ஞாயிறு, மே 13, 2012

கூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு!


தமிழகத்தில் 2 மணி நேர மின்சார வெட்டு என்றால் கூடங்குளம் போராட்டம்தான் காரணம் என்றீர்கள். அடுத்து 4 மணி நேர மின்சார வெட்டு என்றால் கூடங்குளம் போராட்டம்தான் காரணம் என்றீர்கள். அடுத்து 6 மணி நேர மின்சார வெட்டு என்றபோதும் அதே புராணம்தான். இன்று 8 மணி நேர மின்சார வெட்டு நடைமுறையில் இருக்கும்போதும் அதே கீறல் ரிக்கார்டுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் இவர்கள் கூடங்குளத்தில் இருப்பது அணு உலையா அல்லது அலாவுதீனின் அற்புத விளக்கா என்பதை மக்களிடத்தில் விளக்க வேண்டும்.

கொஞ்சமும் அறிவியல் பார்வை இல்லாத இவர்கள் தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்துதான் துணிச்சலாக இது போல் பேசுகிறார்கள். அதை விட இன்று கூடங்குளத்திற்கு ஆதரவாகப் பேசுவது என்பது, வருடம் எல்லாம் சகல திருட்டுகளில் ஈடுபட்டு சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை சட்டைப்பையில் குத்துவது போல் ஒரு போலி தேசியவாத நடவடிக்கையாகப் பரிணமித்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் கூப்பாடு போட்டு தேச பக்தியைத் தெரிவிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தமிழக அளவில் இருக்கும் இயக்கங்களின் பெரும் ஆதரவும், மக்கள் ஆதரவும் இருப்பதைக் கண்டு ஆளும் வர்க்கம் பல புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள ஊடகங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வைத்துப் பேரம் பேசும் படலத்தை முதலில் ஆரம்பித்தார்கள். அதில் நாம் அறிந்துள்ள வரை நூறு கோடிக்கு மேல் கைமாறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்வர்யா ராய், அமீர் கான் ஆகியோர் நடித்த Ôகோக்Õ விளம்பரத்திற்கு அடுத்தபடியாக என்னைக் கவர்ந்தது சாந்தா அவர்கள் சமீபத்தில் நடித்த கூடங்குளம் விளம்பரம். எங்கேயோ தஞ்சாவூர் பக்கம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ஊடக நண்பர்கள் தெரிவித்தார்கள். ஐஸ்வர்யா ராயும், அமீர் கானும் இந்த விளம்பரத்தில் நடிக்கும்போது ஒரு மடக்குக் கூட அந்த குளிர்பானத்தைக் குடிக்க மாட்டார்களாம், ஒவ்வொரு டேக்கிற்கும் அவர்கள் ஒரு மடக்கைத் தங்களின் வாயில் ஊற்றுவார்கள்; உடனே அதனை அருகில் இருக்கும் பாத்திரத்தில் துப்பிவிடுவார்களாம். அதே போலத்தான் சாந்தா, அப்துல் கலாம் நடிக்கும் இந்த விளம்பரங்களும். அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் புற்றுநோய் குணமாகும் என்றால்  சென்னையில் இருக்கும் இந்தப் புற்றுநோய் மருத்துவமனையை முதலில் கூடங்குளத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். ஏன் வீணாக மருந்துகளுக்கும், இயந்திரங்களுக்கும் நாம் சென்னையில் செலவழிக்க வேண்டும்.

அடுத்து உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள அணுசக்தி ஒழுங்கு ஆணையத்தில்  அந்த நாடுகளில் உள்ள அறிவுஜீவிகள், மக்கள் விஞ்ஞானிகள்தான் இடம் பெற்றிருப்பார்கள். இந்தியாவில் மட்டும்தான் மக்களின் சார்பாக அணுசக்தி துறையை நெறிப்படுத்த வேண்டிய அந்த ஆணையத்தில் முழுவதும் அணு விஞ்ஞானிகளும், அரசுசார் புரோக்கர்களும் நிரம்பி வழிகிறார்கள். அதிலும் இங்கிருந்து ஓய்வுபெற்ற பார்த்தசாரதிகளுக்குக் காலமெல்லாம் பொழுது போக்கிற்குப் பஞ்சமே இல்லை. அதில் ஒருவர்தான் மக்களின் வாழ்வுடன் சூதாடும் டாக்டர்.எம்.ஆர்.சீனிவாசன். அவர் நாடு அறிந்த அணு உலை ஆதரவாளர். இவரை சமீபத்தில் தமிழக அரசு ஏற்படுத்திய குழுவில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

கோவையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அணுமின் நிலையம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று விஞ்ஞானி சீனிவாசன் கூறினார். உடனே அங்கிருந்த ஆய்வாளர் மருத்துவர் ரமேஷ் அவர்கள், “ கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கும் முன், அந்த இடத்தில் எரிமலை பாதிப்பு மற்றும் சுனாமி குறித்த ஆய்வு நடத்தப்பட்டதா?” என்று கேட்டார். இதற்கு விஞ்ஞானி சீனிவாசன், Òஇப்படிக் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இ&-மெயிலில் கேள்வி அனுப்புங்கள். நான் பதில் அனுப்புகிறேன்” என்றார். “கலந்தாய்வுக் கூட்டம் என்று கூட்டம் நடத்தியதால்தான் நாங்கள் வந்துள்ளோம், அணு உலை தொடர்பான எங்களது சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது விஞ்ஞானியான உங்களது கடமை” என்றார் மருத்துவர் ரமேஷ்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் எதுவும் தெரியாததால் உடனே, விமானத்திற்கு நேரமாகிவிட்டது என்று அங்கிருந்து தப்பியோடினார் அணு விஞ்ஞானி சீனிவாசன். இப்படித் தப்பியோடிய ஒருவரைக் குழுவில் நியமித்திருப்பது இன்னும் நம் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதை விட இந்த சீனிவாசன் 1984களில் கூடங்குளம் அணு உலை தொடர்பான இடத்தேர்வு குழுவில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில் நவம்பர் 12, 2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சீனிவாசன், தான் அந்தப் பகுதிக்கு 1984களில் சென்றிருந்தபோது  அந்தப் பகுதியில் ஒரு கிராமம் கூட இருக்கவில்லை என்றார். 

அங்கு பரந்து விரிந்த ஒரு கடற்கரை மட்டுமே இருந்ததாம். நூற்றாண்டுகளாக இடிந்தகரையும் கூடங்குளம் கிராமமும் பிரித்தானிய ஆவணங்களிலும் இந்திய அரசின் ஆவணங்களிலும் இருந்து வருகிறது. இதனை நெல்லை ஆட்சியர் அங்குள்ள ஆவணங்களின் அடிப்படையில் நிறுவும் பட்சத்தில் சீனிவாசன் அதனை ஏற்பாரா? பணம் வருகிறது என்றால் அதற்காக இந்திய நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவரும் பச்சைப் பொய்களைப் பகிரங்கமாகப் பேசத் துணிந்து விட்டனர் என்பதைப் பார்க்கிறோம் அல்லது இத்தனை பெரும் கிராமங்கள் இவர் கண்களில் படவில்லை என்றால் இவருக்குப் பெரும் பார்வைக் கோளாறு உள்ளது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பார்வைக் கோளாறு உடையவர் எப்படி அணு உலையை ஆய்வு செய்து அது பாதுகாப்பாக இருக்கிறது என்று நமக்கு சான்றளிப்பார். அதே போல் நவம்பர் 15, 2011 அன்று மக்களின் பயங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றார் இதே சீனிவாசன்.
அடுத்து உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக பத்திரிகைகளில் பேசிய நவீன அணு விஞ்ஞானி நாராயணசாமி, உதயகுமாரின் வக்கீல் நோட்டீசைப் பார்த்ததும் - நான் அப்படிக் கூறவேயில்லை என்று அந்தர் பல்டி அடித்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்யத் தூதர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதைப் போல் உள்ளூர் அரசியல் பேசினார். ஒரு தூதர் உள்நாடு விவகாரங்களில் இப்படித் தலையிடுவதை நாம் அனுமதிக்கலாமா?

இதே வேளையில் ஹரியானாவில் விவசாயிகள் கடந்த 700 நாட்களுக்கு மேல் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அரசாங்கம் ஏக்கருக்கு 32 லட்சம் ரூபாய் அறிவித்ததும் விவசாயிகள் உன்ணாவிரதப் பந்தலை விட்டு ஓடி வருவார்கள் என்ற அவர்களின் கனவு பலிக்கவில்லை. ஒரு விவசாயி கூட தன் நிலத்தை விற்க முன்வரவில்லை என்பது வரலாறு. அடுத்து மகாராஷ்டிராவின் ஜைத்தாபூர் போராட்டத்தைப் புது விதமாகக் கொச்சைப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அங்கு இருக்கும் போராட்டக்காரர்களின் பின்னணியில் இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியப் பணம் இருப்பதாக அங்குள்ள நாளிதழ்கள் கவர் பெற்றுக் கொண்டு கச்சிதமாகத் தங்களின் வதந்தி தொழிற்சாலையை இயக்கி வருகின்றன. ஜைத்தாபூர் பகுதியில் உள்ள சில இஸ்லாமியக் கிராமங்கள் போராட்டத்தில் பலமாக இருப்பதால் அங்கு இந்த இஸ்லாமியப் பணம் பற்றிய கதை சக்கைப் போடு போடுகிறது. இன்னும் பணிய மறுத்தால் இருக்கவே இருக்கிறது இஸ்லாமிய தீவிரவாதம் கதை. உடனே அந்த ரீலை எடுத்துப் படத்தை பலமாக ஓட்டலாமே. ஜனங்களை அவமதிக்க புதிய புதிய வழிகள். இதேபோல் மக்கள் ஆந்திராவின் கோவாடாவிலும், கர்நாடக கோகோயிலும், குஜராத்தின் மீதிவீதியிலும் போராடி வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் வரவிருந்த ரஷ்ய அணு உலையை விரட்டிய மம்தா மட்டும் அந்த வெளிநாட்டுப் பணத்தை வைத்து என்ன செய்தார் என்று ஒரு ஊடகமும் எழுத மறுக்கிறது.

சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 8 மணி நேர மின்சார வெட்டிற்கான காரணங்கள் வேறு. அதனை மறைக்கவே அரசு கூடங்குளத்தைக் கை காட்டி வருகிறது.  தமிழகத்தின் ஐந்து தனியார் உற்பத்தி நிலையங்களில் நான்கு நிலையங்கள் அதன் உற்பத்தியை முடக்கிவிட்டன; இந்த நிலுவைதான் மின்வெட்டு 8 மணி நேரமாக வளரக் காரணமாம். முதல்வர் அவர்கள் 5995 கோடி ரூபாயை புதிய உற்பத்தி நிலையங்களுக்கு ஒதுக்கிய நாளிலிருந்து இந்த உற்பத்தி முடக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அந்த மொத்த நிதியைத் தாங்களே பங்கு போட்டு விடலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

 ஜி.எம்.ஆர்.வாசவி - 196 MW, பிள்ளை பெருமாநல்லூர் - 330.5 MW, மதுரை பவர் - 106 விMW, சாமல்பட்டி பவர் - 105.66 MW. பத்தாண்டுகளுக்கு மேலாக வாரியத்துடன் வணிகம் நடத்திய இவர்கள் சம்பாதித்தது இவர்களின் மூலதனத்தைப் போல் 250% (சதவீதம்). அரசின் சலுகைகளோ (சுங்க வரி, வருமான வரி, விற்பனை வரி, ஸ்டாம்ப் கட்டணம் முதலியன) மூலதனத்திற்கு சமம். புதிய உற்பத்திக்கு அரசு ஒதுக்கிய பணத்தை தங்களுக்குப் பங்கு வைக்கக் கோரி தமிழக மக்களைப் பிணையாக்கியிருக்கிறார்கள் இந்த நால்வரும். உற்பத்தி நிறுத்தியிருக்கும் இந்த நாட்களிலும் இவர்களுக்கு வாரியம் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஜி.எம்.ஆர். - 51 லட்சம், பி.பி.என்.- 94 லட்சம், மதுரை பவர் -21 லட்சம், சாமல்பட்டி - 27 லட்சம். மொத்தத்தில் 2.01 கோடி. நெய்வேலியின் எஸ்.டி.சி.எம்.எஸ்.  மட்டும் உற்பத்தி செய்கிறது. கோடையும் கூட சேர்ந்து மின் பளுவைக் கூட்டுகிறது. இதுதான் காரணம். நான்கு நிறுவனங்கள் தமிழக மக்களை வஞ்சிக்க விடுவது சரியா? உற்பத்தி திறனிருந்தும் மக்களை இருட்டில் தத்தளிக்க வைப்பது முறையா?

அதிகார வர்க்கம் காலகாலமாக இது போன்ற போராட்டங்களைத் தன் அவதூறுகளால் , பண பலத்தால், ஊடக பலத்தால், தந்திரங்களால் தான் சந்தித்துள்ளது, அது உண்மையான பிரச்சினையின் காரணங்களைக் கொண்டு நேருக்கு நேராகச் சந்தித்ததில்லை. பிப்ரவரி 26 சென்னை மாநாடு, மார்ச் 18 சங்கரன்கோவில்  இடைத்தேர்தலும் இந்தப் போராட்டத்தின் வரலாற்றை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிவிட்டால் உடனடியாகத் தமிழகம் நியூயார்க்காக மாறிவிடும் என்று சரடு விடும் அன்பர்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும். இந்தியாவின் எந்த அணு உலைக்கும் PLF (Plant Load Factor) என்பது 40 சதவீதத்திற்கு மேல் இல்லை. இது ஒரு நவீன உலை என்பதால் அதனை நாம் ஒரு 70 சதவீதம் ஆக ஒப்புக்கொள்வோம். அப்படி என்றால் 1000MW. என்றால் அதில் இருந்து 700 MW என்பது வெளிவரும். இதில் ஒரு உலையை இயக்கவே இதில் 75 MW.செலவாகிவிடும். அதாவது 625 MW தான் உலை காம்பவுண்டை விட்டு வெளியேறும். இதில் தமிழகத்தின் பங்கு என்பது 45 சதவீதம் மட்டுமே. அதாவது 281 MW. இதில் இந்தியாவில் உள்ள Transmission, Distribution Losses என்பது 35 சதவீதம். அதாவது... கொஞ்சம் இதை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். ப்ளீஸ்...
-அ. முத்துக்கிருஷ்ணன்

நன்றி: உயிர்மை, மார்ச் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக