“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா?
அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல் லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். ஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.
தங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம். அதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா? ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா? அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலருக்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.
ஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன. திருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.
நண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
இந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நாட்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.
சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. கவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.
ஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.
(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்)
நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட் 2014
1 கருத்து:
Good article. People should be educated in order to get awareness of usefulness of preserving mother nature. If people are behind politics, caste,religion, cricket and Tasmac, even God can not help this country.
கருத்துரையிடுக