ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

குக்கூ என அழைத்தது கருங்குயில் ஒன்று.....!

சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில் மரக்கா மலைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான், என் மனைவி, என் மகள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றோம். என் வாழ்க்கையில் நிகழ்ந்த நிறைய இனிய அனுபவங்களில் இதையும் ஒன்றாகக் கருதுகிறேன். மலையடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சுமார் 300 மீ. உயரம் வரை அடர்ந்த காட்டின் வழியாக நடந்து சென்றோம். மாலை ஆறு மணி என்பதால் சுற்றுவட்டாரத்தில் ஆள் அரவமற்றுக் கிடந்தது.மா, தென்னை, சப்போட்டா, வாழை, கரும்பு, கொய்யா என அணி அணியாகத் தோப்புகள் வர, அதைப் பிளந்து அமைக்கப்பட்ட ஒத்தையடிப் பாதை வழியாகத்தான் நாம் மலைக்குப்போக வேண்டும். நம் இடப்புறம் வாய்க்காலில் சலசலத்து நீரோடும். காலை நனைத்தவாறே செல்லலாம். வருடுகின்ற தென்றலும், வானுயர்ந்த மரங்களும்,மயங்கும் சூரியனும், வந்தடையும் காக்கை,குருவிகளும் ஏகாந்த கவிச்சூழலை உருவாக்கின. கருக்கல் நேரம் என்பதால் நாங்கள் மலையடிவாரத்திற்குத் திரும்பினோம். ஏனெனில் திடீரென்று காட்டு மாடுகளோ, ஓநாய்களோ அங்கு வரக்கூடிய சாத்தியம் உண்டு, எனவே அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது தான் நன்று. 2 மணி நேரத்திற்குப் பின் நாங்கள் திரும்பும்போது, உயர்ந்த பருத்த மரங்களில் நிறைய குருவிகள் கத்தியவாறே இருந்தன. வரும் வழியில் குயில் ஒன்றைக் கண்டேன். மிக நீண்ட இடைவெளிக்குப்பின் குயிலைக் காண்கிறேன். புகைப்படம் பிடிக்க முயலும் போதெல்லாம் அது பறந்து மறைந்து விடுவதும், மீண்டும் மரங்களில் உட்காருவதாகவும் இருந்தது. குக்கூ...குக்கூ என்று கூவியவாறே அது என்னை வழியனுப்பியது. அதன் நெடிய குரலோசை வீடு திரும்பும்வரை செவிகளில் ஒலித்தவாறே இருந்தது.

குயில்கள் அண்டார்டிகா தவிர்த்து உலகெங்கும் வாழ்பவை. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட வகையினங்கள் இவற்றில் உள்ளதன. நம் இந்தியாவில் காணப்படும் குயில்கள் ஆசிய வகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. பிரதேசங்களுக்கு ஏற்றவாறு, அங்குள்ள பறவைகளில் சிலவகை, அவைகளின் குரல் ஒலியின் விசேஷத்திற்காக குயில் வகுப்பில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக குயில்கள் மரங்களில் வாழும் நடுத்தரப் பறவை. பார்ப்பதற்கு கவர்ச்சியற்றே காணப்படும்.இந்தியாவில் குயில்களில் ஆண் சிறியதாக, கறுப்பு நிறத்தோடும், பெண் சற்று பெரிதாக,இறகுகள் பழுப்பு நிறம் கொண்டும் ஆங்காங்கே கறுப்புப் புள்ளிகள் கொண்டும் இருக்கும். குயில்களின் சிறப்பே அதன் குரலோசையும், முட்டை இடும் தன்மையும்தான். குயில்களில் ஆண் மட்டும் குக்கூ...... என நெடிய ஒலியையும், பெண் க்யிக்...க்யிக்....என்று குறைந்த அழுத்தத்தில் இடைவெளி விட்டும் குரலெழுப்புகிறது. இங்கு குரலோசை எதிர்பால் இனத்தைக் கவர்வதற்காகவே எழுப்பப்படுகிறது. பொதுவாக இவை தனிமையில்தான் வாழ்கின்றன. இணை சேரும் காலத்தில் மட்டும் அவை ஒன்று கூடும். ஆண்--பெண் இனச்சேர்க்ககை வருடத்திற்கு ஒருமுறை நடக்கும். ஒரு ஆண் பல பெண்களோடும், ஒரு பெண் பல ஆண்களோடும் உறவு கொள்ளும். வழக்கமான முறையில் பெண் கீழே அமர்ந்தும், ஆண் மேலே இருந்தும் உறவு கொள்ளும். ஒரிரு முறை மட்டுமே உடலுறவு நிகழ்ச்சி நடக்கும். ஆண் இந்த சந்தர்ப்பத்திலேயே தேவையான விந்தைப் பாய்ச்சும்.

