கிராமப்புறத்தில், மழைக் காலத்தில், பூச்சிகளின் நடமாட்டம் அதி கரிப்பதைக் காணமுடியும். ஈசல், தட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சி என பலவகையான சிற்றுயிர்கள் கண்ணில் படும். சாரை சாரையாக எறும்புகள் எங்கோ போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கரையான்கள் ஆங்கேங்கே தோன்ற ஆரம்பிக்கும்.. மற்ற பருவகாலங்களிலும் சற்று உன்னிப்பாக கவனித்தால் நம்மைச் சுற்றிலும் ஏராளமான பூச்சிகள் இருப்பதைப் பார்க்கலாம். பக்கத்து வீட்டில் யாராவது குடி வந்தால் அவரைப்பற்றி அறிந்து’ கொள்ளத் துடிக்கும் நாம் நம்மைச் சுற்றி இருக்கும் பூச்சிகளைக் கண்டு கொள்வதேயில்லை.
இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர் என்கிறார் ஒரு உயிரியலாளர். பூச்சிகள் இல்லையென்றால், காய் கறிகள், பயிர்கள் இல்லையே. மகரந்த சேர்க்கை எப்படி நடைபெறும்? நதிகள் உற்பத்தியாகும் காடுகள் பரவுமா? ஆனால் பூச்சி என்றவுடன் பாரம்பரியமாக நமக்கு ஒரு அருவருப்புதான். பட்டாம் பூச்சியைத் தவிர மற்ற பூச்சிகளை நாம் போற்றுவதில்லை. தரையில் ஊறுவதைக் கண்டால் அதை அடித்து நசுக்கத்தான் முயல்கின்றோம். கை செருப்பை நாடுகின்றது. உண்மையில் பூச்சிகள் இருப்பது சுற்றுச்சூழல் நன்றாக இருக்கின்றது என்பதற்கு ஒரு சான்று. ஆனால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவை இந்த உலகையே அழித்து விடும் . பறவைகள் இவைகளை இரையாகக் கொண்டு சுற்றுச் சூழலைச் சமன்நிலையில் வைத்திருக்கின்றன. அதனால்தான் 'மனிதர் இல்லாமல் இவ்வுலகு இருக்கலாம். ஆனால் பறவைகள் இல்லாமல் இருக்க முடியாது' என்றார் சலிம்அலி.
பூச்சிகள் என்றால் என்ன? உடல் மூன்று பாகமாக, மூன்று ஜோடிக் கால்களுடன், இறக்கைகளுடன் கூடிய உயிரினம். உலகிலுள்ள சிற்றினங்களில் எண்ணிக்கையில் அதிகமானது பூச்சிகள்தாம். பத்து லட்சத்திற்கு மேற்பட்டது. இன்னும் கண்டறியாத பல இனங்களும் உண்டு. சின்னஞ்சிறிய, ஒரு புள்ளிபோன்ற பூச்சிகளிலிருந்து 15 செ.மீ. நீளமான கோலியாத் வண்டு என உருவில் பல விதம் உண்டு. நாயின் மேலிருக்கும் உண்ணியும், மனிதர் தலையில் உள்ள பேனும் பூச்சிகள்தாம். இந்த உயிரினங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழுகின்றன... நிலம், நீர், ஆகாயம், நிலத்தடி, சில கடலிலும். உருவில் சிறியதாயிருப்பது, பறக்கும் இயல்பு, வெப்பத்தையும் குளிரையும் தாங்கிக்கொள்ளும் திறன் ஆகியவை காரணமாக பூச்சிகள் சகலவிதமான வாழிடங்களிலும் வாழ தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடிகின்றது. இவை டைனோசர்களுக்கும் முன்பே இவ்வுலகில் இருந்தன. அணுகுண்டு தாக்குதல் பேரழிவால் மற்ற உயிரினங்கள் அழிந்தாலும் பல பூச்சிகள் பிழைத்திருக்கும். தற்காப்பு உத்தி கள் மூலம் இவை இரைகொல்லிகளிடமிருந்து தப்புகின்றன. மரப்பட்டை யில் நிறத்திலேயே இருப்பதால் சில்வண்டு (Cicada) ஒன்றை மிக அருகிலிருந்தாலும் பார்ப்பது கடினம். மற்ற உயிரினங்கள் பயன்படுத்த முடியாத பொருட்களை பூச்சிகள் உணவாகக் கொண்டு உயிர்பிழைக்கின்றன. பழைய புத்தகங்களில் துளையிட்டு வாழும் ராமபாணப் பூச்சி, காகிதத்தையும் புத்தகக் கட்டமைப்பில் உள்ள பசையையும் தின்று வாழ்கின்றது. பூச்சிகள் வாழ்வில் உண்டு பல உருமாறல்கள்... சிறு முட்டையிலிருந்து புழுவாக வெளி வந்து, கூட்டுப் புழுவாக மாறி, வண்ணங்கள் நிறைந்த கண்கவர் உயிரினமாக மாறும்; பட்டாம்பூச்சி போல.
நம் நாட்டில் பறவைகளைப் பற்றி அறிய, பாலூட்டிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, கடல்வாழ் பாலூட்டிகளைப் பற்றி படிக்கக்கூட நூல்கள் உண்டு. ஆனால் பூச்சிகளைப் பற்றிய கையேடு (Field guide) ஏதும் கிடையாது. ஒரு பூச்சியைப் பார்த்தால் அது என்ன பூச்சி, பல உருமாறல்கள் என்று கண்டுகொள்ள கையேடு உதவும். புதுச்சேரியில் காட்டுயிர் பேணலில் முதுகலைப்பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் வாங்கிய, பெங்களூரில் வாழும் மீனாட்சி வெங்கடராமனுக்குப் பூச்சிகள் மீது தனி ஈடுபாடு. காட்டுயிர் பாதுகாப்புப் பற்றி பேசுவோர் யானை, புலி போன்ற கம்பீரமான விலங்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதைக் கவனித்து, அதற்கு எதிர்வினையாகப் பூச்சிகளைப்பற்றி ஆராய ஆரம்பித்தார். இந்த சிற்றுயிர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அடிப்படை நூல்கூட நம் நாட்டில் இல்லை என்பதையறிந்து, தானே ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். மீனாட்சி எழுதி அண்மையில் வெளியான A Concise Field Guide to Indian Insects & Arachnids (இந்திய பூச்சிகள் & சிலந்திகள்: ஒரு கையேடு) இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது.
1941இல் சலீம் அலி The Book of Indian Birds என்ற நூலை வெளியிட்டபின் லட்சக்கணக்கான பேருக்கு அந்தப் புத்தகம் புறவுலகின் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியது. இதுவரை பனிரென்டு பதிப்புகள் வந்து விட்டன. அது போன்ற ஒரு நூல்தான் மீனாட்சியின் புத்தகமும். பூச்சி உலகிற்கு ஒரு சாளரத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றார். நூலைப் புரட்டும்போது நமக்குப் பழக்கமான பல பூச்சிகளின் படங்களைப் பார்க்கின்றோம். ஆனால் விவரங்கள் நாம் அறியாதவை. கரப்பான்பூச்சி, மின்மினிப்பூச்சி, பலவகை விட்டில் பூச்சிகள் என. வேளாண்மை, மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளில் பூச்சிகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. Entamology (பூச்சியியல்) என்ற இந்தத் துறையில் பல்வேறு நோக்கிடில் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. மலேரியா போன்ற நோய்களைத் தடுப்பதில் பல புதிய புரிதல்கள் ஏற்பட்டன. தொழில் துறையில் பூச்சிகளிடமிருந்து மனிதர் கற்றுக் கொண்ட பாடங்கள் பல. ஹெலிகாப்டரின் கோட்பாடுகள் தட்டாம் பூச்சியின் பறக்கும் முறையிலிருந்து கற்றறியப்பட்டன.
