செவ்வாய், மார்ச் 11, 2014

ஆலிவ் ரிட்லி C/O சென்னை

'ஆலிவ் ரிட்லி பார்க்கப் போலாம்... ஃப்ரைடே நைட்!’ - தோழியிடம் இருந்து மெசேஜ். 'இப்படி ஒரு இங்கிலீஷ் படம் கேள்விப்பட்டது இல்லையே... அதுவும் ஏன் நைட் ஷோ போகணும்?’ என்றுதான் முதலில் தோன்றியது. பிறகுதான் தெரிந்தது, அது 'டர்ட்டில் வாக்’ எனப்படும் ஆமைக் கண்காணிப்புப் பணிக்கான அழைப்பு.
'ஆலிவ் ரிட்லி’ என்பது, உலக அளவில் அருகிவரும் ஆமை இனம். பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் 'கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் மாணவர்கள் கூட்டமைப்பு’ (Students Sea Turtle Conservation Network) ஒவ்வொரு வருடமும் நடத்தும் 'ஆமை நடை’க்கான அழைப்பு.
சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் நள்ளிரவில் நடக்க வேண்டும். அப்போது ஆமைகள் போட்ட முட்டைகளைக் கவர்ந்து பாதுகாப்பாகப் பொறிக்கவைத்து, குட்டி ஆமைகளை மீண்டும் கடலில்விட வேண்டும். இதுதான் அசைன்மென்ட்!  
சென்னை கடற்கரைகளில் அரங்கேறும் ஆமை முட்டையிடும் நிகழ்வை, கடந்த கால் நூற்றாண் டுக்கும் மேலாகக் கண்காணித்து, அருகிவரும் ஆமை இனத்தின் நீட்சியைத் தங்களால் முடிந்தமட்டும் நீளச்செய்கிறார்கள் எஸ்.எஸ்.டி.சி.என். அமைப்பினர்.
ஒரு வெள்ளி இரவில் நான் கலந்துகொண்ட 'ஆமை நடை’யின் லைவ் ரிலே இங்கே...  
''சோம்பேறியா இருக்கிறவங்களை 'ஆமை மாதிரி’னு சொல்றது, 'ஆமை புகுந்த வீடு உருப்படாது’... இப்படிச் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் பழக்கம். ஆனா, அந்த நினைப்பை எல்லாம் மாத்திக்கங்க. கடலைச் சுத்தமா வெச்சுக்கிறதுல ஆமைகளின் பங்கு அதிகம். நிலத்தில்தான் ஆமைகள் மெதுவாக நடக்கும். ஆனா, கடலுக்குள் சுறா, திமிங்கலங்களுக்கு எல்லாம் டேக்கா கொடுத்து நீந்தும். ஒரே வருஷத்துல அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு நீந்தி மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பும் அளவுக்கு வேகமாக நீந்தும். நம்மால் ஓடும் வேகத்துக்கு இணையா நீந்த முடியுமா?'' என ஆமைகளைப் பற்றி ஓர் அறிமுகம் கொடுத்தார் எஸ்.எஸ்.டி.சி.என். அமைப்பைச் சேர்ந்த அருண். அவர் கூறிய மேலும் பல தகவல்கள் ஆச்சரியத்தின் உச்சம்.
''உலகில் அருகிவரும் ஏழு வகை கடல் ஆமை இனங்களில் ஆலிவ் ரிட்லியும் ஒன்று. பொதுவா ஆமைகள் எங்கே பிறக்கிறதோ, அங்கேதான் முட்டையிடும். எந்தக் கடலில் இருந்தாலும் முட்டையிடும் பருவத்தில் தான் பிறந்த இடத்தைத் தேடி, கண்டம் தாண்டிகூட வந்துவிடும். அப்படி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை கடற்கரைகளில் பிறந்த ஆமைகளின் சங்கிலித் தொடர்ச்சிதான், இப்போ வரை ஆலிவ் ரிட்லி ஆமைகளை இங்கே ஈர்க்குது!
ஆலிவ் ரிட்லி இன ஆமைகளுக்கு இளஞ்சூடான கடல்நீரும், வெப்பமான கடற்கரையும் தேவை. அதனால்தான் அவை இந்தியப் பெருங்கடலில் நீந்தி சென்னைக்கு வருகின்றன. ஜனவரியில் இருந்து மார்ச் வரை முட்டையிடும். முட்டையிட்ட 45 நாட்கள் கழித்து குட்டி ஆமை வெளிவரும். வெளியே வந்ததுமே, வெளிச்சத்தை நோக்கிப் போகணும்னு அதன் மூளையில் இயற்கை, புரோகிராம் பண்ணியிருக்கு. ஏன்னா, கடல் நிலவொளியைப் பிரதிபலிக்கும். அந்த வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து கடல்ல போய் சேரணும். கடல் நீரைத் தொட்டதும் நீந்த ஆரம்பிச்சிடும். இதுதான் இயற்கையின் புரோகிராம். ஆனா, இப்போ கடற்கரையை ஒட்டி ஏகப்பட்ட விளக்குக் கம்பங்களை வெச்சுட்டதால், அந்த வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு கடலுக்கு எதிர்திசையில் நடந்து ஊருக்குள் போயிடுது. நாய்கள், அதைப் பார்த்தா கடிச்சுக் குதறிடும். சின்னப் பசங்ககிட்ட சிக்கினா, அதைக் கயித்துல கட்டி விளையாடியே கொன்னுடுறாங்க. மிஞ்சுறது வாகனத்துல அடிபட்டுச் செத்துப்போயிரும். அதனால் ஆமையின் முட்டைகளை நாங்க எடுத்து காப்பகத்தில் வைப்போம்.
45 நாள்கள் கழிச்சு குஞ்சுகள் பொறிச்சு வெளிவந்ததும், அதைக் கடல்ல விட்ருவோம். இப்போ நாம ஆமை முட்டை தேடிப் போவோமா?'' என்று அருண் கேட்டபோது, மணி நள்ளிரவு 12.  
மை முட்டைகளைக் கவரும் பயிற்சி பெற்ற சிறு குழுவைப் பின்தொடர்ந்தோம். அந்தக் குழுவைச் சேர்ந்த அகிலா, முட்டைகளை எப்படிக் கண்டுபிடித்துக் கவர்வது என்று தேடுதல் பணிகளுக்கு இடையில் விளக்கினார்.  
''நம்ம கடலுக்கு வரும் ஆலிவ் ரிட்லி 'மாஸ் நெஸ்ட்டிங்’ செய்யும் உயிரினம். அதாவது ஒரே நாளில் 20, 30 ஆயிரம் ஆமைகள் கூட்டமாக வெளியில் வந்து வெதுவெதுப்பான சூடு இருக்கும் நிலத்தில்தான் முட்டையிடும். கரையேறி வந்து, அதன் துடுப்பை வைத்து ஒரு அடிக்கு அழகா பானை வடிவில் பள்ளம் பறிக்கும். பிறகு, மேல் இருந்தவாறே 80 முதல் 150 முட்டைகள் வரை அந்தப் பள்ளத்துக்குள் இடும். ஆமை முட்டையின் ஓடுகள் மென்மையாகவும், ரப்பர் தன்மைகொண்ட டென்னிஸ் பால் அளவுக்கும் இருக்கும். ஒவ்வொரு முட்டையின் மேல்புறமும் சின்னக் குழிவோடு இருக்கும். அதனால், அடுக்கிவைத்ததுபோல அழகாக ஒன்றன் மேல் ஒன்றாக முட்டைகள் செட் ஆகிடும். முட்டையிட்ட பிறகு, ஆமைகள் அந்தக் குழியை மண் தள்ளி மூடிவிட்டு, நடனமாடுவது போல நடக்கும். அந்த இடத்தைச் சமமாக்குவதற்காகத்தான் அந்த நடனம்!'' என்று கூறிக்கொண்டே வந்தவர் சட்டென உற்சாகக் குரலில், ''அங்கே பாருங்க... ஒரு ஆமையின் தடம்!'' என்று சுட்டிக்காட்டிய இடத்தில் ஆமையின் காலடித் தடங்கள்.
