வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

இது ஆரம்பம்...இனிதான் இருக்கு பூகம்பம்! புதிய நிதி அமைச்சரைப் புரட்டி எடுக்கும் கோவணாண்டி


கோவணாண்டிகளுக்காக துணிஞ்சு, வாழ்நாள்ல ஒரே ஒரு முறை ஓங்கி குரல் கொடுத்திருக்கற செட்டிநாட்டுத் தங்க ராசா... மாண்புமிகு மத்திய மந்திரி ப.சிதம்பரம் அய்யாவுக்கு, உங்க பழைய பாசக்காரக் கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கறான்.

''பணத்தைத் தூக்கி வீசி, ஐஸ்கிரீம் திங்கறீங்க; பணத்தைப் பத்தி கவலைப்படாம மினரல் வாட்டர் குடிக்கறீங்க; ஆனா, அரிசி விலை ஒரு ருபா கூடிட்டாகூட... 'அய்யோ, குய்யோ'னு கத்துறீங்க. பாடுபட்டு விளைவிக்கிற விவசாயிக்கு, இதனால கூடுதலா நாலு காசு கிடைக்கறதுக்குக்கூட எதிர்ப்பு காட்டுறீங்களே... என்னய்யா நியாயம் இது?''னு பெங்களூரு விழாவுல கேட்டு, விவசாயிங்க வயித்துல பால் வார்த்திருக்கீங்க பாருங்க... இதுக்காகவே நம்ம பழையப் பங்காளிச் சண்டையையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு, ஒங்களுக்கு ஓராயிரம் சல்யூட் அடிக்கலாமுங்க.

'கொஞ்சம் இரு... அது நான் உள்துறை மந்திரியா இருந்தப்ப சொன்னது. இப்ப நான் நிதி மந்திரி. இப்ப எதுக்காக கையில எடுக்கறே... என்னை வெச்சு காமெடி, கீமடி பண்ணலையே...?'னு கேக்கறீங்கதானே!

உங்கள பத்தி நிசமாலுமே பெருமையா பேசணும்னு நினைச்சுத்தான், பழைய விஷயமாயிருந்தாலும் பரவாயில்லனு, அதை நான் கையில எடுத்தேன். ஆனா, நீங்களே சந்தேகப்பட்டு கேட்ட பின்னாடி, எனக்குள்ள தூங்கிக்கிட்டிருந்த 'அந்நியன்' துள்ளிக் கிளம்பி வந்து, ஆயிரத்தெட்டுக் கேள்விகள அடுக்க ஆரம்பிச்சுட்டான். இதுக்கு நான் பொறுப்பில்லீங்கய்யா... நீங்களேதான்!
'நேத்துவரைக்கும் முதலாளிமாருங்களுக்கு சாமரம் வீசிட்டு, இருந்த ப.சி., திடீர்னு பொதுநலம் பேச ஆரம்பிச்சுருக்காரே... இதுல ஏதாச்சும் சுயநலம் சுருண்டு படுத்திருக்குமோ?'னு ஒரு கேள்வி ரொம்பவே இந்த அந்நியனைக் குடாயுதுங்கய்யா.

'லட்சக் கணக்குல உசந்துகிட்டே போற விவசாயிகள் தற்கொலை பத்தி இதுவரைப் பேசினதே இல்ல; பன்னாட்டுக் கம்பெனிங்க, பாரம்பரிய விதைகளை அழிச்சுட்டு, கம்பெனி விதைகளை கடைபரப்பி, விவசாயிங்க வயித்துல அடிக்கறது பத்தி வாய் திறந்ததே இல்ல; உரத்துக்கான மானியத்தை நறுக்கி, உர விலையைக் கன்னாபின்னானு எகிற வெச்சதைப் பத்தி பேச்சே இல்ல; காவிரியில முறைப்படி திறக்க வேண்டிய தண்ணியைத் திறந்துவிடாத கர்நாடகாவைக் கண்டிச்சதே இல்லை; ஈமு கோழிங்கற பேருல எங்க விவசாயிங்க பணத்தைக் கோடி கோடியா கொள்ளையடிக்கறதப் பத்தி ஒரு கேள்வியும் இல்லை... இப்படியிருக்கறப்ப, இந்த ப.சி-க்கு இப்ப மட்டும் திடீர்னு விவசாயிங்க மேல என்ன கரிசனம்?'னு அந்நியன் கேட்கிற கேள்விகளுக்கு என்கிட்ட பதில் இல்லீங்கய்யா!

