புதன், நவம்பர் 28, 2012

தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறோம்! தற்காப்புக்காக மனித உரிமை நாளில் சாலை மறியல்!!



போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
நவம்பர் 27, 2012
பத்திரிகைச் செய்தி

தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறோம்!
தடுத்துக் காத்திட டிசம்பர் 10, 2012 அன்று சாலை மறியல்!!

கூடங்குளம் பிரச்சினை மக்கள் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிற்கிறது. வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை எங்கே வைத்து பாதுக்காக்கப் போகிறீர்கள் என்று கேட்டனர். இந்திய சாலிசிட்டர் ஜெனரல் திரு. ரோகித் நரிமன் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பழையச் சுரங்கங்களில் வைப்போம் என்றார். அது அவராகவே கற்பனை செய்து சொன்னதல்ல. இந்திய அணுமின் கழகத்தின் இயக்குனர் (Executive Director of NPCIL) திரு அசோக் சவுகான் நவம்பர் 7, 2012 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணம் இதைத் தெளிவாகச் சொல்கிறது.

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1964-ம் ஆண்டு  கோலாரில் நியூட்ரினோ திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து, 1992-ம் ஆண்டு அதை மூடிவிட்டார்கள். அந்த சுரங்கத்தில்தான் இப்போது கூடங்குளக் கழிவுகளை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியக் கழிவுகளை வைப்பதாக திட்டமிடுகிறார்கள். வழக்கம் போல, அணுசக்தித் துறை உள்ளூர் மக்களிடமோ, அந்த மாநில அரசிடமோ எந்தக் கலந்தாலோசனையும் நடத்தவில்லை, எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.

இந்த அறிவிப்பு வந்ததும் வராததுமான நிலையிலேயே, கோலார் திட்டத்துக்கு கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. கூடங்குளம் மக்களை, ஒட்டுமொத்த தமிழர்களை, ஓர வஞ்சனையோடு நடத்தும் மத்திய அரசும், அணுசக்தித் துறையும் உடனடியாக இதை மறுக்கிறார்கள். அணுசக்தித் துறை செய்தித் தொடர்பாளர் திரு. எஸ். கே. மல்கோத்ரா இப்படி ஒரு திட்டமே கிடையாதுஎன்று அடித்துச் சொல்கிறார். அமைச்சர் நாராயணசாமி இந்தியாவிலே எங்கேயும் புதைக்கமாட்டோம் என்று சத்தியம் செய்கிறார். நான் இந்திய அணுமின் கழகத் தலைவரிடம் பேசினேன்; அவர் கழிவுகளை எங்கேயும் புதைக்கும் திட்டம் இல்லை என்று சொன்னார்என்று புளுகுகிறார். அப்படியானால் கழிவுகளை என்ன செய்வதாக உத்தேசம் என்று யாரும் அவரிடம் கேட்கவில்லை.

அணுக் கழிவுகளை எப்படி பாதுகாப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லைஎன்று அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் திரு. எம். ஆர். ஸ்ரீநிவாசன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். சாலிசிட்டர் ஜெனரல் திரு. ரோகித் நரிமன் சொன்னது உண்மைக்குப் புறம்பானது என்கிறார். இந்தியாவின் அணுசக்தித் திட்டம் தொடங்கியது முதல் கழிவுகளை எங்கேயுமே புதைக்கவில்லை. தீய்ந்துவிட்ட எரிபொருள் மறுசுழற்சி செய்யப்பட்டப் பின்னர் எஞ்சியிருக்கும் கழிவு கண்ணாடிக் குவளைகளில் அடைக்கப்பட்டு மூன்று மறுசுழற்சி நிலையங்களில் பாதுகாக்கப்படுகிறதுஎன்று சொல்லியிருக்கிறார் ஸ்ரீநிவாசன்.

கோலார் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு

மேற்கண்ட உண்மை விளம்பிகளின் பின்னணி தெரிந்த கன்னட மக்கள் எதையுமே கண்டு கொள்ளவில்லை. நவம்பர் 23 அன்று கோலாரில் முழு அடைப்பு நடந்தது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் பேராதரவு தந்தனர். நவம்பர் 24 அன்று அனைத்து கட்சிகளும், சமூக இயக்கங்களும் சேர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அனைத்து கர்நாடக ஊடகங்களும் இந்தப் பிரச்சினை பற்றிப் பெரிதாக விவாதித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் மத்திய அமைச்சர் முனியப்பா கோலார் பிரச்சினை சம்பந்தமாக பிரதமரை உடனடியாக சந்தித்துப் பேசினார். அவர் முறையிட்டதும் சுரங்க அமைச்சர், சட்ட அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஆகியோரோடு கூடிப் பேச பிரதமர் ஆணையிட்டார். மத்திய காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி கோலார் திட்டத்தை வரவிடமாட்டோம் என்கிறார். காங்கிரஸ் கட்சி கோலார் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து, நமது உழைத்து வாழும் மீனவ மக்கள், நாடார் மக்கள் மீது குண்டர் சட்டம் போட்டு, நமது பெண்களை சிறையில் அடைத்து பேயாட்டம் ஆடுகிற அ.தி.மு.க. கோலார் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது, போராடுகிறது.

கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பதால் தேசத் துரோகிகள் என்று வர்ணித்து, நமது வாகனத்தை அடித்து உடைத்து, நம்மைக் கொல்ல முயன்ற பாசிச பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்வா இயக்கங்கள் கோலார் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். கர்நாடக முதல்வர்  ஜெகதீஷ் ஷெட்டர் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகத்தில் எங்கும் அணுக்கழிவை வைக்கவிட மாட்டோம் எனக் கூச்சலிடுகிறார்.

ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன தோழர்களே?

கூடங்குளம் திட்டத்தை நாம் எதிர்ப்பதால் காங்கிரஸ் அமைச்சர் வாசன் நம்மை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என கொக்கரிக்கிரார். அமைச்சர் ப. சிதம்பரம். அமைச்சர் நாராயணசாமி, இளங்கோவன் போன்ற பிற காங்கிரஸ் தலைவர்கள், இவர்களின் அடியாட்கள் எல்லாம் நம்மை அமெரிக்கக் கைக்கூலி, இந்தியாவின் எதிரி, தேசத் துரோகி, என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். கர்நாடகத்தில் அணுக்கழிவுகூட இருக்க கூடாது; ஆனால் தமிழகத்தில் எத்தனை அனுமின் நிலையங்கள் வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் இவர்கள் நிலை.

தனது தோழர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்தவுடன் கண்ணீர் விட்டுக் கதறி அழுத திரு. மு. கருணாநிதி கூடங்குளம், கல்பாக்கம் போன்ற தமிழ் மக்கள் பிரச்சினைகளில் எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பது ஏன்? “எனக்குத்தான் அனுமின் நிலையம் பற்றி எல்லாம் தெரியும், நான் ஆதரவாக பரப்புரை செய்யப் போகிறேன்என்று திரியும் அரசியல் நடிகர்களும்” “அற்புத விஞ்ஞானிகளும்கோலார் பற்றி வாய் திறக்கக் காணோம். கர்நாடகத்தில் போய் சொல்ல வேண்டியதுதானே, அனைத்தும் அற்புதமாக இருக்கிறது கோலாரில் என்று? கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டும் என்று அலறிக் கொண்டிருக்கும் (ரஷ்யாவின்) தோழர்கள் கர்நாடகாவுக்குச் சென்று அங்குள்ள மக்களை அமைதிப்படுத்தி கோலார் திட்டத்துக்கு ஒத்தாசையாக இருக்கலாமே?

புரிகிறதா, தமிழ் மக்களே, இந்த வேடதாரிகளின் கபட நாடகம்? நமக்கு ஒரு நியாயம், மற்றவர்க்கு ஒரு நியாயம்! காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.ஐ.. சி.பி.எம். -- இவை ஆபத்தான ஆறு கட்சிகள்”! தமிழர் விரோத சக்திகள். இவற்றோடு தமிழர்களைத் திட்டமிட்டு வதைக்கிறது மத்திய அரசு!

தமிழர்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு

தமிழக நலனுக்கு, உரிமைக்கு எதிராக முட்டுக்கட்டைப் போடுகிறது மத்திய அரசு என்று தமிழக முதல்வரே பலமுறை சொல்லிவிட்டார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கேட்டால், மத்திய அரசு மறுக்கிறது; தில்லி மாநில அரசு தேவையில்லை என்று ஒப்படைத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கு வழங்க மறுக்கிறது மத்திய அரசு என்று முதல்வர் சொல்கிறார். இதற்காக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியிருக்கிறது.

வட சென்னை அனல்மின் திட்டத்திற்கு மத்திய அரசு 2006 மே 10 வரை சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது. விடியோகான் நிறுவனத்திடமிருந்து தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இத்திட்டத்தை ஏற்றெடுத்தபோது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006 அக்டோபர் 9 அன்று கூட்டம் நடத்தி ஏற்கனேவே தரப்பட்ட அனுமதியை தர ஒப்புதல் தந்தது. ஆனால் தற்போது விடியோகானுக்கு தந்த அந்த அனுமதியை தர மறுக்கிறது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் தந்த அனுமதியை அங்கீகரித்து அதுவே போதும் என்கிறது இந்த அமைச்சகம்.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மலையைக் குடைந்து கொண்டு வரப்படும் நியுட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் அணுக்கழிவுகளைப் புதைக்கும் திட்டம்தான் என்பது பலரது கருத்து.

இன்றைய நிலை

நாம் கோலார் திட்டத்தையும் எதிர்க்கிறோம் என்பது வேறு விடயம். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று உரிமை கேட்கும் கர்நாடக அரசு, கழிவை மட்டும் வைத்துக்கொள்ள மறுப்பதேன்? கூடங்குளம் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கு வாங்கித் தருவோம் என்ற நாராயணசாமி வகையறாக்கள் இப்போது மாற்றிப் பேசித் திரிவதன் நோக்கம் என்ன? தான் கேட்பது போல 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்காது என்றுத் தெரிந்த பிறகும் தமிழக முதல்வர் மூன்றாமவர் போல வாளாவிருப்பதன் மாயம் என்ன? எல்லோருமாகச் சேர்ந்து தமிழர்களைக் காவு கொடுக்கலாம் என்றா?

கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சமூக இயக்கங்களும் ஒரே குரலில் கோலார் திட்டத்தை எதிர்த்துப் போராடும்போது, தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்று சேராமல், தமிழர்களை காட்டிக் கொடுப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்? இணக்கமான கட்சிகள்கூட பட்டும், படாமலும் தள்ளி நிற்பது ஏன்? இன்று வரை கூடங்குளம்கோலார் குழப்பத்தில் மவுனம் காப்பது ஏன்?

இந்திய அணுமின் கழகம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் ஆவணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிப்படும் தீய்ந்த எரிபொருள் ஏழாண்டு காலத்துக்கு அணுமின் நிலையத்திலேயே பாதுகாக்கப்படுமாம். இதற்கு எந்தவிதமான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து எவ்வளவு தீய்ந்த எரிபொருள் வெளிவரும், அது எங்கே மறுசுழற்சி செய்யப்படும், அதில் எவ்வளவு மீண்டும் உபயோகிக்கப்படும், எஞ்சியிருக்கும் கழிவை எங்கே வைத்து பாதுகாக்கப் போகிறோம்? எந்த கேள்விக்கும் பதில் இல்லை. மறுசுழற்சி செய்வது எங்கே, எப்படி, அந்த வசதி செய்யப்பட்டு விட்டதா? எப்போது செய்வதாக உத்தேசம்? யாரும் யாரிடமும், எதுவும் சொல்லவில்லை. மாய வலையில் சிக்கியிருப்பவர்கள் மடத்தமிழர்கள்தானே என்ற எண்ணமாயிருக்கலாம். எந்த விதமான முறையான, தெளிவான திட்டமும் இல்லாமல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற முறையில் அணுசக்தித் துறையும், மத்திய அரசும் கூடங்குளம் பிரச்சினையை அணுகுகின்றன.

என்ன செய்யப் போகிறோம்?

மேற்காணும் முக்கியமானப் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் நிலையினை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க, களம்காண முன்வர வேண்டும்.

தமிழர் விரோதப் போக்குடன் கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு நிகழ்வுகள் நடந்தால், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு நமது கருத்துக்களை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் நிலவும் தமிழர் விரோதப் போக்கை, நடைமுறையை எதிர்க்கும் விதமாக, எதிர்வரும் டிசம்பர் 10அன்று கன்னியாகுமரிமதுரை தேசிய நெடுஞ்சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் காலை 10மணிக்கு மறியல் போராட்டம் நடத்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுக்கிறது. ஆதரவுக் கட்சிகளும், சமூக இயக்கங்களும், தமிழுணர்வு கொண்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தமிழர்கள் அனாதைகளல்ல என்பதை உலகுக்கு எடுத்துச்சொல்ல அன்போடு அழைக்கிறோம். இந்தப் போராட்டம் எந்த விதமான வன்முறையுமின்றி அறப்போராட்டமாக நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

ஞாயிறு, நவம்பர் 25, 2012

மின்வெட்டுக்கு டாட்டா... ஜொலிக்க வைக்கும் சோலார்..!


நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 'மூன்று மணி நேர மின்வெட்டு' என ஆரம்பித்தது... தற்போது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என்பதையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதுமே இத்தகையத் தாறுமாறான மின்வெட்டு நீடிப்பதால்... விவசாயம், வணிக நிறுவனங்கள், வீடுகள் என எந்தப் பயன்பாட்டுக்குமே மின்சாரம் சரிவரக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது! இந்தக் கொடுஞ்சூழலுக்கு நடுவேயும், 'சூரியன் இருக்க... கவலை எதற்கு!' என்றபடி சிலர் தெம்போடு நடைபோடுகிறார்கள்.

ஆம், கொஞ்சம் முன்யோசனையோடு, முன்கூட்டியே 'மாற்று சக்தி'யைப் பற்றி யோசித்த இவர்கள், சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதால்... மின்வெட்டைப் பற்றிக் கண்டு கொள்வதுமில்லை. கவலைப்படுவதுமில்லை!
மின் வெட்டு இல்லவே இல்லை!

இப்படி மின்வெட்டு கவலையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் வீடுகள், நிறுவனங்கள் என்றிருப்பவற்றுள்... திருவண்ணாமலை மாவட்டம், வேடியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள 'அருணாசலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி'யும் ஒன்று! ஆம்... முழுக்க முழுக்க சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கி வருகிறது இப்பள்ளிக்கூடம்!

''இந்தப் பகுதியில இருக்கற குழந்தைகளுக்காக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேந்த 'ஆல்வின் ஜாஸ்வர்’ன்றவர் 99-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கூடத்தை 40 மாணவர்களோட ஆரம்பிச்சார். சில காரணங்களால் அவரால சரிவர நடத்த முடியல. அதனால, 2005-ம் வருஷம் எங்கிட்ட பொறுப்பைக் கொடுத்தார். இப்போ சுத்துப்பட்டு பதினோரு கிராமத்தைச் சேர்ந்த 210 குழந்தைங்க படிக்கிறாங்க. அப்பா, அம்மா இல்லாதவங்க... வறுமை நிலையில் உள்ள பெற்றோரோட குழந்தைகள்,  இப்படிப்பட்ட குழந்தைகள்தான் எல்லாருமே.  அதனால, வெளிநாடுகள்ல இருந்து கிடைக்கற உதவிகளை வெச்சு இலவசமா கல்வி கொடுத்துட்டிருக்கோம்.
பாடங்களுக்கு அடுத்தபடியா கம்ப்யூட்டர், டி.வி. மூலமா நிறைய சொல்லிக் கொடுக்கிறோம். அதுக்கு, 'கரன்ட் கட்’ பெரிய பிரச்னையா இருந்துச்சு. அப்போதான், 'சோலார் பவர் யூனிட்’ போடலாம்னு முடிவு பண்ணி, 2009-ம் வருஷம் அதை அமைச்சோம். அதுக்குப் பிறகு பள்ளிக்கூடத்துல கரன்ட் கட் பிரச்னையே இல்லை'' என்று முன்னுரை தந்த பள்ளி நிர்வாகி மதன், தொடர்ந்தார்.

தமிழகத்தில் சாதகமானச் சூழல் !

''தமிழ்நாட்டில் சோலார் பவருக்கு தட்பவெப்ப நிலை சாதகமா இருக்கு. டிசம்பர் மாசத்துல மட்டும்தான் மின் உற்பத்தி பாதியா குறையும். மத்த மாசங்கள்ல முழு உற்பத்தி இருக்கும். இங்க, 28 சோலார் பேனல்கள் வெச்சு, அது மூலமா ஒரு மணி நேரத்துக்கு ரெண்டரை கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி பண்றோம். அதை 'பேட்டரி’யில் சார்ஜ் பண்ணி பயன்படுத்துறோம்.

'லேப்’ல இருக்குற கம்ப்யூட்டர்கள்ல 'சி.ஆர்.டி. மானிட்டர்’கள்தான் இருக்கு. அதனால அதுக்கும், ஜெராக்ஸ் மெஷினுக்கும் மட்டும் அதிக அழுத்தம் உள்ள கரன்ட் தேவைப்படும். அந்த ரெண்டுக்கு மட்டும் மின்வாரியம் கொடுக்குற மின்சாரத்தைப் பயன்படுத்துறோம். மத்த எல்லாத்துக்குமே சோலார் கரன்ட்தான்.

குறைந்த அழுத்த மின் சாதனங்கள் !

சோலார் கரன்டை சிக்கனமா பயன்படுத்தணுங்கிறதுக்காக... 23 வாட்ஸ் டியூப் லைட், 49 வாட்ஸ் ஃபேன்னு குறைஞ்ச அழுத்தத்துல இயங்குற சாதனங்களைத்தான் பயன்படுத்துறோம். மொத்தம் 24 டியூப் லைட், 24 ஃபேன், 6 சி.எப்.எல்.பல்பு, ஒரு ஆர்.ஓ சிஸ்டம், ஒரு மோட்டார் (ஒன்றரை ஹெச்.பி), 3 கம்ப்யூட்டர், 2 பிரிண்டர், ஒரு எலக்டிரிக் பெல்னு மொத்தப் பள்ளிக்கூடமுமே சோலார் கரன்ட்லதான் இயங்குது. 

எப்பவாவது சோலார் கரன்ட் உற்பத்தி குறைஞ்சா... மின் வாரிய மின்சாரம் மூலமா பேட்டரிகளை சார்ஜ் பண்ணிக்குவோம். அதனால கரன்ட் பில் எங்களுக்கு ரொம்பக் குறைவாத்தான் ஆகும். எல்லாத்துக்கும் மேல... தடையில்லா மின்சார சப்ளை இருக்குது. இதுக்கு 'ஜெல்’ பேட்டரிகளைப் பயன்படுத்தினா, பத்து வருஷம் வரைக்கும் தாங்கும். சாதாரண பேட்டரிகளா இருந்தா... 5 வருஷம்தான் தாங்கும். அப்பப்போ பேட்டரிகளை மட்டும்தான் கவனிச்சு பராமரிக்க வேண்டியிருக்கும். வேற எந்த வேலையும் கிடையாது.

குறைவான செலவுதான் !

நாங்க அமைக்கிறப்போ, '80 வாட்ஸ்’ பேனல் ஒண்ணோட விலை 15 ஆயிரம் ரூபாய். அதனால எங்களுக்கு மொத்தம் ரெண்டரை கிலோ வாட் அளவுக்கு சோலார் யூனிட் அமைக்க, ஏழே முக்கால் லட்சம் ரூபாய் செலவாச்சு. இப்போ, 150 வாட்ஸ் பேனலே 7 ஆயிரத்து 500 ரூபாய்தான். அதேமாதிரி பேட்டரிகள்லயும் பல ரகங்கள் இருக்கு. இப்போ, ஆறு லட்ச ரூபாய் செலவுலயே, பத்து வருஷம் தாங்கக்கூடிய ஜெல் பேட்டரிகளை வெச்சு, 3 கிலோ வாட் அளவுக்கு உற்பத்தி பண்ற யூனிட் அமைச்சுடலாம். 65 ஆயிரம் ரூபாய்ல வீடுகளுக்கு அமைச்சுட முடியும். இதுக்கு மானியமும் கிடைக்குது. ஆனா, நாங்க இதுவரை மானியம் வாங்கறதுக்கு முயற்சிக்கவே இல்லை'' என்று பெருமை பொங்க தகவல்களைத் தந்தார் மதன்!

தொடர்புக்கு, மதன்,
செல்போன்: 99524-33997.

 உபத்திரவம் செய்யும் அரசாங்கம்!

 அரசாங்கமே சூரியசக்தி மின்சாரத்தைப் பற்றி தற்போது பெரிய அளவில் பிரசாரத்தைத் தொடர ஆரம்பித்துள்ளது. ஆனால், அதிகார வர்க்கம் மட்டும் இன்னமும், பழையத் தூக்கத்திலிருந்து விழிக்காமலே இருப்பதுதான் கொடுமை. இதற்கு உதாரணம்... மதனுக்கு நேர்ந்த அவதிதான்.
''ஆரம்பத்துல நாங்க சோலார் யூனிட் போட்டுட்டு, முறையா மின்வாரியத்துக்கு தகவலும் கொடுத்துட்டோம். பயன்பாடு இல்லாததால, தொடர்ந்து அடிப்படைக் கட்டணம் மட்டுமே கட்டிக்கிட்டு இருந்தோம். ஆனா, நாங்க கொடுத்த தகவல அவங்க சரியாக கவனிக்காம அசட்டையா இருந்துட்டு, கடைசியில... 'அதெப்படி இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவு குறைச்சலா மின் கட்டணம் வரும். சோலார் மின்சாரம்னு சொல்லி யார ஏமாத்தறீங்க. மின்சாரத்தைத் திருடிட்டீங்க’னு எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 12 ஆயிரம் ரூபாய் 'ஃபைன்’ போட்டு கனெக்ஷனையும் கட் பண்ணிட்டாங்க. அப்பறம் பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் அது முடிவுக்கு வந்துச்சு.

மத்த நாடுகள்ல எல்லாம் மின் உற்பத்தி பண்றவங்களுக்கு ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்து அரசாங்கமே உதவி பண்ணுது. இங்க உபத்திரவம்தான் பண்ணுது அரசாங்கம். பேனல்களுக்கும், பேட்டரிகளுக்கும் போடுற வரிகளைக் குறைச்சாலே... சோலார் மின்சார உற்பத்திக்கான சாதனங்கள வாங்கற செலவு கணிசமா குறைஞ்சுடும். மக்களும் அதிக அளவுல ஆர்வம் காட்டி, இதை அமைக்க முன்வருவாங்க'' என்று தன் அனுபவத்தைச் சொன்னார் மதன்.

-காசி. வேம்பையன் 
படங்கள்: க. முரளி

நன்றி: பசுமைவிகடன், 10-12-2012

சனி, நவம்பர் 24, 2012

ஒற்றைக்கொம்பன்களுக்கு எமன்கள் யார்?

ந்திய ஒற்றைக்கொம்பன்களுக்கு இது போதாத காலம். நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில், காண்டாமிருகங்கள் வாழும் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் மட்டும் கடந்த ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 101 காண்டாமிருகங்கள் இறந்திருக்கின்றன. ஒரு பக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வேட்டையாடிகள்... சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு காண்டாமிருகம் இறந்திருக்கிறது.

 உலகில் தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து காண்டாமிருகங்கள் அதிகம் வாழ்வது இந்தியாவில்தான். சுமார் 2,300 காண்டாமிருகங்கள் இங்கு இருக்கின்றன. உலகில் காணப்படும் இரண்டு பெரிய வகை காண்டாமிருகங்களில் இந்திய ஒற்றைக்கொம்பன்களும் ஒன்று. ஒருகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவை வாழ்ந்து இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் தொடங்கி சாத்தான்குளம் வரை இவற்றின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அஸ்ஸாம், மேற்கு வங்க வனங்களோடு இந்தியாவில் இவற்றின் எல்லை முடிந்துவிட்டது. காரணம், வேட்டை.
உலகின் பழமையான விலங்கினங்களில் ஒன்று காண்டாமிருகம். ஆகையால், உலகின் பல்வேறு நாடுகளிலும் காண்டாமிருகம் தொடர்பாக ஏராளமான புனைவுகள் உண்டு... அதன் சிறுநீரில் தொடங்கி ரத்தம், இறைச்சி, கண், எலும்புகள் என்று அதன் ஒவ்வோர் உறுப்பு தொடர்பாகவும். இந்த நம்பிக்கைகளின் உச்சம், காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் மருத்துவத் தன்மை.

பிறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் காண்டாமிருகங்களுக்குக் கொம்பு வெளிப்படும். பொதுவாக, ஓர் அடி நீளம் வரை இது வளரும். கெராட்டின் எனப்படும் இழைப்புரதங்களால் ஆன இந்தக் கொம்பில் மருத்துவக் குணங்கள் ஏதும் இல்லை என்று சொல்கிறது விஞ்ஞான உலகம். ஆனால், பாரம்பரிய மருத்துவர்களோ காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரைக்கும் எல்லா வியாதிகளுக்கும் இது சிறந்த நிவாரணி என்று சொல்லிக் காசாக்குகிறார்கள். முக்கியமாக, நீடித்த பாலியல் உறவுக்கு!

எல்லாப் பாரம்பரிய மருந்துகளுக்கும்போல், காண்டாமிருகக் கொம்பு மருந்துத் தயாரிப்புக்கும் சீன மருத்துவம்தான் தாய். சீன அரசே இதை ஊக்குவிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாரம்பரிய சீன மருத்துவ வளர்ச்சிக்கு என்று சீன அரசு ஒதுக்கீடு செய்த 130 மில்லியன் டாலர் உதவி இந்த விஷயத்தில் அரசின் ஆதரவை வெளிப்படையாகவே காட்டியது. உலகிலேயே காண்டாமிருகக் கொம்பு அதிகம் இறக்குமதி செய்யப்படும் சீனாவில் இருந்து வெவ்வேறு வடிவங்களில், காண்டாமிருகக் கொம்பு பயணிக்கிறது. இதற்கான முக்கியமான சந்தை, வியட்நாம்.

வன உயிரினக் கடத்தல் என்பது ஒரு பெரிய வியாபாரம். போதை மருந்துக் கடத்தலுக்கு அடுத்து, உலகில் அதிக அளவில் பணம் கொழிப்பது இதில்தான். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தத் தொழிலில் உச்சத்தில் விலை போகும் பொருள்... காண்டாமிருகக் கொம்பு. ஒரு முழு போலார் கரடியின் விலை 6 லட்சம். சைபீரியப் புலியின் விலை 35 லட்சம். ஆனால், காண்டாமிருகக் கொம்பின் விலையோ ஒரு கிலோ   30 லட்சம். ஆகையால், காண்டாமிருக வேட்டைக்காக எவ்வளவு செலவு  செய்யவும் கள்ளச் சந்தைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அடிப்படையில், மிக சுவாரஸ்யமான ஒரு விலங்கு காண்டாமிருகம். அதன் பிரமாண்ட உருவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மந்தமான விலங்கு. ஆனால், ஓட ஆரம்பித்தால், காடே புழுதி பறக்கும். யோசித்துப் பாருங்கள்... 2,000 கிலோ எடை உள்ள ஒரு மிருகம் 50 கி.மீ. வேகத்தில் ஒடும் காட்சியை... அட்டகாசமாக நீந்தும். புல்தான் பிடித்தமான உணவு. தனிமை விரும்பியான இது, பகல் முழுதும் நீர்நிலைகளில் புரண்டு கழித்துவிட்டு, இரவிலும் அதிகாலையிலும் மேயும். ஒரு காண்டாமிருகம் தன் ஆளுமையைப் பொறுத்து இரண்டு முதல் எட்டு சதுர கி.மீ. வரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அபாரமான மோப்ப சக்தியும் செவித்திறனும் உண்டு. ஆனால், பார்வைத் திறன் குறைவு. சில அடி தொலைவுக்கு அப்பால் உள்ள பொருட்கள்கூட இதன் கண்களுக்குத் தெரியாது. எங்கே முதன்முதலில் சாணி போடுகிறதோ, அதே இடத்தில்தான் திரும்பத் திரும்ப சாணி போடும். சாணி போடும் இடத்தை நெருங்கி விட்டதை மோப்ப சக்தியின் மூலம் நீண்ட தூரத்துக்கு முன்னரே தெரிந்துகொண்டு, அந்த இடத்தைப் பின்னோக்கி நடந்தே சென்றடையும். கிட்டத்தட்ட ஒரு மக்கு குண்டான் என்று நாம் இதைச் சித்திரப்படுத்திக்கொள்ளலாம். இந்தப் பண்புகள்தான் காண்டாமிருக வேட்டையை எளிமையானதாக்கிவிடுகிறது.
இந்தியாவில் 102 ஆண்டுகளுக்கு முன்பே காண்டாமிருக வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கீரி முடி, பாம்புத் தோல், புலி - சிறுத்தைப் பல், எலும்பு, தோல், யானைத் தந்தம், மான் கொம்பு என்று விரியும் இந்திய வன உயிர் கடத்தல் சந்தையில் காண்டாமிருகக் கொம்புக்குத்தான் முக்கியமான இடம்.

பொதுவாக, காண்டாமிருக வேட்டை மூன்று விதங்களில் நடக்கிறது. குழிப் பறிப்பு, மின் தாக்குதல், துப்பாக்கிச்சூடு. கால் நூற்றாண்டுக்கு முன்வரை குழிப் பறிப்பு, மின் தாக்குதல் முறைகளையே அதிகம் இந்திய வேட்டையாடிகள் கையாண்டனர். இப்போது அதிகரித்து இருக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக வேலையைச் சீக்கிரமாக முடிக்கத் துப்பாக்கிச் சூட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். முதல் தோட்டா காண்டாமிருகத்தின் காலுக்கு, அடுத்து மார்புக்கு, பிறகு தலைக்கு. பின்னர், கோடரியால் கொம்பை வெட்டி எடுப்பது இந்திய பாணி. ஆப்பிரிக்காவில் இந்த வேட்டை இன்னும் கொஞ்சம் நவீனமானது. பதிவு எண் அழிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் வந்து, துப்பாக்கி மூலம் உயிர்க்கொல்லி ஊசி மருந்தைச் செலுத்தி, காண்டாமிருகத்தைச் செயல் இழக்கவைத்து, தானியங்கி ரம்பம் மூலம் கொம்புகளை அறுத்துச் செல்வது. ''எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்... அவ்வளவு வருமானம் இதில் இருக்கிறது'' என்கிறார்கள் வேட்டையாடிகள்.

முன்பெல்லாம் ஏழ்மை - வறுமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பழங்குடிகளும் ஏழைத் தொழிலாளர்களும்தான் காண்டாமிருக வேட்டையில் முன் நிற்பார்கள். காண்டாமிருக மருந்தும் பாரம்பரிய நாட்டு வைத்தியர்களிடம்தான் கிடைக்கும். ஆனால், இப்போது முழுக்க ஆயுதப் பயிற்சி எடுத்த தொழில் முறை வேட்டையாடிகளும் இணையம் வழியே தொழில் நடத்தும் கனவான்களும் புகுந்து விளையாடும் தொழில் ஆகிவிட்டது இது.

''வன உயிரினக் கடத்தல் தடுக்க முடியாதது அல்ல; ஆனால், இதற்குப் பின் பெரும் அரசியல் இருக்கிறது. உலகெங்கும் பயங்கரவாத மற்றும் பாதாள உலக அரசியலுக்குச் செல்லும் பணத்தில் பெரும் பகுதி இதன் மூலம் செல்கிறது. முக்கியமாக, இந்தக் கடத்தலுக்கு அடி விழுந்தால், ஆயுதச் சந்தைக்கு அடி விழும். நடக்கிற கதையா இது?'' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

காஸிரங்கா பூங்காவில், காண்டாமிருக வேட்டையாடிகளை எதிர்கொள்ள ஏற்கெனவே 152 தடுப்பு முகாம்கள் உள்ளன. 562 பேர் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சமீபத்திய இழப்புகளுக்குப் பிறகு, மேலும் ஆள் எடுக்கவும் ராணுவப் படையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் கண்காணிப்புப் பணி யில் இலகுரக விமானங்களைப் பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஆனால், அரசியல் பலம் பெற்ற வேட்டையாடிகள் சிரிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட ஒரு பிரமாண்ட உயிரினம், இப்போது மனிதன் முன் உயிர்ப்பிச்சை கேட்டு நிற்கிறது!

-சமஸ்
நன்றி: ஆனந்தவிகடன், 28.11.2012

செவ்வாய், நவம்பர் 13, 2012

“நிலத்தை இயற்கையை எளியவர்களைக் காக்கும் போராட்டம்” - சுப. உதயகுமார்


தம் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டம் தற்போது முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அரசின் அடக்குமுறையை மீறி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விடாப்பிடியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீதும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மீதும் அரசும் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அவதூறுகள் நம் காலத்தின் அசாதாரணமானதொரு மக்கள் போராட்டத்தை மிக அநாகரிகமான முறையில் இழிவுபடுத்துபவை. அணு மின்நிலையங்களின் அபாயம் தொடர்பாக ஏற்கனவே நிறுவப்பட்ட உண்மைகளைக் கொஞ்சமும் வெட்கமில்லாமல் மூடிமறைத்து, இப்போராட்டத்திற்கு மக்கள் அளித்துவரும் தார்மீக ஆதரவைக் குலைத்துப் போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்தும் தந்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அரசு. போராட்டக் குழு எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசு வளர்ச்சி என்னும் பெயரால் மக்களின் வாழ்வாதாரத்தைப் பணயம் வைத்தாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறது. போராடும் மக்கள்மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு கடினமான பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. போராட்டக்குழுவினருக்கு அந்நிய நாடுகளிலிருந்து நிதி அளிக்கப்படுவதாகவும் ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரைப் பற்றித் தனிப்பட்ட முறை யில் இழிவுபடுத்தவும் தயங்கவில்லை. அவரது வீடு சோதனையிடப்பட்டது. குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டனர். அவர் மனைவி மீராவுடன் இணைந்து நடத்தும் பள்ளி நாசகார சக்திகளால் இடிக்கப்பட்டது.

இடிந்தகரை மக்களும் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளார்கள். ஆனால் போராடும் மக்கள் தம் நிதானத்தை இழக்காமல், எதிர்ப்பாளர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் தொடர்ந்து அறவழியில் போராட்டங்களைத் தொடர்வதன் மூலம் தமது முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

போராட்டக் களத்தில் இருக்கும் மக்களையும் அவர்களோடு அவர்களில் ஒருவராக வாழும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரையும் கடந்த 30.09.2012 அன்று இடிந்தகரையில் காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதி, ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கம், உதவியாசிரியர்கள் செல்லப்பா, மண்குதிரை ஆகியோர் கொண்ட குழு சந்தித்து நீண்ட உரையாடலை நிகழ்த்தியது. அந்த மக்களில் ஒருவராக அவர்களோடு வாழும் உதயகுமார் மிக இயல்பாகவும் எளிமையாகவும் எங்களுடன் பேசினார். போராட்டம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் எங்கள் குழுவினர் எழுப்பிய கேள்விகளை அனுபவங்கள் சார்ந்து எதிர்கொண்டவிதத்தில் தென்பட்ட நிதானம் வியப்பூட்டக் கூடிய அளவில் இருந்தது. அவர் ஒரு போராளி. அதே சமயத்தில் வாழ்வையும் மனிதர்களையும் இப்புவியையும் ஆழமாக நேசிப்பவர், எதிர்காலத்தின் மீது அவநம்பிக்கைகளை உருவாக்கும் தத்துவத் தேடல்களோ கோட்பாடு சார்ந்த சிக்கல்களோ அற்ற மிக அபூர்வமான ஒரு போராளி. மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அந்நம்பிக்கை காரணம் மக்களால் மிக அதிகமாக நேசிக்கப்படுகிறார். ஒரு போராளிக்கு இயல்பானவையாய் இருக்க வேண்டியவை இக்குணங்கள். இப்போது அரியவையாக மாறிவிட்டன.

கூடங்குளம் மக்களின் போராட்டம் நெருக்கடியான கட்டத்தை அடைந்திருக்கும் இத்தருணத்தில் உதயகுமாருடன் ஆசிரியர்குழு நடத்திய நீண்ட உரையாடல்களின் சில பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.

- பொறுப்பாசிரியர்

கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டம் ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் உறுதியுடனும் துணிவுடனும் பங்கேற்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். போராட்டமும் பல்வேறு வடிவங்களில் தீவிர மடைந்துவருகிறது. அரசின் அடக்குமுறையும் அதே அளவு தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தின் இந்தக் கட்டத்தைப் பற்றி ஒரு போராளியாக அல்லது போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக என்ன கருதுகிறீர்கள்?

மார்ச் 19 வரை ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம், பேரணி போன்ற போராட்ட வடிவங்களை முன்னெடுத்தோம். தமிழக அரசும் மதில்மேல் பூனையாக நின்று எங்களுக்கு ஒத்துழைத்தது. முழு ஆதரவு என்று சொல்ல முடியாவிட்டாலும் மறைமுக ஆதரவு இருந்தது. அதனால் அந்தக் கட்டம் ஓரளவு எளிதானதாக இருந்தது. எங்களுடைய அனைத்து வகையான போராட்டங்களையும் மாவட்டக் கண் காணிப்பாளரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்தினோம். ஒரு பக்கம் வாய்மொழியாக அனுமதி தந்துகொண்டே கடுமையான பிரிவுகளின் கீழ்ப் பல்வேறு வழக்குகளையும் காவல் துறை எங்கள்மீது பதிவுசெய்து கொண்டிருந்தது. எங்கள்மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. மார்ச் 19க்குப் பின்னர் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு போராட்டம் இக்கட்டான கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினோம். மக்களை வெளியே அழைத்துக்கொண்டு போய்ப் போராட்டம் நடத்தும் சூழல் அப்போது இல்லை. கைதுசெய்வார்கள், தடியடி நடத்திக் கலைக்கப் பார்ப்பார்கள் என்னும் சூழலே இருந்தது. ஏற்கனவே மிக எளிதாக மக்கள் போராட்டங்களை அடக்கிவிட்டோம் என அப்போது அரசு வெற்றிவிழாவையே நடத்திவிட்டது. அமைச்சர்கள்கூட முதல்வரைப் பாராட்டினார்கள். எனவே நாங்கள் கட்டுக்கோப்பாக மக்களை ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கும் சூழ்நிலையில் இருந்தோம். எனவே எங்களது போராட்டம் உண்ணாவிரதம், தலைவர்களை அழைத்து வந்து இங்கேயே கூட்டம் நடத்துவது, மாநாடு போடுவது என்ற ரீதியில் இருந்தது. அந்தக் காலகட்டம் எங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்தபோது தகவல்கள் திரட்டுவது வழக்கறிஞர்களுக்கு ஆதாரங்களோடு உதவுவது போன்ற பணிகள் இருந்தன. எனவே அந்தக் காலகட்டத்தை நாங்கள் மிகவும் ஆற்றலுடன் பயன்படுத்தினோம். மக்கள் மத்தியில் பரப்புரை செய்யவும் தகவல் பரிமாற்றத்திற்கும் அந்தக் காலகட்டத்தைத் திறமையாகப் பயன்படுத்தினோம். மே மாதம் நிறைய பெண்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்து ஒரு தாக்கத்தை உண்டுபண்ணலாம் என நினைத்தோம். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது சென்னை, தில்லி போன்ற இடங்களில் உள்ள எங்கள் போராட்ட ஆதரவுக் குழுவினர் நீதிபதி ஏ. பி. ஷாவை அழைத்து நீதி விசாரணை போன்றவற்றை நடத்தினார்கள். இவை எல்லாம் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. பிறகு அணு உலைகளில் யுரேனியம் எரிபொருளை நிரப்பப்போவதாக நிர்வாகம் அறிவித்தபோது எங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது நாங்கள் ஊருக்குள்ளேயே அமைதியாக இருக்கக் கூடாது, முடியாது என்னும் நிலைப்பாட்டை எடுத்தோம்.

இந்த நிலைப்பாட்டை எப்போது எடுத்தீர்கள்?

ஆகஸ்டில். ஆகஸ்ட் 30இல் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த நிலைப்பாட்டை எடுத்தோம். யுரேனியம் நிரப்புவதற்கு அணு சக்திக் கழகம் ஒரு வெள்ளிக்கிழமை ஒப்புதல் தந்தது. நாங்கள் உடனடியாக இக்கட்டுக்குள் தள்ளப்பட்டோம். அதற்கு எப்படியாவது எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினோம். ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்னும் சூழல் வந்தது. அப்போதும் எங்களுக்கு ஒரு வார அவகாசம் கிடைத்தது. சர்வதேச அணுசக்திக் கழகம் போன்ற இடங்களில் முறையிட்டோம். பின்னர் சமுதாயத் தலைவர்களை அழைத்துப் பேசினோம். நிலைமையை விளக்கினோம். எங்களுக்கு அப்போது இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று பெயரளவில் ஒரு அறிக்கை அளித்துவிட்டு ஒதுங்கிவிடுவது. அதாவது நாங்கள் முடிந்த அளவு போராடினோம் ஆனால் அரசு எங்கள் போராட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை எனச் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவது. அல்லது ஊருக்குள் இறங்கிப் பெரிய போராட்டமாக முன்னெடுப்பது. அது எப்படியும் முடியலாம். பெரிய கலவரம் வெடிக்கலாம். உயிரிழப்பு ஏற்படலாம். இந்த இரு முடிவுகளுக்கும் இடையில் என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருந்தோம். அப்போது சமநிலையாக ஒரு முடிவெடுத்தோம். என்னவெனில், வெளியே செல்வது, காவல் துறை தடுக்கும் இடத்தில் அமர்வது. முடிவு தெரியும்வரை அப்படியே உட்கார்ந்திருப்பது. இந்தத் திட்டத்திற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஒதுங்கிக்கொள்ளவும் கூடாது, போராட்டம் கலவரமாகவும் மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். எதிர்ப்பு அகிம்சை முறையில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்குச் சில எதிர்ப்புகள் கிளம்பின. மக்களை வெளியில் அழைத்துச்சென்றால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலாது. மக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். கோபத்தில் உள்ளார்கள். உணர்ச்சி வேகத்தில் வன்முறையில் இறங்கிவிடக் கூடாது. காவல் துறையும் பதற்றமடைந்திருக்கிறது. போராட்டம் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக இங்கேயே இருப்பது அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலைமையில் எதுவும் மோதல் வந்துவிடக் கூடாது என்று நினைத்தோம். எனவே கொரில்லாப் போரில் பயன்படுத்தும் சில அம்சங்களை அகிம்சைப் போராட்டத்தில் பயன்படுத்துவது தவறு அல்ல என்று எண்ணினோம். மக்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தோம். கூடங்குளம் அணு மின்நிலைய நுழைவாயில் இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கே செல்வதைவிடக் கடற்கரைப் பகுதியான இங்கேயே இருந்தால் அணு உலை அருகிலும் இருப்போம். செய்தியும் எளிதாகப் பரவும் என்பதால் இங்கேயே இருக்க முடிவுசெய்தோம். காவல் துறையும் இருக்காது. எனவே மோதல் போக்கைத் தவிர்க்கலாம் என்பதால் கடற்கரையோரம் அமர்வது என்று முடிவுசெய்தோம். இந்தக் கட்டம் போராட்டத்தில் மிக முக்கியக் கட்டம். மத்திய மாநில அரசுகள் எதிராக இருக்கின்றன, மக்களைக் காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அறவழிப் போராட்டம் என்பதில் எக்காரணம் கொண்டும் சமரசம் கூடாது என்னும் நிலைப்பாட்டில் இருந்தோம். இப்படி எல்லா அம்சங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்படுவது சிரமமான விஷயமாக இருந்தபோதும் அதை நாங்கள் மிகவும் திறமையாகக் கையாண்டோம். அரசுதான் தோல்வியடைந்தது. அதற்குப் பின்னர் தமிழகம் முழுவதும் எங்களுக்கு ஆதரவு பெருகியுள்ளது. எங்களுக்காக மக்கள் போராடுகிறார்கள். இது இத்துடன் முடியப்போவதில்லை. மத்திய மாநில அரசுகள் இந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இது போன்ற சூழலில் பின்வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை.