எறும்பு, கரையான், குளவி போன்ற சில உயிரினங்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழிடங்களை அமைக்கின்றன. அண்மையில் முதுமலைக் காட்டில் இரண்டு மீட்டர் உயரமான ஒரு கறையான் புற்றைப் பார்த்தேன். இலைகளை வைத்து ஒட்டி கூடுகள் கட்டும் ஒரு எறும்பினம் நம்மூர்க்காடுகளில் உண்டு. சங்க இலக்கியத்தில் இந்த இன எறும்பு முயிறு என்று குறிப்பிடப்படுகின்றது. (ஐங்குறுநூறு 99:-2) இந்த எறும்பின் கூட்டிலேயே துளைபோட்டு அதில் கூடுவைத்து, குஞ்சு பொரிக்கும் பறவை ஒன்றுண்டு. இந்த செந்நிற மரங்கொத்தி (Rufous Woodpecker) ஒன்று அத்தகைய கூட்டில் நுளைவதை ஒரு முறை பந்திப்பூர் காட்டில் நான் பார்த்திருக்கின்றேன்.
அந்த இலைக்கூட்டில் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தப் பறவையின் குஞ்சுகளும் அதில் இருக்கும்.
டி. என்.ஏ. பெருமாள் நம் நாட்டின் ஒரு முன்னோடி காட்டுயிர் புகைப்படக்கலைஞர். அவரது படங்களால் ஈர்க்கப்பட்டு காட்டுயிர் பேணலில் ஈடுபட்ட இளைஞர் சிலரை நான் அறிவேன். பெருமாளின் சிறப்பியல்பு தனது வித்தையை தாராளமாக இளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது. ஒவ்வொரு ஆண்டும் பந்திப்பூரில் காட்டுயிர் புகைப்படப் பட்டறை ஒன்று நடத்துகின்றார். நடைமுறைக்கு ஏற்ற அறிவுரை கொடுப்பார். பொந்திலிருக்கும் ஆந்தைக் குஞ்சுகளைப் படமெடுக்கச் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள் என்பார். ஒரு முறை வெண்ணாந்தை தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதை இவர் படமெடுக்க முயன்ற போது, தன் கூரிய நகங்களால் அவரது தலையைப் பிராண்டி விட்டபோது கற்றுக்கொண்ட பாடம். பூச்சிகளைப் பல ஆண்டுகளாக பெருமாள் படமெடுத்து வருகின்றார். எழுபது வயதான பெருமாள் வெகு எளிதாக இன்று டிஜிட்டல் போட்டோ கிராபிக்கு மாறியிருக்கின்றார். தனது படங்களையும் மீனாட்சியின் ஆய்வையும் சேர்த்து ஒரு நூல் உருவாக்கும் எண்ணம் இவருக்கு உதித்தது. ஆறு ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்குப்பின் ஒளிரும் இந்த அரிய நூல் உருவாகியுள்ளது.
காட்டுயிர் ஆர்வலர்களிடையே டிஜிட்டல் போட்டாகிராபி ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கி விட்டது. வேண்டிய காமிராக்களும் லென்சுகளும் இங்கேயே கிடைக்கின்றன. ஃபிலிம் வீணாகின்றதே என்ற கவலை கிடையாது. அதிவேகமாக 1/1000 வினாடி என்ற வேகத்தில், பறக்கும் பட்சிகளையும், தாவி ஓடும் மான்களையும் எளிதாகப் படமெடுக்கலாம். வெளிச்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அண்மையில் நடந்த விம்பிள்டன், உலகக் கால்பந்து கோப்பை போட்டிகளின் படங்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்களே. பல இளைஞர்கள், அதிலும் கம்ப்யூட்டர் உலகில் பணிபுரியும் பலர், பறவைகளைப் படமெடுப்பதைப் பொழுதுபோக்காக தெரிந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களிடம் தான் அதிநவீன காமிரக்களை வாங்க வசதி உண்டே. லடாக் வரைசென்று அரிய புள்ளினங்களைப் படமெடுக்கின்றனர். அதே போல மேக்ரோ லென்சுகளை வைத்து