வியாழன், டிசம்பர் 29, 2011

ராஜா வீட்டு கன்னுக்குட்டி(ராகுல் காந்தி)யே... ரவுசு பண்ணாதீங்க!

எதிர்கால பாரதத்தோட பிரதமர்; கல்லாகட்டி கல்லாகட்டி நாட்டையே வித்துப் போடத் துடிக்கற கலப்படக் கதர் சொக்காகாரங்களோட கனவு நாயகன்; இன்னும் இருநூறு வருஷத்துக்கும் இளைஞர்களோட நம்பிக்கை நட்சத்திரம்; இந்தியாவைப் பரம்பரையா ஆள துடிக்கற பண்டிட் குடும்ப வாரிசு... ராகுல் காந்திக்கு, 'காங்கிரஸ் ஆட்சியில ஏதோ இந்த அளவோட தப்பிச்சோமே'னு கோவணத்தோட திரியற தென்னாட்டு கோவணாண்டி கும்பிடு போட்டுக்கறான்!


''சில்லறை வணிகம் மூலமா, அன்னிய நாட்டு மூலதனம் இந்தியாவுல குவிஞ்சா, இங்க பெரிய பெரிய குடோன் கட்டுவாங்க, குளுகுளு குடோனா கட்டுவாங்க. விவசாயியோட தோட்டத்துக்கே வந்து காய்கறிகள வாங்குவாங்க. இடைத்தரகர் கமிஷன் தொல்லையெல்லாம் தொலைஞ்சுடும். விவசாயிங்க வீட்டுல பணமா குவியும்'னு உத்தரபிரதேச கூட்டத்துல, பொளந்து கட்டிட்டீங்களாமே! எங்க ஊரு இங்கிலீபீசு வாத்தியாரு சொன்னாருங்க தம்பி.

ஆமாம், அதெல்லாம் நெசந்தானா? எங்கள வெச்சுக்கிட்டு காமெடி, கீமெடி பண்ணலயே! ஏன்னா, 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்'னு, ஏற்கெனவே பலருகிட்டயும் பல தடவை அடிபட்டு நொந்து நூலாகிக் கிடக்கறோம்! அடச்சே... நீங்க, ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி; பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு முடிச்சவரு; நீங்க போய் பொய் சொல்லவா போறீங்க?


'அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்துயெல்லாம் காய்கறிங்க... கிலோ 4 டாலர், 6 டாலர், 8 டாலர்னு விக்குது. நம்ம நாட்டு மதிப்புக்கு, 200 ரூவா, 300 ரூவா, 400 ரூவா வரும்'னு இங்கிலபீஷ் வாத்தியாருதான் சொன்னாரு தம்பி. அப்படி அந்த நாட்டு கம்பெனிக நம்ம நாட்டுக்குள்ள வந்தா... அங்க விக்கிற விலையைக் கொடுத்துத்தானே வாங்குவாங்க. ஒரு கிலோ கத்திரிக்காய்க்கு 200 ரூவா, பாவக்காய்க்கு 300 ரூவா, தக்காளிக்கு 400 ரூவானு கொடுப்பாங்கதானே தம்பி? பின்ன எதுக்காக எல்லாரும் இந்த சூப்பர் திட்டத்தை எதுக்கறானுங்கனு தெரியலயே! பேசாம, நீங்களே இதுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்துப் போடுங்க! அதாவது, 'குறைஞ்சபட்சம் எந்தக் காய்கறியும் கிலோ 200 ரூபாய்க்குக் குறையாம கொள்முதல் செய்யப்படும்'னு அறிவிச்சுடுங்க. இந்த நாட்டுல இருக்கற அத்தனை கோவணாண்டியும் ஒங்க பின்னாடி ஓடி வந்துடறோம்!

ஆனா, கொஞ்ச காலத்துக்கு முன்ன, இப்படி சொல்லிக்கிட்டு வந்த அம்பானியோட ரிலையன்ஷ் ஃபிரஷ், அடுத்த ஆளோட பிக்பஜார் இவங்கள்லாம், ஆரம்பத்துல தேன் ஒழுக பேசிட்டு... இப்ப தேடிப் போனாலும், வாங்க மாட்டேங்கறாங்களே! இதை நினைச்சாத்தான் நீங்க சொல்றத முழுசா நம்ப முடியல!

பாம்பு பார்க்கறதுக்கு அழகா, பளபளப்பாதான் இருக்கும். ஆனா, எலி வளைக்குள்ள புகுந்துடுச்சுனு வெச்சுக்கோங்க... குடும்பத்தோட எலி காலி! எங்களை எலி கணக்கா காலி செய்றதுனு முடிவு எடுத்துட்டீங்களோனும் சந்தேகம் எட்டிப் பார்க்குது தம்பி... வேற ஒண்ணும் இல்ல!

