கடந்த 2014 பிப்ருவரி மாதத் துவக்கத்தில் நமது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஜம்முவில் நடந்த ‘அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள்’ (Innovations in Science and Technology for Inclusive Development) எனும் தலைப்பிலான ‘இந்திய அறிவியல் காங்கிரசு’ நிகழ்வைத் துவக்கிவைத்தார். அப்போது தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு ரூ. 1450 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.
இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கும்போது, அத்திட்டம் கொண்டுவரப் போகும் நலன்களைப் பற்றியெல்லாம் இங்கே தமிழகத்துக்கு வந்து மக்களிடம் விளக்கிப் பேசி அறிவித்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தமிழர்கள் தலையில் கட்டும் திட்டத்திற்காகக் காஷ்மீரத்தில் காசு அறிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டின் இனிய வெளிப்பாடு. அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சி (Inclusive Development) அப்படித்தான் வேலை செய்யும்.
அறிவியல், வளர்ச்சிக்கிடையேயான தொடர்புகள் பற்றிச் சிந்தித்து, நியூட்ரினோ திட்டம் எந்த மாதிரியான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களை, வளர்ச்சியைப் பாமரத் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்குத் தரும் என்று நீங்கள் தொடர்ந்து அடுத்த கேள்வி கேட்டால், உங்களுடைய தேசபக்தியைச் சந்தேகிக்க வேண்டிவரும். எந்தத் தொண்டு நிறுவனம் உங்களை இப்படிக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது, எந்த நாடு அந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் உங்களுக்கும் காசு அனுப்புகிறது என்றெல்லாம் இந்திய உளவுத் துறை ஆராய வேண்டியிருக்கும்.
இந்த இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் (Indian Neutrino Observatory - INO) வான்வெளியில் சுற்றித் திரியும் நியூட்ரினோ துகள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்படுகிறதாம். புவியீர்ப்புவிசை அலை பரிசோதனையில் (Gravitational Wave Experiment) இது உலகிலேயே மூன்றாவது மையமாக அமையுமாம். 1954ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட அணு ஆய்வு செய்யும் ஐரோப்பியக் குழுவான CERN (Conseil Européen pour la Recherche Nucléaire) அமைப்பில் நமக்குத் துணை உறுப்பினர் (முழு உறுப்பினர்கூட அல்ல) பதவி கிடைக்குமாம்.
சரி, இந்த அபார அறிவியல் திட்டத்தால் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு எந்த வகையில், என்ன லாபம் என்று தயவு செய்து சிந்தியுங்கள். இந்தியாவில் அறுபது கோடி மக்களுக்குக் கழிப்பறை கிடையாது. நாட்டின் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறை கிடையாது. நாற்பது சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாகப் பிறக்கிறார்கள். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாம் கட்டிக்கொண்டிருக்கும் வரிப்பணத்தைச் செலவு செய்யும் இந்த முறை சரியானதுதானா? அனைத்து இந்தியருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்வரை, இந்தக் காலனி மனப்பான்மையோடு நடத்தப்படும் ஆழ்ந்த அறிவியல் ஆய்வுகள் காத்திருக்க முடியாதா?
இந்தத் திட்டம் பற்றிப் பல வருடங்களாக எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும் நான் அண்மையில் சில தோழர்களுடன் பொட்டிப்புரம் பகுதியிலுள்ள அம்பரப்பர் மலைக்குச் சென்று நியூட்ரினோ திட்டம் அமைக்கப்படும் இடத்தைப் பார்த்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான அந்த மலை ஒரு ராட்சச சிவலிங்கம் போன்று ஓங்கி நிற்கிறது. மலை உச்சியில் மூன்று வெள்ளைக் கோடுகளைக் கிடை மட்டத்தில் வரைந்து போட்டிருந்தீர்கள் என்றால் சிவ லிங்கம் என்று சொல்லி இந்துத்துவ சக்திகளின் உதவியோடு மலையைக் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்.
நீண்ட தூரத்துக்கு அந்த மலையைச் சுற்றி வேலி அமைத்திருக்கிறார்கள். அருகே ஐம்பது அடி விட்டமும் ஆழமுமுள்ள ஒரு வட்ட வடிவிலான ராட்சச நீர்த்தொட்டியும் கட்டியிருக்கிறார்கள். குழாய் பதித்து முல்லைப் பெரியாரிலிருந்து தண்ணீரும் கொண்டுவந்து விட்டார்கள். விரைவில் கட்டுமானம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
அந்த மலையில் சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவுள்ள, 3,18,181 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுமாம். அங்கிருந்து எட்டு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்படுமாம். குகை ஆய்வகத்தினுள் ஒரு லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமென்ட், மணல், உலோகங்களுடன் கட்டுமானம் நடக்குமாம். இந்தப் பகுதி கிராமங்கள் என்ன கதியாகும்? மலைகளும் காடுகளும் பல்வகை உயிரினங்களும் பழங்குடி மக்களும் அரியவகை மரங்களும் மூலிகை களுமாகப் பல்லுயிரியத்தின் அடிப்படையாக இருக்கும் இந்தப் பகுதி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகப் போகிறது.
