சனி, பிப்ரவரி 26, 2011

ஆமை ஆண்டு 2011

அது என் பள்ளிப் பருவம். என் நண்பனைப் பார்க்க வீரபாண்டி போய்விட்டுத் திரும்பும்போது, முத்துதேவன்பட்டியில் அடைமழை பெய்யத் துவங்கியது. இனிமேலும் சைக்கிளில் செல்ல முடியாத நிலை .அருகிலிருந்த காளி கோவிலில் ஒதுங்கினேன். காலுக்கடியில் அரித்துச் செல்லும் மழை நீர். அதில், அடித்து வந்தது ஒரு ஆமைக் குஞ்சு. நீரின் போக்கிற்கு எதிராகப் போராடி, சாலையைக் கடக்க முனைந்தது. நடு விரல் நீளமே கொண்ட அந்த ஆமை குஞ்சு என் அப்போதைய ஆசைப் பொருள் ஆனது. பார்ப்பதற்கு சிறிய பொம்மை போல், காபி பொடி வர்ணத்தில் இருந்த அதன் உடல் அமைப்பு, மேல் அமைந்த ஓடு, குட்டி குட்டியான கால்கள், நிமிடத்திற்கு ஒரு முறை தலையைச் சுருக்கி ஓட்டினுள் பதுக்கி ,பின் வெளிநீட்டும் பாங்கு, வெளியில் "ஜோ" என கொட்டும் மழை , இடையிடையே வீசும் குளிர் காற்று , யாரும் இல்லாத ஏகாந்தமான சூழல் என, என் மனதினுள் நினைத்தவுடன், இன்றும் பட்டென வெளிச்சமிடும் பிரகாசமான நினைவாய் நின்று போனது. மழை விட்ட பிறகு அதை எதிரிலிருந்த ஒரு நன்னீர் கிணற்றில் விட்டுவிட்டேன்.


அது1920 ல் ஜானகி அம்மாள்--- ராசுச் செட்டியார் அவர்களால் வழிப்போக்கர்கள் தண்ணீர் தாகத்தை தீர்த்துக் கொள்ள அமைக்கப்பட்ட கிணறு. இன்று பயன்பாடற்றுப் போய்விட்டது! இன்றும் அந்த ஆமை உயிரோடு இருக்கிறது! என் நண்பர்களுக்கும், திருமணமான புதிதில் என் மனைவிக்கும், என் குழந்தைக்கும் என, என் "25 வருட பொக்கிஷத்தைக்" காட்ட, பலமுறை சென்று அதைப் பார்த்து வருகிறேன். இன்று உள்ளங்கை அளவே வளர்ந்திருக்கிறது. சில பேர் நீ விட்ட அந்த ஆமைதான் என்பதற்கு என்ன சாட்சி? அதுதான் இது என்று எப்படிக் கூறுகிறாய்? என்றெல்லாம் கேள்வி கேட்பதுண்டு. .அதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை, அது தேவையும் இல்லை. நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு முறை , நான் எட்டிப் பார்க்கும் போதும் , அதுவும் தன் குட்டிக் கழுத்தை வெளியே நீட்டி என்னைப் பார்க்கும் .சின்னச் சின்ன நிகழ்வுதான்! எவ்வளவு சந்தோஷத்தை அள்ளித் தருகிறது.!

ஆமைகள் , இந்த பூமிக் கோளத்தில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக ஜீவித்திருக்கின்றன என ஓர் அறிவியல் ஆய்வு கூறுகிறது. பரிதாபகரமாக இன்றும் ,இவை பற்றிய தவறான பகுத்தறிவற்ற கருத்துக்களே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒரு வீட்டிற்குள் ஆமை நுழைந்து விட்டால் (இன்று ஊருக்குள் ஆமைகளைப் பார்ப்பதே மிக அரிது),அந்த வீடு ஏதோ ஒரு துக்ககரமான நிகழ்வுக்கு ஆட்படப் போகிறதாய் எண்ணம் இன்றும் நிலவுகிறது. அதே சமயம், கரையோரம் வசிக்கும் மீனவக் குடும்பத்தில் வேறுவிதமாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் வசிக்கும் குடிசைக்குள் நுழைந்து விட்டால், அதிர்ஷ்டம் வந்துவிட்டதாகவும், அது எழுப்பும் கரகரப்பான ஒலி மங்கல ஓசை என்றும் கைகூப்பி வணங்குகிறார்கள். சிறிது களி மண்ணை அதன் ஓட்டின் நடுப்பகுதியில் இட்டு அதில் ஊதுபத்திகளை செருகி வைக்கிறார்கள். அதே நிலையில் அது குடிசையை சுற்றி வரும்போது, புகையால் அவர்கள் வசிப்பிடம் சுத்தமடைகிறது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்நிகழ்வைப் பார்த்த ரோம் விட்டேகர், "பார்க்க வேடிக்கையாக உள்ளது " என்கிறர்ர். இவர் முதன்முதலாக சென்னை சோழ மண்டலத்தில் ஆமைகளுக்கான காப்பகம் அமைத்தவர்.


ஆமைகளின் வாழ்நாள் பற்றிய ஆய்வு இதுவரை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.80 வருடம் வாழ்நத சரியான குறிப்பேடு மட்டும் அமெரிக்காவில் உள்ளது. அவை எப்போது பருவம் எய்கிறது என்பதும் இன்றுவரை புதிராகவே உள்ளது. குறைந்தது 25 வருடங்களாவது ஆகும் என்கிறார் டாக்டர் ராபின்சன். 3--4 வருடங்களுக்கு ஒருமுறை முட்டையிடும் ஆமைகள் குறைந்தது 40---200 முட்டைகள் இடும் . ஏழு இடங்களில் தன் வளைகளை அமைத்து, அதில் முட்டையிட்டு மண்ணைக் கொண்டு மூடிவிடும். இரவில் மட்டுமே முட்டையிடும் பண்பைக் கொண்டதால், இந்நிகழ்வைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆமைகளில் ,ஆண் ,பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அதன் வளைகள் விளங்குகின்றன. கதகதப்பாக அது இருக்கும்போது உள்ளே இருக்கும் முட்டைகள் கிட்டத்தட்ட பெண்ணாகப் பொரிகின்றன. மிகவும் ஜில்லிட்ட வளைகள், ஆண்களை அதிக விகிதாசாரத்தில் பொரிக்கின்றன. தற்போதைய கணக்குப்படி பெண் ஆமைகளே அதிகம் உள்ளதாகத் தெரிய வருகிறது. வளையின் வெப்பம், எவ்வாறு பாலினத்தை நிர்ணயிக்கிறது என்பது அறிவியலுக்கு விடப்பட்ட சவாலாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். ஆமை வகைகளில் பாதிக்கும் மேல் அழிவின் விளிம்பில் உள்ளன. பூமி சூடேற்றம், சுற்றுச்சூழல் மாசு, கடல் மாசு என எல்லா வகையிலும் தாக்குதல் இதன் மேல் பிரயோகிக்கப்படுகின்றன.

ஆமைகள், நம் "இயற்கைப் பாரம்பரியத்தின் அடையாளம் ." காவியம் ,ஓவியம், கலாச்சாரம் என இவைகளின் பங்களிப்பு இடம்பெறாத அம்சமே இல்லை. "உணவு வலையின் மையப்புள்ளியாக இவை திகழ்கின்றன." என புகழாரம் சூட்டுகிறார் விட்டேகர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கலாச்சார பிரதிபலிப்பாகவும், வளர்ப்புப் பிராணியாக, உணவுக்காக, மருந்திற்காக என பல வகைகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை ஆய்விற்கு எடுத்துக் கொண்ட டினா ஓல்சன் என்ற பல்லுயிர் ஆய்வாளர், கடலுக்கடியில் விளையும் புற்களை இவை உணவாக உண்கின்றன. அவை தொடர்ச்சியாக வெட்டப்படும் போதுதான், புதிதாக தழையும், பெருகும். ஆக, ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் "சார்புக் கொள்கை" சாத்தியமாகிறது. புற்களுக்கு இடையில் வாழும் ஜெல்லி, மீன், நத்தை, கடல்குதிரை, போன்றவைகளுக்குப் புற்களின் இளம் குருத்துக்கள் பருவகால உணவாகப் பயன்படுகிறது. ஆமைகளின் எச்சம், புற்களின் வளர்ச்சிக்கு முக்கியமாகிறது. இவை கடலின் ஆதார சக்தி என்று கூறினால் மிகையாகாது என தன் ஆய்வுக் கட்டுரையை முடிக்கிறார். ஓடை, ஆற்றோரக் கரைகள், குளங்கள், கழிமுகப் பகுதியில் வாழும் ஆமைகள் மாமிச உண்ணிகளின் ,பிரதான உணவாகிறது. ஓல்சன் உலக நாடுகளோடு இணைந்து, இவை பற்றிய விழிப்புணர்வை ஊட்ட முனைந்து வருகிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது, பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், திருமணம் முடித்த தாய்மார்கள். ஏனோ இந்தியா அவருக்கு இதுவரை எந்த இசைவும் தரவில்லை. இந்நிலையில், பங்களாதேஷ், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

நன்னீர் வாழ் ஆமைகளில், 50 சதவீதம் அழிந்து விட்டதாகவோ அல்லது அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவோ கூறலாம். ஆமை வகைகளில் உள்ள அனைத்து இனங்களும், அமெரிக்கப் பண்ணை ஒன்றில் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன. இதன் காப்பாளரான ஜான் ரூட்ஸ், உலகின் அனைத்து ஆமைகளிலும், 20 சதவீதம் அழிந்துவிட்டதாகவும், வருடத்திற்கு 2 லட்சம் ஆமைகள் உலகெங்கும் கொல்லப்படுவதாகவும் கூறுகிறார். மேலும் சீனா போன்ற "அனைத்து உயிர் உண்ணும் தேசத்தில்" 4 கண் ஆமைகள் முற்றோடு அழிந்து விட்டன. பிற வகைகள், உணவிற்காக வளர்க்கப்பட்டாலும் அவைகளின் வாழ்விடம் ,ஆரோக்கியமற்றதாகவும், எல்லா பருவத்தினவையும் மானாவாரியாக கொல்லப்படுவதாலும் அதன் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து போனது..நகர் மயமாக்கப்படுவதில் குளம், ஏரி, ஓடை போன்றவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாலும், அங்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் வருகை அதன் ஈர்த்தலுக்கு சவாலாக இருப்பதாலும், நசுங்கிப் போவது என்பது கண்கூடான உண்மையாகிறது.


ஆமைகள் ஒரு முறை முட்டையிட்டு பழகிய இடத்தை மறப்பதில்லை. அவை பல கிலோ மீட்டர் பயணித்தாலும் பழைய நினைவுகளோடு, முதல் முட்டையிட்ட இடத்திற்குத் திரும்புவது மிகுந்த ஆச்சரியமூட்டும் ஒன்று. இவ்வகையான பண்பு, மனிதர்கள் தவிர்த்து வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள், ஆமைகள் போன்றவைகளிடம் கண்டு நான் வியந்திருக்கிறேன். லெதர் பேக் டர்டிஸ் போன்ற ராட்சச ஆமைகள், பசிபிக் பெருங்கடலில் வசிப்பவை. உணவிற்காகவும், ஓட்டிற்காகவும் பெருமளவு கொல்லப்படுகிறது. இதன் முட்டைகள்,பறவைகள், பிற உயிரினங்கள் தவிர்த்து, மனிதர்களால், அதிகளவு புரதச் சத்து கொண்டவை என விரும்பி உண்ணப்படுகிறது. ஒரு பெண் ஆமையின் ஓட்டுப் பகுதியில் டிரான்ஸ்மீட்டர் கட்டி விடப்பட்டு செயற்கைகோள் மூலம் அதன் பயணம் கண்காணிக்கப்பட்டது. அது தன் முட்டையிடும் பிரதேசமான பாப்புவா நியூ கினியா கடற்கரைக்கு 647 நாட்கள் பயணித்து ,12,744 மைல் தொலைவு கடந்து சரியான இலக்கை அடைந்தது. பெரும் சாதனையாகக் கருதப்படினும் ,வழியெங்கும் சொல்லொணாத துன்பங்களையும், ஆபத்துக்களையும் சந்தித்தவாறே வந்தது. இது ஆமைகளின் தினசரி வாழ்வு எவ்வளவு நெருக்கடியானது என்பதை உலகிற்கு எடுத்துரைத்தது. ஆமைகளின் நுரையீரல் பெரிதாக இருப்பதால் ஒருமுறை கடலின் மேல் பகுதிக்கு வந்து தேவையான ஆக்ஸிஜனை ஒரே முச்சில் உறிஞ்சி, கடலுக்கடியில் பல மணி நேரம் பயணிக்கிறது. இதன் உடலும், தேவையற்ற விஷ வாயுக்களை உறிஞ்சுவது இல்லை. இது இயற்கை அளித்த பரிசு எனலாம். கடலில் மிதக்கும் எண்ணெய்க் கழிவுகளும், கப்பலில் இருந்து வெளியேறும் பிற கழிவுகளுமே இதன் உயிர் விடுத்தலுக்குப் பிரதான காரணம்.

"டர்டில் நின்ஜா " போன்ற கார்ட்டூன் கதாநாயகன் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்துகிறான். தன்னைப் பணயம் வைத்து வீர தீரச் செயல்களில் ஈடுபட்டு ,தீய சக்திகளை ஒழிப்பான். அவன் உயிருக்கு உத்தரவாதமில்லை. நிஜ வாழ்க்கையில், ஆமைகளும் பாதுகாப்பாக இல்லை. மனிதர்கள் அசுர உருவமெடுத்து ,நிஜ நின்ஜாக்களைக் கொன்றொழிக்கிறார்கள். இந்த விதமான போக்கு தவிர்க்கப்படவேண்டும். WWF இந்த ஆண்டை ஆமை ஆண்டாகப் பெயர் சூட்டும் படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆண்டை மட்டும் பெயர் சூட்டிப் பெருமை கொள்வதில் எந்த உபயோகமும் இல்லை. உண்மை உணர்தல் அவசியம். ஏனெனில் இது கதையல்ல .....நிஜம்!

-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

kannan233@gmail.com

நன்றி: உயிரோசை

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

உழவன் விடுதலை! உலகின் விடுதலை!!

இந்த நாட்டின் உயிர் அதன் ஊர்களில் துடித்தது. மனிதர்கள், அவர்களோடு துள்ளிவரும் ஆடு மாடுகள், நாய் பூனைகள். மரங்களும் பயிர்களும் செழித்த வயல் வெளிகள். மரவெளியின் பறவைகள். சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பாம்புகள், பூரான்கள் என எத்தனைப் பூச்சிகள், உயிர்வகைகள். கண்ணுக்கு தெரிகிற தெரியாத அத்தனை உயிர்வகைகளையும் தாயாய் அரவணைத்து மகிழ்ந்து கோடிக்கணக்கான அத்தனை உயிர் வகைகளுக்கும் உணவூட்டி மகிழ்வித்தவள் இந்த இயற்கை அன்னை.

ஆனால் இயற்கை அன்னை இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள். எப்படி?


அறக்கட்டளை என்ற பெயரில் நடந்த உளவும் பசுமைப்புர‌ட்சியும்

நாடு 1950இல் குடியரசானது. 1952இல் நாட்டில் நுழைந்தது இராக்பெல்லர் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் இரண்டு தனியார் அமைப்புகள். இந்திய வேளாண்மை பற்றி நாடு முழுவதும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டன. அமெரிக்க வேளாண் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள் ஆகியவற்றைக் காண அரசியல் வாதிகள் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கவும், உதவித் தொகையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்க அறக்கட்டளைகள் வேளாண் பல்கலைக் கழகத்துடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டன. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கபட்ட பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட்டன. ஊடகங்கள் தீவிர வேளாண்மைப் பற்றியும், அமெரிக்கப் பண்ணைகளில் எந்திரமயம் மூலம் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் குளிரக்குளிரப் பாடின. அமெரிக்காவில் நடக்கும் அதிசயம் பற்றிக் கண்டு களித்து வந்த அரசியலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். அமெரிக்க உதவியுடன் படித்து பட்டம் பெற்று வந்தவர்கள் 'அறிவியலின் அற்புத சாதனைகள்' பற்றி ஆணித்தரமாகப் பேசினார்கள். அறக் கட்டளைகள் 15 ஆண்டுகளையும் கோடிக்கணக்கான ரூபாய்களையும் கொட்டிச் செய்த ஆய்வுகள் என்ன தெரியுமா?

குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்து

(1) மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது

(2) உழவர்களின் பயிரிடும் முறையை மாற்றி இரசாயன உரங்கள், மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது. 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் பருவ மழை சரியில்லை. உடனே பெரிய பிரசாரம் தொடக்கப்பட்டது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் பட்டினிக் கொடுமைகளும் பெரிய அளவில் நிகழ உள்ளதாக வதந்திகள் பரப்பபட்டன. வர இருக்கும் கொடுமையான பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய அரசு அமெரிக்க அரசினர் 'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் பரிந்துரைக்கும் அதீத இரசாயன வேளாண்மையைக் கைக்கொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தது. அப்போதைய வேளாண் அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

காடுகளின் அழிவு

காலனி ஆதிக்கத்தின் போது மலைகளில் இருந்த உயரமான மரங்கள் வெட்டப்பட்டு காப்பி, டீ, இரப்பர் மற்றும் மணப் பொருட்கள் பயிரிடப்பட்டன. இதனால் மலைப்பரப்பில் இருந்த பெரிய சூரிய அறுவடைப் பசுமை அழிந்தது. பெய்யும் மழை அளவும் குறைந்து போனது. அதீத நில அரிமானம், நிலச்சரிவு போன்றன மலைகளின் வளமையைக் குறைத்தன.

தோட்டங்கள் போக எஞ்சியுள்ள காடுகளும் முறையாக காக்கப்படாமல் திருட்டு மர வணிகர்களால் அழிந்து வருகின்றன. சட்டவிரோதமான முறையில் காட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவதும் காடுகளின் பரப்பளவைக் குறைக்கின்றது.

பல்வகையான செடிகொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள், நுண்ணுயிர்கள் என விரிந்து பரவும் உயிரினங்கள் ஈடு செய்ய முடியாத செல்வங்கள். இவற்றின் அருமை புரியாதவர்களாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஆற்றுப் படுகைகள்

செழுமையான மழை, காடுகளின் கனத்த உலர்சருகு மற்றும் மக்குகள் வழியே வழிந்தோடும் போது மக்கு உரங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கின்றது. மழை நீர் ஆறுகளின் வழியே ஓடி படுகை களில் சுமந்து வந்த உரங்களைப் படியச் செய்கின்றன. படுகை கள் இவ்வாறாக ஊட்டச் சத்துக்கள் பெறுகின்றன.

ஆனால் இன்றோ காடுகள் குறைந்து போன நிலையில் மழையும் குறைந்தது. மக்குகளும் குறைந்தன. இருக்கின்ற மக்குகளும் கட்டப்பட்டுள்ள குறுக்கணைகளில் சிறைப்பட்டு விடுகின்றன.


மானாவாரி நிலங்களை ஒதுக்கிய பசுமைப்புரட்சி

15 ஆண்டுகளாக இந்தியாவை ஆய்வு செய்த அமெரிக்க அறக்கட்டளைகள்

1967இல் 'பசுமைப் புரட்சி பற்றிய அறிவிப்புடன் வளமிக்க, நிறையத் தண்ணீர் வசதியுள்ள நதிப் படுகைகளில் புதிய குட்டை இரக நெல், கோதுமைப் பயிர்களைப் பயிரிடத் தொடங்கி வங்கிக் கடன், கொள்முதல் நிலையங்கள் என அரசின் கவனம் இரண்டு பயிர் வகைகளைத் தாங்கிப் பிடித்தன. ஆனால் நாட்டின் 75 விழுக்காடு மானாவாரி நிலங்கள் பசுமைப் புரட்சியின் வளையத்திற்கும் கொண்டு வரப்படவில்லை. மானாவாரிப் பயிர்களுக்குக் கொள்முதல் நிலையங்களும் இல்லை. புறக்கணிக்கப்பட்ட இந்தப் பகுதியில் விளையும் சிறுதானியங்கள் என அழைக்கப்பட்ட புன்செய் தவசங்கள்தான் மிகுந்த சத்துகள் கொண்டது. நாட்டின் அனைத்து மக்களின் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது. மழைநீரை முறையாகச் சேமிக்கத் தமிழ் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரி குளங்களை நன்கு பராமரித்து உழவர்களுக்கான ஏந்து திட்டங்களை நடத்த அரசு தவறியது.

அறிவியல் சாதனை என்ற பெயரில் வணிகச் சூது

வேளாண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பட்டறிவு கொண்ட சமுதாயத் தின் நடைமுறைகள் பத்தாம்பசலித்தன மானவை என்று மக்களை நம்ப வைத்துப் பரந்த நாட்டின் உழவுத் தொழிலின் இடுபொருட் சந்தையைப் பன்னாட் டுக் குழுமங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது பசுமைப் புரட்சி. உரம், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், விதைகள், பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி, ஆழ்குழாய்க் கிணறுகள், நீர்மூழ்கி மின் இறைவைகள், நெகிழிக் குழாய்கள், சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள், உழுபடை எந்திரங்கள், கதிரடிக்கும் எந்திரங்கள், கதிர் அறுக்கும் எந்திரங்கள், நடவு எந்திரங்கள் போன்ற வணிகப் பெருக்கத்திற்கு வழிகோலிய பசுமைப் புரட்சியின் அடிப்படைகள் 'வேளாண் அறிவியலுக்கு" அறவே விரோதமானவை. இந்த வணிகச் சூதிற்குத் துணைநின்ற அரசியலர், வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் பட்டதாரிகள் இந்த நாட்டிற்கும் உழவர்களுக்கும் செய்த துரோகம் கண்டிக்கத் தக்கது.

வேதியல் உரங்களின் கேடு

மண் என்பது பயிர்களின் வேர்த் தொகுதியைத் தாங்கி நிற்கும் இடம் மட்டுமே என்றும் பயிர்களுக்கான ஊட்டங்கள் தாங்கள் பரிந்துரைக்கும் வேதியல் பொருட்களில்தான் உள்ளதாகவும் பசுமை வணிகத்திற்கு விலைபோனவர்கள் கூறுவது அறவே அறிவியலுக்கு முரணான பொய்.

கோடானுகோடி உயிர்களின் தாய் மண். போட்டியும் ஒத்துழைப்புமாகச் செழிக்கும் இந்த உயிர்கள் ஒரு சங்கிலி போல. தனித்தன்மை கொண்ட இந்த உயிர்கள் நடத்தும் கூட்டுவாழ்வில்தான், உயிர்ப் பன்முகத் தன்மையில்தான் உயிர்களின் இருப்பும் நீட்டிப்பும் உள்ளன. இயற்கை அன்னை பெரிய உணவுக்கிடங்குகள் கட்டி, எல்லா உயிர்களுக்கும் தினந்தோறும் உணவு பங்கீடு செய்வதில்லை.

ஒன்றன் கழிவு மற்ற உயிரின் உணவு என்பதுதான் இயற்கையன்னையின் உணவு நியதி. உயிர்ப் பன்முகத் தன்மைதான் உணவுப் பங்கீட்டின் விதி. இந்த இரண்டு அடிப்படை உண்மைகளையும் புறக்கணித்து இயற்கையை நாசப்படுத்தியது பசுமைப் புரட்சி.

இட்ட வேதியல் உரங்களில் பெரும்பகுதி பயிரால் உறிஞ்சப்படுவதில்லை. அது நிலத்தடி நீரிலும் வடிகால் நீரிலும் கரைந்து பரவி சூழற் கேடாக மாறுவதோடு நிலத்தின் சிற்றுயிர் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றது. இயற்கையின் இருப்பாக இருக்கும் சங்கிலி வளையக் கண்ணிகளை உடைப்பது பல தொடர்விளைவுகளை உண்டாக்க வல்லது. இது பற்றிய உண்மைகளை அறவே மறைத்தனர் பசுமைப் புரட்சியின் காவலர்கள்.

பூச்சிக் கொல்லி - களைக் கொல்லிகளின் கெடு

பூச்சி - களைக்கொல்லிகள் கடுமையான நச்சுப் பொருட்கள். பூச்சிகளை மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் கொல்லும் அபாயமான வேதியல் பொருட்கள். இயற்கையில் வாழும் எந்த உயிரினமும் இதனை உள்வாங்கிச் செரிக்க முடியாது. நல்ல பாம்பின் விடத்தைக் கூட நம்மால் செரித்து விட முடியும். மேலும் இயற்கையாலும் சிதைக்கவோ மக்க வைக்கவோ முடியாத இந்த நச்சுகள், நீர், மண் வழியாகப் பரவி, உண்ணும் உணவில் உறிஞ்சப்பட்டு மனித உடலின் கொழுப்பில் கரைந்து செமிக்கப்பட்டு மனிதர்களுக்குக் கடும் நோய்களை உருவாக்குகின்றன. இன்றைய நிலையில் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் பன்மடங்காகப் பெருகியுள்ளன. பன்னாட்டுக் குழுமங்கள் ஆய்வுக் கருவிகள், மருந்துகளையும் விற்க மேலும் ஒரு புலம் உருவாகியுள்ளது.

மண், நீர், சூழ‌ல், உண்ணும் உணவு நஞ்சானது.

தன்னுள் கலந்த அன்னியப் பொருட்களைச் செரித்து உள்வாங்கும் மண்ணும் நீரும் அளவு கடந்து கொட்டப்படும் செரிக்க முடியாத நச்சுகள், நெகிழிகள் போன்றவற்றால் மூச்சுத் திணறுகின்றன. காற்றில் விடப்படும் அதீதப் புகைகள் வளிமண்டலத்தையே மாசுபடுத்தி சூழல் விபத்தாக உருவெடுக்கின்றன. கொடும் சூறாவளிகள், பெருவெள்ளங்கள், புயல்கள், உயரும் கடல்மட்டம் என மனித குலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளன. மாசுபட்ட காற்று, நீர், மண் ஆகியன உண்ணும் உணவை நஞ்சாக்குகின்றன. இவை போதா என்று உலகை ஆதிக்கம் செய்யச் சதி செய்யும் மான்சாண்டோ குழுமம் பரப்பும் மரபீனி மாற்று விதைகளால் மனித உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு பயங்கரமாக இருந்து வருகிறது.

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மிக்க ஆர்வத்துடன் இந்திய அரசுக்கு உதவிய அமெரிக்கக் கட்டளைகள் மனித அலைகளை மட்டுப்படுத்தத் திட்டங்களைச் செயல்படுத்தின. மறைமுகமாகக் கொல்லும் பூச்சிக் கொல்லிகளும் மக்கள்தொகையைச் சத்தமின்றி குறைக்கின்றன.

பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், மனிதர்களைத் தாக்கும் நோய்கள்

பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் கொல்கின்றன. பூச்சிகளைத் தின்று வாழும் பறவைகளையும் பாதிக்கின்றன. பயிர்களைத் தின்னும் பூச்சிகள், அவற்றை உண்ணும் மனிதனுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், மக்க வைக்கும் உயிரிகள், பறவைகள் ஆகிய பல்வகை உயிரினங்களுக்கு இடையே உள்ள இயற்கைச் சங்கிலி உறவை அழிக்கின்றன. சமநிலை அற்றுப்போன இயற்கையில் பூச்சிகள் கடுமையாக வளர்வதைத்தான் காண்கிறோம். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு பூச்சிகளின் வளர்ச்சியில்தான் முடிந்துள்ளது. இத்தகைய ஒரு பாதகத்தைச் செய்தவர்கள் நுண்ணறிவும் தொலைநோக்கும் சிறிதும் இல்லாத மனிதநேயமே அற்ற வணிகர்கள் என்பதே தெளிவாகிறது.

வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பாரம்பரிய முறையில்...

கரிகாலன் கட்டிய கல்லணையும் பாசன வாய்க்கால்களும் இராசேந்திர சோழன் அமைத்த வீராணம் ஏரியும் ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் உயிர்காக்கும் அமைப்புகளாக நிற்கின்றன. தமிழ் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்களை விட கடந்த ஆயிரம் வருடங்களில் செய்யப்பட்ட பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.

மன்னர் கால நீராதாரங்களின் மீது நடத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இக்கால மன்னர்கள், மீட்க வேண்டும். பொதுப் பயன்பாட்டுக் குளங்கள் மழை நீர் சேகரிப்பு, நீர் சிக்கனம், இயற்கைமுறையில் நீர்த் தூய்மை, மறு சுழற்சி ஆகியவைகளுக்கு நம் முன்னோர்களின் நிலைத்த, நீடித்த வாழ்முறைக்குச் சான்றுகள். மின்சக்தியை மையப்படுத்தும் நீர்ப் பயன்பாட்டு முறைகள் நீடிக்க மாட்டா. இப்பொழுதே நம் மின் நிலையங்களுக்கு வேண்டிய நிலக்கரியை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆப்பிரிக்க நிலக்கரியும் வறண்டு போனால் என்ன செய்வது? ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகள் பசுமைப் புரட்சிக் காலத்தில்

ஆறுகளைச் சிறைப் பிடிக்கும் அவலக் காலம் இது. அவற்றை மீட்க அனைத்து வகையிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு வடிநிலத்திலும் மழைநீர் வெளியேறி ஓடுவதைத் தடுத்து ஏரி, குளங்களில் தேக்கவும், நிலத்தடி நீராகச் சேமிக்கவும் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும். குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்மட்டமும், நிலத்தடி நீரில் அதிகரிக்கும் அதீத உப்பும் மனித உடல்நலனையும், வேளாண்மையையும் அச்சுறுத்தும் பெரிய சக்திகள். இதனை வெல்ல மழைநீர் சேகரிப்பும் நிலத்தடி நீராக உட்புகுத்தலும் இன்றியமையாதவை.

ஏற்கெனவே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், போத்தல் நீர் வணிகம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் இந்தியாவை பெருஞ்சந்தையாக்கக் துடிக்கின்றன.

உயர்ந்துபோன இடுபொருட்களுகளும் சக்தி உள்ளீடுகளும்.

பசுமைப் புரட்சி கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பாரம்பரிய வேளாணமையைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. உரம், பூச்சி, களைக் கொல்லி, விதைகள், பயிர் ஊக்கிகள், எந்திர உழவு, நடவு, அறுவடைச் செலவுகள் என இடுபொருட்செலவுகளை உழவனின் தலையில் சுமத்தியுள்ளது.

உழவுத் தொழிலுக்கான பெட்ரோல், டீசல், நிலக்கரி, மின்சாரம் ஆகிய தேவைகள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அரசாங்கம் உரக்கம்பெனிகளுக்கு தரவேண்டிய மானியம, சொட்டுநீர்கருவிகள் போன்ற இதற மானியச் செலவுகள், மின்சார நிலையங்கள் அமைக்கத் தேவையான முதலீடுகள், உள்கட்டுமானங்கள் என தேவைகள் விரிவாக்கப்படுகின்றன. பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆடுகளம் அமைப்பது அரசின் வேலையாகப் போய் விட்டது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய உழவன் செலவிடும் தொகை, அரசு செலவினங்களின் தொகை ஆகியவைகளை தொகுத்து வெளியிட அரசு முன்வருமா? உழவனின் உற்பத்திக்குக் கிடைக்கும் விலை நியாயமில்லை என்பதை அரசு உணருமா?

இடுபொருட்களில் உழவர்களை உறிஞ்சும் பன்னாட்டுக் குழுமங்கள், உழவனின் விளை பொருட்களுக்குரிய விலையை எப்போதும் குறைத்தே வைத்துள்ளன.

பன்னாட்டுக் குழுமங்களின் வேட்டைக் காடு

உழவர்கள்தாம் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளால் பெருத்த நெருக் கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். அறுவடைக்குப் பின் பதப்படுத்தல், உணவுப்பொருட்களின் கொள்முதல், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் வால்மார்ட், ஏடிஎம் போன்ற உலகமகா நிறுவனங்கள் குதிக்கின்றன. விதைத் துறையில் இந்திய உழவுத் தொழிலையே தன் காலடியில் கொண்டுவர மான்சாண்டோ நாட்டைச் சுற்றிவளைக்கின்றது. சக்திகள் துறையில் பல்வேறு நிறுவனங்கள். உழவனின் நிலங்களைக் கையகப்படுத்தச் செயல்படும் நிலத் திமிங்கலங்கள். மொத்தத்தில் இந்தியா சூழப்பட்ட ஒரு வேட்டைக்களமாகியுள்ளது.

அழியும் வேளாண்மை, புலம்பெயரும் உழ‌வர்கள், குறையும் உற்பத்தி

உழவு சுமக்க முடியாத ஒரு தொழிலாகி விட்டது. வளமான நிலங்களில் கூட உழவு கட்டுப்படியான ஒரு தொழிலாக இல்லை. உழவுத் தொழிலாளிகள் தொடர்ந்து சிறு பெரு நகரங்களுக்கும், திருப்பூர், கேரளா என்றும் சென்ற வண்ணம் உள்ளனர். ஊரில் எஞ்சும் தொழிலாளர்களை 100 நாட்கள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அரசாங்கமே முன்னின்று உழவுத் தொழில் சாராத வேலைகளுக்கு திருப்புகின்றது. முக்கியமாக உழவுப் பணிகள் மும்முரமாக நடக்கும் நேரத்தில் தொழிலாளர்களை மடைமாற்றுவது உழவுத் தொழிலைக் கொல்லும் ஓர் முயற்சியாக உள்ளது. 100 நாட்கள் வேலையை அரசு கொண்டுவந்த பிறகு வேலைத்திறன், ஒருவர் செய்யக் கூடிய வேலையின் அளவு பற்றிய கருத்துக்கள் உழவனுக்கு எதிராக உருவெடுக் கின்றன. ஆனால் கூலி மட்டும் உயர்ந்து கொண்டே போகின்றது. உழவடைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத உழவன் செய்யும் உழவு வேலைகளைச் சுருக்கிக் கொள்கின்றான். நிலங்களைத் தரிசு போடுவது, நிரந்தரப் பயிர்களாக மாற்றுவது, ஆடு மாடுகள் வளர்ப்பதைக் குறைத்துக் கொள்வது, கட்டுமனைகளாக மாற்றி விற்று விடுவது, குத்தகைக்கு விட்டுவிட்டு நகர்நோக்கிச் செல்வது போன்ற போக்குகள் உழவர்கள் மத்தியில் வளர்கின்றன.

இவையனைத்தும் வேளாண் பொருள் உற்பத்தியின் அளவு, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கடுமையாகப் பாதிக்கின்றன. நாடு உணவு நெருக்கடியை நோக்கித் தள்ளப்படுகின்றது. ஆள்வோர் உழவர்களின் குரலைப் பொருட்படுத்துவதாக இல்லை.


பசுமைப் புரட்சியின் தோல்வியும் அமெரிக்காவின் புதிய‌ பசப்பல்களும்

அமெரிக்காவோடு ஊடாடி மன்மோகன் சிங் பேசும் இரண்டாவது பசுமைப் புரட்சி, அதிபயங்கரமான ஒன்று. நாட்டின் எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களை அழித்து நூறு கோடி மக்களைக் கொத்தடிமைகளாகப் பன்னாட்டுக் குழுமங்களின் தொழுவத்தில் கட்டும் பெரும் சூது.

இயற்கை வேளாண்மை மூலம் இயற்கையின் சக்திகளை மீட்டெடுப்பதும், மழைநீர் சேகரிப்பும்தான் சரியான மாற்றுத் திட்டம். மரங்களையும் கால்நடைகளையும் பெருக்குவதே தேசிய பெருங்கடமை என நாம் கொள்ள வேண்டும்.

மரபீனி மாற்று மான்சாண்டோவின் கொடுஞ்சூது

மானசாண்டோவைப் புறக்கணிப்போம். நாட்டின் விடுதலையைக் காப்போம்.

சிதைந்து போன உட்கட்டமைப் புகளைப் புனரமைப்போம். மேன்மைப் படுத்துவோம்.

மண், நீர், காற்று, சூழல் தூய்மை காப்போம்.

சுயசார்பு ஊரகங்களைக் கட்டுவோம். ஊரக மக்களின் தேவைகளை அவர்களே உற்பத்தி செய்ய வழிகாண்போம்.

தமிழக உழவர்களின் சாதனை உலகையே குலுக்கட்டும்.

உழவன் விடுதலை! உலகின் விடுதலை!!

-அரசு

நன்றி: சமூகநீதித் தமிழ்த் தேசம் ஜனவரி2011

வியாழன், பிப்ரவரி 24, 2011

திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?

இதுவரை நாளிதழ்களீல் வார இதழ்களில் வந்துள்ள தீர்வுகள் மேலோட்டமானதாகவே படுகின்றன. அப்படியானால் உண்மைநிலை என்னவாக இருந்தால் தீர்வு கிடைக்கும்?