'குளுகுளு குடோன்ல உருளைக் கிழங்கைப் பாதுகாத்து... கூடுதல் விலைக்கு விக்கலாம்'னு வேற உத்தர பிரதேசத்துல சொல்லி இருக்கீங்களாம். நல்லா சொன்னீங்க யோசனை. எங்காளு ஒருத்தரு இப்படித்தான் ஈரோட்டுல மஞ்சள் விற்க போனாரு. குவிண்டால் 11 ஆயிரத்துக்குக் கேட்டாங்களாம். உங்கள மாதிரியே யோசிச்சு, குடோன்ல இருப்பு வெச்சுட்டு வந்துட்டாரு. ஆறு மாசம் ஆச்சு, ஒரு வருஷம் ஆச்சு... இப்ப வெறும் நாலாயிரத்துக்குத்தான் கேட்கறாங்களாம். குடோன் வாடகைக்கும், வட்டிக்கும் எங்க போறது? பொண்டாட்டி கழுத்த தடவலாமா... கழுத்துல சுருக்கு போட்டுக்கலாமானு பித்து பிடிச்ச மாதிரி அலையறாரு தம்பி. குவிண்டால் நாலாயிரம், ஐயாயிரம் விக்கிற மஞ்சளுக்கே இந்த கதினா... கிலோ ஒரு ரூவா, ரெண்டு ரூவானு விக்கிற உருளைக்கிழங்கை நெனைச்சா... கதி கலங்குது தம்பி! இதுதான், நீங்க சொல்ற அந்நிய முதலீட்டை நினைச்சு அலற வெக்குது தம்பி!

இதையெல்லாம் மீறி, நீங்க சொல்றத தைரியமா நான் நெஞ்சுல ஏத்திக்கத்தான் பாக்கறேன்... ஆனா பாருங்க, அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன வந்த அந்நிய நாட்டு விதைக் கம்பெனிக விஷயம், அதுக்கும் தடைபோடுது. விவசாயிக கோடி கோடியா பணத்தை அறுவடை செய்யலாம்னு அந்தக் கம்பெனிளுக்கு கதவுகளைத் திறந்து விட்டாங்க உங்க முன்னோருங்க. ஆட்டம், பாட்டத்தோட வந்த அமெரிக்க மான்சான்டோ கம்பெனி... 400 கிராம் பி.டி. பருத்தி விதையை, 1,800 ரூவா, ரெண்டாயிரம் ரூவானு வித்துச்சு. பருத்திக் காட்டுல பணமா தொங்கும்னு ஆசை காட்டுச்சு. இப்ப ஆந்திரா, மகாராஷ்டிராவுலயெல்லாம் பி.டி. பருத்தி போட்ட காட்டுல விவசாயிங்க... பிணமா தொங்குறாங்களே தம்பி. நினைச்சாலே நடுநடுங்குது!

பொறந்ததுல இருந்து சாகற வரைக்கும் ஒட்டுக் கோவணத்தோடு... பொட்டல் காட்டுலயும், மொட்ட வெயிலுலயும் கிடக்குற விவசாயிக்கே, அவன் படுற கஷ்டம் இன்னும் புரியல. நீங்க என்னடான்னா... ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு விவசாயியோட குடிசையில போய் கொஞ்சம் போல தண்ணிய வாங்கிக் குடிச்சுட்டு, 'விவசாயிங்க கஷ்டத்தை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்'னு மேடைக்கு மேடை பொளந்து கட்டுறத கேக்கறதுக்கு நல்லாவே இருக்குதுங்க தம்பீ. ஆனா, நம்பத்தான் முடியல!


எனக்கென்னவோ... நீங்க எங்களுக்கு யோசனை சொல்றதவிட, நான் ஒங்களுக்கு யோசனை சொல்றதுதான் சரியா இருக்கும்னு தோணுது! கலப்பட கதர் சொக்காகாரங்க... ஒங்களக் காட்டியே ஓட்டு வாங்கி, பதவியில குந்திகிட்டு, தொடர்ந்து கொள்ளை அடிக்கப் பாக்கிறாங்கனு நினைக்கிறேன். இதுல எதுக்காக நீங்க தலையைக் கொடுத்துக்கிட்டு? என்னமோ அயர்லாந்துகாரியையோ... ஆஸ்திரியாகாரியையோ லவ்வு பண்ணிக்கிட்டிருக்கீங்களாமே! அவுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு, அடக்க ஒடுக்கமா குடும்பம் நடத்தப் பாருங்க.


'அண்ணன் ராகுலுக்கு வயசு 40 ஆகுது. கல்யாணம் பண்ணிக்காததால அவரு இன்னும் இளைஞரு'னு கலாய்க்கறாரு உங்க தம்பி வருண் காந்தி. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

கதருங்கள நம்பி, ரவசு பண்ணி உங்க பொழப்பக் கெடுத்துக்கறதோட... எங்க பொழப்பையும் கெடுத்துப்புடாதீங்க. இதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்கனுதான் தோணுது... அப்புறம் உங்க இஷ்டம்!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10 ஜனவரி 2011

1 கருத்து:

Anand சொன்னது…

சிறப்பான கட்டுரை

கருத்துரையிடுக