தொட்டகுப்பி கிராமம். பெங்களூருவின் மேற்குக் கோடியில், நகரில் ஒரு காலையும் மற்றொன்றைக் கிராமச் சூழலிலும் ஊன்றிக் கொண்டிருக்கின்றது. சில மாதங்களுக்கு முன் இங்கு ஒரு வீடு கட்டி (‘அமராவதி’) குடியேறினோம். புது வீட்டில் முதன் முறையாகத் தூங்கியபோது கொஞ்சம் பயமாகவும் மனம் கலக்கமாகவும் இருந்தது. தானும் அவ்வாறு உணர்ந்ததாக சில தினங்கள் கழித்து திலகா என்னிடம் பகிர்ந்து கொண்டார். எப்போதுமே பெருநகரின் பல வித ஒலிகளுக்கிடையே உறங்கிப் பழகிப்போன எங்களுக்கு கிராமப்புறத்தின் அமைதி சிறிது அச்சமூட்டுவதாக இருந்தது. எங்கள் செல்லப் பூனை மைக்கண்ணி புது வீட்டிற்கு வந்த நாளில் ஓடிவிட்டதும் சஞ்சலத்திற்கு ஒரு காரணம். ஒரு கண்ணைச் சுற்றிக் கருவட்டம் கொண்ட மைக் கண்ணி சென்னை திருவான்மியூரின் ஒரு தெருப்பூனை. எங்கள் வீட்டில் வந்து மீன் சாப்பிட்டுப் பழகி எங்களைத் தத்து எடுத்துக் கொண்டது. அதை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து இங்கு கொண்டு வந்தோம். திறந்தவுடன் விட்டது ஓட்டம். என்னால் முடிந்தவரை அதன் பின்னால் ஓடிப்பார்த்தேன். முடியவில்லை. பூனையில்லாமல் இந்த வீட்டினுள் நுழையமாட்டேன் என்ற திலகாவை ஆசுவாசப்படுத்துவது சிரமமாயிருந்தது. பூனைகள் வழி கண்டுபிடித்து திரும்பிவிடும் அம்மா என்ற எலெக்ட்ரீஷியனின் சமாதானமும் எடுபடவில்லை.
காலையில் நடைப்பயிற்சிக்கு நான் இங்கே ஒரே தடத்தில் நடக்க வேண்டியதில்லை. நாளுக்கு ஒரு வழியாக மண் சாலை, ஒற்றையடிப் பாதை, ஏரிக்கரை எனச் சுற்றலாம் (cross country walking). ஆனால் பட்டி நாய்கள் மீது சற்று கவனமாக இருக்க வேண்டும். மரங்கள் இங்கு சகட்டு மேனிக்கு வெட்டப்படுகின்றன என்றாலும் இன்னும் பல இடங்களில் மரங்கள் தோப்புகளாக நிற்கின்றன. அதிலும் கிராமதேவதைக் கோயில்களைச் சுற்றி தொன்மை வாய்ந்த மரங்களைப் பார்க்கலாம். மா, பலா, அரசு, ஆல் போன்ற மரங்களும் வெகு உயரமாக, வேறு எங்கும் பார்க்கமுடியாத அளவு உயர்ந்து நிற்கின்றன. நம் நாட்டில் இருவகை ஆலமரங்கள் உண்டு. பொதுவாக நாம் காணக்கூடியது, விழுதுகள் உள்ள Ficus benghalensis என்ற வகை. அடையாறு ஆலமரம் இந்த வகையைச் சார்ந்ததுதான். Ficusmysorensis என்ற விழுது இல்லாத ஒரு வகை ஆலமரத்தை இந்தப் பகுதியில் காணமுடிகின்றது. பழம் மஞ்சளாக இருக்கும். புளியமரங்கள் பரந்து, மரவிதானம் சிதைக்கப்படாமல் முழுமையாக கம்பீரமாக நிற்கின்றன. வேம்பன் அரிதாக இருக்கின்றது. வீட்டில் எப்படியாவது ஒரு வேப்பமரத்தை நட்டுவிட வேண்டும் என்று போகுமிடமெல்லாம் வேப்பங்கன்று ஒன்றை திலகா தேடிக்கொண்டிருக்கின்றார். வறண்ட பிரதேசத்தில்தான் வேப்பமரம் செழித்து வளரும். சௌராஷ்ட்ராவில் இவை உயர்ந்து வளர்வதைப் பார்க்கலாம். காந்திநகரில் (குஜராத்தின் தலைநகர்) ஆயிரக்கணக்கில் வேப்ப மரங்கள் உள்ளன. டெல்லியில் உள்ள பார்லிமென்ட் சாலையில் இருபுறமும் நிழல் தந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மரங்கள் வேம்பன்தான்.
