ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

பி.டி. கத்தரிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு - தலைமைச் செயலாளர் அறிவிப்பு!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் (பி.டி. கத்தரிக்காய்) சாகுபடியை தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை என்று தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் சாகுபடியை அனுமதிக்கலாமா என்பது பற்றி மக்கள் கருத்தறியும் கூட்டம் மத்திய சுற்றுச் சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் பெங்களூரில் சனிக்கிழமை (06-02-2010) நடந்தது.

கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இதுதொடர்பாக மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் எழுதி கருத்து கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். பல மாநிலங்களில் இருந்து கடிதங்கள் வந்திருப்பதாக அவர் கூறினார்.
தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி தகவல் வந்ததா என்று நிருபர்கள் கேட்டனர். மாநில அரசின் தலைமைச் செயலாளர் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தக் கத்தரிக்காய் சாகுபடியை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்ற தகவலைத் தெரிவித்தார் என அமைச்சர் கூறினார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அனுமதிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குழு பரிந்துரை செய்ததில் இருந்தே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அதனால் மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகுதான் இதுபற்றி முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்கள் நடக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.

எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதும், தமிழகத்தில் இதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்பதும் விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள், இந்திய முறை மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்குமாறு முதல்வர் மு. கருணாநிதி யோசனை கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் தமிழகத்தில் கருத்து கேட்பு கூட்டம் எதற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

மத்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டாலும், மாநில அரசே மாவட்டம் தோறும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த கருத்தை தொகுத்து மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என நிபுணர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.


இதற்கிடையில், விவசாயிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் குழு இரு வாரங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மரபணு மாற்றிய கத்தரிக்காயை அனுமதித்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கியது. நீண்ட நேரம் அவர்களின் கருத்துகளை முதல்வர் கேட்டறிந்தார்.

குடியரசு நாளன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில், பல இடங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்பட பல மாநிலங்களில் இந்த கத்தரிக்காயை அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லையே என விவசாய நிபுணர்கள் காத்திருந்தனர்.

தமிழகம் இதை எதிர்ப்பதாக, பெங்களூரில் நடந்த கூட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு புதன்கிழமை (பிப்ரவரி 10) மதியம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


நன்றி: தினமணி 07-02=2010

2 கருத்துகள்:

anand சொன்னது…

மரபணு மாற்று விதைகள்
மேலை நாடுகளான ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம், போன்ற நாடுகள் மரபணு மற்று விதைகளுக்கு தடை விதித்துள்ளன.இப்பயிர்கள் மலட்டு தன்மை வாய்ந்தவை. எனவே ஒவ்வொரு முறையும் நாம் விதைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து தன பெற வேண்டும்.இது நமது விவசாயிகளின் தற்சார்பை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். மேலும் இவ்விதிகள் கள்ளத் தனமாக சந்தையில் நுழைந்து விடுகின்றன. இதுபோலவே பிட்டி பருத்தி விதைகளும் கள்ளத் தனமாக நுழைந்து நட்டு பருத்தி விதைகளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இவ்விதைகள் தீமை அளிக்ககூடியவை என்று தெரிந்தும் தடை செய்யாமல் கருத்து கேட்கும் கூட்டம் என்ற பெயரில் ஒரு போலியான கண் துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.இதனை நாம் கண்டு கொண்டு இதற்க்கு எதிராக நாம் போராட வேண்டும். இந்திய அரசிடம் அனுமதி பெற்று வருவதால், இதனை தடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதைவிட கொடுமை தமிழ்நாடு, வேளான் பல்கலைகழகத்தில் தான் மரபணு மாற்று பயிர்களுக்கான ஆராய்ச்சி நடந்து வருகின்றது.இப்பல்கலை கழகம் தமிழ்நாடு அரசின் கட்டுபாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசும் இதில் ஒரு கூட்டாளியாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

அமெரிக்காவும்,கனடாவும்,சீனாவும் அனுமதித்துள்ளன.தீர்வை விவசாயிகளிடம் விடுங்கள்.லாபம்,நல்லது என்றால் பயன்படுத்துவார்கள்,இல்லை என்றால் விட்டு விடுவார்கள்.இப்போதும் உயர்ரக ஒட்டுவிதைகளுக்கு விவசாயிகள் விதைகளை மீண்டும் வாங்குகிறார்கள்.விவசாயிகள் சேமித்த விதைகள் முளைக்கும்,விளைச்சல் குறைவாக இருக்கும்.
எனவே விவசாயிகள் தீர்மானிக்கட்டும் என்று விடுங்கள்.

கருத்துரையிடுக