எல்லோருமே 11000 கோடி பின்னலாடை ஏற்றுமதி... 4 லட்சம் தொழிலாளருக்கான‌ வேலை வாய்ப்பு என்று மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காக இயற்கை இழந்துள்ளவைகளை யாருமே பட்டியல் இட மறுக்கிறார்கள்..


1) ஏரி கருப்பராயன் என்று ஏரியால் அடையாளமிட்ட சாமி உள்ளது ஏரியைக் காணவில்லை

2) ஜம்மனை துணை ஆற்றைக் சாயக்கழிவுநீர் ஆக்கிரமித்து உள்ளதால் அதனால் எந்தப் பலனும் இல்லாமல் நாசமாகி உள்ளது. பன்றிகளூக்கான வசிப்பிடம் ஆனால் நீரைப் பன்றி கூட குடிக்காது

3) நல்லாறு 20 வருடத்திற்கு முன் குளிக்க, குடிக்க பயன்பட்ட நதி.. இன்று சாயநீரின் தாக்கத்தால் எதற்கும் பயன்படாத.. முள் செடிகள் வளர்ந்துள்ள - நாய் கூட குடிக்க இயலாத சாய‌நீர் ஓடும் சாக்கடையாகிவிட்டது.

4) திருப்பூர் நகரை தன் கரையில் தாங்கியுள்ள நொய்யல் நதி - இதற்கும் நல்லாற்றின் கதிதான். தன் வரலாற்றுப் புகழை இழந்து கொண்டிருக்கிறது.

5) ஜம்மனை, நல்லாறு ஆகியவற்றை துணை நதிகளாகக் கொண்டு விவசாய வளம் கொடுத்த நொய்யலின் நீரைத் தடுத்து, 90 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை.. விவசாய வளர்ச்சி கருதி கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை சாயநீரின் தாக்கத்தால் இரசாயன நீர்குண்டாக மாறி விட்டது மட்டும் அல்லாமல், விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கி, விவசாயத்தையே துரத்திவிட்டு விட்டது..

6) இது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால்.. மறுபடியும் சுத்தமான நீர் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு ஓடவேண்டும்.

இன்னொரு கணக்கு:

90 ஆயிரம் ஏக்கர் நிலம் நன்றாக இருந்து விவசாயம் ந்டைபெற்று இருந்தால்..

ஒரு ஏக்கராவுக்கு குறைந்தது 5 பேர் வேலைவாய்ப்பு பெற்றால்.. மொத்தம் 4.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு ஏக்கர் விளைச்சல் குறைந்தது 20 பேருக்கு சாப்பாடு கிடைக்கும் என்றால், வருடம் 18 லட்சம் பேருக்கு சாப்பாடு கிடைக்கும்.

பணப் பயிரோ அல்லது உணவுப்பயிரோ அது இயற்கையைக் காப்பாற்றி இருக்கும்..

குடிக்க, குளிக்க, இன்னும் பல உபயோகத்திற்கு ஆற்று நீரும் பயன்பட்டு இருக்கும்..


பல கோடிகளை முதலீடு செய்துள்ளோம்; பல ஆயிரம் கோடி ஏற்றுமதி வணிகம் கொடுக்கிறோம்; பல லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கொடுக்கிறோம்.. என்று வாதம் புரியும் பின்னலாடை மற்றும் சாயஆலை உரிமையாளர்களால் இயற்கை மற்றும் நதியின் அழிவால் ஏற்படும் உணவுத்தேவையை நீர்த் தேவையை மக்களுக்கு கொடுக்க முடியுமா?

நேற்று ஜம்மனை; இன்று நல்லாறு, நொய்யலாறு என்று நாசமாக்கும் சாயத்தொழில் காவேரியையும் நாசமாக்காது என்று உறுதியாய்ச் சொல்வார்களா?

2005ல் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்தாத மாசுக்கட்டுப்பாட்டுவாரியம், லஞ்ச லாவண்யம் இல்லாமல் நேர்மையாக செயல்பட்டு உள்ளது என்று உறுதியாக யாராவது கூறும் அளவிற்கா நொய்யல் உள்ளது?

இன்றைய தேதியில் கூட (22..02..2011) நல்லாறிலும் நொய்யலிலும் 2100 டிடிஎஸ் உப்புத் தன்மைக்குமேல் தண்ணீர் போய்க்கொண்டு உள்ளது. நீதிமன்றத்தடை திருப்பூருக்கு மட்டுமே பொருந்தும் நீங்கள் ஈரோட்டிலோ நாமக்கல்லிலோ வேறு ஊரிலோ சாய ஆலை திறந்தால் அது கட்டுப்படுத்தாது என்று சாயஆலைத் தொழிலை ஊக்கப்படுத்தாமலா சாய ஆலைகள் வெளியூரில் ஆரம்பிக்கப்பட்டன‌… என்றால் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஊழலற்றது என்று எப்படி நம்புவது?

ஊழலற்ற நேர்மையான முறையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் செயல்படுவது உண்மையானால்.. திருப்பூரில் நதிகளுக்கும் விவசாயத்திற்கும் அழிவுப் பாதையாக உள்ள சாய ஆலையை வேறு ஊர்களில் செயல்பட அனுமதிக்காது.

ஈரோடும் நாமக்கல்லும் பவானியும் சேலமும் வேறு நாட்டிலா உள்ளது?

திருப்பூரில் 4500 உப்பு தன்மையுள்ள மாசு நீரை வெளியேற்றும் சாய ஆலைகள் அங்கு 2100 க்கு குறைவான சுத்தகரிக்கப்பட்ட உப்பு நீரையா வெளீயிடுகின்றன?

சாயஆலையில் படியும் ஸ்லெட்ஜ் திடக்கழிவை வெளியூர் சாயஆலைகள் என்ன செய்கின்றன?

காவேரிப்படுகையில்.. அள்ளப்பட்ட மணல் குழிகளில்... சாயஆலைகளின திட மாசுகள் தேங்கி.. காவேரியை நாசப்படுத்தும். அதனால் திருச்சி முதல் நாகை வரை உள்ள விவசாயம் நாசமாகாது என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதியாய் கூறமுடியுமா? சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் ஊழல் வாயை மூடிக்கொள்ளவே வைக்கும்..

அமெரிக்காவிலிருந்து வரும் கோக்கோகோலா என்ற பானத்தின் தயாரிப்பிடம் அமெரிக்காவில் இல்லை...

கோக்கோகோலா தயாரிப்பு என்பது இராசயனம் சம்பந்தப்ப்ட்ட மாசுவை வெளியேற்றும் தொழில் என்பதால், அது விவசாயத்தை நாசப்படுத்தும் என்பதால், அந்த தொழிற்சாலையை தேசபக்தி கொண்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டிற்குள் நடத்தவில்லை என்பதை சாய ஆலை, பின்னலாடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும்.

மேலை நாடுகளின் தேவைக்காக இந்தியாவை விவசாயம் அழிந்த ஒரு குப்பைக்கூடையாக மாற்றலாமா?

முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இயற்கையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லவேண்டாமா?

பனியன் உற்பத்திக்காக பலப் பல இயந்திரங்களை தயாரிக்கும் மேற்குலக நாடுகள் ஏன் பனியனை தயாரிக்க முன்வருவதில்லை.. பின்னலாடை சாய ஆலை உரிமையாளர்கள் பதில் சொல்ல வேண்டிவரும்

தையல் பயிற்சி பெற்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பின்னலாடை தொழிலை முதலில் திருப்பூரைச் சுற்றியுள்ள விவசாயிகள் ஆக்கிரமித்தனர்.

அரசின் தவறான போக்கினால் இயற்கைவளம் அழிக்கப்பட்டு மழை பொய்த்தபோது அவர்கள் தங்களுக்கான தொழிலாக பின்னலாடை தொழிலை தெரிவுசெய்து கொண்டார்கள். அப்போது அவர்கள் உரிமையாளர்கள் பார்வையில் கடுமையான உழைப்பாளிகளாகத் தோன்றினர்.

பின் தொழிலாளர்கள் உரிமைப் போராட்டம் நடத்தியபோது, தொழில் முன்னேற்றம் கண்டு கூடுதலாக தொழிலாளர்கள் தேவைப்பட்டபோது குறைந்த கூலியுடன் உரிமை கேட்காத திருச்சி மதுரை தர்மபுரி மாவட்ட தொழிலாளர்கள் கடுமையான நேர்மையான உழைப்பாளிகளாகப் பட்டார்கள்..

தற்போது அவர்களும் திருப்பூரின் வாழ்வாதார செலவின் தன்மைக்காக சம்பளம் கூடுதல் கேட்டபோது, வற‌ண்ட மாநிலமான பீகாரின் தொழிலாளர்கள் உழைப்பாளிகளாக கருதப்பட்டு.. தமிழ்நாட்டு தொழிலாளர்கள் சோம்பேறிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்...

பீகார் தொழிலாளர்களுக்கு 5 பேர் தங்க ஒரு அறை.. மூன்று நேர சாப்பாடு.. ஒரு டி.வி., 8 நேர மணி தூக்கம்.. வருடம் ஒருமுறை சம்பளம் போதும்.. என்னே திருப்பூர் முதலாளிகளின் தொழிலாளர் பாசம்..

04..02..2011 & 22.02.2011 நடந்த வேலை நிறுத்தத்தில் பல பனியன் கம்பனிகள் கலந்துகொள்ளாமல் வேலை செய்தன..

ஏன் இப்படி என்ற விசாரணையில்….கேள்விப்பட்டது..

