செவ்வாய், ஏப்ரல் 10, 2012

நீங்க போடுறீங்க திட்டம்... நாங்க அடையுறோம் நட்டம் ! ஜெயலலிதாவுக்கு கோவணாண்டி கடிதம்


திட்டம் போட்டுப் போட்டு, தூள் கிளப்புறதுல கில்லாடி, சங்கரன்கோவில் தொகுதியில சகல கட்சிகளுக்கும் சங்கு ஊதின சாதனைத் தலைவி, நாளைக்கு ஒரு திட்டம், வேளைக்கொரு சட்டம்னு பட்டையைக் கிளப்பற தங்கத் தாரகை, சசிகலாவின் நிரந்தர சகோதரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கு... வணக்கம் சொல்லிக்கறான் ஒங்க பாசக்கார கோவணாண்டி.

அம்மா, ஆட்சியில உக்கார்ந்த நாள் முதலா எங்களுக்காக திட்டங்கள போட்டுத் தாக்கிட்டே இருக்கீங்க. சொட்டுநீர் மானியம், தானியக் கிடங்குகள், பல்லுயிர் பெருக்கம், 686 கோடியில் பசுமைத் திட்டம்... இப்படி நீங்க போடுற திட்டமெல்லாமே அருமையாத்தான் இருக்கு. ஆனா, வழக்கம்போல எல்லாமே அறிவிப்போட நிக்குதே தவிர, துளிகூட எங்க கைக்கு வந்து சேரமாட்டேங்குதே!

தமிழ்நாட்டோட உணவு தானிய உற்பத்தியை 115 லட்சம் டன் அளவுக்கு உசத்தணும்னு சொல்லி, சொட்டுநீர்ப் பாசனத்துக்கு 100% மானியம்னு அறிவிச்சீங்க. ஆனா, இந்தத் திட்டத்தைக் கண்டு எங்காளுங்க பின்னங்கால் பிடரியில அடிபட ஓடிட்டிருக்காங்கம்மா!
'இலவசமா கொடுக்குறத, தாராளமா வந்து வாங்கறத விட்டுப்புட்டு, எதுக்காக பயப்படணும்’னு கேட்கறீங்களா? எல்லாம் அந்த 'லஞ்சாசுரன்' தொல்லைதானுங்கோ! 'சிறு விவசாயிங்கற சர்ட்டிபிகேட் இருந்ததாத்தான் மானியமே கொடுப்பீங்க. ஆனா, அந்த சர்டிபிகேட்ட வாங்கறதுக்காக அதிகாரிங்ககிட்ட போனா, வயக்காட்டோட விலையில பாதிய லஞ்சமா கேட்கறாங்க’னு புலம்பறாங்க விவசாயிங்க. இதுக்கு பயந்துகிட்டு, 'சொட்டுநீரே வேணாம்'னு கையைக் கட்டிக்கிட்டு நிக்கறாங்க எங்க ஆளுங்க. பிறகெப்படி, நீங்க உணவு தானிய உற்பத்தியை உசத்தப் போறீங்க?

இப்படித்தான் ஒவ்வொரு திட்டமுமே நட்டாத்துல நின்னுக்கிட்டிருக்கு. இதுதான் நிதர்சனம். இந்த லட்சணத்துல... இப்ப 'ரெண்டாவது பசுமைப் புரட்சி'னு சொல்லிக்கிட்டு பட்டய கிளப்ப ஆரம்பிச்சுட்டீங்க! ஏற்கெனவே வந்த முதலாம் பசுமைப் புரட்சியோட கொடுமையே இன்னும் முடிவுக்கு வரல... அதுக்குள்ள இப்படி ரெண்டாவது கொடுமைக்கு கங்கணம் கட்டிக்கிட்டு கிளம்பிட்டீங்களே அம்மா!

முதலாம் புரட்சி செஞ்ச சாதனைதான் என்னனு ஒங்களுக்குத் தெரியவே தெரியாதா...? துளி இடம்கூட விடாம வயக்காடு முழுக்க ரசாயன உரத்தையும், பூச்சிமருந்தையும் அடிச்சு அடிச்சு நாடே கெமிக்கல் பூமியா மாறினதும்; கோடிக்கணக்கான விவசாயிகளை கடனாளியா அலையவிட்டதும்; லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் திருப்பிவிட்டதும்தான் அந்த முதலாம் பசுமைப் புரட்சியோட சாதனை!

இதைப் பத்தி திரும்பத் திரும்ப பலரும் கதறியும்கூட, உங்கள மாதிரியான அரசியல்வாதிங்க காதுல இதெல்லாம் துளிகூட ஏறவே மாட்டேங்குது. மறுபடி மறுபடி ஏ.சி. ரூம்ல மட்டுமே உக்கார்ந்திருக்கற அதிகாரிங்க போட்டுத் தர்ற திட்டங்களை, அப்படியே நிறைவேத்தறதுலதான் குறியா இருக்கீங்க. வயக்காட்டுப் பக்கம் வந்து, அந்த விவசாயிக்கு என்ன தேவை... அவனோட கஷ்ட, நஷ்டம் என்னனு எந்த அதிகாரியும் பார்க்கறதே இல்ல. அப்படிப்பட்டவங்க போட்டுக் கொடுக்கற திட்டம் வேற எப்படி இருக்கும்?