மலைக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில் தே.புதுக்கோட்டை என்கிற கிராமத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்தோம். ஏராளமானோர் கூடித்தங்கள் மனக்குமுறலைத் தெரிவித்தனர். என்ன செய்வது என்றறியாது திகைத்து நிற்கின்றனர். திட்டத்துக்கு எதிராகப் போராடினால், “வழக்குப் போடுவோம், உள்ளே தள்ளிவிடுவோம்” என்று காவல்துறையினர் மிரட்டுவதாகச் சொன்னார்கள். அந்தக் கிராமத்தை விட்டு நாங்கள் வெளியே வரும்போது, ஒரு வண்டி நிறையக் காவல்துறையினர் ஊருக்குள் போவதைப் பார்த்தோம். பிறகு சோழநாயக்கன்பட்டி, தேவாரம் போன்ற கிராம மக்களிடமும் சின்னமனூர் கிராம இளைஞர்களிடமும் பேசினோம்.
“நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள், ஆனால் கேரளா பக்கமிருந்து மலைக்கு வாருங்கள்” என்றக் கோரிக்கையை முன்னிறுத்துங்கள் என அம்மக்களைக் கேட்டுக்கொண்டேன். சிரித்தார்கள், சிந்தித்தபடியே! இந்த அணுச் சுரங்கத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் இடுக்கி அணையும் 49 கி.மீ. தொலைவில் முல்லைப் பெரியார் அணையும் உள்ளன. நியூட்ரினோ திட்டத்தால் இந்த அணைகளுக்கும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கேரள மக்களுக்கும் ஆபத்து வரும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நிச்சயமாகப் பிற கேரளத் தலைவர்களும் அவரைப் போலவேதான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.
அச்சுதானந்தன் அவர்களும் இன்னும் பலரும் வேறொரு ஆபத்தையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆய்வகம், அக்ரகாரம் என்றெல்லாம் புளுகிவிட்டு அல்லது கொஞ்சக் காலத்தை ஓட்டிவிட்டு, இந்தியாவெங்கும் உருவாகப்போகிற அணுக் கழிவுகளை இங்கே கொண்டுவந்து கொட்டப் போகிறார்கள் என்ற அச்சம்தான் அது. நியூட்ரினோ திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தபோது “அணு உலை/அணு உலை எரிபொருள்/அணு உலைக் கழிவுகள்” என்ற வகையில்தான் விண்ணப்பித்திருக்கின்றனர். மே 6, 2013 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஉலைக் கழிவுகளை எங்கேப் புதைப்பது (Deep Geological Repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு நேர் எதிராக அமைந்துள்ள வடபழஞ்சி கிராமத்தில் “அணுக்கழிவு ஆய்வு மையம்” ஒன்றை நிறுவும் ஆயத்தப் பணிகளைத் துவக்கியிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா தேனி மாவட்டம் தேவாரத்தில் வரப் போவது என்னவென்று?
தேவாரம் ஊரைச் சார்ந்த தனராசு அவர்கள் வீட்டில் ஒரு திட்டமிடல் கூட்டம் நடத்தினோம். சுமார் நாற்பது பேர் சேர்ந்து “முல்லைப் பெரியார், நியூட்ரினோ, பதினெட்டாம் கால்வாய் போராட்டக் குழு” என்ற பெயரில் ஒரு குழுவை உள்ளூர் தோழர்கள் தோற்றுவித்தனர். கூட்டம் நடந்த வீட்டைச் சுற்றி ஏராளமான உளவுத்துறை அதிகாரிகள் நின்றனர். நாங்கள் தேனி நகருக்குத் திரும்பும்போதும் பின்தொடர்ந்து வந்து இரவு முழுவதும் எங்களைக் கண்காணித்தனர். மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பும்போது ஒரு வாகனத்தில் காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். எங்களை ஒரு தீவிரவாதக் கூட்டம்போலப் பார்ப்பதற்கு, நடத்துவதற்குப் பதிலாகத் தமிழ் மக்களின் நலனைச் சற்றேனும் கவனத்தில் கொள்ளக் கூடாதா என்று தலையில் அடித்துக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.
-சுப. உதயகுமாரன்
நன்றி: காலச்சுவடு, ஜூலை 2014
1 கருத்து:
மக்கள் நலனில் அக்கறை இல்லாது அரசுகளை, இல்லாது செய்வோம்....
கருத்துரையிடுக