அதிகரித்து, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, புவி வெப்பமாகி, துருவப் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, கடலரிப்பு ஏற்படும்போது, இந்தச் சீரழிவோடு முன்பின் தொடர்பேயில்லாத ஏழை மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நவீன வளர்ச்சி சித்தாந்தத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதென்றால், வள்ளுவம் குறிப்பிடுவதுபோல

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

எனச் செயல்படலாம். இந்த வளர்ச்சி சித்தாந்தத்தின் வெளிப்பாடுகளான வளர்ச்சித் திட்டங்களை இன்னும் நுணுக்கமாக அளக்க வேண்டும்.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

எனும் வள்ளுவத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது, இத்திட்டங்களின் ‘வழிபயக்கும் ஊதியம்’ வன்முறை தோய்ந்ததாகவே, வாழ்க்கையைச் சிதைப்பதாகவே, வாழ்வுரிமைகளைச் சீரழிப்பதாகவே இருப்பதைக் காணலாம்.

அரசக் கட்டமைப்புகளாலும் அணுசக்தித் துறைகளாலும் அணு மின் திட்டம், நவீன வளர்ச்சித் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. அழிவது எதுவுமேயில்லை என்பது தான் அவர்களின் வாதம், நிலைப்பாடு. அணுமின் நிலையங்களில் பெரும் விபத்துகளோ இதர நிகழ்வுகளோ நடக்க வாய்ப்பேயில்லை என அடித்துக் கூறுகின்றனர். தீவிரவாதத் தாக்குதல்களோ போர்க்கால நடவடிக்கைகளோகூட அணுமின் நிலையங்களை அசைக்க முடியாது என்கின்றனர். அணுமின் நிலையங்களிலிருந்து புகைப்போக்கிகள் வழியாகவோ உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தும் தண்ணீர் மூலமாகவோ வேறு வழிகளிலோ குறிப்பிடப்படும்படியான அளவில் கதிர்வீச்சு வெளியேறுகிறது என்கின்றனர். அப்படிக் கதிர்வீச்சு நிகழ்ந்தால், அனுமதிக்கத் தகுந்த அளவுக்குள்ளேயே (Permissible limits) இருப்பதாகச் சமாளிக்கின்றனர். புகுஷிமா நிகழ்ந்த பிறகு, இந்தியப் பிரதமரும் (அணுசக்தித் துறை அமைச்சரும் இவர்தான்), அணுசக்தித் துறைத் தலைவர்களும் சொல்லும் கதைகள் இன்னும் வேடிக்கையாக இருக்கின்றன.

பிரதமர் சொல்கிறார்: “இந்திய அணுசக்தித் துறையும் இந்திய அணுமின் கழகமும் பிற நிறுவனங்களும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் விதத்தில் நமது அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.” (இந்து, மார்ச் 15, 2001). இதற்கு என்ன அர்த்தம் என்பது அவருக்காவது தெரியுமோ என்னவோ? வெற்றுப் பேச்சு! இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் சிறீகுமார் பானர்ஜி பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜப்பானில் நடப்பது வெறும் வேதியல் வெடிப்பே தவிர அணுசக்தி வெடிப்பல்ல (chemical explosion and not a nuclear explosion) என்று திருவாய் மலர்ந்தருளினார். இம்மாதிரியான மழுப்பல்களும் மறுத்தல்களுமாகவே கதையை நடத்திவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது அணுசக்தித் துறையும் அரசும்.

ஆக மொத்தம் அணுமின் நிலையங்கள் அழிவேதும் ஏற்படுத்தியதேயில்லை, ஏற்படுத்தவுமில்லை, ஏற்படுத்தப் போவதுமில்லை என்பது அணுசக்தித் துறையின் நிலை. அணுமின் நிலையங்களிலிருந்து வெளிப்படும் கடைத்தரக் கழிவுகளைக் கடலுக்குள் கொட்டிக் கையைக் கழுவிவிடும் துறை உயர்தர, இடைத்தரக் கழிவுகளை எப்படிக் கையாளப்போகிறது, எங்கே வைத்துப் பாதுகாக்கப் போகிறது என்பது பற்றியெல்லாம் பேசுவதேயில்லை. அணுஉலைகள் 40 - 50 ஆண்டுகள் மின்சாரம் தயாரித்து முடித்த பிறகு அவற்றைச் செயலிழக்கச் செய்து நிர்வகிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது அணுசக்தித் துறை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

