உண்ணலும் உனதே!
உயிர்த்தலும் உனதே!
உடல் மனம் உயிர்
எல்லாம் உனதே!
எண்ணலும் உனதே!
இச்சையும் உனதே!
இப்படித்
தொடங்குகிறது அந்தத் தாமிரபரணி
விழிப்புணர்வு பாடல். இந்தப் பாடலை
பாடிவிட்டுத்தான் அந்தப் பள்ளியில் பயிலும் 1200 மாணவ, மாணவிகளும் தங்கள் வகுப்பறைக்குள்
நுழைகின்றனர். இப்படி ஒர் அதிசயப்(
அத்தியாவசிய) பள்ளி திருநெல்வேலி சாந்தி நகரில் ‘மாக்தலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி’ என்ற பெயரால் 1987ஆம்
ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
தம்பதியினராகிய
இந்தப் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர்கள் துணையோடு அந்தப் பள்ளியின்
மாணவர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி
மாவட்டங்களின் உயிர் நாடியான
தங்கள் தாய்த் தாமிரபரணியைக் காக்க தயாராகி
வருகின்றனர். முதற்கட்டமாகத் தாமிரபரணி குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தத் தாமிரபரணி
ஆற்றின் பல்வேறு இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை ஓவியங்களாக தங்கள் பள்ளி வளாகச் சுவரில் உயிர்ப்புடன்
தீட்டியுள்ளனர்.
பள்ளியின்
தாளாளர் திரு.செல்வராஜ் அவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தனது முதுமுனைவர் பட்டப்
படிப்பிற்காக டென்மார்க்கில் உள்ள ‘ஆரூஸ்’
பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்.
அவர் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த
தலைப்போ ‘ஆற்று நீர் மேலாண்மை’. லண்டனின் ‘தேம்ஸ்’, இத்தாலியின் ‘சார்னோ’ ஆகிய
நதிகளைத் தாமிரபரணி நதியோடு
ஒப்பிட்டு தனது ஆய்வை இவர் மேற்கொண்டு வருகிறார்.
ஒரு மாதகாலம்
தனது படிப்பினை டென்மார்க்கில் முடித்துவிட்டு
திரும்பிய தாளாளர் செல்வராஜ் கடலூரில் மக்கள் உதவியுடன் மண்டிப்போன ஓர் ஏரியை அந்த மாவட்ட ஆட்சியாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி மீட்டெடுத்ததைப் பற்றிய செய்திகளைப் படித்துள்ளார். அதைப் படித்த பின்பு நாமும் நம்மளவில் தாமிரபரணியைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? என
சிந்தித்துள்ளார். பின்னர் இவரும், இவரது
மனைவி மெல்சன் செல்வராஜ் அவர்களும் இணைந்து மாணவ, மாணவிகளிடம் தாமிரபரணி பற்றிய
ஒரு விழிப்புணர்வை அழிக்க முடியாதபடி
மனதில் பதியச் செய்யலாம் என்ற ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன் முதற்கட்டமாக
எழுத்தாளர் ‘முத்தாலங்குறிச்சி காமராசு’ அவர்கள் எழுதிய ‘தாமிரபரணி விழிப்புணர்வு பாடலை’ மாணவ, மாணவிகளைத் தினமும் காலையில் படிக்க வைப்பது என்ற முடிவு.
இதற்காக அனைத்து மாணவர்களின் கையேடுகளிலும் ‘தாமிரபரணி விழிப்புணர்வு’ பாடலை
அச்சிட்டு கொடுத்துள்ளனர். இசையமைத்து ஒரு பாடலாகவும் அதை உருவாக்கியுள்ளனர்.
“தாயிடம் யாம்
அருந்தும்_ எங்கள்
என்பது போன்ற
மெய்சிலிர்க்கும் வரிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடுவதை கேட்கையில் நம் மனம் நெகிழ்ந்து போகிறது.
