புதன், ஆகஸ்ட் 07, 2013

நீங்கள் பூவுலகின் நண்பர்கள் என்றால், பூவுலகின் எதிரிகள் யார்..?

நேர்காணல்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன்
பதிவு செய்த நாள் -
ஆகஸ்ட் 05, 2013  at   1:22:43 AM
 
நெறியாளர் ஜென்ராம்:
வணக்கம். நீங்கள் பூவுலகின் நண்பர்கள் என்றால், பூவுலகின் எதிரிகள் யார்..?
சுந்தரராஜன்:
நாங்கள் மட்டுமே பூவுலகின் நண்பர்கள் கிடையாது. இயற்கையோடு இசைந்து வாழ்பவர்கள் எல்லோருமே பூவுலகின் நண்பர்கள் தான். அதேசமயம், தங்கள் சுயநலத்திற்காக இயற்கையை அழித்து எதிர்கால தலைமுறை பற்றி கவலைக்கொள்ளாதவர்கள் தான் பூவுலகின் எதிரிகள்...
நெறியாளர்:
இன்று மனித சமூகம் எதை எல்லாம் வளர்ச்சி என்று நம்பி வளர்ந்து வந்திருக்கிறதோ அது எல்லாம் இயற்கையை வெற்றிக்கொண்டு ஏற்படுத்திய வளர்ச்சி தானே. இயற்கையோடு இயைந்து வாழ்தல் என்று நீங்கள் வலியுறுத்தினீர்களென்றால், சமூகம் , வளர்ச்சி என்று ஏற்றுகொண்டவற்றிற்கு நீங்கள் எதிரிகளாக மாறிபோகும் நிலை இல்லையா..?
சுந்தரராஜன்:
வளர்ச்சி எது ? அது யாருக்கானது என்று பார்க்க வேண்டியுள்ளது. 
1970களில் பகுகுனா அவர்கள் உத்தரகண்டில் டெஹ்ரி அணை கட்ட வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனால் அதனை தொடர்ந்து 24 அணைகள் கட்டப்பட்டுள்ளது. இன்று உத்தரகண்ட் பேரழிவை சந்தித்துள்ளது.
அவர் சொன்னதை தான் பார்க்க வேண்டும். சுற்றுச்சூழலா வளர்ச்சியா என்ற கேள்விக்கிடையாது. வாழறதா, அழிந்து போவதா என்பது தான். இதில் எது வேண்டும் என்பது நாம தான் முடிவு செய்ய வேண்டும். 
அதாவது பெர்னாட்ஷா சொன்னது போல, அறிவியல் எந்த விதமான பிரச்னைகளையும், புதிதாக 10 பிரச்னைகளை உருவாக்காமல் தீர்க்க முடியாது.
ஆக, சூழலை கெடுக்காமல், நீடித்து நிலைக்க கூடிய வளர்ச்சி எதுவோ அதுதான் வளர்ச்சியாக கொள்ள முடியும்.
நெறியாளர்:
அறிவியலில் ஒருகட்ட வளர்ச்சியை தான் அணு உலைகளை பார்க்க முடிகிறது. பெர்னாட்ஷா கோட்பாட்டின் அடிப்படையில் தான் நீங்கள் அதனை எதிர்க்கிறீர்களா..?
சுந்தரராஜன்:
அணு உலைகள் மனித குலத்திற்கு எதிரானது தான் . நம் நாட்டில் மின்சாரத்திற்கு தான் அணு சக்தி என்பது பொய். மின்சாரம் பெற பல வழிகள் இருக்கிறது.
நெறியாளர்:
இந்தியாவுக்கு தேவையான ஏதோ ஒன்றிற்காக , இந்தியாவின் பாலிசி மேக்கர்ஸ் இந்த தேவையையும் சேர்த்து, கணக்கில் எடுத்து , முயற்சிகள் முன்னெடுக்கும் போது, நீங்கள் சட்ட ரீதியாக தடைகள் வாங்குவதற்கு நீங்கள் முன்னாடி நிற்கிறீர்கள்....
சுந்தரராஜன்:
இந்தியாவின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்களுக்காக தான்.. காந்தி சொல்வது போல ஒவ்வொருவர் கண்ணில் இருந்து வரும் கண்ணீரையும் துடைக்க வேண்டும். ஆக.. நீங்கள் யாரை அழித்து யாருக்காக கொண்டு போகிறீர்கள் தான் விஷயம்...
உண்மையான காரணத்தை மறைப்பதற்காக மின்சாரம் என்ற நல்ல காரணத்தை முன்வைக்கிறார்கள். உண்மையான காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்... நிச்சயமாக அதை எதிர்க்க வேண்டும்.
நெறியாளர்:
அணு உலை தேவையா தேவையில்லையா என்பது ஒருவகையானவை. நீங்கள் சட்டரீதியாக வலியுறுத்தும் விஷயம் அரசின் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டவைகளை கூட ஏற்றுக்கொள்ளாமல் அணு உலையை இயக்க முயற்சி செய்கிறது .. இது தான் உங்கள் வழக்குகளின் நோக்கம்...
சுந்தரராஜன்:
... ஆம். அணு கழிவுகளை என்ன செய்ய போகிறீர்கள் என்பதற்கு விடையே இல்லை. பாதுகாப்பு பரிந்துரைகள் முடிக்கப்படவில்லை. பேரிடர் மேலாண்மை பயிற்சி முடிக்கவில்லை. இதெல்லாம் வழக்கின் மூலம் தான் வெளிவந்தது.
நெறியாளர்:
உங்கள் வழக்குகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டதாகதானே உள்ளது.
சுந்தரராஜன்:
மே 6 ந்தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள்... என்னிடம் தகவல் தெரிவித்து வேலை ஆரம்பியுங்கள் என்று கூறியிருந்தது. ஆனால், அனைத்தும் முடித்தாற்போல் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு பணியை தொடங்கி இருக்கிறார்கள்... 
இந்த அரசும், அணு மின் துறையும் மக்களை மதிப்பது கிடையாது, ஆட்சியாளர்களை மதிப்பது கிடையாது. இப்போது உச்சநீதிமன்றத்தையும் மதிக்கவில்லை... மனுதாரராக எங்களுக்கு ஒரு நகல் அளிக்க வேண்டும் அல்லவா..? அல்லது நீதிபதிகள் அதனை பார்ப்பதற்கு கால அவகாசம் வேண்டுமல்லவா? அதற்கு கூட காலம் வழங்காமல், உடனே அணுஉலை பணியை தொடங்கி இருக்கிறார்கள்.
நெறியாளர்:
நீதிமன்ற அவமதிப்பு என்று இதனை சொல்ல முடியுமா..?
சுந்தரராஜன்:
நிச்சயமாக. அதை உச்சநீதிமன்றம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்று தெரியவில்லை. இதுத்தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்திலேயே அணுக கூறியிருக்கிறார்கள்...
நெறியாளர்:
ஆக்சன் டேக்கன் ரிப்போர்ட்டை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யவேண்டும் என்று தீர்ப்பு வாசகங்களில் இருந்தது என்றால், அரசு செய்தது சரியானது தானே?
சுந்தரராஜன் :
இல்லை. எங்களிடம் ரிப்போர்ட் செய்ய தான் அவர்கள் குறிப்பிட்டார்கள்..
நெறியாளர்:
உச்சநீதிமன்றத்தில் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூறியது போல 15 நிபந்தனைகளையும் நிறைவேற்றவில்லை என்பது உங்கள் நிலை. ஆனால், அதற்குள் கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்கியது என்பதுதானே செய்திகளில் வருகிறது...
சுந்தரராஜன்:
கூடங்குளம் அணு உலை கடந்த 2007 டிசம்பர் மாதம் தொடங்கப்பட வேண்டியது. 
ஆனால், 65 மாதங்களாக 15 நாட்களில் வரும் ஒரு மாதத்தில் வரும் என்று சொல்லிவருகிறார்கள். மத்திய அமைச்சர் ஒருவர் கடந்த 18 மாதத்தில் சுமார் 20 முறை சொல்லி இருக்கிறார்கள்.. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் ரஷ்யாவில் இருந்து வந்த உதிரிபாகங்கள் தரம் குறைந்தவை என்று கூறப்பட்டுள்ளது. அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்போது வேண்டுமென்றால் விசாரணைக்கு வரலாம். 
இந்நிலையில், அணு உலை அழுத்த கலனை மூடி தொடர் வினையை ஆரம்பித்தால் அதனை திறக்க முடியாது. அதனை திறந்தால் தான் உதிரிபாகங்கள் தரம் குறைந்தவையா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனை மூடிமறைக்கவே அவசர அவசரமாக அணு உலையை தொடங்க உத்தரவிட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
நெறியாளர்:
ஒரு அமைச்சர் தன்னுடைய வாசகங்களை மாற்றி மாற்றி பேசினால் அதனையும் விமர்சிக்கிறீர்கள்.. ஒரே மாதிரி 15 நாட்களில் திறப்போம் என்றாலும் விமர்சிக்கிறீர்கள்...
