புதன், பிப்ரவரி 22, 2012

கூடங்குளம் அணு மின் நிலையம் 30 கேள்விகள் ? பதில்கள் !


1.கூடங்குளத்தில் என்ன நடக்கிறது
1000 மின்சாரம் தயாரிக்கும் இரண்டு ருசிய அணு உலைகள் நிறுவப்படுகின்றன .1988-ஆம் ஆண்டு ரூபாய் 6000 கோடி செலவாகும் என்றார்கள் .1997 -ஆம் ஆண்டு 17000 கோடி வரை செலவாகும் என்றார்கள் .தற்போதைய செலவு விபரங்கள் யாருக்கும் தெரியாது.இந்த திட்டத்திற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கவோ ,சுற்று சூழல் தாக்க அறிக்கையினை பகிர்ந்து கொள்ளவோ செய்யாத நிலையில் மேலும் 4 அணு உலைகள் நிறுவவும் முயற்சி நடந்து வருகிறது .இதன் செலவு ருபாய் 55000 கோடி என்கிறார்கள்.இதற்கான கருத்து கேட்பு கூட்டம் சூன் 2 ,2007 அன்று அரசு விதிகளை மதிக்காது அய்யோக்கியதனமாக நடத்தி முடிக்கப்பட்டது . 

2.இதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்
தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் மக்கள் கருத்து கேட்கும் விளம்பரங்களில் ,ஊரை விட்டு இடப்பெயர்ச்சி செய்வது முதல் பாதிப்பு .திருநெல்வேலி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் ,உண்ணும் உணவிலும்,குடிக்கும் நீரிலும் ,வாழ்வாதாராமான கடலிலும் ,நிலத்திலும் கதிரியக்கப் பொருட்களால் விஷம் கலந்து புற்று நோய் முதல் பல்வேறு நோய்கள் எழும் ,உடல் ஊனமுற்ற ,மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கும் .நாளடைவில் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்ப்பட்டு எதிர்கால சந்ததிகளே உருக்குலைந்து போகும்.
3.இவ்வளவு தீங்கு இருக்கும் திட்டத்தை அரசு எப்படி கொண்டு வரும்
நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை என்பதால் அணுஉலைகளை வளர்ச்சித் திட்டங்களாக கருதுகிறது அரசு .நாடு முன்னேற ஐந்தாறு மாவட்டங்களில் உள்ள மக்கள் அழிவது தவறல்ல என்ற மனப்பாங்கே இந்த வளர்ச்சி சித்தாந்தத்தில் மேலோங்கி நிற்கிறது .
4.முதல் இரண்டு அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இனி நிறுத்த முடியமா
உறுதியாக முடியும் .உலகின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடக்கும் போதோ ,அல்லது நடந்து முடிந்த பிறகோ ,பல அணு உலைகள் மூடப்பட்டுள்ளன .

  
அணு உலை                                        
நாடு    
மூடப்பட்ட நிலை
ரோச்டோவ்      
ரஷ்யா 
90 சதவீத வேலைகள் முடிந்திருந்த நிலையில்                        பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக 1997           -இல் நிறுத்தப்பட்டது .
மொச்சொவ்சீ
ஸ்லோவாகியா   
1994 டிசம்பரில் ஐரோப்பா முழுவதும் மக்கள் பலமாக எதிர்த்ததால் 1995 மார்ச் மாதம் அரசு ரத்து  செய்தது .
பட்டான்
பிலிப்பைன்ஸ் 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .

ஸ்வட்டண்டார்ப்   
ஆஸ்திரியா 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
என்லியாவோ  
தைவான்  
96 .2 சதவீத மக்கள் எதிராக வாக்களித்ததால் ,1994 -ஆம் இரண்டு அணுஉலை வேலைகள்  நிறுத்தப்பட்டன

2011 -ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு வாக்காளர்கள் அணுசக்தி திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.பெல்ஜியம் தனது அணு உலைகளை படிப்படியாக மூடிவிடுவதாக அறிவித்துள்ளது .கடந்த 35 வருடங்களாக அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் புதிய அணுஉலைகள் கட்டப்படவில்லை. 
5.அணு உலைகள் நிறுத்தப்பட்ட நாடுகளில் பண்பட்ட அரசுகள் இருந்தன .ஆனால் நமது நாட்டில் ?
நமது நாடும் சனநாயக நாடுதான் .ஆளும் வர்க்கத்தின் நலத்திற்காகவே மத்திய,மாநில அரசுகள் இயங்கினாலும் ,பொதுமக்களாகிய நாம் அனைவரும் சாதி ,மத பேதமின்றி ஒட்டுமொத்தமாக ஒன்றாய் நின்று எதிர்க்கும் பட்சத்தில் அணு உலைகளை நிறுத்த முடியும் .
6.ஏகப்பட்ட பணம் செலவு செய்தாயிற்றே
ஒரு மத்திய அமைச்சரால் ஒரு லட்சத்து எழுபதைந்தாயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது .சேது சமுத்திரம் திட்டத்தில் கடலுக்குள் கால்வாய் வெட்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நாசம் செய்யப்பட்டதே? ஏராளமான செலவு செய்த பிறகு  திட்டங்களை ரத்து செய்வதும் ,ஒத்தி போடுவதும் புதிதல்ல .மீன் பிடித்தொழிலினால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை மீனவ மக்கள் ஏற்ப்படுத்திக் கொடுக்கிறார்கள் .கூடங்குளத்தில் ஆகியிருக்கும் செலவை எளிதில் ஈடுகட்டி விட முடியும் 
7.இத்தனை கட்டிடங்களை கட்டி ஆகி விட்டதே
கூடங்குளத்தில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்றையோ அல்லது கடல் சார் பல்கலைகழகம் ஒன்றையோ அமைக்கலாம் .அணு உலை கட்டிடங்களில் கோளரங்கம் போன்ற அறிவியல் கல்வி மேம்பாட்டு திட்டங்களை நிறுவலாம் .இங்கே வேலை செய்பவர்களுக்கான தங்கும் விடுதியாக செட்டிகுளம் நகரிய கட்டிடங்களை உபயோகிக்கலாம் .
8.அணு மின் நிலையங்களில் எத்தனையோ பேர் வேலை செய்தானே செய்கிறார்கள் ?
நள்ளிரவில் சுடுகாட்டில் பிணம் எரிப்பது வெட்டியானுக்கு வேலை .பல்வேறு காரணங்களால்  சூழ்நிலைகளால் அந்த வேலையை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் .ஆனால் அது அவருக்கு பல நோய்களையும் ,இழிவையும் தருகிறது .அவரது வாழ்விற்கு வேறு வழி தெரியாததால் அதனை செய்கிறார்.அணு உலைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடையே ,அவர்கள் குடும்பத்தினர்களிடையே பல்வேறு கொடிய நோய்களும் உபாதைகளும்  இருப்பது முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது .நாளடைவில் உடலில் ஏற்ப்படும் மாற்றங்களை ,நோய்களை இந்த ஊழியர்களோ ,அணுசக்தி துறையோ சரிவர தேர்வதும் இல்லை ,தெளிவதும் இல்லை . 
9.அணு உலையின் மிக ஆபத்தான மையப்பகுதியில் கூட ஆட்கள் வேலை செய்யத்தானே செய்கிறார்கள்?
ஆமாம்.இந்த வேலைகளை செய்பவர்கள் பெரும்பாலும் ஊர் பேர் தெரியாத கான்ட்ராக்ட் வேலையாட்கள் .இவர்களை ஒளிரும் அடிமைகள் என்று குறிப்பிடுவார்கள்.ஏராளமான கதிர்வீச்சுக்கு ஆளாகி,வாழ்கையை தொலைத்துவிட்ட இவர்களை ஆபத்தான வேலை முடிந்தவுடன் சப்தமின்றி ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் .
10.அணு மின் நிலைய ஊழியர்கள் வசிக்கும் டவுன்ஷிப் அணு உலை அருகில்தானே இருக்கிறது ?
அணு உலையால் எந்த வித பாதிப்பும் இல்லையென்றால் ஊழியர்களை அணு உலை வளாகத்துக்குள்ளேயே தங்க வைக்கலாமே?ஏன் 8 -10 கீ.மீ தூரத்துக்கு அப்பால் கொண்டு போக வேண்டும் ?இந்த டவுன்ஷிப்பில் இடை நிலை கடை நிலை ஊழியர்கள்தானே வசிக்கின்றனர்.மிக உயர்ந்த நிலை அதிகாரிகள் இங்கே வந்து வசிப்பார்களா?பிற அணு உலைகளின் டவுன்ஷிப்களில் வசிக்கும் ஊழியர்கள் தம்மில் பற்பல கதிர்வீச்சு நோய்கள் நிலவும் உண்மை கண்டுபிடிக்கபட்டிருக்கிறதே
11.வளர்ந்து வரும் நமது நாட்டுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறதே ?
உண்மைதான் நமது நல்வாழ்வுக்குதான் மின்சாரமே தவிர மின்சாரத்திற்காக நமது வாழ்க்கையல்ல .கண்களை விற்று சித்திரம் வாங்குவது முட்டாள்தனம் இல்லையா ?இன்றைக்கு நமது நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் ஊர் விட்டு ஊர் கொண்டு செல்லும் போது வீணாகிறது .மேட்டுக்குடி தொழிலதிபர்களால் திருடப்படுகிறது .இதை தடுக்க வக்கற்ற அரசு இன்னும் மின்சாரம் வேண்டும் என்று மக்களை ஏமாற்றுவது எதற்காக
12.வேறு எங்கிருந்து மின்சாரம் பெறுவது ?
நமது பகுதியிலுள்ள காற்றாலைகளை பாருங்கள் .மனித நலத்திற்கு ஆபத்தின்றி ,சுற்றுசூழலுக்கு பாதிப்பின்றி நமக்கு மின்சாரம் தருகின்றனவே ?இது போல சூரிய ஒளி ,கடல் அலை,,மாட்டுசாணம் ,சமையலறை கழிவுகள் இவற்றிலிருந்தெல்லாம் மின்சாரம் தயாரிக்கலாம் .
13.ஆனால் இவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தானே மின்சாரம் கிடைக்குமாம் ?
இல்லை. இப்போது தமிழ்நாட்டில் காற்றாலை மூலமாக கிடைக்கும் மின்சாரம் மட்டுமே 4657 மெகாவாட் .எதற்கு அணு உலை ?இந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் மக்களுக்கு பெரிய நன்மை பயக்கும் .உண்மை என்னவென்றால் நமது மேட்டுக்குடி தலைவர்களுக்கு பெரிய திட்டங்களில் தானே பெரிய அளவிற்கு கமிஷன் வாங்க முடியும் ,களவு செய்ய முடியும் ?எனவே அவர்கள் சிறிய திட்டங்களை விரும்புவதில்லை .
14.அணு உலை கழிவுகளை என்ன செய்வார்கள் ?
அணு உலைகளிலிருந்து வெளியாகும் கழிவு தனது முழு கதிர் வீச்சு வீரியத்தினை இழக்க 48000 ஆண்டுகள் ஆகும்.எத்தனை தலைமுறைகள் என்று நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள் .அதுவரை இந்த நச்சுப்பொருளை ஆழக்குழி தோண்டி அதற்குள்ளே வைத்து விட்டு புதையல் காத்த பூதம் போல் காத்திருக்க வேண்டியதுதான் .
15.இந்த அழிவு புதையல் ஆபத்தானதாக இருக்குமா?
உறுதியாக கழிவு பொருள் தாழிகள் விரிசல் அடையலாம்,உடையலாம் ,கழிந்து நீரோட்டத்தில் கலக்கலாம் .நமது வழித்தோன்றல்கள் கிணறு வெட்ட போகும்போது கதிர் வீச்சு தாக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.நிலத்தடி நீரில் கலந்தால் நாம் குடிக்கும் நீர் விசமாகிவிடும் .
16.அணு உலையிலிருந்து எத்தனை வருடங்கள் மின்சாரம் பெறலாம் ?
எந்த பிரச்சனைகளும் எழாத பட்சத்தில் ,வெறும் நாற்பது வருடங்கள் மட்டுமே மின்சாரம் பெற முடியும்.அணு உலை நூறு வீத அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை .பழுது பார்க்கவும் ,பிரச்சனைகளை சரி செய்யவும் , எரிபொருளை மாற்றவும் ,மிக ஆபத்தான கழிவினை அகற்றவும் உலைகள் அடிக்கடி மூடப்படும் .கூட்டி கழித்து பார்த்தால் ,சுண்டைக்காய் கால் பணம்,சுமைக்கூலி முக்கால் பணம் கதையாகத்தான் இருக்கும் .  
17.நாற்பது வருடங்களுக்கு பிறகு அணுஉலையை என்ன செய்வார்கள்
பெரும் கதிர்வீச்சு ஆபத்தினை உள்ளடக்கி நிற்கும் அணு உலையை கரிச்சட்டி வடிவிலான ஒரு பிரம்மாண்டமான கான்க்ரீட் /உலோக கட்டிடத்தால் அப்படியே மூடி வைத்து பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டியதுதான் .இந்த அணு உலை நிறுத்த உத்திகள் மேல்நாடுகளில் கூட பூரணமாக புரிந்து கொள்ளப்படவில்லை  
18.அணு உலைகளை பயங்கரவாதிகள் தாக்கினால்
கூண்டோடு கைலாசம் !நமது நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் உள்ளன .நாடாளுமன்றம்,பயணிகள் விமானம் ,தொடர்வண்டிகள் ,கடை தெருக்களை தாக்கும் வெறியர்கள் அணு உலையை தாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் .
19.அரசு பாதுகாப்பு தராமலா போய்விடும் ?
மும்பை தாக்குதல்,டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் ,தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் இவற்றிலிருந்தெல்லாம் அரசு நம்மை பாதுகாத்ததா ? மத கலவரம் ,சாதி கலவரம்  இவற்றிலிருந்தெல்லாம் அரசு நம்மை பாதுகாக்கிறதா?இந்த அரசு சுனாமி வந்த போது எப்படி உதவியது என்று பார்த்தீர்கள் அல்லவா?இப்போது வந்த தானே புயலினால் நடந்த அழிவினை கூட இவர்களால் சரி செய்ய முடியவில்லை.
20.அணு உலைக்கும் அணுகுண்டு தயாரிப்புக்கும் சம்பந்தம் உண்டா?
நிச்சயமாக .அணுகுண்டு தயாரிக்க தேவையான ப்ளுடோனியம் அணு உலைகளிலிருந்துதான் கிடைகிறது அணு உலையை கொண்டு வர துடிப்பது பல லட்சம் மக்கள் உயிரினை பறிக்கும் அணு குண்டின் மீது உள்ள வெறியினால்தான்.
21.அணுகுண்டு இருந்தால்தானே இந்தியா வல்லரசாக முடியும் ?
இந்திய வல்லரசாக வேண்டுமென்பதை விட நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே நியாயமானது.இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் சீனா ,ரஷ்யா,அமெரிக்கா போன்ற நாடுகள் அளவிற்கு அணுகுண்டுகளும்,ஏவுகணைகளும் பல லட்சம் கோடி செலவு செய்து ஆயுதங்கள் வாங்க வேண்டும்.இந்த அழிவு பொருட்களில் நமது பணம் அத்தனையும் பாழானால் ,நமது நாட்டிலுள்ள 60 கோடி ஏழை மக்கள் பட்டினியால் செத்துப்போகும் அவல நிலை எழும் .எது வல்லரசு ?எல்லோரும் எல்லாமும் பெற்ற நாடா?அல்லது அந்நிய மக்களை அநியாயமாக கொல்லும் ஆணவமுற்ற நாடா?வல்லரசல்ல,நல்லரசுதான் நமது தேவை .வீணாக ஏமாந்து விடாதீர்கள். 
22.அணு சக்தி துறை பெரும் சக்தி வாய்ந்த ஒன்றாயிற்றே ?
ஆமாம்.கோடானுகோடி பணத்தை விழுங்கி ஏப்பமிட்டு,வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காண்பிக்காது நாடாளுமன்றத்தில் கூட எந்த கேள்விகளுக்கும் ஆட்படாது ,தனிகாட்டு ராஜாவாக திரியும் இந்த துறை மதிய அரசின் செள்ளபில்லைதான்.தேசிய பாதுகாப்பு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு , தான்தோன்றித்தனமாய் திரிவதும் உண்மைதான் .
23.நமக்கேன் வம்பு ?
அப்படி காந்தியும் ,நேருவும்,நேதாஜியும் ,பகத் சிங்கும் ,காமராசரும் கணக்கற்ற சுதந்திர போராட்ட வீர்களும் இருந்திருந்தால் ,நாம் இன்றும் அடிமைகளாகவே இருந்திருப்போம் .நமது குழந்தைகளும் ,பேரக்குழந்தைகளும் கதிர்வீச்சு நோய்களாலும் ,அணு சக்தி கழிவுகளாலும் ,அணு ஆயுத போரினாலும் அல்லலுறும் போது ,நமது பெற்றோரும் ,முன்னோரும் இந்த அநியாயத்தை,அழிவை அனுமதித்துச் சென்றுள்ளார்களே என்று நம்மைத் தூற்றுவார்கள் ,சபிப்பார்கள் ,சங்கடப்படுவார்கள் .
24.நம்மால் என்னதான் செய்ய முடியும் ?
பொது சொத்துக்கும் ,தனியார் சொத்துக்கும் சேதம் விளைவிக்காமல் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் போன்றோரை தாக்காமல் ,அகிம்சை வழியில் போராடலாம் 
25.அகிம்சை வழி என்றால் என்ன
வன்முறையில் ஈடுபடாமல் ,எதிர்தரப்பு நம்மை சீண்டினாலும் ,தூண்டினாலும் அவர்கள் விரிக்கும் வலைக்குள் விழாது ,நம்மை நாமே வருத்தி கொண்டு புத்தரும் ,மகாவீரரரும் ,யேசுபிரானும் ,நபிகள் நாயகமும்,அய்யா வைகுண்டரும் ,சிங்காரவேலரும் ,அம்பேத்கரும்,காந்தியும் ,காமராசரும் காட்டிய அறவழியில் தயங்காது ,கலங்காது ,தொடர்ந்து சத்தியாக்ரகத்தில் ஈடுபடுவதே அகிம்சை 
26.அரசு வன்முறையில் இறங்கினால் என்ன செய்வது
அரசு தன்னுடைய அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்யலாம்.நமக்குள் சாதி ,மத பிரிவுகளை உருவாக்க முயற்சி செய்யலாம்.அடியாட்கள் மூலம் நமக்குள் பிரச்சினைகளை எழச் செய்யலாம் .மிரட்டியோ ,பயமுறுத்தியோ ,வீடுகளில் சோதனை செய்தோ,நம்மை தடுக்க எத்தனிக்கலாம் .இந்த மாதிரி சூழ்ச்சிகளில் வீழ்ந்து விடாது ,நமது தோழர்களிடம் உடனடியாக தகவல்களை பரிமாறிக்கொண்டு ,துஷ்டர்களிடமிருந்து தூர விலகி ,நமது குறிக்கோளை நோக்கி துணிச்சலோடு தொடர்ந்து செல்வதுதான் ஒரே வழி .
27.அரசின் கைக்கூலிகள் அவதூறுகளை கிளப்பி விட்டால் என்ன செய்வது ?
கூடங்குளம் அணு உலையில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சில அரசியல் பிரமுகர்கள் நமக்கு அமெரிக்காவிலிருந்து ஏராளமான பணம் வருகிறது என்கிறார்கள் .எந்தவிதமான ஆதாரமின்றி இத்தகைய வதந்திகளையும் ,பொய்களையும் பரப்பி நம்மை செயலிழக்க செய்ய முயல்வார்கள் .நாட்டின் கனிம வளங்களை சுரண்டி விற்று பலகோடி கணக்கில் பணம் அள்ளுபவர்கள் தங்களை போலவே அனைவரையும் திருடர்கள் என நினைக்கிறார்கள் .மடியில் கனமில்லாத நமக்கு,வழியில் எந்த பயமும் தேவை இல்லை .
28.என்னென்ன போராட்டங்கள் நடத்தலாம்
கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடும் வரை நமக்கு தினமும் போராட்டம்தான் என்ற நிலையினை மேற்கொள்வோம் ,வீட்டுலுள்ளோரிடமும்,வீதியிலுள்ளோரிடமும் ,பணியிடங்களிலுள்ளோரிடமும் இந்த உலைகள் பற்றி பேசுவோம்.இவற்றின் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம் .பல்வேறு இயக்கங்கள் நடத்துகின்ற உண்ணாவிரதப் போராட்டம் ,பேரணிகள் ,பொது கூட்டங்களில் திரளாக கலந்து கொள்வோம்.
29.போராட்டங்களில் ஆண்கள் ,பெண்கள் பங்கு என்னவாக இருக்கும் ?
மதுபானங்கள் குடிக்காது,போதைக்கு அடிமையாகாது .நிதானமாக சிந்தித்து செயல்படுபவர்கள் என்பதால் முடிந்தவரை பெண்களை போராட்டங்களில் அதிகமாக ஈடுபடுத்தலாம் .ஆண்கள் பொறுப்புடனும், ஆண்கள் பொறுப்புடனும் ,கடமையுணர்வுடன் பெண்களுக்கு உறுதுணையாக செயல்படலாம் .
30.உடனடியாக என்ன செய்ய வேண்டும் ?
ஒத்த கருத்து கொண்டோரிடம் கலந்து பேசி ,உடனடியாக உங்கள் ஊரில் அணுஉலை எதிர்ப்பு குழு ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள் .
உங்களால் இயன்ற பொருளுதவி செய்து,பொதுமக்களிடம் நிதி திரட்டி ,துண்டு பிரசுரங்கள் ,சுவரொட்டிகள் தயாரித்து விநியோகிங்கள்.
தெருமுனை கூட்டங்கள்,வாகன பிரச்சாரம் ,இளைஞர்களுக்கான பயிலரங்கம் ,பயிற்சி பட்டறை போன்றவற்றை நடத்துங்கள் .
உங்கள் பெயர்கள் ,தொலைபேசி எண்களை எமக்கு தாருங்கள் .
இந்நிகழ்வுகளில் உங்களோடு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் .
நம் போன்ற இயக்கங்கள் நடத்தும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் உங்கள் ஊர் மக்கள் திரளாக கலந்து கொள்ள ஆவன செய்யுங்கள்.
உங்கள் கிராம சபைகூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தகோரி தீர்மானம் நிறைவேற்றி ,உரிய அதிகாரிகட்கும் ,ஆட்சியாளர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
உங்கள் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடம்,அரசியல்வாதிகளிடமும் ,அரசு அதிகாரிகளிடமும் நமது தரப்பு வாதங்களை எடுத்து சொல்லி கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தினை தடுத்து நிறுத்திட ஆதரவு கேளுங்கள் .    
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