1978 மூன்று மைல் தீவு விபத்துக்குப் பிறகு அமெரிக்காவும் 1986 செர்னோபில் விபத்துக்குப் பிறகு ரஷ்யாவும் தங்கள் நாடுகளில் புதிய அணுமின் நிலையங்களை நிறுவவில்லையே? ஜெர்மனி உள்ளிட்டப் பல முன்னணி தொழில்மயமான நாடுகள் அணுமின் தொழில்நுட்பத்தையே ஐயத்தோடும் அச்சத்தோடும் கண்ணுறுகின்றனவே? இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் அந்நாடுகளின் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டிக்கொடுக்கவும் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும்தானே முக்கியமாக முனைகின்றன? உயர்நிலை விஞ்ஞானத் தொழில்நுட்பப் பேருதவி என்னும் பெயரில் அணு வாயு தங்கள் தயாரிப்பில் மறைமுக மாக உதவி சீனாவையும் நம்மையும் ஆயுதப் போட்டியில் சிக்கவைத்துத் தனது ஏகாதிபத்தியத்தை இடைஞ்சல் ஏதுமின்றித் தொடர அமெரிக்கா திட்டமிடுகிறதோ? பருவ நிலைச் சீரழிவுக்கு ஒரே பதில் அணுமின்சாரம் என்பது பொய்யல்லவா? அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குத் தேவையான அளவற்ற எஃகு கம்பிகளும் சிமெண்டும் மின்சாரமும் மாசுபடுத்தும் ஆற்றலிலிருந்துதானே பெறப்படுகின்றன? மாசுபட்ட காற்றுக்கு மாற்று கதிர் வீச்சு விஷம் கலந்த காற்றும் கடலும் நிலமும் என்பது மடமையிலும் மடமையல்லவா? இன்னபிற கேள்விகளைக் கேட்டால் கேட்பவரின் நன்னடத்தையை, நாட்டுப்பற்றைக் கேள்விக்குள்ளாக்குவது ஏன்?

அணுமின் நிலையங்களால் ஆவதுதான் அதிகமென்கின்றனர் அரசும் அணுசக்தித் துறையும். நிறுவப்பட்ட 1948ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கணக்குவழக்கின்றி எண்ணிறந்த கோடிகளை விழுங்கி ஏப்பம்விட்ட பிறகும் கேள்விகள் கேட்பாரின்றி மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகத் தின்று கொழுத்திருக்கும் இந்திய அணுசக்தித் துறை இன்றுவரை சாதித்திருப்பது என்ன தெரியுமா? வெறும் 4780 மெகாவாட் மின்சாரமும் உண்மையிலேயே வெடித்தனவா எனும் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் அணுகுண்டுகளும்தாம். 2000ஆம் வருடத்துக்குள் 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்போம் என்றும் 2020ஆம் வருடத்துக்குள் 40,000 மெகாவாட் மின்சாரம் கரைபுரண்டு ஓடுமென்றும் வாக்குறுதிகள் மட்டுமே வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. 1998ஆம் ஆண்டின் அணுவாயுதப் பரி சோதனைகளுக்குப் பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பே எங்களால்தான் சாத்தியமாயிற்று என்று மார்தட்டிக்கொள்ளும் அணுசக்தித் துறை, இவ்வாயுதங்களால் எழுந்த கார்கில் யுத்தத்தை, கனத்த பல தீவிரவாதத் தாக்குதல்களை, எந்தவிதத்திலும் உதவமுடியாதிருக்கும் தங்கள் ஆயுதங்களின் இயலாமையை அப்படியே மறைத்துவிடுகின்றனர். அத்தைக்கு மீசை முளைக்கும் பார், அவளை நான் ஆசையோடு சித்தப்பாவென்றழைப்பேன் பார் என்ற கதைதான் அணுசக்தித் துறையில் இன்றுவரை நடந்துவந்திருக்கிறது.

2

அழிவதே இல்லை, ஆவதே அதிகம் என்று கொண்டால்கூட, ‘வழிபயக்கும் ஊதியம்’ என்று ஒன்றைச் சொல்கிறாரே வள்ளுவர்? “விபத்தேதும் நடக்காது, நடக்க முடியாது” என்ற வெற்றுப் பேச்சுகளையும் வெறும் வாய்ச்சொற்களையும் பொய்யாக்கி, மார்ச் 11ஆம் தேதி மதியம் 2:45 மணிக்கு ரிக்டர் அளவு 9 கொண்ட பயங்கரமான நிலநடுக்கம் வட ஜப்பானைத் தாக்கி 10 மீட்டர் உயரமான சுனாமி அலைகளை உருவாக்கியது. அமெரிக்க ரியாக்டர்களுடனும் ஜப்பானியத் தொழில்நுட்பத்துடனும் மேலாண்மையுடனும் இயங்கிக்கொண்டிருந்த புகுஷிமா அணு உலைப் பூங்கா தாக்குதலுக்குள்ளாகியது.

மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட இந்த அணுஉலைகளில் முதல்நிலைப் பாதுகாப்பு செவ்வனே வேலை செய்தது. நிலநடுக்கம் நடந்ததும் எரிகோல்கள் மூடிப்பாதுகாக்கப்பட்டன, அணு வினை நிறுத்தப்பட்டது. எனினும் எரிகோல்கள் வெப்பத்தை உமிழ்ந்துகொண்டுதானிருந்தன. எனவே ரியாக்டரைச் சுற்றியுள்ள குழாய்கள் வழியாகத் தண்ணீரைச் செலுத்தி அது குளிரூட்டப்பட வேண்டும். நிலநடுக்கத்தால் நிகழ்ந்த மின்தடை காரணமாகக் குளிரூட்டும் செயல் தடைபட்டது. ஆனாலும் டீசல் ஜெனரேட்டர்களால் இயக்கப்படும் குளிரூட்டு அமைப்பு இயங்கத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து சுனாமி அலைகள் தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் செயலிழந்துபோயின. ஆனால் பாட்டரிகள் எட்டு மணி நேரம் செயலாற்றிய பிறகு நின்று போயின. மூன்றாம் கட்ட ஏற்பாடு தொடர்கிறது. குளிரூட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர் சூட்டால் நீராவியானாலும் அதையே மீண்டும் தண்ணீராக்கிச் சுற்றவிடுவது, நடந்துகொண்டிருந்தது. ஆனால் தண்ணீரின் அளவு வேகமாகக் குறைந்து போயிற்று. மேலும் ரியாக்டரில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்கள் வல்லுநர்கள். எரிகோல்கள் தொடர்ந்து சூடாகி, நீராவி ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் எனப் பிரிந்து, வெளியேறிய ஹைட்ரஜன் கட்டடங்களின் வெளிப்புறங்களை வெடிக்கச் செய்தன. டைக்சி வளாகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று உலைகள் வெடித்து நெருப்பையும் புகையையும் கதிர்வீச்சையும் கக்கின. தற்போது டைனி வளாகத்திலுள்ள ஓர் உலையும் ஆபத்தான நிலையில் உள்ளது.

புகுஷிமா அணுஉலைகளிலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்த வளையத்தைத் தாண்டி வெளியே வாழ்ந்த மக்கள்கூடத் தாங்களாகவே தம் ஊர்களையும் உறைவிடங்களையும் உதறித் தள்ளிவிட்டு அணுசக்தி அகதிகளாக வெளியேறினர். மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தையும் அதனால் எழுந்த சுனாமியையும் இப்பேரிடர்களால் மின்சாரம் குடிதண்ணீர், சூடேற்றம் ஏதுமற்ற பல நாட்களையும் எதிர்கொண்ட மக்கள் தமது மனதுக்கிதமான வீடுகளைவிட்டு வெளியேறக் காரணம் கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சு. ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுதத் தாக்குதல்களால், அங்கெழுந்த கடுமையான கதிர்வீச்சுகளால் நிலைகுலைந்த நினைவுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றனர். கதிர்வீச்சு பற்றிய கடுமையான பயத்துடன், தங்கள் அரசு முழுமை யான தகவல்களைத் தங்களுக்கு அறியத் தரவில்லை எனும் ஐயமும் இம்மக்களிடையே ஆழமாய் வேர்விட்டிருக்கிறது.

உலைகளைக் குளிர்விக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதால் கதிர்வீச்சுக்குள்ளான தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியை அண்மையில் கடலில் கொட்டினர்; அண்டை நாட்டுக் கொரிய மக்கள் இதை வரவேற்கவில்லை. தென்கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் அயோடின் - 131, சீசியம் - 137, சீசியம் - 134 போன்ற கதிர்வீச்சு துகள்கள் காற்றில் விரவி பரந்திருப்பதாக இந்நாட்டு அரசுகள் தெரிவிக்கின்றன.