சுந்தரராஜன் :
இது கேலி பொருளாக தான் மாறி இருக்கிறது. முதல்முறை 15 நாட்களில் திறக்கப்படும் என்று சொல்லி, திறக்கப்படாத போது, ஊடகங்களும், மக்களும் ஏன் 15 நாளில் திறக்க வில்லை என்று கேள்வி கேட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் பயந்திருக்கும். யோசித்து சொல்லி இருப்பார்கள்.
நெறியாளர்:
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தான் போராட்டம் செய்கிறார்கள் என்கிறீர்கள். கூடங்குளம் மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் நடக்கும் போராட்டத்தில் ஆதரவு செய்வார்களா..?
சுந்தரராஜன் :
மற்ற இடங்களில் நடக்கும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவும், களத்தில் இறங்கியும் போராட்டமும் நடத்துவார்கள்.
நெறியாளர்:
கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்திய வளர்ச்சிக்கு எதிரானவரகள் என்று ரஷ்ய தூதர் கூறியிருக்கிறார்.
சுந்தரராஜன்:
ஒரு அன்னிய நாட்டு தூதர் இந்த நாட்டு மக்கள் பற்றி பேச யார் உரிமை கொடுத்தார்கள். மக்களை மட்டுமல்ல இந்திய ஆட்சியாளர்களையும் அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.
அவர்கள் கொடுத்த மிட் ரக விமானங்கள் என்ன ஆச்சு என்று கண்கூடாக பார்த்தோம். 850 விமானங்கள் வந்தது . 490 விமானங்கள் நொறுங்கியது. விமான தாங்கி கப்பல் கடந்த 20 வருடமாக வரும் வரும் என்கிறார்கள். இன்னும் வரவில்லை . அதன் தொடர்ச்சியாக தான் கூடங்குளத்தை பார்க்க வேண்டும்.
நெறியாளர் :
ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவுக்கு நட்பாக இருந்து, சோவியத் யூனியன் செய்த உதவி தரமற்றது என்று சுட்டிக்காட்டுகிறீர்கள்...
சுந்தரராஜன்:
வரலாற்றில் இருந்து தான் பாடம் கற்க வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு வழங்கப்பட்ட உதிரிபாகங்கள் தயாரித்த ஜியோ-பொடால்ஸ்க் ரஷ்ய நிறுவனத்தில் பொருட்களை விற்கும் பிரிவின் இயக்குனர் ஊழல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது தரமற்ற பொருட்களை தரமுள்ளவையாக ஆவணப்படுத்தி ஏற்றுமதி செய்துள்ளார். இது வெட்ட வெளிச்சமான விஷயம் தானே....
1986 ல் நடந்த செர்னோபிள் விபத்துக்கு பிறகு அணு உலையை யாரும் வாங்கவில்லை. இந்தியா தான் ரஷ்யாவிடம் அணு உலையை வாங்க முன் வந்தது. முதலில் 2 அணு உலையை வாங்கிக்கொள்கிறோம் என்றார்கள். அதை தான் கூடங்குளம் அணுஉலை 1 மற்றும் 2 அமைத்திருக்கிறார்கள். ரஷ்யா தான் இந்தியாவிற்கு கடமைப்பட்டுள்ளது. இந்தியர்கள் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.
நெறியாளர்:
ரஷ்ய உதவிகளை விமர்சிப்பதன் மூலம் அமெரிக்க ஆதரவு நிலையில் இருந்து பேசுகிறீர்கள் என்ற முடிவுக்கு வரலாமா..?
சுந்தரராஜன்:
கூடங்குளத்தில் அணு உலையை அமைக்காவிடில் வேறு எங்கும் கொண்டு வர முடியாது. இதனால் வணிக வாய்ப்பை இழக்க போவது அமெரிக்க நிறுவனங்கள் தான்.
நெறியாளர்:
வெளிநாட்டில் இருந்து உதவி பெற்று போராட்டம் நடக்கிறது என்பதில் உண்மை இல்லை என்கிறீர்களா..?
சுந்தரராஜன்:
நிச்சயமாக.
நெறியாளர்:
நீங்கள் போட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கவில்லை. நீங்கள் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்..?
