வெள்ளி, ஜனவரி 29, 2010

மரபணு மாற்று கத்தரி - அடையாள உண்ணாவிரத போராட்டம்

மரபணு மாற்று கத்தரியை தடை செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அறப்போராட்டம்.

தமிழத்தின் தலைநகரம் சென்னையில் 30-01-10 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அடையாள உண்ணாவிரதம்.

இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிர்புறம்...
எதிர்கால சந்ததி குறித்து அக்கறையுள்ளவர்கள் அனைவரும் வருக!

திங்கள், ஜனவரி 25, 2010

மரபணு மாற்று கத்தரிக்காய் - தமிழக முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் அறிமுகம் செய்வதால் தீய விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்களும், சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும், இயற்கை வேளாண் நிபுணர்களும், சட்ட நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் மரபணு மாற்று வேளாண்மைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூட்டமைப்பினர் இன்று (25-01-10) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, தமிழ்நாட்டில் மரபணு மாற்று கத்தரியை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்....

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை இன்று (25-01-2010) காலையில் அவரது இல்லத்தில் "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தலைவர் திரு ஆர். செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் நடிகை திருமதி ரோகினி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு தலைவர் திருமதி ஷீலு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் திருமதி சங்கீதா, திரு. ராம் ஆகியோர் சந்தித்து மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத்துறை அமைச்சர் இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கமாகக் கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன் - எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும்வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

வியாழன், ஜனவரி 14, 2010

பி.டி. கத்தரிக்காய் பயிரிட்டால் 200க்கும் மேற்பட்ட செடிகள் அழியும் : நம்மாழ்வார் எச்சரிக்கை


""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.கோவை வேளாண் பல்கலை மற்றும் அமெரிக்கா விதை நிறுவனமான மான்சான்டோவின் இந்திய பங்குதாரர் "மஹிகோ' நிறுவனமும் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் செய்த பி.டி., கத்தரிக்காயை உற்பத்தி செய்துள்ளது.

பி.டி.,கத்தரிக்காய்க்கு, இந்திய உயர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு, மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறி உற்பத்தியை பெருக்குவதற்காக, தட்ப வெப்ப நிலைக்கு தாக்கு பிடித்து, அதிக அளவில் காய்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பி.டி., கத்தரியை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளின் கருத்து கேட்க, மத்திய அரசு இம்மாதம் நாடு முழுவதும் ஆறு மாநில தலைநகரங்களில் கூட்டம் நடத்தவுள்ளது.


பி.டி., கத்தரி தொடர்பாக அகில இந்திய இயற்கை உழவர் இயக்க தலைவரும், இயற்கை விஞ்ஞானியுமான நம்மாழ்வார் கூறியதாவது:விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் பி.டி., கத்தரி சாகுபடி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழகத்தில் பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், விவசாயிகளிடம் நேரில் சென்று பி.டி., கத்தரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.தற்போது பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்கினால், படிப்படியாக, அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விடும். பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.


தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.


எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.


நன்றி: தினமலர்

என் பேச்சிற்கு இடையூறு செய்தால் வெளியே தூக்கிப் போடுவேன் - ஜெய்ராம் ரமேஷ்


கோல்​கத்தா,​​ ஜன.​ 13: மர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரிக்கு அனு​மதி அளிப்​பது தொடர்​பாக கோல்​கத்​தா​வில் புதன்​கி​ழமை நடை​பெற்ற கருத்​துக் கேட்​புக் கூட்​டத்​தில் சல​ச​லப்பு ஏற்​பட்​டது.​

÷மத்​திய அர​சின் சார்​பில் பங்​கேற்ற சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய​ராம் ரமேஷ் ஆவே​ச​மாக பேசி​ய​தால் கூட்​டத்​தில் அமளி ஏற்​பட்​டது.​

÷த​னது பேச்​சில் குறுக்​கிட்​டுப் பேசி இடை​யூறு செய்​தால் வெளியே தூக்​கிப் போட்​டு​வி​டு​வேன் என்று விஞ்​ஞானி சர்​மாவை பார்த்து அமைச்​சர் ரமேஷ் கூறி​ய​தால் கூட்​டத்​தில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​

​ இத​னால் கூட்​டத்​தில் பங்​கேற்ற ஒரு பிரி​வி​னர் அமைச்​ச​ருக்கு எதி​ராக கோஷ​மிட்​ட​னர்.​

மர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரி​யைப் பற்​றி÷​அ​மைச்​சர் ரமேஷ் விளக்​கிக் கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது கூட்​டத்​தில் பங்​கேற்ற ஒரு​வர் அடிக்​கடி குறுக்​கிட்​டார்.​ இத​னால் ஆத்​தி​ர​ம​டைந்த அமைச்​சர் மேடையி​லி​ருந்து மைக்ரோ போனு​டன் கீழி​றங்கி வந்து,​​ நான் பேசு​வதை முத​லில் கேளுங்​கள்.​ அதன் பிறகு உங்​கள் கருத்​தைச் சொல்​லுங்​கள் என்​றார்.​ அடுத்த முறை நீங்​கள் குறுக்​கிட்​டுப் பேசி​னால் வெளியே தூக்கி போட்​டு​வி​டு​வேன் என்று வாயில் கதவை நோக்கி கையை நீட்​டி​ய​வாறு எச்​ச​ரித்​தார்.​ இதை​ய​டுத்து அமைச்​ச​ருக்கு எதி​ராக கோஷம் எழுந்​தது.​ பின்​னர் அமைச்​ச​ரின் பேச்​சில் குறுக்​கிட்ட சர்​மா​வும் பேச அனு​ம​திக்​க​பட்​டார்.

÷கூட்​டத்​தில் பேசிய பலர் மர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரிக்கு எதி​ரா​கப் பேசி​னர்.​

÷ம​ர​பணு மாற்​றப்​பட்ட கத்​த​ரியை நம் நாட்​டில் அனு​ம​திப்​பது தொடர்​பாக கருத்​துக் கேட்பு கூட்​டம் பெரிய நக​ரங்​க​ளில் நடை​பெ​று​கி​றது.​ அடுத்த கூட்​டம் வரும் 16-ல் புவ​னேஸ்​வ​ரத்​தி​லும் 19-ம் தேதி ஆம​தா​பா​தி​லும் 22-ம் தேதி ஹைத​ரா​பா​தி​லும் 23-ல் ​

பெங்​க​ளூ​ரி​லும் 27-ல் நாக​பு​ரி​யி​லும் 30-ல் சண்​டீ​க​ரி​லும் நடை​பெ​று​கி​றது.​

÷த​மி​ழ​கத்​தி​லும் மர​பணு மாற்​றப்​பட்ட கத்​தரி காய்க்கு பலத்த எதிர்ப்பு உள்​ளது.​ தற்​போ​தைய நிலை​யில் மர​பணு மாற்​றப்​பட்ட கத்​தரி விதை விற்​ப​னையை தடுக்க முடி​யாது என்று வேளாண் துறை அமைச்​சர் வீர​பாண்டி ஆறு​மு​கம் பேர​வை​யில் கூறி​னார்.

நன்றி: தினமணி, 14-01-10

வியாழன், ஜனவரி 07, 2010

புத்தகத்திருவிழா - பூவுலகு - சில புரிதல்கள்

சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் அமர்ந்திருக்கும்போது எப்போதோ படித்த உளவியலை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

"பூவுலகு" அரங்கிற்குள் வருபவர்களில் அதிகமானவர்கள் ஓரளவு உயர்படிப்பு படித்தவர்களாக இருந்தனர்.
பூவுலகு இதழுக்கு சந்தா செலுத்தியவர்களில் மிகப்பெரும்பாலோர் வி்ஞ்ஞானிகள் அல்லது தொழில்நுட்ப வல்லுனர்கள். அதிலும் சுவாரசியமாக "பூவுலகு" அதிகம் விமர்சனம் செய்யும் மரபணுத் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தியின் ஆதரவாளர்கள் பலரும் சந்தா கட்டினர். அவர்களி்ல் ஒரு சிலர் தங்கள் அலுவலக முகவரிக்கே "பூவுலகு" இதழை அனுப்பச்சொல்லி ஆச்சரியப்படுத்தினர்.

அவர்களை அடையாளம் கண்டு, இதழ் குறித்தும், அவற்றில் வரும் கருத்துகள் குறித்தும் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துகளையும் எழுதுமாறு கேட்டுக்கொண்டபோது சிரித்துக் கொண்டே நழுவினர்.

இலக்கிய வாசகர்களுக்கு சூழல் தொடர்பாக பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், இலக்கிய வாதிகளுக்கும் - கலைஞர்களுக்கும் சூழல் தொடர்பான ஆர்வம் மட்டுமல்லாமல் அக்கறையும் இருப்பது தெரிந்தது. அரங்கிற்கு வந்த இலக்கியவாதிகளும், கலைஞர்களும் "பூவுலகு" அரங்கிற்கு வாசகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று அக்கறையுடன் விசாரித்தனர்.



இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு கோரிக்கை!

உங்களின் ஆர்வமும், அக்கறையும் உங்கள் ரசிகர்களிடம் இருக்க வேண்டும்!!

அதற்கு வழிகாட்ட வேண்டியது நீங்கள்தான்!!!



சூழல் சார்ந்த அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் பலரும் பூவுலகு அரங்கிற்கு தேடி வருகின்றனர். அவர்களில் பலர் பூவுலகின் நண்பர்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தனர்.



கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் "பூவுலகு" இதழை இன்னும் எளிமைப்படு்த்தி அரசியல் விவகாரங்களை குறைத்தால் மாணவர்களிடம் "பூவுலகு" இதழை அறிமுகப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர்.



மாணவர்களில் பலரும் "பூவுலகு" இதழ் ஆங்கிலத்தில் கிடைக்குமா? என்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்பினர்.



-வழக்கறிஞர் சுந்தரராஜன்

























திங்கள், ஜனவரி 04, 2010

புத்தகத்திருவிழா - பூவுலகு - புகைப்படங்கள்


சென்னை புத்தகத்திருவிழாவில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரங்கு (எண்: 233) அமைக்கப்பட்டுள்ளது. அரங்கில் எடுத்தப் புகைப்படங்களில் சில...
இதுதான் தூக்கணாங்குருவி கூடு... குருவியையே பார்க்க முடியாத சென்னைவாசிகளுக்கு தூக்கணாங்குருவியைத் தெரியுமா?
இதுக்குள்ளேயை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம். இதுக்குள்ளே குருவி தலைகீழா தொங்குமுன்னு சொல்றாங்களே. உண்மைதானா?

சுற்றுச்சூழலை பாதுகாக்கறதோட, தமிழையும் கொஞ்சம் பாதுகாக்கணும்...!
பூவுலகு இதழை அப்பாதான் வடிவமைச்சேன். உனக்கு பிடிச்சிருக்கா பார்...

எனக்கு இந்தப் புத்தகம்தான் வேணும். இதில் தான் எல்லாப்பக்கமும் கலரா இருக்கு!

சுற்றுச்சூழலைப் பற்றி அடுத்த ஸ்டோரி செய்யணும்...


வானம் வசப்படும்-ன்னு எழுதினேன். இங்கே பார்த்தா பூமியே பறிபோயிடும் போல இருக்கே...!
என்ன செய்யலாம்?

தமிழ் படிக்கும் கார்த்தி! கற்றது தமிழ் மாதிரி நீயும் ஒரு படத்தை எடுத்திடாதே..!

"என் பெயர் பாலாறு" குறும்படத்துக்கு அடுத்து என்ன படம் எடுக்கறீங்க, சீனிவாசன்?

என்னது டாக்டர் புரூனோ வந்தாரா? என் கண்ணிலே சிக்கவே இல்லையே!

ஒரு சந்தா போடுங்க சார்!

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்ன்னு டயலாக் விடலாம்ன்னு பார்த்தா லைட்டை ஆஃப் செஞ்சுட்டாங்களே!

ஞாயிறு, ஜனவரி 03, 2010

புத்தகத் திருவிழாவில் பூவுலகின் நண்பர்கள் - தினமணி செய்தி

சென்னை, ஜன.2: சென்னை புத்தகக்காட்சியில் முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் மற்றும் சூழல் சார்ந்த நூல்களுக்காக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள 6 பேர் ஒன்று சேர்ந்து 1989-ல் "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பைத் தொடங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியான அரிய பல நூல்களை தமிழில் வெளியிட்டும், பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்தி வந்தனர்.



இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நெடுஞ்செழியன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததை அடுத்து சுற்றுச்சூழல் போராளியும் எழுத்தாளருமான அசுரனின் முயற்சியால் பூவுலகின் நண்பர்கள் குழு மீண்டும் உயிர் பெற்றது.

2007- டிசம்பரில் அசுரன் இறந்த பின்னர் அவரால் ஈர்க்கப்பட்ட சுமார் 12-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்போது பூவுலகின் நண்பர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள். சூழலியல் ஆர்வலர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து இந்த அமைப்பைச் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் பொங்கல் நிகழ்ச்சியை நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தனர் இவர்கள்.

சூழலியல் தொடர்பான தமிழ், ஆங்கில நூல்கள், விழிப்புணர்வு குறும் படங்களின் சி.டி.க்கள் என அனைத்தும் இந்த (கடை எண்: 233) அரங்கில் கிடைக்கும். இது தவிர 100 பக்கங்கள் கொண்ட "பூவுலகு' என்ற சிறப்பிதழையும் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளி, ஜனவரி 01, 2010

சென்னை புத்தகத்திருவிழாவில் "பூவுலகு"! - சில அனுபவங்கள்.



பூவுலகு சுற்றுச்சூழல் இதழை படித்தவர்கள் அனைவரும் பாராட்டியதால் மாதம் இருமுறை இதழாக வெளிவந்த பூவுலகை, மாத இதழாக கொண்டுவரத் துணிந்தோம்.

பூவுலகு என்ற பெயரை மத்திய அரசில் பதிவு செய்து விட்டதைத் தொடர்ந்து இனி பூவுலகு தனிச்சுற்று இதழாக இல்லாமல், பொதுவிற்பனைக்கான இதழாக வெளிவருகிறது.

பூவுலகு இதழை மேலும் அதிகமான வாசகர்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சென்னை புத்தகத்திருவிழாவிலும் அரங்கு அமைக்கத் தீர்மானித்தோம், அதற்கான விலை மிக அதிகம் என்று தெரிந்திருந்தபோதிலும்..!

சென்னை புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் : 233இல் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டது. பூவுலகு இதழோடு பூவுலகின் நண்பர்கள் சார்பில் பதிப்பிக்கப்பட்ட சூழல் சார்ந்த பல்வேறு புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு பதிப்பகங்கள் சுற்றுச்சூழல் சார்ந்து வெளியிட்ட தமிழ், ஆங்கில புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

சூழல் குறித்து வெளிவந்துள்ள குறும்படங்களும், ஆவணப்படங்களும் இங்கு விற்பனைக்கு கிடைக்கும்.

இவை எல்லாம் அரங்கில் இருந்தாலும், பலரது கவனத்தையும் கவர்வது அரங்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் தூக்கனாங்குருவியின் கூடுகள்தான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரையும் கவரும் அம்சமாக அக்கூடு உள்ளது. நாகரீகமான பெண்கள் சிலர், தங்கள் குழந்தைகளிடம், "பேபி, திஸ் ஈஸ் நெஸ்ட், மேட் பை சம் பேர்ட்ஸ் ஃபார் இட்ஸ் சில்ட்ரன்" என்று அறிமுகப்படுத்துகின்றனர்.

தலைநிறைய முடிவளர்த்த சில கலைஞர்கள், எங்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அந்த தூக்கணாங்குருவி கூடுகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

ஒரு கனவான் எங்களிடம் வந்து மிகவும் பவ்யமாக, இந்தக் கூட்டை எப்படி செய்தீர்கள் இதற்கு ஏதாவது மெஷின் இருக்கிறதா என்று விசாரித்தார்.

இந்தக்கூட்டை பார்த்தவர்களில் பலரும், இந்தக்கூட்டை விலைக்கு தருவீர்களா என்று கேட்கின்றனர்.

இதையெல்லாம் தாண்டி, பூவுலகின் நண்பர்கள் மீண்டும் செயல்படுவது பலருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. மறைந்த தோழர் நெடுஞ்செழியன் மற்றும் அசுரனின் நண்பர்கள் மகிழ்வுடனும், உரிமையுடனும் அரங்கிற்கு வந்து செல்கின்றனர்.

பூவுலகின் நண்பர்கள் என்ற பெயரைத்தெரியாத பலரும்கூட, குறிப்பாக இளைஞர்கள், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் ஆர்வமும் தொனிக்க பேசுகின்றனர்.

இதழை புரட்டிப்பார்த்து இதுபோன்று தமிழில் ஒரு இதழா என்று ஆச்சரியத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சந்தா செலுத்துமாறு கேட்டபோது சிலர், இந்த இதழை படித்துவிட்டு பிடித்திருந்தால் சந்தா கட்டுகிறேன் என்று கூறினர்.

இந்த இதழில் நாங்கள் எழுதலாமா என்று சிலர் கேட்டனர். (எழுதலாம்)

இந்த இதழில் எங்கள் பகுதி செய்திகளை, சிரமங்களை எழுதுவீர்களா என்று பலர் கேடடனர். நீங்களே எழுதி அனுப்புங்கள். பிரசினையின் மு்க்கியத்துவத்தை பொறுத்து வெளியிடுவோம் என்று பதில் சொன்னோம். நம்பிக்கையுடன் விடை பெற்றனர்.

பூவலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல் ஒன்றை மறுபதிப்பு செய்து கொண்டிருக்கிறோம். அந்த நூலின் பெயர்:

இன்னமும் மீதம் இருக்கிறது நம்பிக்கை!