6 கருத்துகள்:

இருதயம் சொன்னது…

கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு

http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_02.html



உங்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலை தனியாக ஒரு இடுகை இட விரும்புகிறேன் . நண்பர்களே .... நன்றி

இருதயம் சொன்னது…

பூவுலகின் நண்பர்களே ,,,,

உங்களின் கட்டுரை மிகவும் தவறானதாக இருக்கிறது . உதாரனத்திற்க்கு சில காரியங்களை நான் சொல்லுகிறேன் ...

கேள்வி 4 : ரோச்டோவ் , ரஷ்யா அணுமின் நிலையம் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்டு உள்ளது என்று பொய் சொல்லுகிறீர்கள் . இந்த அணுமின் நிலையம் 1977 ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு 2001 ம் வருடம் இயங்க ஆரம்பித்து விட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Rostov_Nuclear_Power_Plant

அதே போல மொச்சொவ்சீ , ஸ்லோவாகியா அணுமின் நிலையம் மக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்டு உள்ளது என்று தவறான தகவலை சொல்லி உள்ளீர்கள் . முதல் யூனிட் 1998 ம் வருடத்திலும் , இரண்டாம் யூனிட் 2000 ம் வருடத்திலும் இயங்க ஆரமித்து விட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Mochovce_Nuclear_Power_Plant

உங்களை போன்ற பதிவர்கள் இந்த மாதிரி தவறான தகவலை சொல்லி மக்களை திசை திருப்புவதை தயை கூர்ந்து நிறுத்துங்கள் . நன்றி

இருதயம் சொன்னது…

பூவுலகின் நண்பர்களே ,,,,

உங்களின் கட்டுரை மிகவும் தவறானதாக இருக்கிறது . உதாரனத்திற்க்கு சில காரியங்களை நான் சொல்லுகிறேன் ...

கேள்வி 10 ; அணுமின் நிலைய குடியிருப்பு 8 - 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது எனவும் , கடை நிலை ஊழியர்கள் மாத்திரம் தான் அங்கு வசிக்கிறார்கள் என்று தவறான தகவலோ சொல்லி உள்ளீர்கள் ..

அணுமின் நிலைய குடியிருப்பு சரியாக 6 KM தொலைவில் ( ரோட்டில் ) உள்ளது . நேர்க்கோட்டில் பார்த்தல் 4 KM இருக்கலாம் . அந்த குடியிருப்பில் தான் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் , ரஷ்யா விஞ்ஞானிகள் அனைவரும் குடியிருக்கிராகள் என்பதை அணுமின் நிலயத்திற்கு எதிராக பதிவிடும் நண்பர் ரேவரி கூட சொல்லி உள்ளார்

உங்களை போன்ற பதிவர்கள் இந்த மாதிரி தவறான தகவலை சொல்லி மக்களை திசை திருப்புவதை தயை கூர்ந்து நிறுத்துங்கள் . நன்றி

இருதயம் சொன்னது…

பூவுலகின் நண்பர்களே ,,,,

உங்களின் கட்டுரை ஆக்கப்பூர்வமாக சிந்திக்காமல் , அணுமின் நிலையத்தை குறித்த தவறான தகவல்களை கூறி மக்களை போராட தூண்டும் வகையில் தான் இருக்கிறது . நீங்கள் சமூகத்திற்கு நன்மை செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை , தயை கூர்ந்து கெடுதல் செய்யாதீர்கள் .

நன்றி

kathiravan சொன்னது…

அணு உலையின் தீமைகளை பற்றி நன்றாக சொன்னீர்கள் ஆனால் எனக்கு ஒர் ஐயம். இத்தனை மாதங்களாக எங்கு போயிருந்தீர்கள்? இப்பொழுதான் அணுவின் தீமைகள் பற்றி தெரிந்ததா? அல்லது மக்களின் பணம் தானே வீணாக போகட்டும் பின்னர் சொல்லி கொள்ளலாம் என்று நினைதுவிட்டீர்களோ?

Sundararajan P சொன்னது…

நண்பர் கதிரவன் அவர்களுக்கு,

கூடங்குளம் அணுஉலை குறித்து அறிவிப்பு வெளியான உடனேயே அதற்கான எதிர்ப்பும் தொடங்கி வி்ட்டது. அப்போது ஊடகங்கள் அதிக அளவில் இல்லாததால் திருநெல்வேலிக்கு வெளியே வாழ்பவர்களுக்கு இந்த போராட்டங்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தற்போது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உடகப்பெருக்கம் காரணமாக இந்த போராட்டம் அனைவருக்கும் தெரிகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவில் உள்ள மற்ற பதிவுகளையும் படியுங்கள். :)

கருத்துரையிடுக