குயில்கள் பிரதேசம் சார்ந்தே வாழ்பவை. அவை தங்கள் பிரதேசம் விட்டு, பிற இடங்களுக்குச் செல்வது அரிது. ஆப்பிரிக்கவாழ் குயில்களில் தரையினக் குயில்கள் உண்டு. இவை தரையிலேயே வாழும். புழு, வண்டு, ஓணான் மற்றும் சிறு குருவிகளையும் ஓடி, விரட்டி ,பிடித்துண்ணும். நிமிடத்திற்கு 30 கி.மீ.வேகத்தோடு ஓடும் இவைகளின் உடல் பருத்துக் காணப்பட்டாலும், எடை லேசாகவும், பார்ப்பதற்கு பருந்து போலவும் இருக்கும். தரையிலேயே குழியமைத்து முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். இவை பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இந்தியக் குயில்கள் கொட்டையுள்ள பழங்களை மட்டுமே உண்கின்றன. அதனால், அவை மரங்களிலேயே வசிக்கின்றன.அமெரிக்காவில் வாழும் குயில்கள் சிறு உயிரினங்களை உண்பதோடு, பழங்களையும் உண்ணும்.இவை வெளிர் நிறத்திலும்,நீல நிறத்திலும் காணப்படும். எல்லா வகை குயில்களுக்கும் கண் சிவப்பாகவும், கருவிழியோடு எடுப்பாகத் தெரியும்.குயில்களுக்கான விசேஷ குணம் முட்டையிடுதல். இந்தியாவில் வாழ்பவை காக்கை கூடுகளிலும், இலங்கை, பர்மாவில் வாழ்பவை நாரை அமைத்த நீர்நிலை சார்ந்த கூடுகளிலும், ஆப்பிரிக்கவாழ் மரம் சார்ந்த குயில்கள் தேன் சிட்டுகளின் கூடுகளிலும் தங்கள் முட்டைகளை இடும். ஆப்பிரிக்க தேன் சிட்டுகள், நம் இந்திய தேன் சிட்டுக்களைப் போல் சிறியதாக இல்லாமல், புறா அளவிற்குப் பெரியதாகக் காணப்படும்.

குயில்கள் எந்தப் பறவையின் கூடுகளைத் தேர்ந்தெடுக்கிறதோ, அது போன்ற நிறத்திலேயே முட்டையிடும். காக்கையின் கூட்டிலும் முட்டையிடும்போது பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், தேன் சிட்டுகளின் கூட்டில் முட்டையிடும்போது பழுப்பு நிறத்திலும், காணப்படும். இவைகளின் அலகை வைத்தே, இனம் காணமுடியும். கறுப்பு, பழுப்பு, வெளிர் மஞ்சள் என நிற வகை உண்டு. பெண் குயில்கள் முட்டையிடும் முன்பு, தான் முட்டையிடப்போகும் கூட்டைக் கண்காணிக்கும். அங்கு ஏற்கனவே வேறு பறவையின் முட்டையிருப்பின் அவற்றைக் கீழே தள்ளிவிடும். பின் அப்பறவை இல்லாத போது, இது சென்று முட்டையிடும். 2---7 முட்டை வரை இடும். குயில்களின் முட்டை, பிற முட்டைகள் குஞ்சு பொரிக்கும் காலத்திற்கு 3 நாட்கள் முன்பே பொரிந்துவிடும்.

பொரிந்த குஞ்சுகள் கூட்டிலுள்ள மற்ற பறவையின் குஞ்சைப் போலவே குரலெழுப்பும். உருவ அமைப்பிலும் வேறுபாடு காட்டாது. அதே சமயம், பிற இனக் குஞ்சுகளை கீழே தள்ளாது. கூட்டின் உரிமையாளர் இல்லாதபோது, தாய் அல்லது தந்தைக்குயில் பிற குஞ்சுகளைக் கீழே தள்ளிக் கொன்றுவிடும். இவை அதிகமான உணவை உட்கொள்ளும். இதனால் 3 நாட்களில் போதுமான உடல் பருமனை அடையும். உணவுப் பற்றாக்குறையால் பிற குஞ்சுகள் இறந்து விடும். 17 நாட்களில் அக்கூட்டை விட்டு, உரிமைப் பறவைக்குத் தெரியாமல், தனது தாயுடன் பறந்து சென்றுவிடும். இவ்வாறான நிகழ்வுகள் அனைத்தும் பாரம்பரிய கடத்தியாகவே உள்ளன.

48 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த பறவையாக மாறிவிடும். இதன் கால்கள் 4 விரல் கொண்ட விசேஷ அமைப்பு கொண்டவை. முன்னோக்கி 2 விரலும், பின்னோக்கி 2 விரலும் இருக்கும். இவற்றின் நகம் மிகக் கூர்மையானது. சிறு பூச்சிகளைப் பிடிக்க பேருதவி புரிகிறது. கம்பளிப்பூச்சி போன்ற முடியுள்ள பூச்சிகளை உண்ணும் ஒரே பறவையினம் இவை. பிடித்த பூச்சியை, இரண்டு மூன்றாக கிழித்து எறிந்து விடும். பல சமயம் ஓடுள்ள உயிரினங்களான சிறு நண்டு, வண்டு, நத்தைகளைத் தனது அலகின்கீழ் புறத்தால் ஓங்கித் தட்டும். அதிக பலத்தோடும் அழுத்தத்தோடும், தாக்குதல் நடத்தி அதன் ஓட்டினை உடையச் செய்துவிடும்.

இவை பொதுவாகவே காலைப் பொழுதைவிட இரவு நேரங்களில் மட்டுமே அதிக ஓசை எழுப்பும் என்கிறது பறவையியல் குறித்த ஆய்வுகள். இந்திய குயில்களின் இரவு ஓசையைப் பற்றிய குறிப்புகள் தெரியவில்லை. நம் தமிழகத்தில் குயில்களை விட , செம்போத்துப் பறவைகளே அதிகம் ஓசையை எழுப்புவதாகவும், ரம்யமான அந்த ஒலி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்றும், பல சமயம்,ஆண்குயிலின் அழைப்பை ஒத்திருக்கும் என்றும் கூறுகிறார் பறவையியல் நிபுணரான ரமணி.நானும் இக்கட்டுரை எழுதும்வரை அதைக் குயிலின் ஓசை என்றே நினைத்திருந்தேன்.

உத்தரப் பிரதேசத்தில் குயில்களைக் கூண்டில் அடைத்து வளர்க்கும் பழக்கம் சில வருடங்களுக்கு முன்வரை இருந்ததாம்.மலைக்காடுகள் உள்ள மாநிலங்களான மேகாலயா, சிக்கிம் போன்றவை அவற்றின் கறியை விசேஷ உணவாக,திருவிழா காலங்களின் பரிமாறுகின்றனர். இலங்கையில் வீடு கட்டும்முன் அல்லது புது மனை புகுவிழாவின் முன், குயில்கள் கூவினால்,அது நல்லசகுனம் என்றும் "கோகிலா தேவியே" தங்கள் இல்லத்திற்குள் குடியேறப் போவதாக நம்புகின்றனர்.

வனங்களின் அழிவு, இன்று பல பறவைகளைப் போலவே இதன் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அழிந்து வரும் பறவையினங்களில் ஒன்றாக, .நா.சபை அறிவிக்காவிட்டாலும் ,இன்னும் சில வருடங்களில் இவை அழிந்தே போகும் சாத்தியம் அதிகமுள்ளது...!?

-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

நன்றி: உயிர்மை.காம்

1 கருத்து:

Grannytherapy சொன்னது…

Nice!
பாட்டி வைத்தியம் என்ற இணையதளம் சேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயத்திரவாழ்க்கை நோக்கி செல்கிறான்.ஆதலால் பாட்டிவைத்திய முறைகளை மறந்துவிட்டான்.
எங்களின் இணையதளம்
http://www.grannytherapy.com

கருத்துரையிடுக