புகுஷிமா அணுஉலைகள் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படலாம். அப்படியானால் காற்றின் மூலமும் தண்ணீர் வழியாகவும் இன்னும் அதிகக் கதிர்வீச்சு பரவும் ஆபத்துத் தொக்கி நிற்கிறது.

3

கதிர்வீச்சு என்பது ஒரு பொருளின் அனைத்து அணுக்களின் அணுமையங்களிலும் நிகழும் ஒரு வித சக்தியின் வெளிப்பாடாகும். மாதுளம்பழம் போன்றது இந்த அணுமையம். நியூக்ளியஸ். அதனுள்ளே உள்ள வித்துக்கள் புரோட்டான்கள் என்றால், சதைப் பகுதி நியூட்ரான்கள். பழத்தின் வெளியே மொய்த்துச் சுழலும் ஈக்கள் கூட்டம் எலக்ட்ரான்கள். ஒவ்வொரு அணுமையமும் தான் வெளிப்படுத்தும் துகள், புதிய அணுமையம் என இரண்டாகப் பிளவுபடும். இந்தப் பிளவுகள் மிகத் துரிதமாக நடைபெறுவதால் எந்த அணு அடுத்ததாகப் பிளவுபடும் என அறியமுடியாது. கதிர்வீச்சு எனும் வார்த்தை மிகவும் விரிவான அர்த்தம் கொண்டது. ஒளி அலைகளையும் கதிர் அலைகளையும் குறிக்கிறது என்றாலும் பெரும்பாலான சமயங்களில் மின்னணுக்களை உருவாக்கும் கதிர்வீச்சு என்பதையே உணர்த்துகிறது. அதாவது தான் தாக்கும் எந்தவொரு அணுவையும் மின்சக்தி வாய்ந்த மின்னணுவாக மாற்றும் வல்லமை மிக்கக் கதிர் வீச்சில் மட்டுமே நாம் பெரிதும் கவனம் செலுத்துகிறோம். இம்மாதிரி கதிர் வீச்சு நமது உடலில் மின்னணுக்களைத் தோற்றுவித்தால் சாதாரண உடற்கூறு, அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படும். கதிர்வீச்சு நோயென்றும் புற்றுநோயென்றும் பரிதவிக்க நேரிடும்.

இயற்கையாகவே கதிர்வீச்சு இயல்புள்ள பொருட்கள் மூன்று விதக் கதிர்களை வீசுகின்றன. ஆல்ஃபா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் ஹீலியம் அணுக்களின் அணுமையங்கள். தோலின் மேற்பரப்பை ஊடுருவும் சக்தி வாய்ந்த இதை ஒரு தாள் கொண்டு நிறுத்திவிடலாம். பீட்டா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் எலக்ட்ரான்கள். ஆல்ஃபா கதிர்களைவிட ஆழமாக ஊடுருவும் தன்மையது என்றாலும் அலுமினியத் தகட்டால் இதை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியும். கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கதிர் போன்ற ஃபோட்டோன்களின் (photon) அணிவகுப்பைக் ‘காமா’ கதிர்வீச்சு என்கிறோம். காமா கதிர்களால் மனித உடலை ஊடுருவி மறுபக்கத்துக்குச் செல்ல இயலுமென்றாலும் ஒரு மீட்டர் பருமனுள்ள கான்கிரீட்டின் வழி புகுந்து செல்லும்போது முழுவதுமாகக் கிரகிக்கப்பட்டுவிடும்.

ஆல்ஃபா, பீட்டா, காமா போன்று நியூட்ரான் கதிர்வீச்சு எனவும் ஒன்று உண்டு. ஹைட்ரஜன் அணுக்களைவிடக் கனமான அனைத்து அணுக்களின் அணுமையங்களிலும் இந்த நியூட்ரான் உள்ளது. தான் மோதும் எந்தவொரு அணுவையும் மின்னணுவாக (ion) மாற்றும் இந்நியூட்ரான்களால் உடல் திசுக்களைத் தாக்கி அழிக்க முடியும்.