எங்கள் வீடு கிழக்குப் பார்த்தது. காலையில் நாளிதழ்களை எடுக்க கதவைத் திறக்கும்போது நேர் எதிரில் ஒரு பாதாம் மரத்தினூடே செம்பந்தாக கதிரவன் எழுவது தெரியும். ஒருநாள் கேட்டிற்கருகில் நாங்கள் நட்டிருக்கும் மூங்கில் புதரில் ஒரு பச்சைநிற சிலந்தி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. பச்சை சிலந்தி? ஓடிப் போய் அலமாரியிலிருந்து க்ரியாவின் SPIDERS: An Introduction என்ற நூலைப் புரட்டிப் பார்த்தேன். அந்த சிலந்தியின் பெயர் Green Iynx. இது ஒரு வலைபின்னாத சிலந்தி என்ற விவரமும் கிடைத்தது. மூடுபனி அடர்ந்திருந்த ஒரு காலை, அருகிலுள்ள செடி கொடிகளில் பல சிலந்திக் கூடுகளைக் காணமுடிந்தது. பனித்துளிகள் ஒட்டிக்கொள்வதால் அவை வெண்மையாக மெல்லிய வெள்ளி இழைகளில் பின்னினாற் போல் காட்சியளித்தன. மூன்று வகையான சிலந்திகளை நாங்கள் அடையாளம் காண முடிந்தது.
வீட்டின் முன்னுள்ள ஒரு பாதாம் மரத்தின் காய்களைத் தின்ன இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு குரங்குக் கூட்டம் வருகின்றது. எங்கள் நாய்கள் அல்லியும் பாரியும் தலைதெறிக்க குரைத்து வீட்டைச் சுற்றி ஓடினால் வானரங்கள் வந்து விட்டதென்று அர்த்தம். அவைகளுக்கு எட்டாத உயரத்தில், சுவற்றில் அவை உட்கார்ந்து நாய்களுக்கு எரிச்சல் ஊட்டும். நம் ஊர்க்குரங்குகளுக்கு Bonnet macaque என்று பெயர். தலையில் ஒரு தொப்பி போட்டது போல் மயிர் அமைந்திருப்பதால் இந்தப் பெயர். இவைகளைத் தென்னிந்தியாவில் மட்டுமே காணமுடியும். வட இந்தியாவில் இவைகளுக்குப் பதில் Rhesus macaque என்ற குரங்கு இருக்கின்றது.
இங்கு எப்போதும் ஏதாவது ஒரு பறவையின் குரல் கேட்டுக்கொண்டிருக்கும். காலையில் ஒரு முரசு கொட்டுவது போல் பும் பும் என்ற செம்பூத்தின் குரல் கேட்கும். அதை எளிதாகப் பார்க்கவும் முடிகின்றது. வீட்டின் பின்புறம் காபி குடித்துக்கொண்டே நாளிதழ்களைப் புரட்டும் போது, முன்னே உள்ள முருங்கை மரத்திலுள்ள சிறு மஞ்சள் வண்ணப் பூக்களின் தேனைத் தேடி இருவகையான தேன் சிட்டுகள் வருகின்றன. பின்னர் இரு வாலாட்டிக் குருவிகள் வருகை தருகின்றன (‘அவள் பெயர் தமிழரசி’யில் வரும் குண்டியாட்டிக் குருவிகள்தான்). தரையில் இறங்கியவுடன் வாலை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டும். தலைக் கனம் மிகுந்த இந்த பட்சி, தன்னைப் பூமி தாங்குமா என்பதையறியத் தான் வாலை ஆட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்கிறது என்பது ஐதீகம். தமிழ்நாட்டில் வண்ணாந்துறைகளில் இவை காணப்படுவதால் இதற்கு வண்ணாத்திக் குருவி என்றும் ஒரு பெயர் உண்டு. மாங்குயில், மணிப் புறாவை அடிக்கடி காண முடிகின்றது. இந்த இடத்தில் உட்கார்ந்தபடியே இதுவரை முப் பத்திமூன்று வகைப் புள்ளினங்களை நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம். செம்பருந்து போல சில அரிய பறவைகளும் அவ்வப்போது தென்படுகின்றன. முன்னிலவு நாட்களில் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டெழும் ஆள்காட்டிக் குருவியின் குரலைக் கேட்கலாம்.
