திங்கள், மார்ச் 28, 2011

வேங்கையும், மனிதர்களும்..! -சு. தியடோர் பாஸ்கரன்

முதுமலையிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையில், மசினகுடிக்கருகே சீக்ரட் ஐவரி (Secret Ivory) விடுதியை நாங்கள் சென்றடைந்தபோது மாலை ஐந்து மணியாகிவிட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன், வனத்துறை விடுதியைத் தவிர இங்கு தங்குவதற்கு இடம் இல்லாமலிருந்தது. இன்றோ எண் பத்து ஐந்து விடுதிகள் உள்ளன என்று ஒரு தகவல் கூறுகின்றது. பகலில் இந்த விடுதிகளிலிருந்து பல ஜீப் நிறைய சுற்றுலாப் பயணிகள் முதுமலை சரணாலயத்திற்குப் போகின்றனர். காட்டுயிர் பேணலுக்கு டூரிஸம் எவ்வளவு பெரிய இடராக உருவாகியிருக்கின்றது என்பதைப் பார்க்க மசினகுடி வந்தால் போதும்.

முதுமலை சரணாலயத்தை அடுத்து பாதுகாக்கப்பட்ட காடுகள் கர்நாடகத்திலுள்ள கொள்ளேகால் வரை விரிகின்றது. நடுவே மோயாறு பள்ளத்தாக்கு, அதன் முடிவில் தெங்குமராடா கிராமம். இந்தப் பள்ளத்தாக்கிற்கு அப்புறம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் ஆரம்பம். பின்னர் தளமலை, பிலிகிரி ரங்கன் மலை என பரந்துள்ள வளமான காடுகள். சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட சத்தியமங்கலம் சரணாலயம் அதை ஒட்டியுள்ளது. பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் பயணிக்கும்போது, அந்த நாற்பது நிமிடமும் வலப்புறத்தில் காடு பரந்து விரிந்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த கானகப் பரப்புதான் பதினைந்து ஆண்டுகளாக வீரப்பன் கோலோச்சிய ராஜ்யமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சாதாரணமாக காடுகளில் நிகழக்கூடிய கால்நடை மேய்ச்சல், திருட்டுவேட்டை, மரம் வெட்டல் போன்ற ஊடுருவல்கள் மிகவும் குறைந்து இருந்தது. 2004இல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, மெல்ல மெல்ல காட்டுயிரியலாளர்கள் இந்த வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். காட்டுயிர் - தாவரங்களும் விலங்குகளும் - இங்கு செழித்திருப்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கின்றார்கள்.

பொழுது புலருமுன் விடுதியை விட்டு நாங்கள் புறப்பட்டோம். கல்லட்டி மலைச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் வலப்புறம் திரும்பி ஆனைக்கட்டி சாலையில் சென்றோம். வனத்துறை செக் போஸ்ட்டில் கையெழுத்திட்டு, காட்டுச் சாலையை மறித்திருந்த இரும்புச் சங்கிலி பூட்டைத் திறந்து சிகூர் வனப்பகுதியில் நாங்கள் புகும் வேளையில் பொழுது புலர ஆரம்பித்தது. நுழைந்ததுமே இது மனிதர் நடமாட்டமற்ற கானகம் என்பதற்கு அறிகுறிகள் தெரிந்தன.

காட்டுக்கோழிகள் வனப்பாதையருகே கிடந்த யானை லத்திகளைக் கிளறி அதில் கிடைக்கும் தானியங்களைத் தேடிக்கொண்டிருந்தன. மரங்களில் மயில்கள் அமர்ந்து நிதானமாக இறகுகளைக் கோதிக்கொண்டிருந்தன. பகல் முழுதும் தரையிலே திரியும் இப்பறவைகள் இரைக்கொல்லிகளிலிருந்து தப்ப இரவை மரக்கிளைகளில் கழிக்கின்றன. கௌதாரிகள் இப்படித்தான் செய்யும். சாலையருகே ஒரு காடை, சிறிய பஞ்சுருண்டைகள் போன்ற தனது மூன்று குஞ்சுகளுடன் இரை தேடிக்கொண்டிருந்தது. மிக அருகில் பார்க்க முடிந்ததால் அது ஒரு புதர்க்காடை (Jungle Bush Quail) என்று அடையாளம் காணமுடிந்தது. நாங்கள் யாவருமே இந்தப் பறவையை இதற்கு முன் பார்த்ததில்லை. பறவை ஆர்வலர்கள் தான் முதல்முதலாக, இதற்கு முன் பார்த்திராத பறவை ஒன்றைப் பார்த்தால் அதை lifer என்று குறிப்பிடுவர்.

இயற்கைக்கான உலக நிதியகத்தின் (WWF) கள ஆய்வாளர் ரவிகுமார் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். காட்டின் விலங்குகளைக் கண்டறிவதில் கில்லாடி. ஜீப்பை ஓட்டியபடியே, வலப்புறம் வெகு தூரத்தில் கடம்பை மான் ஒன்று நிற்பதைப் பார்க்கச் சொல்வார். நீலகிரி நிலவிரிவு செயல்திட்டம் (Nilgiri Landscape Project) என்ற திட்டத்தை WWF கடந்த பத்தாண்டுகளாக இந்தப் பகுதியில் இயக்கி வருகிறது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கள ஆய்வு செய்கின்றனர். பணிசெய்வோர் யாவரும் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர் ஆட்களே. திருட்டு வேட்டையைத் தடுக்க இரு முகாம்கள் அமைத்து ஒவ்வொரு முகாமிலும் மூன்று பேர் இருக்கிறார்கள். தாங்கள் காணும் காட்டுயிர்களைப் பதிவு செய்கிறார்கள்.

இந்தப் பகுதியில் நாற்பது தானியங்கி காமிராக்களை வெவ்வேறு இடங்களில் பொருத்தியிருக்கிறார்கள். வேங்கை, காட்டுப்பாதையில் நடக்கும் பழக்கமுடையதாகையால் அதன் நடமாட்டத்தை அதன் கால் தடங்கள் மூலம் கண்டு, அந்தப் பகுதியில் தானியங்கி காமிராக்களைப் பொருத்துவார்கள். இந்த காமிரா இரு பகுதிகளாக இயங்கும். சிறுமரங்களில் எதிர் எதிராக, தரையிலிருந்து ஓரடி உயரத்தில், நேர்கோட்டில், இக்காமிராக்களை கம்பியால் இறுகக் கட்டி விடுகிறார்கள். ரேடியோ கதிரால் இணைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பகுதிகளுக்கும் குறுக்கே எந்த விலங்காவது நடந்து இந்த இணைப்பு துண்டிக்கப்படும்போது, காமிரா இயங்கிப் படமெடுத்து விடுகின்றது. படமெடுக்கப்பட்ட தேதியும், நேரமும் பதிவாகிறது. ஒரு காமிராவால் இருநூறு படங்களை எடுக்க முடியும். வாரத்திற்கொரு முறை ஆய்வாளர் வந்து இந்த காமிராவிலிருந்த கார்டை மட்டும் எடுத்து, இன்னொரு புதிய கார்டைப் பொருத்தி விடுகின்றார். இந்த முறையில் சலனப்படம் கூட எடுக்க முடியும். எங்களைக் காட்டுக்குள் கூட்டிச்சென்ற ரவிகுமார் அவ்வப்போது ஜீப்பை நிறுத்தி காமிரா கார்டுகளை மாற்றினார். உடனே அந்த கார்டை தனது டிஜிட்டல் காமிராவில் பொருத்தி எந்த எந்த விலங்குகள் படமெடுக்கப்பட்டிருக்கின்றன என்று எங்களுக்குக் காட்டினார். நாங்கள் சென்ற அன்று அந்தப் பாதையை ஒரு மணி நேரத்திற்கு முன்தான் கடந்திருந்த ஒரு புதிய வேங்கை காமிராவில் பதிவாகியிருந்தது. அதன் கால்தடயங்களையும் நாங்கள் அங்கு பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வேங்கைக்கும் ரோமப்போர்வையிலுள்ள வரிகள் வேறுபட்டிருக்கும், மனிதரின் கைரேகை மாதிரி. ஆகவே காட்டுயிரியலாளர்கள் புகைப்படத்தை வைத்து வேங்கையை அடையாளம் கண்டு அதற்கு T 20, K4 என பெயர்களும் வைத்து விடுவார்கள். இந்த முறையுடன், புலியின் எச்சத்தை பரிசோதனைச்சாலையில் ஆராய்ந்து, DNA மூலமும் அடையாளம் காண முடியும். இப்படி ஆராய்ந்ததில் இந்தப் பகுதியில் ஏறக்குறைய 20 வேங்கைகள் வாழ்கின்றன என்ற முடிவிற்குக் கள ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

எங்களது முதல் நிறுத்தம் ஒரு திருட்டுவேட்டை தடுப்பு முகாம். யானைகளிடமிருந்து பாதுகாப்பிற்காக அந்த ஒரு அறை முகாம், நாற்புறமும் பதுங்குக் குழியால் சூழப்பட்டு, ஒரு சிறிய மரப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் துப்பாக்கி ஏதும் இல்லையென்றாலும், அவர்கள் அங்கு இருப்பதே திருட்டு வேட்டையாடிகள் அந்தப் பக்கம் வராமல் தடுக்கிறது. மலை உச்சிகளில் ஏறி பைனாகுலர் மூலம் கண்காணிக்கிறார்கள். சந்தேகப்படும் நடமாட்டம் தென்பட்டால் வனத்துறை கண்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொள்கிறார்கள். நாங்கள் கையுடன் எடுத்துச்சென்ற ரொட்டியையும் வேகவைத்த முட்டையையும் சாப்பிட்டு விட்டு, அவர்கள் போட்டுக்கொடுத்த கருப்புத் தேனீரைக் குடித்துவிட்டுப் பயணத்தை தொடர்ந்தோம். காட்டுப்பாதையாதலால் மெதுவாகத்தான் போக முடிந்தது..

சிறிது தூரம் கடந்து காங்கிரஸ் பட்டி என்ற, மரங்களற்ற சமதளப் புல்வெளிக்கு வந்தோம். காங்கிரஸ் புல் என்றறியப்படும் தாவரம் மிகுந்துள்ளதனால் இந்தப் பெயர். சில ஆண்டுகளுக்கு முன், காட்டில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கால் நடைகளை இங்கே பட்டி போட்டுத் தங்க விட்டிருந்தனர் மேய்ப்பர்கள். ஏறக்குறைய 30,000 கால்நடைகள் இவ்வனப்பகுதியில் நடமாடின. கால்நடைகளை இரைக்காக அடித்த பெரும்பூனைகளைப் பூச்சி மருந்து வைத்து எளிதாகக் கொன்றனர். அங்கே ஒரு மண் சுவர்களாலான ஒரு கோவிலின் சிதைவைக் காண முடிந்தது. பல மாதங்களாக இடையர்களுடன் பேசி, அவர்களுக்கு வேறு வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி செய்து, கால்நடைகளைக் காட்டிற்குள் ஓட்டி வருவதை நிறுத்தியது WWF குழு.

18 கி.மீ. கடந்து, ஒரு மலை உச்சியில், ஒரு பள்ளத்தாக்கிற்கு மேலே காட்டுப்பாதை முடிந்தது. கீழே, ஒரு வெள்ளிக் கீற்றுபோல மோயாறு மதிய வெயிலில் பளபளத்தது. இடதுபுறத்தில், பச்சை வயல்களுக்கு நடுவே தெங்குமராடா கிராமத்தை தெளிவாகக் காணமுடிந்தது. தளமலையும் அதற்குப்பின் உள்ள சத்தியமங்கலம் சரணாலயத்தின் மலைத்தொடர்களும் அடுக்கடுக்காகத் தெரிந்தன. இது அடர்ந்த காடலல்ல எனினும் புள்ளிமான், கடம்பைமான், காட்டெருது போன்ற தாவர வுண்ணிகள் நிறைந்த காடு. வேங்கைகளுக்குத் தேவையான இரை விலங்குகள் நிறைந்துள்ளதால், மனிதர்கள் தங்கள் கைவேலைகளைக் காட்டாமல் இருந்தால் இந்த அருமையான கானகம் வேங்கை வாழிடமாகச் செழித்திருக்கும்.

வட இந்திய சரணாலயங்களில் புலிகள் வெகு விரைவாக மறைந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் சத்தியமங்கலக் காடுகளில் வேங்கைகள் நடமாட்டம் சிறப்புச் செய்தியாக பவனி வர ஆரம்பித்தது. இந்தியாவின் 39 வேங்கை பாதுகாப்பு இடங்களில், (Project Tiger Reserve) இரண்டு - களக்காடு முண்டந்துறை, முதுமலை - தமிழ்நாட்டிலுள்ளன. இப்போது சத்தியமங்கலக் காட்டையும் புலி பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்போவதாக மத்திய அரசு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கின்றார்.

இதில் பிரச்சினை என்னவென்றால் வேங்கை பாதுகாப்பு பல புதிய பரிமாணங்களைப் பெற்று வருகின்றது. ஒரு சரணாலயம், வேங்கை பாதுகாப்பு இடம் என்று அறிவிக்கப்பட்டு விட்டால் மைய அரசிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிலிருந்தும் நிதி ஒதுக்கீடு கணிசமாக வரும். டூரிஸம் நடத்துபவர்கள் அங்கே வந்து சரணாலயத்திற்கு ஓரமாக விடுதிகளைக் கட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவை சாதாரண தங்குமிடங்கள் அல்ல. ரன்தம்போரிலுள்ள ஒரு விடுதியில் ஒரு அறைக்கு ஒரு நாள் கட்டணம் 25,000 ருபாய். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும்போது, வேங்கைகள் மனிதரின் அருகாமைக்குப் பழக்கப்பட்டு விடுகின்றன. பிறகு, திருட்டுவேட்டைக்காரனையும் அருகில் வர விட்டு உயிரை இழக்கின்றன. டூரிஸம் அதிகமான சரணாலயங்களில் புலியைச் சுடுவது எளிதாகின்றது. ரன்தம்போரில் பல புலிகள் திருட்டு வேட்டையாடிகளால் கொல்லப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் சரிஸ்கா, பண்ணா போன்ற புகழ்பெற்ற சில சரணாலயங்களில் வேங்கைகள் பூண்டோடு அற்றுப்போய்விட்டன.

அதே சமயம், நமது நாட்டில் காலங்காலமாக லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொன்று, சில காடுபடுபொருட்களைப் பயன்படுத்தி, காட்டில் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலையில் மலயாளிகள், அகத்தியமலையில் காணிகள், பழனித்தொடரில் காடர்கள், புலயர்கள், நீலகிரியில் கோத்தர்கள் என இன்றும் வாழ்கிறார்கள். காலனிய ஆதிக்கத்திற்கு முன்பு காட்டுவாழ் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். எனினும் இவர்கள் அல்ல காடுகளை அழித்தவர்கள்.

காலனிய ஆதிக்கம் வந்த பின்னர் பிரித்தானியர்கள், காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்ததுபோல, இந்தியாவின் காடுகளை வேக வேகமாக அழிக்க ஆரம்பித்தனர். மரத்தொழிலுக்காக மரங்களையும், தோட்டப்பயிர்களுக்காக காடுகளையும் வெட்டித்தள்ளினர். விருதுகளுக்காகவும் வீரசாகசத்திற்காகவும் sport என்ற பெயரில் காட்டுயிர்களைச் சுட்டுத் தீர்த்தனர். காடுவாழ் மக்களுக்கும் காட்டின் பயன் கிடைக்காதவாறு செய்து, காட்டிற்கும் அந்த மக்களுக்கும் இருந்த உந்திச்சுழி அறுக்கப்பட்டது. ஊழிகாலமாக வாழ்ந்திருந்த நிலத்திற்குப் பத்திரம் ஏதும் இல்லாததால் தங்கள் வீட்டிலேயே பழங்குடியினர் அனாதை ஆனார்கள். சுதந்திரம் வந்த பிறகும் இந்த நிலை தொடர்ந்தது. வனத்துறை அதிகாரிகளும் பழங்குடியினரை அச்சுறுத்தி அடிமைகள்போல் நடத்தினர். இப்பழங்குடியினரைக் காட்டை விட்டு வெளியேற்றினால்தால் புலியைப் பாதுகாக்க முடியும் என்று வாதிடுபவர்கள் டூரிஸத்திற்கு எதிராக எதுவும் சொல்வதில்லை. அது ஒரு மகா சக்திவாய்ந்த லாபி.

பழங்குடியினரை வெளியேற்றக் கூடாது. காடுதான் அவர்கள் வாழிடம். அது மட்டுமன்றி அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் காட்டுயிர்களைப் பேணமுடியாது என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர். காட்டுயிரியலாளர்களும் ஆர்வலர்களும் பங்கெடுக்கும் எல்லா கருத்தரங்குகளிலும் கூடுகைகளிலும் இந்த விவாதம் எதிரொலிக்கிறது. வனத்துறை அதிகாரிகள், காட்டுயிரியலாளர்கள் ஒருபுறமும், தன்னார்வக் குழுக்களும் மனித உரிமைக் குழுக்களும் மறுபுறமும், இரு பிரிவாக இயங்குகின்றனர். உள்ளூர் மக்கள் ஆதரவில்லாமல் காட்டுயிரைப் பாதுகாக்க முடியாது என்பது அவர்கள் வாதம். மக்களை ஒதுக்கியதால்தான் நம் நாட்டின் காட்டுயிர் வளத்தை இழந்துவிட்டோம் என்கின்றனர்.

காடுவாழ் மக்கள் இழந்த உரிமையை மீட்டுத்தரும் நோக்கத்துடன் 2006இல் காட்டுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. காலனி ஆதிக்கத்தில் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களையும் சட்டம் என்று இது வரவேற்கப்பட்டது. வனத்துறை மாநிலத்தின் கையில் இருப்பதால் இந்த சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. பெருவாரியான மாநிலங்கள் இந்த சட்டத்தை இன்னும் கண்டுகொள்ளவேயில்லை. இதைச் செயல்படுத்த தேவையான, நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இன்னும் மாநில அரசுகள் வெளியிடவில்லை. காட்டுரிமைச் சட்டம் இன்றளவில் ஒரு ஏட்டுச்சுரைக்காயாக உறைந்து விட்டது. இந்த மாதம் 13ம் தேதி ஹரூரில் 2006 காட்டுரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பழங்குடியினர் நல சங்கத்தினரால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் சென்னையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சத்தியமங்கலக் காடுகளைப் புலி காப்பகமாக அறிவித்தால் அது புலி பாதுகாப்பிற்கு உதவுமா அல்லது எதிர்வினையாகுமா என்ற அடிப்படை கேள்வி எழுப்பப்படுகிறது. நோக்கம் நல்லதாயிருப்பினும் நாளடைவில் இது வேங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நன்னோக்கம் எனும் கற்களால் பாவப்பட்டது என்றொரு பழமொழி உண்டு. (The road to hell is paved with good intentions)

படங்கள்: நித்திலா பாஸ்கரன்

நன்றி: உயிர்மை.காம்

செவ்வாய், மார்ச் 01, 2011

உயிர் வாங்கும் ஒலி மாசு!

நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாசுகளைப் போன்றே ஒலி மாசும் மனித வாழ்நிலையைப் பெருமளவு பாதிக்கின்ற காரணியாகத் திகழ்கிறது. உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டே தொடங்கின. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், வாகனங்கள், தொழிற்சாலைகள் என ஒலிகளின் பிறப்பினை எத்தனையோ வடிவங்களில் நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். செவிக்கும், புலனுக்கும் இனிமை தருகின்ற இசை, பாடல் ஆகியவையும் ஒலியிலிருந்தே பிறக்கின்றன. ஏதோ ஒரு சூழலில் ஏதுமற்ற அமைதி நிலவினால் கூட, நம்மால் அதனைச் சகித்துக் கொள்ள இயலுவதில்லை.

earநம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு சத்தங்களோடு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம், அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது. காதொலிக் கருவியின் மூலம் பண்பலை வானொலியில் பாடல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே பாடல் கூம்புக் குழாயில் நம் வீட்டுத் தெரு முனையில் ஒலிபரப்பானால், நம்மால் கேட்க முடிவதில்லை. இதற்குக் காரணம் ஒலியின் அளவு. நம் காதால் கேட்கப்படும் இசையானது, அளவினை மீறும்பட்சத்தில் இரைச்சலாக மாறிவிடுகிறது. உடனே இரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டு, அந்த ஒலி கேட்கும் அளவைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறோம்.

ஒலிகளின் நூற்றாண்டு எனுமளவிற்குத் தற்போது நம்மைச் சுற்றி ஒலிகளின் அத்துமீறல் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தொலைக்காட்சி, வானொலி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் நமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன. இன்று பண்பலை ஒலிக்காத வீடுகளே இல்லை, தொலைக்காட்சியின் தொடர்கள் ஒளிக்காத இல்லங்களைக் காணுவது அரிது என்ற நிலைக்கு ஒலி-ஒளியின் அத்துமீறல் மிகப் பெரும் வீச்சில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமூக, கோவில் விழாக்கள் நிகழ்கின்ற காலங்களிலோ, தேர்தல் பரப்புரையின்போதோ அல்லது அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால், நமது காதுகளின் சவ்வு கிழியாமல் இருந்தால் அது மிகப் பெரிய வியப்பே!

கூம்புக்குழாய்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னமும் பெரும்பாலான பகுதிகளில் செல்வாக்கு மிக்க நபர்களின் செல்வாக்கில் பெரும் வீச்சில் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன. காவல்துறையும் தங்கள் காதுகளைப் பொத்திக் கொண்டு செல்வாக்குகளுக்கே சேவகம் செய்து கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களின் படிப்பு, உடம்பிற்கு இயலாமல் படுத்துக் கிடக்கும் முதியவர்கள், மருத்துவமனைப் பகுதிகள், குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள் ஆகியவை அதிகபட்ச ஒலிச்சூழலால் தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. வாகனத்தில் இயங்கும் 'மின்னனு ஒலிப்பான்கள்' தடை செய்யப்பட்ட இடங்களிலெல்லாம் தற்போது மிக இயல்பாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஒலி அத்துமீறல் நிகழ்கின்ற களங்களின் எண்ணிக்கையும், சராசரியான ஒலி அளவும் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. உலக நலவாழ்வு நடுவம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, உலகிலுள்ள 10 வயதிற்குட்பட்ட சிறார்களில் 5 விழுக்காட்டினர் ஒலி மாசு காரணமாக தங்களது செவியின் கேட்புத்திறனை இழந்துள்ளனர். உச்ச அளவான 75 டெசிபல்லுக்கும் மேலாக இரைச்சலை உணரும் அனைவரும் தலைவலி, சோர்வு, தலைசுற்றல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இயந்திரத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் செவித்திறனை இழந்து, பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது இந்தியாவில் ஆயிரத்தில் 35 பேருக்கு காது இரைச்சல் நோய் உள்ளதாகவும், புறநகர்ப் பகுதிகளில் வசிப்போரில் 10 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் வசிப்போரில் 7 விழுக்காட்டினரும் ஒலியுணரும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர். ஒலியளவு அதிகரித்துள்ள பகுதிகளில் வாழ்கின்ற நபர்களில் பெரும்பாலானோருக்கு நரம்புத்தளர்ச்சி மற்றும் இதயநோய் பாதிப்புகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தொடரும் இரைச்சல் நிலை மனித இறப்புக்கும் கூட வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 டெசிபல், அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 டெசிபல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 டெசிபல், பரபரப்பான கடைத்தெருவில் ஏற்படும் இரைச்சல் 80 டெசிபல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 டெசிபல், சத்தத்துடன் பொழியும் மழையின் அளவு 50 டெசிபல், அமைதியாகக் காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 டெசிபல் (நன்றி தினகரன், அக்டோபர் 19 2010) பொதுவாக 50லிருந்து 75 டெசிபல் வரை நம் காதுகள் கேட்கும் சராசரி அளவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த அளவைக் காட்டிலும் அதிகமாகவே ஒலி மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 84 விழுக்காடு ஆசிரியர்களுக்கும், 92 விழுக்காடு மாணவர்களுக்கும் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து நடைபெறும் இடங்களைக் காட்டிலும் கடைத்தெருக்களில் இரைச்சலின் அளவு அதிகமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 55 டெசிபல் அளவை பகலிலும், 45 டெசிபல் அளவை இரவிலும் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு (2009) தீபாவளியின்போதே அதற்கு முந்தைய ஆண்டினை (2008) ஒப்பிடும்போது அதிக அளவான ஒலி மாசு சென்னையில் இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. 2008ஆம் ஆண்டைக் காட்டிலும் 2009ஆம் ஆண்டு சராசரி அளவிலிருந்து 3.9 டெசிபல் அளவிற்கு சென்னை முழுவதும் ஒலி மாசு அதிகரித்தது. வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 டெசிபல் அதிகமாகவே ஒலி மாசு பதிவாகியிருந்தது. அது இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது அதிகரிக்குமா அல்லது அதே அளவில் பேணப்படுமா என்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கைகளில்தான் உள்ளது. அதிகபட்ச வரம்பிற்கு மேல் ஒலி அளவு வெளியிடப்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏழு நகரங்களில் ஒலி மாசு கண்காணிப்பு நடுவம் அமைக்கப்படும் என நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த சனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு நகரத்திலும் 5 எண்ணிக்கையில் இந்நடுவங்கள் அமைக்கப்பட்டு ஒலி மாசின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் இது அக்டோபர் 12 முதல் செயல்படத்தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வருகின்ற 2011ஆம் ஆண்டிற்குள் மேலும் 18 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் நடுவண் மாசுக் காட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கௌதம் தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான, தேவையான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒலி மாசு நடுவங்கள், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விரைந்து உருவாக்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் ஒலி அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், வரையறுக்கப்பட்ட ஒலி அளவை அந்தந்த இடங்களில் எச்சரிக்கைப் பலகையாக அமைத்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்துதல் மிகவும் அவசியம்.

ஒலி மாசு தொடர்பான தேசிய மற்றும் மண்டல அளவிலான கொள்கையினை வகுப்பதற்கு இந்த ஒலி மாசுக் கண்காணிப்பு நடுவங்கள் பேருதவியாக இருக்கும். ஒலி மாசு ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மிக அண்மையில் அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இச்சட்டத்தை திறம்படச் செயல்படுத்தவும், மாநில அரசுகளை ஊக்குவிக்கவும் ஒலி மாசு கண்காணிப்பு நடுவங்கள் உதவியாக இருக்கும் என்று நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைந்த நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றின் பக்க விளைவுகளாக நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றில் கட்டுக்கடங்காத வகையில் மாசு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், மேலும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சட்டம் மற்றும் நிர்வாக முறை அவசியமாகிறது.

இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பில் முக்கியமான நகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் ஒலி மாசு மற்றும் சூழல் மாசு ஆகியவற்றின் காரணமாக ஒவவொரு ஆண்டும் 10 போக்குவரத்துக் காவலர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தற்போது நகருக்குள் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைத் தாண்டிவிட்டன. பெங்களூரு நகருக்குள் அலுவல் நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் மட்டும் ஏறக்குறைய மூவாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களின் இடைவிடாத ஒலி, தொடர்ந்த இரைச்சல், பரபரப்பு ஆகியவற்றால் மூச்சுவிடுதலில் கோளாறு, காதுகேளாமை, மந்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற உடற்கோளாறுகள் இயல்பாகிவிட்டன.

போக்குவரத்தினை ஒழுங்கு செய்யும் காவலர்களுக்கே இந்தப் பாதிப்பென்றால், ஒலி மாசு நிகழும் இடங்களுக்கு அருகே வாழ்கின்ற பொதுமக்களின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இங்குள்ள வாகனங்கள் 100 டெசிபலுக்கும் மேலான ஒலியை எழுப்புவதால், போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று பெங்களூரு மாநகராட்சியின் மேற்கு மண்டல துணை போக்குவரத்து ஆணையர் இராணே தெரிவிக்கிறார். இது பெங்களூருக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநகராட்சிகளிலும் இந்த நிலைதான்.

போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்னனு ஒலிப்பான்களை போக்குவரத்துக் காவல் துறை திட்டவட்டமாக வரையறை செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்து, 80லிருந்து 85 டெசிபலுக்கு மேற்படாத அளவினைக் கொண்ட மின்னனு ஒலிப்பான்களைப் பயன்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தொழிற்சாலைப் பகுதிகளில் 75 டெசிபல், வணிகப்பகுதிகளில் 65 டெசிபல், குடியிருப்புப் பகுதிகளில் 55 டெசிபல், அமைதிப்பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் 50 டெசிபல் என மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் ஒலியின் அளவை இடத்திற்கேற்ப இசைவளித்துள்ளது. இந்த அளவினை மீறும் தனிநபர்களையும், அமைப்புகளையும் கடும் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.

'ஓரிடத்தில் ஒலியளவு அதிகரிப்பதால் மனித நடத்தையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. அதிகபட்ச ஒலி மாசு, போதிய உறக்கமின்மை, எரிச்சல், செரிமானக்கோளாறு, நெஞ்சுஎரிச்சல், உயர்ரத்த அழுத்தம், அல்சர், இதயநோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் குறைந்தபட்ச ஒலியளவு கூட மேற்கண்ட பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை படைத்தவை' என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை நடத்திய ஒலி மாசு குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துறையின் பேராசிரியர் முத்துச்செழியன் 'ஒலியளவைக் கட்டுப்படுத்த ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல, வாகனங்களில் 'மின்னனு காற்று ஒலிப்பான்களை' அறவே தடை செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் ஒலி மாசின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்' என்கிறார். மதுரை நகருக்குள் ஒலி மாசு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2004ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2010இல் பல்வேறு இடங்களில் ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 25 டெசிபலுக்கும் கூடுதலாகவே அதிகரித்துள்ளதை மதுரை காமராசர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை கண்டறிந்துள்ளது.

ear1'சுற்றுச்சூழல் என்பது தனி மனித சொத்து அல்ல. பொதுச்சொத்து. மனித வாழ்க்கையை ஆரோக்கியமாக பேணிக் காக்க சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும். ஆனால் பல்வேறு காரணிகளால் இன்று சுற்றுச்சூழல் மாசடையும் நிலை உள்ளது. காற்று வெளி மாசு, நீர் மாசு, மண் மாசு, கடல் மாசு, உணவு மாசு, கதிரியக்க மாசு, ஒலி மாசு எனப் பல உதாரணங்களைக் கூற முடியும். சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாதவாறு கட்டுப்படுத்துவது அல்லது கண்காணிப்பது முழுக்க முழுக்க அரசின் கடமை என எண்ணிவிடக்கூடாது. தனி மனிதன் ஒவவொருவருக்கும் சுற்றுச்சூழலைக் காக்கும் கடமை உள்ளது. குறிப்பாக இரைச்சல் மிகுந்த இன்றைய சூழலில் ஒலி மாசை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மின்னனு காற்று ஒலிப்பான்களை தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட இடங்களில் அதனைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியேற்பும் மிக அவசியம்.

