இந்நிலையில் கூடங்குளத்திலும், போராட்டம் துவங்கிய இடிந்தகரையிலும், மக்கள் உண்ணாவிரதம் மட்டுமல்லாமல், அணுமின் நிலைய முற்றுகை, தென்மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்கும் நாடுகளுக்கு கடல் மூலம், குழந்தைகள் கடிதங்களை மிதக்க விடுதல், பச்சிளங்குழந்தைகளைத் உண்ணாவிரதப் பந்தலில் தொட்டில் கட்டி பராமரித்து எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற பலவிதமான அற வழிகளில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
இலங்கைக் கடற்படையால், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு தேசப் பிரச்சனையாகவே கருதாத போது, கூடங்குளம் அணு உலையால் ஆபத்து ஏற்பட்டாலும் மத்திய அரசின் நிலைபாடு அது போன்றே இருக்கும் என்று கடலோர மாவட்ட மக்கள் முழுமையாக புரிந்துள்ளனர். அதோடு கூட, சேது சமுத்திரத் திட்டத்தில் மக்கள் எதிர்ப்பை மத்திய அரசு அலட்சியம் செய்தது, கன்னியாகுமரி மணவாளக் குறிச்சியில் உள்ள மத்திய அரசின் தோரிய மணல் குவாரி நிறுனத்தால் கடலோர மக்களிடையே புற்று நோய் பரவியுள்ளது, ஸ்டெர்லைட் போன்ற இரசாயனக் கழிவை வெளியேற்றும் ஆலைகள் அனுமதிக்கப்பட்டது போன்ற அனுபவங்கள் தென்மாவட்ட கடலோர மக்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தக் காரணங்களாகியுள்ளது.
எனவே எந்த ஆபத்தும் வருவதற்கு முன்பே நம் நிலைபாட்டை வலுவாக அரசுக்கு தெரிவித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஓயாமல் தென் மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். இந்த அளவுக்கு தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் உறுதியோடு ஈடுபடுவது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று.
அணுமின் நிலைய அதிகாரிகளும், பிரதம மந்திரி, அவரின் பிரதிநிதிகளும் மக்களை நேரில் சந்தித்து தங்களது நிலையை எடுத்துரைப்பதைத் தவிர்த்து மாநில அரசை அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அணுமின் நிலையப் பணிகளை செய்ய ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, ஏன் அணு மின் கழக விஞ்சானிகளே கூட மக்களை சந்தித்து அணுசக்தி ஆபத்தானதல்ல என்று விளக்கமளிக்க திராணியற்று உள்ளனர். இதிலிருந்து தென் மாவட்ட மக்கள் உணர்ந்து கொண்டது என்னவென்றால், யாரும் அணு உலை பாதுகாப்பானது என்று உத்திரவாதம் தரத் தயாரில்லாத போது, நம் கடலோரப்பகுதியைக் காப்பதும், அங்கு வாழும் மக்களுக்கான உத்திரவாதமும் நம் கையில் தான் உள்ளது. எனவே எப்பாடுபட்டாவது அணு உலை செயல்படுவதை தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துடன் உள்ளனர். இதன் விளைவு தான், ஒவ்வொரு நாளும் ஒரு கடற்கரை கிராமம் போராட்டத்தை தலைமையேற்று நடத்திவருகின்றன. இதுவரை, இடிந்தகரையைச் சுற்றியுள்ள கிராமங்களான, அஞ்சுகிராமம், கூட்டபுளி, பெருமணல், பஞ்சல், கூடங்குளம், எஸ்.எஸ். புரம், வைராவி கிணறு, இடிந்தகரை, வித்யாபதி(இஸ்லாமிய மக்கள் வாழும் கிராமம்), தாமஸ்மண்டபம்(வி-விவசாய மக்கள்), ஆவுடையார்புரம்,(வி), புதுக்கிராமம் (மீ), தில்லைநகர் (வி), காடுதலா, (வி), குறிஞ்சிகுளம்(வி), நான்குநேரி, நொச்சிகுளம்(வி), அரசகுளம் (வி), கூத்தன் குழி, கொத்தங்குளம்(வி), தெரேஸ்புரம், ஒவரி, மணப்பாடு, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை, அமலிநகர் போன்ற கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் தலைமையேற்று இடிந்தகரையில் போராட்டத்தை நடத்தியுள்ளன
“எங்களுக்கும், இந்த நாட்டுக்கும் ஆபத்து உண்டாக்கற அணு உலை எங்களுக்கு வேண்டவே வேண்டாம்”
- இனிதா, இடிந்தகரை கிராமம்
மக்களின் போராட்ட உத்தி
ஒவ்வொரு நாளும் இடிந்தகரைக்கு போராட்டத்திற்காக வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான, குடிநீர், கழிப்பிட வசதிகளை இடிந்தகரை மீனவ சங்கம் மேற்கொள்கிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று விற்கப்படும் மீன் உற்பத்தி வருவாயில் 100 ரூபாய்க்கு 10 ரூபாய் என சேமித்து வைத்து போராட்டத்திற்கான செலவுகளை மேற்கொள்கின்றனர். போக்குவரத்து செலவுகளை அந்தந்த கிராம மக்களே ஏற்கின்றனர். இதன்மூலம், இதுவரை கிட்டத்தட்ட 12 லட்சம் வரை சேமித்து செலவுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஊடகங்களிடமும், அரசாங்கத்திடமும் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் நம்பியிருப்பது அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழுவினரையே. இந்தப் போராட்டக் குழுவும், மக்கள் பிரதிநிதிகளையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களையும், வழக்கறிஞர்கள்,மத குருமார்கள் என பரவலாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு பலகாலம் அவர்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்களை உள்ளடக்கியதே. ஆகவே, போராட்டக் குழுவின் தலைமையை மக்கள் முழுமனதுடன் ஏற்று அவர்கள் மூலமும் ஒவ்வொரு நாளும் தங்கள் எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
“அரசாங்கத்துல இருக்கிற படிச்ச பெரிய ஆளுங்க கிட்ட எங்க பிரச்சனைய எடுத்து சொல்லதான் போராட்ட குழுவ நியமிச்சிருக்கோம்”
- ஆல்பிரட், இடிந்தகரை
ஆனால், மத்திய அரசும், அணுமின் கழகமும் பிரச்சனையை நேரடியாக சந்திக்காமல், பலவித அவதூறான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு உதாரணங்கள், போராட்டம் துவங்கிய சமயத்திலிருந்தே போராட்டக் குழு உறுப்பினர்களுக்கு எதிரான அவதூறான பிரச்சாரங்கள், டெல்லியில் உள்ள கிறிஸ்தவ மதத் தலைவரை சந்தித்து அவர் மூலம் இங்குள்ள பாதிரியார்களுக்கு நெருக்கடி கொடுத்து மக்கள் எதிர்ப்பைத் தடுக்கும் முயற்சி, மாநில அரசை மிரட்டிப் பார்ப்பது, அரசியல் கட்சிகளைத் தூண்டியது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அணு சக்திக் கழகமும், அணு உலை பராமரிக்கப்படவில்லையென்றால் ஆபத்து வரும் என்று பயமுறுத்திப் பார்க்கிறது.
பிரச்சனையை சமாளிக்க பிரதமர் அமைத்த குழுவும் நாங்கள் மக்களிடம் நேரில் சென்று பேசமாட்டோம். அரசாங்க நடைமுறை மூலமாகவே செயல்படுவோம் என்று சாதுர்யமாக பேசி, மாநில அரசிடமிருந்தும், அணு உலை நிர்வாகத்திடமும் ஆவணங்களைக் கேட்டுப் பெறும் முயற்சியில் உள்ளனர்.
மக்களின் எழுச்சியை கண்ட மாநில அரசு மவுனம் காத்து வருகிறது.
உண்மை என்னவென்றால், இப்பிரச்சனை அணுசக்தி பற்றிய நாட்டின் கொள்கைப் பிரச்சனை. சுதந்திரம் முதற்கொண்டு மத்திய அரசை ஆண்டுவரும் பெரும் கட்சிகளின் கொள்கை அணு சக்திக்கு ஆதரவானதாகவே இருந்து வந்துள்ளது. இந்த கொள்கை மூலம் அவர்கள் சர்வதேச அரங்கில் தன் பெருமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்பதற்காக போடும் வேசங்களே அணுமின் திட்டங்கள். மிக அதிகமான பொருள் செலவுடன் கதிர்வீச்சு ஆபத்துள்ள அணு உலை மூலம் குறைந்த அளவு மின்சாரம் தயாரிப்பதற்கு பதில் மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்கு செலவிடலாம் என்பதே சமூக அக்கறை கொண்ட பல நிபுணர்கள் கருத்து.
இப்படித்தான், கூடங்குளம் பகுதி மக்களும் அணு சக்திக் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ளனர். அவர்கள் கோருவது, நாட்டின் நலனுக்கு அணு சக்தி பாதுகாப்பானது என்று உத்திரவாதம் இல்லாத போது எவ்வாறு மத்திய அரசு இதனைக் கடைபிடிக்க முடியும். நாங்கள் வாழும் நிலம் காலம் காலமாக நாங்கள் பாதுகாத்து வாழ்ந்து வரும் பூமியை தெரிந்தே அழிய விட மாட்டோம்.
கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் மக்களின் இடைவிடா போராட்டம் என்பது இந்திய தேசத்தினை ஆளும் அல்லது ஆளப்போகும் எந்தக் கட்சிக்கும் தேசியக் கொள்கையை தீர்மானிப்பதில் மக்களின் பங்கு எவ்வாறு இருக்கும் என்பதை யதார்தத்தில் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறது.
-கல்பனா சதீஷ்
kalpsat@gmail.com
7 கருத்துகள்:
Tamil Makkalin Eluchi Mei Silirka Vaikirathu..
Nichayam Makkal korikkai Neraiverum. Avarkalin entha poratathuku en manamarntha aatharavu.. Update news continuously..Jai Hinth.
இன்குலாப் ஜிந்தாபாத்...
நமது போராட்டம் வெற்றியடைந்தே தீரும்...
பிரதமருக்கு எனது கடிதம்...
http://reverienreality.blogspot.com/2011/10/open-letter-to-mrmanmohan-singh.html
கூடங்குளம்..குடிமக்களின் குரல்...நேர்முகம்
http://reverienreality.blogspot.com/2011/09/blog-post_20.html
நேற்று செர்நோபில்...நாளை கூடங்குளம் ...???
http://reverienreality.blogspot.com/2011/09/blog-post_15.html
நண்பர் ரசிகனின் கடிதம்...
http://vaazhveperaanantham.blogspot.com/2011/10/blog-post_22.html
தோழர் சூரியாவின் பத்தொன்பது பதிவுகள்
http://suryajeeva.blogspot.com/2011/09/blog-post_15.html
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்....
சிறப்பான ஆக்கத்திற்கு நன்றி .விரைவில் இந்த குழப்பம் தீரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் .வாழ்த்துக்கள் சகோ உங்கள் முயற்சி வெற்றிபெற .
அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்
http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html
கருத்துரையிடுக