ஞாயிறு, டிசம்பர் 11, 2011

கூடங்குளம் அணுமின் திட்டம் - அதிர்ச்சி தகவல்கள்

கூடங்குளம் அணுமின் திட்டம் :
அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வு முறையும்,
தமிழ்நாடு, கேரள மக்களின் வாழ்விற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும்
ரா.ரமேஷ், V.T.பத்மநாபன், வீ.புகழேந்தி

1)      கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்ற தமிழக-கேரள மக்களின் கருத்து அறிவியல் அடிப்படையில் சரியான கருத்தாகும். உடனடியாக அதனை செயல்பட வைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தினரின் கருத்து அறிவியலுக்குப் புறம்பான ஒன்றாகும். இந்தக் கருத்தினை எவ்வித மறு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நடைமுறைப்படுத்தினால் அது அந்த மின் நிலையத்திற்கும், தமிழக கேரள மக்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்விற்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் மிகப்பயங்கரமான சவாலாக அமையும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.

2) கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அமைவிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதமும், அதன் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் நிர்வாகத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விதமும் தேச மற்றும் சர்வதேச அறிவியல் ஆய்வு மரபுகள் மற்றும் சட்டங்களை முற்றிலுமாக புறந்தள்ளுவதாக உள்ளன

3)      கூடங்குளம் அணுமின் நிலயத்தின் அமைவிடம் குறித்த ஆய்வுகளை முறைப்படி மேற்கொள்ளாமலேயே இரண்டு அணு உலைகளை அணு சக்திக் கழகம் கட்டி முடித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த புக்குஷிமா அணு உலை விபத்தானது, முறைப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் அணு உலைகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சின்னைகளை கண்கூடாக விளக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

4)      புக்குஷிமா போன்ற விபத்து கூடங்குளத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்று அணுசக்திக் கழகம் கூறுவது சரியே. ஏனெனில், அதையும்விட மோசமான விபத்துகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படுவதற்கான அறிவியல் அடிப்படையிலான அனைத்து வாய்ப்புகளும் இந்த அமைவிடத்தில் உள்ளது.

5)      இந்த அமைவிடம் பிதுங்கு எரிமலைப் பாறைகளை (sub volcanic rocks) மிக அதிக அளவில் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அமைவிடத்தின் அடித்தளக் கெட்டிப்பாறை மிகவும் மெலிந்துபோய் காணப்படுகிறது. 40,000 மீட்டர் தடிமனைக் கொண்டிருக்க வேண்டிய கூடங்குளம் அமைவிடத்தின் கண்ட மேலோடானது, பல இடங்களில் வெறும் 150-200 மீட்டர் தடிமனையே கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்கின்ற காலத்தில் அந்த விபத்தைக் கையாளுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை (shielded emergency control room) மற்றும் டீசல் ஜெனரேட்டர் கட்டிடங்கள் ஆகியவை அமைவிடத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளன. இந்த இடத்தில்தான் பிதுங்கு எரிமலைபாறைகளால் (sub volcanic rocks) அடித்தள கெட்டிப்பாறையானது மேலதிகமான அளவில் மெலிந்து போயிருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே, இந்த இடங்களில் பிதுங்கு எரிமலைப் பாறைகளின் செயல்பாட்டால் நில மேலோடு குழிந்து பள்ளமாகி விடுவதற்கோ அல்லது சிறிய அளவிலான எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கோ அதிக சாத்தியம் உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. விபத்து காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் இங்கு நிகழும் பட்சத்தில், அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை மற்றும் கூடுதல் ஜெனரேட்டர்கள் இல்லாமல் விபத்தைத் தடுக்க யாரால் என்ன செய்ய முடியும்? (1)

6)      கூடங்குளம் அணு உலைகளின் அடித்தளத்திற்காக 2001 ஆம் ஆண்டில் குழியைத் தோண்டியபோது 1990-1998 ஆண்டுவரை அணுசக்தித் துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலவியல் ஆய்வுகளால் கண்டறியப்படாத உறுதி குறைந்த பாறைகள் கண்டறியப்பட்டன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 15 மீட்டர் ஆழத்தைக் கொண்ட அந்த பாறைகளைத் தோண்டி அகற்றிவிட்டு அந்தக் குழியில் சிமெண்ட் கலவை கொண்டு உறுதி செய்தார்கள் (consolidation cement grouting) . 1990-98 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலவியல் ஆய்வுகளின் அலட்சியத் தன்மையை சென்னை ஐ..டி பேராசிரியர் டாக்டர் A.பூமிநாதன் 2004 ஆம் ஆண்டில் கரண்ட் சயின்ஸ் சஞ்சிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார். (2) கடைசி நேரத்தில் அதிகாரிகளால் கண்டறியப்பட்ட உறுதி குறைந்த பாறைகளே கூடங்குளம் அமைவிடத்தின் அடித்தளப் பாறைகளுக்குள் ஊடுருவியிருக்கும் பிதுங்கு எரிமலைப் பாறைகளாகும்

7)      பிதுங்கு எரிமலைப் பாறைகளால் நிலத்தடி நீரின் மட்டமும், இயக்கமும் பாதிக்கப்படலாம் என்றும், இதனால் அணு உலைகளின் அடித்தளத்தின் உறுதியானது கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றும் 2011 மே மாதம் சர்வதேச அணுசக்திக் கழகத்தால் வெளியிடப்பட்ட “அணு உலைகளுக்கான எரிமலைப் பேரிடர்” ஆவணம் கூறுகிறது. இதன் காரணம், இந்தப் பிதுங்கு எரிமலைப் பாறைகள் காணப்படும் இடங்களை அமைவிடமாகக் கொண்ட அணு உலைகளிலும், அணுப் பிளவுடன் தொடர்புடைய பிற ஆலைகளிலும் எரிமலை நிகழ்வுகளினால் ஏற்படும் பேரிடர் குறித்த ஆய்வினை (Volcanic Hazard Analysis) மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆவணம் வலியுறுத்துகிறது.(3)

8)      அமெரிக்காவின் யுக்கா மலைப்பகுதியில் அமையவிருந்த அமெரிக்காவின் அணுக்கழிவுக் கல்லறைத் திட்டத்தை அமெரிக்க அரசு 2010 ஜூலை மாதம் கைவிட்டு விட்டது. இந்த அமைவிடமானது, கூடங்குளத்தில் உள்ள பிதுங்கு எரிமலைப் பாறைகளைப் போன்ற பாறைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை இந்தப் பிதுங்கு எரிமலைப்பாறைகளால் அணுக்கழிவுக் கல்லறையின் இயக்கத்திற்கும், பாதுகாப்பிற்கும் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா என்பதற்கான ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதற்காக சுமார் 10,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடைசியில் இந்தப் பிதுங்கு எரிமலைப் பாறைகளால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது என்ற முடிவு எட்டப்பட்டது. அதன் நீட்டிப்பாக, அமெரிக்க அரசு திட்டத்தைக் கைவிட்டு விட்டது. (4)

9)      யுக்கா மலைப்பகுதியை விட கூடங்குளம் அமைவிடத்திற்குப் பிதுங்கு எரிமலைப் பாறைகளாலும், பிற எரிமலை நிகழ்வுகளாலும் அதிக அபாயம் உள்ளது என்பதை சமீபத்தில் நடந்த இயற்கை நிகழ்வுகளும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் உறுதி செய்கின்றன. (5)

10)  கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து 26, 66, 96 மற்றும் 156 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆனைக்குளம்-பாண்டிச்சேரி, அபிஷேகப்பட்டி-திருப்பணிக்கரிசல்குளம், சுரண்டை மற்றும் சுக்கலி நத்தம் ஆகிய கிராமங்களில் 1998, 1999, 2001, மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் நடந்த சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் (small volume volcanic eruptions) போன்ற நிகழ்வுகளை அமெரிக்காவின் யுக்கா மலைப்பகுதி சந்திக்கவில்லை. என்றாலும்கூட அங்கு அமையவிருந்த “அணுக்கழிவுக் கல்லறைக்கு” எரிமலையினால் ஏற்பட வாய்ப்புள்ள பேரிடர் ஆய்வு (volcanic hazard analysis) விரிவான முறையில், பல்வேறு ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், யுக்கா அமைவிடத்தைக் காட்டிலும் அதிக எரிமலை அபாயத்தைக் கொண்டிருக்கும் கூடங்குளம் அமைவிடத்திற்கு அப்படிப்பட்டதொரு ஆய்வு இன்றளவும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இங்கு இருக்கின்றது என்பதை, சுதந்திரமான அறிவியல் ஆய்வுகளால் இது பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அணுசக்தி நிர்வாகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது பேசவோ தயாராயில்லை என்பதுதான். இதற்காக உச்ச நீதிமன்றத்தை 2002 மே 20 ஆம் தேதியன்று மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு மக்கள் நாடியபோது, அன்று தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் B.N.கிர்பால் அவர்களால் மக்களின் வாதத்தை மறுக்க முடியவில்லை ; மாறாக, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இது மக்களின் எதிர்காலத்தைத் தீர்மாணிக்கும் பிரச்சினை என்று மக்களின் வழக்குறைஞர் திரு.வெங்கட்ரமணி அவர்கள் மேற்கொண்டு வாதிட்டபோது, மக்களின் சார்பாக வழக்கு தொடர்ந்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மார்க்கண்டன் அவர்களுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகன் அவர்களுக்கும் 1000 ரூபாய் அபராதத்தை அந்த நீதியரசர் விதித்தார் என்பது  எவரும் மறக்கக்கூடாத வரலாற்று நிகழ்வாகும்.

11)  சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் கூடங்குளம் அமைவிடத்தில் நடக்காது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகளை அணு உலை நிர்வாகம் இன்றளவும் மேற்கொள்ளவில்லை. இந்த நிகழ்வுகளின்போது அவை நடந்த இடங்களில் நிலமானது சுமார் 4 மீட்டர் வரைக்கும் தாழ்ந்து போனதாக ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. மேலும் வெடிப்பின்போது எரிமலை முகவாய்களில் இருந்து மேலெறியப்பட்ட லாவாக் குழம்பும், எரிமலைக் கற்களும் அடுத்துள்ள மரங்களையும், கட்டுமானங்களையும் பாதிப்பதாக இருந்தன. எரிமலை முகவாயில் இருந்த வெப்பமானது சுமார் இரண்டு நாட்களுக்குத் தனியாமல் இருந்தது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நிகழ்வொன்று கூடங்குளம் அமைவிடத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படிப்பட்டதொரு நிகழ்வு நடக்கும் பட்சத்தில் அணு உலைக்குக் கீழுள்ள நிலம் குழிந்து பள்ளமாகிப் போவதையும், வெடிப்பிலிருந்து வெளியேறும் லாவா மற்றும் எரிமலைக் கற்களையும் அணு உலைகளால் எவ்விதப் பாதிப்பும் இன்றி தாங்கிட முடியுமா? இவற்றால் ஏற்பட வாய்ப்புள்ள தீ விபத்துகளை அணு உலைகளால் பாதுகாப்பான ரீதியில் எதிர்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கண்டடையவே சர்வதேச அணு சக்திக் கழகம் கூறும் “எரிமலைப் பேரிடர் ஆய்வு” கூடங்குளம் அமைவிடத்திற்கு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது.     

12)  தென் இந்தியாவிலேயே மிக அதிகமான நிலத்தடி வெப்பத்தைக் (sub crustal heat flow) கூடங்குளத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகர்காவில் கொண்டுள்ளது என்பதை சுகந்தா ராய் குழுவினர் 2007 ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளனர். தென் இந்தியாவின் பிற பகுதிகளைவிட இந்தப்பகுதியின் நில மேலோட்டிற்குக் கீழ் உள்ள மேக்மாவானது  அதிகமான அளவில் மேலெழும்பியிருக்கிறது என்றே இதனைப் புரிந்துகொள்ள முடியும். (6) கூடங்குளம் அமைவிடத்திற்கு எரிமலைப் பேரிடர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தேவையை இந்தத் தகவலானது மேலும் உறுதி செய்கிறது.