அறவழிப் போராட்டம் என்ற கருத்தியல் உங்களுக்கு எப்படித் தோன்றியது? மீனவ மக்களை அறவழியில் போராடவைக்க முடியும் என எப்படி நம்பினீர்கள்? இந்தப் போராட்டம் எப்படிச் சாத்தியமானது?
நான் என்னைக் காந்தியவாதியாகப் பார்க்கிறேன். என்னுடைய தாயார் மதுரைக்கு அருகில் உள்ள கல்லுப்பட்டிக் காந்தி ஆசிரமத்தில் படித்தவர். நான் சிறுவனாக இருந்தபோது வீட்டில் மின்சாரம் கிடையாது. மாலை வேளைகளில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து ரகுபதி ராகவ ராஜாராம் போன்ற பாடல்களைப் பாடச்சொல்வார் என் தாயார். நாங்கள் பாடுவோம். என் தந்தை அண்ணா, பெரியார்மீது ஈடுபாடு கொண்டவர். ஆனால் அம்மாவின் தாக்கம்தான் எங்களிடம் அதிகம் இருந்தது.

உங்கள் தந்தை என்ன செய்துகொண்டிருந்தார்?

அவர் திமுகவில் முழு நேர ஊழியராக இருந்தார். திக, திமுக போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். சிறுவயதிலேயே காந்தியம், இந்திய தேசியம் எல்லாம் அறிமுகமாகியிருந்தன. அம்மா பெரிய காமராஜ் பக்தை. தாத்தா பாட்டியும் காமராஜ் பக்தர்கள். நாடார் குடும்பம் என்பதால் வீட்டில் காமராஜரின் பெரிய படம் வைத்திருப்போம்.

அம்மா என்ன செய்துகொண்டிருந்தார்?

அம்மா சமூக நல வாரியத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்பா காமராஜரைத் திட்டுவார். அண்ணா, பெரியாரைப் போற்றுவார். வீட்டுக்குள்ளேயே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சூழல்தான்.

இந்தச் சம்பவங்கள் எந்த ஆண்டில் நடைபெற்றன?
அறுபதுகள். எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அந்தச் சம்பவங்கள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன. அப்பாவுடன் இந்தி ஒழிக ஸ்டிக்கர் ஒட்டப்போவோம். அம்மாவுடன் சேர்ந்து ரகுபதி ராகவ ராஜாராம் பாடுவோம். எனவே அப்போதே காந்திமீது ஆழமான பற்றும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது. பின்னர் அமெரிக்கா சென்றபோது அங்குக் காந்தியைப் பற்றிய வகுப்புகள் எடுத்தேன்.

அமெரிக்காவுக்கு எதற்காகச் சென்றீர்கள்?

இண்டர்நேஷனல் பீஸ் ஸ்டடிஸ் என்னும் படிப்புக்காகச் சென்றேன். சர்வதேச அமைதி குறித்த கல்வி. இளங்கலைக் கல்வியைத் தமிழ்நாட்டில்தான் பயின்றேன்.

உங்கள் ஆளுமை உருவான விதத்தையும் அது தொடர்பான பயணத்தையும் பற்றிச் சொல்லுங்கள்?

நாங்கள் வாழ்ந்தது நாகர்கோவிலில் உள்ள நாடார்களுக்கான ஒரு பகுதியில். அது காங்கிரஸ் கோட்டை. அப்பா மட்டும்தான் திமுக சார்பாளர். அப்போது அங்கே சாலையோரக் கூட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு கூட்டமும் வன்முறையில்தான் முடியும். யாராவது குடித்துவிட்டு வந்து டியூப்லைட்டை உடைப்பார்கள், சத்தம் போடுவார்கள். கூட்டத்தை நிறுத்து எனக் கூச்சல் போடுவார்கள். அப்போதெல்லாம் மிகவும் பதற்றமாக இருக்கும். அப்பாவை நான்தான் பாதுகாக்க வேண்டுமென எண்ணிக்கொண்டு பார்வையாளர்கள் வரிசையில் முன்னால் போய் அமர்ந்திருப்பேன்.

அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய காலகட்டமா?
அது முடிந்திருந்த கட்டம். அப்பா திகவுக்காக, திமுகவுக்காகத் தனி மனிதனாக நின்று போராடியதெல்லாம் நன்றாக நினைவில் உள்ளது. சாமியார்கள் யாராவது வரும்போது அப்பா கறுப்புக்கொடி காட்டப் போவார். கைதாவார். அப்பா நகர்மன்ற உறுப்பினர் ஆனார். அப்போது காங்கிரஸ்காரர்களால் தாக்கப்பட்டார். உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தான பல போராட்டங்களை அவர் சந்தித்தார். அது என்னை மிகவும் பாதித்தது. அப்போதெல்லாம் அப்பாவைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் பயந்தேன். அப்பாவுக்கு எதிர்ப்பு இருந்தது எனத் தெரிந்ததால் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் பயத்துடன் இருந்தது. ஒரு பக்கம் போராட்டத்தைப் பார்த்தே நான் வளர்ந்தேன். இன்னொரு பக்கம் தாயாரின் காந்திய வழி. வீட்டிற்குள்ளே ஜனநாயக அணுகுமுறை இருந்தது. தேர்தல் வரும்போது அப்பா அம்மாவிடம் திமுகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லமாட்டார். அம்மா காங்கிரஸுக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்று வெளிப்படையாகச் சொல்வார். தாத்தா, பாட்டி, அம்மா அனைவருமே காங்கிரஸுக்குத்தான் ஓட்டுப்போடு வார்கள். எனவே வீட்டில் அவரவர் உரிமையை மதிக்கும் போக்கு காணப்பட்டது. வீட்டிற்குள் காமராஜர் படம் அப்படியேதான் இருந்தது. அப்பாவும் அதை எடுத்து விட்டுப் பெரியார் படத்தை வைக்க வேண்டும் எனப் போராடவில்லை. எனவே வீட்டிற்குள் நல்ல முதிர்ச்சியான சூழல் நிலவியது. வெளியில் பிரச்சினைகள் நிலவின. தேர்தல் பிரச்சினைகளின் காரணமாக வீட்டுக் காம்பவுண்ட் சுவர் அருகிலேயே மாணிக்கம் என்னும் காங்கிரஸ்காரர் ஒருவர் அப்பாவின் மூக்கில் குத்தினார். இப்படியெல்லாம் பல சம்பவங்கள் நடந்தன. அப்பா தனி மனிதனாக வலிமையுடன் எதையும் தாங்கி நின்றார். அவர் பெயர் பரமார்த்த லிங்கம். நான் படித்தது எல்லாம் நாகர்கோவிலில்தான். தொடக்கக் கல்வியை வீட்டுக்கு அருகிலேயே உள்ள அரசுப் பள்ளியில் முடித்தேன். பிறகு தேசிய விநாயகம் பள்ளியில் உயர்கல்வி. இளங்கலைக் கணிதம் பயோனியர் குமாரசாமி கல்லூரியில்.

அப்பா ஆவடி ஐ.சி.எஃபில் ஃபோர்மேன் ஆகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். பின்னர் வேலையை ராஜினாமா செய்தார். நான் இன்ஜினியராக வேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். எனக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. பியூசியில் 83 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் பொறியியலில் சேர்வது கடினமாகியது. இளங்கலை அறிவியல் முடித்த பின்னர் பொறியியலில் சேரலாம் என அப்பா கூறினார். எனவே கணிதப் பாடம் எடுத்துப் படித்தேன். எனக்குப் பொறியியல் படிக்க ஆர்வமில்லை. ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருந்தது. அப்பாவிடம் பேசிச் சமாதானப்படுத்திய பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தேன். அப்போது டாக்டர் அய்யப்பப் பணிக்கர் என்னுடைய ஆசிரியராக இருந்தார். புகழ் பெற்ற மலையாளக் கவிஞர் ஒருவரின் மாணவனாக இருந்தது பெருமைக்குரிய விஷயம். படித்து முடித்த பின்னர் எத்தியோப்பியாவில் வேலை கிடைத்தது.

வீட்டில் பொருளாதார நெருக்கடி. எனக்குத் தங்கைகள் இரண்டு பேர். நான்தான் மூத்தவன். எனவே குடும்பத்தின் வருமானத்திற்காக நான் எத்தியோப்பியாவுக்குப் போனேன். ஆறு வருடங்கள் அங்கே இருந்தேன். அது மிக அற்புதமான காலகட்டம். ஆங்கில ஆசிரியராக இருந்தேன்.

எத்தியோப்பியா செல்லும்வரை என்னிடம் கம்யூனிசத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. வீட்டில் அப்பா ஸ்டாலின். லெனின் புத்தகங்கள் எல்லாம் வைத்திருந்தார். சோவியத் நாடு, ஸ்பான் போன்ற சோவியத் பத்திரிகைகள் நிறைய வாங்குவார். அறிவியல், அரசியல் பத்திரிகைகள் நிறையப் படிப்பேன். அதேபோல் காஞ்சி, திராவிட நாடு, விடுதலை, முரசொலி போன்ற இதழ்களும் வீட்டில் காணப்படும். அப்பா நிறையப் படிப்பார். வீடு முழுக்கப் பத்திரிகைகளாகத் தான் இருக்கும். பெரியாரின் எழுத்துக்களை அப்போதே வாசிக்க ஆரம்பித்தேன். ஸ்டாலின் பற்றிப் படித்திருந்தேன். ஸ்டாலினைப் பெரிய கதாநாயகனாகப் பார்த்தேன்.

எத்தியோப்பியாவில் ராணுவ ஆட்சியாளரான மங்கிஸ்து ஹைலமரியத்தின் ஆட்சி நடந்தது. ஸ்டாலினிச அரசாங்கம் எவ்வளவு ஒடுக்குமுறைகளைக் கையாண்டது என்று அங்கே போனபோதுதான் தெரிந்தது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நம்பிக்கை கிடையாது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நம்பிக்கை கிடையாது. இப்படி எல்லாம் இருந்தது. என் வகுப்பில் உள்ளூர் ராணுவ வகுப்பிற்குச் செல்லாத பெண்களையும் ஆண்களையும் ராணுவத்தினர் வந்து அழைத்துச்செல்வார்கள். நம்மிடம் பெயரைச் சொல்லி மாணவர்களை அனுப்பச் சொல்வார்கள். அதன் பிறகு அந்தப் பெண்ணையோ பையனையோ பார்க்கவே முடியாது. இப்படி அழைத்துச் செல்பவர்களைச் சிறையில் அடைப்பது போன்ற வேலைகளைச் செய்வார்கள். சிலரைக் கொலைகூடச் செய்வார்கள் எனக் கூறினார்கள். என்னை டிக்ரை என்னும் ஊரில் பணியமர்த்தினார்கள். அங்கே டிக்ரை பியூப்பிள்ஸ் லிபரேஷன் ஃப்ரண்ட் (TPLF) என்னும் கொரில்லாக் குழுவினர் அந்த அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். டிக்ரை மக்கள் தமிழர்களைப் போன்றவர்கள். தம் இனம், மொழி குறித்து மிகவும் அக்கறை கொண்டவர்கள். அம்ஹாரா என்னும் வகுப்பினர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தனர். டிக்ரை மக்களுக்கு நம்மை எப்படி ஒரு அம்ஹாரா ஆளலாம், நமது இனம் மொழி கலாச்சாரம் அழிகிறது என்று ஓர் எண்ணம். டிக்ரையில் சின்னச் சின்ன ஊர்களை அரசாங்கம் பிடித்துவைத்திருந்தது. மற்ற பகுதிகள் எல்லாம் TPLFஇன் பிடியில் இருந்தன. எங்கள் ஆசிரியர்களில் அநேகர் TPLF ஆதரவாளர்களாக பள்ளியில் TPLF ஊழியர்ககளாக இருந்தனர். மைச்சோ என்னும் சின்னக் கிராமத்தில் நான் இருந்தேன். எங்களைச் சுற்றி TPLF கொரில்லாக்கள்தான் இருந்தனர். ராணுவத்தினர் ஐம்பது அறுபது வாகனங்கள் புடைசூழத்தான் வருவார்கள். உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டுவருவார்கள். ஒரு நாள் ஊரில் இருப்பார்கள். மறுநாள் சென்றுவிடுவார்கள். மற்ற நாள்களில் கொரில்லாப் படையினர் ஊருக்குள் வருவார்கள். என்னுடன் பணியாற்றும் சில ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அப்போது அங்கு நான் மனித உரிமைகள் மீறப்படுவதைப் பார்த்தேன். குழந்தைகளை வகுப்பறைகளிலிருந்து கடத்திச் செல்வது போன்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நான் யுனெஸ்கோவுக்கு, ஐநாவுக்கு, அம்னஸ்டி இண்டர் நேஷனல் போன்றவற்றிற்கு எழுதுவேன். நம் கண் முன்னால் இப்படி மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது கண்டிப்பாக இந்த அரசாங்கத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும் என முடிவெடுத்துச் செயல்பட்டேன். நான் வெளிநாட்டினன் என்பதால் என் கடிதங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டார்கள். எனவே என்னால் எழுத முடிந்தது. கத்தோலிக்க சிஸ்டர்கள் வருவார்கள். அவர்கள் வழியாகத் தகவல்களை அனுப்புவேன். நான் மனக்கோட்டை கட்டி வைத்திருந்த கம்யூனிஸ ஆட்சி அவ்வளவு மோசமாக நடந்தது கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

எத்தியோப்பியாவில் அப்போது கம்யூனிஸ ஆட்சி நடந்து கொண்டிருந்ததா?

அதிபர் மங்கிஸ்து ஹைலமரியம் கம்யூனிஸ்ட். சோவியத் ஆதரவாளர். ஸ்டாலின் அபிமானி. கியூபா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகள் அவருக்கு உதவின. அவர் படித்ததே கிழக்கு ஜெர்மனியில்தான். நான் மைச்சோவில் இருந்தபோதே யுனெஸ்கோ கிளப் என ஒன்றைத் தொடங்கினேன். அதன் நோக்கம் சர்வதேசப் புரிந்துணர்வை மேம்படுத்துவது. மாணவர்கள் மத்தியில் சர்வதேச நாடுகளைப் பற்றியும் அவர்களின் கலாச்சாரங்களைப் பற்றியும் சொல்வது, சர்வதேசப் புரிந்துணர்வு குறித்துப் பேசுவது போன்றவற்றை மேற்கொண்டேன். அவை வெற்றிகரமாக நடந்தன. அரசாங்கத்திற்கு இந்தச் செயல்பாடு பிடிக்கவில்லை. அவர்கள் பொதுவுடைமைச் சமுதாயக் கல்வியைக் கொடுத்துவந்தார்கள். அதற்கென ஆசிரியர்களை நியமித்து மாணவர்களை மூளைச்சலவை செய்துவந்தனர். அதற்கு எதிராக எனது செயல்பாடு இருந்ததால் மோதல் உருவானது. பின்னர் அருகிலுள்ள ஊருக்கு என்னை இடம் மாற்றினார்கள். அது மாநிலத் தலைநகரான மக்கலே என்னும் ஊர்.

நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியராகவா பணிபுரிந்தீர்கள்?

அங்கே எல்லாமே அரசுப் பள்ளிதான். தனியார் பள்ளிகள் கிடையாது. அங்கே சென்ற பிறகு நான் சில பயணங்களை மேற்கொண்டேன். சமாதானக் கல்வி பற்றிய மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தேன். அரசாங்கத்திற்கு என்னைப் பற்றிச் சந்தேகம் வந்தது. விசாரித்தார்கள்.

இந்த மாநாடுகளுக்கெல்லாம் நீங்கள் உங்கள் சொந்த முயற்சியில் சென்றீர்களா?

ஆம். கம்யூனிச ஆட்சி நடந்த எத்தியோப்பியாவில் யுனெஸ்கோ கிளப் மூலமாக எப்படிச் சமாதானக் கல்வியைப் பரப்பலாம் என்பது குறித்துக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.

யுனெஸ்கோ மூலமாகப் போராடலாம் என்னும் கருத்து உங்களுக்கு எப்படித் தோன்றியது?

முதல் வருடத்தில் மைச்சோ பள்ளியில் இருந்தபோது இங்கிலிஷ் கிளப் ஆரம்பித்தேன். விவாதங்கள், மேடையில் பேசுவது போன்றவற்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று அதைத் தொடங்கினேன். அப்போது அடிஸ் அபாபா என்னும் ஊரில் வரதராஜன் என்னும் திருநெல்வேலி நண்பர் ஒருவரது வீட்டில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்காகத் தங்கியிருந்தேன். அங்கே அருகில் உள்ள நூலகங்களுக்குச் செல்வேன். அப்போது இப்ரா (International Peace Research and Association) என்னும் அமைப்பு குறித்துப் படித்தேன். நான் கல்லூரியில் படித்தபோதே இந்த மாதிரி அமைப்பு ஒன்றை நடத்தியுள்ளேன். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் கூட்டத்திற்கு ஒருமுறை பேராசிரியர் ஜனார்த்தனன் அழைத்துச் சென்றிருந்தார். அவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு எதுவுமே புரியவில்லை. தமிழில்தான் பேசினார்கள். ஆனால் எனக்கு ஒரு வார்த்தைகூடப் புரியவில்லை. இவ்வளவுக்கும் நான் தமிழ் ஆர்வமுள்ளவன். பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் எல்லாம் படித்திருக்கிறேன். அண்ணா, பெரியார் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இவர்கள் பேசியதில் ஒரு வார்த்தைகூடப் புரியவில்லையே என வருத்தமாக இருந்தது. உடனேயே என் நண்பர்கள் அகமது கபீர், ஜெயகுமார் போன்றவர்கள் ஒன்றிணைந்து எறும்புகள் என ஒரு அமைப்பை உருவாக்கினோம். எறும்புகள் - அரும்புகள் விரும்பி நடாத்தும் கரும்பு மொழித் தமிழின் இயக்கம் என்று நடத்தினோம். இலக்கியம் சார்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்தன. இது வெறும் இலக்கியக் கூட்டம்தானே, நாட்டைப் பற்றிச் சிந்திக்க என்ன செய்வது என யோசித்து நியூ இந்தியா மூவ்மெண்ட் என்னும் அமைப்பை நடத்தினோம். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. பங்கேற்றவர்கள் எல்லாரும் இளைஞர்கள். முஸ்லிம்கள், ஈழவர் சமுதாயத்தினர், எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர், தலித்துகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தினோம். சாதி, மதம் கடந்த அமைப்பாக அவை இருந்தன.

உங்கள் பகுதியில் அந்தச் சமயத்தில் சாதி, மதம் போன்றவற்றில் பிடிப்பு அதிகமாக இருந்ததா? அதை எப்படிக் கடந்து வந்தீர்கள்?

நாங்கள் இருந்தது நாடார்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதி. அதற்கடுத்து இருந்த பகுதியில் ஈழவர் சமுதாயத்தினர் பெரும்பான்மையினராக இருந்தனர். அப்பாவுக்கு எங்கள் பகுதியைவிடக் கோட்டாறின் ஈழவர் சமுதாயத்தில்தான் செல்வாக்கு அதிகம். ஏனெனில் எங்கள் பகுதி முழுவதும் காங்கிரஸ் கோட்டை. கோட்டாறில்தான் சுயமரியாதை வாசிப்புச் சாலை, திமுக நூலகம் போன்றவை இருந்தன. இந்தப் பகுதி நாஞ்சில் மனோகரன் வாழ்ந்த பகுதி. அப்பாவின் ஆதரவுத் தளம் இதுதான். எனவே அங்கேயே சாதி அடிபட்டுவிட்டது. எந்தச் சாதி மத உணர்வும் இல்லாமல் மிக இயல்பாக இருந்த குழு அது.

