பூவுலகு சுற்றுச்சூழல் இதழை படித்தவர்கள் அனைவரும் பாராட்டியதால் மாதம் இருமுறை இதழாக வெளிவந்த பூவுலகை, மாத இதழாக கொண்டுவரத் துணிந்தோம்.
பூவுலகு என்ற பெயரை மத்திய அரசில் பதிவு செய்து விட்டதைத் தொடர்ந்து இனி பூவுலகு தனிச்சுற்று இதழாக இல்லாமல், பொதுவிற்பனைக்கான இதழாக வெளிவருகிறது.
பூவுலகு இதழை மேலும் அதிகமான வாசகர்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சென்னை புத்தகத்திருவிழாவிலும் அரங்கு அமைக்கத் தீர்மானித்தோம், அதற்கான விலை மிக அதிகம் என்று தெரிந்திருந்தபோதிலும்..!
சென்னை புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் : 233இல் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டது. பூவுலகு இதழோடு பூவுலகின் நண்பர்கள் சார்பில் பதிப்பிக்கப்பட்ட சூழல் சார்ந்த பல்வேறு புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு பதிப்பகங்கள் சுற்றுச்சூழல் சார்ந்து வெளியிட்ட தமிழ், ஆங்கில புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
சூழல் குறித்து வெளிவந்துள்ள குறும்படங்களும், ஆவணப்படங்களும் இங்கு விற்பனைக்கு கிடைக்கும்.
இவை எல்லாம் அரங்கில் இருந்தாலும், பலரது கவனத்தையும் கவர்வது அரங்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் தூக்கனாங்குருவியின் கூடுகள்தான்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரையும் கவரும் அம்சமாக அக்கூடு உள்ளது. நாகரீகமான பெண்கள் சிலர், தங்கள் குழந்தைகளிடம், "பேபி, திஸ் ஈஸ் நெஸ்ட், மேட் பை சம் பேர்ட்ஸ் ஃபார் இட்ஸ் சில்ட்ரன்" என்று அறிமுகப்படுத்துகின்றனர்.
தலைநிறைய முடிவளர்த்த சில கலைஞர்கள், எங்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அந்த தூக்கணாங்குருவி கூடுகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
ஒரு கனவான் எங்களிடம் வந்து மிகவும் பவ்யமாக, இந்தக் கூட்டை எப்படி செய்தீர்கள் இதற்கு ஏதாவது மெஷின் இருக்கிறதா என்று விசாரித்தார்.
இந்தக்கூட்டை பார்த்தவர்களில் பலரும், இந்தக்கூட்டை விலைக்கு தருவீர்களா என்று கேட்கின்றனர்.
இதையெல்லாம் தாண்டி, பூவுலகின் நண்பர்கள் மீண்டும் செயல்படுவது பலருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. மறைந்த தோழர் நெடுஞ்செழியன் மற்றும் அசுரனின் நண்பர்கள் மகிழ்வுடனும், உரிமையுடனும் அரங்கிற்கு வந்து செல்கின்றனர்.
பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரைத்தெரியாத பலரும்கூட, குறிப்பாக இளைஞர்கள், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் ஆர்வமும் தொனிக்க பேசுகின்றனர்.
இதழை புரட்டிப்பார்த்து இதுபோன்று தமிழில் ஒரு இதழா என்று ஆச்சரியத்துடன் வாங்கி செல்கின்றனர்.
சந்தா செலுத்துமாறு கேட்டபோது சிலர், இந்த இதழை படித்துவிட்டு பிடித்திருந்தால் சந்தா கட்டுகிறேன் என்று கூறினர்.
இந்த இதழில் நாங்கள் எழுதலாமா என்று சிலர் கேட்டனர். (எழுதலாம்)
இந்த இதழில் எங்கள் பகுதி செய்திகளை, சிரமங்களை எழுதுவீர்களா என்று பலர் கேடடனர். நீங்களே எழுதி அனுப்புங்கள். பிரசினையின் மு்க்கியத்துவத்தை பொறுத்து வெளியிடுவோம் என்று பதில் சொன்னோம். நம்பிக்கையுடன் விடை பெற்றனர்.
பூவலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல் ஒன்றை மறுபதிப்பு செய்து கொண்டிருக்கிறோம். அந்த நூலின் பெயர்:
இன்னமும் மீதம் இருக்கிறது நம்பிக்கை!
6 கருத்துகள்:
நானும் பார்த்தேன். உங்கள் அரங்கிற்கு பலரும் அந்த குருவிக்கூடுகளை பார்க்கத்தான் வந்தனர். நானும் அவ்வாறே.
ஆனால் சில புத்தகங்களையும் வாங்கினேன். பூவுலகு இதழையும் வாங்கினேன். படித்தபின் சந்தா கட்டுவதென முடிவெடுத்தேன்.
முற்றிலும் புதிய உலகம் ஒன்றை எனக்குக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி.
//ஒரு கனவான் எங்களிடம் வந்து மிகவும் பவ்யமாக, இந்தக் கூட்டை எப்படி செய்தீர்கள் இதற்கு ஏதாவது மெஷின் இருக்கிறதா என்று விசாரித்தார்.//
Please answer this question.
வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்த “ இயற்கை : செய்திகள், சிந்தனைகள்- முகம்து அலி” புத்தகத்தை தங்களின் அரங்கில் வாங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி. தங்கள் முயற்சி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
கோகுல்
பூவுலகு மாத இதழாக பொது விற்பனைக்கு வந்திருப்பதுபற்றி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! விருபா இணையத் தளத்தில் 33வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பதிப்பகங்கள் மற்றும் அரங்கு எண்களை (http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx) வெளியிட்டுள்ளார்கள். 2-3 நாள்களுக்கு முன்பேயே அதன் மூலம் பூவுலகின் நண்பர்கள் அரங்கு இருக்கிறது என அறிந்து மகிழ்ந்தேன். சுற்றுச் சூழல் சார்ந்த புத்தகங்களையும் (வம்சி புக்ஸ்-பூவுலகு வெளியீட்டில் வந்த புத்தங்களும் இங்கு கிடைக்கும் என நினைக்கிறேன்) குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் பார்த்து வாங்க ஆவலாக இருக்கிறேன். பூவுலகு இதழ் நல்ல வரவேற்பைப் பெறவும் பூவுலகின் பணி சிறக்கவும் நல் வாழ்த்துக்கள்!
;-) அந்த தூக்காணாங்குருவி மேட்டர் நல்லாருக்குண்ணே
தூக்கணாங்குருவி கூட்டை உடல் அழுக்கு நீக்கும் Brush ஆக சிலர் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அது சரியானதுதானா? ஆளாளுக்கு Brush ஆக யூஸ் செய்துதான் தூக்கணாங்குருவி இனம் அழியும் நிலைக்கு போய்விட்டதா? :-(
கருத்துரையிடுக