13)  கூடங்குளம் அணுமின் நிலையம் தன் அணு உலைகளுக்குத் தேவையான குளிர்விப்பான் நீர் அனைத்திற்கும் மன்னார் வளைகுடாவை மட்டுமே நம்பியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று அணுசக்திக் கட்டுமானக் கழகம் முதல் இரண்டு அணு உலைகளுக்குக் கொடுத்த அனுமதியில் - எக்காரணம் கொண்டும், அணு உலைகளுக்குத் தேவையான குளிர்விப்பான் நீருக்கு ஒற்றை நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. (7) சர்வதேச அணு சக்திக் கழகமும் இந்தக் கருத்தைப் பல்வேறு ஆவணங்களில் வலியுறுத்துகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உலைக்கான முதன்மைக் குளிர்விப்பான் நீரை எடுப்பது அன்றைய திட்டம். பேச்சிப்பாறை அணையிலோ அல்லது அங்கிருந்து அணு உலைகளுக்கு வரும் குழாய்களிலோ பிரச்சினகள் ஏற்பட்டால் அதனை சமாளிக்கத் தேவையான நம்பகமான மாற்று நீர் ஆதாரங்களைக் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் கண்டறிய வேண்டும் என்று அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியது. பேச்சிப்பாறை அணை இல்லாவிட்டால் கோதையாறு அணையில் இருந்தோ அல்லது நிலத்தடி நீரில் இருந்தோ அணு உலையின் நன்னீர்த் தேவையை நிறைவு செய்யும் திட்டத்தை அணுமின் நிலைய நிர்வாகம் முன்வைக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டின் இறுதியில் திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பேச்சிப்பாறை அணையின் நீர் அணு உலைகளுக்கு உபயோகப்படுத்தப் படமாட்டாது என்று அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்தபோது அவர்களிடம் அவசர கோலத்தில் இஸ்ரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலமாக வாங்கப்பட்ட கடல் நீர் உப்பகற்றி ஆலையைத் (sea water desalination plant) தவிர வேறெந்த மாற்று நீராதாரமும் இல்லை! (8) என்றாலும்கூட, அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

14)  பேச்சிப்பாறை அணையின் நீரை அணு உலைகளைக் குளிர்விப்பதற்கு உபயோகிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு சுமார் 20 ஆண்டு காலம் கழித்து அந்த அணையின் நீரை உபயோகிக்கப் போவதில்லை என்ற அணுமின் நிலைய நிர்வாகிகளின் முடிவு குமரி மாவட்ட மக்களின் எதிர்ப்பினால்தான் என்று அவர்கள் இன்று கூறுகிறார்கள். என்றாலும் கூட, அந்தக் கூற்றில் இருப்பது பாதி உண்மையே. 20 ஆண்டுகாலம் பேச்சிப்பாறையின் நீரை உபயோகிப்பது என்று அணுசக்தித் துறை கூறிக்கொண்டிருந்தாலும்கூட, அந்த அணையால் நிலையான அடிப்படையில் அணு உலைகளுக்குத் தேவையான நீரை அளிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வுகளை அணு மின்நிலைய நிர்வாகம் அந்த 20 ஆண்டுகாலமும் மேற்கொண்டிருக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று திருநெல்வேலியில் நடத்தப்பட்ட 3-6 அணு உலைகளுக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் சார்பில் அரசிடம் அளிக்கப்பட்ட பேச்சிப்பாறை நீர் நிலையினால் தொழில்நுட்ப ரீதியில் அணு உலைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகிற பிரச்சினை குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றின் பிறகே அந்த முடிவை அணுசக்தி நிர்வாகம் எடுத்தது. (9) இன்றளவும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகத்தின் அறிவியல் செயல்பாட்டு முறை இவ்வாறே தொடர்கிறது

15)  பேச்சிப்பாறை அணையின் நீர் ஆதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள 20 ஆண்டுகளாக அணுமின் நிர்வாகம் எவ்வாறெல்லாம் மறுத்து வந்ததோ, அது போலவே மன்னார் வளைகுடாவினால் கடல்நீர் உப்பகற்றி ஆலைகளுக்குத் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் ஏதுமின்றி நீரைக் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வுகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது மேற்கொள்ளத் தயாராயில்லை. 1989 ஆம் ஆண்டு அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தால் கொடுக்கப்பட்ட அனுமதியில் கூடங்குளத்தின் கடலோரப் பகுதியில் கடல் அரிப்பு மற்றும் கடற்கரைப் பெருக்கம் ( sea erosion and accretion) குறித்த ஆய்வுகளை அணுசக்தி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்க்கப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஆய்வுகளை அணுமின் நிலைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. அமைவிடத்தின் கிழக்குக் கோடியில் நிறுவப்பட்டுள்ள கடல் நீர் உப்பகற்றி ஆலைகள் உள்ள கடலோரப்பகுதியானது கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகும் பகுதி என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன(10). அமைவிடத்தின் மேற்குப் பகுதியோ கடற்கரைப் பெருக்கப் பகுதியாக உள்ளது என்று அந்த ஆய்வுகள் கூறுகின்றன, என்றாலும்கூட, கடந்த சில ஆண்டுகளாகப் பெருமணல் பகுதியில் சில தனியார் நிறுவனங்களால் கடற்கரை மணலானது சட்ட ரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் கண்மூடித்தனமாக வெட்டி எடுக்கப்படுவதால் கூடங்குளம் அமைவிடத்தின் மேற்குப்பகுதியில் உள்ள கடற்கரைப் பெருக்க நிகழ்வு பாதிக்கும் மேலாகக் குறைந்து போயுள்ளது. அதுபோலவே அமைவிடத்தின் கிழக்குப் பகுதியில் காணப்படும் கடல் அரிப்பு நிகழ்வானது இரட்டிப்பாகக் கூடிப்போயுள்ளது. கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை நிறுவியதோடு தன் பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அணுமின் நிலைய நிர்வாகத்திற்கு இது குறித்தெல்லாம் அக்கறை இல்லை. எனவேதான் பெருமணல் பகுதிகளில் தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றுவரை எவ்வித எதிர்ப்பையும் அது காண்பிக்கவில்லை

16)  2008 ஆம் ஆண்டு நவம்பரில் தமிழகத்தைத் தாக்கீய நிஷா புயலின்போது சென்னைக்குக் குடிநீரை அளிப்பதற்காக நிறுவப்பபட்ட மீஞ்சூர் கடல்நீர் உப்பகற்றி ஆலையின் கடலடிக் குழாய்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின. சேதமடைந்த அந்தக் குழாய்களை வெளியில் எடுக்கக்கூட இந்தியாவில் ஆட்கள் இல்லை. எனவே நெதர்லாந்தில் இருந்து வான் ஊர்து நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பணி நிறைவடைய ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது (11). இதைபோல ஒரு சூழ்நிலை கூடங்குளம் அமைவிடத்தில் உள்ள உப்பகற்றி ஆலைகளுக்கு நிகழாது என்று கூறமுடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் ஒருமாதத்திற்கும் மேலான நாட்களுக்கு இந்த உப்பகற்றி ஆலைகளின்றி அணு உலைகள் இயங்கவேண்டி வரும். இன்றைய தேதியில் அணு உலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரின் கொள்ளளவு என்ற அடிப்படையில் பார்த்தால் உப்பகற்றி ஆலைகளின்றி அணு உலைகளால் வெறும் இரண்டரை நாளுக்கு மட்டுமே இயங்க முடியும். 1989 ஆம் ஆண்டிலிருந்து அணு சக்திக் கழகம் விபத்து காலங்களில் உபயோகப்படுத்தக்கூடிய இந்தத் தண்ணீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் இன்றுவரை கூடங்குளம் அமைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 6 கோடி லிட்டர் தண்ணீருக்குப் பதிலாக அங்கு 1.2 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகளே செய்யப்பட்டிருக்கின்றன. (12)

17)   முதலாவது அணு உலைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான குழியைத் தோண்டிக்கொள்வதற்கான அனுமதியை அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்திற்கு 2001 அக்டோபர் மாதம் கொடுத்தது. அணு உலைக்கான அமைவிடத்தில் 6 கோடி லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கான கட்டுமானங்களைக் கட்டினால்தான் இந்த அனுமதி செல்லுபடியாகும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் அணு மின் நிலையத்திலிருந்து வெறும் 900 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புச் சுரங்கத்தின் இயக்கத்தை நிறுத்துவதற்கான உடனடியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது. அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்த இரண்டு நிபந்தனைகளையும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. என்றாலும்கூட, அணுமின் நிலைய நிர்வாகத்தை எதிர்த்து எவ்வகை நடவடிக்கையையும் எடுக்கமுடியாத, திராணியற்ற நிலையிலேயே அந்த நிறுவனம் உள்ளது. “விபத்து காலங்களில் தேவைப்படும் தண்ணீரின் அளவை தயவு செய்து இன்னும் அதிக அளவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்...” என்று அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இன்றைய தலைவரான டாக்டர் பஜாஜ் இன்றளவும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.(13)

18)  மன்னார் வளைகுடாவின் கடற்கரைப் பகுதியானது உறுதியான நிலவியல் அமைப்பினைக் கொண்டிருக்கவில்லை என்பதையே தென் தனுஷ்கோடியானது 1948-49 ஆம் ஆண்டின் போது உடைந்து விழுந்து கடலில் மூழ்கி அழிந்து போன நிகழ்வு உணர்த்துகிறது (14). அதே மன்னர் வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ள கூடங்குளம் அமைவிடத்தின் கடலோரப் பகுதியில் இப்படிப்பட்டதொரு நிகழ்வு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை இன்றளவும் அணு உலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை . கடந்த நிலவியல் காலங்களிலும் செங்குத்தான இயக்கப்போக்கிற்கு இப்பகுதியின் நிலமேலோடு உள்ளாக்கப்பட்டது என்பதை ஹெல்மட் ப்ரக்னர் தொடங்கி ஆர்ம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் சாம் ஆகியோரின் ஆய்வுகள் வரை அனைத்து ஆய்வுகளும் உறுதி செய்கின்றன(15). இந்த ஆய்வுகளுக்குப் பின்னரும் கூட இந்தக் கடற்கரைப் பகுதியானது உறுதி மிக்கது (stable shoreline) என்று மத்திய அரசின் வல்லுனர் குழு கூறியிருப்பதை அறிவியல் பயின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது

19)  மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் எரிமலைகளின் சிகரங்கள்  உள்ளன என்பதை 1975 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த பிரசித்திபெற்ற ரஷ்யக் கடலியல் அறிஞரான G.B.உடிண்ட்செவ் தன் Geological and Geophysical Atlas of the Indian Ocean  என்ற புத்தகத்தின் 151 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதுபோலவே ONGC நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரான V.V.சாஸ்திரி தலைமையிலான குழுவானது 1981 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் எரிமலை இருப்பதாகத் தன் ஆய்வுக்கட்டுரையில் பதிவு செய்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவில் பெட்ரோல் துரப்பணிகளுக்காகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் எரிமலைக் கற்கள் வெகு சாதாராணமாகக் காணப்படுவது குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 1994 ஆம் ஆண்டில் G.R.K. மூர்த்தி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மன்னார் வளைகுடாவிற்கான magnetic survey ஆய்வானது, மன்னார் வளைகுடாவின் கடல்தரையில் உள்ள அடித்தளக் கடினப்பாறையானது (basement) வெறும் 1-4 மீட்டர் தடிமனையே கொண்டுள்ளது என்றும், அந்தப் பாறைகளை எரிமலைப் பாறைகள் அடியில் இருந்து ஊடுருவியிருப்பதால்தான் இது நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது. (அதாவது கூடங்குளம் அமைவிடத்தைப் போலவே அதனை அடுத்துள்ள மன்னார் வளைகுடாவின் நிலமேலோடும் எரிமலைப் பாறைகளின் ஊடுருவலால் மெலிந்துபோயுள்ளது என்பதை மூர்த்தி குழுவினரின் ஆய்வுகள் நிறுவுகின்றன.) மேலும், மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) ஒன்று இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த எரிமலை முகவாயானது கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து வெறும் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது கூடுதல் தகவலாகும். (16)

20)  உறுதி குறைந்த நில மேலோட்டினைக் கொண்ட இந்தப்பகுதியில் நிகழ வாய்ப்புள்ள நிலவியல், கடலியல் மற்றும் காலவியல் (meteorological) பேரிடர்களின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கடல்நீர்க் குழாய்களாலோ அல்லது உப்பகற்றி ஆலையின் குழாய்களாலோ பிரச்சினைகளின்றி இயங்கிட முடியும் என்பதை சந்தேகங்களுக்கு இடமின்றி நிறுவும் அறிவியல் ஆய்வுகள் இல்லை

21)  ஆக, கூடங்குளம் அமைவிடத்தின் நில மேலோட்டிலும், அதனை சுற்றி அமைந்துள்ள நில மற்றும் கடல் பகுதியில் உள்ள நில மேலோடுகளிலும் பிதுங்கு எரிமலைப் பாறைகள் மிக அதிக அளவில் ஊடுருவியுள்ளன. இதன் காரணம் இந்த மேலோடுகளின் தடிமன் மிக அதிக அளவில் குறைந்து போயுள்ளது. குறைந்த தடிமன் கொண்ட நில மேலோட்டின் ஊடாக செல்லும் அச்சன்கோவில், தென்மலை - கடனா மற்றும் சென்னை-கன்னியாகுமரி  நிலப்பிளவுகளில்தான் குறைந்த அளவு எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் பிரச்சினை இதோடு முடியவில்லை.

