செவ்வாய், மார்ச் 24, 2009

விஷமாகப் போகும் சாம்பார்!

cவயிறு பசித்தால் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சட்டியில் இருப்பதை தட்டில் போட்டு, குழம்பை ஊற்றி பிசைந்து பசி தீர சாப்பிடும் காலமெல்லாம் போய்விடும் போலிருக்கிறது.

சாதத்தில் ஊற்றும் சாம்பாரில் என்ன விஷம் இருக்குமோ என அச்சப்படும் நிலை ஏற்பட்டால் யாரால்தான் நிம்மதியாகச் சோற்றைப் பிசைந்து சாப்பிட முடியும்.
சாம்பாரில் விஷமா என ஆச்சரியப்பட வேண்டாம். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.


இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே வந்துவிடப் போகிறது மரபீனி கத்தரிக்காய்.

அதாவது கத்தரிக்காயின் மரபணுவில் மாற்றம் செய்து விரும்பிய நிறத்தில், விரும்பிய உருவத்தில், தேவையான அளவில் விளைவிக்கப்பட்ட கத்தரிக்காய் எல்லோரது வீட்டு சாம்பாரிலும் "மணம்' வீசும் காலம் வருகிறது.


மரபீனி விதையால் அமோக விளைச்சல் கிடைக்கும்; செலவே கிடையாது; வேளாண்மை செழிக்கும்; வயல்வெளியில் தங்கம் விளையும்; விவசாயிகள் பட்டு பீதாம்பரம் கட்டி, தங்கத் தட்டில் சாப்பிடுவார்கள் என மரபீனி விதை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.



ஆனால், மரபீனி விதையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பருத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மரபீனி விதையால் ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பட்டபாடு எல்லோருக்கும் தெரியும்.

மரபீனி கத்தரிக்காயால், அதைப் பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படும் முன்பே அவற்றைச் சாப்பிடும் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மரபீனி விதைக்கு எதிரானவர்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

கத்தரிக்காயிலும், வெண்டைக்காயிலும் மரபீனி விதை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதலில் கத்திரிக்காய் விதைகளுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் மரபீனி தொழில்நுட்ப அங்கீகாரக் குழு அனுமதி அளித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனையோ காய்கள் இருக்க ஏன் கத்தரிக்காயில் மட்டும் மரபீனி விதைக்கு இத்தனை அவசரம்? அரிசிக்கு இணையாக அதிகமாகப் பயன்படுத்தும் காய்களில் முதன்மையானது கத்தரிக்காய். அப்படியானால், தேவை அதிகம், உற்பத்தி அதிகம், விற்பனை அதிகம், லாபமும் அதிகம். இப்போது புரிகிறதா இந்த மரபீனி கத்தரிக்காயை அறிமுகப்படுத்த உள்ள மெஹைகோ நிறுவனத்தின் புத்திசாலித்தனம்.


சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். மரபீனி கத்தரிக்காய் விதையைப் பயன்படுத்தும் விவசாயிக்கு விளைச்சல் அதிகம் கிடைக்கும்; பூச்சி மருந்துகளின் தேவை 70 சதவீதம் குறையும்; மனித உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்தாது என தாம் 9 ஆண்டுகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக மெஹைகோ நிறுவனம் கூறுகிறது.

ஆனால், அந்த நிறுவனம் அளிக்கும் புள்ளிவிவரத்தையும், ஆராய்ச்சி முடிவுகளையும் சுதந்திரமான எந்தவொரு ஆராய்ச்சி நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக இதுவரையில் பரிசோதனை செய்து பார்க்கவில்லை என மரபீனி விதைக்கு எதிரானவர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே, பிரெஞ்சு விஞ்ஞானி கில்லிஸ் எரிக் செரலினி இந்த மரபீனி கத்தரிக்காயைக் கொண்டு ஆடு, எலி ஆகியவற்றில் மேற்கொண்ட சோதனையில் அவற்றுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஜனவரியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இது, மரபீனி விதை எதிர்ப்பாளர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
இந்த களேபரங்களில், இந்தியாவில் மரபீனி கத்திரிக்காய் விதைக்கு அனுமதி கொடுப்பதற்காக அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது மரபீனி தொழில்நுட்ப அங்கீகாரக் குழு.
இந்தக் குழு, மெஹைகோ நிறுவனம் அளித்துள்ள ஆய்வறிக்கையையும், செரலினி அளித்துள்ள ஆய்வறிக்கையையும் பரிசீலித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மரபீனி கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும். அந்த அனுமதி அனேகமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் அளிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

அனுமதி அளித்த உடன் நாடெங்கும் மரபீனி கத்தரிக்காய் விதைகள் விற்பனை செய்யப்படும். விவசாயிகள் ஆசை காட்டப்படுவார்கள். மரபீனி கத்தரிக்காய் விளைச்சல் தொடங்கும். சாப்பாட்டு மேஜையில் மரபீனி கத்தரிக்காய் சாம்பார் மணக்கும்.