அடிஸ் அபாபாவின் நூலகத்தில் இப்ராவின் ஆண்டறிக்கையைப் படித்தேன். அதில் சமாதானக் கல்வி குறித்து எழுதியிருந்தார்கள். இதைத்தான் நாமும் தேடிக்கொண்டிருந்தோம் என அப்போது எனக்குத் தோன்றியது. கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கக் கூடாது, நல்ல மனிதர்களையும் அது உருவாக்க வேண்டும் என்பதில் பிடிப்பு ஏற்பட்டது. போர் என்பது மனித மனங்களில் உருவாவதால் மனித மனங்களில்தான் நாம் சமாதான அரண்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பது யுனெஸ்கோவின் தத்துவம். எனவேதான் யுனெஸ்கோ கிளப் ஆரம்பிக்கலாம் எனத் தோன்றியது. எனவே பள்ளியில் அதை ஆரம்பித்தேன். அதனால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. யுனெஸ்கோ தலைமையகத்திலிருந்து அதை மற்ற பள்ளிகளிலும் தொடங்கச் சொன்னார்கள். இவர்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை எதிர்க்கவும் முடியவில்லை. ஏனெனில் அவர்கள் பொதுவுடைமை ஆதரவாளர்கள். நான் வகுப்பில் பேசும்போது கம்யூனிஸம் என்பது இதுவல்ல என்று விமர்சிப்பேன். கம்யூனிஸம் என்பது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவான தத்துவம். ஆனால் முதலாளித்துவம் மக்களை ஒடுக்கியதைப் போலவே இவர்களும் ஒடுக்குகிறார்கள் என வகுப்பில் பேசுவேன். இரு பிரிவினரின் விஞ்ஞானப் புரிதலும் ஒன்றுதான். ஒன்று தனியார் முதலீடு மற்றொன்று பொது முதலீடு. ஒன்றைத் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. மற்றொன்றைக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இரண்டுமே ஒன்றுதான் என்னும் ரீதியிலான எனது பேச்சு அரசின் கவனத்திற்குச் சென்றது. விசாரணை நடந்தது. மோதல் போக்கு உருவானது. என்னிடம் நிறைய பேர் எச்சரித்தார்கள். சிறையில் தள்ளிவிடுவார்கள், ஏற்கனவே சிலருக்கு இப்படி நடந்துள்ளது என அவர்கள் என்னை எச்சரித்ததால் நானும் 1987இல் இந்தியா வந்துவிட்டேன்.

ஊருக்கு வந்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன். இந்து ஆசிரமங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். விவேகானந்தா கேந்திரத்தில் முழு நேர ஊழியராகச் சேர்ந்துவிடலாம், திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என நினைத்தேன். கன்னியாகுமரி, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள விவேகானந்தா கேந்திரங்களுக்குச் சென்று தங்கினேன். உள்ளே சென்றபோதுதான் அங்கிருக்கும் ஆர்எஸ்எஸ் தாக்கம் தெரிந்தது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கும் நமக்கும் ஒத்துவராது, இதற்குள் முழு நேர ஊழியராகச் செயல்பட இயலாது என்பது புரிந்தது. அது வேறொரு வகையான ஒடுக்குதல் எனத் தோன்றியது. இங்கிலாந்தில் நான் சமாதானக் கல்வி பற்றிப் பேசிய மாநாட்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் எனக்கு அறிமுகமாகியிருந்தார். அவர் பெயர் ராபின் பான்ஸ். அவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஒரு கோர்ஸில் எனக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் அனுமதி கிடைத்தால் சேரும்படியும் கேட்டுக்கொண்டார். அப்போது நான் பெங்களூர் ஆசிரமத்தில் இருந்தேன். அதுவும் பிடிக்காத சமயத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு அமெரிக்காமீது பெரிய மரியாதை கிடையாது. ஆனால் கல்வி கற்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, போகலாம் என முடிவுசெய்து அதற்கு ஒத்துக்கொண்டேன்.

அது என்ன படிப்பு?

அது சர்வதேச உதவியுடன்கூடிய கல்வி. சமாதான ஆய்வு என்று கூறலாம். அதுவரை நான் காந்தி, விவேகானந்தர் ஆகியோர் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். காந்தியம் தொடர்பான பல புத்தகங்களைப் படித்திருந்தேன். உண்மை குறித்த அவரது தேடல் பிடித்திருந்தது. விவேகானந்தரைப் பொறுத்தவரை அவர் கன்னியாகுமரியில் இருந்த காரணத்தாலும் தேசியவாதி என்பதாலும் நல்ல பேச்சாளர் என்பதாலும் பிராமணியத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்ததாலும் அவர்மீது எனக்கு மதிப்பு இருந்தது. பதற்றமான சமயங்களில் விவேகானந்தர் பாறைக்குச் சென்று தியானம் செய்யும் வழக்கம்கூட எனக்கு இருந்தது. அந்தச் சூழலில் அமெரிக்காவில் படிப்பதற்கான வாய்ப்பு வந்ததும் சிக்காகோவில் விவேகானந்தர் உரை நிகழ்த்தியிருந்தது ஞாபகத்திற்கு வரவே அங்கே போக முடிவுசெய்தேன். அங்கே ஜான் யோடர் என்னும் பேராசிரியர் அஹிம்சை குறித்து வகுப்பு நடத்தினார். அதில் நான் சேர்ந்தேன். வகுப்புகளும் எடுத்தேன்.

காந்தியம் குறித்த பாடங்களா?


ஆமாம். காந்தியம், அஹிம்சை ஆகியவை பற்றி உலகம் முழுவதிலும் உள்ள அணுகுமுறை பற்றிய வகுப்பு அது. அதுவரை அஹிம்சை குறித்து ஆங்காங்குப் படித்திருந்தேனே ஒழிய ஒரு முறையான கல்வி எனக்கு அமையவில்லை. ஜான் யோடர் பாதிரியார். அங்கே நான் ஜெயபிரகாஷ் நாராயணன் குறித்து ஆராய்ந்தேன். 1975 நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் அப்பாவைக் காவல் துறையினர் துரத்திக்கொண்டிருந்தார்கள். அப்பாவைக் கைதுசெய்தார்கள். ஜெயபிரகாஷ் நாராயணனின் மாணவர் இயக்கம், முழுப் புரட்சி குறித்த அவருடைய கருத்துகள் என்னை மிகவும் பாதித்திருந்தன. ஜான் யோடருக்காக நான் ஜெயபிரகாஷ் நாராயணன் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டேன். என்னுடன் அடிக்கடி உரையாடிய பாப் ஜோஹான்சன் என்னும் பேராசிரியர் அந்த வகுப்பு முடிந்த பின்னர் என்ன செய்யப்போகிறேன் என வினவினார். டாக்டர் அம்பேத்கார் படித்த கொலம்பியப் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் போன்ற முக்கியமான பல்கலைக்கழகங்களில் எனக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதி கிடைத்திருந்தது. ஆனால் முதல் பருவத்திற்குப் பண உதவி செய்ய முடியாது என்று தெரிவிக்கிறார்கள் என அவரிடம் கூறினேன். அப்போது பாப் ஜோஹான் சன் ஹவாய் தீவில் கரோலின் ஸ்டீபென்சன் என்று தனக்கு ஒரு நண்பர் இருப்பதாகவும் அவர் வன்முறை, அஹிம்சைப் புரட்சிகள் குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கு ஆய்வு உதவியாளர் ஒருவரைத் தேடுவதாகவும் நான் சென்றால் அது எனக்கும் அவருக்கும் உதவியாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் கூறினார். அது நல்ல வாய்ப்பு என்று எனக்குத் தோன்றியது. ஹவாய் பசிபிக் கடலில் உள்ள அருமையான தீவு. எனவே அதற்கு ஒத்துக்கொண்டேன். அங்கே அந்த அம்மையாருடன் ஒரு வருடம் வேலை செய்தேன். அப்போது உலகம் முழுவதும் நடந்த வன்முறை, அஹிம்சைப் புரட்சிகள் குறித்துப் படித்தேன். அப்போதுதான் கம்போடியப் புரட்சி, எத்தியோப்பியப் புரட்சி - அவை குறித்து ஏற்கனவே நான் எழுதிக்கொண்டிருந்தேன். அவை கடத்தப்பட்ட புரட்சிகள் என்று நான் எழுதினேன் - குறித்து விரிவாக அறிந்துகொண்டேன்.

எத்தியோப்பியப் புரட்சியாளர்கள் யார்? கம்யூனிஸத்திற்கு எதிரானவர்களா?

எத்தியோப்பியப் புரட்சியைத் தொடங்கியவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். டாக்ஸி டிரைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்தான் அந்தப் புரட்சியை முன்நின்று நடத்தியவர்கள்.

ஹைலே செலாசி என்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், இங்கிலாந்தின் அடிவருடியாக இருந்த 30 ஆண்டுகளாக அம்மக்களைச் சுரண்டிக் கொழுத்த மன்னருக்கு எதிராக நடந்த புரட்சி அது. மக்கள் பசியால் வாடியபோது அவர் இறைச்சித் துண்டுகளை அரண்மனை நாய்களுக்கு இரையாக்கியதைப் புரட்சியாளர்கள் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்கள். தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், சாதாரண மக்கள், அறிவுஜீவிகள் எனப் பல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட அற்புதமான புரட்சி அது. கடைசியில் அதை ராணுவம் கைப்பற்றியது. மங்கிஸ்து ஹைலமரியம் இருவரைக் கொன்றுவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார். இது நடந்தது 1974இல்.

புரட்சி, புரட்சிக்குப் பிந்தைய அரசு, கொரில்லா இயக்கம் ஆகியவற்றையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனித்து வந்தீர்களா?

நிச்சயமாக. மிகவும் ஆர்வத்துடன் அவற்றைக் கவனித்துவந்தேன். புரட்சி என்பது என்ன என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அதுவரை புரட்சி என்பது மிகவும் ரொமாண்டிக்கான விஷயமாக இருந்தது. புரட்சிக்குப் பிறகு எல்லாமே ஒரே இரவில் மாறிவிடும் என நினைத்திருந்தேன். அந்தக் கற்பனை தகர்ந்தது. அது எவ்வளவு கடினமானது, துயர் நிரம்பியது எனப் புரிந்தது. மக்கள் விடுதலைக்காகத் தொடங்கப்பட்ட புரட்சி எப்படி அவர்களை அடிமைப்படுத்தப் பயன்பட்டது எனத் தெரிந்தது. ஏற்கனவே இருந்த மோசமான நிலைமையே மேல் என எண்ணும்படியான விளைவையே அந்தப் புரட்சி ஏற்படுத்தியிருந்தது.

அந்தக் கட்டத்தில்தான் எத்தியோப்பியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டதா?

ஆமாம். 1985இல் மிகப் பெரிய பஞ்சம் தாக்கியது. நான் போயிருந்த சமயத்தில் எத்தியோப்பியப் புரட்சியின் 10ஆம் ஆண்டு விழாவை மங்கிஸ்து ஹைலமரியம் அரசு கொண்டாடிக்கொண்டிருந்தது. அரசு அப்போது நிலவிய பஞ்சத்தை முற்றாக மறைத்துவிட்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. பஞ்சம் வெளியே தெரிந்தால் பொதுவுடைமைப் புரட்சி தோற்றதாக ஒரு பிம்பம் உருவாகிவிடும் என்பதுதான் அதற்குக் காரணம். நான் இருந்த ஊரில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவியை எதிர்பார்த்துக் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பார்கள். ஆனால் அரசு அவர்களைப் பொருட்படுத்தவே இல்லை. இது குறித்த செய்திகளையும் மறைத்துவிட்டிருந்தார்கள். அப்போது நான் சின்னச் சின்ன ஊர்களுக்கு வண்டியில் சென்று நிலைமையை நேரில் பார்ப்பேன். இதைப் பற்றிப் பிறகு நான் வெளி உலகிற்குத் தெரியப்படுத்தினேன். ஐநாவுக்கு இந்தப் பஞ்சம் குறித்து எழுதினேன். ஐநா, யுனெஸ்கோ, அம்னஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகளுக்கு அப்போது எத்தியோப்பியாவில் நடந்துகொண்டிருந்ததைக் குறித்து எழுதினேன். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என எனக்குத் தெரிந்துதான் இருந்தது. பயமாகவும் இருந்தது. ஆனால் மனிதன் என்ற முறையில் சகமனிதர்கள் துன்புறுவதைச் சகித்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அரசு தனது கடமையில் தவறிவிட்டது. அரசு முழுமையாக இதை மூடிமறைக்கும் சூழலில் ஒரு மனிதனாக இதை நான் கட்டாயமாக அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். எனவே துணிவுடனும் மனப்பூர்வமாகவும் அதைச் செய்தேன். அந்தக் காலகட்டங்களில் நான் நிறைய எழுதினேன்.

குடும்பச் சூழல் காரணமாகப் பிழைப்புக்காக அயல் நாட்டுக்குப் போயிருக்கும் ஒரு சூழலில் சமூக நலனுக்காக ஏதாவது செய்வதற்கு அசாத்தியமான மன உறுதி தேவைப்படும். அது எப்படி உங்களுக்குச் சாத்தியமானது?

அது கடினமான காலகட்டம்தான். நான் எத்தியோப்பியாவிற்குப் போயிருந்தபோது அங்கே இரண்டு விஷயங்கள் மிகவும் மலிவாகக் கிடைத்தன. ஒன்று மது மற்றொன்று மாது. என்னுடன் மலையாளிகள் நால்வர் இருந்தார்கள். மாலை வீட்டுக்கு வந்தவுடன் பாருக்கு மது அருந்தச் சென்றுவிடுவார்கள். அதில் ஒருவர் திருமணமானவர். அவர் பெண்களுடன் இரவைக் கழித்துவிட்டுக் காலையில்தான் வருவார். அந்த நேரத்தில் என்னைக் காப்பாற்றியவர் விவேகானந்தர். சக்தி விரயம் குறித்த பிரக்ஞையுடன் இருந்தேன். பெரிய போராட்டமாக இருந்தது. ஏனெனில் எத்தியோப்பியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள். திருமணமான பெண்ணையேகூட நீங்கள் பார்த்துப் பேசி அவருக்குச் சம்மதம் எனில் அவருடன் சேர்ந்து இருக்கலாம். அது எப்படி நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. நம்மைப் போல் கட்டுக்கோப்பான குடும்பங்களும் அங்கே இருக்கின்றன. இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் நம் ஊரைப் போல ஒரு பெண்ணைத் தூரத்திலிருந்து பார்க்க வேண்டியது இல்லை. நேரடியாகப் பார்த்துப் பேசலாம். அந்தப் பெண்ணுக்கு அதில் விருப்பமில்லையெனில் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அப்படித் திறந்த மனத்துடனான சமூகம் அது. அப்போது மனசுக்குள் ஊசலாட்டம் வரும்போது நான் வீட்டில் அமர்ந்து பாரதியார் கவிதைகளைச் சத்தமாகப் படிப்பேன். திருக்குறள், விவேகானந்தர் எழுத்துக்கள் ஆகியவற்றை ஆறுதலாக வைத்திருந்தேன். உடனிருந்த இளைஞர்கள் என்னை அவர்கள் பக்கம் இழுக்க, நான் அவர்களை என் பக்கம் இழுக்க என்று நாள்கள் சென்றன. புலனடக்கம் என்பது எவ்வளவு கஷ்டமான, முக்கியமான விஷயம் என்பதை அங்கே நான் படித்தேன். மதுவை நான் தொடுவதே இல்லை. சமூக நட்பின் நிமித்தமான கூடுகைகளின் போதுகூடத் தொடுவதில்லை.

இரண்டு காரணங்களுக்காக நான் எத்தியோப்பியா சென்றேன். ஒன்று சர்வதேசச் சமூகம் குறித்து அறியும் ஆசை சிறுவயதிலேயே இருந்ததால். மற்றொன்று வீட்டிலிருந்த பொருளாதார நெருக்கடி. எனது சம்பளத்தில் முப்பது சதவிகிதம்தான் வீட்டிற்கு அனுப்ப முடியும். வங்கியில் பணியாற்றிய என் நண்பனுக்கு அனுப்புவேன். அவன் சமாளித்துக்கொள்வான். எனவே நான் பணத்தைக் குறித்துக் கவலை கொண்டது கிடையாது. அம்மாவுக்கு அவனும் ஒரு பிள்ளை மாதிரி. மேலும் வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல என்பது எனக்கு அப்போதே புரிந்தது. குடும்பத்திற்குத் தேவை, அந்தக் கடமையைச் செய்கிறோம். அதற்கு மேல் நான் சிந்திக்கவில்லை. மேலும் இந்த மனித உரிமை மீறல்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றைப் பார்த்த பின்னர் குடும்பம் ஒரு பொருட்டாகவே மனத்தில் தோன்றவில்லை. ஆறு வருடங்களில் சம்பளம் உயர்ந்தது. நல்ல வருவாய் வாய்ப்புகளும் கைகூடின. ஆனால் அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வருமானத்தைவிடப் பாதுகாப்பு முக்கியம். மேலும் அந்த நாட்டில் அதற்கு மேல் பாதுகாப்பாக வேலைசெய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் அங்கிருந்து விலகி வந்தேன்.

ஹவாய் தீவில் எவ்வளவு நாள் இருந்தீர்கள்?

அந்தப் பெண்மணியுடன் ஒரு வருடம் வேலை செய்தேன். சர்வதேச அளவில் அஹிம்சைப் போராட்டங்கள் குறித்து ஆராய்ந்த க்ளென் பேஜ் என்னும் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் அங்கிருந்தார். அவருடைய அறிமுகம் கிடைத்தது. அஹிம்சை குறித்து நிறைய பேருக்குக் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன.

தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். முனைவர் பட்ட ஆய்வில் சேர கரோலின் ஸ்டீபென்சன் உதவினார். அவர் இருந்த பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்ட வகுப்பில் சேர்ந்து அவர் தந்த சம்பளத்திலேயே படிப்பது என ஏற்பாடு செய்துகொண்டேன். பேராசிரியர் க்ளென் பேஜ், கரோலின் ஸ்டீபென்சன் போன்றவர்களைப் போலவே மைக்கேல் ட்ரூ என்னும் பேராசிரியரின் அறிமுகமும் கிடைத்தது. மைக்கேல் ட்ரூ அஹிம்சை குறித்து உலக அளவில் புகழ்பெற்றவர். எங்கள் பல்கலைக்கு வருகைதரு பேராசிரியராக இருந்தார். அவரும் நானும் நெருங்கிய நண்பர்களானோம். இப்படியாக அஹிம்சை குறித்துச் சிந்திக்கக்கூடிய மிக முக்கியமான அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அப்போது என் நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றத் தொடங்கின.

அஹிம்சை குறித்து அமெரிக்காவில் நடைமுறை சார்ந்த அனுபவங்கள், அதாவது போராட்டங்கள், ஏதேனும் உண்டா?

நிறைய உண்டு. நான் எம்ஏ படித்தபோது இப்படிக் கல்வி பெறுவது மட்டும் போதாது என்று ஒரு விவாதம் வந்தது. ஜில் ஸ்டான்பெர்க் என்று என் வகுப்புத்தோழி ஒருவர் இருந்தார். அவர் அமெரிக்க தேசியக் கொடியை எரித்தவர். அவரைப் பல்கலைககழகத்தில் வைத்திருக்கக் கூடாது என்று வலது சாரியினர் கூறினர், எழுதினர். அது கத்தோலிக்கப் பல்கலைக்கழகம். கத்தோலிக்கச் சர்ச்சுகளில் ஒரு பக்கம் ஏசு என்றால் மற்றொரு பக்கம் அமெரிக்கத் தேசியக் கொடி இருக்கும். அவளைக் காப்பதற்காக நாங்கள் போராட்டங்களில் ஈடுபட்டோம். வெறும் ஏட்டுச்சுரைக்காய் போன்ற கல்வியைத்தான் நீங்கள் தருகிறீர்கள். மக்கள் மத்தியில் இறங்கிப் போராடுவதற்குச் சொல்லித்தரவில்லை என்று கேட்டோம். நானும் சில நண்பர்களும் சேர்ந்து பொலிடிக்கல் ஆக்சன் கமிட்டி என்ற ஒன்றைத் தொடங்கினோம். அப்போது எல்சால்வடார், கோத்தமாலா, பெரு போன்ற நாடுகளில் அநேகப் பிரச்சினைகள் நடந்துகொண்டிருந்தன. இடதுசாரிக் குழுக்கள் வலதுசாரி அரசாங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அவை ஆயுதம் தாங்கிய போராட்டங்கள். அந்த அரசுகள் மிகப் பெரிய வன்முறையை ஏவிக்கொண்டிருந்தன. நீங்கள் கத்தோலிக்கர்கள். அந்த மக்களும் கத்தோலிக்கர்கள். அவர்களுக்காகக்கூட நீங்கள் போராடுவதில்லையே என்று கேட்டு நாங்கள் போராடுவோம். சாலைமறியல் போன்ற போராட்டங்களை மேற்கொண்டோம். வெளிநாட்டு மாணவர்களை ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதால் என்னைப் போன்ற வெளிநாட்டு மாணவர்களைச் சாலை ஓரத்தில் அமரச்செய்துவிட்டு அமெரிக்க மாணவர்கள் போராடுவார்கள். இப்படியான போராட்டங்களை நடத்தினோம். ஹவாய் தீவில் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள வெள்ளைக்காரர்கள் இந்த மக்களை அடிமைப்படுத்திக் காலனி ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள்.

ஹவாய் தீவில் இருந்தவர்கள் சிவப்பிந்தியர்கள் அல்லவா?

அல்ல. இவர்கள் பாலினேஷியன்ஸ். செவ்விந்தியர்கள் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் இருந்தவர்கள். இவர்கள் ஹவாயில் இருந்தவர்கள். ஹவாய் மக்கள். பாலினேஷியன்ஸ் நம்மைப் போன்றவர்கள். சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட மக்கள். அங்கே ஹவாய் தேசியவாத இயக்கம் மிகப் பலமாக இருந்தது. எனக்கு அது அற்புதமான வாய்ப்பு. ஜப்பானியர்கள், பிலிப்பினோக்கள், வெள்ளையர்கள் ஆகியோர் அந்தத் தீவை ஆக்கிரமித்து அங்கிருந்த பூர்வகுடிமக்களின் எண்ணிக்கையை வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். வெள்ளையர்கள் அந்தத் தீவைக் கரும்புத் தோட்டமாக மாற்றினார்கள். இப்போது அது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். ஆனால் அந்தத் தீவின் பூர்வக்குடியினருக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை. அப்போது நேட்டிவ் ஹவாய்ஸ் - ஹவாயின் பூர்வ குடிகள் - ஒரு பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். மொழி, இன அடையாளம், நிலம் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான போராட்டம். அவர்களுடைய அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்துகொண்டேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம்.