மேலும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி வருகிற நவம்பர் 30ஆம்
தேதி மாவட்ட அளவிலான ஒரு வினா-விடை போட்டியினையும் நடத்த இருக்கின்றனர். அந்தப் போட்டியில் தாமிரபரணி
ஆற்றின் வரலாறு, அணைக்கட்டுகள், கிளை நதிகள், பிரிவு வாய்க்கால்கள், மதகுகள்
போன்றவற்றின் எண்ணிக்கை என்ற அடிப்படையிலேயே கேள்விகளை அமைக்க உள்ளனர். அன்றைய தினம் திருநெல்வேலி ஆட்சியாளரை அழைத்துத் தாங்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியினை திறந்து
வைக்க உள்ளனர். அன்றைய தினத்தை முழுவதுமாக ‘தாமிரபரணி நாளாக’ கொண்டாட
உள்ளனர்.
மேலும், மாதம்
ஒருநாள் மாணவர்களை, தாமிரபரணி பாய்ந்தோடும் அனைத்து இடங்களுக்கும் ஒரு பசுமை நடை
கூட்டிச் செல்லவும் முடிவெடுத்துள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரியின் உதவியுடன் இவர்கள்
செய்யும் அனைத்து செயல்களையும் திருநெல்வேலியில் உள்ள மற்ற பள்ளிகளும் செய்ய
முயற்சி எடுத்து வருகின்றனர்.
தற்போது
ஒட்டுமொத்த தமிழக மக்களும் சேர்ந்து போராட வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத
பிரச்சினையாக மாறியுள்ளது கங்கைகொண்டானில் பெப்சி ஆலை தொடங்க அரசாங்கம் அனுமதி
அளித்த விவகாரம். இதற்கு எதிராகத் தமிழக அரசியல்
கட்சிகள், சமூக நலன் சார்ந்த இயக்கங்கள்
தீவிரமாகப் போராடி வரும் நிலையில்
மாணவர்களிடம் நீங்கள் ஏற்படுத்தும்
இந்த விழிப்புணர்பு எந்த மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும் என மாக்தலின் பள்ளியின்
தலைமையாசிரியர்
திருமதி.மெர்சன் செல்வராஜிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது “ திருநெல்வேலியில்
பிறந்த ஒவ்வொரு குழந்தையின் தாயும் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்.
ஆகவே அந்தப் பிள்ளைகள் குடித்த தாய்ப்பாலிலே தாமிரபரணி கலந்திருக்கிறது. அப்படித் தாய்க்கு நிகராக விளங்கும் தாமிரபரணிக்கு
இப்போது ஒரு பிரச்சினை வருகிறது. அதைத் தடுக்க மாணவர்களாகிய நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற
கேள்வியை மட்டுமே நாங்கள் அவர்களிடத்தில் எழுப்பினோம். அதற்கே ஓவியம், வினா-விடை
போட்டி, பசுமை நடை எனப் பல காரியங்கள்
சாத்தியமாகியிருக்கிறது. நாளை
இந்தத் தலைமுறைதான்
இந்நிலத்தில் வாழப் போகிறது.
அப்போது இவர்கள் நிச்சயம் தாமிரபரணியைக் காப்பாற்றி
விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது.
ஒரு பன்னாட்டு
நிறுவனம் நம்மூரில் இயங்கினால் அது அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி ஏதாவது நலத்திட்டங்களை
மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தையல் இயந்திரத்தையும், நோட்டு புத்தகங்களையும் வழங்கி ஏமாற்றி
வருகின்றனர். அப்படியில்லாமல் அந்தப் பகுதியில் உள்ள நீர்வளத்தைப் பெருக்க ஏதாவது
ஒரு குளத்தையோ, நீர் நிலையையோ அவர்கள் சீரமைக்க வேண்டும். அதுவே சிறந்த நலத்திட்டமாகும்.
நாங்கள் 1200
மாணவர்களை வைத்துக் கொண்டு இந்த அளவில்தான் செயல்பட முடியும். ஆனால், இதுவே
சமூகத்தில் சிறந்த மாற்றத்தை உண்டாக்கும் என நினைக்கிறோம். மேலும் எங்கள்
பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், ‘தெகிடி’ படத்தின் இசையமைப்பாளருமான நிவாஸ்
பிரசன்னாவை வைத்து தாமிரபரணி பற்றிய ஒரு சிறப்புப் பாடலை உருவாக்க இருக்கிறோம். என்றார்.