2005 க்கு முன்பாகவே விவசாயிகளுக்கு நட்ட ஈடு & தண்ணீர் சுத்தகரிப்பு நிலைய பணிக்கான செலவு என்ற வகையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஒரு கிலோ துணி சாயமிட ஏற்கனவே உள்ள கூலியுடன் ரூபாய் 25 வரை சேர்த்து வாங்கிவிட்டு.. எந்தச் செல‌வினங்களுக்காக வாங்கினார்களோ அதை முறையாகச் செய்யாமல், பல
சாயப்பட்டறை முதலாளிகள் தங்கள் அல்லது உறவினர்களின் பெயரில் வீடு, காடுகளை வாங்கிப் போட்டுள்ளார்கள்.

வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதை சுத்தகரிப்பு நிலைய கணக்குகளும், வருமான வரித்துறையும்.. விவசாயிகளும்தான் கூறவேண்டும்...

அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் நீதிமன்றமும் நேர்மையாக செயல்பட்டால், வரும் தீர்ப்பு விவசாய இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் ஒரு செயலாகவே இருந்து, அடுத்து வரும் தலைமுறையும் நல்ல உணவுடனும் சுகாதார வாழ்வுடனும் இருக்க வழி செய்வார்கள்...

ஏதோ ஒரு இடத்தில் லஞ்சம் விளையாடினாலும் அது முதலாளிகளுக்கு சாதகமான, இயற்கைக்கு எதிரானதாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சாய ஆலை பிரச்சனைக்கான ஒரே தீர்வு.. 2100 டிடிஎஸ் மிகாத உப்புத்தன்மை வெளியிடும் சாயங்களை மட்டுமே துணிகளுக்குப் போடவேண்டும் என்பதுதான்.. அது முடியாதென்றால் சாய ஆலைகளை மூடிவிட உத்தரவு இடுவதைத் தவிர வேறு தீர்வே இதற்குக் கிடையாது..

பல பத்திரிக்கைகளில் பலர் அறிவு ஜீவிகளாக தங்களை நினைத்துக்கொண்டு எழுதுவதுபோல் விவசாயமும் வாழனும் சாய ஆலையும் இருக்கனும் என்பது சாத்தியமற்ற ஒன்று

- காரை கதிரவன்

( 2010kathir@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )


நன்றி: கீற்று.காம்

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

பண்ணையிலே பல்லுயிரியம்! -தியடோர் பாஸ்கரன்

ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்தப் பண்ணையில் மாமர நிழலில் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தபோது, வைக்கோல்போருக்குப் பின்புறமிருந்து ஒரு கம்பீரமான சேவல் என் முன்னே வந்து நின்றது. காலின் பின்புறம் வளைந்து நீண்டிருந்த முள் அது ஒரு சண்டைக்கோழி என்பதைக் காட்டியது. கிராமத்து ஆட்கள் அதை அசலிக்கோழி என்று குறிப்பிடுகின்றார்கள். அப்போது தான் நாட்டுக்கோழி ஒன்றைப் பார்த்து எவ்வளவு காலமாயிற்று என்று எனக்குப் புலப்பட்டது. நாம் இப்போது காணக்கூடியதெல்லாம் ஒரே தோற்றமுடைய, கூண்டுகளில் வளர்க்கப்படும் ‘கறிக்கோழி’ வகைதான். இன்று நம் நாட்டு எல்லா வளர்ப்புப் பிராணிகளின் கதியும் இதுதான். எவ்வாறு காட்டுயிர்களில் பல்லுயிரியம் குறைந்து உயிரினங்கள் அற்றுப்போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதுபோலவே வெவ்வேறு வளர்ப்பு விலங்குகளும் மறைந்து வருகின்றன. ஆனால் காரணங்கள்தான் வேறு. வளர்ப்பு பிராணிகள் மறைவதற்கு வாழிடம் அழிக்கப்படுவது காரணம் அல்ல.

காட்டுயிர்களின் பல்லுயிரியத்திற்குப் பேர்போன நம் நாட்டில் வளர்ப்பு விலங்குகள், கால்நடை இடங்களும் மிகுந்திருந்தன. இந்திய உபகண்டத்தில்தான் பல உயிரினங்கள் மனிதர்களால் முதன் முதலில் பழக்கப்படுத்தப்பட்டன என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். இங்கிருப்பதுபோல் இத்தனை வகை கால்நடைகள் வேறெங்கும் இல்லை. பரந்த புல்வெளிகள், மேய்ச்சல் காடுகள், பழமையான இடையர் பாரம்பரியம் இவற்றால் பல மாட்டினங்கள் இங்கு உருவாகின. இமயத்தில் குஜ்ஜர்கள், குஜராத்தில் ராபாரி போன்ற மாட்டிடையர்கள் தங்கள் மாடுகளுடன் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர். தமிழ் நாட்டிலும் இத்தகைய ஆடோடிகள் உள்ளனர். (இவர்களைப்பற்றி தமிழில் செந்தமிழன் தயாரித்துள்ள முக்கியமான ஆவணப்படம் இந்த அரிய பாரம்பரியத்தைப் பதிவு செய்கின்றது. கி.ராஜநாரயணன் எழுதிய 'கிடை' என்ற சிறு நாவலும் அதை அடிப்படையாகக் கொண்டு அம்ஷன் குமார் இயக்கிய ஒருத்தி படமும் இந்தப் பொருளைக் கையாள்கின்றன.). இந்தியாவை ஆள ஆரம்பித்த பிரிட்டிஷார் இந்த உயிர்ச் செல்வத்தை அடையாளம் கண்டு, மாடுகளை வேலை செய்பவை, (Drought), பால் கறப்பவை (Dairy) என இருவகையாகப் பிரித்து ஒவ்வொரு இனத்தையும் பதிவு செய்தனர். மொத்தம் 26 இனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் பன்னாட்டளவில் அறியப்பட்டகிர், சாகிவால், ஓங்கோல், ஹொலிக்கர், காங்கயம் காளைகள் அடங்கும். குஜராத்தின் நீண்ட, வளைந்த கொம்புகளுடைய காங்ரேஜ் இனம்தான் சிந்துசமவெளி சித்திர முத்திரையிலுள்ள காளை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்படியானால் எவ்வளவு தொன்மையான மரபினங்களைக் கொண்டவை இந்திய இனங்கள்? இந்திய மாட்டினம் எல்லாவற்றிற்கும் சில பொதுவான கூறுகள் உண்டு. இவை வலுவானவை, நோய் நொடி எளிதில் அண்டாது. ஆகவே மருத்துவச் செலவும் குறைவு. கடுமையான கால நிலையைத் தாங்கி, எளிய இரை உண்டு நன்றாக வாழும் சக்தி உடையவை. வறண்ட பிரதேசத்தில்தான் சிறந்த கால்நடைகள் தோன்றுகின்றன, சௌராஷ்ட்ராவில்கிர் இனம், பல்லடம்-காங் கேயம் அருகே காங்கயம் காளை இவை எடுத்துக் காட்டுகள்.

கடந்த சில பத்தாண்டுகளில் வெண்புரட்சி (White Revolution) என்றறியப்பட்ட முயற்சியில் பல உள்நாட்டுக் கால்நடை இனங்கள் கவனிப்பாரற்றுப் போயின. வெளி நாட்டு மாட்டினங்களை வாங்கி நம்மூர் இனத்தோடு கலந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கினர். இந்தியாவின் சொந்த இனங்கள் நலிய ஆரம்பித்தன. தமிழ்நாட்டின் பர்கூர் இனம் ஒரு எடுத்துக்காட்டு. நம் நாட்டில் இவைகளின் மீது அக்கறை குறைய ஆரம்பித்த அதே சமயத்தில், பிரேசில், அர்ஜெண்டினா, பொலிவியா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் இந்த மாடுகளுக்குக் கிராக்கி ஏற்பட்ட்து. அங்கு நிலவும் பருவநிலையும் இந்த இனங்களுக்கு ஒத்து வருகின்றது. பெருமளவில் இவை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன ( தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் இப்போது மாட்டின் உறைய வைக்கப்பட்ட விந்து மட்டும் அனுப்பப்படுகின்றது). அங்கு அவை இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற மக்டொனால்டு ஹேம்பர்கர்களில் இடம் பெறுவது இந்த இறைச்சிதான். இந்திய மாடுகளை வளர்ப்பது பற்றி பிரேசிலிலிருந்து வெளியாகும் ஒரு ஸ்பானிஷ் மொழி மாதப் பத்திரிகையை நான் பார்த்தேன். இந்திய அரசு இந்த உள்ளூர் மாட்டினங்களில் கரிசனம் காட்டாவிடினும் சில தனி ஆர்வலர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். காங்கயம் இனத்தைப் பேண சேனாபதி காங்கயம் மாட்டின ஆய்வு நிறுவனம் குட்டப் பாளையத்தில் இயங்கி வருகின்றது. கிர் இனத்தைக் காக்க முந்தைய ஜஸ்தான் சமஸ்தானத்தில் சத்யஜித் கச்சார் ஒரு இனப்பெருக்க நிலையத்தை நடத்தி வருகின்றார். நம் நாட்டின் மாட்டினங்களிலேயே எழிலானதும் கம்பீரமானதும் கிர் காளைகள் என்று நான் நினைக்கின்றேன்.

