சனி, பிப்ரவரி 25, 2012

மின்வெட்டு அலட்சியங்கள்: காற்றாலை மின் உற்பத்தியைக் கவனிக்கவே இல்லையே!


மிழக அரசியல் வானில் ஆயிரம் வேடிக் கைகள் நடந்தாலும், அதைவிட முக்கியமாக 'இப்பப் போகுமோ... எப்ப வருமோ?’ என்று மின்வெட்டு விவகாரத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் மக்கள்! 

மாற்று மின்உற்பத்தி திட்டம் குறித்து ஆக்க பூர்வமான யோசனைகளைச் சொல்கிறார் உலகக் காற்றாலைகள் அமைப்பின் துணைத் தலைவரான கஸ்தூரி ரங்கையன். ''தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 15 சதவிகிதம்  காற்றாலைகள் மூலமாகக் கிடைக்கிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே சுழல்வதன் மூலமாகவே இவ்வளவு பயன் கிடைக்கிறது. மின்வெட்டு சிக்கல் சம்பந்தமாக விளக்கம் தரும் நேரத்தில் எல்லாம், 'காற்றாலை மின்உற்பத்தி ஏமாற்றிவிட்டது’ என்று பொறுப்பில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

காற்றாலைகள் வருடம் முழுக்க இயங்குவது இயலாத காரியம். மே மாதம் ஆரம்பித்து அக்டோபர் வரைக்கும் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் நேரத்தில் மட்டுமே தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். இந்த நேரங்களில் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கிறது. மற்ற ஆறு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றி 400 மெகாவாட் மின்சாரம் வரை கிடைக்கிறது. இதுவே மிகப்பெரிய வரப்பிரசாதம்.

காற்றாலை சக்தியை சரியாகப் பயன்படுத்தினாலே, ஆறுமாத காலம் மின்வெட்டில் இருந்து முழுமை யாகத் தப்பிக்கலாம். தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலங்களை 'ஹை விண்ட் சீஸன்’ என்று சொல்வோம். இந்தக் காலகட்டத்தில் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பலமான காற்று வீசும். இந்த நேரங்களில் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை காற்றாலைகளையும் முழு வீச்சுடன் பரிபூரணமாக இயங்க வைக்க வேண்டும். இதன்மூலமாக தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அதிகப்படியான மின்சாரத்தைப் பக்கத்து மாநிலங்களுக்கும் விற்பனை செய்யலாம். இந்த விற்பனை மூலமாக சுமார் 750 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தில் இருந்து நமக்கு மின்பற்றாக்குறை இருக்கும் நேரத்தில், பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த யோசனையைப் பலமுறை அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டோம். ஆனால், பலன் இல்லை. பருவக் காற்று வீசும்போது காற்றாலைகளை முழுமையாக இயக்குவதில் என்ன பிரச்னை?

காற்றாலை மூலமாக நாங்கள் மின்சாரம் தயாரித்து தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்கிறோம். இதற்கு உரிய பணம் தரவேண்டும் அல்லவா? 2010 டிசம்பரில் கொடுத்ததுதான் கடைசி. அதன்பிறகு பணம் வரவில்லை. பணம் சரியாகக் கிடைக்கவில்லை என்பதால், காற்றா லைகளை முழுவீச்சில் பயன்படுத்த பலரும் தயாராக இல்லை. இந்த விவகாரம் காரணமாக காற்றாலையில் முதலீடு செய்வதற்குப் புதிய நபர் கள் வரவும் பயப்படுகிறார்கள்.

மேலும், காற்றாலைகள் மூலம் கிடைத்த 1,000 மெகாவாட் மின்சாரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குச் செல்லவில்லை. காரணம், உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான மின்வடம் உள்ளிட்ட பல ஏற் பாடுகளை மின்வாரியம் செய்து தரவில்லை. நிலைமை இப்படியே இருந்தால், எவ்வளவு காலம் ஆனாலும் மின்வெட்டு சீராகாது.

மகாராஷ்டிரா போன்று இங்கேயும் மின் உற்பத்தி மற்றும் பகிர்வுத் துறையில் தனியாருக்கும் இடம் அளிக்க வேண்டும். இதனால், 'தனியாருக்குத் தாரை வார்ப்பதா?’ என்று சில கருத்துக்கள் வெடிக்கலாம்.  தொலைத்தொடர்புத்துறையில தனியார் வந்த பிறகு என்ன நடந்தது? போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைப்பது, சலுகைகள் அறிவிப்பது மூலம் மக்களுக்கு நன்மைதானே நடக்கிறது? மின்பகிர்வு தனியார் வசம் சென்றால், எந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குகிறதோ, அவர்களிடம் இருந்து மக்கள் இணைப்பை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிக செலவாகும் சமாசாரம். ஒரு யூனிட் உற்பத்தி செய்ய 10 ரூபாய் ஆகிறது. அதனால், காற்று, அனல், அணு, நீர்சக்திகள் மூலமாகத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். நம் நாட்டில் நிலக்கரி அமோகமாகக் கிடைப்பதால், தெர்மல் பவர் ஸ்டேஷன்கள் சிலவற்றைத் தொடங்கி இருக்கலாம். ஆனால், ஒரு தெர்மல் பவர் ஸ்டேஷனை நிர்மானித்து உற்பத்தியைத் தொடங்க குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும்.

ஆனால், காற்றாலை உற்பத்தியைப் பொறுத்தவரை வாங்கிக்கொள்ளும் மின்சாரத்துக்கு அரசு  உடனடியாக பணம் கொடுத்தாலே போதும். பிற மாநிலங்களில் இருந்தும் வேறு வழிகளில் பெறும் மின்சாரத்துக்குக் கொடுக்கும் தொகையைவிட இது குறைவானதே. மேலும் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வதற்காக பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியதோ அல்லது மானியம் கொடுக்க வேண்டிய அவசியமோகூட அரசுக்கு இல்லை. அதனால், இப்போதைய மற்றும் எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு உடனடியாக காற்றாலை மின்உற்பத்திக்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். . அப்போதுதான், மின் வெட்டில் இருந்து தமிழகம் தப்பிக்க முடியும்'' என்றார்.  

இந்த விவகாரம் குறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கேட்டோம். ''அம்மாவின் கடந்த கால ஆட்சியின்போது காற்றாலை மின்தயாரிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், அதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வந்தன. ஆனால், அடுத்து வந்த அரசாங்கம் காற்றாலை மின்உற்பத்தியை முறைப்படுத்தவும் மின் வடம் வழங்குவது உள்ளிட்ட முக்கியப் பணிகளையும் செய்யவே இல்லை. அதன் விளைவைத்தான் இன்றைக்கு அனுபவித்து வருகிறோம்.

இப்போது, அம்மா மீண்டும் பொறுப்புக்கு வந்தவுடன் காற்றாலை மின்சார உற்பத்தி அமைப்பைச் சீராக்க உத்தரவுகளைப் போட்டிருக்கிறார். கூடிய விரைவில் பிரச்னைகள் களையப்படும். காற்றுவீசும் காலத்தில் உற்பத்தியாகும், தேவைக்கு அதிகமான மின்சாரத்தை விற்பனை செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால், சரியான விலை கிடைப்பதுதான் பிரச்னை. நஷ்டத்துக்கு எதையும் விற்பனை செய்ய முடியாது. இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் புரியாமல், அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது அழகல்ல'' என்றார்.

காத்தாடியை சுத்த விடுங்கப்பா!

எஸ்.ஷக்தி
படம்: வி.ராஜேஷ்

நன்றி: ஜூனியர் விகடன், 29-02-12

1 கருத்து:

வலிப்போக்கன் சொன்னது…

காத்தாடியை சுத்த விட்டுடுவாங்களா??

கருத்துரையிடுக