வியாழன், ஜூன் 25, 2009

திருவண்ணாமலையில் ஜிண்டால் சுரங்கம் - தோண்டத் தோண்ட ஊழல்

மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தால் பாதுகாக்கப்பட்ட காடுகளாக (Reserve Forest) அறிவிக்கப்பட்டுள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலைப்பகுதிக்குள் சுமார் 4 லட்சம் மரங்கள் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மலைப்பகுதிகளில் சுமார் 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மலைப்பகுதியில் சுமார் 607.20 ஹெக்டேர் நிலத்தில் இரும்புத்தாதுவை பிரித்தெடுக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) கடந்த 26.5.2000 அன்று தமிழ்நாடு அரசிடம் மனு செய்தது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மலைப்பகுதி பாதுகாப்பு அதிகார அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று இந்த மலைப்பகுதியில் 325 ஹெக்டேர் பகுதியில் சுரங்கம் அமைத்து இரும்புத்தாதுவை பிரித்தெடுக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் கனிமவள இயக்குநரகம் பரிந்துரை செய்தது.

இதற்கிடையில், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை பகுதியில் இரும்புத்தாது பிரித்தெடுக்கும் சுரங்கத் தொழிலில் ஜிண்டால் குழுமத்தை தனியார் துறை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு செயல்பட டிட்கோ முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஜிண்டால் குழுமமும், டிட்கோவும் இணைந்து "எஸ்கார்ட் ஒப்பந்தம்" என்ற அடிப்படையில் இணைந்து "தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம்" (Tamil Nadu Iron Ore Mining Corporation - TIMCO) என்ற புதிய நிறுவனமாக செயல்படுவதற்கான ஒப்பந்தம் கடந்த 24-05-2005 அன்று கையெழுத்தானது. 'எஸ்கார்ட்' என்ற சொல் பரவலாக பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரை பணயம் வைத்து முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு 'ஜிண்டால்' என்ற முக்கிய நிறுவனத்திற்கு அத்தகைய பாதுகாப்பை 'டிட்கோ' நிறுவனம் வழங்குகிறது. அதிகாரிகளின் உயிருக்கு பதிலாக திருவண்ணாமலை பகுதி வாழ் மக்களின் உயிரைப் பணயம் வைத்து 'ஜிண்டால்' குழுமத்தை பாதுகாக்க 'டிட்கோ' முடிவெடுத்துள்ளதுபோலும்! இதற்கான ஒப்பந்தம் வெறும் 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளில் தயாரிக்கப்பட்டு, பதிவுகூட செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிறுவனத்தில் 99 சதவீத பங்குகள் ஜிண்டால் குழுமத்திடமும், 1 சதவீத பங்கு 'டிட்கோ' நிறுவனத்திடமும் இருக்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மில்லியன் டன் இரும்புத்தாதுவை பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் வெறும் 1 சதவீத பங்கை மட்டுமே கொண்டிருக்கும் 'டிட்கோ' நிறுவனத்திற்கு, 'டிம்கோ' நிறுவனத்தின் நிர்வாகத்தில் என்ன அதிகாரம் இருக்கும் என்பது வெட்டவெளிச்சம்.

இதற்கிடையில், இந்த 'டிம்கோ' நிறுவனம் சார்பில் கவுத்திமலை - வேடியப்பன் மலைப் பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு விரைவில் அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் "டிம்கோ" ஒரு அரசு நிறுவனம் அல்ல!" என்று மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 'டிம்கோ' நிறுவனத்தில் 'டிட்கோ' நிறுவனம் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், எதிர்காலத்தில் 'டிட்கோ' நிறுவனத்திற்கு 0.02 சதவீத பங்குகளை (மட்டுமே) ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'டிம்கோ' என்ற பெயரில் 'டிட்கோ' நிறுவனமும், 'ஜிண்டால்' குழுமமும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி 'டிம்கோ' நிறுவனத்தில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் லாபம் வந்தால் தமிழக அரசுக்கு வெறும் 20 லட்ச ரூபாயும், 'ஜிண்டால்' நிறுவனத்துக்கு மீதமுள்ள 99 கோடியே 80 லட்ச ரூபாயும் கிடைக்கும். அதாவது இயற்கை வளங்களையும், அப்பகுதி மக்களுடைய வாழ்வுரிமையையும் பலி கொடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு வெறும் 0.02 சதவீதம் (அதுவும்கூட லாபக் கணக்கு காட்டினால்தான்), மீதமுள்ள அனைத்தையும் ஜிண்டால் குழுமம் அள்ளிச் சென்றுவிடும்.

இந்த அபத்தமான ஒப்பந்தம் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாடு அரசுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதால் திரைமறைவு பலன் அடையப்போகும் நபர்கள் யார்? யார்? என்பதை எல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை ஜிண்டால் குழுமத்தின் நிழல் நிறுவனமான டிம்கோ நிறுவனத்துக்கு மாற்றி வழங்க வேண்டும் என்று 'டிட்கோ' நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் தொழில் துறையிடம் கோரியுள்ளது.

மேலும் கவுத்திமலை - வேடியப்பன் மலைப் பகுதியில் அழிக்கப்படவிருக்கின்ற மரங்களைப் போல இருமடங்கு மரங்களை 'ஜிண்டால்' நிறுவனம் நடுவது குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் பரிந்துரை பரிசீலனையில் உள்ளதால், இந்த மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.

வனப்பகுதியில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு செய்தால், அதன் பின்னர் சுரங்கம் அமைப்பதற்கான "துல்லிய நிலப்பகுதி" (Precise Area) வரையறுக்கப்பட்டு மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன் பின்னர் மற்றொரு மத்திய அரசு நிறுவனமான "இந்திய சுரங்க நிறுவனம்" (Indian Bureau of Mines) என்ற அமைப்பு சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். அதற்குப்பின் மாநில அரசுத் தரப்பில் சுரங்கம் அமைப்பதற்கு முறைப்படியான அனுமதி வழங்கப்படும்.

கவுத்திமலை - வேடியப்பன் மலை விவகாரத்திலோ, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே 'பிரசைஸ் ஏரியா' இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஆனால் இந்திய சுரங்க நிறுவனமோ, கவுத்திமலை - வேடியப்பன் மலை பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை அனுமதித்துள்ளது. 'பிரசைஸ் ஏரியா'வே குறிக்கப்படாத நிலையில் 'இந்திய சுரங்க நிறுவனம்' எப்படி அனுமதி வழங்கியது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தற்போதைய நிலையில் சுரங்கம் அமைப்பதற்கு 'டிட்கோ'வின் பெயரில் பதிவு செய்த மனுவை, 'டிம்கோ' நிறுவனத்தின் பெயரில் மாற்றுவதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் 'ஜிண்டால்' குழுமத்தின் இந்த முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மலைகளை அழித்து சுரங்கம் அமைக்கும் அளவிற்கு நாட்டில் இரும்புத்தாதுவுக்கு தேவை ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தால், இந்தியாவில் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் கிடைக்கும் இரும்பு, இந்தியாவின் தேவையைவிட அதிகமாகவே இருக்கிறது. எனவே இந்தியாவின் இரும்புத் தேவையைவிட, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்திற்காகவே ஜிண்டால் குழுமம், திருவண்ணாமலைப் பகுதியில் சுரங்கம் அமைக்க முயற்சிக்கிறது என்பதே உண்மை.

'ஜிண்டால்' குழுமத்தின் கொள்ளை லாப வெறிக்காக, தமிழ்நாடு அரசு நிறுவனமான 'டிட்கோ' எதற்காக 'டிம்கோ' என்ற பெயரில் அரசு நிறுவனம் போன்ற தோற்றம் தரும் ஒரு நிழல் நிறுவனத்தை தொடங்கி, 'ஜிண்டால்' நிறுவனத்துக்கு தாரை வார்க்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை.

பின்குறிப்பு: அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது இப்பகுதியில் பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திருவண்ணாமலை பகுதி மக்கள் தங்களுக்கு வாக்களித்தால், 'ஜிண்டால்' குழுமம் அமைக்கும் சுரங்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் 'ஜிண்டால்' குழுமமும், 'டிட்கோ' நிறுவனமும் தமிழ்நாடு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதோடு திருவண்ணாமலை பகுதி வாழ் மக்களுடைய வாழ்வாதாரங்களை பறிக்கும் ஒப்பந்தங்கள் முதன்முதலாக உருவாக்கப்பட்டன.


-சுந்தரராஜன்

-பூவுலகு, ஜூன்-ஜூலை 2009

3 கருத்துகள்:

எஸ். மன்சூர் அலி கான் சொன்னது…

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் கவுத்திமலை-வேடியப்பன் மலையை விழுங்க நினைக்கும் நபர்களை அடையாளம் காட்டியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரிராஜன் சொன்னது…

மக்கள் கருத்தரையும் கூட்டம் தொடர்பான செய்திகளுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும் - www.jasultn.blogspot.com. தொடர் செயல்பாடுகளுக்கு அணுகவும்.

இப்படிக்கு

மாரிராஜன்

பெயரில்லா சொன்னது…

Ada paavigala! malaigalaiyum vituu vaikka maateengalaA? If they do something to Hills n mountains it will be the biggest mistake to nature and it won't be safe.

கருத்துரையிடுக