சுந்தரராஜன்:
சட்ட ரிதியாகவும், மக்கள் மன்றத்திலும் இந்த போராட்டம் நடந்துக்கொண்டு தான் இருக்கும்.
நெறியாளர்:
வழக்கு போட்டதால் பல உண்மைகள் வெளி வந்ததாக கூறியிருந்தீர்கள். அதை தாண்டி உங்களுக்கு கிடைத்த அனுபங்கள்....
சுந்தரராஜன்:
நாடு முழுவதும் அணு சக்தி தேவையா தேவையில்லையா என்கிற வாதம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வு படி போராட்டத்தை நியாயப்படுத்தி 
அதிகம் பேர் தெரிவித்திருக்கிறார்கள்.
நெறியாளர்:
பாதுகாப்பு தொடர்பான கேள்விதான் உங்களது வழக்குகளில் முக்கியம்சங்களாக உள்ளது. ஆனால், பாதுகாப்பு தொடர்பான அனைத்து சோதனைகள் வெற்றிக்கரமாக செய்திருப்பதாக அணு மின் நிலைய இயக்குனர் சுந்தரின் அறிக்கை....
சுந்தரராஜன்:
நடுவரும் அவர்களாகவே உள்ளனர்.. விளையாட்டு வீரராகவும் இருக்கிறார்கள்.. அதனால், தன்னிச்சையான குழு அமைத்து ஆய்வு செய்ய வலியுறுத்தினோம்... 
உதாரணத்திற்கு.. குக்கர் எப்பகுதியிலும் வெல்டிங் இல்லாமல் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், கூடங்குளம் அணு உலை அழுத்த கலனில் 4 இடங்களில் வெல்டிங் செய்யப்பட்டுள்ளது. 
இதன் மூலம் தரமற்ற உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது நிரூபணமாகிறது.
நெறியாளர்:
எப்படி இந்திய அரசு அனுமதித்தது..?
சுந்தரராஜன்:
அனுமதித்திருக்கிறார்கள்... அதைதான் நாங்கள் கேட்கிறோம்....
நெறியாளர்:
விதிகளை மீறி இந்த மாதிரியான செயல்கள் நடந்திருப்பதை அங்கு வேலை செய்யும் மனசாட்சியுள்ள எந்தவொரு விஞ்ஞானியுமா முன் வைக்கமாட்டார்.?
சுந்தரராஜன்:
அங்கு வேலை செய்த விஞ்ஞானிகள் கூட இந்த உண்மைகளை தெரியப்படுத்தி இருக்கிறார்கள் ..
நெறியாளர்:
போராளிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.... அதுப்பற்றி..
சுந்தரராஜன்:
உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.. உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது... மக்கள் மீது போடப்பட்டது அத்தனையும் பொய்வழக்கு... ராஜ துரோக வழக்கு, தேச துரோக வழக்கு போட்டிருக்கிறார்கள்,
... சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க சென்னது தேச துரோகமா..?
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அமைதி வழியில் தான் இதுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள்..
நெறியாளர்:
பரவலாக மக்கள் மத்தியில் இருக்க கூடிய உணர்வு , அணு உலையில் உற்பத்தி தொடங்காமல் இருக்க போராட்டம் தான் காரணம் என்பது தான்... அதுபற்றி..
சுந்தரராஜன்:
அணு உலை தொடங்காமல் இருக்க காரணம்.. மக்கள் போராட்டமல்ல.. அணு உலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தரமற்ற பொருட்கள் தான்..
அணு உலையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உதிரிபாகங்களையும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.. ஆச்சரியம் பாருங்கள்... மே 6 ந்தேதி தீர்ப்பு வருகிறது... ஜூலை முதல்வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்... ஒரு அணு உலையில் மட்டும் பல லட்சம் உதிரிபாகங்கள் இருக்கும். இதனை சோதிக்க 8 மாதம் முதல் 1 ஆண்டு ஆகும். ஆனால் 2 மாதங்களில் அதனை ஆய்வு செய்து தாக்கல் செய்திருக்கிறார்கள்... 
இது உண்மை என்றால், முதலில் உற்பத்தி முழுமையாக முடிந்து ஆகஸ்டு 15-ந்தேதி மின்சாரம் பீறிட்டு கிடைக்கும் என்றார்கள்... ஆனால் இப்போது, நவம்பர் மாதம் என்கிறார்கள்... பிறகு தள்ளி போட்டுக்கொண்டே இருப்பார்கள்... 
அணு உலையில் நிறைய பிரச்னை உள்ளது...