22)   2011 நவம்பர் 26 ஆம் தேதியன்று கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள (ராதாபுரத்திற்குத் தெற்கே அமைந்துள்ள) பண்ணையார் குளத்தில் பெய்த மழையின்போது 10 அடி சுற்றளவில் 15 அடி ஆழம் கொண்ட பள்ளம்    ஒன்று உருவானது. சுற்றுப்பகுதியில் தேங்கியிருந்த நீரெல்லாம் இந்தப்பள்ளத்திற்குள் சென்று மாயமாகி மறைந்து போனது. அருகில் தேங்கியிருந்த தண்ணீரை பள்ளத்திற்குள் வெட்டி விட்டார்கள். அதுவும் சட்டென்று உள்ளில் சென்று மறைந்து போனது. இதுபோன்ற நிகழ்வு 2008 ஆம் ஆண்டில் ராதாபுரம் அருகே நிகழ்ந்தது. அப்போது கிண்று ஒன்றில் இருந்த தண்ணீர் மாயமாக மறைந்து போனது. கார்ஸ்ட் நிலப்பகுதிக்கான (karst region) அறிகுறிகளே இவை. (17) கூடங்குளம் அமைவிடமும் ஒரு கார்ஸ்ட்(பாதாள சுண்ணாம்புப் பாறை குகைகள்) பிராந்தியத்தில் அமைந்துள்ளதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை எதுவும் அணுமின் நிலைய நிர்வாகத்திற்கு இல்லை. எனவே, இந்தப்பகுதி கார்ஸ்ட் நிலப்பகுதியா இல்லையா என்பதை அறிந்துகொள்ளத் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

23)   2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இந்தக் கடல்பகுதியில் கடலானது பலமுறை உள்வாங்கியுள்ளது. (18) கடலானது இப்படி உள்வாங்குவதற்கான காரணத்தை இன்னமும் அறிவியல் உலகம் முழுமையாக விளங்கிக் கொள்ள முயற்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்காலங்களில், கூடங்குளம் அமைவிடத்தை ஒட்டிய கடல்பகுதியில் கடல் உள்வாங்கக்கூடிய சாத்தியம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் அணுமின் நிலைய நிர்வாகத்திடம் இல்லை. கடல் உள்வாங்கும் நிகழ்வு நடக்கும் தருணங்களில் கடல்நீரை அணு உலையின் தேவைக்காக உள்ளெடுக்கும் கடலடிக் குழாய்களால் கடல்நீரை உள்ளெடுக்க முடியாது. வெறும் காற்றை மட்டுமே உறிஞ்ச வேண்டியிருக்கும்.(dry intake). கடல்நீர் உப்பகற்றி ஆலைகளும் இதே பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும். அணு உலைகளின் பாதுகாப்பை சுனாமி வராத காலங்களிலேயே சீர்குலைக்கும் தன்மை கொண்ட இதுபோன்ற தருணங்களை எவ்வாறு கையாளுவது என்பதற்கான திட்டங்கள் அணு மின்நிலைய நிர்வாகத்திடம் இன்றளவும் இல்லை என்பதுதான் உண்மை. (19)

24)  இந்தியாவின் கடலோரப்பகுதிகளை அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து ஏற்படும் சுனாமிகள் (Near Field Tsunami) தாக்க வாய்ப்பில்லை என்பதுதான் அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை உண்மையானதுதான் என்பதை நிறுவும் அறிவியல் ஆதாரங்கள் அதனிடம் இல்லை. அருகாமையில் உள்ள இடங்களில் சுனாமியை உருவாக்க சாத்தியம் கொண்ட நிலவியல் அமைப்புகள் இங்கும் இருக்கத்தான் செய்கின்றன. அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் கண்களுக்கு அவை இன்றளவும் தென்படவில்லை என்பதுதான் உண்மை. பேரிடர் நிகழ்வுகள் நடந்த பின்னர்தான் கற்றுக்கொள்வார்கள் போலிருக்கிறது. அடுத்துள்ள பகுதியில் சுனாமிகளை உருவாக்க வாய்ப்புள்ள காரணிகளாக மூன்று காரணிகள் சுனாமி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவை: 1) சக்தி வாய்ந்த பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடிய நிலப்பிளவுகள், 2) கடல் எரிமலைகள் (undersea volcanoes) மற்றும் 3) கடல் தரையில் ஏற்படும் நிலச்சரிவுகள் (submarine landslides). கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு 104 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில், கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று இருப்பதாகவும், அதற்கு சர்வதேச எரிமலைத் திட்டமானது (Global Volcano Program) 0305-1 என்ற எண்ணைக் கொடுத்துள்ளதாகவும், 1757 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அது வெடித்ததாகவும் 2011 மே மாதம் சர்வதேச அணுசக்திக் கழகத்தால் வெளியிடப்பட்ட “எரிமலைப் பேரிடர் ஆய்வு” குறித்த ஆவணம் கூறுகிறது.(20) கடலடி எரிமலைகளின் வெடிப்பாலோ அல்லது அதன் மேலோடு உடைந்து குழிந்து பள்ளமாகிப் போகும் நிகழ்வாலோ 100 மீட்டர் உயரம் கொண்ட அலைகளைக் கொண்ட மெகா சுனாமிகள் கூட உருவாக முடியும் என்பதை வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன. என்றாலும்கூட, இதுகுறித்து சிந்தனை செய்ய மறுக்கும் போக்கையே இந்திய அணுசக்திக் கழகம் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அருகில் உள்ள பகுதியில் இருந்து சுனாமி ஒன்று உருவாகலாம் என்பதற்கான சாத்தியம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு உள்ளதைப் போலவே கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கும் அண்மைப் பிரதேசங்களில் இருந்து சுனாமிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகிகள் அறிந்திருக்கவில்லை என்பதையே அவர்களின் மௌனமும், மேதை அப்துல் கலாம் மற்றும் மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிக்கைகளும் உணர்த்துகின்றன

25)  1982 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரீ ஆகிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் தெரியவந்தது. மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் இரண்டு மிகப்பெரிய சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் (slumps) இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. 100 மற்றும் 35 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டிருக்கும் இந்த வண்டல் குவியல்களுக்குக் கிழக்குக் குமரி வண்டல் குவியல் மற்றும் கொழும்பு வண்டல் குவியல் என்று அவர்கள் பெயர் சூட்டினர். 50 கிலோமீட்டருக்கும் மேலான அகலத்தைக் கொண்டிருக்கும் இந்த வண்டல் குவியல்கள் கொழும்புவிற்கு அடுத்தும், குமரிக்கு அடுத்தும் உள்ள கண்ட மேலோடுகள் உடைந்து போனதாலே உருவாகியுள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறியது. இந்த வண்டல் குவியல்களில் உடைந்துபோன பல பகுதிகளும், V போன்ற குழிகளும், செங்குத்தாகக் கீழிறங்கும் உடைப்புகளும் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த வண்டல் குவியல்களில் கடந்த காலத்தில் நிலச்சரிவுகள் ஏறபட்டிருப்பதற்கான ஆதாரத்தையும் அவர்கள் முன்வைத்தார்கள். (21)

26)  உறுதிகுறைந்த இந்த வண்டல் குவியல்கள் கூடங்குளம் அமைவிடத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளன. கிழக்குக் குமரி வண்டல் குவியலானது சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பு வண்டல் குவியல் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. 1994 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவின் கடல்தரையில் G.R.K. மூர்த்தி குழுவினரால் கண்டறியப்பட்ட எரிமலையின் முகவாயானது கிழக்குக் குமரி வண்டல் குவியலுக்குக் கீழ்தான் அமைந்துள்ளது. இந்த வண்டல் குவியல்களின் செயல்பாடுகளை தெற்கு வடக்காக நீளும் இந்திராணி நிலப்பிளவின் செயல்பாடுகள் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று வெஸ்டால் குழுவினர் கருதுகிறார்கள்.

27)  மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் உள்ள இந்த வண்டல் குவியல்களுக்கு அருகாமையிலும், ஊடாகவும் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று M 5.8 சக்தியைக் கொண்ட பூகம்பமும், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று M 5.2 சக்தியைக் கொண்ட பூகம்பமும் நிகழ்ந்துள்ளன. இவை இரண்டும்  கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தென் கிழக்கிலும், தென் மேற்கிலும் நிகழ்ந்தன. கூடங்குளம் அமைவிடத்தின் பாதுகாப்பிற்கு வண்டல் குவியலில் ஏற்பட வாய்ப்புள்ள நிலச்சரிவின் மூலம் சுனாமியை உருவாக்க வல்ல இந்த பூகம்பங்களை மத்திய அரசின் வல்லுனர் குழுவின் அறிக்கை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. மத்திய அரசு வல்லுனர் குழு மேற்கோள் காட்டும் A.K.கோஷ் அவர்களின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பூகம்பப் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கையில் இந்த பூகம்பங்கள் குறிப்பிடப் படாத காரணத்தாலேயே மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை என்று சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது. இதன் காரணமே “அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது

28)  2011 நவம்பர் 19 ஆம் தேதியன்று குமரி முனைக்குத் தெற்கே உள்ள குமரி முகட்டின் அருகாமையில் 5.2 ரிக்டர் சக்தியைக் கொண்ட பூகம்பம் கடலுக்கடியில் ஏற்பட்டது. இதன் அதிர்வலைகள் கொழும்பிலும், திருவனந்தபுரத்திலும் உணரப்பட்டன. இது குறித்து கேரளத்தில் உள்ள Center for Earth Science Studies, India Meteorological Department மற்றும் ஹைதராபாத்தில் உள்ள INCOIS ஆகிய நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. மன்னார் வளைகுடாவின் தரையில் அமைந்துள்ள வண்டல் குவியல்களின் இயக்கத்தைத் தீர்மாணிக்கும் திறனைக் கொண்ட இந்திராணி நிலப்பிளவில்தான் இந்த பூகம்பம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதுகுறித்த அறிக்கையை கூடங்குளம் அணுமின் நிர்வாகிகள் வெளியிடுவார்கள் என்று People's Movement Against Nuclear Energy எதிர்பார்த்திருந்தது. அப்படிப்பட்ட அறிக்கை வெளியாகாத காரணத்தால், இந்த பூகம்பத்தை அணு மின் நிலையத்தின் பூகம்பமாணி பதிவு செய்ததா? அவ்வாறு பதிவு செய்திருந்தால் அதன் முடிவுகளை வெளியிடுக என்று அணுசக்தி நிர்வாகத்திடம் PMANE பத்திரிகைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அணு உலை நிர்வாகமோ, மத்திய அரசின் வல்லுனர் குழுவோ இன்றுவரை பதிலளிக்கவில்லை.

29)  இதுபோன்ற பூகம்பங்களின்போது கிழக்குக் குமரி மற்றும் வண்டல்குவியல்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் களிமண் கற்கள் (clay stones) நிறைய இருப்பதாக கடந்த கால பெட்ரோல் துரப்பணி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நிலச்சரிவுகள் எளிதில் நடந்திடும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட நிலச்சரிவினால் சுனாமிகள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த சுனாமிகள் 100 மீட்டர் உயரத்தைக் கொண்ட மெகா சுனாமிகளாகக் கூட இருந்துவிட வாய்ப்புள்ளது.

30)  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் தகர்த்துவிடும் தன்மையைக் கொண்ட இதுபோன்ற நிகழ்வுகளுக்கான சாத்தியங்கள் குறித்து அறிந்து கொள்ள அணுமின் நிலைய நிர்வாகம் இன்றுவரை அக்கறை காட்ட மறுத்து வருகிறது.

31)  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வழிசெய்யும் Tsunami Hazard Study, Volcanic Hazard Study ஆகியவற்றை அணு மின் நிலைய நிர்வாகிகள் இன்றுவரை மேற்கொள்ளாமலேயே அணு உலையை இயக்க அவசரப் படுகிறார்கள். ரஷ்ய உலைகளின் தொழில்நுடப உன்னதத்தை பெரிய அளவில் பேசி தங்களின் அறிவியலுக்குப் புறம்பான நடத்தைகளை மறைக்க முயன்று வருகிறார்கள்.

32)  அதிகாரிகளின் அவசரத்துக்கு இணங்கி மத்திய மாநில அரசுகள் அணு உலையை இயக்க முடிவு செய்தால், பிதுங்கு எரிமலைப் பாறைகளாலும், கார்ஸ்ட் பாதாள சுண்ணாம்புக் குகைகளாலும், சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகளாலும், சரிந்து சாயும் வண்டல் குவியல்களால் ஏற்பட வாய்ப்புள்ள மெகா சுனாமிகளாலும், உறுதி குறைந்த கடலோர நிலவியல் தன்மைகளால் ஏற்பட வாய்ப்புள்ள கடலோர உடைப்புகளாலும், ஒற்றை நீராதாரத்தினை நம்பியிருப்பதால் ஏற்படபோகும் புக்குஷிமா போன்ற குளறுபடிகளாலும் உருவாக வாய்ப்புள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.   

33)  இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தினை மூடிட வேண்டும் என்ற தமிழக மற்றும் கேரள மக்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது

34)  அணுசக்தி என்ற பொருளாயத சக்தி குறித்து மக்களுக்கு அச்சம் உள்ளது. என்றாலும் கூட அதனைக் கையாளும் அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்தே அவர்கள் கூடுதல் அச்சத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

35)  அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தைப் போக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு இன்றளவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் முன்வைக்க்கப்பட்ட 38 பக்க அறிக்கை இந்த அச்சத்தைப் போக்குவதற்கு பதிலாக அதனை அதிகரிக்கும் பணியையே செய்துள்ளது

36)  இந்த அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் மத்திய வல்லுனர் குழுவின் 38 பக்க அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

37)  கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தின் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் குறித்துப் படிக்கத் தவறிய அணுசக்திக் கழகம் மற்றும் அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைக் கமிஷனை மத்திய- மாநில அரசுகள் உடனே அமைக்க வேண்டும். இந்த விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். தவறிழைத்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப் படல் வேண்டும்.

38)  கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடத்திற்கான சுனாமி பேரிடர் ஆய்வு, எரிமலைப் பேரிடர் ஆய்வு, மாற்று நீராதாரம், கடற்கரை உறுதி குறித்த ஆய்வுகள் ஆகியவற்றை செய்யுமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

39)  அந்த ஆய்வுகளின் முடிவுகளை மக்களின் முன் வெளிப்படையாக வைக்க வேண்டும்.

40)  அதுவரை கூடங்குளம் அணு உலைகளை இயக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்

41)  இப்படிப்பட்ட நடவடிக்கையே அணுசக்தி அதிகாரிகளின் பொறுப்பற்ற, அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கையைக் கண்டு மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தை நீக்க உதவும். இதுவே மக்களின் நலம் குறித்து அக்கறை செலுத்தும் அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.

ஆதாரம்:

1.      Ramaswamy R 1987. ”Reactivation of Eastern ghat paleorift system during tertiary and other periods”, Proc. In Nat. Sem. On Tertiary orogeny, Banaras hindu University, Varanasi, 107-127 ; Ramaswamy R 1991. ”Occurrence of Soda-trachyte near Kudangulam village, Tamilnadu”, Current Sci.,61, 401- 402 ; Ramaswamy, R 1995. ”Occurance of olivine Tephorote and carbonate Tepharite in Kudangulam area, near Cape Comorin, Tamilnadu, India”, Journ.Geol.Soc. India, 45, 331-333; Biju Longhinos, K.S.Anand, Mita Rajaram,Sub-volcanic intrusives of Kudamkulam, India - a ground magnetic characterization of sub-surface structure”, Lasi 4 Conference, Physical Geology of Sub Volcanic Systems: Lacoliths, Sills and Dykes, Moab and Mount Hillers, (Utah USA), 22-26 September 2010; M.Ramasamy, “The evidence of late Cenozoic volcano tectonic deformations in Kudangulam, near Cape Comarin, Tamilnadu”, International Geological Correlation Programme (IGCP), 1993; Biju Longhinos, Rama Sarma, “ Seismo Tectonic Signatures in and around Kudankulam, Tirunelveli District, Tamil Nadu”, February 2002, unpublished paper; A.Phillipots, “Introduction to Igneous and Metamorphic Petrology”, Prentice Hall, New Jersy, 1990; S.K. Agrawal, Ashok Chauhan, Alok Mishra, The VVERs at KudanKulam”,Nuclear Engineering and Design 236 (2006) 812–835, p-826
2.      A. Boominathan, "Seismic site characterization for nuclear structures and power plants” CURRENT  SCIENCE, VOL. 87, NO. 10, 25 NOVEMBER 2004
3.      IAEA, “Volcanic Hazards in Site Evaluation for Nuclear Installations”, DS405 DRAFT SPECIFIC SAFETY GUIDE,27 May 2011. pp-54,74,75
4.      http://articles.latimes.com/2009/jul/30/nation/na-yucca30 ;Charles B. Connor, John A. Stamatakos, David A. Ferrill,Brittain E. Hill, Goodluck .Ofoegbu, F. Michael Conway,2Budhi Sagar,and John Trapp, Geologic factors controlling patterns of small-volume basaltic volcanism: Application to a volcanic hazards assessment at Yucca Mountain, Nevada”, JOURNAL OF GEOPHYSICAL RESEARCH, VOL. 105, NO. 1, PAGES 417–432, JANUARY 10, 2000; Greg A.Valentine, Frank V.Perry, Don Krier, Gordon N.Keating, Richard E.Kelley, Afllen H.Cogbill, “Small Volume Basaltic Volcanoes: eruptive products and processes, and post eruptive geomorphic evolution in crator flat (Pleistocene), southern Neveda”, Los Alamos National Laboratory, December 2005; J. Spera and S. J. Fowler,Conceptual model for small-volume alkali basalt petrogenesis: implications for volcanic hazards at the proposed Yucca Mountain nuclear waste repository”, in “Volcanic and Tectonic Hazard Assessment for Nuclear Facilities”, Ed.by Charles B. Connor, Neil A. Chapman,Laura J. Connor, August, 2009; Greg A. Valentine and Naoto Hirano, “Mechanisms of low-flux intraplate volcanic fields--Basin and Range (North America) and northwest Pacific Ocean”,  Geological Society of America,  2010)
5.      G.victor Rajamanickam, N.Chandrasekhar. “Extrusion of Rockmelt in the vicinity of high tension electric line”, Journ. Geol. Soc. India, Vol.55, March 2000; R.Ramasamy, “Molten Rock Extrusions”, Journ. Geol.Soc. India, Vol.55, March 2000; G.Manimaran, P.Sivasubramaniyan, M.Senthiyappan, “ Rock Melt Extrusion at Abhishekappatti, Tirunelvelli district, Tamil Nadu,- A Report” Journ. Geol.Soc. India, Vol.57, 2001;http://www.hindu.com/2005/07/16/stories/2005071615080300.htm ; S.C.Jayakaran, “A note on the occurrence of fulgurite in Tamil Nadu”, Current Science 75 (8): 763 (1998) ; B J SAIKIA, G PARTHASARATHY, N C SARMAH and G D BARUAH, Fourier–transform infrared spectroscopic characterization of naturally occurring glassy fulgurites”, Bull. Mater. Sci., Vol. 31, No. 2, April 2008, pp. 155–158; A. C. KERR, M. KHAN AND I.MCDONALD, Eruption of basaltic magma at Tor Zawar, Balochistan, Pakistan on 27 January 2010: geochemical and petrological constraints on petrogenesis”, Mineralogical Magazine, December 2010, Vol. 74(6), pp. 1027–1036
6.      SUKANTA ROY, LABANI RAY, ANURUP BHATTACHARYA and R. SRINIVASAN, “NEW HEAT FLOW DATA FROM DEEP BOREHOLES IN THE GREENSTONE GRANITE- GNEISS AND GNEISSGRANULITE PROVINCES OF SOUTH INDIA”, Deep Continetal Studies in India Newsletter, Vol.17, No.1, January 2007;  P.Hedervari, “Volcanism and Seismicity in the Indo-Australian Seismic Belt : Manifestations of Intraplate Tectonics”, March 1978 ; P.Hedervari, “ Catalog of Submarine Volcanoes and Hydrological Phenomena associated with Volcanic Events – 1500 BC to December 31, 1899”, Report SE 36, World Data Center A for Solid Earth Geophysics, September 1984
7.      AERB, “Kudankulam Atomic Power Project”
8.      R.Ramesh, “Sea Water Desalination work at the Kudankulam NPP:Possible Solution to the Risk prone Confusion, Indecision and Haste”, DOSE, October 2006
9.      R.Ramesh,“Kudankulam Nuclear Power Project and the Pechiparai Reservoir of Kanniyakumari District :Can Pechiparai reservoir meet KKNPP’s fresh water demand?” DOSE, October 2006
10.  P.Sheik Mujabar, "Quantitative Analysis Of Coastal Landform Dynamics Between Tuticorin and Knyakumari using Remote Sensing And GIS,” M.Phil Thesis, Center for Geotechnology, Manonmaniyam Sundaranar University,  Tirunelveli, February 2010, p-166
12.  Krishnamurthy et al., Interim Report Of Task Force On Safety Evaluation Of The Systems Of KKNPP Post Fukushima Event,” 21 May 2011
13.  T. S. SUBRAMANIAN, AERB for more power, water for nuclear stations”, The Hindu, 12 November 2011
14.  G.G.Vaz, M.Hariprasad, B.R.Rao, V.Subba Rao, Subsidence of southern part of erstwhile Dhanushkodi township, Tamil Nadu - evidences from bathymetry, side scan and underwater videography”, Current Science, Vol.92, No.5, 10 March 2007
15.  BRUCKNER, H., 1988, “Indicators for formerly higher sea levels along the east coast of India and on the Andaman Islands” : Hamburger Geographische Studien, v. 44, p. 47–72 ; Bruckner H 1989 late Quaternary shorelines in India; In: Late Quaternary sea-level correlation and application; (eds) Scott D B, Pirazzoli P A and Honig C A, Kluwer Academic Publishers, pp. 169–194; Ramasamy, S., Armstrong Altrin Sam, J., 1998. Inferences on rhodoids from Neogene carbonates of Kudankulam, Tamil Nadu, India. Geol. Soc. Ind. J. 52, 341–344; S.Aemstrong Altrin, Yang Il Lee, Surendra Varma, S.Ramasamy, “Geochemistry of Sandstones from Upper Miocene Kudankulam Formation, Southern India : Implications for Provenance Weathering and Tectonic Setting ”, Journal of Seimentary Research, Vol. 74, NO. 2, 2004
16.  (G.R.K. MURTY, Y. SATYANARAYANA AND T. PRADEEP KUMAR " Magnetic Profile Across Gulf of Mannar", JOURNAL GEOLOGICAL SOCIETY OF INDIA, Vol.44 , Oct. 1994, pp.443-449). ( SASTRI, V. V . VENKATACHALA, B.S. and NARAYAN, V. (1981) The evolution of East Coast India. Paleogeogr.Palacoclim Palacoeco., pp.366 23-54; PRABHAKAR, K.N. and ZUTSHI, PL. (1993) Evolution of southern part of Indian East Coast Basins.J.Geol.Soc.Ind., v.41, pp.215- 230; NAINI, R. BHOPAL and TALWANI, M. (1982) Structural framework and evolutionary hisotry of the continental margin of western India. In: Studics in continental margin geology. (Eds) WATKINS, J.S. and DRAKE, C.L. Am.Assn.Petrol.Geol. Memoir, v. 34, pp. 167-191; KHALE, HG., TALWANI, M. and ELDKLOM, O. (1976) Geophysical study on the continental margin of south India and west of Sri Lanka. EOS, Trans. Am.Geophys.Union.57.to.933 ; EREMENKO, N.A., and GAGELGANZ. A (1966) New data on the tecionic framework of the New Indian Peninsula, Bull. ONGC, v.3(2), pp-1-3 ; CARL,W.S. (1966) Scismcily of the Indian Ocean, J.Geophy..Res.v.71, pp-2575-2581; Udintsev (1975), Geological and Geophysical Atlas of the Indian Ocean, Moscow, Academy of Sciences, 151 p.)
17.  Malai Malar, 26 November 2011
19.  R.Prasad,”Tsunami Hazard Assessment at Nuclear Power Plant Sites in the United States of America Final Report”, USNRC, March 2009
20.  IAEA, Volcanic Hazards in Site Evaluation for Nuclear Installations”, DS405 DRAFT SPECIFIC SAFETY GUIDE,27 May 2011
21.  William Vestal, Allen Lowrie, “Large Scale Slumps Off Southern India and Sri Lanka",  Geo-Marine Letters, Vol.2, 171-177 (1982)






2 கருத்துகள்:

சிவக்குமார் சொன்னது…

சிறப்பான விளக்கம். மிகவும் மெனக்கெட்டு கடுமையான உழைப்புடன் எழுதப்பட்ட கட்டுரை. பாராட்டுக்கள். தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சனையை சூடாக வைத்துக் கொள்ள விரும்புவதும் கூடங்குளம் பிரச்சனையை சற்று மறக்கடிக்கும் போக்கில் ஆள்பவர்களின் தேவையாக இருப்பது போல் தோன்றுகிறது.

HOTLINKSIN.com சொன்னது…

ஆழமான கருத்துக்கள் கொண்ட கட்டுரை. அரசு என்ன முடிவு எடுக்கிறது என்றுதான் பார்ப்போமே... போட்டூன் படம் சிந்திக்க வைக்கிறது...

நண்பரே உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை பகிருங்கள்.

கருத்துரையிடுக