மேலும் இந்தப்
பள்ளியின் தாளாளர் செல்வராஜ் கூறுகையில்
“நாங்கள் தொடர்ந்து எங்கள் பள்ளியில் சிறப்புக் கூட்டங்கள் ஏற்படுத்தி தாமிரபரணி பிரச்சினையை
ஒரு பேசுபொருளாக மாற்ற இருக்கிறோம். இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும்
ராஜேந்தர் சிங்கை அழைத்து திருநெல்வேலியில் எந்த விதமான மாற்றத்தை நாங்கள்
ஏற்படுத்த முடியும் என ஆலோசிக்க இருக்கிறோம். அரசாங்கம் நினைத்தால் நம்
நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். ஆனால், அவர்கள் அதை செய்யாத
பட்சத்தில் நமக்கென்ன என்று ஒதுங்கி நிற்காமல் நம்மாலான அளவில் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும். எங்களது முயற்சி தாமிரபரணியை நிச்சயம் காப்பாற்றும் என
நம்பிக்கையுடன் இருக்கிறோம்”. எனக் கூறினார்.
மாணவர்களே
தாமிரபரணியை காக்க இந்த அளவிற்கு செயல்படும்போது, பிளாச்சிமடாவிலும், பெருந்துறையிலும் மக்கள் சக்தி ஒன்றிணைந்து
பெப்சி, கோக் ஆலையை விரட்டியது போல, கங்கைகொண்டானிலும் பெப்சி, கோக் ஆலையை விரட்டி நம் உயிர் நதியான
தாமிரபரணியை நாம் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
5 கருத்துகள்:
மக்கள் சக்திகளை ஒன்றிணைந்து கேரளாவில் பிளாச்சிமடாவிலும், கொங்கு மண்டத்தலத்தில் பெருந்துறையிலும் இருந்து பெப்சி, கோக் ஆலையை விரட்டியது போல, கங்கைகொண்டானிலும் பெப்சி, கோக் ஆலையை ஓட ஓட விரட்டுவோம்.
முதலில் இத்தகைய ஒரு கட்டுரையை எலுதி பிரசுரித்ததற்க்கு பாராட்டுகள்...அருமையான நடை...காலத்தின் கட்டாயம்...நாம், தாமிரபரணி ஆற்றை, அதன் தனித்தன்மை கெடாது காப்பாற்றவேண்டியது...கட்டுறையில் காணப்படும் பாடல்... "தாயிடம் யாம் அருந்தும் எங்கள் தாய்ப்பாலில் நீயும் உண்டு"... எல்லோர் உணர்விலும் இது கலக்கவேண்டும்..மாக்தலின் பள்ளியின் தாளாலர் திரு.செல்வராஜ் அவர்களும்.... தலைமையாசிரியர் திருமதி.மெர்சன் அவர்களையும் இத்தருணத்தில் பாராட்டியே ஆக வேண்டும்..இத்தயைக ஒரு விழிப்புணர்வை, பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தி, ஒவியம் தீட்டவும் ஊக்கப்படுத்தி...படிப்பு படிப்பு மார்க் என்று ஒரே கண்ணோட்டதில் மட்டுமே செயல்படும் இந்நேரத்தில், அதைத்தாண்டி, ஒரு சமுக விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்கும் சக்தி அற்புதமான முயற்ச்சி...இது, இதுத்தான் தேவை இன்றய காலக்கட்டதில்...இத்தகைய ஒரு பொதுநலம் சார்ந்த கட்டுரையை எலுதிய உங்களுக்கு பாராட்டுகள்...
போராட்டம் நடைபெறும் போது என்னுடைய பங்கு கண்டிப்பாக இருக்கும்.
எல்லோரும் படிக்க வேண்டிய அருமையான கட்டுரை சய்ஸ்.
கருத்துரையிடுக