சரி, நிசமாலுமே சொல்லுங்க... உங்களுக்கு விவசாயிங்க மேல என்ன திடீர் கரிசனம். உங்க தலைவரு மன்மோகன் சிங்கும், நீங்களும் மாத்தி மாத்தி ஆராதிச்ச புதிய நீர்க்குமிழிப் பொருளாதாரம்... வெடிச்சு நீர்த்தே போச்சு. 'பொருளாதாரம் வளருது... புடலங்கா வளருது... நாடு வளருது... நாடு ஒளிருது...'னு ஆள்மாத்தி ஆள்... ஆட்சி மாத்தி ஆட்சி...னு பீலா வுட்டுக்கிட்டு இருந்தீங்க. இதையெல்லாம் நம்பி... இலவசத்தை நம்பி, வேலை வெட்டிய விட்டுட்டு மல்லாக்கப் படுத்துக்கிட்டாங்க ஜனங்க. ஒங்க பொருளாதார பலூன் வெடிக்கப் போறது உறுதியான நிலையில... எங்க விவசாயிங்க தலையில ஐஸ் கட்டியைத் தூக்கி வெக்கறது எதுக்காக?

மொத்தமும் காலியாகி... இந்தியாவே பிச்சை எடுக்கற நிலைக்கு போயிக்கிட்டிருக்கு. இந்த நிலையிலயும், வீணாபோன எங்க விவசாயிங்க, கோவணத்தை இழுத்துக் கட்டிக்கிட்டு... மண்ணுல மல்லு கட்டினதால... நெல்லு வெளைஞ்சுது... கோதுமை விளைஞ்சது... கரும்பு விளைஞ்சது. 'இதேமாதிரி இந்தக் கோவணாண்டிக எல்லாம் படாதபாடுபட்டு விளைவிச்சா... உதிர்ந்துகிட்டிருக்கற பொருளாதாரத்தைக் கொஞ்சம் ஒட்ட வைக்க முடியும்'னு ஒரு நப்பாசையிலதானே இந்த ஐஸ். ஆனா, இத்தனை நாளா எங்கள வெச்சுக்கிட்டு நீங்கள்லாம் ஆட்டம்தானே காட்டுனீங்க. இப்ப அந்த இயற்கையா பார்த்து அத்தனைக்கும் ஆப்பு வெச்சுடுச்சு. தென்மேற்குப் பருவமழை ஜகா வாங்கினதால... விலையெல்லாம் கூடிடுச்சு. ஊருக்கு ஊர் எல்லாரும் ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இத்தனை நாளா விவசாயத்தை ஒதுக்கிவெச்சுட்டு... எப்பப் பார்த்தாலும், 'தொழில் வளர்ச்சி... பண வளர்ச்சி...'னே பேசிட்டிருந்த உங்களுக்கும் உங்க சகாக்களுக்கும்... இயற்கையே விட்டிருக்கற சவால்தான் இந்த வறட்சி. இது ஆரம்பம்தான்... இனிதான் இருக்கு பூகம்பம்! அரிசி விலை கிலோ நூறு ரூபாய்க்கு உசரப் போற நாள் வெகு தொலைவுல இல்லை.

'நாங்கதான் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செஞ்சு சமாளிச்சுடுவோமே'னு நினைச்சுட்டு, தெம்பா இருந்துடாதீங்க. நெனப்பு பொழப்பைக் கெடுத்துடும். ஆமாம்... எந்த நாட்டுலயும் இப்ப உணவு தானியம் கையிருப்பே இல்லைங்கறது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ஆஸ்திரேலியாவுல வறட்சி... ஆப்பிரிக்காவுல வறட்சினு எங்க பார்த்தாலும் வறட்சி தாண்டவம்தான். நீங்க பெருமையா பேசிட்டிருக்கற அமெரிக்காவுலயும் பல வருஷத்துக்குப் பிறகு, வறட்சியோட கதகளி ஆட்டம் ஆரம்பமாகிடுச்சாம். அதனால... எங்க சுத்தியும் எங்ககிட்டதான் வந்தாகணும்.

இனியாச்சும் கோவணாண்டிகளோட சேவை... இந்த நாட்டுக்குத் தேவைங்கறத மனசார எல்லாரும் உணருங்க. கம்பெனிகளுக்காக இத்தனை நாள் காவடி தூக்கின நீங்கள்லாம்... ஒங்களுக்கு அடுத்த வேளை சோத்தை உருவாக்கித் தர்ற கோவணாண்டிகளை கொண்டாடகூட வேணாம். குறைஞ்சபட்சம்... குத்திக் காயப்படுத்தாம இருந்தாலே போதும்... 'என் கடன் பணி செய்து கிடப்பதே'னு அத்தனையையும் அவன் பார்த்துப்பான்!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 25-08-12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக