ஏற்காடு மலை அடிவாரத்தில் பருவமழையின் சாரலும் மேகங்கள் தொட்டுச் செல்லும் மலைமுகடுகளும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. இந்தச் சூழலை ரசித்தபடியே கோல்டன் எமரால்டு வேலி பள்ளிக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில் குதூகலமாக இருக்கின்றனர். வாட்டர் பாட்டிலில் ஆரம்பித்து, பள்ளிக்குக் கொண்டுவரும் பை, ஏன் பிரண்ட்ஷிப் டேக்கு நண்பர்கள் கட்டிக்கொள்ளும் பிரண்ட்ஷிப் பேண்ட்வரை பிளாஸ்டிக் புறக்கணிப்பைக் கடைப்பிடித்து சூழலைக் காத்திருக்கிறார்கள், இப்பள்ளி மாணவர்கள்.

சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் இப்பள்ளி, சூழலியல் சார்ந்த புரிதலோடு அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கோல்டன் எமரால்டு வேலி பள்ளி, ஆக்கம், பூவுலகின் நண்பர்கள் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ‘சுற்றம் 2013’ என்ற சூழலியல் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்தியது.

இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார்கள். நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு போட்டி, என் சுற்றம் என்ற தலைப்பில் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்கும் விதமாக சுழலியல் பிரச்சினைகள், அதற்கான தீர்வு குறித்து வலியுறுத்த மற்றொரு போட்டி என போட்டிகள் வித்தியாசமாக அமைந்தன. சூழலியல் குறித்த புரிதலுடன் மாணவ மாணவிகள் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

இயற்கை வேளாண்மை குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், திரைப்பட இயக்குநர் சீனு. ராமசாமி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத், பள்ளித் தாளாளர் மீனா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கொண்டாட்டங்கள் நிறைந்த பாடல்கள், பறை ஆட்டம், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், தோல்பாவைக் கூத்து என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

உலகமயமாக்கலில் பரவலாகிவிட்ட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய "ஜங் ஃபுட்" உணவு வகைகளுக்கு இன்றைய தலைமுறை பழகிவிட்டது. நமது பாரம்பரிய உணவு, அதன் பயன்கள் குறித்து எதுவும் தெரியாத நிலை இருக்கிறது. இந்தப் பின்னணியில் பாரம்பரிய இயற்கை வேளாண் முறையால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைப் படைத்த உணவுத் திருவிழா பெரும் வரவேற்பை பெற்றது.

உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தவிர்க்கப்பட்டு இயற்கை வேளாண் முறையில் உற்பத்தியான காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகளைக்கொண்டு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. எல்லா மூலப்பொருள்களும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய உணவு வல்லுநர் ராஜமுருகன் தலைமையில் முழுக்க முழுக்க கிராமத்து விவசாயப் பெண்கள் இந்த உணவு வகைகளை தயாரித்தனர்.

சாமை அரிசி கூட்டாஞ்சோறு, பானகம், வாழைத்தண்டு பச்சடி, குதிரைவாலி தயிர் சாதம், கம்பு தோசை, நிலக்கடலை சட்னி, தினைக் கொழுக்கட்டை, தேனில் ஊறிய நெல்லிக்காய் என்று பெயர் மட்டுமல்ல இவற்றின் ருசியும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புதிதாக இருந்தது. இந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிட்ட பெரும்பாலோர், உணவு வகைகளின் மருத்துவ குணங்களை அறிந்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினர். இந்தியாவில் பெருகிவரும் நவீன காலத் தொற்றாத நோய்களான நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்குக் காரணம் உணவுப் பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் என்பதை உணர்ந்தவர்கள் முகத்தில் ஆச்சரியத்தைப் பார்க்க முடிந்தது.

நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதைக்கணும் என்று பழைய சினிமா பாடல் ஒன்று சொல்கிறது. நாளைய இந்தியாவைக் காக்கப் போகிற இளம் தலைமுறையினரிடம் சூழலியல் புரிதலுக்கான விதையை இந்நிகழ்ச்சி விதைத்திருக்கிறது. இந்த விதை கண்டிப்பாக விருட்சமாகிப் பயன் தரும் என்று நம்பலாம்.

-நிரூப்யா
நன்றி: தி ஹிந்து - 29-10-2013