குதிரை மத்திய கிழக்கிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தாலும் இங்கு மூன்று உப இனங்கள் உருவாகின - கட்ச், மார்வாரி, மணிப்புரி. இந்தக் கட்ச் குதிரைகள்தாம் திப்பு சுல்தானின் படையில் இயங்கி கம்பெனி படைகளைக் கதிகலங்க அடித்தவை. கட்ச் பகுதியிலிருந்து கடல் வழி, மங்களுர் துறைமுகத்தின் மூலம் திப்பு இக்குதிரைகளை வரவழைத்தது வரலாறு. நமது திரைப்படங்களில் தோன்றும் குதிரைகள் கட்ச் குதிரைகள்தாம். காதின் நுனிகள் ஒன்றை ஒன்று தொடுவது போலிருப்பது ஒரு அடையாளம். அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் வீரப்பாவும் அவரது குழுவும் புழுதி கிளம்ப சவாரி செய்வது கட்ச் குதிரைகளே. குஜராத்தின் பூஜ்நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் குதிரைகளை அனுப்பியதற்காக அந்த ஊர் அரசருக்கு திப்பு சுல்தான் அன்பளிப்பாகக் கொடுத்த பீரங்கி ஒன்று இருக்கின்றது. குதிரைப்படையில் அதிக நம்பிக்கை வைத்திருந்த திப்பு, ஓசூரில் ஒரு குதிரைப் பண்ணையை நிறுவினார். அது இன்று அரசு கால்நடை பண்ணையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ராஜ்கோட்டிற்கருகிலுள்ள கோண்ட் வால் ராஜா இன்று மார்வாரி குதிரைகளில் அக்கறை காட்டி வருகின்றார். இவர் நடத்திய குதிரைக் காட்சி ஒன்றில் நடனமாடும் மார்வாரி குதிரை ஒன்றைப் பார்த்தேன். உயரம் குறைவான மணிப்புரி குதிரைகள்தாம் முதன் முதலில் போலோ விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டன. வடகிழக்கு இந்தியாவிலுள்ள இந்த சிறிய சமஸ்தானமான மணிப்பூரில் புலூ என்றறியப்பட்ட பாரம்பரிய விளையாட்டு தான் போலோவாக மேலை நாடுகளுக்குப் பரவியது.

முதன்முதலாக நாய்கள் மனிதரை அண்டியது ஆசியாவில்தான் என்கிறார் நோபல் பரிசு பெற்ற விலங்கியலாளர் கான்ராட் லாரன்ஸ். பழைய கற்காலத்தில் இது நடந்திருக்கலாம் என்கிறார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில் உருவில் சிறியதிலிருந்து பெரிய வகை வரை பல இன (breed) நாய்கள் இங்கு தோன்றின. ஆனால் அது ஒரு செல்லப்பிராணியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கால்நடைகளைப்போல ஒரு வேலை செய்யும் விலங்காகவே இருந்தது. வேட்டைக்கு, காவல் காக்க, இமயம் போன்ற சில பிரதேசங்களில் ஆடுகளைக் கூட்டிச்சேர்க்க இடையர்களால் பயன்படுத்தப்பட்டன. வெகு அரிதாகப் போரில் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. மெட்ராஸ் ராஜதானியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் நடந்த பாளையக்காரர் போரில் கம்பெனி துருப்புகளின் குதிரைகளைத் தாக்க ராஜபாளையம் நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. மருது சகோதரர்களின் காளையார்கோவில் கோட்டையைக் கோம்பை நாய்கள் காத்தன என்றறிகின்றோம். Madurai Manuel என்ற புத்தகத்தை எழுதிய பிரிட்டிஷ் கலெக்டர் நெல்சன், அந்தப் பகுதியில் ஒரு, குதிரையைக் கொடுத்து நல்ல கோம்பை நாய் ஒன்றை வாங்கிச் செல்ல ஆட்கள் இருந்தனர் என்கிறார். நாய்கள் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு, வீட்டிற்குள் சேர்க்கப்பட்டது கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்தது. பிரிட்டிஷார் நம்மை ஆண்ட காலத்தில், ஸ்பானியல், லாப்ரடார் போன்ற வெளி நாட்டு நாயினங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டு இனங்கள் மறைய ஆரம்பித்தன. நாய்கள் கண்காட்சியில் (Dog Show) நாட்டு நாய்கள் அனுமதிக்கப்படவில்லை.

கிராமப்புறத்தில் வேட்டைக்காக இவை வளர்க்கப்பட்டன. ஆனால் 1972 இல் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் வந்த பின் இந்த நாய்களின் பராமரிப்பு வெகுவாகக் குறைந்தது. அண்மைக்காலத்தில் சில இந்திய நாயினங்களை உயிர்ப்பிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சென்ற வாரம் ஆந்திராவிலுள்ள வனப் பருத்தி சமஸ்தானத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு பஷ்மி என்ற இனத்தைச் சேர்ந்த ஐந்து அழகான நாய்களைப் பார்க்கமுடிந்தது. மொகலாயர்களுடன் வந்த ஆப்கானியநாய் (A fghan hound) உள்ளூர் நாயுடன் கலந்து உருவான இனம் இது. இந்த இனத்தை நிலைபெறச்செய்ய சில ஆர்வலர்கள் ஒரு நிறுவனம் அமைத்து முயன்று வருகின்றனர். சென்னையில் ராஜபாளையம் இனத்தைப் பெருக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வளர்ப்பு உயிரினங்களில் அண்மைக் காலத்தில் வெகுவாக அற்றுப்போனது நாட்டுக்கோழிகள்தான். இந்தியாவில்தான் முதன் முதலில் கோழி மனிதரால் பழக்கப்படுத்தப்பட்டது என்றும், இங்குள்ள Red Jungle Fowl என்ற காட்டுக் கோழியிலிருந்துதான் உலகிலுள்ள எல்லா கோழியினங்களும் தோன்றின என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் பன்னாட்டளவில் கோழி ஆய்வு மாநாடு நடந்தபோது இந்திய அரசு எல்லா கோழியினங்களுக்கும் மூதாதையரான இந்த காட்டுக்கோழி படத்தைத் தாங்கிய ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது. நம் நாட்டிலிருந்த 17 வகை கோழிகளில் பல இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. தமிழ்நாட்டில் பரவலாக வளர்க்கப்பட்ட குறவன் கோழி (the Naked neck) என்ற கோழியினத்தை இன்று பார்ப்பதே அரிதாக உள்ளது. நவீன கோழிப்பண்ணைகளில் ஒரு வெளிநாட்டு இனம் மட்டும் வளர்க்கப்படுகின்றது. இவைகளுக்கு மருந்துகள் அதிகமாக செலுத்தப்படுவதால், அதன் இறைச்சியை உண்பவர்கள் பாதிக்கப்படுவதாக அச்சுச்றுத்தும் செய்தி ஒன்று வருகின்றது. அண்மையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மெனு அட்டையில் நாட்டுக்கோழிக் கறி (Farm Chicken) இடம்பெற்றிருந்ததைக் கவனித்தேன். செங்கோட்டையருகே, குற்றாலம் போகும் சாலையில் 'நாட்டுக்கோழி மட்டுமே' என்ற போர்டுடன் ஒரு உணவகம் உள்ளது. அங்கு சாப்பிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

-சு.தியடோர் பாஸ்கரன்

நன்றி: உயிர்மை

புதன், பிப்ரவரி 09, 2011

நிறம் இழக்கும் சாயத் தொழில்!

பெருவாரியான மக்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி சட்டென தொற்றிக் கொள்ளும் பரபரப்பைக் கூட்டும் நீதிமன்றத் தீர்ப்புகள், அண்மைக் காலமாய் அதிகரித்துள்ளன. அப்படியான தீர்ப்புதான் திருப்பூர் சாய, சலவை ஆலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சாயம் குடித்து சாயம் குடித்து நச்சுச்சாம்பலாய் நலிந்துபோன மண்ணில் நம்பிக்கைத்துளிராய் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர் கொள்கிறார்கள் நொய்யல் ஆற்றங்கரையோரமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள்.

பனியன் தொழிலைச் சார்ந்து வாழும் சுமார் 4 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தின் மீது இறங்கிய இடியாய், தீர்ப்பு கண்டு கலங்குகிறார்கள் தொழிலாளர்கள்.

நூல் விலை உயர்வால், இந்திய ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் வேளையில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்களுக்கு முதுகெலும்பாய் உள்ள திருப்பூர் சாய ஆலைகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்கள் ஏற்றுமதியாளர்கள்.

எதிர்பார்ப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் விவசாயம், தொழில், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்று அம்சங்களையும் கவனத்தில் கொண்டு திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்துப் பொது சுத்திகரிப்பு, தனி சுத்திகரிப்பு நிலையங்கள், சாயப்பட்டறைகளை உடனடியாக மூட வேண்டும். ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் சாயக்கழிவுகளைக் கழித்துக்கட்டும் முழுமையான சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் இன்னும் வளர்ந்திடாத நிலையில், திருப்பூரில் தற்போது ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு முறை பின்பற்றப்படுகிறது.

இத்தொழில்நுட்பம் நான்கு தளங்களில் இயங்குகிறது.

பயோலாஜிகல்: சேகரிப்புத் தொட்டியில் சாயக்கழிவு நீருடன் மாட்டுச் சாணத்தையும், காற்றையும் சேர்த்துக் கழிவுநீரைச் சுத்திகரித்தல்.