நெறியாளர்:
நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் உண்மையை மறைப்பதாக இருந்தால், எவ்வளவு காலம் தான் அவர்கள் மின் உற்பத்தியை தள்ளிப்போட்டுக்கொண்டிருப்பார்கள் ?
சுந்தரராஜன்:
2வது அணு உலை நோக்கிதான் அவர்கள் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்... முதலாவது வேலை செய்யவில்லை என்று எங்களுக்கு தகவல் வருகிறது.. இதன் உண்மை தன்மை தெரியவில்லை. ஆனால், போராட்டக்காரர்கள் மீது பழி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்...
நெறியாளர்:
அணு உலை ஆபத்து குறித்துன் பேசுகிறீர்கள்... மற்ற அணுமின் நிலையத்தில் பெரிய விபத்துகள் நடக்கவில்லை என்கிறது அரசு....
சுந்தரராஜன்:
பெரிய அளவில் தான் விபத்துகள் ஏற்படவில்லை. சிறிய அளவில் நடந்திருக்கிறது..
நெறியாளர்:
மின்சாரத்திற்கு அணு உலை தேவை என்று மக்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டது. இந்த எண்ணத்தை மாற்றாமல் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்து செல்வீர்கள்..?
சுந்தரராஜன்:
மின்சாரம் தேவை என்று கேட்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், கூடங்குளத்தில் இருந்துதான் மின்சாரம் வேண்டும் என்று கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை...
இனி அணுமின் நிலையம் தொடங்க அரசு முடிவு செய்தால் நினைத்தப்பொழுது தொடங்க முடியாது. இடிந்தகரை மக்கள் மூலம் நாட்டு மக்கள் கேள்விக்கேட்பார்கள் என்ற எண்ணம் அணுசக்தி துறைக்கு வந்துவிட்டது.
நெறியாளர்:
இதற்கு முன் நடந்த அணு உலை விபத்துக்கு பிறகு, பாதுகாப்பான புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்த வாய்ப்பில்லையா..?
சுந்தரராஜன்:
பாதுகாப்பான அணு உலை என்பது ஒன்று உலகத்தில் கிடையாது. ஜப்பான் , ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட இனி அணு சக்தியே வேண்டாம் என்று கூறி அணு உலைகளை மூட அறிவித்திருக்கிறார்கள்..
நெறியாளர்:
கூடங்குளத்தில் இருந்து எவ்வளவு மின்சாரம் கிடைக்கும்?
சுந்தரராஜன்:
பொதுவாக ஒரு கார் வாங்குகிறோம்... அதில் ஸ்பீடோமீட்டர் இருக்கும். அதில் 240 கிமீ வரைக்கும் இருக்கும். அதேப்போல தான் அணு உலைக்கு என்று ஒரு உச்சமதிப்பு இருக்கும். அதாவது ஆயிரம் மெகாவாட் என்பது உற்பத்தி திறன். 
ஆனால், இந்தியாவின் அணு உலைகளில் 30லிருந்து 40 சதவீதம் தான் உற்பத்தி இருக்கிறது. கூடங்குளத்தில் 60 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், 600 மெகாவாட் தான் உற்பத்தி ஆகும். 
75 மெகாவாட் அணுமின்நிலையத்திலேயே பயன்படுத்தி கொள்வார்கள்.. மீதி இருக்கும் 525 மெகாவாட்டில் தமிழ்நாட்டின் பங்கு 45 சதவீதம். அதாவது.. 230 மெகாவாட்... உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பகிர்மானம் சென்று நுகர்வோருக்கும் செல்லும் போது இழப்பு 20 சதவீதம்.. 
அப்படியென்றால், 190 மெகாவாட் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். அதிகபட்சம் 200 மெகாவாட் தான் கிடைக்கும்.
நெறியாளர்:
கூடங்குளம் போராட்டம் ஊடே.. தமிழர்கள் என்பதால் இடிந்தகரை பகுதி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று முன்வைக்கப்படுகிறது... அது எவ்வளவு தூரம் பொதுவான அணுசக்திக்கு எதிரான போராட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும்...?
சுந்தரராஜன்:
வெறுமனே தமிழ்தேசிய அரசியல் பார்வையில் மட்டுமே பார்க்க முடியாது.. 
உலகத்தில் எந்தபகுதிகளிலும், இயற்கையை நேசித்த இனங்களை அழித்து தான் வந்திருக்கிறார்கள்... 