ஒரு விபத்து ஏற்பட்டு உடனடியாக அணுஉலை மூடப்பட்டப் பிறகும் உலையின் உள்ளே (core) எரிகோல்கள் எரிந்துகொண்டுதானிருக்கும். எனவே உலை சூடாகிக்கொண்டேயிருக்கும். இது குளிர்விக்கப்படாத நிலையில், உலையிலுள்ள வெப்பமும் அழுத்தமும் அதிகமாகி உலை வெடித்துச் சிதறும். யுரேனிய எரிகோல்கள் உருகிக் கசிந்து (meltdown) கதிர் வீச்சை உமிழ்ந்தால் உயிரினங்கள் அனைத்துக்கும் பேராபத்து உருவாகிறது.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் (அப்போதைய சோவியத் நாட்டின் மாநிலம்) தற்போதைய யுக்ரெய்ன் நாட்டிலுள்ள செர்னோபில் எனுமிடத்தில் அணுசக்தி நிலைய விபத்து ஒன்று நிகழ்ந்தது. 28 பேர் உயிரிழந்தும் 203 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அனைத்தையும் துறந்து அகதிகளாய் ஓடியும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது இவ்விபத்து. விளைநிலங்கள் உபயோகமற்றதாகி, வீடுகளும் வீதிகளும் வெறிச்சோடிப்போயின. அண்டை நாடுகட்கும் பரவிய இக்கதிர்வீச்சால் அந்நாடுகளின் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த மேற்கத்திய நாடுகள் அவற்றை வாங்க மறுத்தன. வாணிபம் தடைபட்டது. வாழ்க்கை ஸ்தம்பித்தது. ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழித்துவிட்டுத் தமது உறைவிடமான ஸ்காண்டிநேவியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் செர்னோபில் வழியாகப் பறக்க நேரிட்டது. பாவம் பின்லாந்து நாட்டு எல்லையில் கூட்டம் கூட்டமாய் இறக்க நேரிட்டது. செர்னோபில் விபத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரக்கணக்கில் இறந்திருப்பதாகவும் இன்றளவும் துன்புறுவதாகவும் பல ஆய்வுகள் சுட்டுகின்றன.

4

தமிழகத்திலோ தலைக்கும் காலுக்கும் கொள்ளிவைப்பது போலக் கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் அணுஉலைகள் கட்டப்பட்டுவருகின்றன. எங்குமேயில்லாத ஈனுலைகள் (fast breeder) கல்பாக்கத்திலும் இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு உலைகள் கூடங்குளத்திலும் நிறுவப்படுகின்றன. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் நாள் நடந்த சுனாமி கல்பாக்கம் அணுமின்நிலையத்தை மூழ்கடித்தது. சுமார் 10 பொறியாளர்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் காவுகொண்டதாக அதிகாரபூர்வ மற்ற தகவல்கள் தெரிவித்தன. ஊழியர் குடியிருப்பு பெரும் சேதத்துக்கு உள்ளாகியது. கூடங்குளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி பாளையங் கோட்டையிலும் 2006ஆம் வருடம் மார்ச் மாதம் 19ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு கன்னன்குளம் அஞ்சு கிராமம் அழகப்பபுரம் மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களிலும் மெலிதான நிலஅதிர்வு ஏற்பட்டுச் சுவர்களிலும் கூரைகளிலும் கீறலும் உடைவும் ஏற்பட்டன. புகுஷிமா விபத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

கடந்த மார்ச் 11ஆம் நாள் கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி நிருபர்களை அழைத்து “கூடங்குளம் அணு உலைகள் சமீபத்திய தொழில்நுட்பத்தில் செயல்பட உள்ளன” என்றும் “கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில் ரியாக்டர் அமைக்கப்பட்டுள்ளது” என்றும் (தினமலர், மார்ச் 16, 2011) கூறி அவர்களைத் தேற்றி அனுப்பியிருக்கிறார். இந்தக் கூற்றுக்களின் உண்மை, நம்பகத்தன்மை பற்றிக் கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சில தமிழ்ப் பத்திரிகைகள் அணு சக்தித் துறையின் ஆறுதல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு புகுஷிமா செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றன. தென்தமிழகத்தில் புற்று நோய் தொற்றுநோய் போன்று பரவிக்கொண்டிருப்பதையோ அரசு நிறுவனமான இந்திய அரியவகை தாதுக்கள் மற்றும் பல தனியார் மணற்கொள்ளைக் கம்பெனிகள் தென்தமிழகக் கடற்கரையைக் கபளீகரம் செய்வதையோ கூடங்குளம் அணுமின்நிலைய விபத்துகளுக்கோ இழப்புகளுக்கோ ரஷ்ய அரசு இழப்பீடு ஏதும் தராது, இந்திய அரசின் இழப்பீடு சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று ரஷ்ய அரசு அறிவித்திருப்பதையோ பொருட்படுத்தாது அணுசக்தித் துறையின் விளம்பரங்கள் மூலம் பொருளீட்டுவதிலேயே அப்பத்திரிகை நிறுவனங்கள் கவனமாயிருக்கின்றன. பல மதக் குழுமங்களும் தொண்டு நிறுவனங்களும் மத்திய அரசோடு பகைப்பானேன், அயல் நாட்டு வரவுகளை இழப்பானேன் என்று கண்களை மூடிக்கொள்கின்றன.