ஒலி மாசு மனிதனை மட்டுமன்றி, இயற்கையையும், அந்த இயற்கையைப் பெரிதும் சார்ந்து வாழும் உயிரினங்களையும் பாதிக்கிறது. குறிப்பாக பறவை இனங்களின் வாழ்க்கைத் திறனை ஒலி மாசு அதிகளவில் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வாசிங்டனிலுள்ள கொலாராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பிரான்சிஸ் தலைமையிலான ஆய்வுக்குழு, 32 வகையான பறவையினங்களை சத்தம் இல்லாத அமைதியான சூழலில் வைத்து வளர்த்தது. 21 வகையான பறவையினங்களை ஒலி மாசு அதிமுள்ள இடங்களில் வைத்து வளர்த்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர், இந்தப் பறவை இனங்களை ஆய்வு செய்தபோது, ஒலி மாசு அதிகம் உள்ள இடங்களில் 3 வகையான பறவையினங்கள் மட்டுமே இருந்தன. மற்றவை வேறிடம் நோக்கிப் பறந்து விட்டன. ஆனால் ஒலி மாசு தொந்தரவு இல்லாத அமைதியான சூழலில் வளர்க்கப்பட்ட பறவைகளில் 14 இனங்கள் அங்கேயே வசித்து வந்தன.

இந்த ஆய்வின் வாயிலாக ஒலி மாசு பறவைகளின் வாழ்நிலையைத் தீர்மானிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே போன்று கடல் பகுதியில் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ஒலி மாசின் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், சில நேரங்களில் இறந்துபோகின்ற நிலைக்கும் கூட தள்ளப்படுகின்றன. அண்மையில் அமெரிக்கக் கடற்பகுதியில் ஆயுதக்கப்பல்களால் எழுப்பப்பட்ட மிகு ஒலியின் காரணமாய், அக்கடல் பகுதியில் வாழ்ந்த திமிங்கலங்கள் அதிர்ச்சியில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் கடற்கரையோரம் படையெடுத்து ஒட்டுமொத்தமாய் இறந்து கரை ஒதுங்கின. கடலில் பெருகிவிட்ட கப்பல் போக்குவரத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களின் சுதந்திரத்தை இழந்து தவிக்கின்றன. தங்களுக்குள் தகவல்களைக் கூட பரிமாறிக் கொள்ள முடியாமல் பல்வேறு இடர்ப்பாடுகளுடன் வாழ்கின்றன.

சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள்ளும், மலை வாழிடங்களிலும் நடைபெறும் ஒலி மாசால் அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி மனிதர் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. இதனால் பல்லுயிர்ச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. மனிதன் தனது சுயநலத்தால் பிற உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக் கொள்கின்ற பேரவலம் ஒலி மாசின் காரணமாக நிகழ்த்தப்படுகிறது. இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை நடுவண் மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் மட்டுமன்றி தனி நபர்களும் முன் வருதல் வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலுள்ள ஆடியோ மற்றும வீடியோ வசதிகளை உடனடியாக நீக்கம் செய்திட வேண்டும்.

வாகனங்களின் மின்னனு ஒலிப்பான்களை வாகனங்களுக்கு ஏற்றாற் போல், ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் 75 டெசிபல் அளவை மீறாத வகையில் ஒலிப்பான்களை வரையறை செய்தல் வேண்டும். அதனை மட்டுமே பொருத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களை நகருக்குள் அனுமதித்தல் கூடாது. பள்ளி, கல்லூரி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பேரணி நடத்தவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ இசைவளிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கை சார்ந்த சுற்றுலாவை குறிப்பாக வனச் சுற்றுலாவை ஊக்குவிப்பது சிறிதுசிறிதாகக் குறைக்கப்பட வேண்டும். பொதுவாக அனைத்து நகர்ப்பகுதியிலும் மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்படுதல் வேண்டும். கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குட்படுத்தப்பட வேண்டும். கடல் வாழ் உயிரினங்களுக்கும் பல்லுயிர்ச் சூழலுக்குக் குந்தகம் நேராத வகையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது அவசர அவசியம்.

-இரா. சிவகுமார்

நன்றி: கீற்று இணையம்