பூச்சிகளைப் படமெடுப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பன்னாட்டு பிரபலம் கோவை ஜெயராமன். ஒரு முறை இவரோடு ஒரு புதர்க்காட்டில் சுற்றிக் கொண்டிருந்தபோது, தரையிலிருந்து படர்ந்திருந்த ஒரு சிலந்திக்கூட்டைக் காட்டினார். ‘இப்பொது பாருங்கள்’ என்று ஒரு சிறு குச்சியின் முனையால் அந்தக் கூட்டின் வளையை லேசாகத் தட்டினார். குபுக்கென்று ஒரு சிலந்தி வெளியே வந்தது. அதன் முதுகில் பல சிறு சிலந்திகள் இருந்தன. இது தான் wolf spider என்றார். வலையில் ஏதோ இரை விழுந்து விட்டதென்று கருதி அது வெளியில் வந்தது. அதைப் படமெடுத்தார் ஜெயராமன். இவரது பல படங்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
பூச்சிகள் உலகம் வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றது. 1942ல் உருவாக்கப்பட்ட DDT என்ற பூச்சிக் கொல்லி மருந்து, பல அவதாரங்கள் எடுத்து சுற்றுச்சூழலை வேதியல் ரீதியாகச் சீரழித்தது. தீமைதரும் பூச்சிகளைக் கொல்ல முற்பட்ட போது அங்கிருந்த எல்லா பூச்சிகளும் கொல்லப்பட்டன. ஒரு பூச்சியினத்தைக் குறிவைத்து மருந்து தெளிக்கும்போது ஐம்பது பூச்சியினங்கள் அழிகின்றன. ஆனால் DDT யைக் கண்டுபிடித்த பால் முல்லர் நோபல் பரிசு பெற்றார். இருபது ஆண்டுகள் கழித்துதான் DDTயின் விளைவு உணரப்பட்டது. அதன் பின்னர் இந்த மருந்து தடை செய்யப்பட்டது.
உயிரினங்கள் ஒருபுறம் அற்றுப் போய்கொண்டிருக்க, காட்டுயிர் ஆர்வலர்களுக்கு அவைகளை அவதானிக்க அதி நவீன இருகண் தொலை நோக்கிகள், சிறு பூச்சிகளை பார்க்க விளக்குடன் கூடிய லென்சுகள் போன்ற பல புதிய வசதிகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. சிறந்த நூல்கள் வருகின்றன. பயணம் செய்வதும் எளிதாகி விட்டது. இணையத் தளத்தில் டிக்கெட் பதிவு செய்யலாம். புறவுலகு நம்முன் விரிந்து கொண்டேயிருக்கின்றது. நாம் நேரத்தை அதற்கு ஒதுக்க வேண்டும். செய்தால் சொர்க்கத்தில் உங்களுக்கு இடம் நிச்சயம்.
-சு.தியடோர் பாஸ்கரன்
•
*நற்றிணை 17: 10-11
A Concise Fiele Guide: Indian Insects & Arachnids. by Meenakshi Venkataraman. Simova Education and Research. Bangalore 2010. colour photos 350. pages. 570 price 1600.
நன்றி: உயிர்மை, ஆகஸ்ட் 2010
2 கருத்துகள்:
நன்றி.
//பறவைகள் இவைகளை இரையாகக் கொண்டு சுற்றுச் சூழலைச் சமன்நிலையில் வைத்திருக்கின்றன.//
பறவைகள் மாத்திரமல்ல, விலங்குகளும்...ஏன் மனிதனுமே பூச்சிகளை உண்கிறான். அமேசன் காட்டுவாசிகள்; இந்தோனேசிய மழைக்காட்டுப் பழங்குடியினர்; ஆபிரிக்கப் பழங்குடியினர்; ஏன் நம் இந்திய; இலங்கை வேடர், குறவர், இருளர் மற்றும் தாய்லாந்து; கம்பூச்சியா, பர்மா சாதாரணமக்கள் தம் அன்றாட உணவில் கரப்பன்பூச்சி, தேள்; பூரான்; தும்பி,வெட்டுக்கிளி; வண்டுகள் என்பவற்றை உண்பதையும் சந்தைகளில் அவை விற்பனை செய்யப்படுவதையும் நசனல் யீயோகிரபியில் பார்த்தேன்.
கிழக்காசிய நாட்டில் இதை உண்டோர் மாடமாளிகைகளில் வாழும் பெரும் பணம்;கல்வி படைத்தோர்.
அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
மிக அருமையான உயிரறிவியல் கட்டுரை!
கருத்துரையிடுக