மேற்கு வங்கத்தில் அணுமின் நிலையங்களை அனுமதிக்கமாட்டோம் என்று மாவோயிஸ்ட்களும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் அறிவித்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் ஜைத்தாப்பூரில் திட்டமிடப்பட்டிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான ‘அரெவா’ அணு உலையை எதிர்க்கிறோம் என சிவ சேனா அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ ஜப்பானிய விபத்துகளுக்குப் பிறகு வாய் திறக்கவில்லை, மௌனம் கலைக்கவில்லை. அணு சக்தியின் இன்றியமையாமை பற்றித் தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சில் கட்டியம் கூறிய கனிமொழிகூட இதுவரை கருத்தேதும் கூறவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் மக்களுக்கு எந்தவிதமான கதிர்வீச்சுப் பேரிடர் தகவல்களையோ பயிற்சிகளையோ தரவேயில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பேரிடர் முன்னேற்பாடுகள் பற்றி வினவியபோது தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரித்திருக்கிறார்கள்.

செர்னோபில் விபத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் தருணத்தில், மொத்த உலகமே புகுஷிமா விபத்தால் செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில், பல நாடுகள், நிறுவனங்கள் புதிய ஆற்றல் (New Energy) கூறுகளை ஆராயும் நிலையில் இந்திய அரசும் அணுசக்தித் துறையும் தமிழருக்குத் தரும் பரிசு: கூடங்குளம் முதல் அணுஉலை ஜூன் மாதம் செயல்படத் தொடங்கும். அந்த மின்சாரம் செப்டம்பர் மாதம் கிரிட்டில் (grid) சேர்க்கப்படும் எனும் அறிவிப்பு (பிசினஸ் லைன், ஏப்ரல் 1, 2011). கூடங்குளம்-2, ஓராண்டுக்குள் இயங்குமாம். கூடங்குளம் 3, 4, 5, 6 அணுமின் நிலையங்களின் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இத்தனை நிலையங்களினின்றும் வெளிவரும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஒரு சுத்திகரிப்பு நிலையமும் வரலாமாம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருப்பதால் கூடங்குளத்தில் அணுவாயுத நிலையமும் கட்டப்படலாம். மொத்தத்தில் ‘ஒளிமயமான’ எதிர்காலம் நம் கண்முன்னே உருவாகிக்கொண்டிருக்கிறது.

தட்டிக்கேட்கும் திமிர், வீரம் கொண்ட தமிழர்கள் அழிக்கப்பட்டும் அடக்கப்பட்டும் விட்டனர். கைகட்டி இலவசங்களுக்காய் ஏங்கிக்கிடக்கும் தமிழர்கள் எழுந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும்

நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து

வஞ்சகமழிக்கும் மாமகம் புரிவம் யாம்

எனும் பாரதியின் வார்த்தைகளை நினைந்து நடப்போம், காலம் மாறும்!

-சுப. உதயகுமாரன்

நன்றி: காலச்சுவடு, மே 2011

2 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் உயிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை பாதுகாக்க திட்டங்கள் வகுக்கின்றன .ஆனால் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி உள்ள நாட்டில் மக்கள் உயிருக்கு விலையில்லை .உலைதான்!

MACHAMUNI BLOGSPOT சொன்னது…

அணு உலைகளின் எதிர் காலத்தையும்,அவற்றின் அழிக்கும் சக்தியையும் பார்த்தால்,எதிர்காலம் என்பது மிக மோசமானதாக உள்ளது.பல நூற்றாண்டுகளாக களங்கமில்லாது நமது முன்னோர்கள் காத்து வந்த பூமியை நாம் எதிர் கால சந்ததி வாழவே தகுதி இல்லாமல் ஆக்க தயாராகி வருகிறோம்.இது போன்ற நிலை ஏற்படுவதை நாம் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது.இறைவா உலகைக் காப்பாற்று.!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/

கருத்துரையிடுக