திங்கள், நவம்பர் 01, 2010

பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?

கையில் வைத்து பட்டாசை தூக்கி எறிந்தபோது மகேஷின் கையிலேயே அது வெடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. பட்டாசு மருந்துக்கு அருகே முகத்தை வைத்துக்கொண்டு பற்ற வைத்தபோது சுரேஷின் முகத்தோல் உறிந்துவிட்டது. கீதாவுக்கு ஏற்கெனவே ஆஸ்துமாவும் சுவாசப் பிரச்சினையும் இருந்தன. தீபாவளி நேரத்தில் அது மோசமாகிவிட்டது.


மற்றொருபுறம்...
"டமார்" என்ற மிகப் பெரிய ஓசையோடு வெடிச்சப்தம் கேட்டது. எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தபோது, அந்தக் கட்டடமே சுக்குநூறாகச் சிதறிக் கிடந்தது. கூலிக்கு பட்டாசு செய்து கொடுக்கும் குடும்பங்களில் அதுவும் ஒன்று. நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இறந்துகிடந்தார்கள். "பட்டாசு தயாரித்தபோது விபத்து, இரண்டு பேர் சாவு" என்று அடுத்த நாள் நாளிதழில் செய்தி வந்தது. இதுபோன்ற செய்தியை, ஆண்டுக்கு 20 - 30 முறையாவது பார்க்க முடிகிறது.


சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மாரி, அவளது கைகளில் உள்ள கந்தக மருந்தை எவ்வளவு தேய்த்தாலும் போவதில்லை. அவள் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. ஏனென்றால், இப்பொழுது பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் ஈடுபடக் கூடாது என்று நெருக்கடி வந்துவிட்டது. அதனால் பட்டாசு தயாரிப்பதற்கான பொருள்களை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். வீட்டிலேயே பட்டாசு தயாரித்து கொடுத்தால் போதும், கூலி கிடைத்துவிடும்.


மாரியின் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த தங்கராசுவுக்கு நரம்புக் கோளாறு. ஏதோ கெமிக்கல் அவரது உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று தற்போது அதிகம் சேர்ந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்சினை என்கிறார் மருத்துவர். இனிமேல் அவரால் பட்டாசோ, மத்தாப்போ செய்ய முடியாது. தினசரி ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.


தீபாவளி அன்று நாமும் நமது குழந்தைகளும் மகிழ்ச்சியாக வெடித்துத் தள்ளும் பட்டாசுகளைத் தயாரிக்கும்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய உதாரணம்தான் மேலே உள்ள சம்பவங்கள்.


தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.


பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்

மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு

சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்

துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்

நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம், கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்


உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.


காதுகள் ஜாக்கிரதை


மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.


ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்
இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.


பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள். குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை.


தீபாவளி என்பது வயிற்றுக்கு பாதகமில்லாத இனிப்புகள், விளக்குகள் வைத்து கொண்டாடுவதுதான். ஒரு சில நிமிடங்களில் கருகிவிடும் பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணவண்ணப் புத்தகங்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தரலாம்.


மேற்கண்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் நன்றாக சிந்தித்துப் பார்ப்போம், பிறகு நமது குழந்தைகளுக்கும் இதைக் கூறுவோம்.

இந்தச் செய்தியை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், அலுவலக - குடியிருப்பு நோட்டீஸ் போர்டு உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பரப்புவோம்.


பட்டாசுகளை தவிர்ப்பதற்கான கூடுதல் செயல்பாடுகள்:


- பள்ளி காலை வணக்கக் கூட்டங்களிலும், வகுப்புகளிலும் இது பற்றி பேசலாம் - பட்டாசுகளின் மோசமான தன்மைகள் பற்றி குழந்தைகளே சிறு நாடகத்தை நடத்தலாம்

- ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளே பட்டாசுகளின் தீமைகள் பற்றி படச் சுவரொட்டிகள், கையால் எழுதப்பட்ட நோட்டீஸ்களை தயாரிக்கலாம்.

- "பட்டாசுகள் வேண்டாம்", "பட்டாசுகளைத் தவிருங்கள்" என்கிற பேட்ஜ்களை விநியோகித்து மற்ற மாணவர்களிடமும் பட்டாசுகளைத் தவிர்ப்பதன் அவசியம் பற்றி பேசலாம்.

- "பட்டாசு வெடிக்கமாட்டோம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கடிதங்களை குழந்தைகளே எழுதலாம். இவற்றை மற்ற வகுப்புகள், பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

- இது தொடர்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் உறுதிமொழி எடுக்கலாம்.

- பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி, பாட்டாளிகள் படிப்பகம்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

10k kku vaangiyaacchu vaaanga vedikkalaaam

இரா. இளங்கீரன் சொன்னது…

பட்டாசு மறுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். கட்டுரையாளருக்கு நன்றி. பட்டாசு தவிர்ப்பதற்கு கட்டுரையாளர் கூறும் அனைத்து வழிகளையும் என் பள்ளியில் நான் கடந்த ஐந்தாண்டுகளாக கடைப்பிடித்து வருகிறேன். பட்டாசு மறுப்பு விழிப்புணர்வு விளையாட்டு விழாவை திபாவளி அன்று நடத்திவருகிறேன். ஆயினும் பயன் குறைவாகவே உள்ளது.

கருத்துரையிடுக