செவ்வாய், பிப்ரவரி 28, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்தால் மின்தட்டுப்பாடு நீங்குமா..?


இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில்
அக்கறை கொண்ட அனைவருக்கும்...

கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் நிலையில், கூடங்குளம் அணுமின் திட்டம் நமது மின் தட்டுப்பாட்டை தீர்த்துவிடும் என்று நம்பும் மிகச்சிறு அளவிலான நண்பர்களின் கவனத்திற்கு கீழ்க்கண்ட அம்சங்களை அளிக்கிறோம்:



கூடங்குளம் அணுமின் திட்டம் நமது மின்தேவைகள் அனைத்தையும் தீர்த்துவிடும் என்ற தவறான நம்பிக்கை திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. கூடங்குளம் அணுஉலை (முதல் யூனிட்) 1000 மெகாவாட் மின்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் உலகில் எந்த அணுமின் உலையும் திட்டமிட்ட உற்பத்தி அளவை எட்டியதே இல்லை. திட்டமிடப்பட்ட மின் உற்பத்தியில் சுமார் 40% மட்டுமே உலக அளவில் அணுமின் உலைகளின் உற்பத்தி திறனாக உள்ளது. கூடங்குளம் அணுமின் உலை என்பது புதிதாக இருப்பதால் மிக அதிக அளவாக 70% சதவீத உற்பத்தி திறனை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது சுமார் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இந்த மின்சாரத்திலிருந்தே, இந்த மின் உலைக்கு தேவையான குளிர்விக்கும் இயந்திரங்கள், தண்ணீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட இயந்திரங்களுக்கு சுமார் 75 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். மீதி இருப்பது 625 மெகாவாட் மின்சாரம். இதில் தமிழ்நாட்டிற்கு 45% அதாவது 280 மெகாவாட் மின்சாரம் கிடைக்கலாம். இந்த மின்சாரத்தை பயனீட்டாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இடையிலான போக்குவரத்து இழப்பு 20% ஆகும். (தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் இந்த இழப்பு சுமார் 32% வரை உள்ளது) 280 மெகாவாட்டில் 20%-ஐ கழித்துவிட்டால் சுமார் 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடங்குளம் அணுமின் திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவும் கூட கூடங்குளம் அணுமின் திட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தித் திறனில் 70% உற்பத்தியை செய்யும் நிலையில்தான்.

வெறும் 220 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு நம் எதிர்காலத்தின் நலன்களை பணயம் வைக்க வேண்டுமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி.

அடுத்ததாக கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்ற தவறான நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது.  மத்திய அரசின் நிபுணர் குழு, கூடங்குளம் அணுஉலை 100% பாதுகாப்பானது என்றுஅறிவித்துள்ளது. அப்படி என்றால், கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்க முடியாது என்று அந்த அணுஉலையை விற்பனை செய்த ரஷ்ய நாட்டு நிறுவனம் கூறுவது ஏன். ஏனெனில் அணுஉலை என்பது ஒரு இயந்திரம் என்பதும், பழுதே ஆகாத ஒரு இயந்திரத்தை வடிவமைக்கவே முடியாது என்பதும் அந்த ரஷ்ய நிறுவனத்திற்கு தெரியும். அதனால்தான் அந்த நிறுவனம் விபத்து இழப்பீட்டிற்கு பொறுப்பேற்க முடியாது என்று மறுத்துவிட்டது. கூடங்குளம் அணுஉலையில் விபத்தேதும் ஏற்பட்டால் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும். 

ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 5,00,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அணுஉலையை மூடுவதற்கே சுமார் 75,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இதற்கு சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் தெரிகிறது. 

எனவே மேற்கண்ட கருத்துகளை நினைவில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் அழைப்பு விடுக்கிறோம். பரவலாக்கப்பட்ட மின்உற்பத்தி மட்டுமே நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும் பரவலாக்கப்பட்ட மின்உற்பத்தி முறைகளே நீடித்து நிற்கும். எனவே இதற்கேற்ற மின் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.  பிரபல அமெரிக்க பொருளியல் நிபுணர் ஜெரிமி ரிப்கின், பசுமை ஆற்றலே மூன்றாம் தொழிற் புரட்சியை தலைமை தாங்கும் என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். 

நீடித்து நிலைக்கும் ஆற்றலை அனைவருக்கும் வழங்குவதற்கான ஆண்டாக ஐ.நா. அவையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த (2012) ஆண்டில் நம் மின் கொள்கைகளை மறு ஆய்வு செய்யுமாறு அனைவரும் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

-பூவுலகின் நண்பர்கள்.

To all the people who are “concerned for the development of India in general and 
Tamil Nadu in particular

This appeal is being made in the background of the central govt. pushing to open the Koodankulam Nuclear Power Plant (KKNPP) and a very minor section of the public thinking that KKNPP will solve the electricity requirement of our state. 

At this juncture we thought it is appropriate to present some facts and we present before you. 

To break the first myth that KKNPP will solve the electricity requirements of our state. 
The installed capacity of the KKNPP is 1,000MW (1st unit). Generally the PLF( Plant Load Factor) for Indian Nuclear Power plants is 40% only, however taking KKNPP as a new reactor we can consider the PLF for KKNPP @ 70%, which means it will produce 700MW (Out of 1000 MW as installed capacity). Out of this 700Mw about 75MW will be internal consumption for their cooling systems, desalination plants etc…that makes the available electricity as 625MW. Out of this Tamil Nadu will get a share of 45% that will give Tamil Nadu 280MW. TN has got a AT&C loss of 20% (India’s official AT&C loss is 32%) and after deducting this we will get only 220MW roughly. All these are statistics and all of us know very well how long it will take to bring the operating efficiency of any machine to 70%. 


To get just 220MW do we need to pledge the future of our generations?

2nd Myth: The Koodankulam reactor is safe;  If the koodankulam reactor is safe 100% as stated by the committees appointed by the central govt, then why the Russian company that supplied the reactor is not ready to accept the Liability Cause. This clearly shows that they very well know that “Reactor is a Machine” and there is no machine in this world that is “Failure-proof” and all machines are bound to fail. But in this case of the reactor, if there is any failure then the results will be catastrophic. For a small information, the Economic loss due to the accident in Fukushima is 5,00,000 crore and the cost of de-commissioning the reactors is 75,000 crore and will take about 30-40 years. 

We appeal to all of you to appeal to the government to review its electricity policy on the whole. We suggest the government to take up “Distributed Electricity Generation” as the model for our future electricity needs and also to have a sustainable energy. We would also like to quote Economist JeremyRifkin stating that Green energy will lead the third Industrial revolution. We request you to appeal to the govt to review the over-all energy policy in this UN “Year of Sustainable energy for all”.

 
With Warm Regards,

For Poovulagin Nanbargal



ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

ஆகா...அன்னை பூமி சட்டம் !

வீடு, விளைநிலம், விளைச்சல் என்றே நாம் சுழன்று கொண்டிருந்தாலும்... தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்பது போன்ற உலக சட்டங்கள்தான், உள்ளூரில் நாம் உளுந்து விதைப்பதைக்கூட, இன்றைக்கு தீர்மானிக்கின்றன.

இதுதான் எதார்த்த நிலை! இத்தகையச் சூழலில், பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகின் பல நாடுகளிலும் நடைபெறும் விவசாயம், விவசாயப் பிரச்னைகள், விவசாய அரசியல், விவசாயப் போராளிகள், இயற்கை நேசர்கள் பற்றிய செய்திகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். என்ன... உலகம் சுற்ற புறப்படுவோமா!

'உலகம், மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம்' என்கிற இறுமாப்பு, மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல, இங்கே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகள் தொடங்கி, பிரமாண்டமாகத் திரியும் யானைகள், திமிங்கலங்கள் வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த உலகம் சொந்தம். ஒன்றை பூண்டோடு அழித்து, மற்றொன்று வாழ நினைத்தால்.. அது, 'நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டுவதற்கு சமம்' என்பதை சங்க காலம் தொடங்கி, இன்று வரையிலும் நம்முன்னோர்கள் பாடல்களாக, கதைகளாக, கல்வெட்டுகளாக, ஓலைச்சுவடிகளாக, செவிவழிச் செய்திகளாக இன்னும் பற்பல வடிவங்களாக சொல்லிச் சென்றுள்ளனர்.

ஆனாலும்,  'நுனிமரத்தில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டும்' வேலை இங்கே தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக, முதன்முறையாக ஆப்பு வைத்துள்ளன சிறிய நாடுகள் இரண்டு. தென்அமெரிக்க நாடுகளான ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள்... இந்த பூமியில் மனிதர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் இயற்கையின் படைப்பில் உருவான ஒவ்வொன்றுக்குமே உள்ளது’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 'அன்னை பூமி சட்டம்' (Law of Mother Earth) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளன.
இயல்பாகவே... இயற்கை மீது அபரிமிதமான நேசமும், காதலும் கொண்டவர்கள் தென்அமெரிக்கர்கள். காரணம், அந்த அளவுக்கு அங்கே இயற்கைச் செல்வம் ஒரு காலத்தில் நிறைந்து கிடந்ததுதான். கிட்டத்தட்ட ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு இணையாகக் காடுகளும் ஆறுகளும் மலைகளும் நிறைந்த பூமி அது. அப்படிப்பட்ட செல்வங்கள், வளர்ந்த நாடுகளின் கண்களை உறுத்த, ஜனநாயகம், சட்டம், விதிகள், ஒப்பந்தம் என விதம்விதமான பெயர்களைச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி, அனைத்தையும் சுரண்ட ஆரம்பித்துவிட்டன.

எண்ணெய் வளங்களை உறிஞ்சிய நாடுகள்... கழிவுகளைக் காடுகளில் கொட்டி வனவளத்தை அழித்தன. பழங்குடிகளின் குடியிருப்புகள் கழிவுகளாலும், புகையாலும் மூச்சடைத்தன. குறிப்பாக 'செர்வான்’ என்ற நிறுவனம், உலகின் மிகப்பெரியக் காடுகளில் ஒன்றான அமேசான் காடுகளை நாசமாக்கியது. சர்வதேச முதலீடுகள் மூலம் இந்த நாசச் செயல்கள் செழிப்பாகவே நடந்தன.
ஒரு கட்டத்தில் தங்களது வளங்களும், வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதைக் கண்டு கொதித்து எழுந்த ஈக்வடார், 2008|ம் ஆண்டு 'அன்னை பூமி சட்டம்' என்பதை உருவாக்கியது. 'அரசாங்கம் என்பது அந்த நிலப்பரப்பில் வாழும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்குமானது’ என்கிற இந்த சட்ட விதிகளின் அடிப்படையில் 'செர்வான்’ நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஈக்வடார் நீதிமன்றம், 'செர்வான் நிறுவனம் 1,800 கோடி டாலர் (நம்மூர் தொகையில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும்' என அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

'அட இது நல்லாயிருக்கே’ என முடிவு செய்த பொலிவியா நாடும் 'அன்னை பூமி சட்டம்' என்பதை அமல்படுத்திவிட்டது. தென்அமெரிக்காவைச் சேர்ந்த மேலும் ஆறு நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மனித உரிமைக்கு இருப்பதுபோல, இயற்கைக்கும் சம உரிமை கொடுக்கும் வகையில் சர்வதேச சட்டம் கொண்டு வரும் முயற்சியிலும் இந்த நாடுகள் இறங்கியுள்ளன.

இத்தனை ஆண்டுகளாக இயற்கை அன்னையின் மடியை அறுத்து, பால் குடித்து பழக்கப்பட்டுவிட்ட ஆதிக்க நாடுகள், இப்படி ஒரு சட்டம் சர்வதேச அளவில் உருவாவதை சும்மா விட்டுவிடுவார்களா?

இன்றைக்கு சர்வதேச அளவில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தும், சூழலை எந்த அளவு வரை மாசுபடுத்தலாம் என்பதைத்தான் வலியுறுத்துகின்றனவே தவிர, மாசுபடாமல் இருப்பதற்கான விதிகளை யாரும் வகுக்கவே இல்லை.

இன்று நடக்கும் எல்லா பேரிடர்களும்... இயற்கையின் சமநிலையை மனிதர்கள் குலைத்ததால், வந்த வினைகளே. இயற்கை தன்னை சரி செய்து கொள்ள முயலும்போது, மனிதகுலம் அழிகிறது.

'இயற்கைக்கு சமஉரிமை வழங்கினால் மட்டுமே, மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள சமநிலை காக்கப்படும்' என்பதை உணர்ந்துதான் ஈக்வடார் மற்றும் பொலிவியா நாட்டின் அதிபர்கள் 'அன்னை பூமி சட்டம்' என்கிற அதிஅற்புதமான சட்டத்தை உருவாக்கியுள்ளனர், என்பதை கடந்த இதழில் பார்த்தோம்.

மரங்கள், கனிம வளங்கள் போன்றவற்றுக்காக இயற்கையைச் சூறையாடுவது ஒருபக்கம் இருக்கட்டும். அவையெல்லாம், பணம் பண்ண வேண்டும் என்கிற பேராசையின் விளைவாக நடத்தப்படும் கொடுமைகள். ஆனால், நம்முடைய அன்றாட உணவுக்குக் காரணமாக இருக்கும் அதி உன்னதமான உயிரினங்களையும் ஒழித்துக் கட்டிக் கொண்டிருப்பது... கொடுமையிலும் கொடுமை அல்லவா!
இன்று உலகில் உள்ள மனிதர்கள் உண்ணும் உணவில் மூன்றில் ஒருபங்கு தேனீக்களால் வந்தவை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பரிணாமத் தத்துவத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான சார்லஸ் டார்வின், ''இந்த சின்னஞ் சிறு உயிரினம் மட்டும் பூமியில் தோன்றியிருக்காவிட்டால்... பூமியின் முகம் இப்படி இருந்திருக்காது'' என்று மண்புழுவை சிலாகித்து எழுதினார்.

அந்த மண்புழுவுக்கு இணையாக தேனீக்களையும் கூறலாம். தேனீக்கள் மட்டும் பூமியில் தோன்றியிருக்காவிட்டால்... உலகில் பூக்கும் தாவரங்களின் தன்மையே மாறி இருக்கும். அத்தகையத் தேனீக்களையும், பூச்சிக்கொல்லிகளின் தாறுமாறான பயன்பாடுகள் காரணமாக நம்மையும் அறியாமல், நாம் அழித்துக் கொண்டே இருக்கிறோம்.

நாம் பயிரிடும் நூறு வகை பயிர்களில் எழுபதுக்கும் மேலானவை, தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 'தேனீ வளர்ப்பு' என்பது மிகப் பெரியத் தொழில். லட்சக்கணக்கான தேனீப் பெட்டிகள் ஆப்பிள், ஆரஞ்ச், அல்மாண்ட், திராட்சை என பழத் தோட்டங்களில் வைக்கப்படுகின்றன. அப்படி பெட்டிகளை வைப்பதற்கு தேனீ வளர்ப்பவர்களுக்கு விவசாயிகள் பணம் தருகிறார்கள்.

'ஒரு தேன்கூட்டிலிருந்து ஒரே ஒரு தேனீ வீதம், 200 கூடுகளிலிருந்து 200 தேனீக்கள், பூச்சிக்கொல்லிகளால் சாகடிக்கப்பட்டால்... ஆறுமாத காலத்தில் உலகின் விவசாய உற்பத்தியில் 50 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய்) மதிப்புள்ள விளைபொருட்கள் விளையாமல் போகும்’ என்கிறது அமெரிக்க தேனீ வளர்ப்போர் சங்கம்.
கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தில் கூட்டம், கூட்டமாக செத்து விழுகின்றன தேனீக்கள். இதுதொடர்பாக கடந்த மாதம் 10|ம் தேதி அமெரிக்க தேனீ வளர்ப்போர் சங்கத்தினர் கூடி விவாதித்தனர். விவாதத்தில், 'வைரஸ் நோய், மரபணு மாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள்’ என தேனீக்களின் சாவுக்கு பல காரணங்கள் விவாதிக்கப்பட்டன. ஆனால், எந்தக் காரணத்தையும் அந்தக் கூட்டம் உறுதி செய்யவில்லை. தேனீக்களின் சாவையும் தடுக்க முடியவில்லை.

அமெரிக்க தேனீக் கூட்டங்கள் சாவின் காரணமாக, அந்நாட்டின் வேளாண் பொருளாதாரம் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. 2005|ம் ஆண்டு கணக்கின்படி, பிரச்னை தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே, அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள், 200 பில்லியன் டாலர் அளவுக்கு விளைச்சல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம் (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய். கிட்டத்தட்ட 2 ஜி ஊழலுக்கு சொல்லப்படும் கணக்கைப்  போல ஆறு மடங்கு).  தேனீக்கள் அழிவு அந்த நாட்டு விவசாயிகளை கடும் கவலையில் தள்ளியுள்ளது. 

அந்நாட்டு விஞ்ஞானத்தாலும் இதற்குத் தீர்வை சொல்ல முடியவில்லை. ஆனால், நாம்தான் அவர்களுடைய விஞ்ஞானம் உசத்தி என இங்கே ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.

-அரச்சலூர் செல்வம்

சனி, பிப்ரவரி 25, 2012

வயிறா... வசதியா...?

''தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள 3,800 மெகாவாட் உயர் அழுத்த மின்சாரத்தில், 1,800 மெகாவாட் மின்சாரத்தை, சென்னையைச் சுற்றியுள்ள சில கார்ப்பரேட் கம்பெனிகளே கபளீகரம் செய்துகொள்கின்றன. இதனால் எங்கள் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. மின்சாரம் என்பது நாட்டின் பொதுச்சொத்து. அதில் அனைவருக்கும் சமபங்கு வேண்டும். சிலருக்கு மட்டும் 0% மின்வெட்டு... எங்களுக்கு 60% மின்வெட்டு.

கார்ப்பரேட் கம்பெனிகளே, நீங்கள் தாய் உள்ளத்தோடும் கருணையோடும் யோசித்து முடிவெடுத்து உங்களது பங்கான 30% மின்வெட்டை ஏற்றுக்கொண்டால், எங்கள் வாழ்வும் மலரும். சமூக வளர்ச்சியில், நீங்களும் பங்கு எடுத்த பெருமை கிடைக்கும்''
-இப்படி, கார்ப்பரேட் கம்பெனிகளை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளன தமிழகத்திலிருக்கும் பருத்தி, பஞ்சுநூல் மில் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள்.

இதைப் பார்க்கும்போது... ஒரு கொலை செய்த ரவுடி... பல கொலைகளை செய்த/செய்துகொண்டிருக்கும் ரவுடியை பார்த்து ஜீவகாருண்யம் பேசுவது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆம், தங்களுடைய வருமானத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டதற்கே... சித்தாந்தம், வேதாந்தம், சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை பற்றி பேசும் இந்தப் பருத்தி, பஞ்சு, நூல் மில் முதலாளிகள்தானே... லட்சக்கணக்கில் பருத்தி விவசாயிகள் மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போதும்... இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு பருத்தி ஏற்றுமதிக்குத் தடை கோரினார்கள்.
விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலையில் பருத்தியை கொள்முதல் செய்து... நூல், ஆடை என ஏற்றுமதி செய்து, தாங்கள் கொழுத்த லாபம் சம்பாதிக்க, பருத்தி ஏற்றுமதிக்குத் தடை வாங்கினார்கள் இந்த முதலாளிகள். இப்போது, மின்சார பிரச்னை என்றதும், சமூகசமத்துவம் பற்றி பேசுகிறார்கள்.
ஒன்று உள்ளூர் வர்த்தகம் என்றால், இன்னொன்று உலக வர்த்தகம். ஒன்று சிறிய சுரண்டல்... மற்றொன்று பெரிய சுரண்டல். இதில் நியாயம், தர்மம் என்கிற சொற்களுக்கு இடமே இல்லை.

'கட்டுப்பாடற்ற உலக வணிகம், கட்டுப்பாடற்ற உலக முதலீடு நம் நாட்டுக்கு நல்லதல்ல. நல்லது செய்வது போல ஒரு மாயையை உண்டாக்கி, ரத்தம் வராமல் கொன்று விடும்' என்று கடந்த 30 ஆண்டுகளாக கரடியாக பலரும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். 'வலிமையான மிருகம், எளிய மிருகங்களை வேட்டையாடி தின்று விடுவது போல... வலியவன், எளியவனை அழித்து விடுவான்’ என்று எச்சரிக்கை செய்தார்கள். 'பொருளாதாரத்தில் கடைநிலையில் இருக்கும் விவசாயிகள் முதலில் பலியாவார்கள். அடுத்து, சிறுசிறு தொழில்களை விழுங்குவார்கள்’ என்றும் எடுத்துச் சொன்னார்கள். அதற்கெல்லாம் யாருமே காது கொடுக்கவில்லையே!

தொழில் சுணக்கத்தால் வருவாய் குறைந்ததையே தாங்க முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆலை அதிபர்கள், வாழ்நாள் முழுவதையும் வறுமைக்கு அடகு வைத்த விவசாயிகளைப் பற்றி இப்போதாவது சிந்தித்துப் பார்க்கட்டும். இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாலைகளில் பாதி தமிழ்நாட்டில் இருப்பதாகப் பெருமை பேசுகிறார்கள். அது எவ்வளவு உண்மையோ, பருத்தி விவசாயிகள் தற்கொலைக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதும் அவ்வளவு உண்மை. பருத்தி விவசாயிகளை வைத்து கொழுத்தவர்கள், செத்து விழுந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு என்ன செய்தார்கள்? ஒரு குடும்பத்தையாவது தத்து எடுத்து உதவி இருப்பார்களா?

'தடையற்ற உலக வர்த்தகச் சட்டம்' இந்திய அரசின் முட்டாள்த்தனமான பொருளாதாரக் கொள்கை முடிவு. 100 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டு, உலக பணக்காரர்கள் 100 பேரை உருவாக்கியதைத் தவிர எதைச் சாதித்தது உலகமயம்? பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்தபோது தடுக்கத் தவறிவிட்டு, தற்பொழுது வேண்டுகோள் விடுத்து என்ன புண்ணியம்?

இவர்கள் கதை இப்படியென்றால்... அரசு தன் பங்குக்கு மின்கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூத்தடித்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் சில அரைவேக்காடுகள், 'விவசாயத்துக்கு எதற்காக இலவச மின்சாரம்... அதற்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும்?' என கேள்விகளை எழுப்புகின்றனர்.

அரசே ஒரு சிலரை தயார் செய்து இப்படி கேள்விகளைக் கேட்க வைத்து, பின்பு 'மக்கள் கருத்தே மகேசன் கருத்து’ என்கிற பெயரில் விவசாயத்துக்கு மின்கட்டணம் விதிக்க நடத்தும் சூழ்ச்சியாகக்கூட இதை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

விவசாயம் என்பது வயிறு சம்பந்தப்பட்டது... தொழிற்சாலைகள் என்பது வசதி சம்பந்தப்பட்டது. வசதியைப் பெருக்கிக் கொள்ள, பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், வரிச்சலுகை, தண்ணீர் சலுகை, கூலிச்சலுகை என அள்ளி அள்ளிக் கொடுப்பது இந்தக் குருட்டு கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக, விவசாயத்துக்குக் கிள்ளிக் கொடுக்கும் இலவச மின்சாரம் கண்களை உறுத்துகிறது.

650 கோடி முதலீடு செய்த ஜப்பானைச் சேர்ந்த நோக்கியா செல்போன் கம்பெனிக்கு, ஓராண்டில் இந்திய அரசு கொடுத்த சலுகைகள் மட்டும் 700 கோடிக்கும் மேல். ஆனால், 120 கோடி மக்களுக்கு சோறு போடும் உழவர்களுக்கு, சலுகை கொடுக்கக் கூடாதாம்.

அய்யா புண்ணியவான்களே வாழ்க்கைக்கு எது முக்கியம்... சோறா...
செல்போனா..?

-தூரன் நம்பி

நன்றி: பசுமைவிகடன், 10.3.2012

மின்வெட்டு அலட்சியங்கள்: காற்றாலை மின் உற்பத்தியைக் கவனிக்கவே இல்லையே!


மிழக அரசியல் வானில் ஆயிரம் வேடிக் கைகள் நடந்தாலும், அதைவிட முக்கியமாக 'இப்பப் போகுமோ... எப்ப வருமோ?’ என்று மின்வெட்டு விவகாரத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் மக்கள்! 

மாற்று மின்உற்பத்தி திட்டம் குறித்து ஆக்க பூர்வமான யோசனைகளைச் சொல்கிறார் உலகக் காற்றாலைகள் அமைப்பின் துணைத் தலைவரான கஸ்தூரி ரங்கையன். ''தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 15 சதவிகிதம்  காற்றாலைகள் மூலமாகக் கிடைக்கிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே சுழல்வதன் மூலமாகவே இவ்வளவு பயன் கிடைக்கிறது. மின்வெட்டு சிக்கல் சம்பந்தமாக விளக்கம் தரும் நேரத்தில் எல்லாம், 'காற்றாலை மின்உற்பத்தி ஏமாற்றிவிட்டது’ என்று பொறுப்பில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

காற்றாலைகள் வருடம் முழுக்க இயங்குவது இயலாத காரியம். மே மாதம் ஆரம்பித்து அக்டோபர் வரைக்கும் தென்மேற்குப் பருவக்காற்று வீசும் நேரத்தில் மட்டுமே தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். இந்த நேரங்களில் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கிறது. மற்ற ஆறு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றி 400 மெகாவாட் மின்சாரம் வரை கிடைக்கிறது. இதுவே மிகப்பெரிய வரப்பிரசாதம்.

காற்றாலை சக்தியை சரியாகப் பயன்படுத்தினாலே, ஆறுமாத காலம் மின்வெட்டில் இருந்து முழுமை யாகத் தப்பிக்கலாம். தென்மேற்குப் பருவக்காற்று வீசும் காலங்களை 'ஹை விண்ட் சீஸன்’ என்று சொல்வோம். இந்தக் காலகட்டத்தில் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பலமான காற்று வீசும். இந்த நேரங்களில் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை காற்றாலைகளையும் முழு வீச்சுடன் பரிபூரணமாக இயங்க வைக்க வேண்டும். இதன்மூலமாக தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அதிகப்படியான மின்சாரத்தைப் பக்கத்து மாநிலங்களுக்கும் விற்பனை செய்யலாம். இந்த விற்பனை மூலமாக சுமார் 750 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தில் இருந்து நமக்கு மின்பற்றாக்குறை இருக்கும் நேரத்தில், பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த யோசனையைப் பலமுறை அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டோம். ஆனால், பலன் இல்லை. பருவக் காற்று வீசும்போது காற்றாலைகளை முழுமையாக இயக்குவதில் என்ன பிரச்னை?

காற்றாலை மூலமாக நாங்கள் மின்சாரம் தயாரித்து தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்கிறோம். இதற்கு உரிய பணம் தரவேண்டும் அல்லவா? 2010 டிசம்பரில் கொடுத்ததுதான் கடைசி. அதன்பிறகு பணம் வரவில்லை. பணம் சரியாகக் கிடைக்கவில்லை என்பதால், காற்றா லைகளை முழுவீச்சில் பயன்படுத்த பலரும் தயாராக இல்லை. இந்த விவகாரம் காரணமாக காற்றாலையில் முதலீடு செய்வதற்குப் புதிய நபர் கள் வரவும் பயப்படுகிறார்கள்.

மேலும், காற்றாலைகள் மூலம் கிடைத்த 1,000 மெகாவாட் மின்சாரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குச் செல்லவில்லை. காரணம், உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான மின்வடம் உள்ளிட்ட பல ஏற் பாடுகளை மின்வாரியம் செய்து தரவில்லை. நிலைமை இப்படியே இருந்தால், எவ்வளவு காலம் ஆனாலும் மின்வெட்டு சீராகாது.

மகாராஷ்டிரா போன்று இங்கேயும் மின் உற்பத்தி மற்றும் பகிர்வுத் துறையில் தனியாருக்கும் இடம் அளிக்க வேண்டும். இதனால், 'தனியாருக்குத் தாரை வார்ப்பதா?’ என்று சில கருத்துக்கள் வெடிக்கலாம்.  தொலைத்தொடர்புத்துறையில தனியார் வந்த பிறகு என்ன நடந்தது? போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைப்பது, சலுகைகள் அறிவிப்பது மூலம் மக்களுக்கு நன்மைதானே நடக்கிறது? மின்பகிர்வு தனியார் வசம் சென்றால், எந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குகிறதோ, அவர்களிடம் இருந்து மக்கள் இணைப்பை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிக செலவாகும் சமாசாரம். ஒரு யூனிட் உற்பத்தி செய்ய 10 ரூபாய் ஆகிறது. அதனால், காற்று, அனல், அணு, நீர்சக்திகள் மூலமாகத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். நம் நாட்டில் நிலக்கரி அமோகமாகக் கிடைப்பதால், தெர்மல் பவர் ஸ்டேஷன்கள் சிலவற்றைத் தொடங்கி இருக்கலாம். ஆனால், ஒரு தெர்மல் பவர் ஸ்டேஷனை நிர்மானித்து உற்பத்தியைத் தொடங்க குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும்.

ஆனால், காற்றாலை உற்பத்தியைப் பொறுத்தவரை வாங்கிக்கொள்ளும் மின்சாரத்துக்கு அரசு  உடனடியாக பணம் கொடுத்தாலே போதும். பிற மாநிலங்களில் இருந்தும் வேறு வழிகளில் பெறும் மின்சாரத்துக்குக் கொடுக்கும் தொகையைவிட இது குறைவானதே. மேலும் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வதற்காக பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியதோ அல்லது மானியம் கொடுக்க வேண்டிய அவசியமோகூட அரசுக்கு இல்லை. அதனால், இப்போதைய மற்றும் எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு உடனடியாக காற்றாலை மின்உற்பத்திக்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். . அப்போதுதான், மின் வெட்டில் இருந்து தமிழகம் தப்பிக்க முடியும்'' என்றார்.  

இந்த விவகாரம் குறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கேட்டோம். ''அம்மாவின் கடந்த கால ஆட்சியின்போது காற்றாலை மின்தயாரிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், அதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வந்தன. ஆனால், அடுத்து வந்த அரசாங்கம் காற்றாலை மின்உற்பத்தியை முறைப்படுத்தவும் மின் வடம் வழங்குவது உள்ளிட்ட முக்கியப் பணிகளையும் செய்யவே இல்லை. அதன் விளைவைத்தான் இன்றைக்கு அனுபவித்து வருகிறோம்.

இப்போது, அம்மா மீண்டும் பொறுப்புக்கு வந்தவுடன் காற்றாலை மின்சார உற்பத்தி அமைப்பைச் சீராக்க உத்தரவுகளைப் போட்டிருக்கிறார். கூடிய விரைவில் பிரச்னைகள் களையப்படும். காற்றுவீசும் காலத்தில் உற்பத்தியாகும், தேவைக்கு அதிகமான மின்சாரத்தை விற்பனை செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால், சரியான விலை கிடைப்பதுதான் பிரச்னை. நஷ்டத்துக்கு எதையும் விற்பனை செய்ய முடியாது. இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் புரியாமல், அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது அழகல்ல'' என்றார்.

காத்தாடியை சுத்த விடுங்கப்பா!

எஸ்.ஷக்தி
படம்: வி.ராஜேஷ்

நன்றி: ஜூனியர் விகடன், 29-02-12

புதன், பிப்ரவரி 22, 2012

கூடங்குளம் அணு மின் நிலையம் 30 கேள்விகள் ? பதில்கள் !


1.கூடங்குளத்தில் என்ன நடக்கிறது
1000 மின்சாரம் தயாரிக்கும் இரண்டு ருசிய அணு உலைகள் நிறுவப்படுகின்றன .1988-ஆம் ஆண்டு ரூபாய் 6000 கோடி செலவாகும் என்றார்கள் .1997 -ஆம் ஆண்டு 17000 கோடி வரை செலவாகும் என்றார்கள் .தற்போதைய செலவு விபரங்கள் யாருக்கும் தெரியாது.இந்த திட்டத்திற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கவோ ,சுற்று சூழல் தாக்க அறிக்கையினை பகிர்ந்து கொள்ளவோ செய்யாத நிலையில் மேலும் 4 அணு உலைகள் நிறுவவும் முயற்சி நடந்து வருகிறது .இதன் செலவு ருபாய் 55000 கோடி என்கிறார்கள்.இதற்கான கருத்து கேட்பு கூட்டம் சூன் 2 ,2007 அன்று அரசு விதிகளை மதிக்காது அய்யோக்கியதனமாக நடத்தி முடிக்கப்பட்டது . 

2.இதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்
தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் மக்கள் கருத்து கேட்கும் விளம்பரங்களில் ,ஊரை விட்டு இடப்பெயர்ச்சி செய்வது முதல் பாதிப்பு .திருநெல்வேலி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் ,உண்ணும் உணவிலும்,குடிக்கும் நீரிலும் ,வாழ்வாதாராமான கடலிலும் ,நிலத்திலும் கதிரியக்கப் பொருட்களால் விஷம் கலந்து புற்று நோய் முதல் பல்வேறு நோய்கள் எழும் ,உடல் ஊனமுற்ற ,மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கும் .நாளடைவில் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்ப்பட்டு எதிர்கால சந்ததிகளே உருக்குலைந்து போகும்.
3.இவ்வளவு தீங்கு இருக்கும் திட்டத்தை அரசு எப்படி கொண்டு வரும்
நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை என்பதால் அணுஉலைகளை வளர்ச்சித் திட்டங்களாக கருதுகிறது அரசு .நாடு முன்னேற ஐந்தாறு மாவட்டங்களில் உள்ள மக்கள் அழிவது தவறல்ல என்ற மனப்பாங்கே இந்த வளர்ச்சி சித்தாந்தத்தில் மேலோங்கி நிற்கிறது .
4.முதல் இரண்டு அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இனி நிறுத்த முடியமா
உறுதியாக முடியும் .உலகின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடக்கும் போதோ ,அல்லது நடந்து முடிந்த பிறகோ ,பல அணு உலைகள் மூடப்பட்டுள்ளன .

  
அணு உலை                                        
நாடு    
மூடப்பட்ட நிலை
ரோச்டோவ்      
ரஷ்யா 
90 சதவீத வேலைகள் முடிந்திருந்த நிலையில்                        பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக 1997           -இல் நிறுத்தப்பட்டது .
மொச்சொவ்சீ
ஸ்லோவாகியா   
1994 டிசம்பரில் ஐரோப்பா முழுவதும் மக்கள் பலமாக எதிர்த்ததால் 1995 மார்ச் மாதம் அரசு ரத்து  செய்தது .
பட்டான்
பிலிப்பைன்ஸ் 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .

ஸ்வட்டண்டார்ப்   
ஆஸ்திரியா 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
என்லியாவோ  
தைவான்  
96 .2 சதவீத மக்கள் எதிராக வாக்களித்ததால் ,1994 -ஆம் இரண்டு அணுஉலை வேலைகள்  நிறுத்தப்பட்டன

2011 -ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு வாக்காளர்கள் அணுசக்தி திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.பெல்ஜியம் தனது அணு உலைகளை படிப்படியாக மூடிவிடுவதாக அறிவித்துள்ளது .கடந்த 35 வருடங்களாக அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் புதிய அணுஉலைகள் கட்டப்படவில்லை. 
5.அணு உலைகள் நிறுத்தப்பட்ட நாடுகளில் பண்பட்ட அரசுகள் இருந்தன .ஆனால் நமது நாட்டில் ?
நமது நாடும் சனநாயக நாடுதான் .ஆளும் வர்க்கத்தின் நலத்திற்காகவே மத்திய,மாநில அரசுகள் இயங்கினாலும் ,பொதுமக்களாகிய நாம் அனைவரும் சாதி ,மத பேதமின்றி ஒட்டுமொத்தமாக ஒன்றாய் நின்று எதிர்க்கும் பட்சத்தில் அணு உலைகளை நிறுத்த முடியும் .
6.ஏகப்பட்ட பணம் செலவு செய்தாயிற்றே
ஒரு மத்திய அமைச்சரால் ஒரு லட்சத்து எழுபதைந்தாயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது .சேது சமுத்திரம் திட்டத்தில் கடலுக்குள் கால்வாய் வெட்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நாசம் செய்யப்பட்டதே? ஏராளமான செலவு செய்த பிறகு  திட்டங்களை ரத்து செய்வதும் ,ஒத்தி போடுவதும் புதிதல்ல .மீன் பிடித்தொழிலினால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை மீனவ மக்கள் ஏற்ப்படுத்திக் கொடுக்கிறார்கள் .கூடங்குளத்தில் ஆகியிருக்கும் செலவை எளிதில் ஈடுகட்டி விட முடியும் 
7.இத்தனை கட்டிடங்களை கட்டி ஆகி விட்டதே
கூடங்குளத்தில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்றையோ அல்லது கடல் சார் பல்கலைகழகம் ஒன்றையோ அமைக்கலாம் .அணு உலை கட்டிடங்களில் கோளரங்கம் போன்ற அறிவியல் கல்வி மேம்பாட்டு திட்டங்களை நிறுவலாம் .இங்கே வேலை செய்பவர்களுக்கான தங்கும் விடுதியாக செட்டிகுளம் நகரிய கட்டிடங்களை உபயோகிக்கலாம் .
8.அணு மின் நிலையங்களில் எத்தனையோ பேர் வேலை செய்தானே செய்கிறார்கள் ?
நள்ளிரவில் சுடுகாட்டில் பிணம் எரிப்பது வெட்டியானுக்கு வேலை .பல்வேறு காரணங்களால்  சூழ்நிலைகளால் அந்த வேலையை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் .ஆனால் அது அவருக்கு பல நோய்களையும் ,இழிவையும் தருகிறது .அவரது வாழ்விற்கு வேறு வழி தெரியாததால் அதனை செய்கிறார்.அணு உலைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடையே ,அவர்கள் குடும்பத்தினர்களிடையே பல்வேறு கொடிய நோய்களும் உபாதைகளும்  இருப்பது முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது .நாளடைவில் உடலில் ஏற்ப்படும் மாற்றங்களை ,நோய்களை இந்த ஊழியர்களோ ,அணுசக்தி துறையோ சரிவர தேர்வதும் இல்லை ,தெளிவதும் இல்லை . 
9.அணு உலையின் மிக ஆபத்தான மையப்பகுதியில் கூட ஆட்கள் வேலை செய்யத்தானே செய்கிறார்கள்?
ஆமாம்.இந்த வேலைகளை செய்பவர்கள் பெரும்பாலும் ஊர் பேர் தெரியாத கான்ட்ராக்ட் வேலையாட்கள் .இவர்களை ஒளிரும் அடிமைகள் என்று குறிப்பிடுவார்கள்.ஏராளமான கதிர்வீச்சுக்கு ஆளாகி,வாழ்கையை தொலைத்துவிட்ட இவர்களை ஆபத்தான வேலை முடிந்தவுடன் சப்தமின்றி ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் .
10.அணு மின் நிலைய ஊழியர்கள் வசிக்கும் டவுன்ஷிப் அணு உலை அருகில்தானே இருக்கிறது ?
அணு உலையால் எந்த வித பாதிப்பும் இல்லையென்றால் ஊழியர்களை அணு உலை வளாகத்துக்குள்ளேயே தங்க வைக்கலாமே?ஏன் 8 -10 கீ.மீ தூரத்துக்கு அப்பால் கொண்டு போக வேண்டும் ?இந்த டவுன்ஷிப்பில் இடை நிலை கடை நிலை ஊழியர்கள்தானே வசிக்கின்றனர்.மிக உயர்ந்த நிலை அதிகாரிகள் இங்கே வந்து வசிப்பார்களா?பிற அணு உலைகளின் டவுன்ஷிப்களில் வசிக்கும் ஊழியர்கள் தம்மில் பற்பல கதிர்வீச்சு நோய்கள் நிலவும் உண்மை கண்டுபிடிக்கபட்டிருக்கிறதே
11.வளர்ந்து வரும் நமது நாட்டுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறதே ?
உண்மைதான் நமது நல்வாழ்வுக்குதான் மின்சாரமே தவிர மின்சாரத்திற்காக நமது வாழ்க்கையல்ல .கண்களை விற்று சித்திரம் வாங்குவது முட்டாள்தனம் இல்லையா ?இன்றைக்கு நமது நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் ஊர் விட்டு ஊர் கொண்டு செல்லும் போது வீணாகிறது .மேட்டுக்குடி தொழிலதிபர்களால் திருடப்படுகிறது .இதை தடுக்க வக்கற்ற அரசு இன்னும் மின்சாரம் வேண்டும் என்று மக்களை ஏமாற்றுவது எதற்காக
12.வேறு எங்கிருந்து மின்சாரம் பெறுவது ?
நமது பகுதியிலுள்ள காற்றாலைகளை பாருங்கள் .மனித நலத்திற்கு ஆபத்தின்றி ,சுற்றுசூழலுக்கு பாதிப்பின்றி நமக்கு மின்சாரம் தருகின்றனவே ?இது போல சூரிய ஒளி ,கடல் அலை,,மாட்டுசாணம் ,சமையலறை கழிவுகள் இவற்றிலிருந்தெல்லாம் மின்சாரம் தயாரிக்கலாம் .
13.ஆனால் இவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தானே மின்சாரம் கிடைக்குமாம் ?
இல்லை. இப்போது தமிழ்நாட்டில் காற்றாலை மூலமாக கிடைக்கும் மின்சாரம் மட்டுமே 4657 மெகாவாட் .எதற்கு அணு உலை ?இந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் மக்களுக்கு பெரிய நன்மை பயக்கும் .உண்மை என்னவென்றால் நமது மேட்டுக்குடி தலைவர்களுக்கு பெரிய திட்டங்களில் தானே பெரிய அளவிற்கு கமிஷன் வாங்க முடியும் ,களவு செய்ய முடியும் ?எனவே அவர்கள் சிறிய திட்டங்களை விரும்புவதில்லை .
14.அணு உலை கழிவுகளை என்ன செய்வார்கள் ?
அணு உலைகளிலிருந்து வெளியாகும் கழிவு தனது முழு கதிர் வீச்சு வீரியத்தினை இழக்க 48000 ஆண்டுகள் ஆகும்.எத்தனை தலைமுறைகள் என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் .அதுவரை இந்த நச்சுப்பொருளை ஆழக்குழி தோண்டி அதற்குள்ளே வைத்து விட்டு புதையல் காத்த பூதம் போல் காத்திருக்க வேண்டியதுதான் .
15.இந்த அழிவு புதையல் ஆபத்தானதாக இருக்குமா?
உறுதியாக கழிவு பொருள் தாழிகள் விரிசல் அடையலாம்,உடையலாம் ,கழிந்து நீரோட்டத்தில் கலக்கலாம் .நமது வழித்தோன்றல்கள் கிணறு வெட்ட போகும்போது கதிர் வீச்சு தாக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.நிலத்தடி நீரில் கலந்தால் நாம் குடிக்கும் நீர் விசமாகிவிடும் .
16.அணு உலையிலிருந்து எத்தனை வருடங்கள் மின்சாரம் பெறலாம் ?
எந்த பிரச்சனைகளும் எழாத பட்சத்தில் ,வெறும் நாற்பது வருடங்கள் மட்டுமே மின்சாரம் பெற முடியும்.அணு உலை நூறு வீத அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை .பழுது பார்க்கவும் ,பிரச்சனைகளை சரி செய்யவும் , எரிபொருளை மாற்றவும் ,மிக ஆபத்தான கழிவினை அகற்றவும் உலைகள் அடிக்கடி மூடப்படும் .கூட்டி கழித்து பார்த்தால் ,சுண்டைக்காய் கால் பணம்,சுமைக்கூலி முக்கால் பணம் கதையாகத்தான் இருக்கும் .  
17.நாற்பது வருடங்களுக்கு பிறகு அணுஉலையை என்ன செய்வார்கள்
பெரும் கதிர்வீச்சு ஆபத்தினை உள்ளடக்கி நிற்கும் அணு உலையை கரிச்சட்டி வடிவிலான ஒரு பிரம்மாண்டமான கான்க்ரீட் /உலோக கட்டிடத்தால் அப்படியே மூடி வைத்து பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டியதுதான் .இந்த அணு உலை நிறுத்த உத்திகள் மேல்நாடுகளில் கூட பூரணமாக புரிந்து கொள்ளப்படவில்லை  
18.அணு உலைகளை பயங்கரவாதிகள் தாக்கினால்
கூண்டோடு கைலாசம் !நமது நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் உள்ளன .நாடாளுமன்றம்,பயணிகள் விமானம் ,தொடர்வண்டிகள் ,கடை தெருக்களை தாக்கும் வெறியர்கள் அணு உலையை தாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் .
19.அரசு பாதுகாப்பு தராமலா போய்விடும் ?
மும்பை தாக்குதல்,டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் ,தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் இவற்றிலிருந்தெல்லாம் அரசு நம்மை பாதுகாத்ததா ? மத கலவரம் ,சாதி கலவரம்  இவற்றிலிருந்தெல்லாம் அரசு நம்மை பாதுகாக்கிறதா?இந்த அரசு சுனாமி வந்த போது எப்படி உதவியது என்று பார்த்தீர்கள் அல்லவா?இப்போது வந்த தானே புயலினால் நடந்த அழிவினை கூட இவர்களால் சரி செய்ய முடியவில்லை.
20.அணு உலைக்கும் அணுகுண்டு தயாரிப்புக்கும் சம்பந்தம் உண்டா?
நிச்சயமாக .அணுகுண்டு தயாரிக்க தேவையான ப்ளுடோனியம் அணு உலைகளிலிருந்துதான் கிடைகிறது அணு உலையை கொண்டு வர துடிப்பது பல லட்சம் மக்கள் உயிரினை பறிக்கும் அணு குண்டின் மீது உள்ள வெறியினால்தான்.
21.அணுகுண்டு இருந்தால்தானே இந்தியா வல்லரசாக முடியும் ?
இந்திய வல்லரசாக வேண்டுமென்பதை விட நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே நியாயமானது.இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் சீனா ,ரஷ்யா,அமெரிக்கா போன்ற நாடுகள் அளவிற்கு அணுகுண்டுகளும்,ஏவுகணைகளும் பல லட்சம் கோடி செலவு செய்து ஆயுதங்கள் வாங்க வேண்டும்.இந்த அழிவு பொருட்களில் நமது பணம் அத்தனையும் பாழானால் ,நமது நாட்டிலுள்ள 60 கோடி ஏழை மக்கள் பட்டினியால் செத்துப்போகும் அவல நிலை எழும் .எது வல்லரசு ?எல்லோரும் எல்லாமும் பெற்ற நாடா?அல்லது அந்நிய மக்களை அநியாயமாக கொல்லும் ஆணவமுற்ற நாடா?வல்லரசல்ல,நல்லரசுதான் நமது தேவை .வீணாக ஏமாந்து விடாதீர்கள். 
22.அணு சக்தி துறை பெரும் சக்தி வாய்ந்த ஒன்றாயிற்றே ?
ஆமாம்.கோடானுகோடி பணத்தை விழுங்கி ஏப்பமிட்டு,வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காண்பிக்காது நாடாளுமன்றத்தில் கூட எந்த கேள்விகளுக்கும் ஆட்படாது ,தனிகாட்டு ராஜாவாக திரியும் இந்த துறை மதிய அரசின் செள்ளபில்லைதான்.தேசிய பாதுகாப்பு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு , தான்தோன்றித்தனமாய் திரிவதும் உண்மைதான் .
23.நமக்கேன் வம்பு ?
அப்படி காந்தியும் ,நேருவும்,நேதாஜியும் ,பகத் சிங்கும் ,காமராசரும் கணக்கற்ற சுதந்திர போராட்ட வீர்களும் இருந்திருந்தால் ,நாம் இன்றும் அடிமைகளாகவே இருந்திருப்போம் .நமது குழந்தைகளும் ,பேரக்குழந்தைகளும் கதிர்வீச்சு நோய்களாலும் ,அணு சக்தி கழிவுகளாலும் ,அணு ஆயுத போரினாலும் அல்லலுறும் போது ,நமது பெற்றோரும் ,முன்னோரும் இந்த அநியாயத்தை,அழிவை அனுமதித்துச் சென்றுள்ளார்களே என்று நம்மைத் தூற்றுவார்கள் ,சபிப்பார்கள் ,சங்கடப்படுவார்கள் .
24.நம்மால் என்னதான் செய்ய முடியும் ?
பொது சொத்துக்கும் ,தனியார் சொத்துக்கும் சேதம் விளைவிக்காமல் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் போன்றோரை தாக்காமல் ,அகிம்சை வழியில் போராடலாம் 
25.அகிம்சை வழி என்றால் என்ன
வன்முறையில் ஈடுபடாமல் ,எதிர்தரப்பு நம்மை சீண்டினாலும் ,தூண்டினாலும் அவர்கள் விரிக்கும் வலைக்குள் விழாது ,நம்மை நாமே வருத்தி கொண்டு புத்தரும் ,மகாவீரரரும் ,யேசுபிரானும் ,நபிகள் நாயகமும்,அய்யா வைகுண்டரும் ,சிங்காரவேலரும் ,அம்பேத்கரும்,காந்தியும் ,காமராசரும் காட்டிய அறவழியில் தயங்காது ,கலங்காது ,தொடர்ந்து சத்தியாக்ரகத்தில் ஈடுபடுவதே அகிம்சை 
26.அரசு வன்முறையில் இறங்கினால் என்ன செய்வது
அரசு தன்னுடைய அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்யலாம்.நமக்குள் சாதி ,மத பிரிவுகளை உருவாக்க முயற்சி செய்யலாம்.அடியாட்கள் மூலம் நமக்குள் பிரச்சினைகளை எழச் செய்யலாம் .மிரட்டியோ ,பயமுறுத்தியோ ,வீடுகளில் சோதனை செய்தோ,நம்மை தடுக்க எத்தனிக்கலாம் .இந்த மாதிரி சூழ்ச்சிகளில் வீழ்ந்து விடாது ,நமது தோழர்களிடம் உடனடியாக தகவல்களை பரிமாறிக்கொண்டு ,துஷ்டர்களிடமிருந்து தூர விலகி ,நமது குறிக்கோளை நோக்கி துணிச்சலோடு தொடர்ந்து செல்வதுதான் ஒரே வழி .
27.அரசின் கைக்கூலிகள் அவதூறுகளை கிளப்பி விட்டால் என்ன செய்வது ?
கூடங்குளம் அணு உலையில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சில அரசியல் பிரமுகர்கள் நமக்கு அமெரிக்காவிலிருந்து ஏராளமான பணம் வருகிறது என்கிறார்கள் .எந்தவிதமான ஆதாரமின்றி இத்தகைய வதந்திகளையும் ,பொய்களையும் பரப்பி நம்மை செயலிழக்க செய்ய முயல்வார்கள் .நாட்டின் கனிம வளங்களை சுரண்டி விற்று பலகோடி கணக்கில் பணம் அள்ளுபவர்கள் தங்களை போலவே அனைவரையும் திருடர்கள் என நினைக்கிறார்கள் .மடியில் கனமில்லாத நமக்கு,வழியில் எந்த பயமும் தேவை இல்லை .
28.என்னென்ன போராட்டங்கள் நடத்தலாம்
கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடும் வரை நமக்கு தினமும் போராட்டம்தான் என்ற நிலையினை மேற்கொள்வோம் ,வீட்டுலுள்ளோரிடமும்,வீதியிலுள்ளோரிடமும் ,பணியிடங்களிலுள்ளோரிடமும் இந்த உலைகள் பற்றி பேசுவோம்.இவற்றின் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம் .பல்வேறு இயக்கங்கள் நடத்துகின்ற உண்ணாவிரதப் போராட்டம் ,பேரணிகள் ,பொது கூட்டங்களில் திரளாக கலந்து கொள்வோம்.
29.போராட்டங்களில் ஆண்கள் ,பெண்கள் பங்கு என்னவாக இருக்கும் ?
மதுபானங்கள் குடிக்காது,போதைக்கு அடிமையாகாது .நிதானமாக சிந்தித்து செயல்படுபவர்கள் என்பதால் முடிந்தவரை பெண்களை போராட்டங்களில் அதிகமாக ஈடுபடுத்தலாம் .ஆண்கள் பொறுப்புடனும், ஆண்கள் பொறுப்புடனும் ,கடமையுணர்வுடன் பெண்களுக்கு உறுதுணையாக செயல்படலாம் .
30.உடனடியாக என்ன செய்ய வேண்டும் ?
ஒத்த கருத்து கொண்டோரிடம் கலந்து பேசி ,உடனடியாக உங்கள் ஊரில் அணுஉலை எதிர்ப்பு குழு ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள் .
உங்களால் இயன்ற பொருளுதவி செய்து,பொதுமக்களிடம் நிதி திரட்டி ,துண்டு பிரசுரங்கள் ,சுவரொட்டிகள் தயாரித்து விநியோகிங்கள்.
தெருமுனை கூட்டங்கள்,வாகன பிரச்சாரம் ,இளைஞர்களுக்கான பயிலரங்கம் ,பயிற்சி பட்டறை போன்றவற்றை நடத்துங்கள் .
உங்கள் பெயர்கள் ,தொலைபேசி எண்களை எமக்கு தாருங்கள் .
இந்நிகழ்வுகளில் உங்களோடு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் .
நம் போன்ற இயக்கங்கள் நடத்தும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் உங்கள் ஊர் மக்கள் திரளாக கலந்து கொள்ள ஆவன செய்யுங்கள்.
உங்கள் கிராம சபைகூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தகோரி தீர்மானம் நிறைவேற்றி ,உரிய அதிகாரிகட்கும் ,ஆட்சியாளர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
உங்கள் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடம்,அரசியல்வாதிகளிடமும் ,அரசு அதிகாரிகளிடமும் நமது தரப்பு வாதங்களை எடுத்து சொல்லி கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தினை தடுத்து நிறுத்திட ஆதரவு கேளுங்கள் .    
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.