கொதித்துக்கொண்டு இருக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் தொடர் பட்டினிப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்க, அவர்களுக்கு சட்டரீதியாக உதவி செய்ய களத்தில் குதித்திருக்கிறார்கள் சிலர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாகப் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மூலமாகக் கடந்த அக்டோபர் 29-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அணு சக்தித் துறைக்கு எதிராகப் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
''நான்கு முக்கிய விஷயங்களை முன்வைக்கிறேன். முதலாவதாக, 1988 நவம்பர் மாதம் இந்திய அரசுக்கும், ரஷ்ய அரசுக்கும் இடையே கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, அணுக் கழிவுகளை ரஷ்ய அரசாங்கமே திரும்ப எடுத்துக்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ரஷ்யாவின் அதிபர் போரிஸ் எல்ட்சின் இந்தியாவின் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் துணை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், 'இங்கு பெறப்படும் அணுக் கழிவுகளை இந்தியாவே எடுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டது.
இரண்டாவதாக, 1991-ம் ஆண்டு 'கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை,’ இதுபோன்ற பணிகளுக்கு முழு சுதந்திரத்தை அளித்தது. ஆனால், 2011-ம் ஆண்டின் கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்தின் மேம்படுத்தப்பட்ட அறிக்கை, 'இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்ள அந்தந்த மண்டலத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது உலைகள் மட்டும் அல்லாது முதல் இரண்டு உலைகளுக்கும் சேர்த்து தற்போது அனுமதி பெற வேண்டும்’ என்றது.
மூன்றாவதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா நகரின் அணு மின் நிலைய விபத்துக்குப் பிறகு, நமது இந்திய அரசாங்கம், அந்த விபத்தை கூடங்குளம் அணு மின் நிலையத்தோடு தொடர்புபடுத்தி, அதன் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்ய 'டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு வழங்கிய இடைக்கால அறிக்கையில், 'கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவற்றின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய அவற்றின் பொறியியல் தகவல்களுடன் ஆகஸ்ட் மாதம் இறுதி அறிக்கையை அளிப்பதாகச் சொன்னது. ஆனால், இன்று வரை அந்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
நான்காவதாக, இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கவில்லை. கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை பற்றியும் யாருக்கும் போதிய தகவல்கள் தெரியவில்லை.
ஆக, இத்தனை குறைகளுடன்தான் இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தைத் துவக்க இருக்கிறது. இதை எல்லாம் அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தைத் துவங்குவதற்கு முன் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கையின் கீழ் புதிய அனுமதி பெற வேண்டும், புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை வெளியிட வேண்டும், புதிதாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும், மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என்பவைதான் எங்களது கோரிக்கைகள்!'' என்றார்.
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் பி.சுந்தரராஜன், ''கல்பாக்கத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால், அதற்குத் தேவையான மருத்துவத் தயார் நிலை பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல வழக்குகளைத் தாக்கல் செய்ய இருக்கிறோம்!'' என்றார்.
மூன்று வாரங்களுக்குள் பதில் சொல்ல வேண்டும் என, அரசுக்கு கெடு வைத்திருக்கிறது நீதிமன்றம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
- ந.வினோத்குமார், படங்கள்: வீ.நாகமணி
நன்றி: ஜூனியர்விகடன் 09-11-11
4 கருத்துகள்:
இனி அழிவு அறிவியலை எவரும் தொடாத வண்ணம் நம் போராட்டம் அமையட்டும்... இன்குலாப் ஜிந்தாபாத்
அணுசக்தி அபாயம் குறித்து.
123-agreement.blogspot.com
http://poar-parai.blogspot.com/search/label/123
அணுசக்தி அபாயம் குறித்து.
123-agreement.blogspot.com
http://poar-parai.blogspot.com/search/label/123
இன்குலாப் ஜிந்தாபாத்...
கருத்துரையிடுக