வியாழன், பிப்ரவரி 07, 2013

வேகமாய் சாகிறது பூமி !

தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.

ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.

கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின்  அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.

கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று முடித்தார்.
ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல்லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லையெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொடங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் ஆற்றை விஷமாக்கி வருகின்றன. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியிடும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக்கும் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீரை உபயோகிக்கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்குகிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலாறு மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங்கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடைகள் இல்லையா? அந்த நாடுகளுக்குத் தோல் பொருட்களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேகரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல்கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடுதலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இதனால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்களில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக் கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன்னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தாய்ப்பான உண்மை. ''பூமியை ஓர் உயிரினம் என்பார்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவதுபோலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செய்யப்பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!''

-டி.எல்.சஞ்சீவிகுமார் 

நன்றி: ஆனந்தவிகடன், 13 பிப்ரவரி 2013