மழை பெய்து ஓய்ந்திருந்த ஒருநாள் இரவு, வீட்டின் பின்புறம் இரு மரங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மின்மினிப் பூச்சிகளைப் பார்த்தோம். சீரியல் செட் மாதிரி அவை விட்டு விட்டு ஒளிர்ந்தன. இது ஒரு சிறிய வண்டுதான். இனப்பெருக்கக் காலத்தில் தனது ஜோடியை ஈர்க்க இந்த ரசாயன ஒளியை அது உமிழ்கின்றது. ஒன்றிரண்டு மின்மினிப் பூச்சிகளைப் பலமுறை பார்த்திருந்தாலும், இவைகளை ஒரு கூட்டமாக என் வாழ்வில் இதற்கு முன் ஒருமுறைதான் கண்டிருக்கின்றேன், நாகர ஹொளே காட்டில்.
மைக்கண்ணி கதையை முடிக்கவில்லையே? அடுத்த நாள் மதியம் பாத்திரங்கள் கழுவும் இடத்திற்குச் சென்ற திலகா அங்கே பேசினுக்கு அடியில் மைக்கண்ணி, முந்தைய இரவு மழையில் நனைந்ததால் நடுங்கிக் கொண்டு ஒரு மூலையில் இருந்ததைக் கண்டு கூவியே விட்டார். எலெக்ட்ரீஷியன் சொன்னது சரிதான். அதன் பின்னர் பூனை இந்தச் சூழலுக்கு நன்கு பழகி விட்டது. வெளியே சுற்றிவிட்டுத் தூங்க வீட்டிற்கு வந்து விடுகின்றது. சில சமயம் வயல் எலி ஒன்றைக் கொண்டு வந்து நாங்கள் பார்க்கும் இடத்தில் எங்களுக்குக் காணிக்கை போல போட்டு விடுகின்றாள். வயல் எலி பழுப்பு வெண்மையாக இருக்கும். ரோமப்போர்வை மிருதுவாகப்பட்டு மாதிரி இருக்கும்.
இந்த வீட்டிற்கு வந்த மூன்றாம் நாள் இரவு பத்து மணிக்கு மேல், காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்த விளக்கைப் போட்டேன். தூரத்தில் ஒரு நரி ஒளிக்கற்றையின் குறுக்கே போவதைக் காண முடிந்தது. சில இரவுகளில் இவை ஊளையிடுவதைக் கேட்டிருக்கின்றோம். இன்னும் சில ஆண்டுகளில் நரி, ஆள் காட்டிக் குருவி, வயல் எலி, மின் மினிப்பூச்சிகள் எல்லாமே இங்கு அற்றுப்போய்விடும். இன்று நாங்கள் காண்பது துரிதமாக மறைந்து கொண்டிருக்கும் இந்தியக் காட்டுயிரின் ஒரு மின்னல் வெட்டுத் தோற்றமே என்ற உணர்வு அவ்வப்போது தலைகாட்டுகின்றது.
-சு.தியடோர் பாஸ்கரன்
நன்றி: உயிர்மை
5 கருத்துகள்:
தியோடரின் அருமையான கட்டுரை , நன்றி
miga arumaiyaana pathivu nandri.viruppam ullavargal thiru muhamed ali mettupalayam, avarkalin yaanaikal azhiyum peruyir, paambu endraal, vattamidum kazhugu. matrum eyarkai seithikal aakiya puththagangalai padikalaam.
Azhagaana katturai.
katturaiyin mudivil manam ganaththu ponadhu. Dhinam dhinam iyarkkaiyin oru pagudhiyay azhiththukkondu irukkirom.
கட்டுரையின் கடைசி வரிகள் மிக கனமான சோகத்தை உண்டாக்கின.இந்த நிலையை மாற்ற முடியாத சோர்வு ஒரு கையாலாகாத மனநிலையை உண்டாக்குகின்றது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/
Rightly said! I was lapping up it all with the sense of urgency for where do we get to see such wilderness, variety of creatures! simple language bur brought the scene alive!
கருத்துரையிடுக