அந்தப் போராட்டங்களில் முழுமூச்சாகப் பங்கேற்றேன். ஏனெனில் இந்தப் போராட்டங்களின் மூளையாகச் செயல்பட்டவர்கள் எங்களது அரசியல் அறிவியல் மாணவர்கள். அவர்கள் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அனைவரும் ஒரு சிறிய குழுவாக ஒன்றிணைந்தோம். எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொள்வோம். பல பத்திரிகைகளில் இது குறித்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. நான் இவை குறித்து எங்கள் பல்கலைக்கழகப் பத்திரிகைகளிலும் உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் எழுதினேன். சீனியர் ஜார்ஜ் புஷ் வந்தபோது நானும் என் நண்பர் சேரா கில்லியட்டும் எதிர்ப்பு தெரிவிக்கக் காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். அவர்கள் அனுமதிக்க மறுத்தனர். அவள் புத்திஸ்ட். ஜார்ஜ் புஷ்ஷைப் பார்க்க விரும்பவில்லை என்று அறிவித்து ஜார்ஜ் புஷ் பேசவிருந்த அரங்கின் எதிரே இருந்த புத்த ஆலயத்தில் கண்ணை மூடிக்கொண்டு தியானிப்போம் என அவள் கூறினாள். அதன்படி நாங்கள் தியானம் செய்தோம். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்தன.

அந்தப் போராட்டங்களின் வடிவங்கள் எப்படி இருந்தன?
எல்லாமே அஹிம்சைப் போராட்டங்கள்தான். எந்த வன்முறையும் கிடையாது. அனைத்துமே படைப்பூக்கம் மிக்க போராட்டங்கள். எங்களுடன் அரசியல் அறிவியல் பயின்ற சிறந்த குழு இருந்தது. அது என் கல்வியின் முக்கியமான அம்சம்.

எத்தனை ஆண்டுகள் இந்தக் கல்வி தொடர்ந்தது?


ஆறு ஆண்டுகள். 1990இலிருந்து 1996 வரை மாணவனாக இருந்தேன். இரண்டு மூன்று ஆண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உங்களைத் தூண்டியது எது? இந்தப் போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு எப்போது தொடங்கியது? இன்றுவரையான அதன் தொடர்ச்சி குறித்துச் சொல்லுங்கள்.

1987இல் எத்தியோப்பியாவிலிருந்து இந்தியா வந்தேன். வரும் வழியில் நார்வே பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதங்கள் படித்தேன். சோவியத் யூனியன் வழியாக வந்தபோது அங்கே இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் கடுமையான ஆயுதப் போட்டி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் ஒய். டேவிட் ஐயா பற்றி நான் கேள்விப்பட்டேன். அப்போது நான் கூடங்குளம் அணு உலை தொடர்பாக அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன். நிலம் கையகப்படுத்தல் போன்றவை நடந்துகொண்டிருந்தன. ஆனால் அது பெரிய செய்தி கிடையாது. 1988இல் அணு ஆயுதக் குறைப்பு குறித்து உலக அளவிலான ஒரு கருத்தரங்குக்காக ஐநா தலைமையகத்தில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தளங்கள் இருந்தன. ஐரோப்பாவில் நடக்கும் அணு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசுவதைவிட நமது பகுதியில் நடக்கும் அணு ஆயுதப் போட்டி குறித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். ஏனெனில் அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் அணு ஆயுதப் போர் நடந்ததெனில் நம்நாடு உடனடியாகப் பாதிக்கப்படும். இந்தியப் பெருங்கடல் விஷமாகும். அதன் தாக்கங்கள், கதிர்வீச்சுகள் நம்மைப் பாதிக்கும். எனவே அது குறித்துப் பேச வேண்டும் என்று நாகர்கோவில் நண்பர்கள் அகமது கபீர், ஜெயக்குமார் போன்றவர்கள் சேர்ந்து Group for Peaceful Indian Ocean என்னும் அமைப்பை உருவாக்கினோம். கடல்தான் நமது வாழ்வாதாரம். கடல் இந்திய நாட்டின் முற்றம். எனவே கடல் குறித்து நாம் படிக்க வேண்டும் என்று அந்த அமைப்பை உருவாக்கினோம். இந்தியப் பெருங்கடல் பகுதியை அமைதிப் பிரதேசமாக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கினோம்.

இதற்கு ஆதரவு இருந்ததா?


இதற்குப் பெரிய ஆதரவு என்று எதுவும் இல்லை. துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகிப்போம். கல்லூரிகள், பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகிப்போம். இப்படித்தான் செயல்பட்டோம். ஊடகம் இதைக் கண்டுகொண்டதும் இல்லை, நாங்கள் அதற்கு முயன்றதுமில்லை. நான் கடல் குறித்துப் பல புத்தகங்கள் சேகரித்திருந்தேன். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நண்பர் தான் படித்த கடல் புத்தகத்தைப் பற்றிப் பேசுவார். எங்களைத் தயாரித்துக்கொள்வதற்குத்தான் அதை நடத்தினோமே தவிர வேறு பெரிய தாக்கங்கள் ஏற்படுத்துவதற்கு அல்ல. அப்போது டேவிட் ஐயா அறிமுகமில்லை.

அப்போது அவர் என்ன மாதிரியான பணிகளை மேற்கொண்டிருந்தார்?


அணு மின்நிலையத்திற்கு எதிராக நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற இடங்களில் பெரிய அளவிலான பேரணிகளை நடத்திக்கொண்டிருந்தார். மீன் உணவு விஷமாகும் என்று அப்போது நாங்கள் எங்களது ஜிபிஐஓ சார்பாக துண்டு பிரசுரம் வெளியிட்டோம். மீன் என்றால் உடனே கவனிப்பார்கள் என்னும் எண்ணத்தில் அதை வெளியிட்டோம். முதலில் அணு ஆயுதம் என்னும் தலைப்பில் தொடங்கினோம், பின்னர் அணு மின்சாரமும் அதனுடன் தொடர்பு கொண்டது என்பதால் அதையும் இணைத்துக்கொண்டோம். 1989இல் நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். அப்போது சோவியத் யூனியன் சிதறிக்கொண்டிருந்தது. கோர்ப்பச்சேவ் பதவி இழந்தார். அதன் பின்னர் கூடங்குளம் குறித்து எனக்குத் தகவலே இல்லை.

டேவிட் ஐயாவுக்கு அணு உலை குறித்த முழுமையான புரிதல் இருந்ததா? அவருடைய செயல்பாடுகள் என்னவாக இருந்தன?

வேண்டாம் அணு உலை என்னும் சிறிய நூலையும் அவரது துண்டுப்பிரசுரத்தையும் நான் படித்திருக்கிறேன். 1998இல் நான் ஊருக்கு வந்திருந்தேன். இந்தியப் பிரதமராக தேவகவுடா இருந்தபோது இந்தத் திட்டத்தை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள் எனத் தெரிந்தது. எனவே அசுரன் என்னும் நண்பருடன் இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என விவாதித்தேன். மறுபடியும் போராட்டத்தைத் தொடர வேண்டும் என முடிவுசெய்து 1998இல் எங்கள் வீட்டில் ஒரு கூட்டம் நடத்தினோம். அணு சக்தி எதிர்ப்புக் கூட்டம். நாகர்கோவிலைச் சேர்ந்த பீட்டர் தாஸ், அசுரன் போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். தினந்தந்தியில் இது குறித்துச் செய்தி வெளியாகியிருந்தது. அப்போது தான் மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கினோம். நான் அமெரிக்காவிலிருந்து தகவல்களைத் திரட்டி அனுப்புவது. இங்கே இந்த இயக்கத்தை நடத்துவது என்று முடிவுசெய்தோம். கூடங்குளம் பற்றிய தகவல்களை நான் சேகரித்து இங்கே அனுப்புவேன். வாஜ்பாய் பிரதமரான உடன் பிஜேபி அரசாங்கம் நாட்டுக்கு நல்லதல்ல என்பதால் அதைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதற்காகப் பிஜேபி கவர்மெண்ட் வாட்ச் என்று அமெரிக்காவில் ஓர் அமைப்பைத் தொடங்கினேன்.

நிறைய அமைப்புகளைத் தொடங்கி நடத்தியுள்ளீர்கள் அல்லவா?

இது அப்பாவிடமிருந்து வந்த நோய். அப்பா இப்படித்தான் ஏதாவது ஒரு அமைப்பைத் தொடங்குவார். உடனடியாக லட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் போன்றவற்றைத் தயாரிப்பார். பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஆனால் இதை அவர் கடைப்பிடித்துவந்தார். நான் பிஜேபி அரசாங்கம் குறித்து எழுதியதற்கு இந்து என். ராம் பெரிய ஆதரவு தந்தார். என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவருடைய பங்களிப்பு இதில் அதிகம். அவர் மூலமாக நுரானி, அஸ்கர் அலி இன்ஜினியர், ரோமிலா தாப்பர், கே. என். பணிக்கர் போன்ற பெரிய ஆளுமைகளின் ஆதரவு கிடைத்தது. அதை ஓர் ஒன்றரை வருடம் மிகச் சிறப்பாக நடத்தினோம். Front Lineஇல் கட்டுரைகள் எழுதினேன். இந்து ராமை அழைத்துப் பல்கலைக் கழகத்தில் கூட்டங்கள் நடத்தினோம். அஸ்கர் அலி இன்ஜினியர் போன்றவர்கள்கூட வந்திருக்கிறார்கள். பிஜேபி குறித்து இந்தியாவில் வெளிவந்த விமர்சனங்களைத் தொகுத்து ஒரு வெளியீடாகத் தினமும் எங்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். பிஜேபி அரசாங்கம் கவிழ்ந்ததும் BJP Government Watch என்னும் அமைப்பின் பெயரை Communalism Watch and Governance Monitor என்று மாற்றிக்கொண்டு செயல்பட்டோம். அதில் நான் கூடங்குளம் பற்றிய செய்திகளை விவாதித்தேன். 2001இல் ஊருக்குத் திரும்பினேன். மனைவி அங்கே சமூக நல ஊழியராக இருந்தார்.

திருமணம் அமெரிக்காவில் வைத்து நடந்ததா?

நாகர்கோவிலில் வைத்துதான் திருமணம் நடந்தது. படிப்பு முடிந்ததும் இரண்டுபேரும் அமெரிக்காவில் இரண்டு வருடங்கள் இருந்தோம். கொஞ்சம் கடன்கள் இருந்தன. அதை அடைப்பதற்கு அங்கே இருக்க வேண்டியிருந்தது. அதை அடைத்தது போக மீதியுள்ள பணத்தைக்கொண்டு ஊரில் பள்ளியொன்றைத் தொடங்கலாம் என அங்கே வைத்தே முடிவுசெய்திருந்தோம். 2001இல் திரும்பினோம். அப்போது சென்னையில் இருந்தோம். அப்போது உடல் நலம் குன்றி மதுரையிலிருந்த டேவிட் ஐயாவை அவரது வீட்டில் சந்தித்தேன். கூடங்குளம் அணு உலைக்கான வேலைகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தன. அது குறித்து அப்போது அவரிடம் பேசினேன்.

இந்தக் கட்டத்தில் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தனவா?

இல்லை. உடன்படிக்கை செய்து கட்டுமான வேலைகளைத் தொடங்கியிருந்தார்கள். டேவிட் ஐயா, நாகர்கோவிலில் டாக்டர் லால் மோகன், தூத்துக்குடியில் ஜார்ஜ் கோமஸ் ஐயா, ஜெர்மனியைச் சேர்ந்த கேப்ரியேல் டீட்ரிக் என்னும் பெண்மணி, கன்னியாகுமரியில் போஸ் போன்றவர்கள் இணைந்து 2001 நவம்பர் முதல்நாள் மதுரையில் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தைத் தொடங்கினோம். அதுதான் இப்போதும் தொடர்ந்து போராடிவருகிறது. டேவிட் ஐயா தலைமை ஏற்றார். அவர் காந்தியவாதி. அஹிம்சைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். எல்லாருமே பெரியவர்கள், எனவே நிதானமாகச் செயல்பட்டார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்னும் செயல்பாடு யாரிடமும் கிடையாது. எல்லாருமே மிகப் பொறுப்பானவர்கள். இந்த நடவடிக்கைகளும் எனக்கு மிகப் பெரிய படிப்பினைகளைப் பெற்றுத் தந்தவை.

கிறித்தவரல்லாத நீங்கள் கிறித்துவ மீனவர் மக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துப் போராடியபோது உங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் இருந்தனவா? அவற்றைச் எப்படிச் சமாளித்தீர்கள்?
அப்படியான சங்கடங்கள் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு என் பின்னணி ஒரு முக்கியமான விஷயமாக இருந்தது. அம்மா சமூக நல வாரியத்தில் பணியாற்றினார். அப்போது கிறித்தவ மதம் சார்ந்த அநேகர் வீட்டிற்கு வருவார்கள். பால்வாடி போன்ற அமைப்புகள் குறித்துப் பேசுவதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வீட்டுக்கு வருவார்கள். வந்தவர்கள் அனைவருமே பிரார்த்தனை செய்வார்கள். அப்போது நான், அம்மா, சகோதரிகள் ஆகியோர் அதில் கலந்துகொள்வோம். அப்பா அதில் கலந்துகொள்ளமாட்டார். வீட்டில் கால்நடைகள் இருந்தன. அவற்றுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் ஜெபம் செய்வார்கள். கிறித்தவ ஜெபம் எங்கள் குடும்பத்தில் முக்கிய இடம்பெற்றது. அம்மாவுடன் வேலைபார்த்தவர்களின் வீடுகளுக்குக் கிறிஸ்துமஸ் நாட்களில் செல்வோம். எனவே சிறுவயதிலேயே கிறித்தவ மதத்தின் மீது அன்பும் மரியாதையும் இருந்தது. அதை வேற்று மதமாகவே நாங்கள் பார்க்கவில்லை. வாழ்க்கையில் இதுவும் ஒரு அம்சமாகத்தான் இருந்தது. மேலும் எங்கள் வீட்டின் மற்றொரு பக்கம் இடலாக்குடி போன்ற இஸ்லாமியர் வசிக்கும் பகுதி. நூறு சதவிகித முஸ்லிம் மக்கள். மற்றொரு பக்கம் ஈழவ சமுதாயம். இந்து நாடார் இடைப்பட்ட பகுதியினர். அப்பாவின் ஆதரவுத் தளம் இந்த ஈழவர் சமுதாயமும் முஸ்லிம் சமுதாயமும்தான். முஸ்லிம்கள் திமுகவுக்கு ஆதரவாக இருந்தார்கள். காங்கிரஸுக்குப் பெரிய ஆதரவு கிடையாது. முஸ்லிம் விழாக்கள் எதுவாக இருந்தாலும் எங்களுக்குச் சாப்பாடு வரும். எங்களை அழைப்பார்கள். ஆகவே முஸ்லிம் மக்கள்மீதும் நமக்கு ஆதரவானவர்கள் என்று சிறு வயதிலேயே பிரியம் இருந்தது. அது இயற்கையாகவே அமைந்தது. எனவே கிறித்தவர், இந்து, முஸ்லிம், ஈழவர் என்ற சாதி மதப் பிரிவினைகள் எழவில்லை. ஆனால் போராட்ட அரங்குக்கு வந்தபோது நான் எனது முப்பதுகளின் இறுதியில் இருந்தேன். அதுவரை நான் எந்த மீனவக் கிராமத்துக்குள்ளும் சென்றது கிடையாது. நாடார் சமுதாயத்தில் மீனவ மக்களைப் பெரிதாக மதிக்க மாட்டார்கள். சுத்தமில்லாதவர்கள், முரடர்கள் என்றுதான் மீனவர்களை அந்தச் சமுதாயம் பார்த்தது. ஆனால் மீனவ மக்கள் குறித்து எந்த அறிதலோ புரிதலோ எனக்கு அப்போது கிடையாது. நான் சிறுவயதில் மீன் சாப்பிடமாட்டேன். மிகச் சுத்தம் பார்ப்பேன். யார் வீட்டிலும் சாப்பிடமாட்டேன். தண்ணீர் குடிக்க மாட்டேன். என் தட்டில் வேறு யாரும் சாப்பிடக் கூடாது என்பது போன்ற நோய்கள் எல்லாம் எனக்கு இருந்தன. எனவே கடலோரக் கிராமங்களுக்குப் போனபோது முதலில் தயக்கமாக இருந்தது. அவர்களுக்கும் என் பின்னணி தெரியாது. டேவிட் ஐயான்னு சொல்லும்போது பெயரைவைத்துக் கிறித்தவர் என்பது தெரியும். ஆனால் அவர் நாடார் என்பது யாருக்கும் தெரியாது. அந்தக் கட்டத்தில் நாங்கள் ஊர்களுக்குள் சென்று அமர்ந்து பிரச்சினைகளைப் பேசுவோம். இளைஞர் குழுக்கள், மீனவர் சங்கம் இதிலெல்லாம் பேசுவோம். பிரச்சினைகள் குறித்துத்தான் பேசுவோமே தவிர சாதி, மதம் குறித்து விவாதம் வந்ததே இல்லை. நாளைடைவில் இந்த மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வது என்னை ஈர்த்துவிட்டது. நாம் பேசும் சிந்தாந்தங்கள்போல வாழ்ந்துவரும் இந்த மக்கள்மீது ஒரு மரியாதை வந்தது. இப்போதுகூட யாரும் சாதி மதத்தைப் பார்ப்பதில்லை. எதிர்ப்பு நாடார் தரப்பிலிருந்து வந்தது. நானும் டேவிட் ஐயாவும் சென்றபோது இரண்டு மூன்றுமுறை அடிக்க வந்தார்கள். கூடங்குளத்தின் இந்து நாடார்கள்தான் எங்கள் ஊரின் வளர்ச்சியைத் தடுக்க வந்திருக்கிறீர்களா எனக் கேட்டு அடிக்க வந்தார்கள். அவர்களும் எங்களைச் சாதியைப் பார்த்து அடிக்க வரவில்லை. வளர்ச்சியைத் தடுக்க வந்ததாக நினைத்துத்தான் அடிக்க வந்தார்கள். டேவிட் ஐயா நாடார் என்பது அவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆக, சாதி மதம் எந்தக் காலகட்டத்திலும் பிரச்சினையாக வந்ததில்லை. இந்தப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது சிலர் என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, நாடார் ஏன் இதை நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இப்போதுகூடச் சிலர் ஏன் மீனவர்களிடமிருந்தே ஒருவர் தலைமை ஏற்க வரக் கூடாது என்று பேசுவதாக சமூகத் தளங்களில் படிக்க நேர்ந்தது.

ஆமாம். நம்முடைய ஜாதியில் ஆள் இல்லையா என்றெல்லாம் பேசினார்கள். இந்த மக்கள் அதைக் காது கொடுத்தே கேட்கவில்லை. மக்களுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இந்த ஒற்றுமை எப்படிச் சாத்தியமாயிற்று? மேலும் அணு உலைக்கு எதிராக அஹிம்சைப் போராட்டம் என்பதற்கு மக்கள் எப்படிப் பழக்கமானார்கள்? ஏனெனில் சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர் இந்தியாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும் அறவழிப் போராட்டம் இது. சாதாரண மக்கள் இந்தச் சித்தாந்தத்தை எப்படிப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார்கள்?

இயல்பான ஒன்றாக அவர்களுக்குள் புதைந்துகிடந்ததை வெளியில் கொண்டுவந்துள்ளோம். இப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். போராட்டக் குழுவினர் பயிற்சி கொடுத்து இதைச் சாத்தியப்படுத்தவில்லை. போராடுபவர்கள் அனைவரும் கிறித்தவர்கள். பிரார்த்தனை என்பது இவர்களது வாழ்வின் முக்கிய அம்சம். கிறித்தவ மதமே அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டதுதான். மன்னிப்பது, விட்டுக்கொடுப்பது போன்றவை அவர்களின் மரபு சார்ந்த பழக்கம். கவிந்திருந்த தூசியைத் துடைக்க வேண்டியிருந்தது, அவ்வளவு தான். அதைக்கூட நாங்கள்தான் செய்தோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது.

அணுமின் நிலையத்தின் அபாயத்தைப் பற்றி டேவிட் ஐயா, லால் மோகன், ஜார்ஜ் கோமஸ் போன்றவர்கள் தொடர்ந்து பரப்புரை செய்தார்கள். மாநாடு, சிறிய கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் முதலான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் கதிர்வீச்சின் அபாயத்தை எடுத்துக்கூறினார்கள். முதலில் கதிர்வீச்சு என்பதை ரேடியோ லைட் என்று இங்குள்ள பெண்கள் சொல்வார்கள். ஆக, அடிப்படைத் தகவல்களைப் பற்றி மிகவும் பொறுமையாக, நிதானமாக அவர்களுக்குச் சொன்னோம். அணு உலை அபாயம் குறித்த தகவல்கள் கடலோரக் கிராமங்களில் பரவியது இப்படித்தான். போராட்டம் தொடங்கியதற்குப் பிறகுதான் அஹிம்சை பற்றிப் பேசுகிறோம். இதற்கு முன்னால் டேவிட் ஐயா, லால் மோகன் போன்றவர்கள் நடத்திய போராட்டங்களும்கூடச் சாத்வீகமானவைதான். சாலை மறியல், பேருந்துகளைத் தாக்கிச் சேதப்படுத்துவது போன்ற வழிமுறைகளை எப்போதுமே கையிலெடுத்தது இல்லை. மேதா பட்கர் போன்றவர்களை அழைத்துவந்து கூட்டங்கள் நடத்துவோம். விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில்தான் போராட்ட வடிவங்கள் இருந்தனவே தவிர அது ஒருபோதும் வன்முறைப் பாதையில் செல்லவில்லை.

இந்தப் போராட்டம் தொடங்கியபோதும் முதலிலேயே உண்ணாவிரதம் என்றுதான் தொடங்கினோம். மீனவ மக்கள் உணவருந்தாமல் இருக்கமாட்டார்கள். உடலுழைப்புகாரர்களுக்கு உணவு மிக அவசியம். விழிப்புணர்வூட்டுவதற்கான கூட்டங்கள் என்பதுதான் முதல்கட்டப் போராட்ட வடிவமாக இருந்தது. கடந்த செப்டம்பர்மாதம்தான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினோம். அப்போதுகூட டேவிட் ஐயா உட்பட நிறைய பேர் காலவரையற்ற உண்ணா விரதம் அறிவித்திருக்கக் கூடாது என்றுதான் சொன்னார்கள். இந்து, இஸ்லாம், கிறித்தவம் மூன்று மதங்களிலுமே உண்ணாநோன்பு ஒரு பழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அறவழியை எல்லா மதங்களுமே போதித்திருக்கின்றன. ஆக ஒரு கருத்தியலுக்காகக் காந்தியம் போன்றவை குறித்துச் சொன்னோம். அவ்வளவுதான். இது உள்ளீடற்ற புரிதல் அல்ல. சமையலறைப் பக்கமே செல்லாத கணவர்கள்கூடத் தங்களைப் போராட்டத்திற்கு அனுப்பிவிட்டுச் சமையல் வேலைகளைக் கவனிப்பதாகப் பல பெண்கள் சொல்கிறார்கள். குடிப்பழக்கம் குறைந்திருக்கிறது என்றும்கூடச் சொல்கிறார்கள். எனவே அஹிம்சை என்பது கலாச்சாரத் தாக்கமாகவே இருக்கிறது. “முன்பெல்லாம் ஏதாவது தகராறு என்றால் நான் முதலில் அடித்துவிட்டுதான் பேசுவேன். ஆனால் இன்று ராதாபுரத்தில் ஒருவர் உங்களைத் தவறாகப் பேசினார். எனக்குக் கோபம் வந்தது. அடிப்பதற்காகக் கையை ஓங்கினேன், ஆனால் அது நமது வழியில்லையே என்று தோன்றியதால் அமைதியாக வந்துவிட்டேன்” என்று ஒரு இளைஞர் என்னிடம் கூறினார். இதைப் போல் சிறிய சிறிய தாக்கங்கள் நிறைய. ஆக, மாற்றங்களுக்குக் காரணம் மக்கள்தானே தவிர வேறு யாருமல்ல. போதிப்பதற்கு நாங்கள் யாரும் புனிதர்கள் அல்லவே. இங்கே எந்த மாயாஜாலமும் நிகழவில்லை.

இந்தப் போராட்டத்தில் உங்கள் ஈடுபாடு குறித்து உங்கள் குடும்பத்தினர் என்னவகையான எதிர்வினையாற்றினார்கள்?

அப்பா, அம்மா இருவருமே போராளிகள். அப்பா அரசியல் களத்தில் செயல்பட்டவர். அம்மா சமூக ஆர்வலராக இருந்து பணியாற்றியவர். கொஞ்சம் கவனமாக இருந்துகொள் என்று கூறுவார்கள் அவ்வளவுதான். இருவருமே இந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்றுதான் சொல்வேன். மனைவியும் ஆதரிக்கிறார். ஹவாயில் என்னுடன் படித்துக்கொண்டிருந்தபோதே இது போன்ற போராட்டங்களில் என்னுடன் கலந்துகொண்டிருக்கிறார். நாங்கள் இருவருமே சமூகத்தின் மிக எளிய பின்னணியில் இருந்துவந்தவர்கள். எனவே நம்மைப் போன்ற மக்களுக்கு, உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு அவர்களது உரிமையை மீட்டுத்தர உதவ வேண்டும் என்பதில் இருவரும் அழுத்தம் திருத்தமான நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியாவிற்குத் திரும்பி வந்ததன் காரணமும்கூட அதுதான். மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் போராட்டத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. எந்தக் கட்டத்திலும் அவர் பயப்படவோ பின்வாங்கவோ இல்லை.

அரசு இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதில் முனைப்போடும் தீவிரத்தோடும் இருக்கும் நிலையில் மிக உறுதியோடும் நம்பிக்கையோடு மக்களும் இப்போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதற்குப் பின்னணி என எதையாவது சொல்ல முடியுமா?

இந்தப் போராட்டத்தில் ஒரு பக்கம் அரசுத் தரப்பு. மற்றொரு பக்கம் சாதாரண மக்கள். அரசுத் தரப்பைப் பொறுத்தவரை இது ஒரு கொள்கை முடிவு. அந்தக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் அணுசக்தி அவசியம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலானது. அவர்களுக்கு அணுசக்தியும் அணு ஆயுதமும் அவசியம். இந்தப் பக்கம் மீனவர்கள், நாடார்கள், தலித்துகள் போன்ற சாதாரண மக்கள். அதிகாரமோ படை பலமோ ஆள் பலமோ இல்லாத சாதாரண மக்கள். இதை மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் காட்டு யானைக்கும் கட்டெறும்புக்கும் நடக்கும் போட்டி. காட்டு யானைத் தன் சக்தியைப் பயன்படுத்தி அச்சுறுத்த முயல்கிறது. இதற்குப் பின்னால் உள்ளவர்கள் அரசியல்வாதிகள். குறிப்பாகக் காங்கிரஸும் பிஜேபியும். இவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆதாயம் உள்ளது. இது பல ஆயிரம் கோடிப் பணம் புரளும் திட்டம். இதில் கிடைக்கும் தரகுத் தொகையை வைத்து இன்னும் இரு தலைமுறைகளுக்கு அரசியல் நடத்தும் அளவுக்குப் பணம் சம்பாதிக்கலாம். காங்கிரஸ் கட்சியின் ஈடுபாட்டுக்கு அதுதான் காரணம். எல்லா ஒப்பந்தங்களிலும் இதுதான் நடக்கிறது. இங்கே இருக்கும் உள்ளூர்த் திருடர்கள் தங்கள் திருட்டை மறைக்க இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதிகாரவர்க்கத்திற்கும் கமிஷன் கிடைக்கும். அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. அணு ஆயுதத் தொழில்நுட்பம், யுரேனியம் போன்ற பல வியாபாரங்கள் நடக்கின்றன. அணு சக்தித் துறைக்கும் லாபம் இருக்கிறது. அனைவருமே வளர்ச்சி மனோபாவம் கொண்ட விஞ்ஞானிகள். இந்த அணு விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்குப் பயன்படுவதுபோல் ஒரு பென்சில் கூடக் கண்டுபிடித்ததில்லை. இவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை, அதிகார வர்க்கமாக இருப்பதால் கிடைக்கும் அனுகூலம் ஆகியவைதான் முக்கியம். தேசியப் பாதுகாப்பு இவர்கள் கையில்தான் இருக்கிறது என்பது போன்ற மயக்கத்தைத் தோற்றுவிக்கிறார்கள். எல்லாருமே தங்கள் சொந்த லாபத்திற்காகச் செயல்படுகிறார்கள். எல்லாருக்குமே அதிகாரம் இருக்கிறது. எல்லோருமே சக்தி படைத்தவர்கள். இப்படிப் பல அமைப்புகள், குழுக்கள்.

இந்தப் பக்கம் சாதாரண மக்கள். தங்கள் வாழ்வுக்காக, வாழ்வாதாரத்திற்காகப் போராடக்கூடிய மக்கள். இந்த இரண்டு சக்திகளுக்கும் சம்பந்தமே இல்லை. உலக அளவில் பல தனி நபர்கள், மனித உரிமை அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள். ஆனால் அந்த ஆதரவு பெரிய அளவில் பலம் பொருந்தியதாக இல்லை. உலகமெங்கிலுமிருந்து எங்களுக்கு 500, 600 கடிதங்கள் வந்துள்ளன. இந்த அளவில்தான் அந்த ஆதரவு உள்ளது. எனவே ஆற்றல் அளவில் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. ஆயுதங்களை ஏந்தியோ நேரடியாக மோதியோ இவர்களை வெற்றி கொள்வது சாத்தியமல்ல. நமது ஆன்ம பலத்தைத்தான் பயன்படுத்த வேண்டியதுள்ளது. நமது நியாயத்தைத்தான் மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டியதுள்ளது.

இது மிகப் பெரிய கடினமான போராட்டம். உள்துறை அமைச்சகத்தின் மூலம் எங்கள் வீடுகளைச் சோதனையிடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் நாம் நாராயணசாமி வீட்டிக்குப் போய் எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் அனைத்து ஆயுதங்களையும் எங்களுக்கெதிராகப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து எங்களை அவதூறு செய்கிறார்கள். வெளி நாட்டுப் பணம், அந்நிய சூழ்ச்சி என என்னவெல்லாமோ சொல்லிப் பார்க்கிறார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தை உடைத்தார்கள். வழக்குகள் போட்டார்கள். தேசத் துரோகி என்றார்கள். சிறையில் அடைத்தார்கள். வன்முறையைப் பிரயோகித்துப் பார்த்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் எளிய மனிதர்களைக்கொண்ட இந்தக் கூட்டத்தை அவர்களால் சிதைக்க முடியவில்லை. காரணம் இது நியாயமான உண்மையான போராட்டம். ஆகவே இந்தப் பக்கம் இருப்பது தனி ஆற்றல். அந்தப் பக்கம் இருப்பது குழு ஆற்றல். மடத்தனமான தசை பலமும் ஆன்ம பலமும் போட்டிபோடுகின்றன.

அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் இப்போராட்டத்தை முறியடிக்க முடியும். நிச்சயமாக முடியும். அந்த நிலைமையில்தான் இப்போது இங்கே இருந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய அத்தனை நடவடிக்கைகளையும் குடிமைச் சமுதாயம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த ஒரே ஒரு பயத்தில்தான் அரசுத் தரப்பில் சிறிது பின்வாங்கி நிற்கிறார்கள். ராணுவத்தைக் கொண்டுவரலாம். குண்டு போட்டுக் கூடக் கொல்ல முயலலாம். அவர்களது எந்த நடவடிக்கையையும் தடுக்கக்கூடிய நிலைமையில் நாங்கள் இப்போது இல்லை.

அப்படிப்பட்ட விபரீதம் எதுவும் நடக்கும் என எதிர் பார்க்கிறீர்களா?

என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள், கவனமாக இருங்கள் என நிறைய பேர் கூறினார்கள். சுட்டுத்தள்ள உத்தரவு என்று சில பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் பயப்படவில்லை. எல்லாரும் எப்படியும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். பிரதமராக இருந்தாலும் சாகத்தான் வேண்டும். அதனால் இறப்பதைக் குறித்த கவலை இங்கு இருக்கும் யாரிடமும் இல்லை. பத்தாம் தேதி நடந்த கலவரத்தில்கூட யாரும் உயிருக்காக ஓடித் தப்பிக்க முயலவில்லை. அப்படிப்பட்ட கூட்டமல்ல இது.

இங்கு வரும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்தச் சாதி மக்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உரிமைக்காக, வாழ்வுக்காக, எதிர் காலத்திற்காகப் போராடுகிறார்கள். எதிர்காலத்திற்காக மட்டும் என்றுகூடச் சொல்ல முடியாது. இந்திய ஜனநாயகத்திற்காகவும் போராடுகிறோம். இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். உலகமயமாக்கலுக்கு எதிரான, பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் போராட்டம். எனவே இந்தப் போராட்டத்திற்குப் பல அவசியமான கூறுகள் இருக்கின்றன. எனவே மக்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறார்கள். நியாயத்திற்காகப் போராடுகிறார்கள். எதிர்காலத்திற்காகப் போராடுகிறார்கள். இது தலைமுறைகளுக்காக நடத்தப்படும் போராட்டம். எனவே இறப்பதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் யாரும் இறப்பதற்குத் தயாராக இல்லை. அதுதான் முக்கியமான வித்தியாசம். அவர்களுக்குப் பணம்தான் குறிக்கோள். ஆனால் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்கள் இறப்பதற்குத் தயாராக இருப்பவர்கள்.

அரசு தற்காலிக நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால் நாங்கள் எதிர் காலத்திற்காகப் போராடுகிறோம். அரசு அதிகாரத்திற்காகப் போராடுகிறது. நாங்கள் புவிக் கோளத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம். இயற்கையும் இறையருளும் போராடுவோர் பக்கம்தான் உள்ளன. போராடும் மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். இது கடவுள் படைத்த பூமி. இதைப் பாதுகாக்கப் போராடுகிறோம் என்று சொல்கிறார்கள். எனவே நாம் இயற்கையைப் பாதுகாக்க, எளியவர்களைப் பாதுகாக்கப் போராடுகிறோம். இதன் அடிப்படையில் போராடுவோரின் சக்தி அரசைவிடப் பெரிய சக்தி. பார்ப்பதற்கு அரசு பலம் பொருந்திய சக்தியாகத் தென்படலாம் ஆனால் போராடுவோர்தான் இறுதியில் வெல்வர். நிச்சயமாக இந்தப் போராட்டம் வெற்றிபெறப்போகிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இதற்கு உகந்ததுபோல் அரசியல் சூழல்களும் புறச் சூழல்களும் இருக்கின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு. ஜப்பான்தான் அணு ஆயுதத்தாலும் அணு சக்தியாலும் பாதிக்கப்பட்ட ஒரே நாடு. 52 அணு மின்நிலையங்கள் இயங்கிக்கொண்டிருந்த அந்த நாட்டில் தற்போது வெறும் இரண்டே அணு மின்நிலையங்கள்தாம் செயல்படுகின்றன. ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற பல நாடுகளில் அணு உலைகளைத் தொடர்ந்து மூடிக்கொண்டிருக்கிறார்கள். நியாயத்தைச் சொல்வதால்தான் அவர்களும் யோசித்துச் செயல்பட வேண்டியதிருக்கிறது. அரசுத் தரப்பினரும் தாங்கள் தவறுக்கு மேல் தவறுசெய்துகொண்டிருப்பதை உணர்கிறார்கள். சில காவல் துறை அதிகாரிகளேகூட நீங்கள் நியாயத்திற்காகத்தான் போராடுகிறீர்கள் என்று எங்களிடம் சொல்கிறார்கள். பெரும்பாலானவர்கள் போராட்டத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இது இயற்கையை, எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று விளங்கிக்கொள்கிறார்கள். யாரும் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் எந்த வன்முறையிலும் இறங்காமல் கட்டுக்கோப்புடன் போராடிக்கொண்டிருக்கிறோம். அப்படியும்கூட இரண்டு உயிர்களை இழந்துள்ளோம். அரசாங்கம் ராணுவத்தை உள்ளே அனுப்பி எல்லாவற்றையும் துவம்சம் செய்து முடிக்க வேண்டுமெனில் முடிக்கலாம். அதற்கும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் பிரச்சினை அத்துடன் நிறைவுபெறாது. அப்பாவை இழந்த மகன், கணவனை இழந்த மனைவி போன்றவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். போராடிக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஒருவேளை மக்கள் வன்முறையைக் கையிலெடுத்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

மக்கள் இதுவரை வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.

காந்தி அஹிம்சைப் போராட்டத்தை வழிநடத்தியபோது சௌரிசௌரா போன்ற சம்பவங்களில் மக்கள் வன் முறையைக் கையில் எடுத்தார்கள். அத்தகைய சம்பவங்களின்போது காந்தி உண்ணாவிரதம் இருந்து மக்களை வன்முறையிலிருந்து வெளியே வரச் செய்து அறவழியை மீட்டெடுத்துள்ளார். ஒருவேளை இங்கும் மக்கள் வன் முறையைக் கையில் எடுக்க நேர்ந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

இது நல்ல கேள்வி. அதைப் போன்ற தர்மசங்கடமான நிலைமையில்தான் தற்போது இருக்கிறோம். அரசு புரிதல் உள்ளதாக இருந்தால் இந்தச் சூழ்நிலையில் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்திச் சிக்கலைத் தீர்க்கலாம். அதுதான் அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது. போன வாரம் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பெரியவர், இப்படிப் போராடிக்கொண்டிருந்தால் வேலைக்காகாது பதினைந்து பேருந்துகளை எரித்தால் தான் அரசாங்கம் நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்றார். என் பையன், அப்பா இவ்வளவு நாள் நீங்கள் போராடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அன்று கலவரம் வெடித்தபோதுதான் அனைத்துத் தரப்பினரும் திரும்பிப் பார்த்தார்கள் என்றான். வன்முறையைத்தான் எல்லாரும் பெரிதாக நினைக்கிறார்கள் என்றான். அவன் சொன்னது என்னைச் சிந்திக்கவைத்தது.

இங்குள்ள இளைஞர்கள்கூடச் சொல்கிறார்கள் உல்பா தீவிரவாதிகளோ மாவோயிஸ்டுகளோ யாரையாவது கடத்திச் சென்றால்தான் அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. அவர்களிடம் மண்டியிடுகிறது. ஆனால் நாம் அறவழியில் போராடினால் நீ பாட்டுக்குப் போராடு நான் யுரேனியத்தை நிரப்புகிறேன் என்று செயல்படுகிறது எனக் கூறுகிறார்கள். ஆக இந்த மாதிரியான வன்முறைப் போராட்டங்களுக்குத்தான் அரசு மதிப்பு கொடுக்கிறது என இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமான நிலைப்பாடு. அரசு அறவழிப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவற்றுக்குச் சமூக மதிப்பு கூடும். ஆனால் உலகின் அனைத்து அரசுகளும் இதற்கு நேர் எதிரிடையாகச் செயல்படுகின்றன. இங்கும் சிலர் வன்முறை வழியில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறுகின்றனர். இந்தக் கட்டத்தில்தான் நாம் அதிகப் பொறுமை காக்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

இப்போது நாங்கள் வன்முறையைக் கையிலெடுப்பது மிகவும் எளிது. மக்கள் மத்தியில் பெருங்கோபம் இருக்கிறது. ஒரு வருடம் போராடியும் அரசு கண்டுகொள்ளவில்லையே என்னும் வெறுப்பு இருக்கிறது. எனவே வன்முறையைத் தொடங்கிவிடலாம். ஆனால் அப்படி வன்முறையைக் கையிலெடுத்தால் அரசுத் தரப்புக்குத் தான் அது சாதகம். மக்கள் வன்முறையில் இறங்கியதால் வேறு வழியில்லாத சூழலில் அரசும் வன்முறையில் இறங்க வேண்டியதாகி விட்டது எனக் கூறி அனைத்து வன்முறைகளையும் அரங்கேற்றிவிட்டு எளிதாகத் தப்பித்துக்கொள்ளும். எனவே அவர்கள் தங்கள் வன்முறையை நியாயப்படுத்திக்கொள்ள நாமே வழிசெய்ததுபோல் ஆகிவிடும். நம்மிடம் இருப்பது வெறும் உடல் பலம்தான். மிஞ்சிப்போனால் கத்தியையோ கம்பையோ எடுத்துக் குத்தலாம். அது அரச வன்முறைக்கு ஈடாகாது. மேலும் உலகம் முழுவதும் நமக்கு ஆதரவு இருப்பதற்குக் காரணம் நாம் மேற்கொள்ளும் இந்த அமைதிப் போராட்டம்தான். மிகப் பெரிய வன்முறைக் கும்பலை ஆயுதமற்ற எளியவர்கள் திடத்துடன் எதிர்கொள்வதால்தான் நம்மீது அனுதாபம் வருகிறது. நமக்கு ஆதரவு கிடைக்கிறது. எனவே இப்படித் தான் நாம் தொடர்ந்து போக வேண்டும் எனத் தெரிவித்தேன். நாம் அறவழியில் தொடர்ந்து போராடினால்தான் உலக சமூகத்தின் ஆதரவு நமக்கு இருக்கும் என்று நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஒருவேளை அரசு மிகப் பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டால் போராட்டக் குழுவுக்கு மக்கள்மீது இருக்கும் பிடி தளர்ந்துபோகும். அதன் பின் நடக்கும் விளைவுகளை முன்தீர்மானிக்க முடியாது. அரசாங்கம் இவர்களை அடித்தால் இவர்கள் அணு மின்நிலையத்திற்குள் போய் அடிக்கலாம். அங்கு வேலைபார்ப்பவர்களை அடிக்கப் போகலாம். அடுத்த 40 வருடங்கள் அவர்கள் அங்கே வேலைசெய்ய வேண்டுமே. எப்போதும் இதேபோல் 10 ஆயிரம் போலீசாரை வைத்துக்கொண்டு அணு மின்நிலையத்தை இயக்க முடியாதே. உள்ளூர் மக்களின் உதவியுடன்தான் இதைப் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முடியும். ரஷ்யாவிலிருந்து ராணுவம் வந்து இதை இயக்க முடியாது. ஏனெனில் அணு மின்நிலையத்தில் பணியாற்றுபவர்கள் சுமூகமாக வாழ்க்கை நடத்த உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு வெளி உலகினரின் தொடர்பு மிக அவசியம். அரசாங்கம் இப்போது எடுக்கும் மோசமான நடவடிக்கைகள் ஒருபோதும் அணு மின்நிலையத்திற்கு உதவுவதாக அமையாது.

அணு மின்நிலையத்திற்கு மிகப் பெரிய எதிரிக் கூட்டத்தை இப்போது தமிழக அரசு உருவாக்கியுள்ளது. வீடு வீடாகத் தட்டி அங்குள்ள பெண்களிடம் வீட்டுக்காரரை எங்கே என்று கேட்கும்போது அவர் இல்லை எனப் பதிலளித்தால் நீங்கள் யாருடன் படுத்து உறங்குகிறீர்கள் என்ற அநாகரிகமான கேள்வி எழுப்பும்போது எங்களுக்கு ஆதரவு பெருகுகிறது. போலீஸ்காரர்கள் மாதக்கணக்காக இங்கே இருந்துகொண்டிருக்கும்போது அவர்களுடைய மனைவிகள் யார்யாருடன் படுத்து உறங்குகிறார்கள் என்று நாங்களும் கேட்க முடியும். ஆனால் கேட்கவில்லை என்று ஒரு பெண்மணி கூறினார். இந்த மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளால் கூடங்குளத்தை ஒட்டுமொத்தமாக அணு உலைக்கு எதிராகத் தமிழக அரசு மாற்றியிருக்கிறது. மணப்பாட்டில் அந்தோணி ஜானைக் கொலைசெய்ததாலும் இடிந்தகரையில் சகாயத்தை விமானத்தை ஓட்டிக் கொலைசெய்ததாலும் மக்களிடம் கோபமும் வெறுப்பும் அதிகமாகியுள்ளன. இதனால் அவர்கள் அணு உலைக்கு எதிரானவர்களாகத் தான் ஆகியிருக்கிறார்களே தவிர ஆதரவானவர்களாக மாறவில்லை.

ஒட்டுமொத்தத் தமிழகமே இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறது. கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் அரசின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கிறார்கள். அணு உலை வரும்போது அதைச் செயல்படுத்த அரசு எவ்வளவு மோசமான நடவடிக்கைகளிலும் இறங்கும் என்பதை உணர்கிறார்கள். இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இருக்கிறது என முடிவுசெய்துகொள்கிறார்கள். எதிர்காலத்தில் காவல் துறையினர் ரஷ்யாவிடமிருந்து கட்டளை பெற்றுத் தாக்கும் நிலைமை வரும், எதிர்கால வாழ்வில் நமது அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அதனால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று நாங்கள் மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம். பேச்சுவார்த்தை எனில் அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அது இருக்கக் கூடாது.

இனியன் தலைமையிலான குழு வந்தபோது நாங்கள் மன்றாடிக் கேட்டோம். நீங்கள் எங்கள் மக்களிடம் வந்து அவர்கள் சொல்வதைக் கேளுங்கள் என்றோம். அந்தக் குழுவில் இருந்த விஜயராகவன், ஸ்ரீனிவாசன் என்னும் அதிகாரிகள் இருவருக்கு இந்தக் கருத்தியலே புரியவில்லை. அவர்கள் மறுபடியும் மறுபடியும் தாங்கள் சொன்னால் மக்களுக்குப் புரியாது என்றுதான் கூறினார்கள். நீங்கள் பேசவே வேண்டாம் வந்து கேளுங்கள் என்றுதான் நாங்கள் சொன்னோம். விஜயராகவன் பெரிய அதிகாரியாக இருந்தவர், எம். ஆர். ஸ்ரீனிவாசன் அணு சக்தித் துறையின் தலைவராக இருந்தவர். அவர்கள் இருவருக்கும் கேட்பது என்னும் கருத்தியலே புரியவில்லை. சாதாரண மீனவனுக்கும் நாடாருக்கும் தலித்துக்கும் என்ன பேசத் தெரியும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த ஆளுமைச் சித்தாந்தத்தோடுதான் இதைப் பார்த்தார்கள். சோ ராமசாமி, சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப் பனர்கள் எல்லாம் இதைக் கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமே இன வெறிதான், சாதி வெறிதான். மீனவப் பயலுக்கு என்ன தெரியும் அணு மின்சாரம் பற்றி, நாங்கள் எடுக்கும் முடிவை நீ வழிநடத்த வேண்டுமே தவிர நீயாகச் சிந்தித்து எங்களைக் கேள்விகேட்க முடியாது. உனக்குச் சிந்திக்கத் தெரியாது. இப்படிப்பட்ட சித்தாந்தம் சமூகத்தில் மீண்டும் தலைதூக்குகிறது. அதனால் அந்த வழியாகவும் இந்தப் போராட்டத்தைப் பார்த்தாக வேண்டும். தயவுதாட்சணியமின்றி இந்தப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும், உதயகுமார்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோ ராமசாமி சொல்கிறார். இவர் பாசிஸவாதி. இதன் பின்னணியில் பிராமனீயம் மீண்டும் தலைதூக்குகிறது. இப்படிப்பட்ட கட்டமைப்பில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்தப் போராட்டம் முக்கியமான போராட்டம் என்று சொல்கிறோம். அதனால்தான் பேச்சு வார்த்தை நடத்தச் சொல்கிறோம். பேச்சுவார்த்தை என்னும் பெயரில் அரசு சொல்வதை மட்டும் நாங்கள் கேட்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. நாங்கள் பேசுவதையும் அரசு கேட்க வேண்டும்.

நாட்டுக்கு மின்சாரம் தேவை, வளர்ச்சி தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அதன் பேரில் நொடிந்து ஒடிந்துகிடக்கும் பன்னாட்டுப் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்துவதற்காக உலக நாடுகள் எல்லாம் கைவிட்டிருக்கும் தொழில்நுட்பத்தை எங்கள்மீது திணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக மாற்று வழிகளில் மின்சாரம் கொண்டு வருவதற்கு நாங்கள் உதவுகிறோம். இதை முதலமைச்சரிடம் கூறினோம். பத்தாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு நத்தம் விஸ்வநாதன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் மூழ்கியிருக்கிறார். பதினாறு மணி நேரம் மின்வெட்டு. அலுவலகத்திலிருந்து இதை முறைப்படுத்த வேண்டிய அமைச்சர் இடைத்தேர்தல் வேலைகளில் இறங்கி ஊர் ஊராகச் சென்றுகொண்டிருக்கிறார். மின்சாரம் குறித்துப் பேசுவதற்குப் பொறுப்பான அமைச்சர் அவர். அவரும் அலுவலகத்தில் இருப்ப தில்லை. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலுக்கு 32 அமைச்சர்கள் வேலைபார்க்கிறார்கள். இதுதான் நிலைமை. அரசு தன் நடைமுறையை மாற்றிக் கொள்ளட்டும். எங்கள் பகுதியிலுள்ள கூட்டப்புளி, பெருமணல் கூடங்குளம், வைராவிக்கிணறு, இடிந்த கரை, கூத்தங்குளி போன்ற ஆறு கிராமங்களிலும் குண்டு பல்புகளை மாற்றிவிட்டுச் குச்சி விளக்குகளைப் பொருத்தினோம். எட்டாயிரம் விளக்குகள்வரை எங்கள் சொந்தச் செலவில் வாங்கிக்கொடுத்துள்ளோம். எந்த அரசு மானியமும் கிடையாது. சூரிய சக்தி மின்சாரம் குறித்து யோசியுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விளக்கு ஒரு மின்விசிறிக்கு சூரியத் தகடு பொருத்துங்கள். மின்சாரம் இல்லாவிட்டால்கூட மக்கள் வீட்டில் நிம்மதியாகப் படுத்து உறங்கலாம். அந்த மாதிரி பிரச்சாரத்தைக் கொண்டுவாருங்கள். முதலமைச்சர் நிலைப் பாட்டை மாற்றிக்கொள்வதுவரை அணு சக்தியைப் பற்றி வாயைத் திறக்கவே இல்லை. 45 நிமிடங்கள் முதலமைச்சரிடம் நான்தான் பேசினேன். அழகான ஆங்கிலத்தில் என் கண்ணைப் பார்த்துப் பேசினார். எரிசக்திக் கொள்கையை மாற்ற வேண்டும் மேடம் என நான் சொன்னபோது, சிறிது யோசித்துவிட்டு, ‘I cannot do it over night’ என்றார். ஏன் ‘நான்’ என்று கூறினார் என எனக்குத் தெரியவில்லை. அவர் முதலமைச்சர்தான். ஆனாலும் ‘I cannot do it’ என்றார். நான் கூறியதை எல்லாம் பொறுமையாகக் கேட்டார். எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது. இவர் நமது நிலைப் பாட்டைத்தான் எடுத்திருக்கிறார். அதுதான் உண்மையும் கூட. இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தார். அமெரிக்கக் கப்பலைச் சென்னைத் துறைமுகத்திற்குள் அனுமதிக்க மறுத்தார். ‘உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்று கூறினார். மார்ச் 2012 வரை அணு சக்தியை ஆதரித்து அவர் ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. இப்போதுகூடப் பட்டும்படாமலும்தான் பேசுகிறாரே ஒழிய, முழுமூச்சாக இறங்கி இதுதான் ஒரே வழி என்று சொன்னதே இல்லை. அதனால்தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கிறோம்.

பேச்சுவார்த்தையில் எங்களுக்கு வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் தரப்பட வேண்டும். Site Evaluation Report, Safety Analysis Report, அணு உலைத் தொழில்நுட்பத்தின் செயல்திறன் அறிக்கை, Emergency Preparedness Plan இந்த மாதிரி தகவல்களை எங்களுக்குத் தர வேண்டும். முழு உண்மையையும் மேசையில் எடுத்துவையுங்கள் நாங்கள் படிக்கிறோம். மனப்பூர்வமாக மனம்விட்டுப் பேசுவோம். முத்துநாயகம் குழுவில் இருந்த பெரும்பாலானவர்கள் அணு சக்தித் துறையில் பணம் பெற்றவர்கள். அணு சக்தித் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். முத்துநாயகம் அந்தக் குழுவின் தலைவராக இருந்தாலும் அணு சக்தித் துறையைச் சேர்ந்தவர். டாக்டர் சாந்தா அணு சக்தித் துறையிடம் பணம் பெறுபவர். அதனால்தான் அணு சக்திக்கும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். அதனால் இந்த மாதிரியான நபர்கள் வேண்டாம். அரசியல் அதிகாரத்தோடு தொடர்பற்ற சுதந்திரமான விஞ்ஞானிகளை இரு தரப்பிலிருந்தும் வைத்துப் பேசுவோம். அணு சக்தி குறித்த முழு உண்மையைச் சொல்வோம். கூடங்குளத்தில் ஒரு அணுசக்திப் பூங்கா, கல்பாக்கத்தில் ஒரு அணுசக்திப் பூங்கா, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமெரிக்க உதவியுடன் ஒரு அணுசக்திப் பூங்கா, மேற்கு வங்காளம் ஹரிப்பூரில் ரஷ்ய உதவியுடன் ஒரு அணுசக்திப் பூங்கா, மகாராஷ்டிரம் மாநிலம் ஜெய்தாபூரில் பிரெஞ்சு உதவியுடன் ஒரு அணுசக்திப் பூங்கா, குஜராத்தில் அமெரிக்க உதவியுடன் ஒரு அணுசக்தி பூங்கா, ஒரிசாவில் ஒரு அணுசக்திப் பூங்கா என இவ்வளவு அணு மின்நிலையங்கள் வரும்போது நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் - கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் - கடலோரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் வாழக்கூடிய அடர்த்தியான நாட்டில் கதிர்வீச்சு, புகை, கதிர்வீச்சுக் கழிவுகள், கதிர்வீச்சுத் தண்ணீர் ஆகியவற்றால் இவ்வளவு மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும், எவ்வளவு பேருக்கு என்னென்ன நோய்கள் வரும், அவை எத்தனை தலைமுறைகளைப் பாதிக்கும்? இதைப் பற்றி யாராவது பேசுகிறார்களா?

நம் நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 42 சதவிகிதக் குழந்தைகள் நோஞ்சான்களாக, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளாகப் பிறக்கின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் சிறிதுகூடக் கூச்சமின்றிக் கூறுகிறார். இந்த நிலைமைக்கு வெட்கப்பட வேண்டாமா? வல்லரசு என்கிறீர்கள், ஏவுகணை, அணுகுண்டு தயாரிக்கிறீர்கள். ஆனால் 42 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடோடு பிறக்கின்றன. அரசே 42 சதவிகிதம் என்று கூறினால் உண்மைநிலை 80 சதவிகிதமாக இருக்கும். வயிற்றில் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளைச் சுமந்துகொண்டு, நோஞ்சான் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு கடலோர மக்கள் வாழும்போது கடல் உணவு நஞ்சாகிவிட்டால் என்ன ஆகும்? உணவுப் பாதுகாப்பு என்ன ஆகும்? மக்களுக்கு வேண்டியது வெறும் சோறு மாத்திரமல்ல. நம் மக்களுக்கு முக்கியமான உணவு மீன். உணவுப் பாதுகாப்பும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் என்னவாகும்? இந்திய மக்களுக்காகச் சிந்திப்பதாக இருந்தால் பிரதமர் இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டும். ஆனால் நீங்கள் யாருக்கு வேலைசெய்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டியது பதவி, நாற்காலி.

பேச்சுவார்த்தை என்று வந்தால் எல்லாவற்றையும் பேசுவோம். இயற்கை ஆதாரங்களிலிருந்து மின்சாரம் எடுப்பது குறித்த திட்டங்களைக் குறித்து யோசிப்போம். ஆனால் இப்படியான பரந்துபட்ட முழு அளவிலான பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராக இல்லை. நடப்பது அனைத்துமே உள்ளீடற்ற தட்டையான பேச்சுவார்த்தைகள். முத்துநாயகம் வருவார். நாங்கள் கேட்கும் கேள்விக்குப் பட்டும்படாமலும் பதில் சொல்வார். ஐந்து கேள்விகளுக்குப் பதிலே சொல்லமாட்டார். மற்ற கேள்விகளுக்குத் தொட்டும் தொடாமலும் சொல்வார். செயலிழப்பு குறித்து நாங்கள் கேள்வி கேட்டோம். மிகச் சரியான திட்டம் உள்ளது என்றார். இந்தியாவின் மிகப் பெரிய அணு உலை இதுதான் ஆயிரம் மெகாவாட். மற்றவை எல்லாம் 220, 250 மெகாவாட்தான். அதிகபட்சம் 500 மெகாவாட்தான். ஆக இவ்வளவு பெரிய அணு உலையைச் செயலிழக்கச் செய்வதற்கு என்ன திட்டம் உள்ளது எனக் கேட்டபோது மிகச் சரியான திட்டம் உள்ளது என்றார். இரண்டு வாரத்திற்கு முன்னர், அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம் குறித்து சிஏஜி அறிக்கை ஒன்று வருகிறது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் திறம்படச் செயல்படவில்லை என்று அது கூறுகிறது. 30 வருடங்கள் இயங்கினாலும் மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்ளவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் இருக்கும் எக்ஸ்ரே நிறுவனங்களைக்கூட இவர்கள் இன்னும் முறைப்படுத்தவில்லை. இந்தியாவில் உள்ள எந்த அணு உலையையும் செயலிழக்கச்செய்ய இவர்களிடம் எந்தத் திட்டமும் கிடையாது; தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் முத்துநாயகம் எங்களிடம் முழுப்பொய்யைச் சொல்லிச் சென்றார். இவர்களை நம்பி எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது? இனியன் குழுவில் எம். ஆர். ஸ்ரீனிவாசன் இருக்கிறார். மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் எப்படி அவர் இருக்க முடியும்? எம். ஆர். ஸ்ரீனிவாசன் அணுசக்தித் துறையின் தலைவர், அதன் உறுப்பினர். இந்த இடத்தைக் கண்டுபிடித்ததே அவர்தான். அவர் எப்படி இங்குப் பிரச்சினை இருக்கிறது என்று கூறுவார்?

எங்கள் அறிவியல் நிபுணர் குழுவினர் அருமையான அறிக்கை அளித்துள்ளார்கள். அதில் அவர்கள் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இங்குப் பாறையின் தடிமன் குறைவாக இருக்கிறது. பூமிக்குள் வெற்றிடங்கள் இருக்கின்றன. கடலுக்குள் இரண்டு வண்டல் மண் குவியல்கள் இருக்கின்றன. சிறு நில அதிர்வு வந்தால்கூட அதில் நிலச்சரிவு ஏற்பட்டுச் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மணப்பாட்டில் ஒரு வெப்ப நீரூற்று திடீரென ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சங்கோயில் நிலப்பிளவு. அதனால் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இப்படிப் பல விஷயங்களைத் தெரிவிக்கிறார்கள். 2004இலிருந்து இப்போதுவரை இந்தோனேஷியா, அந்தமான நிக்கோபார் பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் ஆறு புள்ளிகளுக்கு மேல் பதிவான மிகப் பெரிய நில அதிர்வுகள் எட்டு முதல் பத்து இருக்கும். இவை அனைத்துமே நம்மைப் பாதிக்கும் விஷயங்கள். இவை குறித்த அரசு எந்தவிதமான விளக்கமும் தருவதில்லை. இந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட நில அதிர்வை ஒட்டிச் சுனாமி வந்திருந்தால் கூடங்குளம் நிச்சயம் காலி ஆகியிருக்கும். இப்படி இருக்கும்போது இவர்களைக் கேட்டால் அனைத்தையும் திட்டம் போட்டுத்தான் செயல்படுத்தியுள்ளோம் என்கிறார்கள். முதல் சுனாமி வந்தது 2004இல். கூடங்குள முதல் அணு உலைக்குக் கான்கிரீட் போட்டது 2001இல். சுனாமி வந்தபோது மத்திய அரசு சுனாமி என்னும் வார்த்தையையே அப்போதுதான் கேள்விப்பட்டோம் என்றது. இப்போது கேட்டால் 2001இலேயே திட்டம் போட்டுச் செயல்படுத்தினோம் என்கிறார்கள். சுனாமியால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 25 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளார்களாம். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. சுனாமியின் போது அதைவிட அதிக உயரமான அலைகள் எழும்பின. இவர்கள் 25 அடி உயரத்தில் கட்டிவைத்துக்கொண்டு பாதுகாப்பாக உள்ளது என்கிறார்கள். இப்படிப்பட்ட பொய்யான விஞ்ஞானம் இல்லாமல் முழு உண்மையையும் விவாதிக்ககூடிய பேச்சுவார்த்தையை நடத்தினால் தான் இப்பிரச்சினையில் ஒரு தீர்வை எட்ட முடியும். இது கூடங்குளத்தை மட்டும் மையப்படுத்தியதாக இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அணு சக்தி தேவையா என்பது போன்ற தேசிய அளவிலான விவாதம் நடந்தால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலும்.

நீங்கள் எப்படி இடிந்தகரைக்குக் குடிபெயர்ந்து வந்தீர்கள்? போராளிகள் மக்களுடன் மக்களாகக் கலந்து வாழ்வது உலக அளவில் நடைமுறையில் உள்ளது. உங்களுக்கு அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி உண்ணாவிரதம் எனத் திட்டமிட்டிருந்தோம். எனவே செப்டம்பர் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமங்களில் நண்பர்களுடன் இணைந்து உண்ணாவிரதத்திற்கு வரச் சொல்லி மக்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது இடிந்தகரைப் பங்குத் தந்தை ஜெயக்குமார் தொலைபேசியில் பேசினார். ‘இங்குப் போலீசைக் குவிக்கிறார்கள். உங்களை ஊருக்குள் வரவிடாமல் செய்துவிடுவார்கள். எனவே விரைவில் வந்துவிடுங்கள்’ என்றார். எனவே உடனடியாக ராதாபுரம் வழியாக உள்ளே வந்துவிட்டோம். வந்து இந்தக் கோயிலில்தான் படுத்திருந்தேன். பின்னர் போராட்டத்தை ஆரம்பித்தோம். தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வெளியில் படுப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இந்த வீட்டிற்குள் வந்தேன். அப்படித்தான் இந்த வீட்டில் குடியேறினேன். திட்டம் போட்டு வர வில்லை. பின்னர் முகிலன், ராயன் போன்ற நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து இப்போது எல்லோரும் இங்கேயே இருக்கிறோம். அப்போது போராட்டக் குழுவை ஒருங்கிணைத்தோம். போராட்டம் நடைபெற்ற சூழலில் வீட்டிற்குப் போக முடியாத நிலை. இடையில் சின்ன இடைவெளி கிடைத்தபோது வீட்டிற்குச் சென்றுவந்தேன். மறுபடி அக்டோபரில் உண்ணாநிலைப் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என்று தொடர்ந்து வந்தன. அப்போதெல்லாம் வீட்டிற்குப் போக முடியாது. அப்படியே சென்றாலும் காவல்துறையினரின் நெருக்கடி இருந்தது. எனவே இங்கேயே இருந்தேன். போராளிகள் மக்களுடன் மக்களாக இருந்து போராட வேண்டும் அதுதான் உண்மையான கல்வி என்றார் மாவோ. நான் எத்தனையோ பல்கலைக்கழகங்களில் பெற்ற பல கல்விகளைவிட இந்த மக்களிடம் பழகியதில் கிடைத்த கல்விதான் உண்மையான கல்வி.

இந்தப் பயிற்சி உங்கள் ஆளுமையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிதா?

நிச்சயமாக. இங்கு வந்து சேர்ந்த பிறகுதான் கேட்பது என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். அமெரிக்காவில் வெறுமனே கேட்பது என்பது அல்லாமல் கூர்ந்து கவனிப்பது, உள்வாங்கிகொள்வது ஆகியவை குறித்த கல்வி கிடைத்தது. ஆனால் இங்கே வந்த பின்னர்தான் அதை நடைமுறையில் உணர்ந்தேன். இங்கே வந்த பின்னர்தான் கவனிக்கும் திறன் அதிகரித்தது. கல்லூரிப் பேராசிரியர்களிடமிருந்து கிடைக்காத அனுபவ ஞானமும் விஞ்ஞானமும் இந்த மக்களிடமிருந்து கிடைத்தன. இது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நான் உணர்கிறேன். இவர்களிடம் பழகிய பின்னர்தான் நான் மீன் சாப்பிடத் தொடங்கினேன். அதுவரை எனக்கு மீன் நாற்றமே பிடிக்காது. இப்போது அவர்களுடன் சேர்ந்து மீன் சாப்பிடுகிறேன்.

மீன் உணவு எப்படி இருக்கிறது?

சில மீன்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆகவே மக்களிடம் கிடைத்த கல்வி உண்மையிலேயே அற்புதமான கல்வி. எனவே என் மனைவியிடம்கூடக் குழந்தைகளுக்குப் புத்தகங்களின் மீது நாட்டம் ஏற்படுத்துவது மட்டும் போதும், பிற விஷயங்களை அவர்கள் மக்களைப் பார்த்துத்தான் படிக்க முடியும் என்று சொல்வேன்.

நீங்கள் குடும்பத்தை விட்டு இப்படிப் போராட வந்தது குறித்து உங்கள் மனைவி என்ன கருதுகிறார்?

அவருக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. நெருக்கடிக் காலங்களில் மாதத்திற்கு ஒருமுறை மனைவி, பிள்ளைகள், அப்பா, அம்மா அனைவரும் வருவார்கள். பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் மிக நெருக்கமான தம்பதி. எல்லா விஷயங்களையும் இருவரும் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்தவோ கட்டுக்குள்வைக்கவோ முயல்வதில்லை. இப்போது அடிக்கடிப் பேசிக்கொள்ள முடியாது. தொலைபேசி உரையாடல்களைப் பதிவுசெய்கிறார்கள். நேரில் வரும்போது தனியாகப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. எல்லோர் முன்னிலையிலும் தான் பேசிக்கொள்கிறோம். பிள்ளைகள் இருவரும் என்னுடன் இருக்கும் அருமையான தருணங்களைத் தவறவிட்டிருப்பதுபோல் உணர்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் என்னுடன்தான் படுத்து உறங்குவார்கள். ஏனெனில் நான்தான் வீட்டின் கதை சொல்லி. அவர்களுக்கு நான்தான் கதை சொல்லுவேன். கொஞ்சம் வளர்ந்ததும் சுயசரிதைகள் கேட்பார்கள். நெல்சன் மண்டேலா, மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர்களுக்குச் சொல்வேன். படுக்கையில் படுத்திருக்கும்போது உறங்குவதற்கு முன்னர் இது ஒரு சடங்குபோல் நடக்கும். ஒரு நாள் ஒரு குறிப்பிட்ட பகுதிவரை முடித்துவிட்டு அடுத்த நாள் அதிலிருந்து தொடருவோம். இப்போது அதைப் போன்ற நடைமுறைகள் இல்லை. பிள்ளைகள் இருவரும் என்னை மிகவும் தேடுகிறார்கள். மனைவி வீட்டு நிர்வாகம், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றைக் கவனிப்பதுடன் எங்களுடைய அப்பா அம்மாக்களையும் கவனித்துக்கொள்கிறார். அது ஒரு சுமைதான். ஆனால் அனைத்தையும் சமாளித்துக்கொள்கிறார்.

உங்கள் போராட்டத்திற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து ஆதரவு கிடைத்துவருகிறது. அவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள், எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள், அவற்றிடமிருந்து எவ்வளவு இடைவெளியுடன் இருக்கிறீர்கள்? அரசியல்வாதிகள் குறித்தும் அரசியல் குறித்தும் உங்களது நிலைப்பாடு என்ன?

போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கின்றன. அது பெரிய வெற்றி. எல்லாத் தலைவர்களையும் நாங்கள் அணுகினோம். சிலரை அணுக முடியவில்லை. காங்கிரஸ், பிஜேபி போன்ற கட்சிகள் அணு உலை ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள். திமுக ஆதரவுதான். கனிமொழியின் நாடாளுமன்ற உரையிலேயே அணு உலை ஆதரவு கருத்துகள் இருந்தன. அது காலச்சுவடிலேயே வெளியிடப்பட்டது. நான்கூட அதற்கு எதிர்வினை எழுதினேன். அதிமுகவைப் பொறுத்தவரை ஆதரவுதான். சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கொஞ்சம் குழப்பகரமான நிலையில் இருக்கிறார்கள். சில அணு உலைகளை ஆதரிக்கிறார்கள். சிலவற்றை எதிர்க்கிறார்கள். கூடங்குளம் அணு உலை ரஷ்யா உதவியுடன் என்பதால் ஆதரிக்கிறார்கள். ஆபத்தான ஆறு ஆதரவான நூறு என்று தெரிவித்தோம். அதனால் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. மக்களுக்காகப் பாடுபடும் அமைப்பினர் எல்லாம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் எந்த அரசியல் கட்சியையோ அரசியல் தலைவரையோ சித்தாந்தத்தையோ முன்னிலைப்படுத்தவில்லை. அனைத்துப் பிரிவினருடன் சீரான உறவு வைத்திருக்கிறோம். அனைத்துத் தலைவர்களும் வருகிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அவர்கள் அதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. சென்னையில் ஒரு மாநாடு நடந்தபோது பெரும்பாலான தலைவர்கள் வந்தார்கள். கடந்த வாரம் ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம். பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகளும் சில கட்சிகளின் தலைவர்களும் வந்திருந்தார்கள். எந்த அரசியல் கட்சியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வரவில்லை. நாங்களும் கேட்கவில்லை. மக்கள் போராடுகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளாத இந்தச் சூழலில் என்ன செய்யலாம் என்று கேட்டோம். சட்டமன்றத்தை முற்றுகையிடலாம் என்று சொன்னார்கள். அப்படித்தான் இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியல் ஆசை கிடையாது. அதனால் நாங்கள் முதலமைச்சரிடம் பேசியபோது எங்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்தோம். பின்னணியிலிருந்து திமுக தூண்டிவிட்டதைப் போன்ற தோற்றத்தை முதலில் அதிமுக வட்டத்தில் ஏற்படுத்தினார்கள். எனவே நாங்கள் முதலமைச்சரிடமே கூறினோம். அப்பா திமுககாரர். ஆனால் நான் திமுககாரனல்ல. திமுக ஆட்சி நடத்திய காலத்திலும் அணு உலையை எதிர்த்திருக்கிறோம் என்றெல்லாம் தெரிவித்துப் போராட்ட வரலாற்றை 31 பக்கங்களில் தொகுத்து முதலமைச்சரிடம் கொடுத்தோம். அதனால் எங்களுக்கு எந்த அரசியல் கட்சியின் பின்னணியும் கிடையாது என்றோம். அவர் படிக்கிறேன் என்று அதை வாங்கினார். ஆனால் நாங்கள் நிச்சயமாக அரசியல் பேசுகிறோம். நாங்கள் இப்போது செய்துகொண்டிருப்பது அரசியலின் உச்சக்கட்டம். வளர்ச்சி குறித்த, மக்களின் அடிப்படை வசதி குறித்த அரசியலை நாங்கள் பேசுகிறோம். அந்த அரசியலில்தான் நானும் நண்பர்களும் தீவிரமாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். ஆனால் ஒரு அரசியல் கட்சியிடம் எங்கள் மூளையை அடகு வைப்பது போன்ற நிலைப்பாடு எங்களிடம் இல்லை.

அர்விந்த் கெஜ்ரிவால் வந்திருந்தபோது தன்னுடைய அமைப்பில் சேருங்கள் என்று கேட்டார். நாங்கள் வாக்குவங்கி அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. அதனால் நாங்கள் யோசித்துதான் பதில் சொல்ல முடியும் என்றோம். இப்போதுகூட எந்த அரசியல் பதவிக்குள்ளும் செல்லும் எண்ணம் எனக்கோ நண்பர்களுக்கோ இல்லவே இல்லை. மாற்று அரசியலுக்கான தேவை இருக்கிறது என்பதில் உளப்பூர்வமான நம்பிக்கை இருக்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தேசியத் தலைவர் நடத்தினால் நன்றாக இருக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை பச்சைத் தமிழ்த் தேசியம் என்று ஒரு கட்டுரைகூட எழுதினேன். தமிழகத்தின் இயற்கையைப் பாதுகாப்பது போன்ற ஓர் அரசியல் கட்டாயம் நமக்கு வேண்டும். ஆனால் அதை மலையாளிகளுக்கோ சிங்களர்களுக்கோ எதிரானதாக நடத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் எப்படியும் அந்த மக்களுடன் நாம் வாழ்ந்துதான் தீர வேண்டும். அது சிக்கலான விஷயம். ஆனால் அதை எல்லாம் இப்போது பேசும் நிலையில் இல்லை. போராட்டக் களத்திற்குள் நிற்கும்போது அதைப் போன்ற தத்துவார்த்த விவாதங்களுக்குள் போக முடியாது. அதனால் அதைக் கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறோம். ஆனால் இந்தப் போராட்டம் நிச்சயமாக வெற்றிபெறும் என உறுதியாக நம்புகிறோம். அப்படி ஒரு நிலைமை வரும்போது இந்த மாதிரியான குரலற்ற, சக்தியற்ற மக்களுக்காக என்னென்ன வழிகளில் உழைக்க முடியுமோ அப்படி எல்லாம் உழைப்போம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எந்த அரசியல் எண்ணமோ ஆசையோ இல்லை. நிச்சயமாகச் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது.

காலச்சுவடில் கனிமொழி உரைக்கு எதிர்வினை எழுதியிருந்தீர்கள், உங்களது கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தோம். காலச்சுவடின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காலச்சுவடு முக்கியமான பத்திரிகை. சுந்தர ராமசாமி காலத்திலேயே அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். பலமுறை அவரது வீட்டு வரவேற்பரையில் அவரும் நானும் மட்டும் உரையாடியிருக்கிறோம். அப்போது நான் ஆங்கிலத்தில்தான் எழுதுவேன். இப்போதுகூட ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக இருக்கிறது. அவரைப் பார்த்து உரையாடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் என்னைத் தமிழில் எழுத ஊக்கப்படுத்தினார். என்னை ஒரு எழுத்தாளனாக நான் பார்த்ததே இல்லை. ‘ஏன் தமிழில் எழுத வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டபோது, ‘மக்களிடம் உங்கள் கருத்துகளைக் கொண்டுசேர்ப்பதற்கு இதுதான் உதவும். ஆங்கிலம் வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் பேசுவதற்குத்தான் பயன்படும்’ என்று சொன்னார். கண்ணன் பின்னர்தான் அறிமுகமானார். காலச்சுவடில் என்னை எழுதவைத்திருக்கிறார். அதில் எழுதுவதற்கு நமக்கு எதாவது இருக்கிறதா என்று நான் எண்ணியதுண்டு. நாகர்கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்கு எதிரே உள்ள வீட்டில்தான் பூதை சொ. அண்ணாமலை என்று ஒருவர் இருந்தார். வலது கம்யூனிஸ்ட் தோழர். நான் பள்ளி மாணவனாக இருந்த போது கைவிளக்கு என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் என் அம்மாவும் ஒன்றாக வேலைபார்த்தார்கள். அவர் கைவிளக்கு பத்திரிகையில் எழுதச் சொல்வார். நான் அதில் சின்னச் சின்னக் கதைகள் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எனக்கு எழுதும் திறமை அல்லது பொறுமை இருக்கிறது என்று காட்டியது அவர்தான். காலச்சுவடில் ஒன்றிரண்டுதான் எழுதியுள்ளேன். பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. ஆனால் கண்ணன் சிறந்த நண்பர். நீண்ட காலமாகத் தெரியும். கண்ணனுடைய மனைவியும் என் மனைவியும் நண்பர்கள். இப்போதும் அந்தக் குடும்ப நட்பு உள்ளது. கனிமொழியின் நாடாளுமன்ற உரைக்கு அவர்தான் என்னை எதிர்வினை எழுதச் சொன்னார். அந்தக் கட்டுரை பிரசுரமான உடன் நூலகச் சந்தாவை அரசாங்கம் ரத்துசெய்தது. அவர் செயலாளராக இருந்தபோது ரோட்டரி கிளப்பில் என்னை கூடங்குளம் பற்றி உரை நிகழ்த்த அழைத்துள் ளார். காலச்சுவடில் நான் அதிகமாக எழுதியதில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து படிக்கிறேன்.

ஏஷியா நெட்டுக்கு அளித்திருந்த நேர்காணலில் நீதிமன்றங்களைப் பொருட்படுத்தவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். நமது அரசியலமைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நீதிமன்றங்களைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறவில்லை. நீதிமன்றங்களுக்கு நாங்கள் செல்லவில்லை என்று கூறியிருந்தேன். நீதிமன்றத்தைவிட நாடாளு மன்றத்தைவிட மக்கள் மன்றம்தான் இப்பிரச்சினையில் முடிவெடுக்க முடியும். ஏனெனில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு நமது ஊரின் தாக்கம் பற்றி என்ன தெரியும்? பெரும்பாலான நீதிபதிகளுக்கு விஞ்ஞானப் பின்னணியே கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்குக்கூடப் பூவுலகின் நண்பர்கள் போன்ற எங்கள் தோழமை இயக்க நண்பர்கள்தான் செல்கிறார்கள். நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன என்றால் அரசைச் சாடுவதுபோல் இரண்டு மூன்று கருத்துகளைச் சொல்கின்றன. மக்கள் மத்தியில் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்க முயல்வது; பின்னர் அரசாங்கம் தரும் தவறான அறிக்கைகளை வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்வது என்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்த அறிக்கை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அறிக்கை போன்றவற்றை வைத்துத் தீர்ப்பு சொல்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான உங்கள் விமர்சனங்கள் என்ன?

ஆளும் வர்க்கத்தினரால் ஆளும் வர்க்கத்தினருக்காக நடத்தப்படும் ஆட்சி. மற்ற மக்களுக்கு இதில் எந்த முன்னுரிமையும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் பெரும்பாலான திட்டங்களில் ஏழைகள் முதலில் இறக்கிறார்கள். நட்டம் ஏழைகளுக்கு லாபம் பணக்காரர்களுக்கு. இறப்பு என்று வரும்போது ஏழை முதலில் சாகிறான் பணக்காரன் பின்னர்தான் இறக்கிறான். இதுதான் எல்லாப் பேரிடர்களிலும் நிகழ்கிறது. எங்கேயாவது பத்து எம்பிக்கள் இறந்துள்ளார்களா? சினிமா தியேட்டர் தீவிபத்தாக இருக்கட்டும். பள்ளிக்கூடத் தீவிபத்தாக இருக்கட்டும் பட்டாசுத் தொழிற் சாலை விபத்தாக இருக்கட்டும் ஏழைகள்தான் இறக்கிறார்கள். இப்படியான வேறுபாடுகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.

ஊழல் ஒரு பெரிய பிரச்சினை. நிர்வாகத்திறனின்மை. ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மக்களின் பிரச்சினைகள் ஒருபோதும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. மின்சாரம் குறித்த எதிர்காலச் சிந்தனை எதுவும் அரசுக்குக் கிடையாது. இன்று எவ்வளவு திருடுவது என்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. தொலைநோக்குப் பார்வை என்பது அரசிடம் துளிகூட இல்லை. ஆனால் நமது கலாச்சாரத்தில் தொலைநோக்குப் பார்வை என்பது இருக்கிறது. எதிர்காலம் குறித்து மிக ஆழமாகச் சிந்திக்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். ஆனால் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுகளவும் எதிர்காலச் சிந்தனை இல்லை. தங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கிறார்கள். எதிர்காலச் சிந்தனையின்மை, வாழ்வுரிமைகளைப் பற்றிக் கவலைப்படாமை, அடித்தட்டு மக்களைப் பற்றிக் கடுகளவும் சிந்திக்காமை, சுயநலம் இவைதான் அவர்களது அடையாளம். அதிலும் முக்கியமாகப் பொது வாழ்க்கைக்கு வருவதே சுயநலத்துடன்தான். பழைய காலத்தில் மக்கள் பொது வாழ்க்கைக்குச் சேவைசெய்ய மட்டும்தான் வந்தார்கள். இப்போது மக்களுக்கு அந்தக் கருத்தியலே புரியவில்லை. அதனால்தான் எங்களைச் சந்தேகப்படுகிறார்கள். இவன் அமெரிக்காவில் படித்தவன் வேலையை எல்லாம் விட்டுவிட்டு இதற்கு வருகிறான் என்றால் இவனுக்கு ஏதோ ஆதாயம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. காந்தி எந்த ஆதாயத்தை எதிர்பார்த்து வந்தார்? தன்னலமற்ற பொது வாழ்வு என்னும் கருத்தியலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள். மேலும் நமக்கென்ன என்னும் சுயநலமான மனோபாவமும் அதிகரித்துவிட்டது. தன் கண் முன்னே நடக்கும் தீமைகளை மாற்றியமைக்கத் தேவைப்படும் மன உறுதி மனிதர்களிடம் இல்லை. ஜேபி கூறியது போன்ற முழுப்புரட்சிதான் தேவை.

காந்தி பற்றி உங்களுக்கு ஏதாவது விமர்சனங்கள் இருக்கின்றனவா?

வர்ணாசிரமக் கொள்கைகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று பேசாதது குறித்த வருத்தம் உண்டு. ஆளும் கட்டமைப்பை இன்னும் வலிமையுடன் சாடியிருக்கலாம் என்னும் வருத்தம் உண்டு. தன் கீழே உள்ளவர்களை வளரவிடாமல் செய்த சூழ்நிலைக்குக் காரணமானவர் என்ற வருத்தம் உண்டு. அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களை இன்னும் கொஞ்சம் நேர்மறையுடன் கையாண்டிருக்கலாம். இவற்றைத் தவிர மற்ற விஷயங்களில் நான் காந்தியை உண்மையாக மதிக்கிறேன், நம்புகிறேன். காந்தி மாபெரும் தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காந்தியைப் போன்ற பெண்ணியவாதியோ தலித் விடுதலைத் தலைவரோ இல்லை என்பது என்னுடைய நிலை. அம்பேத்கர் இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவரது அணுகுமுறையும் காந்தியின் அணுகுமுறையும் வித்தியாசமாக இருந்தன. காந்தி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். ‘நீ பிராமணனின் கோயிலுக்குப் போய் மல்லுகட்டுவதைவிட நீயே ஒரு கோயிலைக் கட்டு’ என்றார். அது கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறை. அதைக் கொஞ்சம் தைரியத்துடன் படைப்புத் திறனுடன்தான் வெளிப்படுத்தியிருக்க முடியும்.

மையப்படுத்தப்பட்ட மின்சார விநியோகம் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காலனியாதிக்கத் தத்துவமும் சிந்தனையும்தான் மின்சார உற்பத்தியிலும் இருக்கிறது. விநியோகத்தின் அடிப்படையிலான மின் உற்பத்தி. அமெரிக்காவில் இந்த மாதிரி செயல்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்துகொண்டேயிருப்பார்கள். நுகர்வோர் உப யோகித்துக்கொண்டேயிருக்க வேண்டும். உபயோகத்தைப் பொறுத்துதான் உற்பத்தி நடைபெறும். உற்பத்தியாளருக்கு வருமானம், நுகர்வோருக்கு வளமான வாழ்வு. நுகர்வோருக்குத்தான் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக் கூடாதே. கழிப்பறையில் ஐம்பது விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும். யாருமே இல்லாத அறையில்கூட விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். இப்படிப்பட்ட வாழ்க்கை முறை நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவராதே! இன்று அமெரிக்காவுக்குமே அது முடியாது என்பது மாதிரியான நிலைமை உள்ளது. இந்தத் தங்குதடைகள் எதுவும் இல்லாத ஆற்றல் பயன்பாடுதான் புவி வெப்பமடைதல் போன்றவற்றை உருவாக்குகின்றன என்பதை இப்போது உணர்ந்துள்ளோம். அமெரிக்கர்களே தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என அங்குள்ள இளைஞர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, நாம் அப்படிப்பட்ட விநியோகத்தின் அடிப்படையிலான மின் உற்பத்தியை மேற்கொள்வது தவறான அணுகுமுறை. ஆனால் இந்த மாதிரியான பெரிய மின் உற்பத்தித் திட்டங்களை நமது அரசாங்கங்கள் விரும்புகின்றன என்றால் இங்குதான் அதிகம் கொள்ளையடிக்க முடியும். 15,000 கோடிக்கு 10 சதவிகிதம் என்று வைத்துப் பார்த்தால்கூட ஒரு பெரிய தொகை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கிடைத்துவிடுகிறது. மையப்படுத்தப்படாத தேவை அடிப்படையிலான மின் உற்பத்திதான் சரியானது. இடிந்தகரையை எடுத்துக்கொண்டால் இரண்டு காற்றாலைகள், பத்து இருபது சூரியத் தகடுகளையும் வைத்து மின் தேவையைச் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் பணத்தைக் கொள்ளையடிக்க முடியாது என்பதால் அரசாங்கம் விரும்புவதில்லை. ஆனால் மக்களுக்கு இது நல்லது. நமது பணத்தை யாரும் கொள்ளயடிக்க முடியாது. உள்ளாட்சிக் கட்டுப்பாட்டில் இருக்கும். மின் உற்பத்தி, பகிர்மானம், லாபம் எல்லாம் ஊரைச் சார்ந்து இருக்கும்போது செயல்பாடும் சிறப்பாக இருக்கும். வீடுகள் தோறும் சூரியத் தகடுகள் மூலம் மின்சாரம் பெறுவதற்கு வகைசெய்துகொள்ளலாம். பெரிய தொழிற்சாலை இருக்கும் இடங்களில் அனல் மின்நிலையம் வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். ஏன் தீர்க்க முயலவில்லை என்றால், ஒன்று காலனியாதிக்கச் சிந்தனை, மற்றொன்று திருட வாய்ப்பின்மை. மன்மோகனோ ஜெயலலிதாவோ கருணாநிதியோ கூடங்குளம் பிரச்சினையை மக்கள் பிரச்சினையாக நினைத்துத் தீர்வுகாண முயன்றால் முடியும். ஆனால் அவர்கள் நோக்கம் அதுவல்ல. அவர்களின் குறிக்கோள் வேறு. அவ்வளவுதான்.

நன்றி: காலச்சுவடு, நவம்பர் 2012