ஓர் இடத்தில் அந்தத் தடங்கள் முடிந்து மணலை அமுக்கிவைத்ததுபோல இருந்தது. அந்த இடத்தில் ஒரு குச்சியை மெதுவாக உள்ளே விடுகிறார்கள். கடற்கரை மணல் வழக்கமான இறுக்கத்துடன் இல்லாமல், தளர்வாக இருக்க, அந்த இடத்தைக் குறித்துக்கொள்கிறார்கள். அங்கு கைகளால் மெதுமெதுவாக மணலை அகழ்ந்து பார்த்தால்... ப்பா..! சுமார் 150 முட்டைகள் நிலவொளியில் மணலுக்குள் மினுமினுத்தன! அந்த முட்டைகளைக் கவனமாக எடுத்துக்கொண்டு, அந்தப் பள்ளத்தை அளந்துகொண்டனர். அதே அளவில் காப்பகத்தில் மணல் பள்ளம் அமைத்து முட்டைகளைப் பத்திரப்படுத்துவார்களாம்!
முட்டை தேடும் படலத்துக்கிடையில் ஓர் அதிர்ச்சி காட்சி. முட்டையிட வந்த தாய் ஆமையொன்று நாய் கடித்தோ மீன் வலையில் சிக்கியோ கழுத்து, கால்களில் காயப்பட்டு பெரும் ரத்த சேதத்துடன் பரிதாபமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த ஆமைக்கு நாங்கள் முதலுதவி அளிக்க, மனிதர்களின் அருகாமை காரணமாகப் பதற்றத்தில் துள்ளத் தொடங்கியது. ''ஆமைகள் குளிர் ரத்தப் பிராணி. ரொம்ப நேரம் நம்ம கட்டுப்பாட்டுல வெச்சிருக்க வேண்டாம். ஸ்ட்ரெஸ் ஜாஸ்தி ஆச்சுனா ஆமை மூக்குல இருந்து ரத்தம் வரும். ஏன்னா, மூக்கை ஒட்டித்தான் அதுக்கு மூளை இருக்கு. சீக்கிரம் கடல்ல விட்ருவோம்!'' என்று ஒரு சீனியர் சொல்ல, அதன் மூக்கின் அருகே தடவிக்கொடுத்தபடி விறுவிறுவென முதலுதவியை முடித்து ஆமையை கடலில் விட்டோம். மீண்டும் தொடர்ந்தது முட்டை சேகரிக்கும் பணி.  
அதிர்ஷ்டவசமாக அந்த இரவு நாங்கள் நான்கு 'நெஸ்ட்’களைக் கண்டோம். ஒவ்வொன்றிலும் சராசரியாக 150 முட்டைகள். ஆங்காங்கே பல ஆமைகள் இறந்தும் கிடந்தன. நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கிய 'ஆமை நடை’, அதிகாலை 4 மணிக்கு முடிந்தபோது, சுமார் 550 முட்டைகளைச் சேகரித்துவிட்டோம். இந்த சீஸனில் இதுவரை 40 'நெஸ்ட்’களில் இருந்து முட்டைகளைச் சேகரித்திருக்கிறது எஸ்.எஸ்.டி.சி.என். அதே சமயம் இறந்துகிடந்த ஆமைகளின் எண்ணிக்கை 150.
நாம் கடற்கரையில் வைக்கும் ஒரு சின்ன விளக்கு, ஆமை இனத்தையே அரிதாக்குகிறது. ஆனாலும் மனிதனின் அத்தனை இடையூறுகளையும் கடந்து, நூற்றாண்டுகளாக அடி மேல் அடி வைத்து வருகின்றன ஆமைகள்!
-ந.கீர்த்தனா, படங்கள்: ரா.மூகாம்பிகை

நன்றி: ஆனந்தவிகடன், 12-03-2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக