வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

கூடங்குளம் அனுமதி - "பூவுலகின் நண்பர்கள்" கண்டனம்!



கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதற்கு  அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு “பூவுலகின் நண்பர்கள்” கடும் கண்டனம் தெரிவிக்கிறது.



அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் இன்று (10-08-12) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்திக் குறிப்பில், “கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் அளித்த அறிக்கைகள் 09-08-12 அன்று நடைபெற்ற அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தின் 107வது கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது: அதன் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்பி, அதனை இயக்குவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.



ஆனால் கூடங்குளம் அணுஉலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில், ஜப்பான் புகுஷிமா விபத்திற்கு பிந்தைய (இந்திய அணுஉலைகள் பாதுகாப்பு குறித்த) நிபுணர் குழுபரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே கூடங்குளம் அணுஉலை செயல்படுத்தப்படும் என்று அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம்  அனுமதி அளித்துள்ளது சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலைகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதி, சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டது என்றும், எனவே அதை செல்லாது என அறிவிக்கக்கோரியும் தொடரப்பட்ட வழக்கு இது வரை தீர்ப்பளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்காக பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் முறையாக வகுக்கப்படவில்லை என்றும், பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தாத நிலையில் கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கூடங்குளத்தில் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தின்  அறிவிப்பு, நீதிமன்றத்தின் மாண்பையும் - நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மேலும் கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு ஆய்வு அறிக்கை மற்றும் கள ஆய்வு அறிக்கை ஆகியவற்றை அணுசக்திக்கு எதிரான மக்கள் அமைப்பினருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு ஆய்வு அறிக்கை மற்றும் கள ஆய்வு அறிக்கை ஆகியவை இன்னும் வழங்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் நீதியியலின் சாராம்சமான “வருமுன் காப்போம்” என்ற முக்கிய கோட்பாட்டை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலைகளில் எரிபொருள் நிரப்பலாம் என்று அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதற்கு “பூவுலகின் நண்பர்கள்” வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய அனுமதியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று “பூவுலகின் நண்பர்கள்” கோரிக்கை விடுக்கிறது. 

இது ஆரம்பம்...இனிதான் இருக்கு பூகம்பம்! புதிய நிதி அமைச்சரைப் புரட்டி எடுக்கும் கோவணாண்டி


கோவணாண்டிகளுக்காக துணிஞ்சு, வாழ்நாள்ல ஒரே ஒரு முறை ஓங்கி குரல் கொடுத்திருக்கற செட்டிநாட்டுத் தங்க ராசா... மாண்புமிகு மத்திய மந்திரி ப.சிதம்பரம் அய்யாவுக்கு, உங்க பழைய பாசக்காரக் கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கறான்.

''பணத்தைத் தூக்கி வீசி, ஐஸ்கிரீம் திங்கறீங்க; பணத்தைப் பத்தி கவலைப்படாம மினரல் வாட்டர் குடிக்கறீங்க; ஆனா, அரிசி விலை ஒரு ருபா கூடிட்டாகூட... 'அய்யோ, குய்யோ'னு கத்துறீங்க. பாடுபட்டு விளைவிக்கிற விவசாயிக்கு, இதனால கூடுதலா நாலு காசு கிடைக்கறதுக்குக்கூட எதிர்ப்பு காட்டுறீங்களே... என்னய்யா நியாயம் இது?''னு பெங்களூரு விழாவுல கேட்டு, விவசாயிங்க வயித்துல பால் வார்த்திருக்கீங்க பாருங்க... இதுக்காகவே நம்ம பழையப் பங்காளிச் சண்டையையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு, ஒங்களுக்கு ஓராயிரம் சல்யூட் அடிக்கலாமுங்க.

'கொஞ்சம் இரு... அது நான் உள்துறை மந்திரியா இருந்தப்ப சொன்னது. இப்ப நான் நிதி மந்திரி. இப்ப எதுக்காக கையில எடுக்கறே... என்னை வெச்சு காமெடி, கீமடி பண்ணலையே...?'னு கேக்கறீங்கதானே!

உங்கள பத்தி நிசமாலுமே பெருமையா பேசணும்னு நினைச்சுத்தான், பழைய விஷயமாயிருந்தாலும் பரவாயில்லனு, அதை நான் கையில எடுத்தேன். ஆனா, நீங்களே சந்தேகப்பட்டு கேட்ட பின்னாடி, எனக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த 'அந்நியன்' துள்ளிக் கிளம்பி வந்து, ஆயிரத்தெட்டுக் கேள்விகள அடுக்க ஆரம்பிச்சுட்டான். இதுக்கு நான் பொறுப்பில்லீங்கய்யா... நீங்களேதான்!
'நேத்துவரைக்கும் முதலாளிமாருங்களுக்கு சாமரம் வீசிட்டு, இருந்த ப.சி., திடீர்னு பொதுநலம் பேச ஆரம்பிச்சுருக்காரே... இதுல ஏதாச்சும் சுயநலம் சுருண்டு படுத்திருக்குமோ?'னு ஒரு கேள்வி ரொம்பவே இந்த அந்நியனைக் குடாயுதுங்கய்யா.

'லட்சக் கணக்குல உசந்துகிட்டே போற விவசாயிகள் தற்கொலை பத்தி இதுவரைப் பேசினதே இல்ல; பன்னாட்டுக் கம்பெனிங்க, பாரம்பரிய விதைகளை அழிச்சுட்டு, கம்பெனி விதைகளை கடைபரப்பி, விவசாயிங்க வயித்துல அடிக்கறது பத்தி வாய் திறந்ததே இல்ல; உரத்துக்கான மானியத்தை நறுக்கி, உர விலையைக் கன்னாபின்னானு எகிற வெச்சதைப் பத்தி பேச்சே இல்ல; காவிரியில முறைப்படி திறக்க வேண்டிய தண்ணியைத் திறந்துவிடாத கர்நாடகாவைக் கண்டிச்சதே இல்லை; ஈமு கோழிங்கற பேருல எங்க விவசாயிங்க பணத்தைக் கோடி கோடியா கொள்ளையடிக்கறதப் பத்தி ஒரு கேள்வியும் இல்லை... இப்படியிருக்கறப்ப, இந்த ப.சி-க்கு இப்ப மட்டும் திடீர்னு விவசாயிங்க மேல என்ன கரிசனம்?'னு அந்நியன் கேட்கிற கேள்விகளுக்கு என்கிட்ட பதில் இல்லீங்கய்யா!

சரி, நிசமாலுமே சொல்லுங்க... உங்களுக்கு விவசாயிங்க மேல என்ன திடீர் கரிசனம். உங்க தலைவரு மன்மோகன் சிங்கும், நீங்களும் மாத்தி மாத்தி ஆராதிச்ச புதிய நீர்க்குமிழிப் பொருளாதாரம்... வெடிச்சு நீர்த்தே போச்சு. 'பொருளாதாரம் வளருது... புடலங்கா வளருது... நாடு வளருது... நாடு ஒளிருது...'னு ஆள்மாத்தி ஆள்... ஆட்சி மாத்தி ஆட்சி...னு பீலா வுட்டுக்கிட்டு இருந்தீங்க. இதையெல்லாம் நம்பி... இலவசத்தை நம்பி, வேலை வெட்டிய விட்டுட்டு மல்லாக்கப் படுத்துக்கிட்டாங்க ஜனங்க. ஒங்க பொருளாதார பலூன் வெடிக்கப் போறது உறுதியான நிலையில... எங்க விவசாயிங்க தலையில ஐஸ் கட்டியைத் தூக்கி வெக்கறது எதுக்காக?

மொத்தமும் காலியாகி... இந்தியாவே பிச்சை எடுக்கற நிலைக்கு போயிக்கிட்டிருக்கு. இந்த நிலையிலயும், வீணாபோன எங்க விவசாயிங்க, கோவணத்தை இழுத்துக் கட்டிக்கிட்டு... மண்ணுல மல்லு கட்டினதால... நெல்லு வெளைஞ்சுது... கோதுமை விளைஞ்சது... கரும்பு விளைஞ்சது. 'இதேமாதிரி இந்தக் கோவணாண்டிக எல்லாம் படாதபாடுபட்டு விளைவிச்சா... உதிர்ந்துகிட்டிருக்கற பொருளாதாரத்தைக் கொஞ்சம் ஒட்ட வைக்க முடியும்'னு ஒரு நப்பாசையிலதானே இந்த ஐஸ். ஆனா, இத்தனை நாளா எங்கள வெச்சுக்கிட்டு நீங்கள்லாம் ஆட்டம்தானே காட்டுனீங்க. இப்ப அந்த இயற்கையா பார்த்து அத்தனைக்கும் ஆப்பு வெச்சுடுச்சு. தென்மேற்குப் பருவமழை ஜகா வாங்கினதால... விலையெல்லாம் கூடிடுச்சு. ஊருக்கு ஊர் எல்லாரும் ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இத்தனை நாளா விவசாயத்தை ஒதுக்கிவெச்சுட்டு... எப்பப் பார்த்தாலும், 'தொழில் வளர்ச்சி... பண வளர்ச்சி...'னே பேசிட்டிருந்த உங்களுக்கும் உங்க சகாக்களுக்கும்... இயற்கையே விட்டிருக்கற சவால்தான் இந்த வறட்சி. இது ஆரம்பம்தான்... இனிதான் இருக்கு பூகம்பம்! அரிசி விலை கிலோ நூறு ரூபாய்க்கு உசரப் போற நாள் வெகு தொலைவுல இல்லை.

'நாங்கதான் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செஞ்சு சமாளிச்சுடுவோமே'னு நினைச்சுட்டு, தெம்பா இருந்துடாதீங்க. நெனப்பு பொழப்பைக் கெடுத்துடும். ஆமாம்... எந்த நாட்டுலயும் இப்ப உணவு தானியம் கையிருப்பே இல்லைங்கறது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ஆஸ்திரேலியாவுல வறட்சி... ஆப்பிரிக்காவுல வறட்சினு எங்க பார்த்தாலும் வறட்சி தாண்டவம்தான். நீங்க பெருமையா பேசிட்டிருக்கற அமெரிக்காவுலயும் பல வருஷத்துக்குப் பிறகு, வறட்சியோட கதகளி ஆட்டம் ஆரம்பமாகிடுச்சாம். அதனால... எங்க சுத்தியும் எங்ககிட்டதான் வந்தாகணும்.

இனியாச்சும் கோவணாண்டிகளோட சேவை... இந்த நாட்டுக்குத் தேவைங்கறத மனசார எல்லாரும் உணருங்க. கம்பெனிகளுக்காக இத்தனை நாள் காவடி தூக்கின நீங்கள்லாம்... ஒங்களுக்கு அடுத்த வேளை சோத்தை உருவாக்கித் தர்ற கோவணாண்டிகளை கொண்டாடகூட வேணாம். குறைஞ்சபட்சம்... குத்திக் காயப்படுத்தாம இருந்தாலே போதும்... 'என் கடன் பணி செய்து கிடப்பதே'னு அத்தனையையும் அவன் பார்த்துப்பான்!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 25-08-12

தேனியில் பிசாசுத் துகள்!


து முழுமையான அறிவியல் கட்டுரை அல்ல. தேனி மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையம் எத்தகையது... அதை அந்த மாவட்ட மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரை மட்டுமே!

 அது என்ன 'நியூட்ரினோ’? ஒரு பொருளையோ, தனிமத்தையோ உடைத்துக்கொண்டே செல்லும்போது, இறுதியில் இதற்கு மேல் உடைக்கவே முடியாது என்கிற நிலையில் ஒரு பொருள் மிஞ்சும் அல்லவா? அதைத்தான் அணு என்றார்கள் விஞ்ஞானி கள். பிறகான விஞ்ஞான வளர்ச்சியில் அணுவைப் பிளந்தால் உள்ளே எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்று வகை துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது எதிர் மின் சுமைகொண்டவை எலெக்ட்ரான்கள். நேர் மின் சுமைகொண்டவை புரோட்டான்கள். எந்த மின் சுமையும் இல்லாமல் நடுநிலை வகிப்பவை நியூட்ரான்கள்.
பிரபஞ்ச ரகசியம்
அறிவியல் ஆராய்ச்சிக்குத்தான் ஒரு முடிவே கிடையாதே? 1930-ல் அணுவுக்குள் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானைத் தவிர மேலும் சில துகள்களும் இருக்கின்றன என்று யூகித்தார் உல்ஃப்கேங் பாலி என்ற விஞ்ஞானி. அதற்கு அவர் வைத்த பெயர்தான் நியூட்ரினோ. மிகச் சிறிய, அதே நேரத்தில் நடுநிலையான (மின் சுமையற்ற) அடிப்படைத் துகள் என்பதுதான் 'நியூட்ரினோ’வுக்கான விளக்கம். அதன் பிறகு, 26 வருடங்கள் கழித்து ''ஆமாம். உண்மையிலேயே நியூட்ரினோ என்று ஒன்று இருக்கிறது. அது பிசாசுபோலத் திரிந்துகொண்டு இருக்கிறது'' என்று ஆமோதித்தார்கள் அப்போதைய விஞ்ஞானிகள். அணு உலையில் நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக ரைனஸ், கோவான் ஆகிய விஞ்ஞானிகளுக்கு 1995-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இதனால் தூண்டப்பட்ட விஞ்ஞானிகள் நியூட்ரினோவைப் பற்றி மேலும் தோண்டித் துருவ ஆரம்பித்தார்கள். 'அணுவுக்குள் மட்டும் நியூட்ரினோ இல்லை. சூரியன், நட்சத்திரத்தில் இருந்தும் கோடானுகோடி நியூட்ரினோக்கள் மழைபோல கொட்டிக்கொண்டு இருக்கின்றன’ என்றவர்கள் நியூட்ரினோவில் 3 வகைகளும் 3 எதிர் வகைகளும் (ஆன்ட்டி-நியூட்ரினோ) இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். இதுதான் இந்தத் துறையில் மிக சமீபத்தியக் கண்டுபிடிப்பு. நியூட்ரினோ ஆய்வின் மூலம் சூரியனின் சூட்சுமத்தையும் பிரபஞ்சத்தின் பிறப்பு ரகசியத்தையும் கண்டுபிடிக்கலாம் என்பது உலக விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
பிசாசு அணுத் துகள்!
இந்தியாவும் 11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு நியூட்ரினோ ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வு ஐ.என்.ஓ. (India-based Neutrino Observatory) என்று குறிக்கப்படுகிறது. நியூட்ரினோ துகளின் முக்கியமான, அதிசயமான பண்பு என்னவென்றால், அது எந்தப் பொருளையும் ஊடுருவி மறுபுறம் வெளியேறிச் சென்றுவிடுமாம். அது கத்திப்பாரா பாலமாக இருந்தாலும் சரி... ஆவின் வெண்ணெயாக இருந்தாலும் சரி. இப்படி ஒவ்வொரு கணமும் பில்லியன்கணக்கான நியூட்ரினோக்கள் பூமியையே ஊடுருவிக் கடந்துகொண்டு இருக்கின்றனவாம். 

சூரியனில் இருந்தும் விண்மீன்களில் இருந்தும் கோடி கோடியாகக் கொட்டிக்கொண்டு இருக்கும் இந்த நுண் துகள்களைப் பிடிப்பது சாதாரண வேலை கிடையாது. அதனாலேயே நியூட்ரினோவை 'பிசாசு அணுத் துகள்’ (The Ghost Particle) என்று வேடிக்கையாகக் குறிப்பிடத் தொடங்கினார்கள். காஸ்மிக் கதிரோடு சேர்ந்து வரும் இந்தத் துகளைப் பிடிப்பது 'வண்ணத்துப்பூச்சி வலையால் பிசாசைப் பிடிப்பது’ போன்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இமயமலை டு பொட்டிபுரம்!
ஆக, நியூட்ரினோ ஆய்வகத்தை மலையைக் குடைந்து சுமார் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஏன்? மலை வடிகட்டியாகச் செயல்பட்டு நியூட்ரினோ சிறைபிடிப்புக்குப் பெருமளவு உதவும் என்பதாலேயே! இதற்கென முதலில் தேர்வுசெய்யப்பட்ட இடம் இமயமலை. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்று, அஸ்ஸாமில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றுக்குச் சென்றார்கள். அங்கு எதிர்ப்பு வலுக்கவே, கேரளத்தைக் குறிவைத்தார்கள். கடவுளின் தேசம், பிசாசுத் துகளை அனுமதிக்குமா? நைச்சியமாக தமிழ்நாட்டுப் பக்கம் தள்ளிவிட்டது. இங்கு நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதியைக் கட்டம் கட்ட, அங்கே விலங்குகள் சரணாலயம் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இயற்கை ஆர்வலர்களும் வனத் துறையும் எதிர்ப்பு தெரிவிக்க... தெற்கே சுருளி மலைக்கு நகர்ந்து, வனச் சரணாலய வரையறை காரணமாக இறுதியில் மொட்டைக் கரடாகக் காட்சி தரும் பொட்டிபுரத்தில் நிலைகொண்டுவிட்டது திட்டம்!
பொட்டியில் என்ன நடக்கும்?
தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சி, புதுக்கோட்டை கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொட்டிதட்டி மலைத் தொடர். உள்ளூர் மக்கள் இதனை 'ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை’ என்கிறார்கள். அதில் சிவலிங்கம்போல் உயர்ந்த முகட்டைக்கொண்டு இருக்கும் மலைதான் இப்போது 'ஐ.என்.ஓ’-வின் பரிசோதனை எலி. ஒரே கல்லால் ஆன இந்த மலையைக் குடைந்து அதன் மத்தியில் ஆய்வு மையத்தை அமைக்கப்போகிறார்கள்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வரும் எழுத்தாளர் தன்ராசு ஆவேசத்துடன் பேசத் துவங்கினார். ''மலை உச்சியில் இருந்து சுமார் 1.3 கி.மீ. ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம்கொண்ட ஒரு குகையைக் குடையவிருக்கிறார்கள். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம்கொண்ட துணைக் குகையும் அமைக்கப்படுமாம். 15 அடி விட்டத்தில், 60 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு வெட்டினாலே, குன்றுபோலக் கற்கள் குவிந்துவிடும். அப்படி இருக்கும்போது, சுமார் 2,24,281 கன சதுர மீட்டர் அளவுக்குக் குகை ஏற்படுத்தப்பட்டால், குவியும் கற்களை என்ன செய்வது? எங்கோ ஒரு கல் குவாரியில் வெடி வைத்தாலே வீடுகள் குலுங்கும் சூழலில், தொடர்ந்து நாலைந்து ஆண்டுகள் வெடி வெடித்துக்கொண்டே இருந்தால் அந்தப் பிரதேசம் என்ன ஆகும்? மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும் ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும் கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவார் கள். தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் அடியோடு கெட்டு, விநோதமான நோய்களால் மக்கள் மடிய வேண்டியதுதானா?

அணு உலைபோல நியூட்ரினோ ஆய்வில் கதிரியக்க ஆபத்து இல்லை என்ற அளவில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். ஆனால், விவசாய பூமியான தேவாரம் பகுதியில் ஏன் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி. அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பாலைவனப் பகுதிபோல, மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைக்க வேண்டியதுதானே?'' என்று கேள்வியுடனேயே முடிக் கிறார் தன்ராசு.

அடக்கிய தேசிய பாதுகாப்புச் சட்டம்!

''2009-ம் ஆண்டில் இருந்தே இந்தத் திட்டத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளக்கக் கூட்டம் நடந்தபோது, 'இந்தத் திட்டத்துக்குத் தேவையான தண்ணீரையும் மின்சாரத்தையும் எங்கிருந்து கொண்டுவருவீர்கள்?’ என்று கேட்டோம். தண்ணீரை முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்தும், மின்சாரத்தை ராசிங்கபுரம் மின் நிலையத்தில் இருந்தும் எடுப்போம் என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சொன்னார்கள். 'இருக்கிற தண்ணீரையும் மின்சாரத்தையும் நீங்களே எடுத்துக்கொண் டால் நாங்கள் எப்படிப் பிழைத்துக்கிடப்பது?’ என்ற
கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சமாதான முயற்சிகள் பலன் அளிக்காது என்று தெரிந்ததும், இப்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிப் போராட்டத்தை அடக்குகிறார்கள்!'' என்றார் அந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயி பொன்னுச்சாமி.

தொடங்கிவிட்டது பணி!
நிலவரத்தை அறிய பொட்டிதட்டி மலைக்கு நேரில் சென்றோம். சர்வே பணிகள் முடிந்து நில ஆர்ஜிதமும் முடிந்துவிட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இதற்கே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மலையில் குகையைக் குடையும் பணிக்காக 'ஆட்கள் தேவை’ என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது ஐ.என்.ஓ.
அங்கிருந்தபோது நாம் உணர்ந்த விஷயம் ஒன்றுதான்... நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பாக மக்களிடம் தெளிவு ஏற்படுத்தினால், பொட்டிதட்டி மலையின் சர்வதேச அங்கீகாரத்துக்கு அவர்களின் ஆதரவையும் அள்ளிக்கொள்ள முடியும். 


''உலக வரைபடத்தில் பொட்டிதட்டி இடம்பெறும்!''
நியூட்ரினோ ஆய்வுப் பணியில், சென்னை ஐ.ஐ.டி., சென்னை கணித அறிவியல் மையம், டெல்லி, கோழிக்கோடு, கொல்கத்தா, ஸ்ரீநகர் பல்கலைக்கழகங்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி உட்பட இந்தியாவின் 26 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் பங்கு பெற உள்ளன. ஆனால், இந்தப் பட்டியலில், மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையம் போன்றவை யும் இடம்பெற்றிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

சென்னையின் 'தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்தமேட்டிகல் சயின்ஸ்’ அமைப்பில் மூத்த பேராசிரியராக இருக்கும் ராஜசேகரன்தான் நியூட்ரினோ திட்டத்தின் மூத்த விஞ்ஞானி. தேனி மாவட்டத்தில் நடந்த நியூட்ரினோ விளக்கக் கூட்டங்களில், விஞ்ஞானிகளே மேடை ஏறப் பயந்தபோது பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் துணிச் சலாகப் பதில் அளித்து சமாளித்த இவரைச் சந்தித்து தேனி மாவட்ட மக்களின் சந்தேகங்களைக் கேட்டோம்.

''அணுவைப் பிளந்துதான் நியூட்ரினோவைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்மைச் சுற்றியே நியூட்ரினோக்கள் இயற்கையாக உலவிக்கொண்டு இருக்கின்றன. நியூட்ரினோ என்னும் கடலுக்குள் மூழ்கியபடியேதான் நாம் ஒவ்வொரு இயக்கத்தையும் மேற்கொள்கிறோம். நம்முடைய உடல்கூட, நொடிக்குப் பல லட்சம் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கிறது. அணு என்றால் அணு குண்டு என்றும், நியூட்ரினோ என்றால் நியூட்ரான் குண்டு என்றும் எண்ணுபவர்கள்தான் இப்படியான பீதியைக் கிளப்புகிறார்கள்!''

''நியூட்ரினோக்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால் எதற்காக மலையைக் குடைகிறீர்கள்?''
''சூரியனில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் இயற்கையாகவே உருவாகும் நியூட் ரினோ துகள்களோடு, காஸ்மிக் துகள்களும் பயணித்துக்கொண்டு இருக்கின்றன. அந்த காஸ்மிக் துகள்களில் இருந்து நியூட்ரினோவை மட்டும் பிரித்துத் தனிமைப்படுத்த வேண்டும் என்றால், நான்கு திசைகளிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவுக்குப் பாறையால் சூழப்பட்ட மையம் தேவை. எனவே, மலைப் பாறைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடத்தை நிறுவினால், மற்ற கதிர்கள் வடிகட்டப்பட்டு நியூட்ரினோ மட்டும் பாறையை ஊடுருவிக்கொண்டு ஆய்வு மையத்தை வந்தடையும்!''

''ஏன் பல மாநிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட திட்டத்தைப் பசுமையான தேனி மாவட்டத்தில் அமைக்கிறீர்கள்?''
''இந்த ஆராய்ச்சிக்கான பாறையை இயற் பியல் மற்றும் மண்ணியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்திருக்கிறார்கள். இடுக்குகளும் மடிப்புகளும் இல்லாத ஒற்றைக் கல் மலை வேண்டும். அதுவும், மிகக் கடினமான 'சார்னோகைட்’ வகை பாறையாக இருக்க வேண்டும். மண்ணியில்ரீதியாக இந்தப் பாறை அமைந்திருக்கும் பகுதி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் அனைத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்தான் பூர்த்திசெய்கிறது!''

''கைவிடப்பட்ட சுரங்கங்களை இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன?''
''ஆரம்பக் காலகட்டங்களில், கைவிடப்பட்ட சுரங்கங்களில்தான் இந்த ஆய்வு நடந்தது. கோலார் தங்க வயலில்கூட ஆய்வு நடந்தது. ஆனால், துல்லியமான முடிவுகள் வேண்டும் என்றால், இத்தகைய கட்டமைப்பு அவசியம். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளிலேயே மிகப் பெரியது இதுதான். 900 கோடி ரூபாய் திட்டம். இந்த மையம் மட்டும் 1970-களிலேயே இந்தியாவில் நிறுவப்பட்டு இருந்தால், கடவுள் துகள் ஆராய்ச்சி யைவிடப் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் இங்கே நிகழ்ந்திருக்கும்.''

''இந்தத் திட்டத்தால் தேனி மக்களுக்கு என்ன லாபம்?''  
''இது ஒரு தொழிற்சாலையோ, லாபம் தரும் நிறுவனமோ அல்ல. ஆராய்ச்சித் தகுதி இருந்தால், பணி கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆராய்ச்சி அல்லாத அலுவலகப் பணி, கள உதவிப் பணி, துப்புரவு, ஓட்டுநர் பணிகள் கிடைக்கும். இந்த மையம் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்பதால், உலகப் புகழ் பெற்ற, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்கூட அடிக்கடி இங்கு வந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பகுதி உலக வரைபடத்தில் முக்கிய அடையாளமாக இடம் பிடிக்கும். எனவேதான், அப்துல் கலாம்கூட, நியூட்ரினோ மையத்தால் தேனி மாவட்டம் புகழ்பெறும் என்று கூறியிருக்கிறார்!''
                                                                       
''மலையை உடைப்பதாலும், இந்த ஆய்வாலும் எந்தப் பாதிப்புமே இல்லை என்கிறீர்களா?''
''மலையை உடைத்து குகை அமைக்கும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க முயற்சிப்போம். ஆய்வுக்கூடம் மற்றும் குகை அணுகுப் பாதை அகழ்ந்தெடுக்கப்படும்போது, சுமார் 2.25 லட்சம் கன மீட்டர் பாறை மற்றும் பாறைச் சிதறல்கள் கிடைக்கும். அவற்றைத் தண்ணீரில் நனைத்து, குகைக்கு வெளியே லாரிகள் முலம் கொண்டுவரப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் மிகப் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். எனவே, பாறைகளோ, தூசிகளோ சிதறிப் பறக்காது. ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இயற்கையை நாம் சீரழிக்கக் கூடாதுதான். அதற்காக இயற்கைக்கு அநாவசியப் புனிதத்தன்மை அளித்து, வளர்ச்சித் திட்டங்களை முடக்கக் கூடாது. அப்படி யோசித்தால், மனிதனால் ஒரு வேளை உணவைக்கூடச் சாப்பிட முடியாது!''

-கே.கே.மகேஷ், சண்.சரவணக்குமார்
படங்கள் : வீ.சக்தி அருணகிரி, பா.காளிமுத்து

நன்றி: ஆனந்த விகடன், 15-08-12

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

கூடங்குளத்தின் கையிருப்புத் தண்ணீர்த் தேவைகள்


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் இந்திய அணுமின் நிறுவனம் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு தண்ணீர் உயர் அழுத்த அணு உலைகளை நிறுவியுள்ளது. முதலாம் அணு உலை 2011 டிசம்பரில் செயலுக்குக் கொண்டுவரப்படவிருந்தது. தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனப் பயந்த அப்பகுதி மக்கள், அணு உலை இயக்கப்பட இருப்பதைத் தடுத்து நிறுத்தினர். தெரியவருகின்ற ஆவணங்களை ஆராயும்போது அணு உலையின் மையப்பகுதியையும் எரிந்து முடிந்த யுரேனியத்தையும் குளிர்விப்பதற்குத் தேவையான கையிருப்புத் தண்ணீர் அணுமின் நிலையத்தில் இல்லை என்பது தெரியவருகிறது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தண்ணீர் வெப்பக் குறைப்பானாகவும் (moderator) குளிர்விப்பானாகவும் தேவைப்படுகிறது. இத்திட்டத்தில் தண்ணீரும் கடல் நீரும் மூன்று வகைக் குளிர்விப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீர் முதன்மைக் குளிர்விப்பானாக அணு உலையின் மையப்பகுதியில் நிகழும் அணுப்பிளவால் (fission) ஏற்படும் பெரும் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் வெப்பத்தின் ஒரு பகுதியை இரண்டாம் குளிர்விப்பானான தண்ணீர், மின் உருளையைச் சுழலவைக்கும் நீராவி உருவாகக் காரணமாகிறது. வெப்பக் கட்டுப்பாட்டுக்கும் முதல் மற்றும் இரண்டாம் குளிர்விப்பான்களாகவும் பயன்படுத்தப்படும் தாதுக்களும் அயன்களும் நீக்கப்பட்ட சுத்தமான தண்ணீர், அருகருகே இணைந்து செல்லும் வளையங்கள் ஊடாகச் செலுத்தப்படுகிறது. இவ்வளையங்கள் மூன்றாம் குளிர்விப்பானாகச் செயல்படும் மன்னார் வளைகுடா கடலிலிருந்து எடுக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குப் பின் அங்கேயே மீண்டும் வெளியேற்றப்படும் கடல் நீரால் குளிர்விக்கப்படுகின்றன. அணு உலையின் மையப்பகுதியில் வெளிப்படும் வெப்பத்தில் 30 விழுக்காடு முதன்மை மற்றும் இரண்டாம் குளிர்விப்பான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீதமுள்ள வெப்பம் கடல் நீருக்கு மாற்றப்படுகிறது. அணு எரிபொருளின் (யுரேனியம்) ஆற்றல் முடிந்த பிறகும் அதன் திறனிழப்பால் (பீமீநீணீஹ்) வெப்பம் உருவாவதால் அணு உலையின் மையப் பகுதியை மின் உற்பத்தி இல்லாதபோதும் தாதுக்கள் நீக்கப்பட்ட தண்ணீரால் குளிரூட்ட வேண்டியுள்ளது. இதே போன்று ஆற்றல் இழந்த எரிபொருள் சேமிப்பையும் மறுவூக்கம் (reprocessing) செய்யும் வரையிலோ திறனிழப்பு வெப்பம் சாதாரணக் காற்றின் மூலம் கட்டுப்படும் அளவுக்குக் குறையும் வரையிலோ தண்ணீரால் குளிரூட்டப்பட வேண்டும்.

ஓர் அணு உலைக்குச் சுத்தமான தண்ணீர், உலை செயல்படும்போது 2832 கன மீட்டரும் உலை நிறுத்தப்பட்டிருக்கும்போது 400 கன மீட்டரும் தேவைப்படுகிறது. குடிநீர் போன்ற இன்ன பிற பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு 1272 கன மீட்டர் தண்ணீர் அணுமின் நிலைய வளாகத்துக்குத் தேவைப்படுகிறது. இவ்வாறாக ஒரு நாளைக்கு மின் உற்பத்திக்கும் வளாகப் பயன்பாட்டிற்குமாக மொத்தம் 6936 கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. (முத்துநாயகம் மற்றும் பிறர் - 2011). அணு உலைச் செயல்பாட்டிற்கு வந்து ஓர் ஆண்டு முடிந்து மறுபடியும் எரிபொருள் நிரப்பப்பட்ட பின், சேகரிக்கப்பட்ட செயல்திறன் இழந்த பொருளைக் குளிர் நிலையில் வைக்க மேலும் தண்ணீர் தேவைப்படும்.

வரலாற்றுப் பின்னணி
கூடங்குளம் அணுமின் திட்டம் 1989ஆம் ஆண்டு சில நிபந்தனைகளோடு அனுமதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி (Environmental Impact Assessment) மின் உற்பத்திக்கான தண்ணீர், மின் உலை வளாகத்திலிருந்து வடமேற்குத் திசையில் 65 கி.மீ. தொலைவில், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் கட்டப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து கொண்டுவரப்பட வேண்டும். அணுமின்திட்ட வளாகத்தின் இரண்டு உலைகள் மற்றும் பிற குடிநீர்த் தேவைகளுக்கான 7 நாள் கையிருப்பு நீர் 60,000 கன மீட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த நீர்த்தேக்கம் அணு உலைகளிலிருந்து பாதுகாப்பான உயரமாகக் கணக்கிடப்பட்டிருக்கும் 35 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும் (NEERI - 2003). இத்திட்டத்திற்கு இசைவு வழங்கியபோது இந்திய அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுமம் (AERB) தண்ணீர் குறித்த கீழ்வரும் ஆணைகளைத் தந்தது.

¬ அணு உலையின் மையத்தைத் தங்கு தடையில்லாமல் குளிர்விப்பதற்கும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்குமான தேவையான நீண்டகால நீர்த்தேக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
¬ ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்க வசதியானது பேச்சிப்பாறையிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், தடைபடும் மற்றும் பற்றாக்குறை வேளைகளிலும் போதுமானதாக இருக்க வேண்டும்.

¬ பேச்சிப்பாறையிலிருந்து 65 கி.மீ. நீள அளவுக்குப் போடப்படும் நீர்க்குழாயின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

¬ பேச்சிப்பாறை அணைக்கு ஆபத்து நேரிடினும் தண்ணீருக்கான மாற்று ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

¬ இந்திய அணுமின் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது மேற்கூறிய அணை ஆபத்தையும் கருத்தில் கொண்டு மேல்கோதையாற்றுத் தேக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் வழிகளையும் இணைத்துத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

நீர் ஆதாரங்களும் சேகரிப்பும்
இந்திய அணுமின் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டையும் தயாரிக்கும் முன் கிடைக்கப்பெறும் உறுதியான தண்ணீர் அளவு பற்றி ஆராயவில்லை, 120 வருடங்களாகப் பேச்சிப்பாறை அணைத் தண்ணீரைப் பயன்படுத்திவரும் மக்களிடம் இத்திட்டம் பற்றித் தகவல் தெரிவிக்கவில்லை. ஓர் ஆய்வு முடிவின்படி குமரிமாவட்டம் 1901 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் 52 ஆண்டுகளில் வறட்சி மற்றும் வறட்சி நிகர் சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கிறது. 1963 முதல் 1990 வரை எதிர்பார்ப்பில் 15 விழுக்காட்டிலிருந்து 37 விழுக்காடுவரை நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது (ரமேஷ் - 2006). இன்றைய நிலையில் அணையிலிருந்து நீர்க்குழாய் அமைப்போ அணு உலை வளாகத்தில் நீர்த்தேக்கமோ உருவாக்கப்படவில்லை. மாறாக அங்கே நான்கு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கடல்நீர் சுத்திகரிப்பு அமைப்புகள்
கடல் நீர் சுத்திகரிப்புக்கென மூன்று வகையான தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை அ) எதிர் சவ்வூடுபரவல் முறை (reverse osmosis) ஆ) பல கட்ட ‘பளிச்’ முறை (multi stage flash) இ) பன்முறை நீர்த்திவலைச் சுருக்கமுறை (multiple vapour compression) என்பன. கடல்நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில் பாபா அணு ஆய்வுமையம் (BARC) (அ) மற்றும் (ஆ) முறைகளில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கின்ற போதிலும் (இ) தொழில்நுட்பத்தில் எந்த அனுபவமும் அதற்கு இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மொத்தம் ஆறு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் நகரியத் தேவைக்காக ஒரு நாளைக்கு 1200 கன மீட்டர் தண்ணீர் தயாரிக்கும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் பாபா அணு ஆய்வு மையத்தால் (அ) தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு சுத்திகரிப்பு நிலையங்களும் 115 கோடி ரூபாய் செலவில் ஓர் இஸ்ரேலிய நிறுவனத்தால் (இ) தொழில்நுட்பத்தில் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இத்தொழில்நுட்பம் இந்தியாவில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படவிருப்பதால் பிரச்சினைகள் நேரிடும்போது விரைவாக அவற்றைச் சரிசெய்யும் அனுபவம் நம்மிடம் இல்லாத காரணத்தால் அப்பிரச்சினைகளை எதிர்கொள்வது கடினம்.

கையிருப்பு நீர்
அணுமின் வளாகத்திலுள்ள மூன்று கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் (மீதமுள்ள ஒன்று அவசர உபயோகத்துக்கானது) இரண்டு அணு உலைகளுக்கு மற்றும் பிற பயன்பாடுகளுக்கும் போதுமான சுமார் 7680 கன மீட்டர் தண்ணீர் பெறலாம். அணுமின் நிலையத்தில் 12 பெரிய தொட்டிகளில் 11,445 கன மீட்டர் கையிருப்புத் தண்ணீர் தேக்கிவைக்க முடியும். (கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிறர் - 2011) இதில் 2000 கனமீட்டர் தண்ணீர் தீ விபத்துத் தடுப்புத் தொட்டிகளில் இருக்கும். 1425 கன மீட்டர் தண்ணீர் அணு உலை வளாகத்துக்கு வெளியே உள்ள நகரிய வீட்டு உப யோகத்துக்கெனப் பயன்படும். வளாகத்துள் குடிநீர்க் காரணங்களுக்குத் தேவைப்படுவது 1200 கனமீட்டர் தண்ணீர். இவை போக 8020 கன மீட்டர் தண்ணீர் அணுமின் உற்பத்திக்கெனக் கையிருப்பாக அமையும். இந்த அளவானது இரண்டு அணு உலைகளின் மையங்களையும் 1லு நாட்கள் மட்டுமே குளிரூட்டுவதற்குப் போதுமானதாகும். தண்ணீர் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இரண்டு அணு உலைகளும் நிறுத்தப்பட வேண்டியிருக்கும். அவ்வேளைகளில் கையிருப்புத் தண்ணீர் 10 நாட்களுக்குப் போதுமானது.

நிபுணர் குழுவின் கையிருப்புத் தண்ணீர்க் கணக்கீடு
முத்துநாயகம் கமிட்டியின் (2011) அறிக்கையில் “ஒழுங்குமுறை ஆணையம் ஏழு நாட்களுக்கான தண்ணீர்க் கையிருப்பு இருந்தாலே போதுமானது என்ற போதிலும் பொதுமின் விநியோக இணைப்பு (grid) கடல் சுத்திகரிப்பு நிலையங்கள் மின்சாரம் பெறுவதில் தடை ஏற்பட்டாலும் பல நீர்த்தொட்டிகளில் இருக்கும் கையிருப்புத் தண்ணீர் 10 நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி ஒழுங்கு முறைக் குழுமம் நீர்க் கையிருப்பு குறித்து 30 நாட்கள் தண்ணீர்க் கையிருப்பை ஒழுங்கு முறையாக விதித்துள்ளது. “அணு உலைகளின் மையப்பகுதியின் வெப்ப வெளியேற்றத்திற்கான குறைந்தபட்சக் கையிருப்புத் தண்ணீரை எல்லாச் சூழ்நிலைகளிலும் நீண்டகால அளவில் உறுதிசெய்ய முடியாவிட்டால் அந்த வளாகம் பயன் பாட்டிற்குப் பொறுத்தமற்றது எனக் கருத வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அணு உலை மையப்பகுதி பாதுகாப்பான நிலையில் இருப்பதற்குக் குறைந்தபட்சம் 30 நாட்களுக்குத் தேவையான கையிருப்புத் தண்ணீர் நிச்சயமாக இருக்க வேண்டும். (அழுத்தம் கட்டுரையாளருடையது)

நிபுணர் குழு கீழ்க்காணும் விஷயங்கள் குறித்து மவுனம் காக்கின்றது.

1. வளாகத்தின் குடிநீர்த் தேவை
குடிநீர்த் தேவைக்காக இரண்டு தொட்டிகளிலுள்ளது 1425 கன மீட்டர் தண்ணீராகும். ஆனால் ஒரு நாளைக்குத் தேவையானது 1272 கனஅடி தண்ணீர். நீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உபயோகத்தைக் குறைத்தாலும் கையிருப்பு நீர் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காது. (அணு உலைக்கான தண்ணீரில் போரோன் மூலகங்களும் வேதிப் பொருட்களும் கலப்பதால் அதைக் குடிநீராகப் பயன்படுத்தவியலாது.)

2. விநியோக மின் இணைப்புக் கோளாறு தவிர்த்த பிற இடர்கள் மூலம் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயலிழத்தல்
நிபுணர் குழுவானது விநியோக மின் இணைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாகக் கடல்நீர் சுத்திகரிப்பில் ஏற்படும் சிக்கல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. விநியோக மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பெறுவது தடைபட்டு இரண்டு அணு உலைகளும் தாமாகவே நின்றுவிடும்போதும் அவற்றிற்குக் குளிர்விப்பானாக 800 கன மீட்டர் தண்ணீர் வேண்டும். (எல்லா அணு உலைகளும் அவற்றின் பாது காப்புக்கான பம்புகள் மற்றும் உபகரணங்கள் இயங்குவதற்கு வேண்டிய மின்சாரத்தைப் பொதுமின்விநியோக இணைப்புகள் மூலமே பெறுகின்றன. ஏனெனில் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்துவதைவிடப் பொதுவிநியோகம் மூலம் உலைகள் மின்சாரம் பெறுவது உத்தரவாதமானது.) வேதிப் பொருட்களையும் நுண்ணுயிர்க் கலவைகளையும் கொண்ட கடல் நீரைச் சுத்திகரிக்கும் ஒரு நிலையம் அசாதாரணமான பல நுட்பங்களை உள்ளடக்கிய இயந்திர மாகும். அதைச் சுத்தம்செய்து மாசற்ற நிலையில் பராமரிப்பது மிகக் கடினமான காரியம். அந்த இயந்திரம் கூடத் தேய்மானத்தாலும் துருப்பிடிப்பதாலும் ‘சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள்’ என்று அணு விஞ்ஞானத் துறையால் அழைக்கப்படும் கடல் நுண்ணுயிர்கள் மற்றும் ஜெல்லி மீன்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளாலும் செயலிழக்க வாய்ப்பு உண்டு. உலகம் வெப்பமயமாவதால் ஜெல்லி மீன்கள் 600 மில்லியன் வருடங்களுக்கு முன் தாம் இழந்த ஆதிக்கத்தைத் தமது பன்மடங்குப் பெருக்கத்தால் மீண்டும் பெறும் சாத்தியம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக அவை கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கப்பல்கள் மற்றும் மின் நிலையங்களுக்குள் ஊடுருவது அதிகரித்துள்ளது. இவ்வாறான ஜெல்லிமீன் தாக்குதல்களால் 2011ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஜப்பான், ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 50 ஆண்டுக் கால அணு எதிர்ப்புப் போராட்டங்களால் செய்ய முடியாத இந்தச் சாதனையை ஜெல்லிமீன்கள் நிகழ்த்தியுள்ளன. “அணுஉலைகள் ஃபிளூம்ஸ் என்று அழைக்கப்படும் வடிகட்டிகளைக் கொண்டிருந்தாலும் உலக அளவில் திடீரெனப் பெருகிவரும் ஜெல்லிமீன்களுக்கு இந்த வடிகட்டிகள் ஈடு கொடுக்க முடியவில்லை”.

3. கடல் சுத்திகரிப்பு நிலையங்கள் நீண்டகாலம் செயல்படாமல் இருத்தல்
இந்தியாவில் பல கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தபோதிலும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இந்தத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தாலும், கூடங்குளம் அணு உலைகளுக்கான கடல்நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு அனுபவம் இல்லை. இதுவரை இங்கு இல்லாத இந்தத் தொழில்நுட்பத்தில் கோளாறுகள் ஏற்படும்போது இஸ்ரேலிய வல்லுநர்களை அழைத்து வந்துதான் அவற்றைச் சரிசெய்ய இயலும். அப்போது 10 நாட்களுக்கும் மேலாகப் பழுதுபார்க்கும் பணி நடக்க நேரிட்டால் என்னசெய்வது? 2008இல் சென்னைக்கு அருகிலுள்ள மீஞ்சூரில் இருக்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பழுதை 45 நாட்கள் ஆன பிறகே சரிசெய்ய முடிந்தது. அப்போது நிபுணர்கள் நெதர்லாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள்.

4. அணு உலை நிறுத்தமும் அயோடின் குழியும்
கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்தால் அணு உலைகள் மட்டுமே நிறுத்தப்படும், பிற இயந்திரங்களைப் போல் அணு உலைகளை நிறுத்திய பிறகு மறுபடியும் உடனடியாக இயக்க இயலாது. இதற்கு ‘அயோடின் குழி - ஸெனான் விஷமாதல்’ (iodine pit - xenon poisoning) என்ற அசாதாரணமான நிகழ்வு காரணமாகிறது. பொதுவாக மறுபடியும் உலையை இயக்குவதற்கு 3 நாட்களாவது ஆகும்.

கூடங்குளத்தின் முதல் திட்டவரைவில் பேச்சிப்பாறையிலிருந்து கொண்டுவரப்படும் 60,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு உடைய நீர்த்தேக்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் இருக்கும் என்றிருந்தது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நிலையத்தில் சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்கும் நீர்த்தேக்கிகள் பக்க அமைப்புக்கான விதிகளைப் பின்பற்றி வேலை தொடங்குவதற்கும் 2001 அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது. இந்த நீர்த்தேக்க உருவாக்கம் ஏன் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை எனத் தெரியவில்லை. அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுமமும் மத்திய அரசின் நிபுணர் குழுவும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன. இந்த நீர்த்தேக்கம் உருவாகியிருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெறுமனே கிடக்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஆறே நாட்களில் 60,000 கன மீட்டர் தண்ணீரைத் தேக்க முடியும்.

மாயநீர் உலகம்
கூடங்குளம் அணுமின் நிறுவனம் மற்றும் அணுசக்தித் துறைகளின் தகவல்கள் அடிப்படையில் தேசிய ஊடகங்களில் அணு உலைகளுக்குத் தேவையான தண்ணீர் கையிருப்பு இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. 2011 அக்டோபர் 19ஆம் தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான அறிக்கையின் சில குறிப்புகள் பின்வருமாறு தெரிவிக்கின்றன. “விபத்தோ இயற்கைப் பேரிடரோ ஏற்பட்டால் உலை மையத்தைக் குளிரூட்டலில் வைத்திருப்பதே முழுமுதல் செயல்பாடாக இருக்கும். இது ஃபுகுஷிமாவிலிருந்து கற்றுக்கொண்டது. இந்திய அணு உலைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மாற்றுவழிகளில் நீர் வழங்கும் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள நீர் ஆதாரம் மட்டுமல்லாமல் தொலைவிடங்களிலிருந்து குழாய்கள் மூலம் நீர்கொண்டுவந்து உள்நீர் அதிகரிப்புக்கும் ஈடுகட்டுவதற்கும் வழிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்புக்காகத் தொலைவிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது உயர்மட்டத் தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் வெடித்துச் சிதறுவது தவிர்ப்பதற்காக நைட்ரஜன் செலுத்தும் வாய்ப்பு என்று மூன்று வகையான ஏற்பாடுகள் உள்ளன.” (அழுத்தம் கட்டுரையாளர்களுடையது) (தேஷ்பாண்டே - 2011)

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தொலைவிலிருந்து நீர் கொண்டுவரும் குழாய் அமைப்பும் இல்லை; உயர்நிலை நீர்த்தொட்டிகளும் இல்லை. பிற அணுமின் வளாகங்களில் குழாய் அமைப்புகளும் உயர்நிலைத் தொட்டிகளும் உள்ளன.

440 மெகாவாட் மின் உற்பத்திறன் கொண்ட கன நீரால் குளிரூட்டமும் வெப்பக் குறைப்பும் ஏற்படுத்தப்படும் சென்னை அணுமின் நிலையத்தில் 28400 கனமீட்டர் தண்ணீர் கொள்ளவுக்கான வசதி உள்ளது. ஃபுகுஷிமா ஆய்வுக் குழுவின் (Fukushima task force) அறிவுறுத்தலின் பேரில் அங்குக் கூடுதல் நீர்க் கையிருப்புக்காக மேலும் 750 கன மீட்டர் தண்ணீர் சேமிப்புக்கு வழி செய்யப்பட்டுள்ளது (கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிறர் - 2011) இலகுவான நீரை (Light water) உபயோகிக்கும் தாராப்பூர் அணுமின் நிலையத்தில் 3860 கனமீட்டர் நீர் சேமிப்பு வசதி உள்ளது (பட்டாச்சார்ஜி மற்றும் பிறர் - 2011). ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்குத் தாராப் பூரில் கையிருப்புத் தண்ணீராக 12 கன மீட்டர் உள்ளது. கூடங்குளத்தில் (ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கு) 5 கன மீட்டர் கையிருப்புத் தண்ணீர்தான் உள்ளது.

முடிவுகள்
அணு உலை வளாகத்திலோ அதற்கு அருகிலோ உள்ள தண்ணீர் ஆதாரங்களைப் பற்றிய முழுமையான கணிப்புகள் செய்யாத நிலையிலேயே இந்திய அணுமின் உற்பத்தி நிறுவனம் ரஷ்யாவுடன் 13000 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த அணுமின் நிலையத்துக்கான ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறது. கூடங்குளம் நிலையத்தின் கட்டுமானங்கள் அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுமம் மற்றும் இந்திய அணுமின் நிறுவனத்தின் ஆணைகள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் சில அங்கங்கள் அணு உலை வளாகத்தின் பாதுகாப்புத் தன்மை பற்றித் தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. வேண்டிய அளவைவிடத் தண்ணீர் சேமிப்புத் திறன் குறைவாக இருப்பதால் கூடங்குளம் அணு உலையை இயக்குவது என்பது ஒரு அபாயகரமான விளையாட்டு.

-வி. டி. பத்மநாபன், ஆர். ரமேஷ், வி. புகழேந்தி
தமிழில்: பெர்னார்ட் சந்திரா

நன்றி: Koodankulam’s Reserve Water Requirements, EPW, May 5, 2012

நன்றி: காலச்சுவடு, ஜூலை 2012

மிக்க நலமுடைய மரங்கள் - சு.தியடோர் பாஸ்கரன்


சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தனவந்தர் மாணிக்கவேலு முதலியாருக்கு  பெங்களூர் அரண்மனை சாலையில்  பரந்த வளாகத்தின் நடுவே ஒரு மாளிகை காலனீய கட்டிடக்கலை பாணியில் பெரிய தூண்களுடன் கூடிய எழிலார்ந்த பங்களா. இந்த சொத்தை அரசுக்கு எழுதி வைத்துவிட்டு முதலியார் இறந்து விட்டார். 1996 முதல் இந்தக் கட்டிடத்தில்  தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) செயல் படுகின்றது. பிரித்தானிய கால ஓவியர் டேனியல் முதல் நம்மூர் அச்சுதன் கூடலூர் படைப்புகள் வரை  காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பெரிய மரத்தடியில் ஒரு சிற்றுண்டிக் கடையும் உண்டு. ஒரு சொகுசான திரையரங்கமும் அண்மையில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இங்கு நாடகம், நடனம், உரைகள் என பல நிகழ்வுகள் உண்டு. மின்னஞ்சலில் விவரம் வந்து விடுகின்றது. முந்தின நாள் நினைவுபடுத்தவும் செய்கிறார்கள். கடைசியாக இங்கு ஆர்சன் வெல்ஸ் இயக்கி, நடித்த Othello (1952) திரைப்படம்  பார்த்தேன். பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த படம்.

ஆனால் நான் இங்கு கூறவந்தது வேறு விஷயம் பற்றி. இந்தக் கலைக்கூடத்தின் மூன்றரை ஏக்கர் வளாகத்தில் விளாம்பழ மரம், பன்னீர் புஷ்பமரம் அடங்க 28 வகை மரங்கள் உள்ளன. ஒரு ஞாயிறு மதியம், மரங்களை அறிமுகப்படுத்த இங்கு ஒரு கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Tour of trees என்று அறிவிக்கப்பட்டிருந்த  இந்த  நிகழ்வுக்கு  சுமார் ஐம்பது பேர், தண்ணீர் பாட்டில், நோட்டுப் புத்தகம் சகிதம் கூடினோம். விஷயம் தெரிந்த ஒருவர் - பெங்களுரின் மரங்களைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் - ஒவ்வொரு மரமாக கூட்டிச் சென்று விளக்கினார். மாளிகையின் மாடியிலிருந்து ஆரம்பித்தோம். அந்த வளாகத்தின் மரங்களின் விதானங்களை மேலே இருந்து பார்க்க முடிந்தது. இலைகளின் அமைப்பு, பூக்களின் வடிவம் இவை பற்றி அருகில் பார்த்து அறிய முடிந்தது.

நம்மூரில் முள்ளு முருங்கை என்றறியப்படும் Silk Cotton treeயிலிருந்து தொடங்கினார். எல்லா இலைகளும் உதிர்ந்து, செந்நிறப்பூக்கள் மட்டும் நிறைந்திருந்தன. இந்த மரத்தின் பட்டையில் கூரிய முட்கள் இருப்பதால் இதில் குரங்கு, மனிதர் ஏறமுடியாது என்று அறிந்து கூடு அமைக்க இம்மரத்தை நாடி தேனீக்கள் வருகின்றன என்றார். மார்ச் மாதம் இலையே இல்லாமல் கிளைகள் முழுவதும் சிவப்பு பூக்களாகப் பூத்துக் குலுங்கியிருந்தன. இதிலிருந்து வரும் கோந்து நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பூப்பூத்து முடிந்த பின்னர் வரும் காய்களிலிருந்து கிடைக்கும் பஞ்சை மெத்தை, தலையணை செய்யப் பயன்படுத்துகிறார்கள். இம்மரம் தமிழ்நாட்டில் காணப்படும் இலவு மர வகையைச் சார்ந்தது.

பூக்கள் நிறைந்த நாகலிங்க மரமொன்றைப் பார்த்தோம். அதன் செந்நிறப் பூவில் லிங்கம், படமெடுத்த நாகம் போன்ற இரு பகுதிகள் இருப்பதால் இந்தப் பெயர். தென்னமெரிக்காவிலிருந்து நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட  மரம் என்றாலும் இரண்டு நூற்றாண்டுகளில் அது நமது தொன்மத்தில் இடம் பிடித்து விட்டது. 

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் உலகின் பல இடங்களிலிருந்து-அவர்கள் காலனிகள்தான் உலகெங்கும் இருந்ததே -  பல வகை மரங்களைக் கொண்டுவந்து இங்கு நட்டனர். அதிலும் அவர்களது பட்டாளங்கள் இருந்த பெங்களூர், புனே, ராஞ்சி போன்ற நகரங்களில் (கன்டோன்மென்ட் டவுன்) இவைகளை அதிகமாகக் காணலாம். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் காணப்படுவது தூங்குமூஞ்சி  மரமென்று குறிப்பிடப்படும் Rain tree. பரந்த விதானத்துடன் இது நெடிதுயர்ந்து வளரும். பெங்களூரில் என் மகள் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஆறாவது தளத்தில் வசிக்கின்றாள். ஒரு தூங்குமூஞ்சி மரத்தின் விதானம் அதற்கும் மேல் உயர்ந்துள்ளது. 

வீட்டிற்குள்ளிருந்தே, அந்த மரத்திலிருக்கும் மசூதிப்புறா, குக்குறுவான், கிளி முதலான பறவைகளைக் கண்ணளவில் அருகில் பார்க்க முடிகின்றது. எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும் குல்மொஹர் மரமும் மடகாஸ்கரிலிருந்து கொண்டு வரப்பட்ட தாவரம்தான்.
தமிழகத்தில் இருக்கும் அரிய வெளிநாட்டு மரங்களில் முக்கியமானது ஆப்ரிக்க மரமான பேயொபாப் மரம் (Baobob). அரபு வணிகர்களால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட மரமிது. கிளைகள் பார்ப்பதற்கு வேர்கள் போலிருக்கும். இறைவன் உலகைப் படைத்துக்கொண்டிருக்கும்போது, இம்மரத்தை உருவாக்கி விட்டு சற்று கண்ணயர்ந்த நேரத்தில், சாத்தான் அவரது வேலையைக் கெடுக்க இம்மரத்தை தலைகீழாக நட்டுவிட்டான் என்று ஒரு ஆப்ரிக்க தொன்மக் கதை உண்டு. சென்னையில் தூய தாமஸ் மலை ஏறும் இடத்தில் ஒரு மரமுள்ளது. தியாசாபிகல் சொசைட்டிக்குள்ளும்  ஒன்று உண்டு. இதன் தமிழ்ப்பெயர் ‘பாப்பார புளிய மரம்'. என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை. அதே போல் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து வந்த மகாகனி மரங்களையும் சென்னையில் காணலாம்.

மரங்களைப் பற்றிய அக்கறை நாம் காட்டாதது புறவுலகிலிருந்து நாம் அன்னியப்பட்டிருப்பதன் ஒரு குறியீடுதான். சென்ற ஆண்டு, ட்ரைவ் இன் உட்லேண்ட்ஸ் எதிரே இருக்கும் தேவாலய வளாகத்தில், சாலைக்கருகே  இருந்த நூறாண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு தொன்மையான, உயரமான அரிய வகை,  நமை மரம் (Button tree) என்று குறிப்பிடப்படும் மரம் திடீரென சாய்க்கப்பட்டது.  ஒரு கல்லூரிப் பேராசிரியை இதைக்கண்டு மனம் வெம்பி ஆங்கில இதழொன்றில் எழுதினார்.  ஆனால் போன மரம் போனதுதான். மற்ற நகரங்களில் இன்று இத்தைகைய மரங்களை heritage tree என்று இனங்கண்டு பாதுகாக்கிறார்கள். பெங்களூரில் இம்மாதிரியான மரங்களைக்காட்டும் ஒரு வரைபடம் கூட கிடைக்கின்றது.
நம் நாட்டில் புள்ளினங்களுக்கும் பாலூட்டிகளுக்கும் எளிய நடையில் எழுதப்பட்ட சிறப்பான கள கையேடு (field guide) கிடைக்கின்றன. ஆனால் மரங்களை அறிமுகப்படுத்தி, அடையாளம் காட்டி நூல் எழுதுவது சிரமம். எப்படி வர்ணிப்பது? இலைகளின் படம் வேண்டும். பூக்கும் மரமாக இருந்தால் பூவின் படம் தேவை. இந்திய மரங்கள் பற்றி எனக்குத் தெரிந்த அருமையான நூல் பிரதீப் கிஷன் எழுதிய Trees of Delhi என்ற புத்தகம். பிரமாதமான படைப்பு. நேர்த்தியான படங்கள். பெங்குவின் வெளியீடு.. இது டில்லியில் காணப்படும் மரங்களைப் பற்றியது என்றாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மரங்களைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்தலாம்.நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன்.

திருச்சி தூய யோசேப்பு கல்லூரியில் பேராசிரியராக இருந்த அருள்தந்தை மேத்யூ (1930-2004) தமிழ்நாட்டு மரங்களை, செடிகொடிகளைப் பட்டியலிட்டு பல ஆங்கில நூல்கள் வெளியிட்டுள்ளார். இதில் அவர் களத்தில் சேகரித்த தமிழ்ப் பெயர்களையும் சேர்த்திருப்பது சிறப்பு. மஞ்சள் நிற பூப்பூக்கும் ஒரு மரத்தின் பெயர் ‘வாதமுடக்கி’. வாதத்திற்கு மருந்தாக இதன் பட்டை பயன்படுத்தப்படுவதால் இந்தப்பெயர். இதில் ஒரு நூல் தமிழாக்கப்பட்டுள்ளது. நூலின் பெயர் சற்று கடினமாக இருந்தாலும்- மையத் தமிழக களவகைத் தாவரவியல்- உள்ளடக்கம் எளியதுதான்.எல்லா நூலகங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம். ஆனால் இது ஒரு கள கையேடு அல்ல.

மரங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் ஒரு சராசரி மனிதருக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு மரங்களுக்கு மேல் தெரியாது.சென்னையில், திருவான்மியூரில் வசித்த போது சில நண்பர்கள் மரங்களைப் பேண, அறிந்துகொள்ள ‘நிழல்’ என்ற அமைப்பை உருவாக்கியபோது அதில் நான் என்னை இணைத்துக்கொண்டேன். மாதமொரு முறை நகரின் ஒரு பகுதியில் சுற்றி நடந்து அங்குள்ள மரங்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். tree walk என்ற இந்த நிகழ்வு மூலம் பல சுவாரஸ்யமான நண்பர்கள் கிடைத்தார்கள். நடேசனுக்கு மரங்கள்தாம் உயிர், மூச்சு எல்லாம். செங்குன்றம் அருகே தனது பண்ணையில் ஒரு சிறு காட்டையே உருவாக்கியிருக்கின்றார். அவ்வப்போது அங்கு எங்கள் குழு செல்வதுண்டு. நிழல் நண்பர்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள பல சிறைச்சாலைகளுக்குச் சென்று மரங்கள் நட்டு, கைதிகளுக்கு மரங்களைப் பராமரிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். மரங்கள் பற்றிய ஒரு நூலகத்தையும் நிழல் நடத்துகிறது.

ஒருமுறை தாம்பரம் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் இந்தக் குழுவினருடன் சுற்றியது மறக்க முடியாத அனுபவம். தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன் கூட வந்து விளக்கினார். கட்டமரம் செய்யப் பயன்படும் மரத்தைக் காட்டினார். ஒரே முறை பூத்துக் குலுங்கி பின் அழிந்துபோகும் கூந்தல் பனைமரமொன்றைப் பார்த்தோம். இந்த மரத்தின் ஆயுள் ஏறக்குறைய 80 ஆண்டுகள். நம்மூரிலிருந்தும் இந்த மரங்களை வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்கள் எடுத்துச் சென்று பரப்பி இருக்கின்றார்கள். கூந்தல் பனை இன்று சூரிநாம் நாட்டிலிருப்பது, அங்கு சென்ற தமிழர்களால்தான்.

சென்னை நகரில் அருங்காட்சி வளாகம், மகளிர் கிறித்துவக் கல்லூரி, தியாசாபிகல் சொசைட்டி போன்ற பல பகுதிகளில் வெகு பழமையான மரங்களைப் பார்க்கலாம். புனித ஜார்ஜ் (ஜெமினி அருகே)  ஆலய கல்லறைத் தோட்டத்தில் ஒரு உயரமான, தொன்மையான மருத மரம் ஒன்று நிற்கின்றது கோவில் தேர் செய்யப் பயன்படும் மரமிது. அறுத்து, துண்டாக்கி சிற்பம் செய்யும்போது செதுக்குவதற்குத் தோதாக மென்மையாக இருக்கும். வெயிலும் காற்றும் பட, கல் போல உறுதியாகி விடும் தன்மை கொண்டது.

நமது சுற்றுச்சூழலுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. நம் கோவில்களில் பல வகையான மரங்கள் ஸ்தல விருட்சம் என வழிபடப்படுவது நம் பாரம்பரிய சுற்றுச்சூழல் அக்கறையின் ஒரு வெளிப்பாடே. ஒவ்வொரு மரமும் ஒரு வாழிடம். பூக்களைத் தேடி தேனீக்களும் தேன்சிட்டுகளும் வருகின்றன. அணில்,பல்லி போன்ற  பிராணிகளுக்கு மரம்தான் வீடு.  குரங்கு, மரநாய், ஓணான் போன்ற உயிரிகளுக்கும் அதுதான் வசிப்பிடம். 

கொம்பேறிமூக்கன், கண் கொத்திப்பாம்பு  போன்ற பாம்புகளும் மரங்களில் இருக்கும். பெரிய ஆலமரங்களில், மருத மரங்களில் பழந்தின்னி வௌவால்கள் தொங்கிக்கொண் டிருப்பதைப் பார்க்கலாம். பார்க்குமிடமெல்லாம் மரங்கள் இருந்தாலும் அவைகளை நாம் கவனிப்பதில்லை. ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்வார், "மரத்தைக் கவனித்துப் பாருங்கள்”  (Observe a tree) என்று.

சென்ற சில ஆண்டுகளில் தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிக்காக  லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. எத்தனை மரங்கள் சாய்க்கப்பட்டன, எத்தனை புதிய மரங்கள் நடப்பட்டன என்ற விவரம் இல்லை. காலநிலை மாற்றத்திற்கும் மரங்களுக்கும் உள்ள இணைப்பு பற்றி இன்று நாம் அறிந்திருக்கிறோம். இருந்தாலும் மரங்களுக்கு நாம் தரும் கவனிப்பு போதவே போதாது. எந்த இடத்தில் எந்த வகை மரம் நடவேண்டும் என்பதை யோசித்து செய்ய வேண்டும்.  முடிந்தவரை புங்கம், வேம்பு, புளியம் போன்ற உள்ளூர் மரங்களையே நட வேண்டும். அவைகளுக்கு கவனிப்பு அதிகம் தேவையில்லை. லேசாக விழுந்து விடாது. வெகு நாட்கள் நிலைத்திருக்கும். அண்மையில் தமிழக சட்டசபையில் மரப் பாதுகாப்பு சட்டம் சீக்கிரமே இயற்றப்படும் என்று  அறிவிப்பு வெளியானது (15.5.12) நல்ல செய்திதான். மர நலனிற்கென ஒரு குழுவும் (Tree Authority) ஏற்படுத்தப்படும்  என்ற செய்தியும் வருகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், தனியார் நிலத்திலிருக்கும் மரங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். தொன்மையான அல்லது அரிய வகை  மரமொன்றை வெட்டித் தள்ளிவிட முடியாது.

இவைகளை விட முக்கியமாகச் செய்யவேண்டியது நமது பள்ளிகளில் மரங்களைப்பற்றிச் சொல்லிக் கொடுப்பதுதான். அவைகளை அடையாளம் கண்டு கொள்ளத் தெரிந்து  கொள்வது மட்டுமன்றி, மரங்களுக்கும் நம்வாழ்விற்கும் உள்ள பிணைப்பை சிறுவர்கள் உணர வேண்டும். மரக்கன்றொன்றை நட எவ்வாறு குழியைத் தயார் செய்யவேண்டும் என்ற அடிப்படை விவரங்களையும்  சொல்லித்தர வேண்டும். நம் நாட்டின் சிறப்பு மரங்களான ஆல், அரசு இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

-சு.தியடோர் பாஸ்கரன் 

(theodorebaskaran@gmail.com)

நன்றி: உயிர்மை, ஜூன் - 2012

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

சொரணை இருந்தாத்தானே உயிர் இருக்கும்!


ரு தட்டில் நவதானியக் கொழுக்கட்டை, தினைப் பொங்கல், தேன் தினைமாவு, வரகரிசிச் சோறு, வழுதுணங்காய் சாம்பார், கம்பு - வல்லாரை தோசை, நிலக்கடலைச் சட்னி, கூட்டுக் காய்கறிப் பொரியல், சாமைக் கூட்டாஞ்சோறு, குதிரைவாலி தயிர்சோறு, பானகம் இவை எல்லாவற்றையும் வைத்துத் தருகிறார்கள். நீங்கள் எப்படிச் சாப்பிடுவீர்கள்? அதாவது, எதை எதோடு சேர்த்துச் சாப்பிடுவீர்கள்? எதில் தொடங்கி எதில் முடிப்பீர்கள்?

 சென்னை லயோலா கல்லூரியில் கடந்த வாரம் 13 சுற்றுச்சூழல் அமைப்பினருடன் சேர்ந்து 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் ஒருங்கிணைத்த ஐந்திணை சுற்றுச்சூழல் விழாவின் இரவு பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்றபோது இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது (பக்கத்தில் ஒரு நண்பர் தோசைக்குச் சாமைக் கூட்டாஞ்சோறைத் தொட்டுச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கொத்சு என்று நினைத்தாரோ, என்னவோ?). கூர்ந்து யோசித்தால், இது குழப்பம் அல்ல; இழப்பு. பாட்டனும் பூட்டனும் காலங்காலமாகச் சாப்பிட்ட உணவின் பெயரே தெரியாமல் போனதையும் எப்படிச் சாப்பிடுவது என்பதையே அறியாமல் போனதையும் வேறு எப்படிச் சொல்வது?
உலகிலேயே நிலத்தைச் சூழல் சார்ந்து பிரித்து, வாழ்முறையை வகுத்த சமூகம் தமிழ்ச் சமூகம்தான்.
திணை என்பது வெறும் பெயர் அல்ல;
அது ஓர் அறிவியல்.
சூழலியல் அறிவியல்.
இயற்கையோடு இயைந்த வாழ்வை அடிப்படையாகக்கொண்ட அறிவியல். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் ஐந்திணைகளும் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன?
இதைத் திரும்பிப் பார்க்கும் நிகழ்வாகத்தான் ஐந்திணை விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்கள். விழாவின் முக்கியக் களம் உணவின் மீதான அரசியல்!

விழாவை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடக்கி வைத்தார். ''சாப்பாடுதான் மூலாதாரம்கிறதைப் புரிஞ்சுக்கிட்டுதான், நம்ம மேல தாக்குதலைச் சாப்பாட்டுல இருந்து தொடங்குறான். நவீன விவசாயம் என்ன செய்யுதுனு புரிஞ்சுக்க பெரிய விஞ்ஞான அறிவு எதுவும் தேவை இல்லை. ஒரே ஓர் உதாரணம் சொல்றேன் கேளுங்க.

நவீன விவசாயம் என்ன செஞ்சுது? விவசாயியையும் மாட்டையும் பிரிச்சுது. மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏரை விட்டுட்டான்; டிராக்டர் வந்துச்சு; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி மாட்டு வண்டியை விட்டுட்டான்; பெட்ரோலும் டீசலும் இறக்குமதி ஆவுது; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏத்தம் இறைக்கிறதை மறந்துட்டான்; ஆழ்குழாய்க் கிணறு வந்துச்சு; மோட்டாரும் குழாயும் விக்குது; கம்பெனிக்காரன் பெருக்குறான். விவசாயி ஓட்டாண்டி ஆயிட்டான். நவீன விவசாயம் என்ன பண்ணுதுனு இப்பப் புரியுதுங்களா?'' என்று நம்மாழ்வார் கேட்டபோது ஒட்டு மொத்தக் கூட்டமும் உறைந்துபோனது.

''குதிரைவாலியும் வரகும் சாமையும் அரிசிக்கு நல்ல மாற்று. கேழ்வரகும் தினையும் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை. நெல்லுக்கும் கோதுமைக்கும் பாய்ச்சும் நீரில் பத்தில் ஒரு பங்கு போதும் இவற்றுக்கு. ஆனால், அரிசி, கோதுமையைவிடப் பல மடங்கு ஊட்டச்சத்து மிக்கவை!'' என்றார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.

''நீங்கள் இயற்கை உணவுக்கு மாறுவது எளிது. ஆனால், விவசாயிகள் மீண்டும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது அத்தனை எளிதுஅல்ல; இயற்கை விவசாயத்தில் ஒரு வண்டி எரு அடிக்க வேண்டிய இடத்துக்கு, நவீன விவசாயத்தில் ஒரு சட்டி யூரியா போதும். ஆனால், அது விஷம். அதனால்தான், கூடுதல் செலவு, கூடுதல் சுமையைப் பார்க்கா மல் இயற்கை விவசாயத்துக்குத் திரும்புகிறோம். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் ஏன் இயற்கை விளைபொருள்களின் விலை கூடுதலாக இருக்கிறது என்று கேட்டு நிராகரிக்கிறார்கள். நான் கேட்கிறேன்... நஞ்சு என்று தெரிந்த அரிசியை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள், சத்தான உணவு என்று தெரியும் அரிசிக்கு 40 ரூபாய் கொடுக்கக் கூடாதா?'' என்றார் முன்னோடி இயற்கை விவசாயியான வைகை குமாரசாமி.

''உணவு நஞ்சாயிடுச்சு, தண்ணி நஞ்சாயிடுச்சு, காத்தும் நஞ்சாயிடுச்சு; இன்னமும் எப்படி மௌனமா இருக்கோம்? சொரணை இருந்தாத்தானே உயிர் இருக்குனு அர்த்தம்?'' - சமூகச் செயற்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் கேள்வி இன்னமும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!

-சமஸ்
படங்கள் : ரா.மூகாம்பிகை

நன்றி:  ஆனந்தவிகடன், 08-08-12