பயோ-ரியாக்டிபயர்: கழிவுநீரைக் குழாய் மூலமாக மெமரைன் கலக்கப்பட்ட தொட்டியில் நிரப்பி வேதிவினையாக்கத்தால் சுத்திகரித்தல்.

குளோரினேஷன்: கழிவுநீரில் குளோரின் வாயுவைச் செலுத்தி முதல் கட்ட சுத்திகரிப்பில் நீரில் உள்ள நிறத்தையும், நாற்றத்தையும் கழிவுநீரின் கடினத்தன்மையையும் நீக்குதல்.

ஆர்.ஒ.சிஸ்டம் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்): முதல் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை 40 விழுக்காடு நல்ல நீராக மாற்றி, இரண்டாம் கட்டமாக 40 விழுக்காடு நீரை நல்ல நீராக மாற்றுதல்.

எவாப்ரேட்டர் (ஆவியாக்கல்): மீதமுள்ள 20 விழுக்காடு கழிவு நீரிலுள்ள உப்புத்தன்மையையும், ரசாயன காரத்தன்மையும் நீராவியாக மாற்றும் இறுதிக்கட்ட சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில்தான் சிக்கலும், சிரமமும் ஏற்படுகிறது. எவாப்ரேட்டரில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் தான் உப்புத்தன்மையை முழுவதுமாய் நீக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ்-இல் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் செய்துவிடுகிறது. அதிகச் செலவு பிடித்தும் இத்தொழில் நுட்பம் 20 விழுக்காடு ரசாயனத் திடக்கழிவை கழித்துக் கட்டமுடியாமல் திணறுகிறது. இவை சேமிக்கும் ரசாயனத் திடக்கழிவை சுத்திகரிப்பு நிறுவனங்கள் டன் கணக்கில் கொட்டிக்குவித்துள்ளன.

உற்பத்தியைப் பெருக்க மாதம் ஒருமுறையேனும் புதுரகக் கருவிகளை அறிமுகப்படுத்தும் பனியன் ஏற்றுமதியாளர்கள் நிகழ்த்தும் கண்காட்சிகளில் சாயக்கழிவை கழித்துக்கட்டும் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டறிய எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. ஆயத்த ஆடைகளின் உற்பத்தியைப் பெருக்க நவீன இயந்திரங்களை வாங்கி லாபத்தைக் கூட்ட, தொழிலாளர்களை வெளியேற்றி தமது வாழ்வை மட்டும் வளமாக்கிக் கொண்டார்கள்.

தேங்கிக்கிடக்கும் துணிகளுக்குச் சாயமேற்றும் அவசரத்தில் சில சாயப்பட்டறைகள் இரவு நேரத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள் என்பதுதான் விவசாயிகளின் குற்றச்சாட்டு.


பொறுப்பற்றுத் திறந்துவிடும் ரசாயனக் கழிவுநீர் விளைநிலம், நீராதாரம், நீர்சார்ந்து இயற்கை உருவாக்கி வைத்துள்ள உயிரினங்களின் வாழ்க்கையென்று ஒரு தொடர் சங்கிலியான சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமாக உள்ளது என்பதுதான், வேளாண் மக்களின் உள்ளக்குமுறல்.

நல்லாற்று ஓடையிலும், நொய்யல் ஆற்றின் கரையோரமும் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட சாய, சலவை ஆலைகளை 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் நிறுவும் ஒரு சட்டவிதியைப் பிறப்பித்திருந்தால் இத்தகைய பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திருக்கலாம்.

உயர் நீதிமன்றம் தொடர்ந்து நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழிகாட்டி வந்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமது பொறுப்பை நிறைவேற்றியிருந்தால் இந்தத் திடீர் நெருக்கடி நிகழ்ந்திருக்காது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து நீதிமன்ற உத்தரவு வந்திருக்குமேயானால் தமிழகப் பகுதிகளில் உள்ள பல மாவட்டங்கள் பாலைவனமாய் மாறி, நொய்யலைப் போலவே பவானி ஆறும் உருவமும், உயிரும் சிதைந்து எதன் பொருட்டும் மீட்க முடியாதபடி பாழ்பட்டுப்போயிருக்கும்.

தேசிய சுற்றுப்புறச் சூழல் நீர் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் நொய்யல் ஆற்றின் வெவ்வேறு இடங்களில் ஆற்றுநீரை ஆய்வுக்கு எடுத்துப் பரிசோதித்துப் பார்க்கையில் நீரின் உப்புத் தன்மையும், ரசாயன நெடியும் அளவுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது.

திருப்பூரில் உள்ள 739 சாய, சலவை ஆலைகள் நாள் ஒன்றுக்கு 6.5 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் வெளியேறும் கழிவு நீராக தினமும் 4.9 கோடி லிட்டரும், பாதாள சாக்கடையில் 3.5 கோடி லிட்டர் கழிவு நீரும் நொய்யலில் கலக்கிறது.

கோவை மாநகராட்சிப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் பலகோடி லிட்டர் சாயக்கழிவு நீரும், சாக்கடைக் கழிவு நீரும் எந்தச் சுத்திகரிப்பு விதிகளுக்கும் உள்படாமல்தான் நொய்யல் ஆற்றில் கொட்டப்படுகிறது.

இந்தியாவில் 2,100 டி.டி.எஸ். (டோட்டல் டிசால்வ்டு சாலிட்) அளவுள்ள தண்ணீர் வேளாண் தொழிலுக்கு ஏற்புடையதாக அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தண்ணீரில் ரசாயனங்கள் படியும்போது நீரின் இயல்புத் தன்மையும், உப்புத் தன்மையும் 4,700 முதல் 5,500 வரை உயர்ந்து விடுகிறது. இந்தத் தண்ணீரை முறையாகச் சுத்திகரிக்காமல் நொய்யலில் கலக்கும் போதுதான் விளைநிலங்கள் பாழாகி, மண்ணின் நுண்ணுயிர்களும் செத்துவிடுகின்றன. நொய்யல் ஆற்றின் கரையோரம் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர்ப்பு நிலமாய் உருமாறிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிடுகிறார்கள்.

வேளாண் மக்களின் கோபக் குரலில் இருந்துதான், இயற்கைக்கு ஊறு விளைவிக்காத தொழில் வளர்ச்சியே நீடித்த வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் ஜவுளித்தொழிலை நம்பியுள்ள மாவட்டங்கள் ஆகும். லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது. வெறுமனே தொழில் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு சாய, சலவை ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு என்று பலரும் பல கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

குறிப்பாக, அரசியல்வாதிகள் சாயக்கழிவுகளைக் கடலில் கொண்டுபோய் கலப்பதுதான் ஒரே தீர்வு என்று முழங்குகிறார்கள்.

இப்போது மட்டும் எல்லாக் கழிவுகளும் எங்கே கலக்கின்றனவாம்? ஆற்றில் கொட்டும் கழிவுகள் அனைத்தும் கடலில் தானே கலக்கின்றன. எல்லாக் கழிவுகளின் கடைசிப் புகலிடமாய் கடலே விளங்குகிறது. கடலை ஒரு பெரிய கழிப்பறையாகப் பாவிக்கும் மனோபாவம் நம்மில் பலருக்கும் உள்ளது. இதற்குச் சுற்றுச்சூழல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

கடல் என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உயிர்ச்சூழல் மண்டலம். கடலிலும், கடலோரங்களிலும் ஏற்படுத்தும் மாசு, கணக்கற்ற நஷ்டங்களை நமக்கு ஏற்படுத்தும். "நீ என்ன கொடுக்கிறாயோ அது உனக்குக் கிடைக்கும்' என்ற ரமணரின் வார்த்தைகளை இயற்கையோடும் பொருத்திக் கொள்ளலாம்.

சுத்திகரித்து உப்புத் தன்மையற்ற நீரைத்தான் கடலில் கலக்கச் சொன்னோம் என்று பதிலுரைத்தாலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஏன் கடலில் கலக்க வேண்டும். திருப்பூரில் நான்காம், ஐந்தாம் குடிநீர்த் திட்டங்களுக்குக் கால்கோள்விழா நடத்தும் அளவுக்கு திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவும் சூழலில் சுத்திகரிக்கப்பட்ட நல்லநீரை சாய, சலவை ஆலைகளே திரும்பவும் பயன்படுத்தலாமே?

உயிர்களின் உயிராய் உள்ள நீரை ஊதாரித்தனமாக விரயம் செய்யும் உரிமை எவருக்குமில்லை. தற்போது நிலவும் நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம்.

அதிகச் செலவு பிடித்தும், முழுமையாகச் சுத்திகரிப்பு செய்ய முடியாத தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பத்தை அல்லது ஆர்.ஒ. தொழில்நுட்பத்துக்குப் பிறகு எவாப்ரேட்டர் மற்றும் கிரிஸ்டிலைசர் பிரிவுகளில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டறிந்து களைய வேண்டிய பொறுப்பு ரூ.12 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியைப் பெறும் மத்திய அரசுக்கு உண்டு.

வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளின் தலையில் கொட்டிய குப்பைத் தொழில்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவியுள்ளன. இத்தொழிலால் நெடுங்காலமாக உயிர்களின் ஆதாரமாக இருந்த நீர் நிலைகள் நிர்மூலமாகி வருகின்றன. வருங்காலத் தலைமுறையின் நிலையான வாழ்வை நெஞ்சில் தேக்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மத்திய, மாநில அரசுகளே மேற்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வுக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் ஆகிய அம்சங்களையும் காப்பாற்றும்.
-கோவை. சதாசிவம்