வெள்ளி, அக்டோபர் 11, 2013

சென்னைக்கு நடுவே கீச்... கீச்... கீச்!

சேர்ந்தாற்போல இரண்டு சிட்டுக்குருவிகளை சென்னையில் பார்ப்பதே அபூர்வம். ஆனால், அதிசயம்... ராயப்பேட்டை ஜாம்பஜாரில் இருக்கும் 'கேமரா’ சேகரின் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன.
தினமும் காலை, மாலை இருவேளையிலும் தன் வீட்டின் பிரதானக் கதவைத் தாழிட்டுக்கொள்கிறார் சேகர். அந்த இரண்டு மணி நேரமும் வீட்டுக்குள் நுழையவோ, வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை. கிளிகளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் காலிங் பெல்லையும் மொபைல் போனையும் ஆஃப் செய்துவிட்டு மௌனமாகக் காத்திருக்கிறார் சேகர். மொட்டை மாடி முழுக்க பரவிக்கிடக்கும் அரிசியை உண்பதற்காக எங்கிருந்தோ பறந்து வருகின்றன பச்சை விருந்தினர்கள். 'கீச்... கீச்...’ என்று கிளிப் பேச்சு கேட்பது, அத்தனை இனிமை.
''30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். கொஞ்ச வருஷம் முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை. என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 - 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு.
கொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது. ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ 600 கிளிகள் தினமும் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும்.
அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் அரிசி, கோதுமையை மொட்டை மாடி முழுக்கப் பரப்பி வெச்சிருவேன். ஆறு மணியில் இருந்து கிளிகள் வர ஆரம்பிக்கும். எட்டு மணி வரைக்கும் சாப்பிடும். அதே மாதிரி சாயங்காலம் நாலு மணிக்கு வந்து ஆறு மணிக்கு சொல்லி வைச்ச மாதிரி கிளம்பிரும்.
சென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு. இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ ரேஷன் அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்!'' என்றார் சேகர்.

-டி.அருள் எழிலன்,
 படங்கள்: பொன்.காசிராஜன்

நன்றி: ஆனந்தவிகடன், 25-09-2013

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
தனக்கு உணவு இல்லாவிட்டாலும் கிளிக்கு 1 நாளைக்கு 15 கிலோ அரிசி போடுவது என்றால் சும்மாவா?... அவரை பாராட்டாத்தான் வேண்டும் பதிவு அருமை படமும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நம்பள்கி சொன்னது…

தமிழ் மனம் வோட்டு + 1

கருத்துரையிடுக