அது சரி, இப்போது கத்தரிக்காய்க்கு எங்கே தட்டுப்பாடு வந்தது? அதன் உற்பத்தியை அதிகரித்தே தீர வேண்டியது கட்டாயம் என யாராவது குரல் எழுப்பினார்களா? எதற்காக இந்த விபரீத ஆசை. புரியவில்லையா? எல்லாம் உலகமயமாக்கல் கொள்கையின் "சுரண்டல்' வடிவம்தான் இது.


இதையெல்லாம், சில அறிவுஜீவிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மரபுசார்ந்த விவசாயத்தில் ஆர்வம் உள்ள விவசாயிகளும்தான் விவாதிக்கிறார்கள், எதிர்க்கிறார்களே தவிர பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் வரும்முன் காக்க முடியும். சாம்பார் நறுமணம் வீசும்.


-ப. இசக்கி


நன்றி: தினமணி 23-03-09

5 கருத்துகள்:

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

'அதாவது கத்தரிக்காயின் மரபணுவில் மாற்றம் செய்து விரும்பிய நிறத்தில், விரும்பிய உருவத்தில், தேவையான அளவில் விளைவிக்கப்பட்ட கத்தரிக்காய் எல்லோரது வீட்டு சாம்பாரிலும் "மணம்' வீசும் காலம் வருகிறது'

Bt கத்தரிக்காயில் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்று உங்களுக்கு யார் சொன்னது.

வழக்கம் போல் பீதியையும், குழப்பத்தையும்
உருவாக்க முயலும் கட்டுரையை பொய்களின்
நண்பர்கள் மறு வெளியீடு செய்துள்ளனர்.

தமிழாகரன் சொன்னது…

நன்றி திரு ரவி ஸ்ரீநிவாஸ்.

கட்டுரையில் சொல்லப்பட்ட எதையும் செய்ய போவதில்லை என்றால், பின் வேறு எதற்காக, யாருடைய நலன்களுக்காக இத்தனை எதிர்ப்பையும் மீறி இந்த மரபணு மாற்று தொழில் நுட்பம் திணிக்கப்படுகிறது என்று சொல்லுங்களேன்.

நீங்களாவது உண்மை பேசுங்களேன்.

பெயரில்லா சொன்னது…

யோவ் கூழ் முட்டை ரவி ஸ்ரீநிவாஸ்,

இதை பூவுலகின் நண்பர்கள் மட்டும் சொல்லவில்லை. கிரின்பிஸ் போன்ற பன்னாட்டு அமைப்புகளும், இந்தியாவில் உள்ள பல அமைப்புகளும் சொல்லி வருகின்றன.

மான்சாண்டோ போன்ற நிறுவனங்களுக்கு கடன் பட்ட சில "பெரியவா"க்களும், அரசியல்வாதிகளும்தான் மரபணு மாற்றத்துக்கு வால் பிடிக்கறா. நீர் எப்படி?


சரி அது இருக்கட்டும். இப்ப மரபணு மாற்ற தொழில் நுட்பத்துக்கான தேவை என்ன. கொஞ்சம் இங்கேயோ இல்லை உங்க பதிவுலயோ சொல்லுங்களேன். ஆரம்பிப்போம் கச்சேரியை.

Unknown சொன்னது…

அன்பு நண்பர் ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு.

பூவுலகின் நண்பர்கள் கருத்துக்கு பதில் சொன்னால் உங்களுக்கு தீட்டு பட்டு விடலாம். உங்களவா பத்திரிகையான காலச்சுவடு-ல சங்கீதா ஸ்ரீராம்-கூட மரபணு மாற்றத்துக்கு எதிராதானே எழுதினாங்க. அங்க நீங்க இப்படி குதிக்கலயே. அதற்காவது பதில் எழுதலாமே.

பெயரில்லா சொன்னது…

Nice post.

Keep posting.

கருத்துரையிடுக