இதுக்கு உதாரணத்தைத் தேடி நீங்க வேற எங்கயும் போகத் தேவையில்ல. சமீபத்துல நீங்க அறிவிச்ச மரம் வெட்டும் திட்டத்தையே எடுத்துக்கலாம். 'புயல் பாதிச்ச கடலூர்ல, விவசாயிங்க தோட்டத்துல சாய்ஞ்சு கிடக்கற முந்திரி, பலா மரங்களையெல்லாம் அரசாங்கமே அப்புறப்படுத்திக் கொடுக்கும்'னு ரொம்ப அருமையா அறிவிச்சீங்க. ஆனா, அந்தத் திட்டம் எந்த நிலையில இருக்குதுனு தெரியுமா?
'இன்னிக்கு இருக்கற நிலையில, 600, 700 ரூபாய்க்கு குறைஞ்சு மரம் வெட்டுறதுக்கு ஆள் கிடைக்கறதில்ல. ஆனா, அரசாங்கத்துல வெறுமனே 100, 200 ரூபாயைக் கொடுத்து ஆள் பிடிக்கச் சொல்றாங்க. இந்த சம்பளத்துக்கு யாரு வருவா?'னு கையைப் பிசைஞ்சுகிட்டு நிக்கறாங்க ஊராட்சித் தலைவருங்களும்... உள்ளூர் அதிகாரிங்களும்!

நாட்டு நிலவரம் ஒண்ணா இருக்க... வெறும் 100, 200 ரூபாயைக் கொடுத்து மரத்தை வெட்டிடலாம்னு ஒங்களுக்கு யோசனை சொன்னது ஏ.சி. ரூம் அதிகாரிங்கதானே! அதைத்தான் சொல்ல வர்றேன்.. களத்துல நிக்கற விவசாயிங்கள கேட்டு எதுக்கும் முடிவெடுங்க. சும்மா கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டே திரியறவங்க சொல்றத வெச்சு முடிவெடுத்தா... கடைசிவரைக்கும் எதையும் சாதிக்கவே முடியாது.

எங்களுக்காக போடுற திட்டமெல்லாம் தொடர்ந்து பல் இளிக்குது. ஆனா, தொழில் பெருக்கத்துக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்து நீங்க போடற திட்டங்கள் ஸ்பீடு எடுக்குதே எப்படி? லேட்டஸ்ட்டா பளபளனு 'விஷன் 2023'ங்கற பேர்ல ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கீங்களே அதைச் சொன்னேன்!

ஒரு காலத்துல உலகமயம்... தாராளமயம்னு ஓயாம முழங்கினபடி தொழிலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த மன்மோகன் சிங் வகையறாக்களே... இப்ப, 'தப்பு பண்ணிட்டோம்'னு பேச ஆரம்பிச்சுருக்காங்க. இப்பக்கூட, ஐ.நா. சபை கூட்டத்துல பேசின நம்ம மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், 'பொருளாதார வளர்ச்சியோட பலன், அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கறத உறுதிப்படுத்தணும். அப்பத்தான் அந்த வளர்ச்சி நீடிச்ச வளர்ச்சியா இருக்கும்'னு பேசியிருக்காங்க.
இதை மேற்கோள் காட்டி, '20 ஆண்டுகால தாராளமய கொள்கையால ஏழைகளுக்குக் கிடைச்சது... உள்ளடக்கிய வளர்ச்சி மட்டும்தான். இந்த விஷன் 2023 திட்டமும் அதைத்தான் சாதிக்கும்போல இருக்கு. இது அடித்தட்டு மக்களை மறுபடி மறுபடி பாதிக்கற விஷயமாவே இருக்கும்'னு உங்க முன்னால கதறியிருக்காரு சவுந்திரராஜன் எம்.எல்.ஏ. (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்).

அதனால, எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்து, நம்ம ஊருக்கு எது சரிப்பட்டு வரும்கிறத மனசுல வெச்சுக்கிட்டு, விவசாயத்துக்கு உண்மையான முக்கியத்துவத்தைக் கொடுங்க. விவசாயிகளை நிஜமாவே வாழ வைக்கற உருப்படியான திட்டங்களை மட்டும் தீட்டுங்க. அது, அப்படியே எங்க கைக்கு துளிகூட சிந்தாம சிதறாம வந்து சேருறத உறுதிப்படுத்துங்க.
இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன், 25, ஏப்ரல் 2012

1 கருத்து:

மதி சொன்னது…

இன்னும் புதுக்கோட்டை ...

கருத்துரையிடுக