தமிழர்கள் இயற்கையோடு இயந்து வாழ்ந்திருக்கிறார்கள்... இந்த வாழ்க்கை வல்லாதிக்கத்திற்கு எதிராக தான் உள்ளது. 
அதனால் தான், ரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் அமைக்கிறார்கள்; கோவா, கர்நாடகா, மகாராஷ்ட்ராவில் அமைக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகம் தேவாரத்தில் அமைக்கிறார்கள்...; வி 412 அணு உலையை உலகத்தில் எங்கும் இல்லாமல் கூடங்குளத்தில் தான் அமைக்கிறார்கள். எல்லா இடத்தில் மூடப்பட்ட ஆபத்தான தொழில்நுட்பம் - ஈனுலைகள் கல்பாக்கத்தில் அமைக்க உள்ளார்கள்.. இதை எல்லாம் தமிழகத்தில் அமைக்கப்படுவதால், என்ன தோன்றுகிறது என்றால் , இயற்கையை அதிகமாக நேசித்த தமிழினம்; அதனால் அதனை அழிக்க வருகிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.
நெறியாளர்:
அணு உலையில் உள்ள சிக்கலை நீங்கள் பட்டியலிட்டாலும், அதையும் தாண்டி அரசு செல்கிறார்கள் என்றால்.. போராட்டம் அடுத்து எந்த திசையை நோக்கி நகரும்...?
சுந்தரராஜன்:
இடிந்தகரை போராட்டம் உலகம் முழுவது சென்றிருக்கிறது. இது ஒட்டுமொத்த அணுசக்திக்கு எதிரான போராட்டத்திற்கு நடுக்கல்லாக அமைந்துள்ளது. 
இது ஒருதலைமுறை சம்பந்தப்பட்ட போராட்டமல்ல . இது அடுத்த தலைமுறைக்கான போராட்டம்...
நெறியாளர்:
ஒரு நாவலில் தமிழ் எழுத்தாளர் எழுதிய ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. அதில், ஒரு பேருந்து தடைப்பட்டு நிற்கிறது. அதை தள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சிலர் கீழே இறங்கி தள்ளுகிறார்கள். சிலர் பாரமாக இருப்பதை தவிர்க்க கீழே இறங்கி நிற்கிறார்கள். சிலர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேருந்திலேயே அமர்ந்திருக்கிறார்கள்.. 
இப்படி மூன்று விதமான மனிதர்களை சுட்டிக்காட்டிருப்பார் எழுத்தாளர். இதுப்போன்ற போராட்டங்களிலும் அதேவகையான மக்களை பார்க்க முடியும்.
இறுதியில், பேருந்து இயங்கியது பேருந்தை தள்ளுபவர்களால் மட்டுமே என்று அந்த எழுத்தாளர் விளக்குவார். அதேப்போல், பேருந்தை தள்ளுபவர்களில் ஒருவராக நீங்கள் உங்களை இணைத்திருக்கிறீர்கள் என்பது புரிந்துக்கொள்ள முடிகிறது
. நீதிமன்றங்களில் சட்டரீதியிலான உங்களின் போராட்டமும் தொடரும் என்ற நிலையில் தான் இருக்கிறீர்கள். இத்தனை வேலைகளுக்கிடையே எங்களோடு கருத்துகளை பகிர்ந்துக்கொண்டமைக்கு புதியதலைமுறை சார்பில் நன்றி.. வணக்கம்.
சுந்தரராஜன் :
நன்றி !

நன்றி: புதிய தலைமுறை தொலைகாட்சி

1 கருத்து:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

//ஒரு அமைச்சர் தன்னுடைய வாசகங்களை மாற்றி மாற்றி பேசினால் அதனையும் விமர்சிக்கிறீர்கள்.. ஒரே மாதிரி 15 நாட்களில் திறப்போம் என்றாலும் விமர்சிக்கிறீர்கள்// - கேனைத்தனமான கேள்வி. ஜென்ராம் அவர்களே! இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாக ஒருவர் சொன்னதை நம்பி, அவர் கேட்டபடி இரண்டாயிரம் ரூபாய் அவருக்குக் கடனாக அளிக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாள் கழித்து நீங்கள் போய்க் கேட்டாலும், மீண்டும் "இரண்டு நாள் கழித்துத் தருகிறேன்" என்றே அந்த நண்பர் சொன்னால்... அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்துப் போய்க் கேட்டாலும் அவர் அதே பதிலைச் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதற்குப் பெயர்தான் ஒரே மாதிரி பேசுவதா?

கருத்துரையிடுக