புதன், நவம்பர் 02, 2011

கூடங்குளம்: இந்திய பிரதமருக்கு ஜப்பானிலிருந்து ஒரு கடிதம்

மதிப்புக்குரிய இந்தியப் பிரதமர், தமிழக முதல்வர் அவர்களுக்கு,

நாங்கள் ஜப்பானில் வாழ்பவர்கள், ஜப்பான் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அணுசக்தியின் யூகிக்க முடியாத தன்மை, கட்டுப்படுத்த முடியாத தன்மை பற்றி மிகத் தெளிவாக, நெருக்கமாக அறிந்தவர்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு அணு பேரழிவுகளின் சாட்சிகளாக நிற்பவர்கள்.

மிகப் பெரிய அணுஉலைகளை மட்டுமில்லாமல், 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய மிகப் பெரிய அணுஉலை வளாகங்களை கட்டும் ஆபத்தான பாதையில் இந்திய அரசு சென்று வருவது எங்களுக்கு மனவேதனை அளிக்கிறது.

கூடங்குளம் அணுஉலை வளாகத்தை செயல்படுத்தக் கூடாது என்று இடிந்தகரையில் அமைதியான வழியில் உண்ணாவிரதம், போராட்டத்தை நடத்தி வரும் எங்களது சகோதர, சகோதரிகளுக்கு எங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்த அவசர கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். அவர்களது போராட்டத்துக்கு நீங்கள் செவிசாய்த்தது முக்கியமானது.

மக்களின் போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநில முதல்வர் எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை வலியுறுத்தாமல், அவர்களது அச்சத்தை முற்றிலும் களையும் வரை இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது பற்றி நாங்கள் படித்து அறிந்தோம். அவர்களது அச்சத்தை முற்றிலும் நீக்க முடியாது,

ஏனென்றால் செர்னோபில்லில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் ஃபுகுஷிமாவில் நடந்த பேரழிவு தொடர்பான நினைவுகளும், கதைகளும் புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

போபால் விஷ வாயு விபத்தால் இந்தியா ஏற்கெனவே வேதனையை சந்தித்து இருக்கிறது. ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டுகளால் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, அணுசக்தியை அமைதிக்கு பயன்படுத்த முயற்சிக்கவில்லை.

அதன் விளைவாகத்தான் ஃபுகுஷிமாவில் பேரழிவு ஏற்பட்டது. நமது பூவுலகுக்கு இது போன்ற ஒரு தவறு நிகழ்ந்ததே போதும். ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்ட ஒரு அணுஉலையை இந்த நேரத்தில் கைவிடுவது என்பது பணத்தை வீணடிப்பது போல உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால் ஒரு அணுப் பேரழிவால் ஏற்படும் மனித இழப்பு
, சுற்றுச்சூழல் சீரழிவுடன் ஒப்பிடும்போது, இந்த காங்கிரீட், இரும்பு கட்டடத்தில் இடப்பட்ட டாலர் முதலீடு என்பது மிகமிகக் குறைவு என்பதை ஜப்பானியர்களான நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முக்கிய தலைவர்களான நீங்கள், உங்கள் குடிமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்தை கைவிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

மரியாதையுடன்,

அமைப்புகள், தனிநபர்கள் சார்பில்

திரு. சுகியோ ஃபியூருயா, பொதுச் செயலாளர், ஜப்பானிய பணியிட பாதுகாப்பு, சுகாதார ஆதார மையம்,

ஜப்பானிய பணியிட பாதுகாப்பு, சுகாதார ஆதார மையம்,

தகேஷி யசுமா, ஒருங்கிணைப்பாளர், ரசாயன மாசுபாட்டுக்கு எதிரான குடிமக்கள் அமைப்பு,

ஜப்பான் ஆட்டோ பணியாளர்கள் வலையகம்

டோக்கியோ பணியிட பாதுகாப்பு, சுகாதார மையம்

சுஜி கவாமாட்டா, பத்திரிகையாளர்

கான்சாய் பணியிட பாதுகாப்பு, சுகாதார மையம்

தோஷிமி மசுதா

ஹிரோஹிகோ தகாசு, திட்ட இயக்குநர், நியாய பணியாளர் ஆராய்ச்சி, கல்வி மையம், ஹிடோசுபாஷி பல்கலைக்கழகம்

உய்கோ ஹசேகவா, ஒருங்கிணைப்பாளர், தன்னார்வ நிறுவனம் இ-மிராய் விஷன்

பார்க் செயுங் ஜூன், துணை பேராசிரியர், கான்சாய் காகுயின் பல்கலைக்கழகம்

ரயோட்டா சோனோ, டெப்கோ செயல் முன்னணி

மேற்கு ஆப்பிரிக்க மக்களுக்கான ஆதரவு அமைப்பு

சமூக, பணியிட சுகாதார பாதுகாப்பு நிறுவனங்களின் சங்கம்

ரயுடா சாய்டோ, ஜுஜோ டோரி கிளினிக்

மீசோதெலியோமா, கல்நார் நோய் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினருக்கான ஜப்பானிய சங்கம்

நவோகா கனேகோ

வடகிழக்கு ஆசிய தகவல் மையம், ஹிரோஷிமா

ஜூப்ளி கான்சாய் வலையகம்

ஹிரோகோ யுயேடா, முதுகலை மாணவர், ஹிடோசுபாஷி பல்கலைக்கழக சமூக அறிவியல் பட்டப் பள்ளி

டோஷியோ ஹிரானோ, கெமெய்டோ ஹிமாவாரி கிளினிக்

கல்நார் ஒழிப்பு குடிமக்கள் வலையகம்

மாசாஸுமி ஹராடா, சமூக நல ஆராய்ச்சித் துறை முன்னாள் பேராசிரியர், மினாமாட்டா சுடி நிறுவன தலைவர், குமமாட்டோ காகுயென் பல்கலைக்கழகம்

ஹிடேகி சாட்டோ, மினாமாட்டா நோய் பாதிக்கப்பட்டோர் நிதியுதவி சங்கம்

ஷிகெரு இசாயமா, மினாமாட்டா நோய் பாதிக்கப்பட்டோர் ஒருங்கிணைப்பு மையம்

யோய்சி டானி, ஆசியா, மினாமாட்டா ஆதரவு வலையகம்

2 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

புத்தியில் எட்டாது, அவர்கள் தேவை அணு மின்சாரம் அல்ல, ஆணு ஆயுத தயாரிப்பு..

ஊர்சுற்றி சொன்னது…

ஜப்பானில் நேரடியாக பாதிப்புக்கு ஆளான நபர்களையும், அங்கிருந்து இயங்கும் அணுஉலை எதிர்ப்பு இயங்கங்களையும் நாம் ஏன் தமிழகம் வரவழைத்து, இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கக்கூடாது? ஏதேனும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தால் தெரியப்படுத்தவும்.

கருத்துரையிடுக